திரு ஆமாத்தூர் - 0741. கண் கயல்பிணை
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கண் கயல்பிணை (திரு ஆமாத்தூர்)

முருகா!
விலைமாதர் வழப்பட்டு அழியாமல்,
தேவரீரது திருவடிகளைச் சிறிதாவது வழிபட்டு உய்ய
அருள் புரிவாய்.


தந்த தத்தன தானாதன
தந்த தத்தன தானாதன
     தந்த தத்தன தானாதன ...... தனதான


கண்க யற்பிணை மானோடுற
வுண்டெ னக்கழை தோளானது
     நன்க மைக்கின மாமாமென ......          முகையான

கஞ்ச மொத்தெழு கூர்மாமுலை
குஞ்ச ரத்திரு கோடோடுற
     விஞ்சு மைப்பொரு கார்கோதைகொ ...... டுயர்காலன்

பெண்ட னக்குள கோலாகல
மின்றெ டுத்திளை யோராவிகள்
     மன்பி டிப்பது போல்நீள்வடி ......      வுடைமாதர்

பின்பொ ழித்திடு மாமாயையி
லன்பு வைத்தழி யாதேயுறு
     கிஞ்சி லத்தனை தாள்பேணிட ......   அருள்தாராய்

விண்ட னக்குற வானோனுடல்
கண்ப டைத்தவன் வேதாவொடு
     விண்டு வித்தகன் வீழ்தாளினர் ......      விடையேறி

வெந்த னத்துமை யாள்மேவிய
சந்த னப்புய மாதீசுரர்
     வெங்க யத்துரி யார்போர்வையர் ......   மிகுவாழ்வே

தண்பு டைப்பொழில் சூழ்மாதையில்
நண்பு வைத்தருள் தாராதல
     முங்கி ளைத்திட வானீள்திசை ......       யொடுதாவித்

தண்ட ரக்கர்கள் கோகோவென
விண்டி டத்தட மாமீமிசை
     சண்ட விக்ரம வேலேவிய ......            பெருமாளே.


பதம் பிரித்தல்


கண் கயல் பிணை மானோடு உறவு
உண்டு என, கழை தோள் ஆனது
     நன்கு அமைக்கு இனம் ஆம் ஆம்என ..... முகையான

கஞ்சம் ஒத்துஎழு கூர் மாமுலை,
குஞ்சரத்து இரு கோடோடுஉற
     விஞ்சு, மைப்பொரு கார்கோதைகொடு, ...... உயர்காலன்

பெண், தனக்கு உள கோலாகலம்
     இன்று எடுத்து இளையோர் ஆவிகள்
     மன் பிடிப்பது போல் நீள்வடிவு ......        உடைமாதர்,

பின்பு ஒத்திடு மாமாயையில்
     அன்பு வைத்து, ழியாதே உறு
     கிஞ்சில் அத்தனை தாள்பேணிட ...... அருள்தாராய்.

விண் தனக்கு உறவு ஆனோன்உடல்
     கண் படைத்தவன், வேதாவொடு,
     விண்டு வித்தகன் வீழ் தாளினர், ......      விடை ஏறி

வெம் தனத்து உமையாள் மேவிய
சந்தனப் புய மாது, சுரர்
     வெங்கயத்து உரி ஆர் போர்வையர் ......   மிகுவாழ்வே!

தண் புடைப்பொழில் சூழ்மாதையில்,
     நண்பு வைத்து அருள் தாராதல-
     மும் கிளைத்திட வான் நீள்திசை ......     யொடுதாவி,

தண்டு அரக்கர்கள் கோகோ என
     விண்டிட, தடமா மீமிசை
     சண்ட விக்ரம வேல் ஏவிய ......      பெருமாளே.


பதவுரை


      விண் தனக்கு உறவானோன் --- விண்ணுலகத்தில் உள்ள தேவர்களுக்கு உறவு ஆனவனும்,

     உடல் கண் படைத்தவன் --- உடல் முழுதும் கண் படைத்தவன் ஆகிய இந்திரன்,

     வேதாவொடு --- பிரமதேவனோடு,

     விண்டு வித்தகன் --- பேரறிவாளனாகிய திருமாலும்,

     வீழ் தாளினர் --- விழுந்து வணங்குகின்ற திருவடிகளை உடையவர்,

     விடை ஏறி --- இடபத்தை வாகனமாக உடையவர்,

      வெம் தனத்து உமையாள் --- விருப்பத்தைத் தரும் மார்பகங்களை உடைய உமாதேவியார்

     மேவிய --- பொருந்தியுள்ள,

     சந்தனப் புய மாது ஈசுரர் --- சந்தனத்தைப் பூசியுள்ள திருத்தோள்களை உடைய மாதொருபாகர்,

     வெம் கயத்து உரிஆர் போர்வையர் மிகு வாழ்வே ---  கொடிய யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவர் ஆகிய சிவபெருமான் அருளிய பெருஞ்செல்வமே,

      தண் புடைப் பொழில் சூழ் மாதையில் --- குளிர்ந்த சோலைகளால் சூழப்பட்டுள்ள திரு ஆமாத்தூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு,

     தாராதலமும் கிளைத்திட --- உலகம் யாவும் செழித்து விளங்,

     நண்பு வைத்து அருள் --- அன்போடு வீற்றிருந்து அருள் புரிபவரே!

      வான் நீள் திசையொடு தாவித் தண்டு அரக்கர்கள் கோ கோ என விண்டிட --- வானளாவிய திசைகள் எங்கும் பரந்து நிறைந்து யாவரையும் வருத்திய அசுரர்கள் கோ கோ என்று அலறி ஓட,

       தட மா மீமிசை --- பெரிய மாமரத்தின் மீது,

     சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே --- உக்கிரமும் வலிமையும் பொருந்திய வேலாயுதத்தை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

      கண் கயல் பிணை மானோடு உறவு உண்டு என --- கண்களானவை கயல் மீனுக்கும், மானுக்கும் உறவு ஆனவை என்று கொள்ளும்படியும்,

     கழை தோளானது நன்கு அமைக்கு இனம் ஆம் ஆம் என --- கரும்பு போன்ற இனிமையான தோள்கள் நல்ல மூங்கிலுக்கு ஒப்பாகும் என்றும் சொல்லும்படியாகவும்,

      முகையான கஞ்சம் ஒத்து --- தாமரையின் மொட்டினை ஒத்து,

     எழு கூர் மாமுலை --- வளர்ந்து எழுந்துள்ள கூரிய பெரிய முலைகள்,

     குஞ்சரத்து இரு கோடோடு உற ---  யானையின் இரண்டு தந்தங்களுக்கு ஒப்பானவை என்னும்படியும்,

      விஞ்சு மைப் பொரு கார் கோதை கொடு --- நிறைந்த இருளுக்கு மேலான கருமேகம் போன்ற கூந்தலைக் கொண்டும்,

     உயர் காலன் பெண் தனக்கு உள கோலாகலம் இன்று எடுத்து ---  பெருமை வாய்ந்த காலனே, பெண் உரு என்னும் அழகிய கோலத்தை எடுத்துக் கொண்டு வந்து,

      இளையோர் ஆவிகள் மன் பிடிப்பது போல் --- இளைஞர்களின் உயிரை நிலையாகப் பிடிப்பது போ,

     நீள் வடிவுடை மாதர் பின்பு --- அழகிய தோற்றத்தை உடைய பெண்களின் பின்னால் சென்று,

     ஒழித்திடு --- வாழ்நாளையும், (வருந்தி ஈட்டிய) பொருளையும் ஒழித்திடுகின்ற,

     மா மாயையில் அன்பு வைத்து அழியாதே --- பெரு மோகத்தில் மனதை வைத்து அடியேன் அழியாமல்,

      உறு கிஞ்சில் அத்தனை --- ஒரு சிறிது காலமாவது,

     தாள் பேணிட அருள் தாராய் --- திருவடிகளை விரும்பி வழிபடத் திருவருளைத் தரவேண்டும்.


பொழிப்புரை


         விண்ணுலகத்தில் உள்ள தேவர்களுக்கு உறவு ஆனவனும், உடல் முழுதும் கண் படைத்தவனும் ஆகிய இந்திரன், பிரமதேவனோடு, பேரறிவாளனாகிய திருமாலும், விழுந்து வணங்குகின்ற திருவடிகளை உடையவர். இடபத்தை வாகனமாக உடையவர். விருப்பத்தைத் தரும் மார்பகங்களை உடைய உமாதேவியார் பொருந்தியுள்ள சந்தனத்தைப் பூசியுள்ள திருத்தோள்களை உடைய மாதொருபாகர். கொடிய யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவர் ஆகிய சிவபெருமான் அருளிய பெருஞ்செல்வமே!

     குளிர்ந்த சோலைகளால் சூழப்பட்டுள்ள திரு ஆமாத்தூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு, உலகம் யாவும் செழித்து விளங்அன்போடு வீற்றிருந்து அருள் புரிபவரே!

     வானளாவிய திசைகள் எங்கும் பரந்து நிறைந்து யாவரையும் வருத்திய அசுரர்கள் கோ கோ என்று அலறி ஓட, பெரிய மாமரத்தின் மீது உக்கிரமும் வலிமையும் பொருந்திய வேலாயுதத்தை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

     கண்களானவை கயல் மீனுக்கும், மானுக்கும் உறவு ஆனவை என்று கொள்ளும்படியும், கரும்பு போன்ற இனிமையான தோள்கள் நல்ல மூங்கிலுக்கு ஒப்பாகும் என்றும் சொல்லும்படியாகவும்,  தாமரையின் மொட்டினை ஒத்து வளர்ந்து எழுந்துள்ள கூரிய பெரிய முலைகள், யானையின் இரண்டு தந்தங்களுக்கு ஒப்பானவை என்னும்படியும், நிறைந்த இருளுக்கு மேலான கருமேகம் போன்ற கூந்தலைக் கொண்டும், பெருமை வாய்ந்த காலனே, பெண் உரு என்னும் அழகிய கோலத்தை எடுத்துக் கொண்டு வந்து,  இளைஞர்களின் உயிரை நிலையாகப் பிடிப்பது போ, அழகிய தோற்றத்தை உடைய பெண்களின் பின்னால் சென்று, வாழ்நாளையும், (வருந்தி ஈட்டிய) பொருளையும் ஒழித்திடுகின்ற, பெரு மோகத்தில் மனதை வைத்து அடியேன் அழியாமல், ஒரு சிறிது அளவாவது தேவரீர் திருவடிகளை விரும்பி வழிபடத் திருவருளைத் தரவேண்டும்.


விரிவுரை
  
விண் தனக்கு உறவு ஆனோன் ---

விண்ணுலகத்தில் உள்ள தேவர்களுக்கு உறவு ஆனவன் இந்திரன்.

உடல் கண் படைத்தவன் ---

தேவர்களின் தலைவனான இந்திரன், கெளதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டு, முனிவரின் வேடத்தில் அகலிகையுடன் கலந்து இருந்தான். வந்திருப்பது தன் கணவர் அல்ல என்பது தெரிந்தும், இந்திரன் மீது கொண்ட ஆசையினால் தவறு செய்ய அகலிகையும் சம்மதித்தாள். நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு, இந்திரன் உடல் எங்கும் பெண் குறிகள் உண்டாகும்படி சபித்தார்.

பின்வரும் கம்பராமாயணப் பாடல்களைச் சிந்திக்கவும்.

கண்ட கல் மிசைக் காகுத்தன்
   கழல் துகள் கதுவ,
உண்ட பேதைமை மயக்கு அற
   வேறுபட்டு, உருவம்
கொண்டு, மெய் உணர்பவன்
   கழல் கூடியது ஒப்ப.-
பண்டை வண்ணமாய் நின்றனள்;
   மா முனி பணிப்பான்;

கண்ட கல்லின் மேலே இராமனது திருவடித் துகள் பட்டதால், தான் மனத்தில் கொண்டுள்ள அறியாமையாகிய இருள் மயக்கம் நீங்குமாறு உண்மையான தத்துவ ஞானம் பெற்றவன், தனது  அஞ்ஞானமாகிய அறியாமை நிலை மாறி,  உண்மை வடிவம்  அடைந்து, பரமனது திருவடிகளை  அடைவதைப் போல அந்த அகலிகை முன்னைய வடிவத்தோடு எழுந்து நின்றனள். அதனைக்  கண்ட விசுவாமித்திரன் இராமனை நோக்கிப் பின்வருமாறு கூறினான். 

மாஇரு விசும்பின் கங்கை
   மண்மிசைக் கொணர்ந்தோன் மைந்த!
மேயின உவகையோடு
   மின் என ஒதுங்கி நின்றாள்.
தீவினை நயந்து செய்த
   தேவர்கோன் தனக்குச் செங்கண்
ஆயிரம் அளித்தோன். பன்னி;
   அகலிகை ஆகும்' என்றான்.

மிகப் பெரிய ஆகாயத்திலிருந்து கங்கா  நதியை இப்பூமிக்குக் கொண்டு வந்த பகீரதன் என்னும் பேரரசன் குலத்தில் பிறந்த மைந்தனே!  பொருந்தின மகிழ்ச்சியோடு மின்னல் கொடி போல ஒரு பக்கத்தே நாணத்தால் ஒதுங்கி நின்ற இவள், மற்றொருவன்
மனைவியைச்  சேர்தலாகிய கொடுந்தொழிலை  விரும்பிச்  செய்த தேவர்கள் தலைவனான இந்திரனுக்குச் சிவந்த  ஆயிரம்  கண்களைக் கொடுத்த கௌதம முனிவனுடைய பத்தினியான அகலிகை ஆவாள் என்றான். 

பொன்னை ஏர் சடையான் கூறக்
   கேட்டலும். பூமி கேள்வன்.
என்னையே! என்னையே! இவ்
   உலகு இயல் இருந்த வண்ணம்!
முன்னை ஊழ் வினையினாலோ!
   நடு ஒன்று முடிந்தது உண்டோ?
அன்னையே அனையாட்கு இவ்வாறு
   அடுத்தவாறு அருளுக!என்றான்.

 
பொன்னைப் போன்ற சடை முடியுடைய கோசிக முனிவன் இவ்வாறு சொல்லியதைக் கேட்டவுடனே, பூமிதேவிக்கு நாயகனான இராமன், வியப்போடு  அம் முனிவனை  நோக்கி "இந்த உலகத்தின் இயல்பு  இருந்த விதம் எத்தன்மையது! எத்தன்மையது! இவ்வாறு நிகழ்ந்தது. முற்பிறப்பில் செய்த வினையின் பயனாலோ? அல்லது இதற்குக் காரணமாக இடையிலே நேர்ந்த ஒரு செயல் உண்டோ? தாய் போன்ற  அகலிகைக்கு இப்படி ஏற்பட்ட காரணத்தைக் கூறி அருளுக என்று இராமன் வேண்டினான். 

அவ் உரை இராமன் கூற.
   அறிவனும். அவனை நோக்கி.
செவ்வியோய்! கேட்டி; மேல் நாள்
   செறி சுடர்க் குலிசத்து அண்ணல்
அவ்வியம் அவித்த சிந்தை
   முனிவனை அற்றம் நோக்கி. 
நவ்விபோல் விழியினாள் தன்
   வன முலை நணுகல் உற்றான்;
  
இவ்வாறு இராமன் கேட்க,  முனிவனும் அந்த  வார்த்தைகளைக்  கேட்டு, இராமனைப்  பார்த்துக் கூறத் தொடங்கினான். "எல்லா நற்குணங்களும் உடையவனே! நான் கூறுவதைக் கேட்பாயாக. முன்னொரு காலத்திலே மிகுந்த ஒளியுள்ள வச்சிரப்படை ஏந்திய பெருமை மிக்க இந்திரன், பொறாமை முதலான தீய   குணங்களை நீக்கிய மனம் படைத்த கௌதம முனிவர் ஆச்சிரமத்தில் இல்லாத சமயம் பார்த்து, அங்கே சென்று,  மான்  விழியாளான அகலிகையின் அழகிய முலைகளைச் சேர விரும்பினான். 

(படைப்புக் கடவுளான பிரமன் முன்பு படைத்த மக்களின் உடம்பிலுள்ள  உறுப்பு அழகைச் சிறிது சிறிதாக எடுத்து அழகான ஒரு பெண்ணைப் படைத்தான். அவளுக்கு அ-ஹல்யா   என்னும் பெயரிட்டான். ஹலம். ஹல்யம் - அழகின்மை.  + ஹல்யா - அழகின்மை  இல்லாதவள். இந்திரன் இத்தகைய அழகிய பெண்ணுக்குத் தக்க கணவன் தானே என்று செருக்குக் கொண்டு அவளைத் தன் தாரமாகக் கருதினான். ஆனால் பிரமன் அவனது எண்ணத்தோடு மாறுபாடு கொண்டான். அதனால் அவளைக் கௌதமனிடம் தந்து, ‘இவளை நீ தான் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி ஒப்படைத்தான். முனிவனும் அவளைப்  பலகாலம் காத்துப் பிரமனிடம் சேர்த்தான். பிரமனோ அம்முனிவனின் சபலமின்மையையும், உயர்ந்த தவத்தையும்  அறிந்து, அவளை அம்முனிவனுக்கே மணம் புரிவித்தான். அதனால் பொறாமை கொண்ட இந்திரன், வேற்று  வடிவத்திலே அவளைச்  சேரமுற்பட்டான்) 
                                             

தையலாள் நயன வேலும்.
   மன்மதன் சரமும். பாய.
உய்யலாம் உறுதி நாடி
   உழல்பவன். ஒரு நாள் உற்ற
மையலாம் அறிவு நீங்கி.
   மா முனிக்கு அற்றம் செய்து.
பொய் இலா உள்ளத்தான் தன்
   உருவமே கொண்டு புக்கான்.

அகலிகையின் கண்களாகிய வேல்களும்;  மன்மதனுடைய மலர்
அம்புகளும் தன் மேல் பாய்வதனால் மிக வருந்தி, அவளைச் சேர்ந்து அக்காம நோயிலிருந்து நீங்கிப் பிழைக்கக்  கூடிய ஓர் உபாயத்தைத் தேடி அலைபவனான அந்த இந்திரன், ஒரு தினத்தில் அளவற்ற காம மயக்கத்தால் நல்லறிவு கெட்டு,  பொய்யில்லாத மனத்தை உடைய அம்முனிவனது உருவத்தையே தான் எடுத்துக் கொண்டு அவனது ஆச்சிரமத்துள்ளே புகுந்தான். (பொழுது புலர்வதன் முன்னே கோழி கூவுமாறு
இந்திரன் செய்தான். கௌதம முனிவனும் காலைக்  கடன்  கழித்தறல் பொருட்டு வெளிப்புறம் சென்றான்).                           

புக்கு அவளோடும். காமப்
   புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்லோடும்.
   உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்.
தக்கது அன்று என்ன ஓராள்;
   தாழ்ந்தனள் இருப்ப. தாழா
முக்கணான் அனைய ஆற்றல்
   முனிவனும். முடுகி வந்தான்.

இவ்வாறு  இந்திரன்  முனிவனது உருவம் கொண்டு சென்று, அந்த அகலிகையோடு புதுக் கலப்பில் அமைந்த காமமாகிய மணமுள்ள மதுவின் தெளிவை இருவரும் சமமாக அனுபவித்து   கொண்டிருக்கும்போது,  தன்னோடு மகிழ்பவன்  இந்திரனே  என்ற   தவற்றை அறிந்தாள். அவ்வாறு அறிந்த பின்பும், இத்தீய செயல் தனக்குத் தகுதியானதாக இல்லை என்று சிந்தனை செயலுக்குத்   தானும் மனம் பொருந்தியவளாக இருக்க, அச் சமயத்தில், குறைவு  இல்லாத முக்கண்ணனாகிய  சிவனை  ஒத்துள்ள வல்லமை  நிரம்பிய அம்முனிவனும் தாழாமல் விரைவாக மீண்டு தன் ஆச்சிரமம் வந்தான். (ஏனெனில். தான் எழுந்து  புறப்பட்டுப்  போனது  நள்ளிரவு என்றும். அவ்வாறு தான்  செல்வதற்கு இந்திரன் வஞ்சனை செய்தான் என்றும் முனிவன் தன்  ஞான  உணர்வால் அறிந்ததே ஆகும்).

சரம் தரு சாபம் அல்லால்
   தடுப்ப அருஞ் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த
   வருதலும். வெருவி. மாயா.
நிரந்தரம் உலகில் நிற்கும்
   நெடும் பழி பூண்டாள் நின்றாள்;
புரந்தரன் நடுங்கி. ஆங்கு ஓர்
   பூசை ஆய்ப் போகல் உற்றான்.

தடுக்கக் கூடிய அம்புகளை தொடுக்கின்ற வில்லின் தொழிலால்  அல்லாமல், யாராலும் தடுக்க முடியாத சாபத்தைக் கொடுக்கவும் அருளிக் கூறவும் வல்ல வரங்களை எல்லாம் கொடுக்க வல்ல  கௌதமன், ஆச்சிரமத்திற்கு அருகில் வந்த அளவில், எக்காலத்திலும் நிலவுலகில் அழியாமல் நிலைத்திருக்கக்கூடிய; பெரும்பழிச் செயலைச் செய்தவளாகிய அகலிகை,  அச்சத்தால்  மனம் பதறி நின்று விட்டாள். இந்திரன், செய்யத்தகாத செயலைச் செய்ததனால் உண்டான அச்சத்தால் மனமும் உடம்பும் நடுங்க அந்த  இடத்திலிருந்து, ஒரு  பூனையின் வடிவைத் தாங்கி வெளியே செல்லத்  தொடங்கினான். (தன் அறியாமையால் பிற ஆடவனோடு கூடியதால், முழுமையாகவே இவள் மேல் பழி சுமத்த  இயலாது. ஆனால், தன்னைச் சேர்ந்துள்ளவன் இந்திரனே என்று  தெரிந்தும் அத் தீய செயலை விலக்க வேண்டுமென்ற அறிவுத் தெளிவு இவளிடம் உண்டாகாததே இவள் மேல் உள்ள குறையாகும்)


தீ விழி சிந்த நோக்கி.
   செய்ததை உணர்ந்து. செய்ய
தூயவன். அவனை. நின் கைச்
   சுடு சரம் அனைய சொல்லால்.
ஆயிரம் மாதர்க்கு உள்ள
   அறிகுறி உனக்கு உண்டாக என்று
ஏயினன்; அவை எலாம் வந்து
   இயைந்தன. இமைப்பின் முன்னம்.

அப்பொழுது நடுநிலை வழிச் செல்லக் கூடிய மனத்  தூய்மையுடைய அம் முனிவன், கண்கள் தீப்பொறியைக்  கக்குமாறு  கோபித்துப் பார்த்து; இருவரும் செய்த தீச்செயலை அறிந்து,  உனது கையால் ஏவப்படும் கொடிய அம்பு  போன்ற  சுடு சொல்லால், அந்த இந்திரனை, பெண்களுக்கு உள்ள ஆயிரம் குறிகள் உனக்கு உண்டாகட்டும் என்று, சாப வார்த்தையை  ஏவினான். அவ்வாறே அப் பெண்குறிகள் ஆயிரமும் இமைப்   பொழுதிலே அவன்  உடம்பில் வந்து பொருந்தின. (ஒரு பெண்ணின் குறியிடத்து இந்திரன் மிக விருப்பம் கொண்டு இழிந்த செயல் புரிந்தமையால் அதனிடம்  வெறுப்பு  உண்டாகும் பொருட்டு, அவன் உடம்பு முழுவதும் பெண்குறிகள் அமையுமாறு சாபம் அளிக்கப் பெற்றது.)

எல்லை இல் நாணம் எய்தி.
   யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும்
   புரந்தரன் போய பின்றை.
மெல்லியலாளை நோக்கி.
   ‘’விலைமகள் அனைய நீயும் 
கல் இயல் ஆதி’’ என்றான்;
    கருங்கல் ஆய். மருங்கு வீழ்வாள்.

தன் உடம்பு முழுவதும் சாபத்தால் கெட்டு  விட்டதனால் இந்திரன் அளவில்லாத நாணத்தை அடைந்து, தனது  நிலையைப் பார்த்தவர்கள். கேட்டவர்கள் எல்லோர்க்கும் பரிகாசச்  சிரிப்பு  வந்து எய்தும்படி, தனக்கு நேர்ந்த பழியோடும்  வானுலகத்திற்குச் சென்ற பின்பு, அம் முனிவன், மெல்லியலாளான தன் மனைவியைப்  பார்த்து,  தீய ஒழுக்கத்தால் வேசியைப் போன்ற  நீயும் கல் வடிவம் ஆகுக என்று சபித்தான். உடனே அவள்  கருங்கல் வடிவாய், பக்கத்திலே வீழ்வாள் ஆயினாள்.
  
வேதாவொடு ---

வேதங்களைச் சதா ஓதுபவர். ஆதலால், பிரமதேவர், வேதா எனபட்டார்.

விண்டு வித்தகன் ---

விண்டு - மகாவிஷ்ணு. வித்தகன் - ஞானி, பேரறிவாளன்.
  
வீழ் தாளினர் ---

தாள் - திருவடிகள்.

இந்திரன், பிரமதேவர், திருமால் ஆகியோர் விழுந்து வணங்குகின்ற திருவடிகளை உடையவர் சிவபெருமான்.

வெம் தனத்து உமையாள் மேவிய சந்தனப் புய மாது ஈசுரர் ---

தனம் - மார்பகங்கள்.

உமாதேவியார் பொருந்தியுள்ள, சந்தனம் தோய்ந்த திருத்தோள்களை உடைய மாதொருபாகர் ஆகிய சிவபெருமான்.
  
வெம் கயத்து உரிஆர் போர்வையர் ---

கயம் - யானை.  உரி - தோல்.

யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவர் சிவபெருமான்.

கயாசுரன் எனும் அசுரன் காளமேகம் போன்றதொரு யானை உருவம் பெற்றவன். அவன் மேருமலையில் நான்முகனை நினைத்துக் கடும்தவம் மேற்கொண்டான். நான்முகன் தோன்றினான். கயாசுரன் யாராலும் அழிவில்லா நிலையும் எதிலும் வெற்றி கிடைக்கவும் வரம் கேட்டான். உடன் கிடைத்தது. ஆனால் சிவனை மட்டும் எதிர்ப்பாயானால் நீ இறப்பாய் என்ற கடுமையான நிபந்தனையும் கிடைத்தது. அவன் தனது வேலைகளைக் காட்டத் தொடங்கினான். சிவபெருமானை விடுத்து அனைவரிடத்திலும் தன் தொல்லைகளையும், கொடுமைகளையும் தொடர்ந்தான்.

இந்திரனும் அவனிடம் போரிட முடியாமல் தோற்றான். உடன் அவனது வாகனமான ஐராவத்தின் வாலைப் பிடித்திழுத்து தூர எறிந்தான். பின் அமராவதி நகரை அழித்தான். அதோடு தன் குலத்தாரையும், இராட்சதக் கூட்டத்தினரையும் உலகமக்கள் அனைவரையும் கொடுமைப் படுத்தினான். பாதிக்கப்பட்டோர் சிவபெருமானிடம் சரணடைந்தனர்.

வந்தவர்கள் அனைவரும் சிவபெருமான் முன், "இறைவா! எங்களைக் காக்க வேண்டும். நான்முகனிடம் அழியாவரம் வாங்கிய கயாசுரன் இங்கு வந்து கொண்டுள்ளான். அவனை அழித்து எங்களைக் காக்க வேண்டும்" என்று மன்றாடினர். பின்னாலேயே வந்த கயாசுரன் தான் எதிர்க்கக் கூடாதது சிவபெருமான் என்பதை அக்கணத்தில் மறந்தான். ஆலயவாசல் முன் நின்று அனைவரும் பயப்படும் படியாக கர்ண கொடூரமாக சத்தமிட்டான். இதனைக் கேட்டோர் சிவபெருமானைத் தழுவிக் கொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறியபடியே தேவகணத்தினரே பயப்படும் படியாகப் பெரிய வடிவம் எடுத்தார்.

அனைவரும் பயப்படும் படி கண்களின் வழியே தீயின் சுவாலைகள் தெரித்தது. கயாசுரனைத் தனது திருவடியால் உதைக்க, அவன் கழிந்த கோலத்தில் உலகின் மீது விழுந்தான். மற்றொரு திருவடியால் அவனது தலையை மிதித்து தொடையில் ஊன்றியவாறே தனது நகங்களால் பிளந்து அவனது தோலை கதறக் கதற உரித்திழுத்தார். அச் சமயத்தில் பார்வதி தேவியே அஞ்சினார். அவரது தோற்றத்தைக் கண்டோர் கண்ணொளி இழந்தனர். கயாசுரனின் தோலை தன் மீது போர்த்தி சாந்தம் அடைந்தார்.

புரத்தையும் எரித்து, ம் கயத்தையும்உரித்து, ண்
     பொடிப் பணி என் அப்பன் ...... குருநாதா!     ---  திருத்தணிகைத் திருப்புகழ்.

தலத் தநுவைக் குனித்து, ஒரு முப்-
     புரத்தை விழக் கொளுத்தி, மழுத்
     தரித்து, புலி, கரி, துகிலைப் ......      பரமாகத்
தரித்து, தவச் சுரர்க்கள் முதல்
     பிழைக்க, மிடற்று அடக்கு விடச்
     சடைக் கடவுள் சிறக்க பொருள் ...... பகர்வோனே! ---  திருத்தணிகைத் திருப்புகழ்.
    
தண் புடைப் பொழில் சூழ் மாதையில், தாராதலமும் கிளைத்திட நண்பு வைத்து அருள் ---

குளிர்ந்த சோலைகளால் சூழப்பட்டுள்ள திரு ஆமாத்தூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு, உலகம் யாவும் செழித்து விளங், அன்போடு வீற்றிருந்து அருள் புரிபவர் முருகப் பெருமான்.

திரு ஆமாத்தூர் தல வரலாறு

விழுப்புரம் - திருவண்ணாமலை - செஞ்சி பேருந்துச் சாலையில், 2. கி.மீ. சென்றால் "திருவாமாத்தூர்" கைகாட்டியில் இடப்புறமாகப் பிரிந்து செல்லும் பாதையில் 6 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். விழுப்புரம் - சூரப்பட்டு நகரப் பேருந்து திருவாமாத்தூர் வழியாகச் செல்கிறது. விழுப்புரம் சென்னையில் இருந்து 160 கி.மி. தொலைவில் உள்ளது.

இறைவர்              : அழகிய நாதர், அபிராமேசுவரர்
இறைவியார்         : முத்தாம்பிகை
தல மரம்              : வன்னி மரம்
தீர்த்தம்               : பம்பை ஆறு, ஆம்பலப்பொய்கை.

மூவர் முதலிகள் வழிபட்டதும், திருப்பதிகங்கள் பெற்றதும் ஆகிய அருமைத் திருத்தலம்.

ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பில்லாமல் படைக்கப்பட்டிருந்தன. தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் சிங்கம், புலி முதலிய மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட்டன. நந்திதேவரும் அவைகள் வேண்டுவது சரியே என்று கூறி பம்பை நதிக்கரையிலுள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேசுவரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறினார். அவ்வாறே பசுக்களும் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றன. ஆக்கள் (பசுக்கள்) பூஜித்த காரணத்தால் இத்தலம் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது. இந்த திரு ஆமாத்தூர் தலத்தை யார் புகழ்ந்து பேசினாலும் அல்லது மற்றவர்கள் புகழக் கேட்டாலும் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று தல புராண வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் உள்ள சிவாலயம் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்புடையது.

இறைவன் கோயிலும், இறைவி கோயிலும் தனித்தனியே சாலையின் இருபுறமும் எதிரெதிரே கோபுரங்களுடன் அமைந்துள்ளன. இறைவன் கோயில் கோபுரம் 7 நிலைகளுடன் கிழக்கு நோக்கி நல்ல சுற்று மதிலுடன் விளங்குகின்றது. அம்பாள் கோவில் கோபுரம் 5 நிலைகளுடன் மேற்கு நோக்கி உள்ளது. சுவாமி கோவில் இராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் எதிரே பெரிய சுதை நந்தி நம்மை வரவேற்கிறது. இறைவன் குடியிருக்கும் ஆலயம் இரண்டு பிரகாரங்கள் கொண்டது. அச்சுதராயர் என்றவர் இந்த ஆலயத் திருப்பணி செய்தவர்களில் முதன்மையானவர். அவரின் சிலை வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கிறது. மேலும் வெளிப் பிராகாரத்தில் உள்ள சித்தி விநாயகர் சந்நிதியும், தனிக் கோயிலாகவுள்ள சண்முகர் சந்நிதியும், ஈசான்ய லிங்கேஸ்வரர் சந்நிதியும் தரிசிக்கத்தக்கது. வெளிப் பிரகார வலம் முடித்து சித்தி விநாயகர் சந்நிதி அருகே உள்ள படிகளேறி உள்பிரகாரத்தை அடையலாம். நேரே தெற்கு நோக்கிய நடராச சபை உள்ளது. உள்பிரகார சுற்றில் 63 மூவர், காலபைரவர், தேவ கோஷ்டத்தில் சனகாதி முனிவர்களுடன் தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், சிவபூஜை விநாயகர் ஆகியோரைக் காணலாம். கருவறை அகழி அமைப்புடன் உள்ளது. மூலவர் வாயிலில் இருபுறங்களிலும் துவார பாலகர் வண்ணச் சுதையில் உள்ளனர். அபிராமேஸ்வரர் என்றும், அழகிய நாதர் என்றும் வழங்கும் இத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு மூர்த்தியாவார். பசுக்கள் பூஜை செய்ததின் அடையாளமாக சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திரனின் பிறை போல் வளைந்து பசுவின் கால் குளம்பின் சுவடு தென்படுகிறது. இறைவன் சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படுகிறார். இரண்டாம் பிரகாரத்தில் இராமர், முருகன், திருமகள் ஆகியோர் சந்நிதிகள் இருக்கின்றன. மதங்க முனிவரால் உருவாக்கப் பெற்ற தீர்த்தம் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது. இதில் நீராடாமல், நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டாலே சிவபுண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.

சாலையில் எதிரே உள்ள அம்பாள் கோபுர வாயில் வழியாக உள்ள நுழைந்தால் கொடிமரம், பலிபீடம், சிம்மம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. உள் வாயிலின் இருபுறமும் வண்ணச் சுதையால் அமைந்த துவாரபாலகியர் உருவங்கள் உள்ளன. அம்பாள் முத்தாம்பிகை மேற்கு நோக்கி அருட்காட்சி தருகிறாள். இந்த அம்பாள் ஒரு வரப்பிரசாதி. அம்பாள் சந்நிதிக்கு நுழையும் போதே வலதுபுறம் மூலையில் வட்டப்பாறை அம்மன் சந்நிதி (அம்பாளின் சாந்நித்யரூபம்) உள்ளது. தற்போது இச் சந்நிதியில் சிவலிங்கமே உள்ளது.

வட்டப் பாறை: அம்பிகை சந்நிதியின் பிரகாரச் சுற்றில் தென் புறம் ஒரு வட்டப் பாறையும், அருகில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் இராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்பு கொண்டபோது இந்த வட்டப் பாறை முன் உடன்பாடு செய்துகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. ஊரில் உள்ள எல்லோரும் வட்டப் பாறையின் மீது கை வைத்து சத்தியம் செய்து தங்கள் வழக்குகளை தீர்த்துக் கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இந்த வட்டப் பாறை ஒரு சிறிய சந்நிதி. இதன் முன் பொய் சொல்வோர் மீளாத துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று ஐதீகமுண்டு.

வட்டப்பாறை அம்மன் சந்நிதி தொடர்பாகச் சொல்லப்படும் ஒரு வரலாறு

அண்ணன் ஒருவன் இளையவனான தன் தம்பியை ஏமாற்றிச் சொத்தினைத் தனக்குச் சேர்த்துக் கொண்டான். வயது வந்து உண்மையறிந்த தம்பி அண்ணனிடம் சென்று தனக்குரிய சொத்தைத் தருமாறு கேட்டான். அண்ணன் மறுக்க, தம்பி பஞ்சாயத்தைக் கூட்டினான். பஞ்சாயத்தார் வட்டப்பாறை அம்பாள் சந்நிதியில் அண்ணனை சத்தியம் செய்து தருமாறு கூறினர். அண்ணன் இதற்கென ஒரு சூழ்ச்சி செய்தான். தம்பியின் சொத்தால் பெற்ற மதிப்பைத் திரட்டிப் பொன் வாங்கி அதைத் தன் கைத்தடியில் பூணுக்குள் மறைத்துக் கொண்டான். அத்தடியுடன் பஞ்சாயத்து நடக்கும் அவைக்கு வந்து, தம்பியிடம் தடியைத் தந்துவிட்டு, அம்பாள் சந்நிதியில் இருகைகளாலும் "‘தன்னிடம் தம்பியின் சொத்து ஏதுமில்லை, எல்லாம் அவனிடமே உள்ளது" என்று சத்தியம் செய்து கொடுத்தான். சூழ்ச்சியறியாத அனைவரும் வேறுவழியின்றி அவனைத் தம்பியுடன் அனுப்பி விட்டனர். தம்பியிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்ட கைத்தடியுடன் சென்ற அண்ணன், இத்தலத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள தும்பூர் நாகம்மன் கோயிலை அடைந்தபோது அம்பாளின் தெய்வ சக்தி தன்னை ஒன்றும் செய்யவில்லை என்று இறுமாப்புக் கொண்டு அம்பாளையும் சேர்த்துத் திட்டினானாம். அப்போது கரும்பாம்பு ஒன்று தோன்றி அவனைக் கடித்துச் சாகடித்தது என்று வரலாறு சொல்லப்படுகிறது. அவ்வாறு கடித்துச் சாகடித்த இடத்தில் இன்றும் பெரிய நாகச்சிலை ஒன்றுள்ளது. இந்நிகழ்ச்சியை மெய்ப்பிக்கும் வகையில் இன்றும் முத்தாம்பிகை அம்பாளின் மார்பில் பாம்பின் வால் சிற்பம் உள்ளது. தரிசிப்போர் சிவாச்சாரியாரிடம் கேட்டு நேரில் காணலாம். அம்பாளுக்குச் செய்த அலங்காரம் செய்யப்பட்ட வெள்ளிக் கவசத்திலும் சர்ப்பத்தின் வால் செதுக்கப்பட்டுள்ளது.

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "சூர்ப் புடைத்தது ஆம் மா தூர் விழத் தடிந்தோன் கணேசனோடும் ஆமாத்தூர் வாழ் மெய் அருட் பிழம்பே" என்று போற்றி உள்ளார்.

கண் கயல் பிணை மானோடு உறவு உண்டு என ------ உயர் காலன் பெண் தனக்கு உள கோலாகலம் இன்று எடுத்து --- மா மாயையில் அன்பு வைத்து அழியாதே ---

பெண்களின் எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக ஆடவரின் உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும்.

இந்த மயக்கத்தினால் வரும் துன்பமானது தீரவேண்டுமானால், அதற்கு ஒரே வழி, இறையருள் பெற்ற அடியார்களின் திருக்கூட்டத்தில் இருப்பது தான். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை.

உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சார, பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும்.

துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறு, பொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர்.

கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்பு உடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே! துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்து, பதைக்கப் பதைக்க வதைக்கும்  கண்ணார்க்கு
இளைத்து, தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே?          
                                                                                           ---  கந்தர் அலங்காரம்.

அரிசன வாடைச் சேர்வை குளித்து,
     பலவித கோலச் சேலை உடுத்திட்டு,
     அலர்குழல் ஓதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே 
அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,
     திருநுதல் நீவி, பாளித பொட்டு இட்டு,
     அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு, ...... அலர்வேளின்

சுரத விநோதப் பார்வை மை இட்டு,
     தருண கலாரத் தோடை தரித்து,
     தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு,.....இளைஞோர்மார்
துறவினர் சோரச் சோர நகைத்து,
     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்
     துயர் அறவே, பொன் பாதம் எனக்குத் ...... தருவாயே.    --- திருப்புகழ்.

மாயா சொரூப முழுச் சமத்திகள்,
     ஓயா உபாய மனப் பசப்பிகள்,
      வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள், ......முநிவோரும்  
மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,
     ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,
     'வாரீர் இரீர்' என் முழுப் புரட்டிகள், ...... வெகுமோகம்

ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,
     ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,
     ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள், ...... பழிபாவம்
ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,
     கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,
     ஆசார ஈன விலைத் தனத்தியர், ...... உறவுஆமோ?   --- திருப்புகழ்.

பெண்ஆகி வந்து, ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை
கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்
புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,
எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!

சீறும் வினை அது பெண் உருவாகி, திரண்டு உருண்டு
கூறும் முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்,
பீறு மலமும், உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு
ஏறும் கரை கண்டிலேன், இறைவா! கச்சி ஏகம்பனே!     --- பட்டினத்தார்.

மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,
பீதிதரும் அல்குல் பெருநகரம், - ஓதில்அதில்
வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை, போரூரைத்
தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.                       --- திருப்போரூர்ச் சந்நிதி முறை.
 
விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார்.

காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். ஆனால் இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை.

காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது.

திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான், அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,

ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க
ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்; ஒளிபெருக
நீடுவார் துகீல் அசைய நிற்பாரும் ஆயினார்.

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. உமக்கு இங்கு என்ன வேலை? போமின்என்று அருளிச் செய்தார்.

ஆதலால் சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள்.

உறு கிஞ்சில் அத்தனை தாள் பேணிட அருள் தாராய் ---

கிஞ்சம் - சிறிது.  கிஞ்சல் - சுருக்கம். கிஞ்சன் - ஏழை.
கிஞ்சில் - சிறிது, கொஞ்சம்.

கிஞ்சித்தேனும் - சிறிதாயினும்.

"நீளநினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்" என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதுவே உண்மை வழிபாடு.

எது எதற்கோ நேரத்தை ஒதுக்கி, வீணில் அலைகின்ற மனிதர்கள் வழிபாடு என்று வரும்போது மட்டும் நேரத்தைக் கணக்கில் கொள்வது மிகவும் வருந்தத்தக்கது. எல்லா நலங்களையும் தருகின்ற இறைவழிபாட்டிற்குக் காலவரையறை செய்து கொள்கின்றனர். ஆனால், சிறிது நேரம் இன்புற்று இருப்பதற்குப் பெருமுயற்சியை மேற்கொள்ளுகின்றனர்.

"வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு, உன் நெறி மறந்து, மால் அங்கு ஆடி மறந்து ஒழிந்தேன்" என்று பாடினார் சுந்தரர் பெருமான். "வைப்பு மாடு என்று, மாணிக்கத்து ஒளி என்று மனத்திடை உருகாதே, செப்பு நேர் முலை மடவரலியர் தங்கள் திறத்திடை நைவேனை" என்றும், "குரவு வார் குழலார் திறத்தே நின்று குடி கெடுகின்றேனை" என்றும் மணிவாசகப் பெருமான் பாடியருளியதையும் கருத்தில் கொள்க.  இந்த நிறையில் தான் மனித வாழ்நாள் கிழிகின்றது.

"வேனில் வேள் மலர்க்கணைக்கும், வெண் நகை, செவ்வாய், கரிய
பால்நலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே,
உன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான், இன்றுபோய்
வான்உளான் காணாய், நீ மாளா வாழ்கின்றாயே."

என்ற மணிவாசகப் பெருமான் பாடினார்.

"சுடர்இலை நெடுவேல் கரும்கணார்க்கு உருகித்
துயர்ந்து நின்று, அலமரும் மனம், நின்
நடம்நவில் சரண பங்கயம் நினைந்து
நைந்து நைந்து உருகும் நாள் உளதோ"

என்றும்,

"பெண்அருங்கலமே, அமுதமே, எனப் பெண்
பேதையர்ப் புகழ்ந்து அவம் திரிவேன்,
பண்உறும் தொடர்பில் பித்த என்கினும், நீ
பயன்தரல் அறிந்து, நிற் புகழேன்"

என்றும் சோணசைமாலையில் சிவப்பிரகாச சுவாமிகள் பாடியுள்ளதையும் நோக்குக.

"தத்தை அங்கு அனையார் தங்கள் மேல் வைத்த
தாயாவினை நூறு ஆயிரம் கூறு இட்டு,
அத்தில் அங்கு ஒரு கூறு உன்பால் வைத்தவருக்கு
அமர் உலகு அளிக்கும் நின் பெருமை.."

என்னும் திருவிசைப்பாப் பாடல் வரிகளையும் நோக்குக.

இறைவன் திருவருளால் பெற்றது இந்த அருமையான உடம்பு. அதனைக் கொண்டு நல்வழியில் வாழ்ந்து, இறையருளைப் பெற வேண்டுமானால், இறைவன் பொருள்சேர் புகழைப் பேச வேண்டும். ஆனால்,  பொருள் கருதி அது உள்ளவர்களைப் புகழ்ந்து பேசியும், இன்பம் கருதி, பொருள் கொண்டு, அதைத் தரும் பொதுமகளிரைப் புகழ்ந்து கொண்டும் வாழ்நாளை வீணாள் ஆக்கி, முடிவில் பயனில்லாமல் இறப்பில் படுகிறோம். பிறகு இந்த உடம்பு என்னாகும் என்று சுவாமிகள் கவலைப் படுகின்றார். நாமும் படவேண்டும்.

"முப்போதும் அன்னம் புசிக்கவும், தூங்கவும், மோகத்தினால்
செப்புஓது இளமுலையாருடன் சேரவும், சீவன்விடும்
அப்போது கண்கலக்கப் படவும் வைத்தாய், ஐயனே,
எப்போது காணவல்லேன், திருக்காளத்தி ஈச்சுரனே".  --- பட்டினத்தார்.

காலை, பகல், இரவு என்னும் மூன்று வேளையும், எப்போதும் தூராத குழியாகிய வயிற்றை நிரப்புதற்கு சோற்றை உண்ணவும்,  உண்டபின் உறங்கவும், காம மயக்கத்தால் செப்புக் கலசங்கள் போலும் தனங்களை உடைய இளமாதர்களுடன் புணரவும், உயிர் நீங்குகின்ற காலத்திலே இவற்றையெல்லாம் எண்ணி வருத்தப்படவும் வைத்தாய். சுவாமீ, திருக்காளத்தியில் எழுந்தருளிய பெருமானே, உமது திருவடியை எப்போது காணத் தக்கவன் ஆவேன்.

"இரைக்கே இரவும் பகலும் திரிந்து இங்கு இளைத்து, மின்னார்
அரைக்கே அவலக் குழியருகே அசும்பு ஆர்ந்து ஒழுகும்
புரைக்கே உழலும் தமியேனை ஆண்டு அருள், பொன்முகலிக்
கரைக்கே கல்லால நிழல்கீழ் அமர்ந்துஅருள் காளத்தியே".     ---  பட்டினத்தார்.

சொர்ணமுகி என்னும் பெயர் அமைந்த பொன்முகலி ஆற்றின் கரையிலே, கல்லால மரத்தின் நிழலிலே கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள திருக்காளத்தி நாதா! வயிறு புடைக்க உண்பதற்கே இரவும் பகலும் உழன்று, இளைத்து, மாதரின் கடிதடத்திலே உள்ள துன்பத்திற்கு இடமான வழுவழுப்பு நீர் பொருந்திக் கசிகின்ற பள்ளத்திலே ஆசை வைத்து உழலும், அடியேனை ஆண்டு அருள் புரிவாயாக.

, இந்தக் கருத்துகளை எல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டு, இறைவன் தந்த அருமையான இந்த உடம்பினைச் சுமந்து வாழவேண்டும்.

சரண கமல ஆலயத்தை அரைநிமிஷ நேரம் மட்டில்
     தவமுறை தியானம் வைக்க ...... அறியாத
சட கசட மூட மட்டி, பவ வினையிலே சனித்த
     தமியன், மிடியால் மயக்கம் ...... உறுவேனோ?        --- திருப்புகழ்.

நீறு ஆர்த்த மேனி உரோமம் சிலிர்த்து, உளம் நெக்குநெக்குச்
சேறாய்க் கசிந்து கசிந்தே உருகி, நின் சீரடிக்கே
மாறாத் தியானம் உற்று ஆனந்தம் மேற்கொண்டு, மார்பில் கண்ணீர்
ஆறாய்ப் பெருகக் கிடப்பது என்றோ? கயிலாயத்தனே!   ---  பட்டினத்தார்.

கருத்துரை

முருகா! விலைமாதர் வழப்பட்டு அழியாமல், தேவரீரது திருவடிகளைச் சிறிதாவது வழிபட்டு உய்ய அருள் புரிவாய்.No comments:

Post a Comment

சத்தியம் வத, தர்மம் சர.

  வாய்மையே பேசு - அறத்தைச் செய் -----        சத்யம் வத ;  தர்மம் சர ;  என்பவை வேதவாக்கியங்கள். வாய்மையாக ஒழுகுவதைத் தனது கடமையாகக் கொள்ளவேண்...