வரம் வேண்டுவதிலும் ஒரு தந்திரம்

 

வரம் வேண்டுவதிலும் ஒரு தந்திரம்

-----

 

     தென்தமிழகத்தில், தாமிரபரணி நதியின் வடகரையில் ஸ்ரீவைகுண்டம் என்று வழங்கும் திருப்பதியில் பரம்பரையாகத் தமிழ்ப்புலமையும் முருகக் கடவுளது பக்தியும் வாய்ந்த சைவவேளாள குலத்தில் சண்முகசிகாமணிக் கவிராயர் என்ற ஒருவர் வாழ்ந்திருந்தார். அவர் தம் மனைவியார் சிவகாமசுந்தரியம்மை. அவ்விருவருக்கும் ஓர் ஆண் குழந்தை உதித்தது. அதற்குக் "குமரகுருபரன்" என்னும் பெயர் சூட்டி அவர்கள் வளர்த்து வந்தனர்.

 

         குமரகுருபரர் ஐந்தாண்டு வரையில் பேச்சின்றி ஊமை போல இருந்து வந்தது கண்டு நடுங்கிய பெற்றோர்கள், அவரைத் திருச்செந்தூருக்கு எடுத்துச் சென்று செந்திலாண்டவர் சந்நிதியிலே வளர்த்திவிட்டுத் தாமும் பாடுகிடந்தனர். முருகவேள் திருவருளால் குமரகுருபரர் பேசும் ஆற்றல் பெற்றுக் கல்வியிலும் சிறப்புப் பெற்றார். செந்திற்பெருமான் திருவருளால் வாக்குப்பெற்ற இவர். அப்பெருமான் விஷயமாக "கந்தர் கலிவெண்பா" என்ற பிரபந்தத்தைப் பாடினார்.

 

         குமரகுருபரர் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஞான சாத்திரங்களையும் திருவருளால் விரைவில் கற்றுத்தேர்ந்தார். மலருக்கு மணம் வாய்த்தது போன்று, பக்திஞான வைராக்கியங்கள் இவரிடத்தே உண்டாகி வளரத் தொடங்கின. பல திருத்தலங்களுக்கும் சென்று சிவதரிசனம் செய்யத் தொடங்கினர். மதுரையிலே சிலகாலம் தங்கியிருந்தார். மீனாட்சியம்மையின் மீது, ஒரு பிள்ளைத்தமிழ் பாடி, அக்காலத்தில் மதுரையில் அரசாண்டிருந்த திருமலை நாயக்கர் முன்னிலையில் அரங்கேற்றினார். அதனை அரங்கேற்றுகையில் மீனாட்சியம்மையே குழந்தை வடிவில் எழுந்தருளி வந்து

கேட்டு மகிழ்ந்து, குமரகுருபரர் முத்தப்பருவத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கையில் தம் திருக்கழுத்திலிருந்த முத்துமாலை ஒன்றை எடுத்து, இவருக்கு அணிவித்துவிட்டு மறைந்தார்.

 

    சிவஞான உபதேசம் பெறவேண்டுமென்ற கருத்து இவருக்கு வரவர அதிகமாயிற்று. தமக்கு உரிய ஞானாசிரியரைத் தேடித் தேர்ந்து சரண்புக வேண்டும் என்று இவர் மனம் ஆவலுற்று நின்றது. அக்காலத்தில் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனத்தில் நான்காம் பட்டத்தில் குருமூர்த்தியாக விளங்கிய மாசிலாமணி தேசிகர் சிவஞானச் செல்வராக இருப்பதை அறிந்து அவரிடம் சென்றார். அங்கே உண்டான சில குறிப்புக்களால் அப்பெரியாரே தமக்குரிய ஆசிரியர் என்பதை இவர் தேர்ந்தனர். தமக்கு துறவுநிலை அருள வேண்டுமென்று அத்தேசிகர்பால் குமரகுருபரர் வேண்டினர். அங்ஙனம் செய்வதற்குமுன் திருத்தல யாத்திரை செய்து வரும்படி பணிப்பது என்னும் ஆதீன மரபின்படிக்கு, காசியாத்திரை செய்து வரும்படி கட்டளையிட்டருளினார். காசிக்குச் சென்று வருவதில் நெடுங்காலம் செல்லுமே என்று கவலை உற்ற குமரகுருபரரை, சிலகாலம் சிதம்பரவாசமேனும் செய்யும்படி பணித்தனர்.

 

    ஞானாசிரியர் கட்டளைப்படியே சிதம்பரத்துக்குச் செல்லுகையில், இடையே வைத்தீசுவரன் கோயிலில் தங்கித் தரிசனம் செய்துகொண்டு, அங்கே கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமான் மீது, "முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்" பாடினார். பிறகு சிதம்பரம் சென்று நடராசப் பெருமானைத் தரிசனம் செய்துகொண்டு பலநாள் தங்கினர். ஆனந்தக் கூத்தன் அருள் பெற்று ஆனந்த பரவசர் ஆயினார். மும்மல மாசு நீங்கி, மாசிலாமணியாய் விளங்கினார். அஞ்ஞான சம்பந்தம் அற்று, மெய்ஞ்ஞானசம்பந்தர் ஆயினார். பவானந்தம் வேண்டாத சிவானந்தராக விளங்கினார்.

 

     தில்லைக் கூத்தனின் திருவருள் பெற்று இன்புற்று இருந்த, குமரகுருபர அடிகளார், முடிவில்லாத அருள் நிலையைப் பெற்று இருந்தும், மண்ணுலகில் வாழுகின்ற நமக்கு எல்லாம், அந்தப் பேரானந்தப் பெருநிலை இல்லாத குறையைத் தமதாக ஏற்றிக் கொண்டு, நமக்காக, தில்லைக் கூத்தனிடத்தில், தந்திரமாக ஒரு பெருவரத்தை வேண்டுகின்றார்.

 

     "புலியூர்க் கிழவனே! உனது பொன்னான திருவடிகளுக்கு வணக்கம். எனது விருப்பத்தைக் கொஞ்சம் திருச்செவி சார்த்தி அருளவேண்டும். சுவாமீ! நீ எப்போது தோன்றினாயோ அப்போதே நானும் தோன்றியவன். எனக்கும் உனக்கும் காலத்தால் முன் பின் என்பது இல்லை. உனக்கு இல்லாத சிறப்பு ஒன்று எனக்கு உள்ளது. நீயோ ஒரு பிறவியையும் எடுக்காமல் அநாதியாக உள்ளாய். நானோ பிறப்பை அடைவதில் அநாதியாக உள்ளவன். நீ தோன்றியபோது தோன்றிய நான், அன்று முதல் இன்றுவரை, பிறவிச் சுழலில் அகப்பட்டுச் சுழன்றுகொண்டே இருக்கின்றேன். இருந்தாலும் நான் அச்சம் அடைந்தது இல்லை. பிறவி என்பது அச்சத்தைத் தருவது என்பர். ஆனாலும், பலமுறை பழகிவிட்டதால், அச்சம் என்பது என்னிடத்தில் அணு அளவும் இல்லை. எத்தனையோ பிறவிகளை எடுத்து, அளவில்லாத துன்பங்களை அடைந்து இருக்கின்றேன். ஆனாலும், புதியதாக ஒரு துன்பத்தை அனுபவிக்கும்போது, பழைய துன்பம் மறந்து போகின்றது. எடுக்கின்ற பிறவியால் உண்டாகும் அச்சம் மட்டுமே நினைவில் நிற்கின்றது. அவ்வப்பொழுது அனுபவிக்கும் துன்பம்தான் நினைவில் இருக்கும். பழையது மறந்து போகும்.

 

     "எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்பது மணிவாசகரின் கருத்து. ஆனால், எனக்கு அது இல்லை. எத்தனை முறை பிறந்தும், இளைத்துப் போனதாக எனக்குத் தோன்றவில்லை. இதுவரையில் நான் எடுத்த பிறவிகள் ஒரு கடலைப் போன்றன. இனி எடுக்கப் போகும் பிறப்புக்களோ, சிறு சிறு உப்பங்கழி போல்வன. கடலைத் தாண்டியவன் உப்பங்கழியை நீந்துவதற்கா அஞ்சுவான்? இன்னும் எத்தனை பிறவிகள் வந்தாலும், அத்தனைக்கும் நான் அஞ்சமாட்டேன்.

 

     "தில்லையைத் தரிசிக்க முத்தி" என்று ஓர் ஆத்தமொழி உள்ளது. நானும் இதோ,  தில்லையம்பலத்தில் உனது சந்நதியில் வழிபட்டுக் கொண்டு இருக்கின்றேன். உனது சந்நிதியில் நின்று, கண் இமைக்காமல், உச்சிமேல் கைகளைக் குவித்து வணங்கிக் கொண்டு இருக்கும் தேவர்களுள் சிலர் என்னையும் பார்க்கின்றனர். அவர்களுக்கு எனக்குப் பரிபக்குவம் இல்லை என்பது தெரியாது போல் இருக்கின்றது. தில்லையை எத்தனை முறை சென்று வணங்கினாலும், பரிபக்குவம் அடையாத பிறவிகள் இந்த மண்ணுலகத்தில் பல உள்ளன என்பதை தேவர்கள் அறியாதவர் போலும். தில்லையை வணங்கினால் முத்தி என்பது மட்டுமே அவர்கள் அறிந்து உள்ளது.

 

     "வேதாகமங்களில், தில்லைச் சிதம்பரத் திருக்கூத்தைத் தரிசிப்பவர்க்கு இனி என்றும் பிறப்பு இல்லை" என்று உறுதியாகச் சொல்லப்பட்டு உள்ளது. இவனோ, தில்லையைத் தரிசித்துப் பிறவி தீர்ந்தவனாக இல்லையே. அப்படியானால், தில்லையைத் தரிசிக்க முத்தி என்று வேதாகமங்கள் கூறுவது பொய்மொழியாக இருக்குமோ" என்று தேவர்கள் அச்சப்படுகின்றார்கள். தேவர்களுக்கு இப்படிப்பட்ட அச்சம் உண்டாவது தகுமோ? தேவர்கள் அச்சப்பட்டாலும் கூடப் பரவாயில்லை, தில்லைக் கூத்தனே! உனது திருக்கூத்தைக் கண்டு வழிபட்டவன் பிறந்தும் இறந்தும் உழல்வான் என்னும் அவச்சொல், வேதாகமங்களின் தலையில் ஏறக் கூடாது. தேவர்களுக்கும் வீணான அச்சம் உண்டாகக் கூடாது. எனவே, உனது திருக்கூத்தைக் கண்டு வழிபட்ட எனக்கு, சிவகதியை அருளவேண்டும்"

 

     வரம் வேண்டுவதில் இப்படியும் ஒரு தந்திர உத்தியை, "சிதம்பர மும்மணிக்கோவை" என்னும் நூலில் குமரகுருபர அடிகளார் நமக்குக் காட்டி உள்ளார். அதில் உள்ள தந்திரத்தை நன்கு உணர்ந்து, நாமும் தில்லைக் கூத்தனை வழிபட்டு, இல்லை பிறப்பு என்னும் பேரானந்தப் பெருநிலையை அடைய வேண்டும்.

 

"வலன்உயர் சிறப்பில் புலியூர்க் கிழவ! நின்

பொன்னடிக்கு ஒன்று இது பன்னுவன், கேண்மதி,

என்று நீ உளை, மற்று அன்றே யான் உளேன்;

அன்றுதொட்டு இன்றுகாறு அலமரு பிறப்பிற்கு

வெருவரல் உற்றிலன் அன்றே! ஒருதுயர்

உற்றுழி உற்றுழி உணர்வதை அல்லதை

முற்று நோக்க முதுக்குறைவு இன்மையின்,

முந்நீர் நீந்திப் போந்தவன் பின்னர்ச்

சின்னீர்க் கழிநீத்து அஞ்சான், ன்னும்

எத்துணைச் சனனம் எய்தினும் எய்துக,

அத்த! மற்று அதனுக்கு அஞ்சலன் யானே,

இமையாது விழித்த அமரரில் சிலர், ன்

பரிபாகம் இன்மை நோக்கார், கோலத்

திருநடங் கும்பிட்ட ஒருவன் உய்ந்திலனால்,

சுருதியும் உண்மை சொல்லா கொல் என,

வறிதே அஞ்சுவர், ஞ்சாது

சிறியேற்கு அருளுதி செல்கதிச் செலவே".

 

இதன் பொருள் ---

 

     வலன் உயர் புலியூர்க் கிழவ --- வெற்றி பொருந்திய புலியூர்க்கு (புலிக்கால் முனிவர் ஆகிய வியாக்கிரபாதர் வழிபட்டதால், சிதம்பரத்துக்குப் புலியூர் என்று பெயர் உண்டானது) உரியவனே!  நின் பொன்னடிக்கு ஒன்று இது பன்னுவன் --- உனது பொன்னார் திருவடிக்கு ஒரு விண்ணப்பத்தை நான் திரும்பத் திரும்பச் சொல்லுவேன், கேண்மதி --- கேட்டு அருள்வாயாக. என்று நீ உளை, மற்று அன்றே யான் உளேன் --- நீ எப்போது உண்டானாயோ அப்போதே நானும் உண்டானவன்; அன்றுதொட்டு இன்றுகாறு --- அக்காலம் முதல் இன்று வரை, அலமரு பிறப்பிற்கு வெருவரல் உற்றிலன் --- துன்பத்தைத் தருகின்ற பிறப்புக்கு நான் அச்சம் கொண்டது இல்லை. ஒரு துயர் உற்றுழி உற்றுழி உணர்வதை அல்லதை --- ஒவ்வொரு துயரம் உண்டாகும் போதெல்லாம், அதனை உணர்ந்து கொள்வது அல்லாது, முற்று நோக்க முதுக்குறைவு இன்மையின் --- அவற்றில் உண்டான துன்பங்களை எல்லாம் முழுவதும் அறிந்து வருந்துதற்கு உரிய அறிவு என்னிடத்தில் இல்லை. முந்நீர் நீந்திப் போந்தவன் --- கடலை நீந்தியவன், பின்னர்ச் சின்னீர்க் கழிநீத்து அஞ்சான் --- அதன் பின்னர் உண்டாகும் ஒரு சிறு உப்பங்கழியை நீந்துவதற்கு அஞ்சுவது இல்லை. (அதுபோல) இன்னும் எத்துணைச் சனனம் எய்தினும் எய்துக --- இன்னமும் எத்தனை பிறவிகள் வந்தாலும் வரட்டும், அத்த --- எனது அப்பனே! மற்று அதனுக்கு அஞ்சலன் யானே --- அப் பிறவிகளுக்கு நான் அஞ்சப் போவது இல்லை; இமையாது விழித்த அமரரில் சிலர் --- தில்லையில் உன்னைக் கண்டு கண் இமைக்காது வழிப்படிருந்து தேவர்களில் சிலர், ன் பரிபாகம் இன்மை நோக்கார் --- (உன்னக் கண்டு வழிபட்டுக் கொண்டு இருக்கும்) எனது பக்குவம் இன்மையை அறியமாட்டார்கள். கோலத் திருநடம் கும்பிட்ட ஒருவன் உய்ந்திலனால் --- அழகான திருநடத்தைக் கும்பிட்ட இவன் உய்தி பெறவில்லை என்பதை நோக்க, சுருதியும் உண்மை சொல்லா கொல் என --- வேதங்களும் உண்மையைச் சொல்லமாட்டாவோ என, வறிதே அஞ்சுவர் --- (வேத வாக்கியங்களில் வீணான அச்சத்தைக் கொள்ளுவர். அஞ்சாது --- தேவர்கள் அப்படி அச்சம் கொள்ளாத வண்ணம்,  சிறியேற்கு அருளுதி செல்கதிச் செலவே --- அறிவில் சிறியவன் ஆன எனக்குத் திருவடிப் பேற்றை அருளுவாயாக.

 

     "பதியினைப் போ, பசுபாசம் அநாதி" என்பது திருமந்திரம். இறைவன் அநாதி. உயிர்களும் அநாதி. இது கருதியே, தாயுமான அடிகளார், "என்று நீ, அன்று நான். உன் அடிமை அல்லவோ?" என்று அருளினார்.

 

 

 

No comments:

Post a Comment

சிறுநெருப்பு என்று மடியில் முடிந்துகொள்ளக் கூடாது.

  சிறுநெருப்பு என்று மடியில் முடிந்துகொள்ளலாமா ?  கூடாதே. -----                அரும்பெரும் பொருள் எதுவானாலும் ,  அதனை இகழ்தல் கூடாது. காரணம்...