மனம் அடங்கி நிற்பதே கல்வியின் பயன்

 

 

கல்வியின் பயன் மனம் அடங்கி நிற்றல்

-----

 

கல்வி கரையில! கற்பவர் நாள்சில;

மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்

ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்

பாலுண் குருகின் தெரிந்து.          

 

என்பது நாலடியார்.

 

     கற்க வேண்டிய நூல்களும், அவற்றால் பெற்றுக் கொள்ளவேண்டிய அறிவும் அளவில் அடங்கா. ஆனால், இவற்றைக் கற்பதற்கு உரிய மனிதனின் வாழ்நாளோ அளவுபடுத்தப்பட்டு உள்ளது. கொஞ்சம் எண்ணிப் பார்த்தோமானால், இந்த அளவுபடுத்தப்பட்ட வாழ்நாளிலேயே, வந்து துன்பப் படுத்தும் நோய்களும் அவற்றால் உண்டாகும் நொடிகளும் ஏராளமாகவே உள்ளன. எனவே, குறைந்த அளவில் உள்ள வாழ்நாளானது பயனுள்ளதாக அமையும்படி, தேர்ந்து தெளிந்து நல்ல நூல்களையே ஒருவன் படித்துக் கொள்ளவேண்டும். எப்படி? பாலையும் நீரையும் கலந்து வைத்தாலும், தேவையற்ற நீரை நீக்கி, தேவையான பாலை மட்டுமே பருகுகின்ற அன்னப் பறவையைப் போல.

 

     அளவிடப் படக்கூடிய ஒன்றுக்குத் தான் கரையை வகுக்க முடியும். அள   வில் அடங்காத ஒன்றுக்கு, கரை இது என்று காட்ட முடியாது. எனவே, கல்வி, "கரை" இல்லாதது எனப்பட்டது.

 

     தேர்ந்து தெளிய வேண்டிய நல்ல நூல்கள் என்பவை எவை என்று நாலடியார் பின்னும் வகுத்துக் கூறுகின்றது.

 

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது,

உலகநூல் ஓதுவது எல்லாம், --- கலகல

கூஉம் துணை அல்லால், கொண்டு தடுமாற்றம்

போஒம் துணை அறிவார்இல்.

 

என்கின்றது நாலடியார்.

 

     ஆய்ந்து அறிந்து, நல்ல அறிவு நூல்களைக் கற்காது, இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான நூல்களைப் படிப்பது எல்லாம், இவ்வுலகில் கலகல என்று கூவித் திரியும் ஆரவார வாழ்க்கைக்கு உதவுமே அல்லாது, அந்த நூல்கள் பிறவித் துயரில் உண்டாகும் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவதற்குத் துணை செய்ய மாட்டா.

 

     எனவே, தடுமாற்றம் என்னும் துன்பத்தில் இருந்து ஒருவன் விடுபடுவதற்கே கல்வி பயன்பட வேண்டும் என்பது தெளிவாகும். மனமானது தெளிந்து, அடங்கி நின்றால் வாழ்க்கையில் தடுமாற்றம் என்பது இல்லாமல் போகும்.

 

     இதனால், "கல்வி என்னும் பல்கடல் பிழைத்து" என்றார் மணிவாசகப் பெருமான். கடல்கள் பல உள்ளன. இவற்றில் நாம் அறிந்தவை சில. அறிய முடியாத நிலையில் உள்ளவை பல. கற்ற நூல்கள் சில. கல்லாதவை பல என்பதைப் போல. கல்வியானது கடலைப் போல, ஆழம், பரப்பு காணமுடியாதது. அது பல துறைகளை உடையது. கடலின் பரப்பை அறிந்துகொள்ள முடியாது. கடலின் ஆழத்தையும் முழுமையாக ஒருவன் அறிந்துகொள்ள முடியாது. அது போலவே, கல்வியின் துறைகள் அனைத்தையும் ஒருவன் அறிந்து கொள்வது என்பது முடியாது. அப்படி அறிய முயன்றால் துன்பமே மிகும்.

 

     மேலும், கடலில் நீர் மிகுந்து இருந்தாலும், தாகவிடாய் கொண்டு ஒருவன், கடல் நீரை எவ்வளவுதான் பருகினாலும், தாகம் தணியாது. தாகம் மேலும் மேலும் மிகும். அதுபோலவே, கல்வியை ஒருவன் கற்க, கற்க, மேலும் மேலும் கற்கவேண்டும் என்னும் ஆவல் மிகும். அதன் பயனாக, "வித்யா கர்வம்" என்னும், "கல்விச் செருக்கு" கூடவே உண்டாகும். அந்த செருக்கானது ஒருவனைத் துன்பத்தில் தான் கொண்டு சேர்க்கும். அதனால் அவனுக்கும் துன்பம்; அவனைச் சார்ந்தவர்க்கும் துன்பம். நான் கற்றவன் என்னும் செருக்கு இல்லாமல், மனம் அடங்கி இருந்தால், கற்றதன் பயன் உண்டானது என்று பொருள்.

 

     மேலும், ஆறு, கிணறு, ஏரி போன்ற நீர்நிலைகளிலும் நீர் மிகுந்து இருந்தாலும், அந்த நீர் அனைத்தையுமே ஒருவன் பயன்படுத்த முடியாது. தேவைக்கு ஏற்ப, எடுத்துக் கொண்ட நீரைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். தேவைக்கு மேல் எடுத்துக் கொண்ட நீரானது பயன் இல்லாமல் பாழ்பட்டுப் போகும். நிறைய நூல்களை வாங்கி அடுக்கி வைத்துக் கொள்ளவேண்டும் என்னும் ஆவல் சிலருக்கு இருப்பதையும் காணலாம். அவ்வாறு வாங்கி அடுக்கி வைத்துள்ள நூல்கள் அனைத்தையுமே அவர் கற்றுத் தெளிந்தாரா என்ற வினா எழுமானால், "இல்லை" என்ற விடையே கிடைக்கும். எனவேதான், "கற்பனவும் இனி அமையும்" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

     ஆகவே, அறிவு நூல்களைக் கற்றதன் பயன், நூல்களில் சொல்லியவாறு நின்று, மனம் அடங்கப் பெறுதலே என்பதை வலியுறுத்த,

 

"கற்க கசடு அறக் கற்பவை, கற்றபின்

நிற்க அதற்குத் தக"

 

என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

 

     கற்கவேண்டும் என்றாலே, ஐயம் திரிபு மயக்கம் என்னும் கசடுகள் தோன்றாத வகையில் கற்றுத் தெளிய வேண்டும் என்பதே பொருள். எத்தகைய நூல்களைக் கற்கவேண்டும் என்றால், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் உணர்த்தும் நூல்களை அன்றி, சிற்றின்பம் தரும் நூல்களைப் பயிலுதல் கூடாது. உயிர்கள் தமது வாழ்நாளில் சிலவே பிழைத்து இருப்பன. அவற்றுள்ளும், பல, நோய்களை அடைந்து துன்றுபுவனவாக உள்ளன. உயிர்களுக்குச் சிற்றறிவும் உள்ளதால், சிற்றின்பத்தைப் பயக்கும் நூல்களில் மனம் செல்லுமாயின், கிடைத்தற்கு அரிய வாழ்நாள் பயனற்றுக் கழிந்து, பிறப்பின் பயனை அடைய முடியாமல் போகும்.

 

கசடு --- குற்றங்கள். அழுக்கு, அடிமண்டி.

கசடன் --- கீழ்மகன், குற்றம் செய்தவன்.

 

"கசடு அறக் கற்றல்" என்பது, உள்ளத்தில் உள்ள கசடு ஆகிய குற்றங்கள் அற்றுப் போகுமாறு கற்பதைக் குறித்தது.

 

     "அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்று நன்னூல் கூறும். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களைப் பயக்கும் நூல்களையும் ஆசிரியரிடத்தில் கற்குங்காலையில், நூல்களின் பொருளை ஒன்றை ஒன்றாக எண்ணிக் கொள்ளுகின்ற விபரீதமும், இதுவோ அதுவோ என்னும் ஐயப்பாடும் நீக்கி, உண்மைப் பொருளை உணர்ந்து, உணர்ந்த வழியில் நிற்கின்ற பலரோடும் பல காலமும் பழகி வந்தால், உள்ளத்தில் உள்ள குற்றம் அகலும்.

 

     கற்ற வழியில் நிற்றல் என்பது, இல்லறத்தில் வழுவாது நின்று, மனைவியோடு போகம் புசித்து, கெடுதல் இல்லாத அறங்களைச் செய்து வருதல் ஆகும். இல்லறத்தில் இருந்து நீங்கி, துறவறத்தில் நின்றவரானால், தவத்தினால் மெய்ப்பொருளை உணர்ந்து, அவா அறுத்து, சிறிதும் குற்றப்படாமல் ஒழுகுதல் வேண்டும். குற்றப்படாமல் ஒழுகவேண்டுமாயின், இறைவன் திருவடியை நாளும் வணங்குதல் வேண்டும். அதுவே, கல்வியின் பயன், என்பதை, "கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த, பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்" என்னும் திருஞானசம்பந்தப் பெருமான் அருள்வாக்கினால் அறியலாம்.

 

     "கையால் தொழுது ஏத்த" என்றால், கையால் தொழுது வணங்க என்று பொருள் கொள்ளப்படும். அப்படியானால், கைகள் இல்லாதவன் தொழமுடியாதா? என்னும் ஐயம் தோன்றுதல் இயல்பே. "கை" என்னும் சொல்லுக்கு, "ஒழுக்கம்" என்று பொருள் உண்டு. ஒழுக்க நெறியிலே நின்று இறைவனைத் தொழுதல் வேண்டும் என்பதே திருஞானசம்பந்தப் பெருமான் அருள்வாக்கின் பொருள். கற்ற நெறியிலே நின்றவரிடத்தில் ஒழுக்கம் நிலைபெற்று இருக்கும். அதற்கு, கற்றலோடு கேட்டலும் வேண்டும். ஒழுக்க நெறியில் நின்று தொழுவதே உண்மையான தொழுகை.

 

     கல்வி என்பதை, அறிவுக்கல்வி, தொழிற்கல்வி, ஆன்மீகக்கல்வி என்பதாக வகைப்படுத்திக் கொள்ளலாம்.

 

     கற்றும், கேட்டும், மனம் அடங்கவில்லை என்றால், அதன் பொருள் என்ன என்பதை...

 

இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார்;- தடங்கண்ணாய்
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்துஅடினும்
கைப்புஅறா பேய்ச்சுரையின் காய்.

 

என்று நாலடியார் வகுத்துக் கூறும்.

 

இதன் பொருள் ---

 

     இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும் --- விரிவாக மிகுந்த மெய்யுணர்வு நூல்களை என்றும் கற்பினும், அடங்காதார் என்றும் அடங்கார் --- அந்நூல்களில் சொன்னவழி இயல்பாக அமைந்து ஒழுகாதவர் என்றும் அமைந்து ஒழுகார்; தடம் கண்ணாய் --- அகன்ற கண்களையுடைய பெண்ணே!, உப்பொடு நெய் பால் தயிர் காயம் பெய்து அடினும் --- உப்பொடு நெய் பால் தயிர் பெருங்காயம் இட்டுச் சமைத்தாலும், கைப்பு அறா பேய்ச் சுரையின் காய் --- பேய்ச்சுரையின் காய்கள் தம்முடைய கசப்புத் தன்மையில் இருந்து மாறுபடா.

 

     பேய்ச்சுரையின் காய் என்பது நற்குணங்கள் இல்லாத ஒருவனைக் குறிக்கும். பேய்ச்சுரைக்காயானது, உப்பினைப் போட்டு, நெய்யால் வதக்கி, பால், தயிர் போன்றவைகளிலே வேகவைத்து, பெருங்காயத்தைப் போட்டாலும் கூடத் தன் இயல்பான கசப்புத் தன்மையிலே இருந்து மாறாது. அது போல நற்குணங்கள் இல்லாத ஒருவன், திருக்குறள் போன்ற நீதிநூல்கள், திருமுறைகள் போன்ற அருள் நூல்கள் ஆகிய எவற்றையும் எவ்வளவுதான் விரிவாகப் படித்திருந்தாலும், தன்னுடைய இயல்பான குணத்திலே இருந்து மாறமாட்டான்.

 

     இது பற்றி வேறு ஒரு விதமாக, "தண்டலையார் சதகம்" என்னும் நூல் தெரிவிக்கின்றது.

 

சங்கைஅறப் படித்தாலும், கேட்டாலும்,
     பிறர்க்குஉறுதி தனைச்சொன் னாலும்,
அங்கண்உல கினில் சிறியோர் தாம்அடங்கி
     நடந்து,கதி அடைய மாட்டார்!
திங்கள் அணி சடையாரே! தண்டலையா
     ரே! சொன்னேன் சிறிது காலம்
கங்கையிலே படர்ந்தாலும் பேய்ச்சுரைக்காய்
     நல்லசுரைக் காய் ஆகாதே!

 

இதன் பொருள் ---

 

     திங்கள் அணி சடையாரே --- பிறை முடித்த சடையாரே, தண்டலையாரே --- திருத்தண்டலை நீள்நெறியில் எழுந்தருளி இருப்பவரே, கங்கையிலே பேய்ச்சுரைக்காய் சிறிது காலம் படர்ந்தாலும் நல்ல சுரைக்காய் ஆகாது --- கங்கைக் கரையிலே பேய்ச்சுரைக்காய் கொஞ்சகாலம் படர்ந்தாலும் (கங்கை நீரில் வளர்ந்ததால் மட்டுமே அது) இனிய சுரைக்காய் ஆகாது. அதுபோல, அங்கண் உலகில் சிறியோர் சங்கை அறப் படித்தாலும் கேட்டாலும் பிறர்க்கு உறுதிதனைச் சொன்னாலும் --- அழகிய இந்த உலகத்தில் அற்பர்கள் ஐயம் திரிபு இன்றி நூல்களைப் படித்தாலும், பெரியோர் சொல்வதைக் கேட்டாலும், மற்றவர்களுக்குத் தாம் கற்றவற்றைச் சொன்னாலும், தாம் அடங்கி நடந்து கதி அடைய மாட்டார் --- தாங்கள் மட்டும் அடக்கமாக நடந்து நல்ல கதி சேரமாட்டார்கள்,

 

     இயல்பாகவே கசக்கும் தன்மை உடையது பேய்ச் சுரைக்காய். தன்னிடம் முழுகுவோரைத் தூய்மைப்படுத்தும் கங்கையின் நீருக்கு, பேய்ச்சுரைக்காயின் கசப்பை நீக்கும் ஆற்றல் இல்லாமல் போனது போல, அறிவைக் கொடுக்கும் நூல்களின் கல்வியாலும் கேள்வியாலும், பிறர்க்குக் கூறுவதனாலும் மட்டும் ஒருவனுக்கு இயற்கையிலே உள்ள தீய பண்பு விலகாது.

 

     இதனை, விவேகசிந்தாமணி எவ்வாறு தெரிவிக்கிறது என்பதைச் சிந்திப்போம்...

 

கற்பூரப் பாத்திகட்டி, கஸ்தூரி எருப்போட்டு,

     கமழ்நீர் பாய்ச்சி,
பொற்புஊர உள்ளிதனை விதைத்தாலும் அதன்குணத்தைப்      

    பொருந்தக் காட்டும்,
சொல்பேதையர்க்கு அறிவு இங்கு இனிதாக வரும்

     எனவே சொல்லினாலும்,
நல்போதம் வராது, ஆங்கு அவர் குணமே மேலாக

     நடக்கும் தானே.

 

இதன் பொருள் ---

 

     பச்சைக் கற்பூரத்தைக் கொண்டு வரப்புக் கட்டி, மான்மதம் என்னும் கஸ்தூரியை எருவாக இட்டு, நல்ல நறுமணம் உள்ள தண்ணீரைப் பாய்ச்சி, அதில் வெள்ளைப் பூண்டை விதைத்தாலும், அந்த வெள்ளைப் பூண்டானது, தன்னுடைய இயல்பான மணத்தையே வெளிப்படுத்தும். அதுபோல, அறிவு இல்லாத பேதைகளுக்கு, நல்லறிவு உண்டாகும் என்று எண்ணி, ஒருவர் தாம் கற்ற நூல்களைக் கொண்டு எவ்வளவுதான் நல்ல அறிவுரைகளைக் கூறினாலும், அவருக்கு நல்லகுணம் வராது. அவரிடத்திலே இயல்பாகப் பொருந்திய தீய குணங்களே மேலோங்கி நின்று, மேலும் பெருகி வளரும். அவர்கள் தீய குணங்களையே வெளிப்படுத்துவார்கள்.

 

சினம் இறக்கக் கற்றாலும், சித்தி எல்லாம் பெற்றாலும்,

மனம் இறக்கக் கல்லார்க்கு வாய் ஏன்? பராபரமே.

 

என்றார் தாயுமான அடிகளார்.

 

இதன் பொருள் ---

 

     உள்ளத்தில் தோன்றும் வெகுளியின் முனைப்பாய் முகத்தில் தோன்றும் சினம் எழாதவாறு பயின்று கொண்டாலும், அகத் தவப் பயனாகிய எண்பெரும் சித்திகள் எளிதில் கைவரப்பெற்றாலும், மனம் அடங்கும்படியாகப் பயின்று கொள்ளாதார்க்குப் பயனற்ற வாய்ப்பேச்சு மட்டும் இருப்பதால் பயன் யாது? (யாதுமில்லை.)

 

     எனவே, மனம் அடங்கி நன்னெறியில் நிற்பதே, ஒருவன் கற்ற கல்வியின் பயன் ஆகும்.

 

     பின்வரும் தாயுமான அடிகளார் பாடல்களையும் கருத்தில் கொள்ளுதல் நலம்.

 

சொல்லால் மவுனம் மவுனம் என்றே சொல்லிச்                       

     சொல்லிக்கொண்டது

அல்லால், மனம் அறப் பூரண நிட்டையில்

     ஆழ்ந்தது உண்டோ?

கல்லாத மூடன் இனி என் செய்வேன்?

     சகற் காரணமாம்

வல்லாளன் ஆன மவுன சதானந்த மாகடலே.

 

இதன் பொருள் ---

 

     உலகு, உடல், உலகியல் பொருள்கள் அனைத்திற்கும் தோற்றம், நிலைபேறு, இறுதிக்குக் காரணமாய் அமைந்துள்ள, மோன நிலையில் அழியாத பேரின்பக் கடலாக விளங்கும் பரம்பொருளே! அடியேன், பிறரால் மோன நிலையில் உள்ளவன் என்று சொல்லிக் கொள்ளும் விதமாக வாய் மவுனமாக மட்டுமே இருந்தது அல்லாமல், மனம் அடங்கி, திருவடித் தியானத்தில் ஆழ்ந்து இருந்தது இல்லை. அதற்கு உபாயமாக அருள்நூல்களைக் கற்று அதன் வழி நிற்கும் பேற்றினைப் பெறாத முழுமூடனான நான் இனி என்ன செய்வேன்?

 

கற்றும், பலபல கேள்விகள் கேட்டும், கறங்கு எனவே

சுற்றும் தொழில்கற்று, சிற்றின்பத்து ஊடு சுழலின்என்னாம்?

குற்றம் குறைந்து குணம் மேலிடும் அன்பர் கூட்டத்தையே

முற்றும் துணை என நம்பு கண்டாய் சுத்த மூடநெஞ்சே!.

 

இதன் பொருள் ---

 

     மிகவும் அறியாமையால் பற்றப்பட்டு மூடத்தனம் பொருந்திய எனது நெஞ்சமே!  பலபல நூல்களைக் கற்றும், செவிச்செல்வம் ஆகிய பல கேள்விகளைக் கேட்டும், உள்ளம் ஒருநிலைப்படாது காற்றாடி போன்று சுற்றி உழலும் தொழிலால் நீ அடைந்த பயன் யாது?  சிற்றின்பத்துடன் சுழன்றுகொண்டு நீ இருப்பதனால் பிறவித்துன்பமே அல்லாமல் பிறவாத பேரின்பம் வாய்க்குமோ?  மனக் குற்றமானது சுருங்கி, செயலற்று இருந்து, குணமே மிகுந்து மேலிட்டு, நன்னெறியில்வழுவாது ஒழுகும் மெய்யன்பர் திருக்கூட்டத்தையே உற்ற துணை என நம்புவாயாக.


No comments:

Post a Comment

வயலூர் --- 0910. இகல்கடின முகபட

      அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   இகல்கடின முகபட (வயலூர்)   முருகா! விலைமாதர் பற்றை விடுத்து , தேவரீர...