அத்திக்கரை --- 0904. தொக்கைக் கழுவி

 

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

தொக்கைக் கழுவி (அத்திக்கரை)

 

முருகா!

பிறவிக் கடலை விடுத்து,

அடியேன் முத்திக் கடலில் படிந்திருக்க அருள்.

 

 

தத்தத்தன தத்தத் தனதன

     தத்தத்தன தத்தத் தனதன

     தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான

 

தொக்கைக்கழு விப்பொற் றகுமுடை

     சுற்றிக்கல னிட்டுக் கடிதரு

     சொக்குப்புலி யப்பிப் புகழுறு ...... களியாலே

 

சுத்தத்தைய கற்றிப் பெரியவர்

     சொற்றப்பிய கத்தைப் புரிபுல

     சுற்றத்துட னுற்றிப் புவியிடை ...... யலையாமல்

 

முக்குற்றம கற்றிப் பலகலை

     கற்றுப்பிழை யற்றுத் தனையுணர்

     முத்தர்க்கடி மைப்பட் டிலகிய ...... அறிவாலே

 

முத்தித்தவ சுற்றுக் கதியுறு

     சத்தைத்தெரி சித்துக் கரையகல்

     முத்திப்புண ரிக்குட் புகவர ...... மருள்வாயே

 

திக்கெட்டும டக்கிக் கடவுள

     ருக்குப்பணி கற்பித் தருளறு

     சித்தத்தொட டுத்துப் படைகொடு ...... பொருசூரர்

 

செச்சைப்புய மற்றுப் புகவொரு

     சத்திப்படை விட்டுச் சுரர்பதி

     சித்தத்துயர் கெட்டுப் பதிபெற ...... அருள்வோனே

 

அக்கைப்புனை கொச்சைக் குறமகள்

     அச்சத்தையொ ழித்துக் கரிவரும்

     அத்தத்தில ழைத்துப் பரிவுட...... னணைவோனே

 

அப்பைப்பிறை யைக்கட் டியசடை

     அத்தர்க்கரு மைப்புத் திரவிரி

     அத்திக்கரை யிச்சித் துறைதரு ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

தொக்கைக் கழுவிப் பொன் தகும்உடை

     சுற்றி, கலன் இட்டு, கடிதரு

     சொக்குப்புலி அப்பி, புகழ்உறு ...... களியாலே,

 

சுத்தத்தை அகற்றி, பெரியவர்

     சொல் தப்பி, அகத்தைப் புரிபுல

     சுற்றத்துடன் உற்று, ப் புவியிடை ...... அலையாமல்

 

முக்குற்றம் அகற்றி, பலகலை

     கற்று, பிழை அற்று, தனைஉணர்

     முத்தர்க்கு அடிமைப்பட்டு, இலகிய ...... அறிவாலே,

 

முத்தித் தவசு உற்று, கதிஉறு

     சத்தைத் தெரிசித்து, கரை அகல்

     முத்திப் புணரிக்குள் புக வரம் ...... மருள்வாயே.

 

திக்குஎட்டும் அடக்கி, கடவுள

     ருக்குப் பணி கற்பித்து, ருள்அறு

     சித்தத்தொடு அடுத்துப் படைகொடு ...... பொருசூரர்

 

செச்சைப் புயம் அற்றுப் புக, ரு

     சத்திப்படை விட்டு, சுரர்பதி

     சித்தத்துயர் கெட்டுப் பதிபெற ...... அருள்வோனே!

 

அக்கைப்புனை கொச்சைக் குறமகள்,

     அச்சத்தை ஒழித்துக் கரிவரும்

     அத்தத்தில் அழைத்துப் பரிவுடன்...... அணைவோனே!

 

அப்பைப் பிறையைக் கட்டிய சடை

     அத்தர்க்கு அருமைப் புத்திர! விரி

     அத்திக்கரை இச்சித்து உறைதரு ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

 

     திக்கு எட்டும் அடக்கி --- எண்திசைகளையும் தனது ஆணைக்குள் அடங்க வெற்றிகொண்டு,

 

     கடவுளருக்குப் பணி கற்பித்து --- கடவுளர்கள் நாளும் புரியவேண்டிய பணிகளைக் கட்டளை இட்டு,

 

     அருள் அறு சித்தத்தோடு அடுத்து --- அருள் அற்ற மனத்தோடு வந்து,

 

     படை கொடு பொரு சூரர் --- படையைக் கொண்டு வந்து போர் செய்யும் சூரர்களின்

 

     செச்சைப் புயம் அற்றுப் புக --- சந்தனக் குழம்பு பூசிய தோள்கள் அற்றுப் போகுமாறு,

 

     ஒரு சத்திப் படை விட்டு --- ஒப்பற்ற ஞானசத்தி ஆகிய வேற்படையை விடுத்து அருளி,

 

     சுரர்பதி சித்த(ம்) துயர் கெட்டுப் பதி பெற அருள்வோனே --- தேவர்கள் தலைவனான இந்திரனது மனத் துயரை நீக்கி, பொன்னுலகை மீண்டும் பெற அருளியவரே!

 

     அக்கைப் புனை கொச்சைக் குற மகள் --- சங்குமணி மாலையை அணிந்தவளாகிய வள்ளிநாயகியின்

 

     அச்சத்தை ஒழித்து --- அச்சத்தை நீக்கி,

 

     கரி வரும் அத்தத்தில் அழைத்து --- யானை உருவில் தனது தமையனார் ஆகிய மூத்த பிள்ளையார் வரும்படியாக அழைத்து,

 

     பரிவுடன் அணைவோனே ---  அன்போடு அணைந்தவரே!

 

     அப்பை --- கங்கை நதியையும்,

 

     பிறையைக் கட்டிய சடை அத்தர்க்கு அருமைப்

புத்திர --- பிறைச் சந்திரனையும் தரித்துள்ள திருச்சடையினை உடைய சிவபெருமான் அருளிய அருமைப் புதல்வரே!

 

     விரி அத்திக்கரை இச்சித்து உறை தரு பெருமாளே ---

விளங்குகின்ற அத்திக்கரை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

தொக்கைக் கழுவி --- உடலை நன்கு கழுவித் தூய்மைப்படுத்தி,

 

     பொன் தகும் உடை சுற்றி --- அழகுள்ள ஆடையை அணிந்துகொண்டு,

 

     கலன் இட்டு --- அணிகலன்களைப் பூண்டுகொண்டு,

 

     கடி தரு சொக்குப் புலி அப்பி --- மணம் நிறைந்ததும், பிறரை மயக்கி வசப்படுத்துவதும் ஆன சாந்தைப் பூசிக் கொண்டு,

 

     புகழ் உறு களியாலே --- விலைமாதர்களைப் புகழ்ந்து பேசி, அதனால் உண்டாகும் களிப்பினால்,

 

     சுத்தத்தை அகற்றி --- உள்ளத் தூய்மையைக் கைவிட்டு,

 

     பெரியவர் சொல் தப்பி --- பெரியோர்கள் கூறும் அறிவுரைகளைத் தப்பி ஒழுகி,

 

     அகத்தைப் புரி புல(ன்) சுற்றத்துடன் உற்று --- நான் என்னும் அகங்காரத்தோடு, பாவச் செயல்களைப் புரிகின்ற ஐம்புலன்களையே சுற்றமாகக் கொண்டு அவற்றின் வழி ஒழுகி,

 

     புவி இடை அலையாமல் --- இந்தப் பூமியில் ஒரு பயனும் இன்றி நான் அலைந்து திரியாமல்,

 

     முக் குற்றம் அகற்றி --- (பிறவியைத் தருகின்ற) காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் அகற்றி,

 

     பல கலை கற்று --- பலவகையான அறிவு நூல்களையும், அருள் நூல்களையும் கற்றுத் தேர்ந்து,

 

     பிழை அற்று --- பிழையான நெறியில் ஒழுகுவதை விடுத்து,

 

     தன்னை உணர் முத்தர்க்கு அடிமைப் பட்டு --- தன்னை உணர்ந்து, பாசங்களில் இருந்து விடுபட்டுள்ள அடியவர்களுக்கு அடிமைப்பட்டு இருந்து,

 

     இலகிய அறிவாலே --- விளங்கிய அறிவினால்,

 

     முத்தித் தவசு உற்று --- முத்தியைத் தருகின்ற தவநிலையைப் பொருந்தி இருந்து,

 

     கதி உறு சத்தைத் தெரிசித்து --- வீடுபேற்றைத் தரவல்ல நித்தியப் பொருளாகிய இறைவனை (அறிவாலே) தரிசித்து

 

     கரை அகல் முத்திப் புணரிக்குள் புக --- எல்லை இல்லாத முத்தி இன்பத்தை அருளுகின்ற கடலில் முழுகி இருக்க,

 

     வரம் அருள்வாயே --- வரத்தைத் தந்து அருளுவாயாக.

 

 

பொழிப்புரை

 

     எண்திசைகளையும் தனது ஆணைக்குள் அடங்க வெற்றிகொண்டு, கடவுளர்கள் நாளும் புரியவேண்டிய பணிகளைக் கட்டளை இட்டு வாழ்ந்திருந்து, அருள் அற்ற மனத்தோடு வந்து படையைக் கொண்டு வந்து போர் செய்யும் சூரர்களின் சந்தனக் குழம்பு பூசிய தோள்கள் அற்றுப் போகுமாறு, ஒப்பற்ற ஞானசத்தி ஆகிய வேற்படையை விடுத்து அருளி,

தேவர்கள் தலைவனான இந்திரனது மனத் துயரை நீக்கி, பொன்னுலகை அவன் மீண்டும் பெற அருளியவரே!

 

     சங்குமணி மாலையை அணிந்தவளாகிய வள்ளிநாயகியின் அச்சத்தை நீக்கி, யானை உருவில் தனது தமையனார் ஆகிய மூத்த பிள்ளையார் வரும்படியாக அழைத்து, அன்போடு அணைந்தவரே!

 

     கங்கை நதியையும், பிறைச் சந்திரனையும் தரித்துள்ள திருச்சடையினை உடைய சிவபெருமான் அருளிய அருமைப் புதல்வரே!

 

     விளங்குகின்ற அத்திக்கரை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

     உடலை நன்கு கழுவித் தூய்மைப்படுத்தி, அழகுள்ள ஆடையை அணிந்துகொண்டு, அணிகலன்களைப் பூண்டுகொண்டு, மணம் நிறைந்ததும், பிறரை மயக்கி வசப்படுத்துவதும் ஆன சாந்தைப் பூசிக் கொண்டு, விலைமாதர்களைப் புகழ்ந்து பேசி, அதனால் உண்டாகும் களிப்பினால், உள்ளத் தூய்மையைக் கைவிட்டு, பெரியோர்கள் கூறும் அறிவுரைகளைத் தப்பி ஒழுகி,  நான் என்னும் அகங்காரத்தோடு, பாவச் செயல்களைப் புரிகின்ற ஐம்புலன்களையே சுற்றமாகக் கொண்டு அவற்றின் வழி ஒழுகி, இந்தப் பூமியில் ஒரு பயனும் இன்றி நான் அலைந்து திரியாமல், பிறவியைத் தருகின்ற காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் அகற்றி, பலவகையான அறிவு நூல்களையும், அருள் நூல்களையும் கற்றுத் தேர்ந்து, பிழையான நெறியில் ஒழுகுவதை விடுத்து, தன்னை உணர்ந்து, பாசங்களில் இருந்து விடுபட்டுள்ள அடியவர்களுக்கு அடிமைப்பட்டு ஒழுகி, விளங்கிய அறிவினால் முத்தியைத் தருகின்ற தவநிலையைப் பொருந்தி இருந்து, வீடுபேற்றைத் தரவல்ல நித்தியப் பொருளாகிய இறைவனை (அறிவாலே) தரிசித்து எல்லை இல்லாத முத்தி இன்பத்தை அருளுகின்ற பேரின்பக் கடலில் முழுகி இருக்க வரத்தைத் தந்து அருளுவாயாக.

 

விரிவுரை

 

தொக்கைக் கழுவி ---

 

தொக்கு --- தோல். உடம்பை மூடியுள்ள தோலில் படிந்துள்ள அழுக்கும், அதனால் உண்டான துர்நாற்றமும் போகும்படி கழுவிக் குளித்தல்.

 

பொன் தகும் உடை சுற்றி ---

 

பொன் --- அழகு.

 

கலன் இட்டு ---

 

கலன் --- அணிகலன்கள்.

 

கடி தரு சொக்குப் புலி அப்பி ---

 

கடி --- நறுமணம்.

 

சொக்கு --- அழகு, மயக்குதல், வயப்படுத்துதல்.

 

புலி --- ஒருவித மயிர்ச்சாந்து.

 

புகழ் உறு களியாலே சுத்தத்தை அகற்றி ---

 

தக்கவர்களைப் புகழ்ந்து பேசினால், உள்ளம் தூய்மை உறும். தகாதவர்களைப் புகழ்ந்து பேசினால், உள்ளம் மாசு உறும்.

 

தக்கவர்களைப் புகழ்ந்து பேசுவது வாய்மை. தகாதவர்களைப் புகழ்ந்து பேசுவது பொய்மை.

 

மேலே தொக்கைக் கழுவி, அழகிய ஆடைகளைத் தரித்து, அணிகலன்களைப் பூண்டு, மணம் மிக்க மயிர்ச்சாந்தைத் தடவி அழகுபடுத்திக் கொண்டது புறத்தூய்மை.

 

"புறம் தூய்மை நீரால் அமையும், அகம்தூய்மை

வாய்மையால் காணப் படும்"

 

என்றருளினார் திருவள்ளுவ நாயனார்.

 

பெரியவர் சொல் தப்பி, அகத்தைப் புரி புல(ன்) சுற்றத்துடன் உற்று, புவி இடை அலையாமல் ---

 

அறிவால் ஆன்று அமைந்த ஆன்றோர்களிடம் கூடிப் பழகினால் ஆவி ஈடேறுவதற்குரிய உண்மை நெறிகளை தவர்கள் உபதேசிப்பர். தவறு நேரும்போது இடித்துக் கூறி நெறிப்படுத்துவர்.

 

ஓசை, ஒளி, நாற்றம், சுவை, ஊறு என்னும் ஐம்புலன்களே ஆன்மாவை விஷய வாதனைகளில் இழுத்து விடுவன.

 

பொறி புலன்களின் வழியே மனதைச் செல்லாது தடுத்தல் வேண்டும். புலன்களை வென்றவரே புவியை வென்றவர் ஆவார்.  புலன்களை வென்றவர் பால் ஐம்பெரும் பூதங்களும் அடங்கும். புலன்களின் வழி ஒழுகினால், "நான்" என்னும் அகங்காரம் மிகும்.

 

புலன் இன்பத்துக்கு அடிமைப்பட்டால் சிறுமைப்பட வேண்டும். தவத்தால் உயர்நிலையை அடைந்த புலன் இன்பத்துக்கு அடிமையாகி, பூனையின் வடிவைக் கொண்டு சென்றான். ஐந்தையும் அவித்துத் தவம் புரிந்த்தால், தேவர் கோமான் ஆக உயர்ந்த நிலையை அடைந்த, இந்திரன், ஐந்தையும் அவித்து ஒழுக முடியாத நிலை வந்தது.

 

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்

இந்திரனே சாலும் கரி.                        --- திருக்குறள்.

 

ஐம்புலன்கள் அடங்காமையே எல்லா அநர்த்தங்களுக்கும் காரணம். நல்வழியினின்றும் ஐம்புலன்களே விலக்கி விடுகின்றன. ஆறலைக்கும் வேடர்க்குச் சமானம். "ஐம்புல வேடரின் அயர்ந்தனை" என்று கூறும் சிவஞானபோதம்.

 

ஓரஒட்டார் ஒன்றை உன்னஒட்டார்

         மலர்இட்டு உனதாள்

சேரஒட்டார் ஐவர் செய்வது என்யான்,

         சென்று தேவர்உய்யச்

சோர நிட்டூரனைச் சூரனைக்

         கார்உடல் சோரி கக்க

கூரகட்டாரிஇட்டு ஓர்இமைப்

         போதினில் கொன்றவனே.       --- கந்தர் அலங்காரம்.

 

ஆதலால் அறிஞரிடம் சொல்லாதும், தற்செயலாக அவரைக் காண நேர்கினும் ஒளிந்தும் ஒதுங்கியும் செல்வது கூடாது.

 

முக் குற்றம் அகற்றி ---

 

முக் குற்றம் --- மூன்று குற்றங்கள். உயிருக்குப் பிறவித் துன்பத்தைத் தருவன, காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்கள். இவற்றை அகற்றவேண்டும் என்கின்றார் அடிகளார்.

 

உயிருக்கு அநாதியாக உள்ள அஞ்ஞானமும், அது பற்றி உடம்பை நான் என மதிக்கும் அகங்காரமும், அது பற்றி, எனக்கு இது வேண்டும் என்னும் அவாவும், அது பற்றி, பொருளினிடத்துச் செல்லும் ஆசையும், அவ்வாசை ஈடேறாதவிடத்து உண்டாகும் கோபமும் எனக் குற்றங்கள் ஐந்து.

 

அறிவினால் உண்டாகும் குற்றம், உடம்பால் உண்டாகும் குற்றம் என்று இரண்டாக வைத்து, புந்திக் கிலேசம், காயக் கிலேசம் என்று வைத்தார் அருணகிரிநாதப் பெருமான். திருவள்ளுவ நயானார் மூன்றாக வகுத்தார். அகங்காரம் அஞ்ஞானத்தில் அடங்கும். ஆவா ஆசையில் அடங்கும். அடங்கவே, காமம், வெகுளி, மயக்கம் எனக் குற்றங்கள் மூன்று என்று கொள்ளப்பட்டது.

 

இடையறாத ஞானயோகங்களின் முன்னர், இக் குற்றங்கள் யாவும் தீயின் முன்னர் பஞ்சு அழிவது போல் அழிந்தொழியும் என்றார். ஞானயோகத்தைச் சொல்லவே, பத்தியோகமும் கொள்ளப்படும். தமிழர் சமயநெறி இரண்டு பிரிவுகளை உடையது. ஒன்று அறிவு நெறி, மற்றது அன்பு நெறி. இதனை வடநூலார் ஞானமார்க்கம், பத்திமார்க்கம் என்பர். இவ்விரண்டும் ஒன்று கூடியது சன்மார்க்கம். இறைவனைச் சிவன் எனத் தேறி, அவன் அன்பு வடிவினன், அறிவு வடிவினன் என்று கொண்டதும் அவ்வாறே. திருவள்ளுவ நாயானர் "வாலறிவன்" என்றது காண்க.

 

இவ்வுண்மை கண்ட நமது சான்றோர், இரண்டையும் பிரிக்கமுடியாத, குணகுணியாக்கி, அம்மையப்பனாக வழிபடக் காட்டினர். அம்மை அருள் வடிவம். அப்பன் அறிவு வடிவம்.

 

எனவே, பத்தியோகத்தாலும் உயிருக்கு உள்ள முக்குற்றங்களும் அற்று, இறையருளைப் பெறமுடியும் என்பது தெளிவாகும். திருநாவுக்கரசு நாயனாரின் நிலைமையை உலகுக்குக் காட்டத் திருவுள்ளம் பற்றிய சிவபெருமான், நாயனார் திருப்புகலூரில் இருக்கும் காலத்தில், புல் செதுக்கும்போது, உழவாரப் படை நுழைந்த இடம் எல்லாம் பொன்னும் நவமணிகளும் பொலிந்து இலங்கும்படிச் செய்தார். அப்பர் பெருமான் அவற்றைப் பருக்கைக் கற்ளாக எண்ணி, உழவாரப் படையில் ஏந்தி, அருகில் இருந்த குளத்தில் எறிந்தார். அப்பர் பெருமான், புல்லோடும், கல்லோடும், பொன்னோடும், மணியோடும், சொல்லோடும் வேறுபாடு இல்லாத நிலையில் நின்றார். அதற்குமேல், ஆண்டவன் அருளால் தேவதாசிகள் மின்னுக்கொடி போல, வானில் இருந்து வந்து ஆடல், பாடல் முதலியவற்றால், சுவாமிகளின் நிலையைக் குலைக்க முயன்றார்கள். சுவாமிகளின் சித்த நிலை சிறிதும் திரியவில்லை. திருத்தொண்டில் உறுதிகொண்டு, "பொய்ம்மாயப் பெருங்கடலுள் புலம்பா நின்ற புண்ணியங்காள், தீவினைகாள்" என்று தொடங்கும் திருத்தாண்டகத்தைப் பாடி அருளினார். தேவதாசிகளும் சுவாமிக்குச் சிவமாகவே கணப்பட்டார்கள். அவர்கள் சுவாமிகளை வணங்கி அகன்றார்கள். "கேடும் ஆக்கமும் கெட்ட திருவினராகவும், ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் அருளாளராகவும்" அப்பர் பெருமான் விளங்கினார். பத்திநெறியில் நின்ற நாயனாரிடத்து, காம, வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்களும் அடியோடு ஒழிந்தன.

 

காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெட, கெடும் நோய்.    

 

என்பது திருவள்ளுவ நாயனாரின் பொய்யாமொழி.

 

காரிகையாரைப் பொன்னைக் காட்டவும், காமாதி மும்மைச்

சோர்வு இழந்து உய்ந்தார் அரசர், சோமேசா! - ஓருங்கால்

காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன்

நாமங் கெடக்கெடு நோய்.     

 

என்பது, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா".

 

இதன் பொருள்---

 

         சோமேசா!  ஓருங்கால் --- ஆராய்ந்து அறியும் இடத்து,, காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெட --- ஞான யோகங்களின் முதிர்ச்சி உடையார்க்கு விருப்பு, வெறுப்பு, அவிச்சை என்னும் இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கூடக் கெடுதலான், நோய் கெடும் --- அவற்றின் காரியமாய வினைப்பயன்கள் உளவாகா.  அரசர் --- திருநாவுக்கரசு நாயனார்,  காரிகையாரை --- அரம்பை மாதரையும், பொன்னை --- பொன்னையும், காட்டவும் --- காட்டுதலும், காமாதி மும்மைச் சோர்வு --- காமம் முதலிய முக்குற்றங்களின், இழந்து உய்ந்தார் --- நீங்குதலான் பிழைத்தார் ஆகலான் என்றவாறு.

 

         திருநாவுக்கரசு நாயனார் பூம்புகலூர்ப் பெருமானை நாள்தோறும் தொழுது உழவாரத் திருப்பணி செய்து வரும்நாளில், பெருமான் நாயனாருடைய நன்னிலைமையை உலகத்தார்க்குக் காட்டவேண்டி, உழவாரப்படை நுழைந்த இடமெல்லாம் பொன்னும் நவமணியும் பிராகசிக்கும்படி செய்தருளினார். நாயனார் அவற்றைப் பருக்கை எனவே மதித்து, உழவாரப் படையின் ஏந்தித் திருக்குளத்தில் எறிந்தார்.  அதன்பின் அரம்பையர்கள் வந்து ஆடல் பாடல்களாலும் பிற செய்கைகளாலும் மயக்கியும், நாயனார் மயங்காமை கண்டு அவரை வணங்கிச் சென்றார்கள்.

 

காமத்துள் அழுந்தி நின்று

     கண்டரால் ஒறுப்புஉண் ணாதே

சாமத்து வேதம் ஆகி

     நின்றதுஓர் சயம்பு தன்னை

ஏமத்தும் இடை இராவும்

     ஏகாந்தம் இயம்பு வார்க்கு

ஓமத்துள் ஒளியது ஆகும்

     ஒற்றியூர் உடைய கோவே.    ---  அப்பர்.

 

இதன் பொருள் ---

 

     உலக வாழ்வில் பலபற்றுக்களில் பெரிதும் ஈடுபட்டுக் கூற்றுவனுடைய ஏவலர்களால் தண்டிக்கப்பெறாமல் சாமவேத கீதனாகிய தான்தோன்றி நாதனைப் பகற்பொழுதில் நான்கு யாமங்களிலும் இரவுப் பொழுதில் நள்ளிரவு ஒழிந்த யாமங்களிலும் தனித்திருந்து உறுதியாக மந்திரம் உச்சரித்து வழிபடுபவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வேள்வியின் ஞானத்தீயாகக் காட்சி வழங்குவான் .

 

காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்து

ஏமம் பிடித்து இருந்தேனுக்கு எறிமணி

ஓம் எனும் ஓசையின் உள்ளே உறைவதோர்

தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.  ---  திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் மூன்று குற்றங்களையும் நான் முற்றக் கடிந்து, எனக்குப் பாதுகாவலாய் உள்ள பொருளை நோக்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது, அடிக்கப்பட்ட மணியினின்றும் எழும் ஓசை போல, `ஓம்` என்னும் ஓர்ஓசை என் உடம்பினின்றும் எழுந்தது. அவ்வோசையை நுணுகி நோக்கியபோது அதனுள்ளே ஓர் அரியபொருள் வெளிப்பட அதனை நான் அடைந்தேன். இது வியப்பு.

 

தீமை உள்ளன யாவையும் தந்திடும், சிறப்பும்

தோம்இல் செல்வமும் கெடுக்கும், நல் உணர்வினைத் தொலைக்கும்,

ஏம நன்னெறி தடுத்து இருள் உய்த்திடும், இதனால்

காமம் அன்றியே ஒருபகை உண்டுகொல் கருதில்.  ---  கந்தபுராணம்.

 

இதன் பொருள் ---

 

     ஆராய்ந்து அறிந்தால், தீமைகள் என்று எவை எவை உள்ளனவோ, அவை அனைத்தையும் தருவதும், உயிருக்கு உள்ள சிறப்பையும் கெடுப்பதும், குற்றமற்ற செல்வத்தையும் கெடுப்பதும், நல்ல உணர்வுகைள அழிப்பதும், உயிர்களை, பாதுகாவலாக உள்ள நல்ல நெறியில் செல்லவிடாமல் தடுத்து, நரகத் துன்பத்தில் செலுத்தவதும் ஆகிய காமத்தை விட வேறு ஒரு பகை இந்த உலகத்தில் உள்ளதா? இல்லை.

 

 

ஈட்டுறு பிறவியும் வினைகள் யாவையும்

காட்டியது இனையது ஓர் காமம் ஆதலின்,

வாட்டம்இல் புந்தியால் மற்று அந் நோயினை

வீட்டினர் அல்லரோ வீடு சேர்ந்து உளார். --- கந்தபுராணம்.

 

இதன் பொருள் ---

 

     உயிரானது எடுத்து வந்த பலப்பல பிறவிகளையும், அப் பிறவிகள் தோறும் ஈட்டிய வினைகளையும் தருவதற்குக் காரணமாக அமைந்தது காமமே ஆகும். ஆகையால், அதனை மாற்றி, வீட்டின்பத்தை விரும்புவோர், மெலிவில்லாத தெளிந்த தமது அறிவினால், அத் துன்பத்தை அறுத்தவர்களே.

 

முன் துற்றும் துற்றினை நாளும் அறம்செய்து

பின் துற்றுத் துற்றுவர் சான்றவர்; -அத்துற்று

முக்குற்றம் நீக்கி முடியும் அளவு எல்லாம்

துக்கத்துள் நீக்கி விடும்.              --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     முன் துற்றும் துற்றினை நாளும் அறம் செய்து பின் துற்றுத் துற்றுவர் சான்றவர் --- முதலில் உண்ண எடுக்குங் கவளத்தை நாடோறும் பிறர்க்கு உதவி செய்து அடுத்த களவத்தைப் பெரியோர் உண்ணுவர்; அத் துற்று --- பிறர்க்கு உதவி செய்த அந்தக் கவளம், முக்குற்றம் நீக்கி முடியுமளவெல்லாம் துக்கத்துள் நீக்கி விடும் --- அப் பெரியோருடைய காம வெகுளி மயக்கமென்னும் மூன்று குற்றங்களையுங் கெடுத்துப் பிறவி தீருங் கால முழுமையும் அவரைத் துன்பத்தினின்று நீக்கிவிடும்.

 

 

கட்டும் வீடு அதன் காரணத்தது

ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை,

யாம்மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம்

காமம் வெகுளி மயக்கம் காரணம்.... ---  மணிமேகலை.  

      

இதன் பதவுரை ---

 

     கட்டும் வீடும் --- கட்டும் வீடுமாகிய இரண்டினையும் ; அதன் காரணத்ததும் --- ஒவ்வொன்றன் காரணத்தினையும் ; ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை --- கூடியிருந்து பெறுவித்தற்கு உரியவர் பிறர் யாருமில்லை ; யாம் மேல் உரைத்த பொருள்கட் கெல்லாம் --- யாம் முன்னே சொல்லியுள்ள துக்கங்கள் எல்லாவற்றிற்கும்; காமம் வெகுளி மயக்கம் காரணம் --- காமமும் வெகுளியும் மயக்கமும் என்ற மூன்றும் காரணமாம்.

 

 

கொடு நாலொடு இரண்டு குலப்பகை குற்றம் மூன்றும்

சுடுஞானம்வெளிப்பட உய்ந்த துய்க்கு இலார்போல்

விடநாகம் முழைத்தலை விம்மல் உழந்து,வீங்கி,

நெடுநாள்,பொறை உற்ற உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப.

                  ---  கம்பராமாயணம், கடல்தாவு படலம்.

 

இதன் பதவுரை ---

 

     நாலொடு இரண்டு கொடும் குலப் பகை --- ஆறு வகையான கொடிய பரம்பரையாக வரும் பகையையும்; குற்றம் மூன்றும் --- மூன்று குற்றத்தையும்; சுடுஞானம் --- அழிக்கின்ற ஞானமானது; வெளிப்பட --- ஆன்மாவிலே தோன்ற; உய்ந்த துய்க்கு இலார் போல் --- தப்பிப் பிழைத்த பற்றற்ற ஞானிகளைப் போல; முழைத்தலை நெடுநாள் விம்மல் உழந்து --- மலைக் குகைகளில் நீண்ட நாட்கள் பொருமி வருந்தி;  வீங்கி பொறையுற்ற --- உடல் பருத்து அடங்கிக் கிடந்த; விடநாகம் --- விடப் பாம்புகள்; உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப --- பெருமூச்சு வெளிப்பட்டு நிலைக்க;

 

     மலையின் குகையில் அகப்பட்ட பாம்புகள் ஆறு வகையான பகையையும் மூன்று குற்றமும் நீங்கிய ஞானிகளைப் போல விடுதலை பெற்று உயிர்த்தன. பகை ஆறு --- காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என்பவை. முக்குற்றம் --- ஐயம், திரிபு, அறியாமை.

 

 

காமமும். வெகுளியும். களிப்பும். கைத்த அக்

காமுனி இவண் அடைந்தனன்கொல், - கொவ்வை வாய்த்

தாமரை மலர் முகத் தரள வாள் நகைத்

தூம மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால்?”

                  ---  கம்பராமாயணம், திருவவதாரப் படலம்.

 

இதன் பதவுரை ---

 

     காமமும். வெகுளியும் களிப்பும் கைத்த --- காமம். வெகுளி. மயக்கம் ஆகிய மூன்றினையும் வெறுத்து நீக்கிய;   அக்கோ  முனி --- முனிவர்களுக்கெல்லாம் தலைவனாகிய அந்தக்  கலைக்கோட்டு முனிவன்;  கொவ்வை வாய். தாமரை மலர்முக தரள வாள் நகை. தூம மென் குழலினர் --- கொவ்வைக் கனி போன்ற வாயையும். தாமரை மலர் போன்ற முகத்தையும்  முத்துப்  போன்ற ஒளி பொருந்திய பற்களையும் அகிற் புகை ஊட்டிய மென்மையான குழலையும் உடைய அப்பெண்கள் புணர்த்த சூழ்ச்சியால் --- செய்த சூழ்ச்சியினால்;  இவண் அடைந்தனன் கொல் --- இங்கு வந்து சேர்ந்தனன் போலும்.

 

 

திக்கு உறும் செறி பரம் தெரிய நின்ற, திரள் பொன்

கைக் குறுங் கண் மலைபோல், குமரர் காமம் முதல் ஆம்

முக் குறும்பு அற எறிந்த வினை வால், முனிவனைப்

புக்கு இறைஞ்சினர் அருந்தவன் உவந்து புகலும்..

              ---  கம்பராமாயணம், விராதன் வதைப் படலம்.

 

இதன் பதவுரை ---

 

     திக்கு உறும் --- எட்டுத் திசைகளிலும் பொருந்திய; செறிபரம் --- மிகுந்த சுமையை; தெரிய நின்ற --- இவ்வளவு என அறியுமாறு தாங்கி நின்ற, திரள் பொன்கை --- திரண்ட அழகிய துதிக்கையையும், குறுங்கண் --- சிறிய கண்களையும் உடைய; மலைபோல் குமரர் --- யானைகள் போன்ற இராமலக்குவர்; புக்கு --- அம்முனிவர் உறையுள் புகுந்து; காமம் முதல் ஆம் முக் குறும்பு அற எறிந்த --- காமம், வெகுளி, மயக்கம் எனும் மூன்று

குற்றங்களையும் அடியோடு கடிந்த; வால் வினை முனிவனை --- தவ வினை உடைய தூய்மையான செயல்களை உடைய அத்திரி முனிவனை; இறைஞ்சினர் --- வணங்கினார்கள்; அருந்தவன் --- அம்முனிவன்; உவந்து புகலும் --- மனமகிழ்ந்து சொல்வான்.

 

      முக்குறும்பு - காமம் வெகுளி மயக்கம்.

 

கொலை அஞ்சார், பொய்ந் நாணார், மானமும் ஓம்பார்,

களவு ஒன்றோ? ஏனையவும் செய்வார் - பழியோடு

பாவம் இஃது என்னார், பிறிது மற்று என்செய்யார்,

காமம் கதுவப்பட்டார்.               --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     காமத்தால் பற்றப்பட்டவர்கள், கொலைபுரியப் பயப்படார், பொய் சொல்லக் கூசார், தம் பெருமையையும் பாதுகாவார், களவு செய்தல் ஒன்றோ! அதற்கு மேலும் மற்றுமுள்ள பலவகையான தீச்செயல்களும் செய்வார்,  இந்தக் காமம், பழியொடு பாவமாம் என்றும் நினையார், அங்ஙனமாயின் அவர் வேறு யாதுதான் செய்யமாட்டார்? எல்லாத் தீச்செய்கைகளும் செய்வார்.

 

 அணங்குநோய் எவர்க்குஞ் செய்யும்

         அனங்கனால் அலைப்புண்டு, வி

உணங்கினார் உள்ளம் செல்லும்

         இடன் அறிந்து ஓடிச் செல்லா

குணம் குலன் ஒழுக்கம் குன்றல்,

         கொலைபழி பாவம் பாரா,

இணங்கும் இன்னுயிர்க்கும் ஆங்கே

         இறுதி வந்து உறுவது எண்ணா. ---  தி.வி.புராணம், மாபாதகம் தீர்த்த படலம்.

 

இதன் பதவுரை ---

 

     எவர்க்கும் அணங்கு நோய் செய்யும் அனங்கனால் அலைப்புண்டு --- யாவர்க்குங் காமநோயைச் செய்கின்ற மாரனாலே அலைக்கப்பட்டு, ஆவி உணங்கினார் உள்ளம் --- உயிர் சோர்ந்தவர்களின் உள்ளங்கள், செல்லும் இடன் அறிந்து ஓடிச் செல்லா --- செல்லுதற்குரிய இடத்தினை அறிந்து சென்று சேரா; குணம் குலன் ஒழுக்கம் குன்றல் --- குணமும் குலமும் ஒழுக்கமும் குறைதலையும், கொலை பழி பாவம் --- கொலையும் பழி பாவங்களும் உண்டாதலையும், பாரா --- பார்க்கமாட்டா; இணங்கும் இன் உயிர்க்கும் ஆங்கே இறுதி வந்து உறுவது எண்ணா --- பொருந்திய தம் இனிய உயிர்க்கும் அவ்விடத்தே அழிவு வருதலையும் எண்ணமாட்டா.

 

 

கள் உண்டல் காமம் என்ப

         கருத்து அறை போக்குச் செய்வ,

எள் உண்ட காமம் போல

         எண்ணினில் காணில் கேட்கில்

தள்ளுண்ட விடத்தின் நஞ்சந்

         தலைக்கொண்டால் என்ன ஆங்கே

உள் உண்ட வுணர்வு போக்காது

         உண்டபோது அழிக்கும் கள்ளூண். ---  தி.வி.புராணம், மாபாதகம் தீர்த்த படலம்.

 

இதன் பதவுரை ---

 

     கள் உண்டல் காமம் என்ப கருத்து அறை போக்குச் செய்வ --- கள்ளுண்ணலும் காமமும் என்று சொல்லப்படும் இரண்டும் அறிவினை நீங்குமாறு செய்வன; கள் ஊண் --- (அவற்றுட்) கள்ளுணவானது, எள்ளுண்ட காமம் போல --- இகழப்பட்ட காமத்தைப் போல, எண்ணினில் காணில் கேட்கில் தள்ளுண்ட இடத்தில் --- எண்ணினும் காணினும் கேட்கினும் தவறுதலுற்ற இடத்தினும், நஞ்சம் தலைக் கொண்டால் என்ன --- நஞ்சு தலைக்கேறியது போல, ஆங்கே --- அப்பொழுதே, உள் உண்ட உணர்வு போக்காது --- உள்ளே பொருந்திய அறிவினைப் போக்காது, உண்ட போது அழிக்கும் --- உண்ட பொழுதில் மட்டுமே அதனை அழிக்கும்.

 

    கள்ளுண்டலும் காமமும் உணர்வினை இழப்பித்தலால் ஒக்கும்; எனினும், கள் ஊண் காமம் போல உணர்வு போக்காது உண்டபோது அழிக்கும்.

 

         

காமமே கொலை கட்கு எல்லாம்

     காரணம்; கண் ஓடாத

காமமே களவுக்கு எல்லாம்

     காரணம்; கூற்றம் அஞ்சும்

காமமே கள் உண்டற்கும்

     காரணம்; ஆதலாலே

காமமே நரக பூமி

     காணியாக் கொடுப்பது என்றான். ---  தி.வி.புராணம், மாபாதகம் தீர்த்த படலம்.

 

இதன் பதவுரை ---

 

     காமமே கொலைகட்கு எல்லாம் காரணம் --- காமமே கொலைகளுக்கு எல்லாம் காரணமாயுள்ளது; கண்ணோடாத காமமே களவுக்கு எல்லாம் காரணம் --- கண்ணோட்டமில்லாத காமமே களவு அனைத்திற்குங் காரணமாகும்; கூற்றம் அஞ்சும் காமமே கள் உண்டற்கும் காரணம் --- கூற்றவனும் அஞ்சுதற்குரிய காமமே கள்ளினை நுகர்வதற்கும் காரணமாகும்; ஆதலாலே, காமமே நரகபூமி காணியாக் கொடுப்பது என்றான் --- ஆதலினாலே, காமமொன்றே (அவையனைத்தாலு நேரும்) நரக பூமியைக் காணியாட்சியாகக் கொடுக்க வல்லது என்று கூறியருளினான்.

 

காமவுட் பகைவனுற் கோபவெங் கொடியனும்

        கனலோப முழு மூடனும்

        கடுமோக வீணனும் கொடு மதமெனும் துட்ட

        கண் கெட்ட ஆங்காரியும்

    ஏமமறு மாச்சரிய விழலனும் கொலையென்

        றியம்பு பாதகனுமாம் இவ்

        வெழுவரும் இவர்க்குற்ற வுறவான பேர்களும்

        எனைப்பற் றிடாம லருள்வாய்

    சேமமிகு மாமறையி னோமெனும் மருட்பதத்

        திறனருளி மலய முனிவன்

        சிந்தனையின் வந்தனை யுவந்த மெய்ஞ்ஞானசிவ

        தேசிக சிகாரத்னமே

    தாமமொளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

        தலமோங்கு கந்த வேளே

        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி

        சண்முகத் தெய்வ மணியே.       ---  திருவருட்பா.

 

இதன் பொருள் ---

 

     பெருநகரமாக விளங்கும் சென்னைக் கந்தகோட்டத்துள் இலங்கும் கோயிலில் எழுந்தருளும் கந்தசாமிக் கடவுளே, தண்ணிய ஒளி திகழும் தூய மணிகளில் செம்மைச் சைவ மணியாகிய ஆறுமுகம் கொண்ட தெய்வமாகிய மணியே, நலம் மிக்க பெரிய வேதங்களின் ஓம் என வழங்கும் அருள் மொழியின் பொருட்கூறுகளை மலய மலைமேல் தங்கும் அகத்திய முனிவர்க்கு அருளிச் செய்து அவன் சிந்தனைக்கண் வைத்துச் செய்த வழிபாட்டுக்கு உவந்தருளிய மெய்ஞ்ஞான சிவாசாரியர்கட்கு முடிமணியாகும் பெருமானே, காமம் என்னும் உட்பகைவனும், கோபம் என்னும் கொடியவனும், கனத்த லோபம் என்னும் முழுத்த மூடனும், மிக்க மோகம் எனப்படும் வீணனும், கொடிய மதம் எனப்படும் துட்டத்தனமும் குருட்டுத் தன்மையும் உடைய ஆங்கார உருவினனும், காப்பற்ற மாற்சரியம் என்னும் விழலனும், கொலை எனப்படும் பாதகனுமாகிய எழுவரும் இவர்கட்கு உறவினரான பிறரும் என்னைச் சூழ்ந்து தம் கைப்பற்றிக் கொள்ளாதபடி அருள் செய்தல் வேண்டும்.

 

 

பல கலை கற்று, பிழை அற்று, தன்னை உணர் முத்தர்க்கு அடிமைப் பட்டு ---

 

     மேலே குறித்த முக்குற்றங்கள் அறவேண்டுமானால், அவறி நூல்களையும், அருள் நூல்களையும் ஓதுதல் வேண்டும். ஓதுதலோடு நிற்காமல், அவற்றின் வழி ஒழுகுதல் வேண்டும்.

 

     ஓதுதலும், ஒழுகுதலும் சிறக்கவேண்டுமானால், தன்னை உணர்ந்த தத்துவ ஞானிகளுக்கு ஆட்பட்டு நிற்கவேண்டும்.

 

     பகிரங்க பக்தியைக் காட்டிலும் அந்தரங்க பக்தியே சாலச் சிறந்ததாகும். நாம் ஜெபம் அர்ச்சனை முதலியன செய்வதைக் கூடுமானவரை பிறர் அறியாமற்படிக்குச் செய்யவேண்டும். அவ்வாறு புரியும் அந்தரங்க பக்தியைக் கண்டு ஆண்டவன் மிகவும் மகிழ்கின்றான்.

 

     பூசலார் நாயனார் உள்ளத்திலேயே திருவாலயம் புதுக்கினார். இருவரும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் வைத்தார்கள். சிவபெருமான் காடவர் கோமான் கனவிற் சென்று “நாளை பூசலார் மனதினாற் புதுக்கிய பொன்னாலயத்தில் நாம் புகுவோம். நீ நாளை ஒழிந்து பின்னர் ஒரு நாள் வைத்துக் கொள்வாய்” என்றனர். உளத்துள் அன்பின் பெருமைதான் என்னே!

 

     இத்தகைய உள்ளன்பு உடைய அடியார் வழிபாடே இறைவழிபாட்டைக் காட்டிலும் மிக உயர்ந்ததாகும். அடியார்களது உறைவிடம் அறிந்து ஆங்குச் சென்று அவ்வடியார்களை வணங்கி அவர்கள் திருவடிக்கு அன்பு செய்தால், ஆண்டவன் திருவருள் தானே வரும். இளங்கன்றை ஒருவன் அழைத்துக்கொண்டுச் சென்றால் தாய்ப்பசு தானே அவன் பின்னால் தொடர்ந்து வருமல்லவா? அதுபோல் என்றறிக.

 

பதமலர் உளத்தில் நாளும் நினைவுறு கருத்தர் தாள்கள்

 பணியவும் எனக்கு ஞானம் அருள்வாயே”  ---(அருவரை) திருப்புகழ்.

 

அடியார்கள் பதமே துணையது என்றுநாளும்” ---(ஆறுமுகம்) திருப்புகழ்.

 

வண்டுகிண்டக் கஞ்சம்விண்டு தண்தேன் சிந்த, வால்வளைகள்   

கண்டுஅயின்று இன்புறும் போரூர் முருகன் கழலிணைக்கே

தொண்டுஉவந்து, இன்புறுவோர் பாத தாமரைத் தூள் என்சென்னி

கொண்டு வந்தேன், மலம் விண்டேன், பரகதி கூடினேனே. --- சிதம்பர சுவாமிகள்.

 

 

இலகிய அறிவாலே ---

 

அப்படி நின்றால் உண்மை அறிவு விளங்கும்.

 

முத்தித் தவசு உற்று ---

 

முத்தி --- பாச நீக்கம்.

 

தவம் --- மனமானது புலன் வழி ஒழுகாதபடிக்கு,

 

உண்மை அறிவு விளங்கப் பெற்ற நிலையில், உகல இன்பங்களை நீக்கி, மெய்யான இன்பத்தை அடையத் தவம் புரிதல் வேண்டும் என்னும் பேரவா உண்டாகும்.

 

ஒப்பற்ற தவமானது, பிறவியின் துன்பத்தையும், மனிதப் பிறவியின் உயர்வையும் உன்னி உன்னி தனக்கு வருந் துன்பத்தைப் பொறுத்து பிறவுயிர்கட்கு உறுகண் புரியாது ஆண்டவனது திருவடியை நினைந்து நினைந்து அழலிடைப்பட்ட மெழுகுபோல் என்பெல்லாம் நெக்குவிட்டு உருகி மனம் கசிந்து கண்ணீர் மல்கி அன்பு மயமாக அசைவற்றிருப்பதேயாம்.

 

உற்றநோய் நோன்றல்,உயிர்க்கு உறுகண் செய்யாமை,

அற்றே தவத்திற்கு உரு                      ---திருக்குறள்.

 

அழலுக்குள் வெண்ணெனய் எனவே உருகிப்பொன் அம்பலத்தார்

நிழலுக்குள் நின்று தவம் உஞற்றாமல், நிட்டூர மின்னார்

குழலுக்கு இசைந்த வகைமாலை கொண்டு, குற்றேவல் செய்து,

விழலுக்கு முத்துலை இட்டு இறைத்தேன் என் விதிவசமே.   ---பட்டினத்தார்.

 

சரண கமலாலயத்தை அரைநிமிட நேரமட்டில்

 தவமுறை தியானம் வைக்க அறியாத”          --- திருப்புகழ்.

 

 

கதி உறு சத்தைத் தெரிசித்து ---

 

கதி --- பரகதி, வீடுபேறு. வீடுபேற்றைத் தரவல்ல நித்தியப் பொருளாகிய இறைவனை அறிவாலே தரிசித்து வழிபடவேண்டும்.

 

"அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும்

அடியார் இடைஞ்சல் களேவோனே"

 

என்றார் அடிகளார் பிறிதோர் திருப்புகழில்.

 

ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்;

ஞானத்தால் தொழுவேன் உனை நான்அலேன்;

ஞானத்தால் தொழுவார்கள் தொழக் கண்டு,

ஞானத்தாய் உனை நானும் தொழுவனே.

 

என்றார் அப்பரடிகள்.

 

கரை அகல் முத்திப் புணரிக்குள் புக ---

 

புணரி --- கடல். கரை காணாதவாறு விரிந்து பரந்துள்ளது முத்தி இன்பமாகிய கடல்.

 

பிறவிக் கடலில் அழுந்தியோர் துன்பத்தை மட்டுமே அடைவர்.

முத்திக் கடலில் படிந்தவர் மாறாத பேரின்பத்தையே அடைவர்.

 

திக்கு எட்டும் அடக்கி கடவுளருக்குப் பணி கற்பித்து, அருள் அறு சித்தத்தோடு அடுத்து, படை கொடு பொரு சூரர் ---

 

சூரபதுமன் திக்கு விஜயம் செய்தபிறகு தேவர்களுக்கெல்லாம் வெவ்வேறு வேலைகள் வைக்கின்றான்.

 

திருமால் --- சூரன் அழைக்கும் போதெல்லாம் உடனே வந்துபோக வேண்டும்.

 

களித்திடு ஞிமிறும் வண்டும்

     கலந்திட நறவம் பொங்கித்

துளித்திடு துழாய்மால் தன்னைச்

     சூரனாம் அவுணன் பாரா,

அளித்தவன் தன் மூதாதை

     ஆயினை, அதனால் நின்னை

விளித்திடும் எல்லை தோறும்

     விரைந்து இவண் மேவுக என்றான். --- கந்தபுராணம்.

 

பிரமன் --- பஞ்சாங்கம் நாளும் சொல்லிப் போகவேண்டும்.

 

செங்கம லத்தின் மேவும்

     திசைமுகத்து ஒருவன் தன்னைத்

துங்கமோடு அரசு செய்யுஞ்

     சூரனாம் வீரன் பாரா,

இங்குநின் மைந்த ரோடும்

     என்னிடந் தன்னில் ஏகி,

அங்கம் ஐவகையும் நாளும்

     அறைந்தனை போதி என்றான்.  --- கந்தபுராணம்.

 

சந்திரன் --- குறைதல் வளர்தல் இல்லாது, குளிர் நிலவைப் பொழியும் பூரண சந்திரனாய் நாளும் வந்துபோதல் வேண்டும்.

 

அறைகழல் சூர பன்மன்

     அவிர்மதி தன்னை நோக்கிப்

பிறைஎன வளரு மாறும்

     பின்முறை சுருங்கு மாறும்

மறைவொடு திரியு மாறும்

     மற்று இனி விடுத்து, நாளும்

நிறைவொடு கதிரோன் போல்இந்

     நீள்நகர் வருதி என்றான்.        --- கந்தபுராணம்.

 

சூரியன் --- வீரமேந்திரபுரியின் செல்லுதல் கூடாது. இளவெயில் வீசவேண்டும்.

 

அறத்தினை விடுத்த தீயோன்

     அருக்கனை நோக்கி நம்மூர்ப்

புறத்தினில் அரண மீதாய்ப்

     போகுதல் அரிது கீழ்மேல்

நிறுத்திய சிகரி ஊடு

     நெறிக்கொடு புக்கு வான்போய்

எறித்தனை திரிதி நாளும்

     இளங்கதிர் நடாத்தி யென்றான்.  --- கந்தபுராணம்.

 

அக்கினி --- வீரமகேந்திரபுரியில் யார் நினைத்தாலும் உடனே அவர்கள் இட்ட பணியைச் செய்யவேண்டும். தொட்டால் குளிர்ந்திருக்க வேண்டும்.

 

பொங்குஅழல் முதல்வன் தன்னைப்

     புரவலன் விரைவின் நோக்கி

இங்குநம் மூதூர் உள்ளோர்

     யாவரே எனினும் உன்னின்

அங்குஅவர் தம்பால் எய்தி,

     அவர்பணி யாவும் ஆற்றி,

செங்கம லம்போல் யாவர்

     தீண்டினுங் குளிர்தி என்றான்.    --- கந்தபுராணம். 

 

இயமன் --- தனது ஊரில் எந்த அவுணன் உயிரையும், யானை, குதிரை இவைதம் உயிரையும் கொல்ல நினைக்கக் கூடாது.

 

சுடர்முடி அவுணர் செம்மல்

     தொல்பெருங் கூற்றை நோக்கி,

படிமுழுது உயிரை நாளும்

     படுப்பது போல, நம்தம்

கடமத கரியை மாவைக்

     கணிப்பிலா அவுணர் தம்மை

அடுவது கனவும் உன்னாது

     அஞ்சியே திரிதி என்றான்.      --- கந்தபுராணம்.

 

காற்று --- நறுமண வாசத்தை வீசிச் செல்லவேண்டும். ஈரத்தைத் துடைக்க வேண்டும்.

 

அண்டஅரும் உலவை யானை

     அவுணர்மாத் தலைவன் பாரா

எண்தரு நம் மூதூரில்

     யாவரும் புனைந்து நீத்த

தண்துளி நறவ மாலை

     தயங்குபூண் கலிங்கம் சாந்தம்

நுண்துகள் ஆடு சுண்ணம்

     மாற்றுதி நொய்தின் என்றான்.   --- கந்தபுராணம்.

 

வருணன் --- பன்னீரில் நறுமணம் கலந்து இடங்கள் தோறும் தூவவேண்டும்.

 

காவலன் வருணன் தன்னைக்

     கண்ணுறீஇ நம் மூதூரில்

நாவிவெண் பளிதம் சாந்தம்

     நரந்தமோடு அளாவித் தீம்பால்

ஆவியின் வெளிய நொய்ய

     அரும்பனி நீரில் கூட்டித்

தூவுதி இடங்கள் தோறும்,

     காற்ற அது துடைக்க என்றான்.

 

இந்திரன் --- தேவர் கூட்டங்களுடனும் முனிவர் கூட்டங்களுடனும் வந்து இட்ட வேலையைச் செய்யவேண்டும்.

 

வாசவன் தன்னை நோக்கி

     மால்கெழு திருவின் மேலோன்

தேசுறு துறக்கம் வைகுந்

     தேவர்தங் குழுவி னோடும்

ஆசையங் கிழவ ரோடும்

     அருந்தவ ரோடும் போந்து

பேசிய பணிகள் ஆற்றித்

     திரிமதி பிழையேல் என்றான்.  --- கந்தபுராணம்.

 

இந்திரனோடு தேவர்கள் --- நாள்தோறும் மீன்களை உணவுக்குக் கொண்டு வந்து சேர்க்கவேண்டும்.

 

ஊனம்உற்றோர் போல் இவ்வாறு உலைகின்ற

     காலத்தில் ஒருநாள், சூரன்

வானகத்துத் தலைவனையும் அமரரையும்

     வருக எனா வலித்துக் கூவி,

தானவர்க்குத் தம்பியர் நீர், அவர்பணிநும்

     பணிஅன்றோ? தரங்க வேலை

மீன் அனைத்தும் சூறைகொண்டு வைகலும்உய்த்

     திடுதிர் என விளம்பினானால்.   --- கந்தபுராணம்.

 

செச்சைப் புயம் அற்றுப் புக ---

 

செச்சை --- சந்தனக் குழம்பு.

 

ஒரு சத்திப் படை விட்டு ---

 

ஒப்பற்ற ஞானசத்தி ஆகிய வேற்படையை விடுத்து அருளினார் முருகப் பெருமான். அவணர்களின் தோள்கள் அற்றுப் போயின.

 

சுரர்பதி சித்த(ம்) துயர் கெட்டுப் பதி பெற அருள்வோனே ---

 

சூரபதுமனால் துன்புற்று இருந்த தேவர்கோமான் துயரம் தீர்ந்து, மீளவும் தனது பொன்னுலகில் குடி புகுந்தான்.

 

அக்கைப் புனை கொச்சைக் குற மகள் ---

 

அக்கு --- சங்கு.

 

கரி வரும் அத்தத்தில் அழைத்து ---

 

அத்தம் ---  சிறுவழி.

 

அப்பை ---

 

அப்பு --- நீர். இங்கே கங்கை நதியைக் குறித்தது.

 

அத்திக்கரை இச்சித்து உறை தரு பெருமாளே ---

 

அத்திக்கரை என்பது புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருத்தலம்.

 

கருத்துரை

 

முருகா! பிறவிக் கடலை விடுத்து, அடியேன் முத்திக் கடலில் படிந்திருக்க அருள்.


No comments:

Post a Comment

சிறுநெருப்பு என்று மடியில் முடிந்துகொள்ளக் கூடாது.

  சிறுநெருப்பு என்று மடியில் முடிந்துகொள்ளலாமா ?  கூடாதே. -----                அரும்பெரும் பொருள் எதுவானாலும் ,  அதனை இகழ்தல் கூடாது. காரணம்...