தைப்பூசத் திருநாள்

 

 

முத்தும், அதன் சிறப்பும்

-----

 

     "முத்தி" என்றால் விடுபடுதல், வெளிப்படுதல் என்று பொருள். பாசங்களில் இருந்து விடுபடுவது "முத்தி". "முத்தி" என்பதன் பொருள் "பாசநீக்கம்" ஆகும்.

 

     வாயிதழில் இருந்து அன்பின் வெளிப்பாடாக ஓசையுடன் வருவது "முத்தம்" எனப்படும்.

 

     "முத்து" என்னும் சொல்லுக்கு, அழகு, அன்பு, கண்ணீர் என்றும் பொருள் உண்டு.

 

     சிப்பியில் இருந்து விடுபட்டு வருகின்ற, வெளிப்படுகின்ற மணிக்கு "முத்து" என்று பெயர். உடல் சூட்டை வெளியேற்றுவது. கறையில்லாத மழைநீர்த் துளியானது, ஆவணிச் சுவாதியில், சிப்பியின் வயிற்றில் புகுந்து, கட்டித் தன்மையுடன் முத்தாக வெளிவரும். நவமணிகளில் மற்ற மணிகளை அணிவதில் குற்றம் உண்டாதலும் உண்டு. ஆனால், முத்து எல்லோரும் அணியும் அற்புத நலம் வாய்ந்தது.

 

     கறையற்ற தெய்வநலம் பொருந்திய திருஞானசம்பந்தப் பெருமானுக்கு, இறைவன் முத்துப் பந்தரும், முத்துச் சிவிகையும், முத்துக் குடையும் அளித்த அருள்நலத்தை எண்ணிப் பார்த்தால் முத்தின் நலமும், சிறப்பும் விளங்கும்.

 

     பிற மணிகள் பட்டை தீட்டினால் அன்றி ஒளி விடா. முத்து இயல்பாகவே ஒளி விடும். பட்டை தீட்ட வேண்டுவது இல்லை. முத்து நவமணிகளுள் சிறந்தது. முத்தினை உடம்பில் அணிந்து கொள்வதால் நன்மைகள் பல உண்டு.

 

 

     முத்து பிறக்குமிடம் பதின்மூன்று எனவும் இருபது எனவும் கூறப்படுகின்றது. அவையாவன:-- சங்கு, மேகம், மூங்கில், பாம்பு, பன்றிக்கோடு, நெல், இப்பி, மீன்தலை, கரும்பு, யானைக்கோடு, சிங்கம், கற்புடை மகளிர் கழுத்து, கொக்கின் கழுத்து, நந்து, முதலை, உடும்பு, பசுவின்பல், கழுகு, வாழை, தாமரை.

 

     இதுவேயும் அன்றி சந்திரனிடத்தும் முத்து பிறக்கும் எனக் கூறுவர். ஆனால், இப்போது சிப்பியிலிருந்து முத்து தோன்றுவது தான் காணக் கிடக்கின்றது.

 

     முத்து விளையும் இடங்கள், முத்தின் நிறங்கள், தன்மைகள், உரிய தேவதைகள், முத்தினை அணிவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து "திருவிளையாடல் புராணம்" கூறவதை அறிவோம்.

 

தக்க முத்து இரண்டு வேறு

     தலசமே சலசம் என்ன,

இக்கதிர் முத்தம் தோன்றும்

     இடன் பதின்மூன்று, சங்கம்,

மைக்கரு முகில்,வேய், பாம்பின்

     மத்தகம், பன்றிக் கோடு,

மிக்கவெண் சாலி, இப்பி,

     மீன்தலை, வேழக் கன்னல்.

 

இதன் பொருள் ---

 

     குற்றமில்லாத முத்துக்கள் நிலத்தில் தோன்றும் "தலசம்" என்றும், நீரில் தோன்றும் "சலசம்" என்றும் இரண்டு வகைப்படும். இந்த ஒளி பொருந்திய முத்துக்கள் தோன்றும் இடங்கள், சங்கும், கரியமேகமும், மூங்கிலும், பாம்பின் தலையும், பன்றிக் கொம்பும், மிக்க வெண்ணெல்லும், சிப்பியும், மீனினது தலையும், வேழம் எனப்படும் ஒருவகைக் கரும்பும் ஆகும்.

 

 

கரிமருப்பு, வாய் மான்கை,

         கற்புடை மடவார் கண்டம்,

இருசிறைக் கொக்கின் கண்டம்,

         எனக்கடை கிடந்த மூன்றும்

அரியன, ஆதிப் பத்து

         நிறங்களும், அணங்கும் தங்கட்கு

உரியன நிறுத்த வாறே

         ஏனவும் உரைப்பக் கேண்மின்.

 

இதன் பொருள் ---

 

     யானையின் தந்தமும், சிங்கத்தின் கையும், கற்புடை மகளிரின் கழுத்தும், இரண்டு சிறகுகளை குடைய கொக்கின் கழுத்தும் என்பன. இவற்றில் இறுதியில் சொல்லப்பட்ட மூன்றும் கிடைத்தற்கு அரியன. முதலில் சொல்லப்பட்ட பத்து வகை முத்துக்களின் நிறங்களும், அவற்றிற்கு உரியவாகிய தெய்வங்களும், பிறவும், முறையே சொல்லக் கேளுங்கள்.

                                                     

 

மாடவெண் புறவின்முட்டை

         வடிவு எனத் திரண்ட பேழ்வாய்

கோடுகான் முத்தம் வெள்ளை

         நிறத்தன, கொண்மூ முத்தம்

நீடுசெம் பரிதி அன்ன

         நிறத்தது, கிளைமுத்து ஆலிப்

பீடுசால் நிறத்த, அராவின்

         பெருமுத்தம் நீலத்து ஆமால்.

 

இதன் பொருள் ---

 

     மாடப் புறாவின் வெள்ளிய முட்டையின் வடிவினைப் போலத் திரட்சி வாய்ந்த, பிளந்த வாயினையுடைய சிப்பியும், சங்கும் ஈன்ற முத்தங்கள் வெள்ளை நிறத்தினை உடையன. மேகத்தில் இருந்து பிறக்கும் முத்து, மிக்க செந்நிறம் வாய்ந்த சூரியனை ஒத்த நிறத்தினை உடையது. மூங்கிலில் பிறந்த முத்து, மழைக் கட்டி போலப் பெருமை நிறைந்த நிறத்தினை உடையது. பாம்பின் தலையில் இருந்து பிறந்த முத்து, நீல நிறத்தினை உடையதாகும்.

 

ஏனம் மா ஆரம் சோரி ஈர்ஞ்சுவைச் சாலி முத்தம்

ஆனது பசுமைத்து ஆகும், பாதிரி அனையது ஆகும்

மீனது தரளம், வேழம் இரண்டினும் விளையும் முத்தம்

தான்அது பொன்னின் சோதி, தெய்வதஞ் சாற்றக் கேண்மின்.

 

இதன் பொருள் ---

 

     பன்றிக் கொம்பின் பெருமையுடைய முத்தானது குருதியின் நிறத்தினை உடையது. குளிர்ந்த சுவையினை உடைய வெண்ணெல்லின் முத்து பசிய நிறத்தினை உடையது. மீன் தலையின் முத்து பாதிரி மலர் போலும் நிறத்தினை உடையது. யானைக் கொம்பும் கரும்பும் ஆகிய இவ்விரண்டினும் உண்டாகின்ற முத்துக்கள் பொன்னின் நிறத்தினை உடையன. அவ்வம் முத்தங்களுக்குரிய தெய்வங்களையும் கூறக் கேளுங்கள்.

 

பான்முத்தம் வருணன் முத்தம்,

     பகன்முத்தம் பகலோன் முத்தம்,

மான்முத்த நீல முத்தம்,

     மாசறு குருதி முத்தம்

கால்முத்தம், பசிய முத்தங்

     காலன்ம்ன் முத்தம், தேவர்

கோன்முத்தம் பொன்போல் முத்தம்,

     குணங்களும் பயனும் சொல்வாம்.

 

இதன் பொருள் ---

 

     பால் போன்ற வெள்ளிய முத்தங்கள் வருணனுக்குரிய முத்தங்கள். சூரியன் போன்று செந்நிறம் வாய்ந்த முத்தங்கள் சூரியனுக்கு உரிய முத்தங்கள்.  நீல நிறமுடைய முத்தங்கள் திருமாலுக்குரிய முத்தங்கள். குற்றமற்ற குருதி நிறத்தினை உடைய முத்தங்கள் வாயுதேவனுக்கு உரிய முத்தங்கள். பசுமையான நிறத்தினை உடைய முத்தங்கள் காலனுக்கு உரிய முத்தங்கள். பொன்னைப் போலும் நிறம் வாய்ந்த முத்தங்கள்

தேவேந்திரனுக்கு உரிய முத்தங்கள். இனி அவற்றின் குணங்களையும் அணிவோர் அடையும் பயனையும் கூறுவோம்.

 

உடுத்திரள் அனைய காட்சி,

         உருட்சி, மாசு இன்மை, கையால்

எடுத்திடில் திண்மை, பார்வைக்கு

         இன்புறல், படிகம் என்ன

அடுத்திடு குணம் ஆறு, இன்ன

         அணியில் மூது அணங்கோடு, இன்மை

விடுத்திடும், திருவந்து எய்தும்

         விளைந்திடும் செல்வம் வாழ்நாள்.

 

இதன் பொருள் ---

 

     நட்சத்திரக் கூட்டத்தினை ஒத்த தோற்றமும்,  திரட்சியும், குற்றங்கள் இல்லாமையும், கையினால் எடுத்தால் திண் என்று இருத்தலும், பார்வைக்கு இன்பம் செய்தலும், படிகம்

போன்று தெளிந்திருத்தலும், என்று முத்துக்குப் பொருந்திய குணங்கள் ஆறு ஆகும். இத்தகைய முத்துக்களை அணிந்தால், மூதேவி வந்து சேரமாட்டாள். வறுமை நீங்கும். திருமகள் வந்து சேருவாள். செல்வமும் வாழ்நாளும் மிகும்.

 

இன்று (28.01.2021) தைப்பூசத் திருநாள்

 

     நவமணிகளில் சிறப்பு வாய்ந்ததான முத்துப் பிறக்கும் இடங்கள் பற்றித் தெரிந்துகொண்டோம். முத்து வெண்ணிறமாகத்தான் இருக்கவேண்டும் என்பது இல்லை என்பதையும் அறிந்தோம். முத்தின் சிறப்பு அதன் ஒளியில்தான் உள்ளது. அதனை அணிந்துகொள்வோருடைய வறுமை அகலும். மூதேவி அடையமாட்டாள். செல்வம் பெருகும். வாழ்நாள் மிகும், உடல் சூடு தணியும் என்பதையும் அறிந்துகொண்டோம்.

 

     இன்று தைப்பூசத் திருநாள். முத்துக்கும் முத்தாக விளங்குகின்ற முத்தையன் என்றும் முத்துக்குமாரசுவாமி என்றும் போற்றப்படும் முருகப் பெருமானின் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த திருநாள். இன்றைய நன்னாளில், முத்தின் சிறப்புக் குறித்தும், அதன் பயன்களை குறித்தும் அறிந்துகொள்ளும் பேறு, முத்தையன் அருளால் வாய்த்தது என்றே எண்ணத் தோன்றுகின்றது. இதை எண்ணி நான் செய்யவில்லை. திருவருளால் அப்படி நேர்ந்தது.

 

     பலவிதமான முத்துக்களால் ஆன மாலைகளை அணிந்துகொண்டு, முருகப் பெருமான், தனது தேவிமார்களோடும், தனது அடியார்களோடும் எழுந்தருளி வந்து அருள் புரியவேண்டும் என்று அருணகிரிநாதப் பெருமான், ஒரு திருப்புகழ்ப் பாடலில் வேண்டி உள்ளார். அந்த அருட்பாடலைப் பதம் பிரித்து, வழிபட்டு உருகத் தருகின்றேன்.

 

    

கழைமுத்து மாலை, புயல்முத்து மாலை,

     கரிமுத்து மாலை, ...... மலைமேவும்

 

கடிமுத்து மாலை, வளைமுத்து மாலை,

     கடல்முத்து மாலை, ...... அரவு ஈனும்

 

அழல்முத்து மாலை, இவைமுற்றும் மார்பின்

     அடைவு ஒத்து உலாவ, ...... அடியேன்முன்,

 

அடர் பச்சை மாவில், அருளில் பெணோடும்,

     அடிமைக் குழாமொடு ...... அருள்வாயே.

 

மழை ஒத்த சோதி, குயில் தத்தை போலும்

     மழலைச் சொல் ஆயி, ...... எமை ஈனும்,

 

மத மத்த, நீலகள நித்த, நாதர்

     மகிழ் சத்தி ஈனும் ...... முருகோனே!

 

செழுமுத்து மார்பின் அமுதத் தெய்வானை

     திருமுத்தி மாதின் ...... மணவாளா!

 

சிறை இட்ட சூரர் தளைவெட்டி, ஞான

     திருமுட்டம் மேவு ...... பெருமாளே.

 

இதன் பதவுரை ---

 

         மழை ஒத்த சோதி --- மேகத்தை நிகர்த்துக் கருணைமழை பொழியும் சோதி வடிவினரும்,

 

        குயில் தத்தை போலும் மழலைச்சொல் ஆயி --- குயிலைப் போலவும் கிளியைப் போலவும் மழலை மொழிகளை இனிமையாகப் பேசும் உலக மாதாவும்,

 

       எமை ஈனும் --- எம்மை ஈன்றவரும்,

 

       மதமத்த --- தேன் துளிர்க்கும் ஊமத்தை மலரை அணிந்த,

 

     நீல கள --- நீலகண்டரும்,

 

     நித்த நாதர் மகிழ்சத்தி --- என்றும் உள்ளவரும் ஆன சிவபெருமான் மகிழ்கின்ற அருட்சத்தியும் ஆகிய உமாதேவியார்

 

     ஈனும் முருகோனே --- பெற்றருளிய முருகக் கடவுளே!

 

      செழுமுத்து மார்பின் அமுதத் தெய்வானை --- செழிப்புள்ள முத்துமாலைகளை அணிந்த திருமார்பை உடையவரும், அமுதம் போன்ற தெய்வயானை அம்மையாரும்

 

       திரு முத்தி மாதின் மணவாளா --- மேலான முத்தியைத் தரவல்ல மாதரசி ஆகிய வள்ளிநாயகியாரின் மணவாளரே!

 

       சிறை இட்ட சூரர் தளை வெட்டி --- தேவர்களைச் சிறை வைத்து, சூராதி அவுணர்கள் இட்ட விலங்கை வெட்டி எறிந்து,

 

       ஞான திருமுட்டம் மேவு பெருமாளே --- அறிவு மயமாகிய திருமுட்டம் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே

 

       கழை முத்து மாலை --- கரும்பு தரும் முத்தால் ஆன மாலை,

 

     புயல் முத்து மாலை --- மேகம் தரும் மழைத்துளிகளால் ஆன முத்து மாலை,

 

      கரி முத்து மாலை --- யானையின் தந்தத்தில் பிறந்த முத்தால் ஆன மாலை,

 

      மலை மேவும் கடிமுத்து மாலை --- மலையில் உள்ள மூங்கில்களில் கிடைக்கும் சிறப்பான முத்தினால் ஆன மாலை,

 

      வளை முத்து மாலை --- சங்கிலிருந்து கிடைக்கும் முத்தால் ஆன மாலை,

 

      கடல் முத்து மாலை --- கடலில் பெறப்படும் சிப்பியின் முத்தால் ஆன மாலை,

 

      அரவு ஈனும் அழல் முத்து மாலை --- பாம்பு தரும் ஒளியுள்ள முத்தால் ஆன மாலை,

 

      இவை முற்றும் மார்பின் அடைவு ஒத்து உலாவ --- ஆக, எல்லா மாலைகளும் திருமார்பிலே முறையாகப் புரண்டு அசைய,

 

      அடியேன் முன் ---  அடியேனின் எதிரே

 

     அடர் பச்சை மாவில் --- வலிமை மிக்க பச்சை நிறபுடைய குதிரை போன்ற மயிலில்

 

      அருள் இல் பெணோடும் --- அருளையே குடியாக க கொண்ட வள்ளியம்மையாருடனும், தேவயானை அம்மையாருடனும்,

 

     அடிமைக் குழாமொடு அருள்வாயே --- அடியார் திருக் கூட்டத்துடனும் வந்து அருள் புரிவாயாக

  

     முருகவேள் உமைக்கும் ஒரு முத்தாய் முளைத்த முத்துக்குமாரசுவாமி. ஆதலின், இத்தனை விதமான முத்து மாலைகளுடன், தனியாக வராமல், தனது தேவிமார்களுடனும், தன்னை வழிபடும் அடியார் திருக்கூட்டத்துடனும் எழுந்தருளி வரவேண்டுகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     உமாதேவியார் திருவுள்ளம் மகிழ்ந்து முருகப் பெருமானின் திருமேனி முழுதும் முத்தங்களைப் பொழிகின்றார். அந்த அன்பு முத்தங்களால் அகம் மகிழ்ந்த திருத்தணிகைப் பெருமான், தனக்கும் முத்தம் (முத்தி) தந்து அருளவேண்டும் என்பதாக, திருத்தணிகை முருகன் பிள்ளைத் தமிழில் அமைந்துள்ள ஒரு பாடலையும், இன்றைய வழிபாட்டுக்காகத் தருகின்ற பெரும்பேற்றை அடியேன் பெற்றுள்ளேன்...

 

கஞ்ச முகத்தில் முழுமுத்தம்,

     கண்ணில் ப(ன்)னிரண்டு உயர் முத்தம்,

கன்னத்தினில் ஆறு இருமுத்தம்,

     கனிவாயினில் மூவிரு முத்தம்,

 

அஞ்சல் கரத்து ஆறு இரு முத்தம்,

     அகன்ற பார்பில் ஓர் முத்தம்,

அம்பொன் புயத்து ஆறு இரு முத்தம்,

     அழகுஆர் உந்திக்கு ஒரு முத்தம்,

 

தஞ்சத்து அருள் சேவடி மலரில்

     தகவு ஆர் இரண்டு முத்தம் எனத்

தழுவிக் கவுரி அளித்து மகிழ்

     தனயா! எனை ஆள் இனியோனே!

 

செஞ்சல் குறமின் முத்து உகந்த

     சேயே! முத்தம் தருகவே!

தெய்வத் தணிகை மலைவாழும்

     தேவே! முத்தம் தருகவே.

             

     எல்லாவிதமான முத்துக்களுக்கும் விலை உண்டு. ஆனால், முருகப் பெருமான் தந்து அருளுகின்ற முத்தத்திற்கு (முத்திக்கு) விலைமதிப்பு இல்லை. ஒப்பற்றதும் விலைமதிக்கப்பட முடியாததும் ஆனதொரு முத்தத்தை முருகப் பெருமான் தனக்குத் தந்து அருளவேண்டும் என்பதாக, திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழில் அமைந்துள்ள ஒரு பாடலையும் தருகின்ற பாக்கியத்தை முருகப் பெருமான் திருவருளால் பெற்றுள்ளேன்.

 

கத்தும் தரங்கம் எடுத்து எறியக்

     கடுஞ்சூல் உளைந்து, வலம்புரிகள்

கரையில் தவழ்ந்து வாலுகத்தில்

     கான்ற மணிக்கு விலை உண்டு;

 

தத்தும் கரட விகடதட

     தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை

தரளம் தனக்கு விலை உண்டு;

     தழைத்துக் கழுத்து வளைந்தமணிக்

 

கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக்

     குளிர் முத்தினுக்கு விலை உண்டு;

கொண்டல் தரு நித்திலம் தனக்குக்

     கூறும் தரம் உண்டு; ன் கனிவாய்

 

முத்தம் தனக்கு விலைஇல்லை,

     முருகா! முத்தம் தருகவே!

முத்தம் சொரியும் கடல் அலைவாய்

     முதல்வா! முத்தந் தருகவே.

 

     உமாதேவியார் கிளியைப் போலவும், குயிலைப் போலவும் மிக மிக இனிமையாக மழலை மொழியாகக் கொஞ்சிப் பேசுவர் என்பதைப் பின்வரும் பிரமாணங்களால் அறியலாம்.

 

கங்கைஓர் வார்சடைமேல் கரந்தான், "கிளிமழலைக் கேடில்

மங்கைஓர் கூறுஉடையான்" மறையான் மழுஏந்தும்

அம் கையினான் அடியே பரவி அவன்மேய ஆரூர்

தம் கையினால் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே. --- திருஞானசம்பந்தர் தேவாரம்.

 

"தேன் நோக்கும் கிளிமழலை உமை கேள்வன்", செழும் பவளம்

தான் நோக்கும் திருமேனி தழல் உரு ஆம் சங்கரனை;

வான் நோக்கும் வளர்மதி சேர் சடையானை; வானோர்க்கும்

ஏனோர்க்கும் பெருமானை, என் மனத்தே வைத்தேனே! --- அப்பர் தேவாரம்.

 

     அருமையான இந்தத் தைப்பூசத் திருநாளில், அகிலாண்ட நாயகர் ஆன அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை எல்லோருக்கும் சித்திக்க வேண்டுகின்றேன்.

 

     விரிவினுக்கு அஞ்சி, மேலே குறித்த இரு பிள்ளைத் தமிழ்ப் பாடல்களுக்கு அடியேன் விளக்கம் தரவில்லை.

 


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...