திருக்கோவலூர் - 0745. பாவ நாரிகள்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பாவ நாரிகள் (திருக்கோவலூர்)

முருகா!
விலைமாதர் வசமாகி அழியாமல் ஆண்டு அருள் புரிவாய்.


தான தானன தானன, தான தானன தானன
     தான தானன தானன ...... தனதான


பாவ நாரிகள் மாமட மாதர் வீணிக ளாணவ
     பாவை யாரிள நீரன ...... முலையாலும்

பார்வை யாமிகு கூரயி லாலு மாமணி யார்குழை
     பார காரன வார்குழ ...... லதனாலுஞ்

சாவ தாரவி தாரமு தார்த ராவித ழாலித
     சாத மூரலி தாமதி ...... முகமாலுஞ்

சார்வ தாவடி யேனிடர் வீற மாலறி வேமிகு
     சார மாயதி லேயுற ...... லொழிவேனோ

ஆவ ஆர்வன நான்மறை யாதி மூல பராவரி
     யாதி காணரி தாகிய ...... பரமேச

ஆதி யாரருள் மாமுரு கேச மால்மரு கேசுர
     னாதி தேவர்க ளியாவர்கள் ...... பணிபாத

கோவ தாமறை யோர்மறை யோது மோதம்வி ழாவொலி
     கோடி யாகம மாவொலி ...... மிகவீறும்

கோவை மாநகர் மேவிய வீர வேலயி லாயுத
     கோதை யானையி னோடமர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பாவ நாரிகள், மாமட மாதர், வீணிகள், ணவ
     பாவையார், ள நீர்அன ...... முலையாலும்,

பார்வையாம் மிகு கூர் அயிலாலும், மாமணி ஆர் குழை
     பார கார் அன வார்குழல் ...... அதனாலும்,

சாவது ஆர விதாரம் அது ஆர் தரா இதழால்,
     சாத மூரல் இதாமதி ...... முகமாலும்,

சார்வு அதா அடியேன் இடர் வீற, மால் அறிவே மிகு
     சாரமாய் அதிலே உறல் ...... ஒழிவேனோ?

ஆவ ஆர்வன நான்மறை ஆதி மூல பரா, ரி
     ஆதி காண அரிது ஆகிய ...... பரமஈச,

ஆதியார் அருள் மா முருகஈச! மால் மருக! ஈசுர!
     அனாதி தேவர்கள் யாவர்கள் ...... பணிபாத

கோ அதா மறையோர் மறைஓதும் ஓதம் விழா ஒலி
     கோடி ஆகம மா ஒலி ...... மிகவீறும்,

கோவை மாநகர் மேவிய வீர! வேல் அயில் ஆயுத!
     கோதை யானையினோடு அமர் ...... பெருமாளே.


பதவுரை

     ஆவ ஆர்வன நான்மறை ஆதிமூல பரா ---  உயிர்களுக்கு ஆக வேண்டிய ஞானப்பொருளை நிரம்பக் கூறும் நான்கு வேதங்களுக்கும் மூலமாக உள்ள ஆதி பரம்பொருளும்,

     அரி ஆதி காண அரிது ஆகிய பரம ஈச --- திருமால் முதலாகிய தேவர்களுக்கும் காண்பரிது ஆகிய மேலான இறைவரும் ஆகிய

     ஆதியார் அருள் மாமுருக ஈச --- ஆதிமுதற்பொருளாகிய சிவபெருமான் அருளிய பெருமைக்குரிய முருகக் கடவுளே!

      மால் மருக --- திருமாலின் திருமருகரே!

     ஈசுர --- எப்பொருட்கும் இறைவரே!

     அனாதி --- தனக்கு முதலாக ஒருவரையும் இல்லாதவரே!

     தேவர்கள் யாவர்கள் பணி பாத ---  தேவர்கள் யாவரும் பணிகின்ற திருவடிகளை உடையவரே!

       கோ அதா மறையோர் மறைஓதும் ஓதம் --- பேரொலியோடு வேதியர்கள் ஓதுகின்ற வேத ஒலியும்,

     விழா ஒலி --- திருவிழாக்களின் ஒலியும்,

     கோடி ஆகம மாஒலி மிக வீறும் --- எண்ணற்ற ஆகமங்களின் சிறந்த ஒலியும் மிக்கு விளங்குகின்,

      கோவை மாநகர் மேவிய வீர --- திருக்கோவலூர் என்னும் பெரிய நகரத்தில் வீற்றிருக்கும் வீரரே!

     அயில் வேல் ஆயுத --- கூர்மை பொருந்திய வேலாயுதத்தை உடையவரே!

      கோதை யானையினோடு அமர் பெருமாளே --- வள்ளி தேவயானையோடு திருக்கோயில் கொண்டு விளங்கும் பெருமையில் மிக்கவரே!

      பாவ நாரிகள் --- பாவத்தையே பயில்கின்ற பெண்கள்.  

     மா மடமாதர் --- பெரிதும் மடமை பொருந்தியவர்கள்.

     வீணிகள் --- பயனிலிகள்.

     ஆணவ பாவையார் --- ஆணவம் மிகுந்தவர்கள், பதுமை போன்றவர்கள்.

      இளநீர் அன முலையாலும் --- இளநீர் போன்று பருத்துள்ள முலைகளாலும்,

     பார்வையாம் மிகு கூர் அயிலாலும் --- கூர்மை பொருந்திய வேலாயுதம் போன்ற பார்வையாலும்,

     மாமணி ஆர் குழை --- சிறந்த ரத்தினம் பொருந்திய குண்டலங்களாலும்,

      பார கார் அன வார்குழல் அதனாலும் --- அடர்ந்த கருமேகத்துக்கு ஒப்பாக உள்ள நீண்ட கூந்தலாலும்,

     சாவது ஆர விதாரம் அமுது ஆர் தரா இதழால் --- கொல்லும் தன்மை கொண்டுள்ளதும், செவ்விய இலவு போன்றதும், அமுதம் நிறைந்துள்ளதுமான வாயிதழாலும்,

      இத சாத மூரல் --- இனிமை பொருந்திய புன்னகையாலும்,

     இதா மதி முகமாலும் --- இதத்தைத் தருகின்ற நிலவு போன்ற முகத்தாலும்,

      சார்வு அதா --- மனம்  அவர்களிடத்தில் சார்ந்து இருந்து,

     அடியேன் இடர் வீற --- அடியேனுடைய துன்பம் மிகுந்து,

     மால் அறிவே மிகுசாரமாய் --- அறிவு மயக்கமானது மேன்மேலும் மிகுந்து,

     அதிலே உறல் ஒழிவேனோ --- அதிலேயே பொருந்தி இருப்பதை அடியேன் ஒழியமாட்டேனோ? (ஒழிக்க அருள் புரிவாய்)

பொழிப்புரை

     உயிர்களுக்கு ஆக வேண்டிய ஞானப்பொருளை நிரம்பக் கூறும் நான்கு வேதங்களுக்கும் மூலமாக உள்ள ஆதி பரம்பொருளும், திருமால் முதலாகிய தேவர்களுக்கும் காண்பரிது ஆகிய மேலான இறைவரும், ஆதிமுதற்பொருளும் ஆகிய சிவபெருமான் அருளிய பெருமைக்குரிய முருகக் கடவுளே!

      திருமாலின் திருமருகரே!

     எப்பொருட்கும் இறைவரே!

     தனக்கு முதலாக ஒருவரையும் இல்லாதவரே!

     தேவர்கள் யாவரும் பணிகின்ற திருவடிகளை உடையவரே!

         பேரொலியோடு வேதியர்கள் ஓதுகின்ற வேத ஒலியும், திருவிழாக்களின் ஒலியும், எண்ணற்ற ஆகமங்களின் சிறந்த ஒலியும் மிக்கு விளங்குகின், திருக்கோவலூர் என்னும் பெரிய நகரத்தில் வீற்றிருக்கும் வீரரே!

     கூர்மை பொருந்திய வேலாயுதத்தை உடையவரே!

      வள்ளி தேவயானையோடு திருக்கோயில் கொண்டு விளங்கும் பெருமையில் மிக்கவரே!

         பாவத்தையே பயில்கின்ற பெண்கள்.  பெரிதும் மடமை பொருந்தியவர்கள். பயனிலிகள். ஆணவம் மிகுந்தவர்கள். பதுமை போன்றவர்கள். அவர்களின் இளநீர் போன்று பருத்துள்ள முலைகளாலும், கூர்மை பொருந்திய வேலாயுதம் போன்ற பார்வையாலும், சிறந்த இரத்தினம் பொருந்திய குண்டலங்களாலும், அடர்ந்த கருமேகத்துக்கு ஒப்பாக உள்ள நீண்ட கூந்தலாலும், கொல்லும் தன்மை கொண்டுள்ளதும், செவ்விய இலவு போன்றதும், அமுதம் நிறைந்துள்ளதுமான வாயிதழாலும், இனிமை பொருந்திய புன்னகையாலும், இதத்தைத் தருகின்ற நிலவு போன்ற முகத்தாலும்,  அடியேன் மனமானது  அவர்களிடத்தில் சார்ந்து இருந்து, அடியேனுடைய துன்பம் மிகுந்து, அறிவு மயக்கமானது மேன்மேலும் மிகுந்து,
அதிலேயே பொருந்தி இருப்பதை அடியேன் ஒழியமாட்டேனோ? (ஒழிக்க அருள் புரிவாய்)

  
விரிவுரை

பாவ நாரிகள் ---

நாரி - பெண்.

பொதுவாகப் பெண்களைக் குறித்தாலும், சிறப்பாக இங்கே விலைமாதரைக் குறித்து நின்றது. பாவத்துக்கு இடமான செயல்களையே பயில்பவர்கள் விலைமாதர்கள்.

மா மடமாதர் ---

மா - பெருமை, பெரிதும்.

மடம், மடப்பம், மடமை - அறியாமை, பேதைமை.

மாதர் - பெண், அழகு, பொன், காதல். விரும்பத் தக்கது.

அழகு உடையவர்கள், விரும்பத் தக்கவர்கள் பெண்கள் என்பதால் அவர்கள் மாதர் எனப்பட்டனர்.  "மாதர் மடப்பிடியும்" எனவரும் திருஞானம்பந்தர் திருவாக்கும், "மாதர் பிறைக் கண்ணியானை" என வரும் அப்பர் திருவாக்கும் சிந்திக்கத் தக்கன.

வீணிகள் ---

பயனிலிகள்.

"விதத்தை நத்திய வீணா வீணிகள்" என மருத்துவக்குடித் திருப்புகழிலும்,  "உதடு கன்றிகள் நாணா வீணிகள்" எனத் திருச்செந்தூர்த் திருப்புகழிலும், "விரகினால் பலர்மேல் வீழ் வீணிகள்" எனத் திருச்சிராப்பள்ளித் திருப்புகழிலும் அடிகளார் அருளி உள்ளது காண்க.

ஆணவ பாவையார் ---

ஆணவம் மிகுந்தவர்கள், பதுமை போன்றவர்கள்.  "பாவையர் தோதக லீலை" எனத் திருச்செந்தூர்த் திருப்புகழில் அடிகள் அருளி இருக்குமாறு காண்க.

இளநீர் அன முலையாலும் ---

பெண்களின் மார்பகங்கள் இளநீர் போன்று பருத்து இருக்கும்.

"இரண கிரண மடமயில், ம்ருகமத புளகித இளமுலை இளநீர் தாங்கி நுடங்கிய நூல் போன்ற மருங்கினள்" எ, தேவேந்திர சங்க வகுப்பில் அடிகளார் அருளி இருக்குமாறு காண்க.

இயற்கையாகப் பெண்கள் பெறவேண்டிய பருவ வளர்ச்சிக்கு ஏற்ற உடல் வளர்ச்சி இல்லை என்றால், பெண்கள்பால் பெறக் கருதும் காம நலத்தைப் பெற முடியாது. அவர்கள் உடல் வளர்ச்சியையும், இன்பம் அடையக் கூடிய இடம் என்பதையும் அறிய அடையாளமாகவும் இடமாகவும் அமைந்து இருப்பது முலை ஆகும். முலை இல்லாதவள் பெண்மை நலத்துக்கு உதவாள் என்பதை, "முலை இரண்டும் இல்லாள் பெண் காமுற்று அற்று" என்று காட்டினார் திருவள்ளுவ நாயனார்.

விலைமாதர் முலையால் மயக்குவார்கள் என்பதைப் பின்வரும் பிரமாணங்களால் அறியலாம்.

முலையை மறைத்துத் திறப்பர், டையை
     நெகிழ உடுத்துப் படுப்பர், வாய்இதழ்
     முறைமுறை முத்திக் கொடுப்பர், பூமலர் ...... அணைமீதே
அலைகுலை யக்கொட்டு அணைப்பர், ஆடவர்
     மன வலியைத்தட்டு அழிப்பர், மால்பெரிது
     அவர் பொருளைக் கைப் பறிப்பர், வேசைகள் ..... உறவுஆமோ?
                                                             ---  கழுகுமலைத் திருப்புகழ்.

மருவே செறித்த குழலார் மயக்கி,
     மதன ஆகமத்தின் ...... விரகாலே,
மயலே எழுப்பி, இதழே அருத்த,
     மலைபோல் முலைக்குள் ...... உறவுஆகிப்

பெருகாதல் உற்ற தமியேனை நித்தல்
     பிரியாது, பட்சம் ...... மறவாதே,
பிழையே பொறுத்து, உன் இருதாளில் உற்ற
     பெருவாழ்வு பற்ற ...... அருள்வாயே.       --- சுவாமிமலைத் திருப்புகழ்.

நடை உடையிலே அருக்கி, நெடிய தெரு வீதியிற்குள்
     நயனம் அதனால் மருட்டி, ...... வருவாரை
நணுகி, மயலே விளைத்து, முலையை விலை கூறி விற்று,
     லளிதம் உடனே பசப்பி, ...... உறவாடி,

வடிவு அதிக வீடுபுக்கு, மலர் அணையின் மீது இருத்தி,
     மதனன் உடை ஆகமத்தின் ...... அடைவாக
மருவி, உளமே உருக்கி, நிதியம் உளதே பறிக்கும்,
     வனிதையர்கள் ஆசை பற்றி ...... உழல்வேனோ?      ---  பொதுத் திருப்புகழ்.

 
பார்வையாம் மிகு கூர் அயிலாலும் ---

கூர்மை பொருந்திய வேலாயுதம் போன்ற கண்களின் பார்வையால் ஆடவரை மயக்குபவர்கள் விலைமாதர்கள்.
  
விழியால் மருட்டி நின்று, முலைதூசு அகற்றி, மண்டு
     விரக அனலத்து அழுந்த ...... நகையாடி,
விலையாக மிக்க செம்பொன் வரவே, பரப்பி வஞ்ச
     விளையாடலுக்கு இசைந்து, ...... சிலநாள்மேல்

மொழியாத சொற்கள் வந்து, சிலுகு ஆகி விட்ட தொந்த
     முழுமாயையில் பிணங்கள் ...... வசம் ஆகி,
முடியாது, பொற் சதங்கை தரு கீத வெட்சி துன்று
     முதிராத நல் பதங்கள் ...... தருவாயே!      ---  சுவாமிமலைத் திருப்புகழ்.


பார கார் அன வார்குழல் அதனாலும் ---

பெண்களின் கூந்தலானது அடர்ந்த கருமேகம் போல் கருத்து நீண்டு வளர்ந்து இருக்கும். கூந்தலை விரித்து முடித்து ஆடவரை மயக்குவார்கள்.

கூந்தல் ஆழ விரிந்து சரிந்திட,
காந்து மாலை குலைந்து பளிங்கிட,
கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட, ......கொங்கை தானும்
கூண்கள் ஆம்என பொங்க, நலம்பெறு
காந்தள் மேனி மருங்கு துவண்டிட,
கூர்ந்த ஆடை குலைந்து புரண்டு, ர ...... சங்கள்பாயச்

சாந்து வேர்வின் அழிந்து மணம் தப,
ஓங்கு அவாவில் கலந்து, முகம் கொடு
தான் பலா சுளையின் சுவை கண்டு, தழ் ....உண்டு,மோகம்
தாம் புறா மயிலின் குரல் கொஞ்சிட,
வாஞ்சை மாதருடன் புளகம் கொடு
சார்ந்து, நாயென் அழிந்து விழுந்து, டல் ...... மங்குவேனோ?
                                                                        --- சிதம்பரத் திருப்புகழ்.

 
சாவது ஆர விதாரம் அமுது ஆர் தரா இதழால் ---

விதாரம் - முள்ளிலவு, முள்ளிலவம், இலவு வகைகளில் ஒன்று.

காதல் வயப்பட்டதால் உயிரைக் கொல்லும் கொல்லும் தன்மை கொண்டுள்ளதும், செவ்விய இலவு போன்றதும், அமுதம் நிறைந்துள்ளதுமான வாயிதழைக் கொண்டு ஆடவரை விலைமாதர்கள் மயக்குவார்கள்.

விலைமாதர்களின் வாயில் ஊறும் எச்சிலானது பாலொடு தேனும் கலந்த்து போலக் காமுகர்க்கு இனிமையைத் தரும்.

பாலொடு தேன்கலந்த அற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்.

என்றருளினார் திருவள்ளுவ நாயனார்.

தலைவியைப் புணர்ந்து இன்பத்தை அனுபவித்த பிறகு, தலைமகன் கூறியதாக அமைந்தது இது. பருகக் கூடிய பாலின் குறைந்த இனிமையும், பருகக் கூடாத தேனின் நிறைந்த இனிமையும் கலந்தால், பருகக் கூடிய சிறந்த இனிமை பெறப்படுதலின் அதை, வெண்மையான பற்களைக் கொண்ட தலைவியின் வாயில் இருந்து ஊறும் எச்சிலுக்கு உவமம் ஆக்கிச் சொல்லப்பட்டது.


இத சாத மூரல் ---

இதம் - இன்பமானது, இனிமையைத் தருவது.

சாதம் - இளமை உடையது.

மூரல் - புன்சிரிப்பு.

உயிருக்கு இனிமையைத் தருகின்ற புன்னகையால் இளைஞரை மயக்குபவர்கள் விலைமாதர்கள்.


இதா மதி முகமாலும் ---

இதம் - இன்பமானது.  இனிமையைத் தருவது.

மதி - சந்திரன்.

இதத்தைத் தருகின்ற நிலவு போன்ற முகத்தால் இளைஞரை மயக்குபவர்கள் விலைமாதர்கள்

சார்வு அதா ---

விலைமாதர் தம்மைப் பலவகையிலும் அழகுபடுத்தி, காமுகரைப் பொருள் காரணமாக மயக்கும் கலையைப் புரிவார்கள்.  இளமை மிகுதியால், காமம் மீதூரப்பட்ட ஆடவர்கள், அவர்தம் அழகில் மயங்கி, அவர்கள் தருகின்ற கலவி இன்பமே மேலானது என்று மயங்கி, அவர்கள் இட்ட பணியைச் செய்து, பொருளையும் அவரிடத்தில் இழந்து, அவர்களைஏ சார்வாக எண்ணி இருப்பர்.

குமர! குருபர! முருக! குகனே! குறச்சிறுமி
     கணவ! சரவண! நிருதர் கலகா! பிறைச்சடையர்
     குரு என நல் உரை உதவு மயிலா! எனத் தினமும்.... உருகாதே,

குயில்மொழி நன் மடவியர்கள், விழியால் உருக்குபவர்,
     தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர், நகை
     கொளும் அவர்கள் உடைமை மனம் உடனே பறிப்பவர்கள் .....அனைவோரும்

தமது வசம் உற வசிய முகமே மினுக்கியர்கள்,
     முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள்,
     தனம் இலியர் மனம் முறிய நழுவா உழப்பியர், கண் ......வலையாலே

சதிசெய்து, அவர் அவர் மகிழ அணை மீது உருக்கியர்கள்,
     வசம் ஒழுகி, அவர் அடிமை என, மாதர் இட்ட தொழில்
     தனில் உழலும் அசடனை, உன் அடியே வழுத்த அருள்  ......தருவாயே.
                                                                                                --- சுவாமிமலைத் திருப்புகழ்.

நீலக் குழலார், முத்து அணி வாய் சர்க்கரையார், தைப் பிறை
     நீளச் சசியார், பொட்டு அணி ...... நுதல் மாதர், 
நீலக் கயலார், பத்திர வேல் ஒப்பிடுவார், நற்கணி
     நேமித்து எழுதா சித்திர ...... வடிவார், தோள்
ஆலைக் கழையார், துத்தி கொள் ஆரக் குவடார், கட்டளை
     ஆகத் தமியேன் நித்தமும் ...... உழல்வேனோ?      ---  சிதம்பரத் திருப்புகழ்.


ஆவ ஆர்வன நான்மறை ஆதிமூல பரா, அரி ஆதி காண அரிது ஆகிய பரம ஈச, ஆதியார் அருள் மாமுருக ஈச --- 

உயிர்களுக்கு உண்டாக வேண்டிய ஞானப்பொருளை நிரம்பக் கூறும் நான்கு வேதங்களுக்கும் மூலமாக உள்ள ஆதி பரம்பொருளும், திருமால் முதலாகிய தேவர்களுக்கும் காண்பரிது ஆகிய மேலான இறைவரும் ஆகிய ஆதிமுதற்பொருளாகிய சிவபெருமான் அருளிய பெருமைக்குரிய முருகக் கடவுள் முருகப் பெருமான்.

மால் அயன் அடிமுடி தேடிய வரலாற்றின் உட்பொருள்.

(1)     கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.

(2)     அடி - தாமரை. முடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. காட்டில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக்காட்டையும் தேடி, இயற்கைக்கு மாறாக முயன்றதால், அடிமுடி காணப்படவில்லை.  இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணவேண்டும்.

(3)     திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிக்கு நாயகன். இருவரும் தேடிக் காணமுடியவில்லை.  இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணலாம்.

(4)     "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும், "எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் இறைவனைக் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். " எழு பாரும் உய்யக் கொடுங் கோபச் சூருடன் குன்றம் திறக்கத் தொளைக்க, வைவேல் விடும் கோன் அருள் வந்து தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள். கந்தர் அலங்காரப் பாடலைக் காண்க.

(5)     "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது.  தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து".

(6)     புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலை வீசி அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.

(7)     பிரமன் - வாக்கு.  திருமால் - மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன்.

(8)   பிரமன் - நினைப்பு. திருமால் - மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே”.


கோ அதா மறையோர் மறை ஓதும் ஓதம், விழா ஒலி, கோடி ஆகம மா ஒலி மிக வீறும் கோவை மாநகர் மேவிய வீர ---

"கடல் ஒலியதான மறைதமிழ்கள் வீறு கதலிவனம்" என்று திருக்குழுக்குன்றத்தைச் சிறப்பித்து அடிகளார் பாடி அருளினார்.

கோ - என்பது மிகுந்த முழக்கத்தைக் குறிக்கும்.  வேத கோஷம் மிகுந்து உள்ள திருத்தலம் திருக்கோவலூர். சைவமும் வைணவமும் சிறந்து விளங்குவதால் விழாக்கள் மலிந்த திருத்தலம். எப்போதும் சிவனடியார்களும், திருமால் அடியார்களும் வழிபட்டுத் தோத்திரம் புரிவதால் ஆக்க ஒலியும் நிறைந்திருக்கும்.
  
மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும்
     வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்,
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேல்ஓர்
     இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை,
துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால்
     தூயநான் மறையாளர் சோமுச் செய்ய,
செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்
     திருக்கோவலூரத் அதனுள் கண்டேன் நானே.
(சோமுச் செய்தல் - சோமயாகம் புரிதல்)
  
கொந்தலர்ந்த நறுந்துழாய், சாந்தம், தூபம், தீபம்கொண்டு     
    அமரர் தொழ, பணங்கொள் பாம்பில்,
சந்தணிமென் முலைமலராள் தரணி மங்கை
     தாம்இருவர் அடிவருடும் தன்மையானை
வந்தனை செய்து, இசையேழ் ஆறங்கம், ஐந்து
     வளர்வேள்வி, நான்மறைகள், மூன்று தீயும்,
சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும் செல்வத்
     திருக்கோவலூர் அதனுள் கண்டேன்நானே.
  
கறைவளர்வேல் கரன்முதலாக் கவந்தன் வாலி
     கணை ஒன்றினால்மடிய, இலங்கை தன்னுள்,
பிறை எயிற்று வாளரக்கர் சேனை எல்லாம்
     பெருந்தகையோடு உடல் துணித்த பெம்மான்ம்ன்னை,
மறைவளர, புகழ்வளர, மாடந் தோறும்
     மண்டபம்ஒண் தொளியனைத்தும் வாரம் ஓத,
சிறைஅணைந்த பொழில்அணைந்த தென்றல் வீசும்
     திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.

பாரஎ ஏறு பெரும்பாரம் தீரப் பண்டு பாரதத்துத்
     தூது இயங்கி, பார்த்தன் செல்வத்
தேர்ஏறு சாரதியாய், எதிர்ந்தார் சேனை
     செருக்களத்துத் திறல்அழியச் செற்றான் தன்னை,
போரத் ஏறு ஒன்றுஉடையானும், அளகைக் கோனும்,
     புரந்தரனும், நான்முகனும், பொருந்தும் ஊர்ப்போல்,
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத்
     திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.

வாரணங்கொள் இடர்க் கடிந்த மாலை, நீல
     மரதகத்தை, மழைமுகிலே போல்வான் தன்னை,
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வத்
     திருக்கோவலூர் அதனுள் கண்டேன் என்று
வார்அணங்கு முலைமடவார் மங்கை வேந்தன்
     வாட்கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார்,
காரணங்களால் உலகங் கலந்து அங்கு ஏத்தக்
     கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே.

திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த அருட்பாடல்களின் வழி, திருக்கோவலூர் என்னும் திருத்தலத்தின் பெருமை விளங்கும்.

     திருக்கோவலூர் வீரட்டம் என்னும் நடுநாட்டுத் திருத்தலம் பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்தது.  தமக்கள் வழக்கில் திருக்கோயிலூர் என்று வழங்கப்படுகின்றது. திண்டிவனம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் இருந்து திருக்கோவிலூர் செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன. மற்றொரு பாடல் பெற்ற தலமான அறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) இங்கிருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ளது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை இங்கிருந்து 35 கி.மி. தொலைவில் இருக்கிறது.

இறைவர் திருப்பெயர் வீரட்டேசுவரர். இறைவியார் திருப்பெயர் சிவானந்தவல்லி, பெரியநாயகி, பிருகந்நாயகி. தலமரம் வில்வம்.

திருஞானசம்பந்தர், திருவாவுக்கரசர் இருவரும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்றது. மெய்பொருள் நாயனார் அவதரித்து, குறுநில மன்னராக இருந்து ஆட்சி செய்த பதி. நாயனாரின் திருவுருவச் சிலை கோயில் உள்பிரகாரத்தில் உள்ளது. நாயனாரின் குருபூசை நாள் கார்த்திகை உத்திரம் ஆகும்.

         மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரில் இருந்து அரசாண்ட குறுநில மன்னர் குலத்தில் அவதரித்தார். அக் குறுநில மன்னர்குலம் மாதொரு பாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையான்மான் குலமாகும். நாயனார் அறநெறி தவறாது அரசு புரிந்து வந்தார். பகையரசர்களால் கேடு விளையாதபடி குடிகளைக் காத்து வந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக் கட்டளை விட்டார். ‘சிவனடியார் வேடமே மெய்ப்பொருள் எனச் சிந்தையில் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுவனற்றைக் குறைவறக் கொடுத்து, நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.

         இவ்வாறு ஒழுகி வந்த மெய்பொருள் நாயனாரிடம் பகைமை கொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர் முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாருடன் போரிட்டுத் தோல்வியுற்று அவமானப்பட்டுப் போனான். வல்லமையால் மெய்பொருளாளரை வெல்லமுடியாது எனக் கருதிய அவன் வஞ்சனையால் வெல்லத் துணிந்தான். கறுத்த மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தகமுடிப்பு ஒன்றைக் கையிலேந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான். வாயிற்காவலர் சிவனடியாரென வணங்கி உள்ளே போகவிட்டனர். பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான். அவ்வாயிற் காவலனான தத்தன் “தருணம் அறிந்து செல்லல் வேண்டும் அரசர் பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான். ‘வஞ்சமனத்தவனான அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கென வந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறி உள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அங்கேயிருந்த அரசி அடியாரின் வரவுகண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள். துயிலுணர்ந்த அரசர் எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கல வரவு கூறி மகிழ்ந்தார். அடியவர் வேடத்திருந்தவர் எங்கும் இலாததோர் சிவாகமம் கொண்டு வந்திருப்பதாகப் புத்தகப் பையைப் காட்டினார். அவ்வாகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்சநெஞ்சினான அவ்வேடத்தான் தனியிடத்திலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறினான். மெய்பொருளாளர் துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு ஏவிவிட்டு அடியவருக்கு ஓர் ஆசனமளித்து அமரச் செய்தபின் தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப்பொருளைக் கேட்பதற்கு ஆயத்தமானார். அத்தீயவன் புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை செய்துவிட்டான். வாளால் குத்துண்டு வீழும் நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுது வென்றார். முத்தநாதன் நுழைந்த பொழுதிலிருந்து அவதானமாய் இருந்த தத்தன், இக்கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும் கணத்தில் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம் பெருகச் சோர்ந்துவிழும் நிலையில் இருந்த நாயனார் “தத்தா, நமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கி நின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்யவேண்டியது யாது?’ என இரந்தான். “இச்சிவனடியாருக்கு ஓர் இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக விட்டுவா” என்று மெய்பொருள் நாயனார் பணித்தார். மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன். செய்தியறிந்த குடிமக்கள் கொலை பாதகனைக் கொன்றொழிக்கத் திரண்டனர். அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித்தடுத்து, நகரைக் கடந்து சென்று, நாட்டவர் வராத காட்டெல்லையில் அக்கொடுந் தொழிலனை விட்டு வந்தான் தத்தன். வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு வந்து வென்றவனை இடையூறின்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான். அப்பொழுது மெய்பொருள் நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்யவல்லார்” எனக் கூறி அன்பொழுக நோக்கினார். பின்னர் அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்” எனத் திடம்படக் கூறி அம்பலத்தரசின் திருவடி நிழலைச் சிந்தை செய்தார். அம்பலத்தரசு அம்மையப்பராக மெய்பொருள் நாயனாருக்குக் காட்சியளித்தனர். மெய்பொருளார். அருட்கழல் நிழல் சேர்ந்து இடையறாது கைதொழுதிருக்கும் பாக்கியரானார்.

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்” –                                          திருத்தொண்டத் தொகை.
  
      சிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த அட்டவீரட்டத் தலங்களில் அந்தாகாசுரனை வதைத்த தலம் இது.  
 
     வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும், "ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்" என்று சொல்லப்படும் முதல் மூன்று ஆழ்வார்களின் வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்ற திருத்தலம். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவனும், திருமுறைகண்ட சோழன் என்று போற்றபடுவனும் ஆன இராஜராஜன் பிறந்த தலம் என்று பல பெருமைகளை உடையது

     திருக்கோவலூர் தலம். திருக்கோவலூர் மேலூர், கீழையூர் என இரு பிரிவுகளாக உள்ளது. அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றான வீரட்டேசுவரர் கோவில் கீழையூர்ப் பகுதியில் தெண்பெண்ணையாற்றின் கரையிலும், மேலூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும் உள்ளன.

         வீரட்டேசுவரர் கோயிலும், அம்பாள் சிவானந்தவல்லி கோயிலும் தனித்தனி கோயில்களாக சுற்று மதிலுடன் மேற்கு நோக்கி அருகருகே அமைந்துள்ளன. சுவாமி கோவிலுக்கு இடதுபுறம் அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இரண்டு கோயில்களுக்கும் 3 நிலை கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களுக்கு முன்னால் விசாலமான வெளியிடம் உள்ளது.

         சுவாமி கோயில் கோபுர வழியே உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி உள்ளதைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில் இடதுபுறம் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம் உள்ளது. வலதுபுறம் கணபதியின் சந்நிதி உள்ளது. ஒளவையாரால் வழிபடப்பட்ட விநாயகர் இவர். சுந்தரர் வெள்ளை யானை மீதேறியும், அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனார் குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது ஒளவையாரையும் உடன் வருமாறு அழைத்தனர். ஒளவையார் தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்ய, விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும், கயிலைக்கு தான் அழைத்துச் செல்வதாகவும் அருளினார். இத்தல கணபதியை வழிபட்டுக்கொண்டிருந்த ஒளவையார் வழிபாட்டைத் தொடர்ந்து விநாயகர் அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஒளவையாரை தனது துதிக்கையால் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலையை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். இவ்வாறு ஒளவையைத் தூக்கிவிட்ட கணபதி இவரே என்பர். விநாயகர் சந்ந்திக்கு முன்புறம சுவரில் புடைப்புச் சிற்பமாக இந்த வரலாறு காணப்படுகிறது. வாயிலின் இடதுபுறம் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் சந்நிதி உள்ளது. பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதியும், நடராசசபையும் உள்ளன.
    
     இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருக்கரங்களுடனும்,  பன்னிரு திருக்கரங்களுடனும், தேவியர் இருவருடன் மயில் மீது அமர்ந்து அருள் பாலிக்கின்றார். "கோதை யானையினோடு அமர் பெருமாளே" என்று அருணகிரிநாதப் பெருமான் பாடி உள்ளார்.

         தலமூர்த்தியாகிய அந்தகாசுர சம்ஹார மூர்த்தி விசேஷமானது. பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின் உற்சவத் திருமேனிகள் உள்ளன. துவாரபாலகரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் வீரட்டேஸ்வரர் சுயம்பு சிவலிங்கத் திருமேனி, பெரிய உருவத்துடன் தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோரைக் காணலாம். துர்க்கை எட்டுக் கரங்களுடன் காட்சியளிக்கின்ற நின்ற திருக்கோலம் மிகவும் விசேஷமாகவுள்ளது. விழிகள் மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன.

         அம்பாள் கோயில் தனியே 3 நிலை கோபுரத்துடன் உள்ளது. முன்மண்டபத்தில் இருபுறமும் துவாரகாலகர்களாக விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். சந்நிதிக்கு முன்னால் நந்தி பலிபீடம் உள்ளன. அம்பாள் அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள்.


கருத்துரை

முருகா! விலைமாதர் வசமாகி அழியாமல் ஆண்டு அருள் புரிவாய்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...