திருத் தண்டலை நீள்நெறி

திருத் தண்டலை நீள்நெறி
(தண்டலைச்சேரி, தண்டலச்சேரி)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள், "தண்டலைச்சேரி" என்றும் "தண்டலச்சேரி" என்றும் வழங்குகின்றனர். திருக்கோயிலின் பெயர் நீள்நெறி ஆகும்.

     திருத்துறைப்பூண்டியிலிருந்து 3 கி. மீ. தொலைவு. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பேருந்து வழியில் வருவோர் கோயில் வாயிலில் இறங்கலாம். இத்தலத்திற்கு பக்கத்தில் 'மணலி ' புகைவண்டி நிலையம் உள்ளது.


இறைவர்               : திரபுத்தீசுவரர்,  நீள்நெறிநாதர்.

இறைவியார்           : ஞானாம்பிகை.

தல மரம்                : குருந்தை

தீர்த்தம்                  : ஓமக தீர்த்தம் (ஞானசித்தி விநாயகர்
                                               கோயிலின் எதிரில் நீராடல் சிறப்பு.)

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் - விரும்பும் திங்களும்

          இத்தல இறைவருக்குத்தான் அரிவாட்டாய நாயனார் தினந்தோறும் செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் படைத்து வந்தார்; இவ்விறைவரே நாயனாருக்கு முக்தி கொடுத்தருளியவர்.

          அரிவாட்டாய நாயனார் பிறந்த ஊரான 'கணமங்கலம்' தண்டலை நீள்நெறிக்குப் பக்கத்தில் உள்ளது. இதை மக்கள் 'கணமங்கலத்திடல்' என்றும், 'கண்ணந்தங்குடி' என்றும் வழங்குகின்றனர். கணமங்கலத்தில் திருக்கோயில் இல்லை. அரிவாட்டாயனார் தினந்தோறும் கணமங்கலத்திலிருந்து (கண்ணந்தங்குடி) தண்டலைநீள்நெறித் திருக்கோயிலுக்கு வயல் வெளியில் நடந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

          இக்கோயில் கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயிலாகும்; அம் மாடக்கோயில் அழிந்து விடவே, பிற்காலத்தில் தேவகோட்டை ராம. அருஅரு. இராமநாதன் செட்டியார் அவர்கள் இப்போதுள்ள கற்கோயிலைக் கட்டித் தந்துள்ளார்கள்.

          கோயில் கற்றளி; விமானங்கள் சுதை வேலைபாடுடையவை.

          இக்கோயிலில் வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் பூசித்த சிவலிங்கங்கள் உள்ளன.

          விநாயகரை வணங்கி உட்செல்லும்போது, மேற்புறத்தில் இருமருங்கும் அரிவாட்டாய நாயனார் - அவர் மனைவி அரிசியும் மாவடுவும் கொட்டுவது இறைவனின் திருக்கரம் வெளிப்பட்டு நாயனாரைத் தடுப்பது, நாயனாருக்கும் அவர்தம் மனைவியாருக்கும் இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தருவது முதலியவை சிற்பங்களாக கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "கடிக்குளத்தின் வண்டு அலைக்க, தேன் அலரின் வார்ந்து ஓர் தடம் ஆக்கும் தண்டலைக்குள் நீள்நெறிச் சிந்தாமணியே" என்று போற்றி உள்ளார்.

          அரிவாள்தாய நாயனார் குருபூசை "அறுப்புத் திருவிழா"வாகப் பெருவிழாவில் உரிய முறைப்படி நடத்தப்பெறுகிறது.

          அவதாரத் தலம்   : கணமங்கலம் (கண்ணத்தங்குடி - இது தண்டலை நீள்நெறிக்கு அருகில்  உள்ள ஊர்.)

          வழிபாடு          : இலிங்க வழிபாடு.

          முத்தித் தலம்     : கணமங்கலம் - அல்லது தண்டலைநீள்நெறி (கணமங்கலத்திற்கும்  தண்டலைநீள்நெறிக்கும் இடையில் உள்ள  வயல் வெளியில் நீள்நெறி இறைவர்  நாயனாருக்குக் காட்சிக் கொடுத்து அருளியுள்ளார்.)

          குருபூசை நாள்    : தை - திருவாதிரை.

அரிவாள்தாய நாயனார் வரலாறு

         சோழ நாட்டிலே கணமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர்.  அவர் பெயர் தாயனார். வேளாண்குலத் தலைவர். செல்வத்தில் சிறந்தவர். செந்நெல் அரிசியையும், செங்கீரையையும், மாவடுவையும் சிவபெருமானுக்குத் திருவமுது செய்விப்பது அவருடைய திருத்தொண்டு.

         தாயனாரின் செல்வ வளங்களை எல்லாம் மாற்றச் சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். அவருடைய செல்வங்கள் எல்லாம் யானை உண்ட விளங்கனி போல ஒழிந்தன. ஒழிந்தும், நாயனார் தமது திருத்தொண்டில் இருந்து வழுவினாரில்லை.

         தாயனார் கூலிக்கு நெல் அறுக்கப் புகுந்தார். அவர் செந்நெல் அறுத்துக் கூலியாகப் பெறும் செந்நெல்லை ஆண்டவனுக்கு அமுதாக்குவார். கார் நெல் அறுத்துக் கூலியாகப் பெறும் கார்நெல்லைத் தாம் உண்பார்.  நாயனார் இந் நெறியில் ஒழுகும் நாளில், அவர் செல்லும் வயல்கள் எல்லாம் செந்நெல்லாகவே காணப்பட்டன. அன்பில் சிறந்த நாயனார், "இது நான் செய்த புண்ணியம்" என்று மகிழ்ந்து, பெறும் செந்நெல்லை எல்லாம் ஆண்டவனுக்காகவே உதவித் தாம் பட்டினி கிடக்கலானார்.

         தாயனாரின் அருமை மனைவியார், வீட்டுக் கொல்லையில் உள்ள இலைக்கறிகளைக் கொய்து அவருக்குப் படைக்கத் தொடங்கினார். அன்பர் அதை உண்டு கழிப்பார். கொல்லையில் இலைக்கறிகளும் அற்றுப் போயின. அம்மையார் நீர் வார்ப்பார்.  நாயனார் அதையும் அருந்தித் தமது திருத்தொண்டைச் செய்து வந்தார்.

         ஒருநாள் தாயனார் வழக்கப்படி ஆண்டவனுக்கு அமுதூட்டச் செந்நெல் அரிசியையும், செங்கீரையையும், மாவடுவையும் கூடையில் வைத்துச் சுமந்து செல்கிறார். அவர் பின்னே, மனைவியார் பஞ்சகவ்வியத்தை ஏந்திச் செல்கிறார். உணவின்றி நலிவுற்று இருந்த தாயனார், கால் தளர்ந்து தவறி விழலானார்.  அப்போது அம்மையார் பஞ்சகவ்வியத்தை மூடியிருந்த கையால் நாயகரை அணைக்க முயன்றார். முயன்றும் பயன் விளையவில்லை. செந்நெல் முதலிய யாவும் நிலவெடிப்பில் சிந்திவிட்டன. தாயனார், "இனி ஏன் கோயிலுக்குப் போக வேண்டும்? செந்நெல் முதலியவற்றை ஆண்டவனுக்கு அமுது செய்விக்கும் பேறு பெற்றேனில்லை" என்று அரிவாளை எடுத்துத் தமது ஊட்டியை அறுக்கலுற்றார். அச் சமயத்தில், அன்பனார் கையைத் தடுக்க, எள்ளுக்குள் எண்ணெய் போல எங்கும் நீக்கம் அற இருந்தருளும் இறைவரது வீசிய கையும், அவர் மாவடுவைக் கடிப்பதில் இருந்து எழும் "விடேல் விடேல்" என்னும் ஓசையும் வெடிப்பில் இருந்து எழுந்தன. ஆண்டவன் திருக்கை அடியவரின் கையைப் பற்றியது. தாயனார் வெருக் கொண்டார். ஊறு நீங்கியது. தாயனார் ஆண்டவன் அருளைப் போற்றினார். சிவபெருமான் விடைமேல் தோன்றி, "நீ புரிந்த செய்கை நன்று. உன் மனைவியுடன் என்றும் நமது உலகில் வாழ்வாயாக" என்று அருள் செய்து எழுந்தருளினார். அவருடன் தாயனாரும் அவர் மனைவியாரும் சென்று பெறுதற்கு அரிய பேற்றைப் பெற்றனர்.  தாயனார் தமது ஊட்டியை அறுக்க அரிவாள் பூட்டியமையால், அவர் அரிவாள்தாயர் என்றும் தூய நாமம் பெறலானார்.

     இத் திருத்தல இறைவரைப் பாட்டுடைத் தலைவராக அமைத்து, படிக்காசுப் புரவர் பாடி அருளிய "தண்டலையார் சதகம்" என்னும் நூல் படித்துப் பயன்பெறத் தக்கது.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 575
மற்றுஅவ்வூர் தொழுதுஏத்தி மகிழ்ந்து பாடி,
         மால்அயனுக்கு அரியபிரான் மருவும் தானம்
பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடி,
         பரவுதிருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர்வாழ் தண்டலைநீள் நெறிஉள் ளிட்ட
         கனகமதில் திருக்களரும் கருதார் வேள்வி
செற்றவர்சேர் பதிபிறவும் சென்று போற்றி,
         திருமறைக்காட்டுஅதன் மருங்கு சேர்ந்தார் அன்றே.

         பொழிப்புரை : திருவெண்துறை என்ற நகரத்தை வணங்கிப் போற்றி மகிழ்ந்து பதிகம்பாடி, நான்முகன் திருமால் இவர்களுக்கு அறிவதற்கு அரியவரான இறைவர் வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் சென்று போற்றிப் பதிகங்களும் பாடிப் பரவும் தொண்டர் கூட்டம் அருகில் வர, கற்றவர் வாழ்வதற்கு இடமான திருத்தண்டலை நீள்நெறி முதலான திருப்பதிகளும், பொன்மதிலை உடைய திருக்களரும், பகைவரின் வேள்வியை அழித்த இறைவர் எழுந்தருளிய மற்றப் பதிகளையும் சென்று போற்றி, அதுபொழுதே திருமறைக்காடு என்ற பதியின் அருகே சேர்ந்தனர்.

         திருவெண்துறையில் அருளிய பதிகம், `ஆதியன்' (தி.3 ப.61) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும் `மருவும் தானம் பற்பலவும்' என்பது குன்றியூர், திருச்சிற்றேமம், மணலி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.

         திருச்சிற்றேமத்தில் அருளிய பதிகம், `நிறை வெண்திங்கள்\' (தி.3 ப.42) எனத் தொடங்கும் கொல்லிக் கௌவாணப் பண்ணிலமைந்த பதிகமாகும். மற்ற இரண்டு பதிகளில் அருளிய பதிகங்கள் கிடைத்தில.

         திருத்தண்டலை நீள்நெறியில் அருளிய பதிகம் `விரும்பும் திங்களும்' (தி.3 ப.50) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணில் அமைந்ததாகும்.

         திருக்களரில் அருளிய பதிகம் `நீருளார்' (தி.2 ப.51) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும். பதி பிறவும் என்பதால், மங்களம், திருமுகத்தலை, களப்பாள் தகட்டூர், திருக்குன்றளூர், திருக்கடிக்குளம், திருஇடும்பாவனம், திருஉசாத்தானம், முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இவற்றில் முதல் ஐந்து பதிகட்குப் பதிகங்கள் கிடைத்திலது. மற்ற மூன்று பதிகளை வணங்கிய செய்தியைப் பின்னர் 623, 624ஆம் பாடல்களில் ஆசிரியர் சேக்கிழார் குறிக்கின்றார்.


3. 050    திருத்தண்டலை நீணெறி             பண் - கௌசிகம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே,
சுரும்பும் தும்பியும் சூழ்சடை யார்க்குஇடம்
கரும்பும் செந்நெலும் காய்கமு கின்வளம்
நெருங்கும் தண்டலை நீணெறி காண்மினே.

         பொழிப்புரை : விரும்பப்படுகின்ற சந்திரனையும், கங்கையையும் தாங்கி, சுரும்பு, தும்பி ரீங்காரம் செய்யும் மலர்களைச் சூடியுள்ள சடை முடியையுடைய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது கரும்பும், செந்நெலும், பாக்கு மரங்களும் நிறைந்து வளம் கொழிக்கும் திருத் தண்டலை நீள்நெறியாகும். இத்திருத்தலத்தைத் தரிசித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.


பாடல் எண் : 2
இகழும் காலன் இதயத்தும், என்னுளும்
திகழுஞ் சேவடி யான்திருந் தும்மிடம்
புகழும் பூமக ளும்புணர் பூசுரர்
நிகழும் தண்டலை நீணெறி காண்மினே.

         பொழிப்புரை : சிவபக்தரான மார்க்கண்டேயரை மதியாது இகழ்ந்த காலனின் இதயத்துள்ளும், என்னுள்ளும் திகழும், சிவந்த திருவடிகளையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், புகழுடைய திருமகளும், அந்தணர்களும் விளங்கும் திருத்தண்டலை நீள்நெறியாகும். அத்திருத்தலத்தைத் தரிசித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.


பாடல் எண் : 3
பரந்த நீலப் படர்எரி வல்விடம்
கரந்த கண்டத்தி னான்கரு தும்மிடம்
சுரந்த மேதி துறைபடிந்து ஓடையில்
நிரந்த தண்டலை நீணெறி காண்மினே.

         பொழிப்புரை : விரிந்து பரந்த எரிபோன்ற கொடிய நஞ்சினைக் கண்டத்தில் தேக்கி நீலகண்டனாக இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது, ஓடையில் எருமை படிந்து பால் சொரியும் வளமிக்க திருத்தண்டலை நீள்நெறியாகும். அங்கு அப்பெருமானை வணங்கி வழிபடுங்கள்.


பாடல் எண் : 4
தவந்த என்பும் தவளப் பொடியுமே
உவந்த மேனியி னான்உறை யும்மிடம்
சிவந்த பொன்னும் செழுந்தர ளங்களும்
நிவந்த தண்டலை நீணெறி காண்மினே.

         பொழிப்புரை : வெந்த எலும்பும், திருவெண்ணீறும் உவந்து திருமேனியில் தரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, சிவந்த பொன்னும், செழுமையான முத்துக்களும் மிகுந்த திருத்தண்டலை நீள்நெறியாகும். இத்திருத்தலத்தைத் தரிசித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.

பாடல் எண் : 5, 6, 7
* * * * * * * * * *

பாடல் எண் : 8
இலங்கை வேந்தன் இருபது தோள்இற
விலங்க லில்அடர்த் தான்விரும் பும்மிடம்
சலங்கொள் இப்பி தரளமும் சங்கமும்
நிலங்கொள் தண்டலை நீணெறி காண்மினே.

         பொழிப்புரை : இலங்கை மன்னனான இராவணனின் இருபது தோள்களும் நெரியுமாறு கயிலைமலையின்கீழ் அடர்த்த இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது, நீரில் உள்ள சிப்பிகளும், முத்துக்களும், சங்குகளும் அலைகள் வாயிலாக அடித்துவரப்பட்டுச் செல்வவளம் மிகுந்த திருத்தண்டலை நீள்நெறியாகும். அங்கு வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.


பாடல் எண் : 9
கருவரு உந்தியில் நான்முகன் கண்ணன் என்று
இருவ ரும்தெரியா ஒருவன் இடம்
செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்
நிருபர் தண்டலை நீணெறி காண்மினே.

         பொழிப்புரை : சிருட்டி செய்யும் பிரமன் திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றினான். அவனும், திருமாலும் தெரிந்து கொள்ள முடியாத ஒப்பற்றவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது போரில் முயன்ற கோச்செங்கட் சோழ மன்னன் கட்டிய கோயிலாகிய திருத்தண்டலை நீள்நெறியாகும். அங்கு வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.


பாடல் எண் : 10
கலவு சீவரத் தார்கையில் உண்பவர்
குலவ மாட்டாக் குழகன் உறைவிடம்
சுலவு மாமதி லும்சுதை மாடமும்
நிலவு தண்டலை நீணெறி காண்மினே.

         பொழிப்புரை : சீவரமென்னும் ஆடையைச் சுற்றிய புத்தர்களும், கையில் உணவைக் கவளமாய் வாங்கி உண்ணும் சமணர்களும் அன்பு செலுத்துவதற்கு எட்டாதவனாய் விளங்கும் அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, வளைந்த மாமதில்களும், சுண்ணச்சாந்தினாலாகிய மாடங்களும் விளங்குகின்ற திருத்தண்டலை நீள்நெறி ஆகும். அங்கு வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.


பாடல் எண் : 11
நீற்றர் தண்டலை நீணெறி நாதனைத்
தோற்று மேன்மையர் தோணி புரத்துஇறை
சாற்று ஞானசம் பந்தன் தமிழ்வலார்
மாற்றுஇல் செல்வர், மறப்பர் பிறப்பையே.

         பொழிப்புரை : திருநீறு அணியப்பெற்ற அடியவர்கள் வாழும் திருத்தண்டலை நீணெறியில் வீற்றிருக்கும் நாதனை, அத்தகைய திருநீற்றின் மேன்மை விளங்கும் தோணிபுரத்தில் வீற்றிருந்தருளும் ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் நிலைத்த செல்வத்தை உடையவர்களாய்ப் பிறவிப்பிணி நீங்கப் பெற்றவராவர்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

வயலூர் --- 0910. இகல்கடின முகபட

      அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   இகல்கடின முகபட (வயலூர்)   முருகா! விலைமாதர் பற்றை விடுத்து , தேவரீர...