அத்திப்பட்டு --- 0903. கருகிஅறிவு அகல

 

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

கருகி அறிவு அகல (அத்திப்பட்டு)

 

முருகா!

திருவடிப் பேற்றினை அருள்வாய்.

 

 

தனதனன தனதனன தத்தத் தத்ததன

     தனதனன தனதனன தத்தத் தத்ததன

     தனதனன தனதனன தத்தத் தத்ததன ...... தனதான

 

 

கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர்

     கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட

     கனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினி ...... லிடைபோடாக்

 

கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு

     கலையைபுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல்

     கணகணென எரியவுடல் சுட்டுக் கக்ஷியவர் .....வழியேபோய்

 

மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு

     மனிதர்தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற

     மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன் ...... மலராலே

 

மயல்விளைய அரிவையர்கள் கைப்பட் டெய்த்துமிக

     மனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதி

     வழியையிது வழியெனவு ரைத்துப் பொற்கழல்கள் ......தருவாயே

 

பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ரமயில்

     புரமெரிய இரணியத னுக்கைப் பற்றியியல்

     புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினி ...... லுறமேவும்

 

புகழ்வனிதை தருபுதல்வ பத்துக் கொத்துமுடி

     புயமிருப தறவுமெய்த சக்ரக் கைக்கடவுள்

     பொறியரவின் மிசைதுயிலு சுத்தப் பச்சைமுகில் ...... மருகோனே

 

அரியமர கதமயிலி லுற்றுக் கத்துகட

     லதுசுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டையற

     அமரர்பதி யினியகுடி வைத்தற் குற்றமிகு ......மிளையோனே

 

அருணமணி வெயில்பரவு பத்துத் திக்குமிகு

     மழகுபொதி மதர்மகுட தத்தித் தத்திவளர்

     அணியகய லுகளும்வயல் அத்திப் பட்டிலுறை ......பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

கருகி அறிவு அகல உயிர் விட்டு, க்கிக் கிளைஞர்

     கதறி அழ, விரவு பறை முட்டக் கொட்டிஇட,

     கனகமணி சிவிகையில் அமர்த்தி, கட்டையினில் ......இடைபோடா,

 

கர மலர் கொடு அரிசியினை இட்டு, சித்ரமிகு

     கலையை புரி செய்து, மறைகள் பற்றப் பற்று கனல்

     கணகண என எரிய, உடல் சுட்டு, கட்சியவர் ......வழியேபோய்

 

மருவுபுனல் முழுகி, மனை புக்கு, துக்கம் அறு,

     மனிதர் தமை உறவுநிலை சுட்டுச் சுட்டி, உற

     மகிழ்வுசெய்து, அழுது பட வைத்தத் துட்டன், மதன் ...... மலராலே

 

மயல் விளைய, அரிவையர்கள் கைப்பட்டு, ய்த்து, மிக

     மனமழியும் அடிமையை நினைத்து, சொர்க்க பதி

     வழியை இது வழி என உரைத்து, பொன்கழல்கள் ...... தருவாயே.

 

பொருஇல் மலை அரையன் அருள் பச்சைச் சித்ரமயில்,

     புரம் எரிய இரணிய தனுக் கைப் பற்றி, இயல்

     புதிய முடுகு அரிய தவம் உற்று, கச்சியினில் ...... உற, மேவும்

 

புகழ் வனிதை தரு புதல்வ! பத்துக் கொத்துமுடி

     புயம் இருபது அறவும் எய்த சக்ரக் கைக் கடவுள்,

     பொறி அரவின் மிசை துயிலும் சுத்தப் பச்சைமுகில் ......மருகோனே!

 

அரிய மரகத மயிலில் உற்று, கத்து கடல்

     அது சுவற, அசுரர் கிளை கெட்டுக் கட்டைஅற,

     அமரர்பதி இனிய குடி வைத்தற்கு உற்ற மிகும்...... இளையோனே!

 

அருணமணி வெயில்பரவு பத்துத் திக்கும், மிகும்

     அழகுபொதி மதர் மகுட தத்தித் தத்தி வளர்

     அணிய கயல் உகளும் வயல் அத்திப்பட்டில் உறை ...... பெருமாளே.

 

பதவுரை

 

      பொருவுஇல் மலைஅரையன் அருள் பச்சைச் சித்ர மயில் --- நிகர் அற்றவராகிய மலையரசன் என்னும் இமவான் பெற்ற, பச்சை நிறமுடைய அழகியு மயிலைப் போன்றவளும்,

 

     புரம் எரிய இரணிய தனுக் கைப்பற்றி --- திரிபுரங்ளும் தீப்பற்றுமாறு பொன் வில்லைத் தனது திருக்ககையில் பற்றியவளும்,

 

       இயல் புதிய முடுகு அரிய தவம் உற்று --- இடைவிடாத அரிய தவத்தை மேற்கொண்டு,

 

     கச்சியினில் உற மேவும் புகழ் வனிதை தரு புதல்வ --- திருக்கச்சி என்னும் திருத்தலத்தில் பொருந்தி விளங்குகின்ற புகழினை உடைய அம்பிகை அருளிய புதல்வரே!

 

      பத்துக் கொத்து முடி --- (இராவணனின்) கொத்துப் போன்ற பத்துத் தலைகளும்,

 

     புயம் இருபது அறவும் எய்த --- இருபது தோள்களும் இற்றுப் போகுமாறு, ஒப்பற்ற அம்பினை எய்தவரும்,

 

     சக்ரக் கைக் கடவுள் --- சக்கரப் படையைத் திருக்கையில் கொண்டவரும்,

 

     பொறி அரவின் மிசை துயிலு(ம்) --- புள்ளிகளை உடைய பாம்பு அணையில் அறிதுயில் கொள்ளுகின்றவரும்,

 

     சுத்தப் பச்சை முகில் மருகோனே --- தூய பச்சை மாமாலைபோலும், மேகவண்ணம் போலும் திருமேனியரும் ஆகிய திருமாலின் திருமருகரே!

 

      அரிய மரகத மயிலில் உற்று --- அருமையான மரகத வண்ணம் கொண்ட மயிலின் மீது அமர்ந்து,

 

     கத்து கடல் அது சுவற --- ஒலிக்கும் கடலானது வற்றிப் போகும்படிக்கும்,

 

     அசுரர் கிளை கெட்டுக் கட்டை அற --- அரக்கர்களின் கூட்டமானது அடியோடு அழிந்து போகும்படியும்,

 

       அமரர் பதி இனிய குடி வைத்தற்கு உற்ற மிகு இளையோனே --- தேவர்கள் தலைவனான இந்திரன் இனிதே தனது அமராவதி நகருக்குள் மீளவும் குடிபுகுமாறு அருளிச் செய்த இளம்பூரணரே!

 

       அருண மணி வெயில் பரவு பத்துத் திக்கும் மிகும் --- செம்மணிகளின் ஒளியானது பத்துத் திசைகளிலும் வீசுகின்,

 

     அழகு பொதி மதர் மகுட --- அழகு பொதிந்த மணிமுடியினை உடையவரே!

  

     தத்தித் தத்தி வளர் அணிய கயல் உகளும் வயல் அத்திப்பட்டில் உறை பெருமாளே --- தாவித் தாவி, அணி அணியாக வளர்கின்ற கயல் மீன்கள் துள்ளிக் குதிக்கும் வயல்கள் உள்ள அத்திப்பட்டு என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

      கருகி அறிவு அகல --- உடல் கருகித் தீய்ந்த்து போல ஆகி, அறிவும் கெட்டுப்போய்,

 

     உயிர் விட்டு உக்கிக் --- உயிர் உடலை விட்டுப் பிரிந்து போன பின்னர்,

 

     கிளைஞர் கதறி அழ --- சுற்றத்தார் கதறி அழவும்,

 

      விரவு பறை முட்டக் கொட்டி இட --- பறைகள் விரைந்து ஒலிக்கவும்,

 

     கனக மணி சிவிகையில் அமர்த்தி --- பொன்னும் மணியும் துலங்குகின்ற பல்லக்கில் எனது உடலை அமர்த்தி வைத்து (சுடுகாடிற்கு எடுத்துச் சென்று)

 

     கட்டையினில் இடை போடா ---  விறகுக் கட்டைகளின் இடையில் போட்டு,

 

      கர மலர் கொடு அரிசியினை இட்டு --- மலர் போன்ற கரங்களால் (வாய்க்கு)_ அரிசியினை இட்டு,

 

     சித்ர மிகு கலையை உரி செய்து --- மேலே சார்த்தி இருந்த அழகிய ஆடையையும் உருவி விட்டு,

 

      மறைகள் பற்றப்பற்று கனல் கணகண என எரிய --- உடலின் மறைவான இடங்களிலும் நெருப்பானது பற்றி கணகண என்று எரியவும்,

 

     உடல் சுட்டு --- உடலினைச் சுட்டு,

 

      கட்சியவர் வழியே போய் --- அதுவரை இருந்தவர்கள் தத்தமது (இருப்பிடம் சாரும்) வழியே போய்,

 

     மருவு புனல் முழுகி --- நீரில் நன்றாக முழுகி,

 

     மனை புக்குத் துக்கம் அறு --- வீட்டுக்குச் சென்றது துக்கத்தை விடுகின்,

 

      மனிதர் தமை --- மனிதர்களை,

 

     உறவு நிலை சுட்டுச் சுட்டி --- அவரவரது உறவின் முறையைக் குறித்து,

 

     உற மகிழ்வு செய்து --- அதனால் மகிழ்வும் பூண்டு,

 

     அழுது பட வைத்து --- அழவும் வைத்து,

        

     அத் துட்டன் மதன் மலராலே --- அந்தக் கொடியவன் ஆகிய மன்மதன் விடுகின்ற மலர்க்கணைகளினால்,

 

     மயல் விளைய --- காம மயக்கம் உண்டாகவும்,

 

     அரிவையர்கள் கைப்பட்டு எய்த்து --- பெண்களின் கையில் அகப்பட்டு இளைத்து,

 

     மிக மனம் அழியும் அடிமையை நினைத்து --- மனம் மிக நொந்து அழிகின்ற அடிமையாகிய என்னை நினைத்து,

 

      சொர்க்க பதி வழியை --- பொன்னுலகு புகும் வழியைச் சார்வதற்கு,

 

     இது வழி என உரைத்து --- இதுவே எழி என்று எனக்கு அறுவுறுத்தி,

 

     பொன் கழல்கள் தருவாயே --- பொன்னார் திருவடிகளைத் தந்து அருள்வீராக.

 

பொழிப்புரை

 

     நிகர் அற்றவராகிய மலையரசன் என்னும் இமவான் பெற்ற, பச்சை நிறமுடைய அழகியு மயிலைப் போன்றவளும், திரிபுரங்ளும் தீப்பற்றுமாறு பொன் வில்லைத் தனது திருக்ககையில் பற்றியவளும், இடைவிடாத அரிய தவத்தை மேற்கொண்டு, திருக்கச்சி என்னும் திருத்தலத்தில் பொருந்தி விளங்குகின்ற புகழினை உடைய அம்பிகை அருளிய புதல்வரே!

 

         இராவணனின் கொத்துப் போன்ற பத்துத் தலைகளும், இருபது தோள்களும் இற்றுப் போகுமாறு, ஒப்பற்ற அம்பினை எய்தவரும், சக்கரப் படையைத் திருக்கையில் கொண்டவரும், புள்ளிகளை உடைய பாம்பு அணையில் அறிதுயில் கொள்ளுகின்றவரும், தூய பச்சை மாமாலைபோலும், மேகவண்ணம் போலும் திருமேனியரும் ஆகிய திருமாலின் திருமருகரே!

 

     அருமையான மரகத வண்ணம் கொண்ட மயிலின் மீது அமர்ந்து, ஒலிக்கும் கடலானது வற்றிப் போகும்படிக்கும், அரக்கர்களின் கூட்டமானது அடியோடு அழிந்து போகும்படியும்,

தேவர்கள் தலைவனான இந்திரன் இனிதே தனது அமராவதி நகருக்குள் மீளவும குடிபுகுமாறு அருளிச் செய்த இளம்பூரணரே!

 

     செம்மணிகளின் ஒளியானது பத்துத் திசைகளிலும் வீசுகின், அழகு பொதிந்த மணிமுடியினை உடையவரே!

 

     தாவித் தாவி, அணி அணியாக வளர்கின்ற கயல் மீன்கள் துள்ளிக் குதிக்கும் வயல்கள் உள்ள அத்திப்பட்டு என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

         உடல் கருகித் தீய்ந்த்து போல ஆகி, அறிவும் கெட்டுப்போய், உயிர் உடலை விட்டுப் பிரிந்து போன பின்னர், சுற்றத்தார் கதறி அழவும், பறைகள் விரைந்து ஒலிக்கவும், பொன்னும் மணியும் துலங்குகின்ற பல்லக்கில் எனது உடலை அமர்த்தி வைத்து, சுடுகாடிற்கு அலங்காரமாக எடுத்துச் சென்று விறகுக் கட்டைகளின் இடையில் அலங்கோலமாகப் போட்டு, மலர் போன்ற கரங்களால் வாய்க்கு அரிசியினை இட்டு, மேலே சார்த்தி இருந்த அழகிய ஆடையையும் உருவி விட்டு, உடலின் மறைவான இடங்களிலும் நெருப்பானது பற்றி கணகண என்று எரியவும் உடலினைச் சுட்டு, அதுவரை இருந்தவர்கள் தத்தமது இருப்பிடம் சாரும் வழியே போய், நீரில் நன்றாக முழுகி, வீட்டுக்குச் சென்றதும் துக்கத்தை விடுகின்மனிதர்களை, அவரவரது உறவின் முறையைக் குறித்து, அதனால் மகிழ்வு பூண்டும், அழவும் வைத்து, அந்தக் கொடியவன் ஆகிய மன்மதன் விடுகின்ற மலர்க்கணைகளினால் காம மயக்கம் உண்டாகவும், பெண்களின் கையில் அகப்பட்டு இளைத்து, மனம் மிக நொந்து அழிகின்ற அடிமையாகிய என்னை நினைத்து,

பொன்னுலகு புகும் வழியைச் சார்வதற்கு, இதுவே எழி என்று எனக்கு அறுவுறுத்தி பொன்னார் திருவடிகளைத் தந்து அருள்வீராக.

 

விரிவுரை

 

கருகி, அறிவு அகல, உயிர் விட்டு உக்கி ---

 

சாவு நெருங்கும் காலத்து, உடலானது வற்றிப் போய் கருத்து விடும். அறிவு அழிந்து போகும். உடலை விட்டு உயிர் பிரிந்து போகும்.

 

புலன்ஐந்தும் பொறிகலங்கி, நெறிமயங்கி,

         அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி

அலமந்த போதாக, அஞ்சேல் என்று

         அருள்செய்வான் அமரும் கோயில்,

வலம்வந்த மடாவார்கள் நடமாட

         முழவு அதிர மழை என்று அஞ்சிச்

சிலமந்தி அலமந்து மரம் ஏறி

         முகில்பார்க்கும் திருவையாறே.      --- திருஞானசம்பந்தர்

 

கிளைஞர் கதறி அழ ---

 

சுற்றத்தார் கதறி அழுவார்கள்.

 

விரவு பறை முட்டக் கொட்டி இட ---

 

பறைகள் நிறைந்து முழங்கும்.

 

கனக மணி சிவிகையில் அமர்த்தி ---

 

பொன்னும் மணியும் துலங்குகின்ற பல்லக்கில் உயிர் பிரிந்த உடலை அமர்த்தி வைத்து, அலங்காரப்படுத்தி, சுடுகாடிற்குச் சுமந்து செல்வார்கள்,

 

கட்டையினில் இடை போடா ---  

 

விறகுக் கட்டைகளின் இடையில் பிணத்தைக் கிடத்துவார்கள். அந்த விளகும் ஒழுங்கான விறகு அல்ல. அது முருட்டு மெத்தை என்பார் அப்பர் அடிகள்.

 

முருட்டு மெத்தையில் முன்கிடத்தா முனம்

அரட்டர் ஐவரை ஆசறுத்திட்டு, நீர்

முரட்டு அடித்தஅத் தக்கன்றன் வேள்வியை

அரட்டு அக்கிதன் ஆரூர் அடைமினே.

 

கர மலர் கொடு அரிசியினை இட்டு ---

 

மலர் போன்ற கரங்களால் வாய்க்கு அரிசியினை இடுவார்கள்.

 

சித்ர மிகு கலையை உரி செய்து ---

 

பிணத்தின் மீது அழகாகப் போர்த்தி இருந்த ஆடையையும் உருவி விடுவார்கள்.

 

மறைகள் பற்றப்பற்று கனல் கணகண என எரிய உடல் சுட்டு ---

 

உடலில் அதுவரை பாதுகாத்து மறைவாக வைத்திருந்து இடங்களிலும் நெருப்பானது பற்றி கணகண என்று எரியும்படி உடலினைச் சுட்டுவிடுவார்கள்.

 

கட்சியவர் வழியே போய் மருவு புனல் முழுகி, மனை புக்குத் துக்கம் அறு மனிதர் தமை உறவு நிலை சுட்டுச் சுட்டி ---

 

அதுவரை ஒன்றை கூடி இருந்தவர்கள் யாவரும், தத்தமது இருப்பிடம் சாருகின்ற வழியே சென்று, நீரினில் முழுகி, வீட்டிற்குச் சென்றதுமே துக்கத்தை மறந்துவிடுவார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை, இவர் இன்னார் என்று உறவு முறை கொண்டாடுகின்றோம்.

 

உற மகிழ்வு செய்து, அழுது பட வைத்து ---

 

அவரோடு மகிழ்வு கொண்டிருந்த காலத்தில் மகிழ்ந்தும், துன்பம் நேரிட்ட காலத்தில் அழுதும் இருந்தோம்.

        

அத் துட்டன் மதன் மலராலே மயல் விளைய ---

 

அப்படி உறவின் முறை கருதி வாழ்ந்து கொண்டு இருந்த காலத்தில், மன்மதனுடைய மலர்க்கணைகளின் தாக்கத்தால், காம மயக்கம் உண்டாகும்.

 

அரிவையர்கள் கைப்பட்டு எய்த்து மிக மனம் அழியும் அடிமையை நினைத்து, சொர்க்க பதி வழியை இது வழி என உரைத்து பொன் கழல்கள் தருவாயே ---

 

அந்த மயக்கத்தைத் தீர்த்துக் கொள்ள அழகிய பெண்களை நாடி இருந்து, அவர்களிடத்தில் இருந்து மீளும் வழி அறியாது, அவர்களையே நாடி இருந்து, இறுதியில், உடல் வலிமையும், பொருள் நலமும் இழந்து, இளைப்பு உண்டாகும்.  அந்தக் காலத்தில் மனம் மிக நொந்து அழிகின்ற உயிர்களின் மீது கருணை வைத்து, குருநாதனாக எழுந்தருளி, இருளான துன்ப மருள் மாயையை விலக்கி, பொன்னுலகம் சாருகின்ற வழியை அறிவுத்தி, அதற்கான நன்னெறியிலே பயிலச் செய்து, திருவடிகளைத் தந்து அருள வேண்டுகின்றார் அடிகளார்.

 

பொருவுஇல் மலைஅரையன் அருள் பச்சைச் சித்ர மயில் ---

 

பொரு --- ஒப்பு, நிகர்.

 

புரம் எரிய இரணிய தனுக் கைப்பற்றி ---

 

புரம் --- ஊர், நகரம், தலைநகரம், முப்புரங்கள்.

 

இரணிய தனு --- பொன் வில்.

 

சிவபெருமான் மாதொரு கூறன். பெருமானுடைய இடப்பாகம் உமையவளுடையது. வில்லைத் தாங்கிய கை இடக்கை. அது உமையம்மையின் திருக்கரம். ஆதலால், மேருமலையை வில்லாக வளைத்தவர் பார்வதி தேவியார் என்று இங்கே கூறி அருளினார்.

 

இதே கருத்தை சுவாமிகள்,  திருவானைக்காத் திருப்புகழிலும் வைத்துப் பாடி உள்ளார்.

 

அகில புவனமும் அடைவினில் உதவிய

     இமய கிரி மயில், குலவரை தநு என

     அதிகை வரு புரம் நொடியினில் எரிசெய்த ......அபிராமி

 

அப்பர் பெருமானும் இதே கருத்தில் பாடி உள்ளார். வில்லை வளைத்த திருக்கரம் உமையம்மையாருடையதே என்கிறார்.

 

"கற்றார் பயில்கடல் நாகைக்கா ரோணத்துஎம் கண்ணுதலே

வில் தாங்கிய கரம் வேல்நெடுங் கண்ணி வியன்கரமே

நல் தாள் நெடும்சிலை நாண்வலித்த கரம் நின்கரமே

செற்றார் புரம்செற்ற சேவகம் என்னைகொல் செப்புமினே".

 

இதன் பொருள் ---

 

கற்றவர்கள் பெருகிய, கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உறையும், நெற்றியில் கண்ணையுடைய எம்பெருமானாரே! வில்லைத் தாங்கிய கை, வேல் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதி பாகத்தில் உள்ள கையே. நல்ல கால்களால் வில்லை மிதித்து அதற்கு நாணை ஏற்றிய கை உம் பாகத்தில் உள்ள கையே. இவ்வாறாகப் பகைவருடைய மும்மதில்களை அழித்த வீரம் உம்முடையது என்று கூறுவதன் காரணத்தை அடியேற்குத் தெரிவியுங்கள்.

 

கருதலர் திரிபுரம் மாண்டு நீறு எழ,

     மலைசிலை ஒருகையில் வாங்கு நாரணி,

     கழல்அணி மலைமகள், காஞ்சி மாநகர் ....உறைபேதை,

களிமயில், சிவனுடன் வாழ்ந்த மோகினி,

     கடல் உடை உலகினை ஈன்ற தாய், மை,

     கரிவனம் உறை அகிலாண்ட நாயகி ......அருள்பாலா!

                                                         --- (பரிமளம் மிக) திருப்புகழ்.

 

இயல் புதிய முடுகு அரிய தவம் உற்று கச்சியினில் உற மேவும் புகழ் வனிதை தரு புதல்வ ---

 

அனனியம் பெற்று,  ற்று அற்று ஒரு பற்றும்,

     தெளிதரும் சித்தர்க்குத் தெளிசிற் கொந்து

     அமலை, தென் கச்சிப் பிச்சி மலர்க் கொந் .....தளபாரை,

அறவி, நுண் பச்சைப் பொற்கொடி, கற்கண்டு

     அமுதினும் தித்திக்கப்படு சொல்கொம்பு,

     அகிலஅண்டத்து உற்பத்தி செய் முத்தின் ......பொலம் மேரு,

 

தனிவடம் பொற்புப் பெற்ற முலைக் குன்று

     இணை சுமந்து எய்க்கப் பட்ட நுசுப்பின்

     தருணி, சங்கு உற்றுத் தத்து திரைக் கம் ......பையின் ஊடே

தவ முயன்று, ப் பொற்ற படி கைக்கொண்டு,

     அறம் இரண்டு எட்டு எட்டு எட்டும் வளர்க்கும்

     தலைவி, பங்கர்க்குச் சத்யம் உரைக்கும் ......பெருமாளே.

 

என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

 

அம்பிகை கம்பை நதிக் கரையில் மணலால் இலிங்கம் அமைத்து தனி மாமரத்தின் கீழ் வழிபட்டார். இறைவன் கம்பா நதியில் வெள்ளத்தை ஏவி அருளினார்.  வெள்ளத்தைக் கண்டு தேவி தனக்கு இடர் வருமே என்று அஞ்சாது, இறைவன் திருமேனிக்கு இடர் வரக்கூடாதே என்று இறைவனைத் தழுவிக்கொண்டாள். அம்பிகையின் அன்பைக் கண்டு இறைவன் குழைந்து அருளினார். தழுவக் குழைந்ததனால், திருமேனியில் வளைத் தழும்பும் முலைச் சுவடும் உண்டாயின.

 

எள்கல் இன்றி இமையவர் கோனை

         ஈச னைவழி பாடுசெய் வாள்போல்

உள்ளத் துஉள்கி உகந்துஉமை நங்கை

         வழிபடச் சென்று நின்றவா கண்டு

வெள்ளம் காட்டி வெருட்டிட வஞ்சி

         வெருவிஓ டித்தழு வவெளிப் பட்ட

கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக்

         காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.     ---  சுந்தரர்.

 

பூதி ஆகிய புனிதநீறு ஆடிப்

         பொங்கு கங்கைதோய் முடிச்சடை புனைந்து

காதில் வெண்குழை கண்டிகை தாழக்

         கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்

ஆதி தேவனார் ஆயும் மா தவஞ்செய்

         அவ்வ ரம்கொலோ அகிலம்ஈன்று அளித்த

மாது மெய்ப்பயன் கொடுப்பவே கொண்டு

         வளைத்த ழும்புடன் முலைச்சுவடு அணிந்தார். ---  பெரியபுராணம்.

 

தத்தித் தத்தி வளர் அணிய கயல் உகளும் வயல் அத்திப்பட்டில் உறை பெருமாளே ---

 

     அத்திப்பட்டு என்னும் திருத்தலம் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது.

 

கருத்துரை

 

முருகா! திருவடிப் பேற்றினை அருள்வாய்.


No comments:

Post a Comment

வயலூர் --- 0910. இகல்கடின முகபட

      அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   இகல்கடின முகபட (வயலூர்)   முருகா! விலைமாதர் பற்றை விடுத்து , தேவரீர...