கடவுள் உள்ள பொருளா? இல்லாததா?

 

கடவுள் உள்ள பொருளா? இல்லாததா?

-----

 

     கடவுள் உள்ள பொருளா, இல்லாத ஒன்றா என்ற வினாவிற்கு இப்படியும் அப்படியும் விளக்கம் பண்டுதொட்டே நடந்து வருகிறது. கடவுள் என்று ஒரு பொருள் இல்லை. கடவுளைக் கற்பித்தவன்.... என்றெல்லாம் சொல்லியாகிவிட்டது. எல்லாரும் உண்டு என்கின்ற ஒன்றை, ஒருவர் இல்லை என்று சொல்வாரானால், அவரை எப்படிக் கொள்ளலாம் என்பதனைத் திருவள்ளுவ நாயனார் பின்வருமாறு சொல்லுகின்றார்...

 

"உலகத்தார் உண்டு என்பது இல் என்பான், வையத்து

அலகையா வைக்கப் படும்".

 

     "புல்லறிவாண்மை" என்னும் அதிகாரத்தில் வருவது இத் திருக்குறள். எது புன்மையான அறிவு என்றால், தான் சிற்றறிவினன் ஆக இருந்தே, தன்னைப் பேரறிவினன் ஆக மதித்து, உயர்ந்தோர் கூறும் உறுதிச் சொல் கொள்ளாமை என்று வரையறுக்கப்பட்டது.

 

     இந்த வரையறை நாத்திகத்திற்கும் பொருந்தும். கடவுள் கொள்கை உடையவர்க்கும் பொருந்தும். இரண்டிற்கும் அறிவு முதிர்ச்சி வேண்டும். அறிவு முதிர்ச்சி இல்லாதது தான் சிக்கலுக்குக் காரணம்.

 

     இத் திருக்குறளின் பொருள் ---

 

     "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" என்பது சேந்தன் திவாகர நிகண்டு. உலகத்தார் என்றாலே, அதில் வாழுகின்ற உயர்ந்தோரையே குறிக்கும். உயர்ந்தோர் என்றால், அறிவு ஒழுக்கங்களால் உயர்ந்தவரைக் குறிக்கும். எனவே, உலகத்தில் உள்ள உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளை தன் புல்லறிவால் இல்லை என்று சொல்லுகின்ற அறிவிலியானவன், மனிதனாக வைத்து எண்ணப்படான். அவன் உலகத்தில் காணப்படுவதோர் பேய் எனலாம்.

 

     பேய் என்பது கண்ணால் காணப்படாதது. இந்த அறிவிலியானவன் கண்ணால் காணப்படுகின்றவன்.

 

     "அல்லை ஈது அல்லை ஈது என மறைகளும் அன்மைச் சொல்லினால் துதிக்கும்" என்று திருவிளையாடல் புராணத்தில் சொல்லப்பட்டு இருக்கும். கடவுள் இதுவா என்றால், இது அல்ல, இதுவா என்றால், இதுவும் அல்ல, இதுவா என்றால் இதுவும் கூட அல்ல, என்று எதிர்மறைச் சொல்லினால் வேதங்களே இறைவனைத் துதித்து மெலிவடைகின்றன என்பது இதன் பொருள்.

 

     "வேதங்கள், ஐயா என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற நுண்ணியனே" என்பார் மணிவாசகப் பெருமான். அளக்கலாகாத அறிவுப் பொருளாக உள்ளவன். அவனை அறிவு வடிவானவர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். உணர்ந்த பின்னர், அவன் எப்படி இருப்பான் என்பதை அவர்களாலும் சொல்ல முடியாது. இதனால்தான், கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்னும் பரிபாஷை உண்டாகியது.

 

     "பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால், போக்கு இலன், வரவு இலன் என நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால், கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரை" என்பது மணிவாசகப் பெருமானால் அருளப்பட்ட திருவாசகம்.

 

     "திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள சிபெருமானே!, நினைப்பதற்கும் அருமையானவனே! உன்னை எல்லாப் பொருள்களிலும் நின்றவன் என்று பலரும் சொல்வதும், போக்கு என்னும் இறப்பு நிலையும், வரவு என்னும் பிறவி நிலையும் இல்லாதவன் என்று அறிவுடையோர் இசைப் பாடல்களோடு உன்னைப் பாடுவதும், ஆனந்தக் கூத்து ஆடுவதும் தவிர, உன்னை நேரே பார்த்து அறிந்தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை" என்பது மேற்குறித்த திருவாசகப் பாடல் வரிகளின் பொருள்.

 

     இது குடம், இது படம் என்பதெல்லாம் நம்மால் கண்ணால் கண்டு அறியப்படுகின்ற பொருள்கள். காணும் பொருள்கள் அனைத்தும், தோன்றி, நின்று, மறையக் கூடியவையே. நிலையில்லாத பொருள்கள் எவையும் பரம்பொருள் ஆக மாட்டா. தோற்றமும், அழிவும் இல்லாத ஒன்றை நாம் நம்முடைய கண்ணாலோ, அறிவாலோ சுட்டி அறிய முடியாது.  றெனவே, அறிவாலும், சொல்லாலும் அறிந்து கொள்ள முடியாத இறைவனை "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" என்றார் மணிவாசகப் பெருமான். இறைவன் நம்முடைய சொல்லையும், மன உணர்வையும் கடந்து நிற்கின்றவன்.

 

     ஆற்றல் மிகுந்தவை அனைத்தும் கண்ணுக்குப் புலானாகாதவையே. கண்ணுக்குப் புலனாகாத ஒன்றை, ஒரு வடிவத்தில்தான் உணர்ந்துகொள்ள முடியும். மின்சாரம் கண்ணுக்குப் புலனாகாதது. அதன் இருப்பை அதற்குரிய கருவி ஒன்றின் மூலமாகத்தான் விளங்கிக் கொள்ளமுடியும். மின்சாரம் இருப்பதாலேயே, அந்தக் கம்பியை மின்சாரம் என்று சொல்லமுடியுமா. இல்லை, கம்பி வேறு, மின்சாரம் வேறு. மின்சாரத்தின் இருப்பைக் கம்பியின் மூலமாக உணர்ந்துகொள்கிறோம். அதபோலத்தான் இறை ஆற்றல் என்பது உலகப் பொருள்களில் விளங்கித் தோன்றும். அதை உணருகின்ற ஆற்றல் உள்ளவர்க்கு அது விளங்கும். இல்லாதவர்க்கு அது இல்லாததாகவே இருக்கும். மின்சாரத்தை உணர, கம்பி எப்படித் தேவையோ, அதுபோல இறையை உணர உள்ளம் தேவை.

 

"உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு

உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம்இறை,

உள்ளத்தும் இல்லை, புறத்து இல்லை என்பவர்க்கு

உள்ளத்தும் இல்லை, புறத்து இல்லை தானே".

 

என்னும் திருமந்திரத்தால் இதனை உணர்த்தினார், நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

 

உண்டு என்றால் அது உண்டு. இல்லை என்றால் அது இல்லை.

 

     உயிர் உணர்வால் உயிரின் உள்ளே உணரப்படும் இறைவனை, வெளி ஆரவாரத்தால் யாரும் கலந்து அறிய இயலாது. இதனை," உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை, கள்ளத்தின் ஆரும் கலந்து அறிவார் இல்லை" என்றார் திருமூல நாயனார்.

 

     கடவுளின் இருப்பை இவ்வாறு நாம் தெளிந்துக் கொள்ளமுடியும். மின்சராத்தின் பயன்பாடு அந்தந்தக் கருவிக்கு ஏற்ப அமைவதுபோல், இறைவன், தன்னை யார் யார் எந்தெந்த உருவில் வழிபடுகின்றார்களோ அந்த உருவின் மூலமாக வெளிப்பட்டு அருள்வான். ஆக, கடவுளுக்கு உருவத்தைக் கற்பித்தது அறிவு அற்ற செயல் என்றால், மின்சாரத்தை கம்பியின் மூலமாகவும் கருவிகளின் மூலமாகவும் பயன்படுத்துவதும் அதைப் போலத்தான்.

 

     புத்தகம் என்ற அழியக்கூடிய ஒரு பொருள் இல்லாமல், ஒருவனுக்கு அறிவு விளங்காது. அப்படி விளங்குகின்ற அறிவுக்கு வடிவம் கற்பிக்க முடியாதுதானே.

 

     இல்லையென்று சொல்லுகின்ற கடவுளை உண்டு என்று சொல்வது பொருளற்றது. அதுபோலவே, ஒரு பொருளின் மூலமாக விளங்குகின்ற ஒரு ஆற்றலை, பண்பை, இல்லை என்று சொல்வதும் பொருளற்றதே.

 

     கடவுளின் இருப்பை உண்மையில் காணாதவர்கள் கண்டுவிட்டதாகப் பிதற்றுகின்றார்கள். உண்மையை உணராதவர்கள், கடவுள் உண்மையை உணராமையால் பிதற்றுகின்றார்கள்.

 

சிவவாக்கியர் பாடல் ஒன்றைக் காண்போம்...

 

இல்லைஇல்லை என்றுநீர் இயம்புகின்ற ஏழைகாள்!

இல்லைஎன்று நின்றதுஒன்றை, இல்லை என்னல் ஆகுமோ?

இல்லை,அல்ல, ஒன்றும்அல்ல, இரண்டும்ஒன்றி நின்றதை

எல்லைகண்டு கொண்டபேர் இனிப் பிறப்பது இல்லையே.

 

இப்பாடலின் பழைய பொருள் ஒன்றை அப்படியே, இங்கே தருகின்றேன்...

 

     சர்வ வியாபகப் பொருளாகிய கடவுள் இல்லை, இல்லை என்று அக்கடவுளின் தன்மையை உணர்ந்தால் போன்றும், அங்ஙனம் உணர்ந்த காலத்தில் யாதும் இல்லை என்று அறிந்தமை போலும் சொல்லி வழக்காடுகின்ற அறிவீனர்களாகிய நாத்திகர்களே!  இல்லை என்று சொல்லும் சொல்லின் பயனாக உண்டு என்பது உண்டு என்பது ஒன்றாகிய சொல் இருக்கின்றமையின், இல்லை என்று சொல்லப்பட்டதாய் நிற்கின்ற அக்கடவுளை இல்லையென்று சொல்லல் ஆகாது. அப் பொருளின் உண்மையை விசாரிக்கப் புகுங்கால், இல்லாத பொருள் என்றும், இருந்தாலும் ஒன்று என்றும், இரண்டு என்றும் சொல்லாதபடி கலந்து இருக்கின்ற பொருள் என்றும் வெளிப்படும். அப்படிப்பட்ட பொருளின் உண்மையை உள்ளபடியே ஆராய்ந்து உணர்ந்து கொண்டவர்களான ஞானிகள் இனி உலகத்தின்கண் வந்து பிறவார்.

 

     உண்டு என்று நாட்டவும் அறிவு தேவை. இல்லை என்று நிறுவவும் அறிவு தேவை. அந்த அறிவு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்.....

 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

 

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும், அப்பொருள்

மெய்த்தன்மை காண்பது அறிவு.

 

என்று திருவள்ளுவ நாயனார் அருளினார்.

 

 

 

 

 

No comments:

Post a Comment

சத்தியம் வத, தர்மம் சர.

  வாய்மையே பேசு - அறத்தைச் செய் -----        சத்யம் வத ;  தர்மம் சர ;  என்பவை வேதவாக்கியங்கள். வாய்மையாக ஒழுகுவதைத் தனது கடமையாகக் கொள்ளவேண்...