திருக் கோட்டூர்

திருக் கோட்டூர்

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மன்னார்குடியில் இருந்து தென்கிழக்கே திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது. மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. அருகில் திருக்களர், திருவெண்துறை ஆகிய பாடல் திருமுறைத் திருத்தலங்கள் உள்ளன.

இறைவர்               : கொழுந்தீசர், சமீவனேசர்

இறைவியார்           : தேனார்மொழியாள்

தல மரம்                : வன்னி

தீர்த்தம்                  : அமுதம், முள்ளியாறு, சிவகங்கை பிரமதீர்த்தம்,  இந்திர தீர்த்தம்,                                                சிவதீர்த்தம், விசுவகர்ம தீர்த்தம்,  அரம்பை தீர்த்தம்,                                                   மண்டை தீர்த்தம்  என 9 தீர்த்தங்கள்.

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - நீலமார்தரு கண்டனே.

     தல வரலாறு: விருத்திராசுரன் என்ற அரக்கன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். இந்திரன் அவனை வெல்வதற்கான வழியைக் கூறும்படி பிரம்மாவிடம் வேண்டினான். ததீசி என்ற முனிவரின் முதுகெலும்பை பெற்று அதை வஜ்ராயுதமாக்கி அதன் மூலம் மட்டுமே அரக்கனை கொல்லமுடியும் என்று பிரம்மா இந்திரனிடம் கூறினார். இந்திரனும் அதன்படி முனிவரைக் கொன்று அவரது முதுகெலும்பை வஜ்ராயுதமாக்கி விருத்திராசுரனனைக் கொன்றான். முனிவரை கொன்று முதுகெலும்பை பெற்றதால், இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷத்தை போக்கிக் கொள்ள தேவகுருவான பிரகஸ்பதியை நாடினான். அவரின் ஆலோசனைப்படி இந்திரன் பூவுலகம் வந்து வன்னிமரத்தின் அடியில் இத்தலத்தில் இருக்கும் சிவலிங்கத்தை ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதனால் அபிஷேகம் செய்து வழிபட்டான். சிவபெருமான் அருளால் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கப் பெற்றான். இந்திரன் பூஜித்ததால் இத்தலம் இந்திரபுரம் என்றும் அழைக்கப்பட்டது. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது. தனது தந்தத்தால் பூமியில் கோடு கிழித்ததால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது. இந்திரன் பூஜித்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால், இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்களின் பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

         ஆலய அமைப்பு: கோட்டூர் இரண்டு பகுதிகளாக மேலக்கோட்டூர் என்றும், கீழக்கோட்டூர் என்றும் உள்ளது. மேலக்கோட்டூரிலுள்ள கோயிலே பாடல் பெற்றது. கோயிலுக்கு முதல் கட்டமாக ஒரு துழைவாயிலும், அதையடுத்து மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரமும் உள்ளது. இரண்டு பிரகாரத்துடன் விளங்கும் இக்கோயிலில் முதல் வாயில் வழியாக உள்ளே புழைந்ததும் கவசமிட்ட கொடி மரமும், பலிபீடமும் நந்தியும் உள்ளன. உள்பிரகாரத்தில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை கோஷ்ட தெய்வங்களாக நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. அம்பிகை தேனாம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நின்ற திருக்கோலத்தில் அம்பிகை காட்சி தருகிறாள். மாசி மகத்தன்று இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால், லிங்கத்தில் அர்த்தநாரீசுர வடிவம் தெரிவதை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

         தலத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது இங்குள்ள ரம்பையின் உருவம். ஒரு சமயம் தேவலோகத்தில் இந்திரனின் சபையில் நடனம் ஆடிய பிறகு களைப்பால் பூஞ்சோலையில் ரம்பை ஆடை விலகியது கூட அறியாமல் படுத்து உறங்க, அவ்வழி வந்த நாரதர் ரம்பையின் நிலைகண்டு கோபித்து அவளை பூவுலகில் பிறக்கும்படி சபித்தார். நாரதர் சாபத்திலிருந்து விடுபட, அவரின் அறிவுரைப்படி ரம்பை இத்தலத்தில் ஈசனை நோக்கி இடது கால் ஊன்றி, வலது கால் மடித்து, உள்ளங்காலில் இடது கையை வைத்து, வலது கையை தலைமேல் வைத்தபடி அக்னியில் நின்று தவம் செய்தாள். ரம்பைக்கு தரிசனம் தந்த இறைவன் வரங்கள் பல தந்து மறைந்தார். அவள் முன்பை விடவும் அதிக ஈடுபாட்டுடன் சிவனை அனுதினமும் பூஜித்து வந்தாள். தவம் செய்த அமைப்புடன் காணும் ரம்பையின் உருவச்சிலை காணவேண்டிய ஒன்று. உமாமகேசுவரர், அற்புதமான அர்த்தநாரீசுவரர் ஆகியோரும் தரிசிக்க வேண்டிவர்கள்..

         இக்கோயிலினுள் உள்ள அமுதக் கிணற்றோடு முள்ளியாறு, சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவ தீர்த்தம், விஸ்வகர்ம தீர்த்தம், ரம்பை தீர்த்தம் மற்றும் மண்டை தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் இத்தல தீர்த்தங்களாக உள்ளன. தல விருட்சமாக வன்னி மரம் திகழ்கிறது.

         காலை 6 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில்,  "கொண்டல் என மன் கோட்டு ஊர் சோலை வளர் கோட்டூர் தண்பழனத் தென்கோட்டூர் தேவசிகாமணியே" என்று போற்றி உள்ளார்.

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 574
நம்பர்மகிழ் திருஆரூர் வணங்கிப் போந்து,
         நலங்கொள்திருக் காறாயில் நண்ணி ஏத்தி,
பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றி,
         பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி,
உம்பர்பிரான் கைச்சினமும் பரவி, தெங்கூர்,
         ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றி,
செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தி,
         திருமலிவெண் துறைதொழுவான் சென்று சேர்ந்தார்.

         பொழிப்புரை : சிவபெருமான் மகிழும் திருவாரூரை வணங்கிச் சென்று, நன்மைகொண்ட திருகாறாயிலைச் சேர்ந்து வணங்கி, பசுமையான நீரை உடைய மென்மையான வயல்கள் சூழ்ந்த திருத்தேவூரினை அணைந்து போற்றி, இறைவரின் திருநெல்லிக்காவைப் பணிந்து திருப்பதிகம் பாடிச் சென்று, தேவதேவரின் கைச்சினமும் போற்றி, தெங்கூரும் மிக்க புகழையுடைய திருக்கொள்ளிக்காடும் போற்றி, மேற்சென்று, செம்பொன்னால் அழகுபடுத்தப்பட்ட மதில்களையுடைய திருக்கோட்டூரினை வணங்கிச் சென்று, திருமலிகின்ற திருவெண்துறையினைத் தொழும் பொருட்டுச் சென்று சேர்ந்தார்.

         குறிப்புரை : இத் திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

திருக்காறாயில் -      நீரானே (தி.2 ப.15) - இந்தளம்.

திருத்தேவூர் -         1. பண்ணிலாவிய (தி.2 ப.82) - காந்தாரம். -
                                 2. காடுபயில் (தி.3 ப.74) - சாதாரி.

திருநெல்லிக்கா -      அறத்தாலுயிர் (தி.2 ப.19) - இந்தளம்.

திருக்கைச்சினம் -      தையலோர் (தி.2 ப.45) - சீகாமரம்.

திருத்தெங்கூர் -        புரைசெய் (தி.2 ப.93) - பியந்தைக்காந்தாரம்.

திருக்கொள்ளிக்காடு - நிணம்படு (தி.3 ப.16) - காந்தாரபஞ்சமம்.

திருக்கோட்டூர் -       நீலமார்தரு (தி.2 ப.109) - நட்டராகம்.


2.109    திருக்கோட்டூர்               பண் - நட்டராகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
நீலம் ஆர்தரு கண்டனே, நெற்றியோர்
         கண்ணனே, ஒற்றைவிடைச்
சூலம் ஆர் தரு கையனே, துன்றுபைம்
         பொழில்கள் சூழ்ந்துஅழகாய
கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நல்
         கொழுந்தே என்று எழுவார்கள்
சால நீள்தலம் அதன்இடைப் புகழ்மிகத்
         தாங்குவர் பாங்காலே.

         பொழிப்புரை :நீலகண்டனே, நெற்றிக்கண்ணனே, ஒற்றைவிடை மீது ஏறி வருபவனே, முத்தலைச்சூலம் ஏந்திய கையனே, செறிந்த பொழில்களால் சூழப்பட்டதும் அழகிய மலர்களின் மணம் கமழ்வது மாகிய கோட்டூரில் விளங்கும் கொழுந்தே என்றுகூறி அவனை வணங்க எழுபவர் மிகப்பெரிதாய சிவலோகத்தில் பெருமானுக்கு அருகில் புகழ் பெறத் தங்குவர் .


பாடல் எண் : 2
பங்க யம்மலர்ச் சீறடிப் பஞ்சுஉறு
         மெல்விரல் அரவுஅல்குல்
மங்கை மார்பலர் மயில்குயில் கிளிஎன
         மிழற்றிய மொழியார்,மென்
கொங்கை யார்குழாம் குணலைசெய், கோட்டூர்நல்      
      கொழுந்தே, என்று எழுவார்கள்
சங்கை ஒன்றுஇலர் ஆகிச்சங் கரன்திரு
         அருள்பெறல் எளிதாமே.

         பொழிப்புரை :தாமரைமலர் போன்ற அழகிய சிறியகால்களையும் பஞ்சுபோன்ற மென்மையான விரல்களையும் , அரவு போன்ற அல்குலையும் உடையவரும் . மயில் குயில் கிளி போன்ற மொழியினரும் , மென்மையான தனங்களையுடையாருமாகிய மங்கையர் குணலைக்கூத்து ஆடிமகிழும் கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே என்று கூறிச் சங்கரனை வணங்க எழுவார் ஐயமின்றி அவன் திருவருளைப் பெறுவர் .


பாடல் எண் : 3
நம்ப னார்,நல மலர்கொடு தொழுதுஎழும்
         அடியவர் தமக்கெல்லாம்
செம்பொன் ஆர்தரும் எழில்திகழ் முலையவர்
         செல்வமல் கியநல்ல
கொம்பு அனார்,தொழுது ஆடிய கோட்டூர்நல்
         கொழுந்தே என்று எழுவார்கள்
அம்பொன் ஆர்தரும் உலகினில் அமரரோடு
         அமர்ந்துஇனிது இருப்பாரே.

         பொழிப்புரை :நல்ல மலர்களைக்கொண்டு தொழுது எழும் அடியவர்கட்கு நம்பனாரும் , செம்பொன்போன்ற மேனியையும் அழகிய நகில்களையும் உடைய பூங்கொம்பு போன்ற மகளிர் ஆடிப் பாடித் தொழுபவரும் , செம்மைமல்கிய கோட்டூரில் விளங்குபவரு மாகிய இறைவரைக் கொழுந்தீசரே என்று வணங்கிட எழுவார் பொன்னுலகில் தேவரோடும் இனிதிருப்பர் .


பாடல் எண் : 4
பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா
         மாங்கனி பயில்வாய
கலவ மஞ்ஞைகள் நிலவுசொல் கிள்ளைகள்
         அன்னஞ்சேர்ந்து அழகாய
குலவும் நீள்வயல் கயல்உகள் கோட்டூர்நல்
         கொழுந்தே, என்று எழுவார்கள்
நிலவு செல்வத்தர் ஆகிநீள் நிலத்துஇடை
         நீடிய புகழாரே.

         பொழிப்புரை :பலாச்சுளை , மாங்கனி முதலிய தீங்கனிகளையும் தேனையும் உண்ட தோகைமயில்களும் கிளிகளும் அன்னங்களும் விளையாடும் மரஞ்செடி கொடிகள் பலவும் நிறைந்த பொழில் களையும் , கயல்கள் உகளும் அழகிய வயல்களையும் உடைய கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே என்று போற்றியவர் அழியாத செல்வமுடையவராய் இவ்வுலகில் புகழோடு வாழ்வர் .


பாடல் எண் : 5
உருகு வார்உள்ளத்து ஒண்சுடர், தனக்குஎன்றும்
         அன்பர்ஆம் அடியார்கள்
பருகும் ஆரமுது, எனநின்று பரிவொடு
         பத்திசெய்து, எத்திசையும்
குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நல்
         கொழுந்தே, என்று எழுவார்கள்,
அருகு சேர்தரு வினைகளும் அகலும்,போய்
         அவன்அருள் பெறலாமே.

         பொழிப்புரை :உள்ளம் உருகுவார்க்கு ஒண்சுடராகவும் , என்றும் தன்மேல் அன்புடையடியார்க்கு ஆரமுதாகவும் விளங்குபவனே என்றும் கூறிப் பரிவும் பக்தியும் செய்து , குருகுகள் வாழும் கோட்டூர் நற்கொழுந்தே என்று விளித்து வழிபடப்புகும் அடியவர்களின் வினைகள் நீங்கும் . அவனது திருவருளைப் பெறலாம் .


பாடல் எண் : 6
துன்று வார்சடைத் தூமதி மத்தமும்
         துன்எருக்கு ஆர்வன்னி,
பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம்
         புலிஉரி உடைஆடை
கொன்றை பொன்என மலர்தரு கோட்டூர்நல்
         கொழுந்தே, என்று எழுவாரை
என்றும் ஏத்துவார்க்து இடர்இலை கேடுஇலை
         ஏதம்வந்து அடையாவே.

         பொழிப்புரை :நெருங்கி நீண்டு வளர்ந்த சடைமுடியில் பிறைமதி , ஊமத்தை , வெள்எருக்கமலர் , வன்னியிலை , ஆகியவற்றைச் சூடியும் , தலைமாலைகளை மேனியில் அணிந்தும் , கையில் கபாலத்தை உண்கலனாக ஏந்தியும் , புலித்தோலை இடையில் உடுத்தும் , கொன்றை மரங்கள் பொன்போல மலரும் கோட்டூரில் எழுந்தருளி விளங்கும் கொழுந்தீசரின் திருப்பெயரை விளித்து அவரை வழிபட எழும் அடிய வரை என்றும் வழிபடுவார்க்கு இடரும் , கேடும் ஏதமும் இல்லை .


பாடல் எண் : 7
மாட மாளிகை கோபுரம் கூடங்கள்
         மணிஅரங்கு அணிசாலை
பாடு சூழ்மதிம் பைம்பொன்செய் மண்டபம்
         பரிசொடு பயில்வுஆய
கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நல்
         கொழுந்தே, என்று எழுவார்கள்
கேடு அதுஒன்றி இலர் ஆகிநல் உலகினில்
         கெழுவுவர் புகழாலே.

         பொழிப்புரை :மாடமாளிகை , கூடகோபுரம் , மணிஅரங்கம் , அழகியசாலை , புகழ்தற்குரியமதில் , பொன் மண்டபம் ஆகியவற்றோடு , அழகிய பொழில்கள் சூழ்ந்த கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே , என்று எழுவார் கேடில்லாதவராய் உலகெலாம் விளங்கிய புகழ் உடையவராவர் .


பாடல் எண் : 8
ஒளிகொள் வாள்எயிற்று அரக்கன்அவ் உயர்வரை
         எடுத்தலும் உமைஅஞ்சி,
சுளிய ஊன்றலும் சோர்ந்திட, வாளொடு
         நாள்அவற்கு அருள்செய்த
குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நல்     
      கொழுந்தினைத் தொழுவார்கள்
தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறும்
         தவம்உடை யவர்தாமே.

         பொழிப்புரை :ஒளியும் கூர்மையுமுடைய பற்களைக் கொண்ட இராவணன் கயிலைமலையை எடுத்தபோது , உமையம்மை அஞ்ச , இறைவன் தனது திருக்கால் பெருவிரலைச் சிறிதே சுளித்து ஊன்றிய அளவில் அவ்விராவணன் நெரிந்து வருந்தி வேண்ட , அவனுக்கு வாளும் நாளும் அருள் செய்தருளிய , பொழில் சூழ்ந்த கோட்டூர்க் கொழுந்தீசனைத் தொழுவார் இறைவன் திருவடித் தாமரைகளை அடையும் தவமுடையவராவர் .


பாடல் எண் : 9
பாடி ஆடும்மெய்ப் பத்தர்கட்கு அருள்செயும்
         முத்தினை, பவளத்தை,
தேடி மால்அயன் காணஒண் ணாத,அத்
         திருவினை, தெரிவைமார்
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர்நல்
         கொழுந்தே என்று எழுவார்கள்
நீடு செல்வத்தர் ஆகிஇவ் உலகினில்
         நிகழ்தரு புகழாரே.

         பொழிப்புரை :பாடி ஆடுகின்ற உண்மை அடியார்க்கு அருளும் முத்தும் பவளமும் போன்றவனை , திருமாலும் நான்முகனும் தேடி யறிய முடியாத திருவை , மகளிரும் ஆடவரும் கூடித்தொழும் கோட்டூரில் விளங்கும் கொழுந்தை வழிபட எழுபவர் நீடிய செல்வ மும் , உலகெலாம் நிகழும் புகழும் அடைவர் .


பாடல் எண் : 10
கோணல் வெண்பிறைச் சடையனை, கோட்டூர்நல்  
       கொழுந்தினை, செழுந்திரளை,
பூணல் செய்துஅடி போற்றுமின், பொய்இலா
         மெய்யன்நல் அருள்என்றும்
காணல் ஒன்றுஇலாக் கார்அமண் தேரர்குண்
         டாக்கர்சொல் கருதாதே,
பேணல் செய்துஅர னைத்தொழும் அடியவர்
         பெருமையைப் பெறுவாரே.

         பொழிப்புரை :வளைந்த வெண்பிறையை அணிந்த சடைமுடியராகிய கோட்டூரில் விளங்கும் கொழுந்தீசராகிய , செழுமை யின் திரட்சியை , மலர்களால் அலங்கரித்து அவர்தம் திருவடிகளைப் போற்றுமின் . பொய்யில்லாத மெய்யராகிய அவர்தம் நல்லவருளைக் காணும் நல்லூழில்லாத சமண புத்தர்களின் உரைகளைக்கேளாது அவ்விறைவரை விரும்பித்தொழும் அடியவர் பெருமையைப் பெறுவர் .

  
பாடல் எண் : 11
பந்து உலாவிரல் பவளவாய்த் தேன்மொழிப்
         பாவையோடு உருஆரும்
கொந்து உலாமலர் விரிபொழில் கோட்டூர்நல்
         கொழுந்தினை, செழும்பவளம்
வந்து உலாவிய காழியுள் ஞானசம்
         பந்தன்வாய்ந்து உரைசெய்த
சந்து உலாந்தமிழ் மாலைகள் வல்லவர்
         தாங்குவர் புகழாலே.

         பொழிப்புரை :பந்தாடும் மெல் விரலையும் , பவள வாயையும் தேன்மொழியையும் உடைய உமையம்மையோடு அழகிய மலர்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட கோட்டூரில் விளங்கும் கொழுந்தீசரை , கடல் அலைகள் பவளங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் காழியில் தோன்றிய திருஞானசம்பந்தர் போற்றிப் பாடிய இச்செந்தமிழ் மாலையை ஓதவல்லவர் புகழ்பெறுவர்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

சத்தியம் வத, தர்மம் சர.

  வாய்மையே பேசு - அறத்தைச் செய் -----        சத்யம் வத ;  தர்மம் சர ;  என்பவை வேதவாக்கியங்கள். வாய்மையாக ஒழுகுவதைத் தனது கடமையாகக் கொள்ளவேண்...