திருக் கடிக்குளம்

திருக் கடிக்குளம்
(கற்பகநாதர் குளம், கற்பகனார் கோவில்)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள் "கற்பகநாதர் குளம்" என்றே வழங்குகின்றனர்.  அஞ்சல் துறையும் அவ்வாறே வழங்குகின்றது. கடிக்குளம் என்னும் தீர்த்தப் பெயரே ஊருக்கு வழங்குவதாயிற்று.

     திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் சாலையில் சென்றால் 18 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.

     திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி இத்திருத்தலத்திற்கு உள்ளது. இங்கிருந்து திருஇடும்பாவனம் 1 கி.மீ. தொலைவில் உள்ளது.
    

இறைவர்                   : கற்பகநாதர்

இறைவியார்               : சௌந்திரநாயகி, மங்களநாயகி

தல மரம்                   : பலா

தீர்த்தம்                    : விநாயக தீர்த்தம் (கடிக்குளம்)

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் - பொடிகொள் மேனி.


     திருக்கோயில் மூன்று நிலை இராஜகோபுரத்துடனும், ஒரு திருச்சுற்றுடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலுக்கு வடபுறம் விநாயக தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலில் விநாயகர், சுப்பிரமணியர் காட்சி தருகின்றனர். உள்பிராகாரத்தில் நால்வர், தலவிநாயகர், முருகப்பெருமான், கஜலட்சுமி, தலமரம் பலா, சனீஸ்வரன், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக எட்டுப் பட்டைகளுடன் எழிலாகக் காட்சி தருகிறார். இவரை தரிசிப்பதால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவரை அஷ்டமி திதியிலும், சனிக்கிழமை புத ஓரையிலும் குங்குமப் பூவுடன் வெண்ணெய் சேர்த்து காப்பிட்டு வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. நாள் தோறும் நான்கு கால வழிபாடுகள். ஆனித் திருமஞ்சனம், நவராத்திரி, கார்த்திகை தீபம், திருவாதிரை, தைப்பூசம், அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி முதலிய சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

         இராமர் சேது சமுத்திரத்தில் பாலம் கட்டும் முன்பாக இத்தலம் வந்து கற்பக விநாயகரையும், கற்பகநாதரையும் வழிபாடு செய்ததாகத் தலபுராணம் கூறுகிறது. கோதண்டராமர் கோயில் இத்தலத்தின் அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தின் கற்பக விநாயகர் கற்பகநாதரை வழிபட்டு மாங்கனி பெற்றுள்ளார் என்று சொல்லப்படுகின்றது.

         கார்த்திகாசுரன் என்ற அரக்கன் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரங்கள் பல பெற்றான். தான் வேண்டும் போதெல்லாம் கற்பக விருட்சம் போல வரங்களை அள்ளித்தந்த இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தான். இதனால் இத்தல இறைவன் கற்பகநாதர் என வழங்கப்படுகிறார். திருஇடும்பாவனம் தலத்தைப் போன்றே பித்ருக்களுக்கு பரிகாரம் செய்ய திருக்கடிக்குளமும் ஏற்ற தலம். ஒரு அந்தணர் தன் தந்தைக்கு பிதுர்க் கடன் செய்வதற்காக கொண்டு வந்த அஸ்தி இத்தலத்திற்கு வந்தவுடன் கொன்றை மலராக மாறியது என்று தலபுரானம் கூறுகிறது.

         காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தொல்லைப் படிக்குள் நோவாத பண்பு உடையோர் வாழ்த்தும் கடிக்குளத்து அன்பர் களிப்பே" என்று போற்றி உள்ளார்.


        
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 623
கண்ஆர்ந்த திருநுதலார் மகிழ்ந்தகடிக் குளம்இறைஞ்சி,
எண்ஆர்ந்த திருஇடும்பாவனம் ஏத்தி, எழுந்து அருளி,
மண்ஆர்ந்த பதிபிறவும் மகிழ்தரும்அன் பால்வணங்கி,
பண்ஆர்ந்த தமிழ்பாடிப் பரவியே செல்கின்றார்.

         பொழிப்புரை : நெற்றிக்கண்ணையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் `திருக்கடிக்குளம்' என்ற பதியை வணங்கி, மக்களின் மனம்நிறைந்த `திருஇடும்பாவனம்' என்ற பதியையும் ஏத்திச் சென்று, இவ்வுலகத்தில் நிறைந்துள்ள பிறபதிகளையும் மகிழ்வுடன் கூடிய அன்பினால் வணங்கி, அங்கங்கே பண்பொருந்திய தமிழ்ப் பதிகங்களைப் பாடிய வண்ணமே செல்பவராய்,

         இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

1.    திருக்கடிக்குளம் (தி.2 ப.104) - பொடிகொள்மேனி - நட்டராகம்.

2.    திருஇடும்பாவனம் (தி.1 ப.17) - மனமார்தரு - நட்டபாடை.

        `பதிபிறவும்' என்பன தில்லைவளாகம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் கிடைத்தில.


2.104 திருக்கடிக்குளம்                    பண் - நட்டராகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பொடிகொள் மேனிவெண் நூலினர், தோலினர்
         புலிஉரி அதள்ஆடை,
கொடிகொள் ஏற்றினர், மணிகிணின் எனவரு
         குரைகழல் சிலம்புஆர்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து
         உறையும்கற் பகத்தை, தம்
முடிகள் சாய்த்துஅடி வீழ்தரும் அடியரை
         முன்வினை மூடாவே.

         பொழிப்புரை :திருநீறணிந்த மேனியராய், வெண்ணூல் அணிந்தவராய், புலித்தோலுடுத்தவராய், யானைத்தோலைப் போர்த்தியவராய், விடைக்கொடி உடையவராய், கட்டப்பட்ட மணிகள் கிணின் என ஒலிக்கக், கால்களில் சுழல் சிலம்பு ஆகியன ஒலிக்க மணம் கமழும் அழகிய பொழில் சூழ்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தைத் தம் முடிசாய்த்து அடிகளில் வீழ்ந்து வணங்கும் அடியவரைப் பழ வினைகள் தொடரா.


பாடல் எண் : 2
விண்க ளார்தொழும் விளக்கினை, துளக்குஇலா
         விகிர்தனை, விழவுஆரும்
மண்க ளார்துதித்து அன்பராய் இன்புறும்
         வள்ளலை மருவி,தம்
கண்கள் ஆர்தரக் கண்டு,நம் கடிக்குளத்து
         உறைதரு கற்பகத்தை,
பண்கள் ஆர்தரப் பாடுவார் கேடுஇலர்,
         பழிஇலர், புகழாமே.

         பொழிப்புரை :தேவர்கள் தொழும் திருவிளக்கை, தளர்ச்சியுறாத விகிர்தனை, விழாக்கள் பலவும் நிகழ்த்தும் மண்ணுலகில் உள்ளார் துதித்து அன்புடையவர்களாய் மகிழும் வள்ளலை, சென்றடைந்து தம் கண்களாரக் கண்டு மகிழும் நம் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை, பண்களோடு பாடல்களைப் பாடிப் போற்றுவார் கேடிலர். பழியிலர் அவரைப் புகழ்வந்தடையும் .


பாடல் எண் : 3
பொங்கு நல்கரி உரிஅது போர்ப்பது,
         புலிஅதள் அழல்நாகம்,
தங்க மங்கையைப் பாகம் அதுஉடையவர்,
         தழல்புரை திருமேனி,
கங்கை சேர்தரு சடையினர், கடிக்குளத்து
         உறைதரு கற்பகத்தை,
எங்கும் ஏத்திநின்று இன்புறும் அடியரை
         இடும்பைவந்து அடையாவே.

         பொழிப்புரை :சினந்துவந்த நல்ல யானையின் தோலைப் போர்த்து , புலித்தோலை உடுத்து , கொடிய பாம்பு திருமேனியில் விளையாட , உமை நங்கையைப் பாகமாகக் கொண்டு , தழல் போன்ற சிவந்த திருமேனியராய்க் கங்கை சேர்ந்த சடையினராய் விளங்கும் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை எவ்விடத்தும் ஏத்தி நின்று இன்புறும் அடியாரைத் துன்பம் வந்து அடையமாட்டா .


பாடல் எண் : 4
நீர்கொள் நீள்சடை முடியனை, நித்திலத்
         தொத்தினை, நிகரில்லாப்
பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தை,
         பசும்பொனை, விசும்புஆரும்
கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து
         உறையும்கற் பகம் தன்னைச்
சீர்கொள் செல்வங்கள் ஏத்தவல் லார்வினை
         தேய்வது திணமாமே.

         பொழிப்புரை :கங்கைதங்கிய நீண்ட சடைமுடியினனை , முத்துக்களின் கொத்தாய் விளங்குவோனை , உலகில் பல இடங் களிலும் உள்ள மக்கள் வந்து தொழும் பவளத்தை , பசும் பொன்னை , வானளாவிய மேகங்கள் தங்கியவாய் விளங்கும் அழகிய பொழில்கள் சூழ்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தின் சிறப்புமிக்க அருட் செல்வங்களை ஏத்த வல்லவர்களின் வினைகள் தேய்வது திண்ணம் .


பாடல் எண் : 5
சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு
         துன்னிய தழல்நாகம்,
அரும்பு தாதுஅவிழ்ந்து அலர்ந்தன மலர்பல
         கொண்டுஅடி யவர்போற்ற,
கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத்து
         உறைதரு கற்பகத்தை
விரும்பு வேட்கையொடு உளமகிழ்ந்து உரைப்பவர்
         விதிஉடை யவர்தாமே.

         பொழிப்புரை :வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிந்த சடையினனும் , கொடிய பாம்பினை மதியோடு பகை நீக்கிப் பொருத்திவைத்த முடியினனும் , அரும்புகளையும் மகரந்தம் விரிந்து அலர்ந்த மலர்களையும் கொண்டு அடியவர் போற்ற , கரும்புகளும் உயர்ந்து வளர்ந்த கொடிகளும் பின்னி வளர்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தை அன்போடு விரும்பி உளம்மகிழ்ந்து போற்றுபவர் நல்லூழ் உடையவர் ஆவர் .


பாடல் எண் : 6
மாது இலங்கிய பாகத்தன், மதியமொடு
         அலைபுனல் அழல்நாகம்
போது இலங்கிய கொன்றையும் மத்தமும்
         புரிசடைக்கு அழகாக,
காது இலங்கிய குழையினன், கடிக்குளத்து
         உறைதரு கற்பகத்தின்
பாதம் கைதொழுது ஏத்தவல் லார்வினை
         பற்றுஅறக் கெடும்அன்றே.

         பொழிப்புரை :உமைமாது விளங்கும் பாகத்தினனும் , திங்கள் கங்கை , சினம் மிக்க பாம்பு , கொன்றைமலர் , ஊமத்தை மலர் ஆகியன வற்றை வளைந்த சடையின் மேல் , அழகுறச் சூடியவனும் காதிலங்கு குழையினனும் , ஆகிய கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தின் பாதங் களைக் கைகளால் தொழுது ஏத்த வல்லார் வினைகள் அடியோடு கெடும் .


பாடல் எண் : 7
குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்
         குழாம்பல குளிர்பொய்கை
புலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும்,
         பூவைசே ருங்கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து
         உறையும்கற் பகத்தைச்சீர்
நிலவி நின்றுநின்று ஏத்துவார் மேல்வினை
         நிற்ககில் லாதானே.

         பொழிப்புரை :விளங்கும் அழகினை உடையனவான கொடிகள் கட்டப்பட்ட உயரிய மாடவீடுகளையும் மகளிர் குழாம் நீராடும் குளிர்ந்த பொய்கைகளையும் உடையதும் புலாலுண்ணும் நாரை முதலிய பறவைகளும் அன்னங்களும் விளையாடும் சிறப்பினதுமான கடிக்குளத்தில் மலர்கள் பொருந்திய கூந்தலினளாகிய உமையம்மை யோடு கூடிக் கண்ணிமிலைந்து விளங்கும் கற்பகத்தைப் புகழ்ந்து போற்றி ஏத்துவார்மேல் வினைநில்லா .


பாடல் எண் : 8
மடுத்த வாள்அரக் கன்அவன் மலைதன்மேல்
         மதியிலா மையில்ஓடி
எடுத்த லும்,முடி தோள்கர நெரிந்துஇற,
         இறையவன் விரல்ஊன்ற,
கடுத்து வாயொடு கைஎடுத்து அலறிட,
         கடிக்குளம் தனில்மேவிக்
கொடுத்த பேர்அருட் கூத்தனை ஏத்துவார்
         குணம்உடை யவர்தாமே.

         பொழிப்புரை :பகைவரைக் கொல்லும் வாட்படையை உடைய இராவணன் அறிவின்றிக் கயிலைமலையைப் பெயர்த்த அளவில் அவனுடைய முடி தோள் கை ஆகியன நெரிந்து அழியுமாறு சிவபிரான் கால் விரலை ஊன்றிய அளவில் , அவன் தன் குற்றத்திற்கு வருந்தி கை கூப்பி அலற, பேரருள் கொடுத்த ஆனந்தக் கூத்தனைக் கடிக்குளத்தை அடைந்து ஏத்துபவர் நல்ல குணமுடையவர் ஆவர் .


பாடல் எண் : 9
நீரின்ஆர் கடல் துயின்றவன் அயனொடு
         நிகழ்அடி முடிகாணார்,
பாரி னார்விசும்பு உறப்பரந்து எழுந்ததுஓர்
         பவளத்தின் படியாகி,
காரின்ஆர் பொழில் சூழ்தரு கடிக்குளத்து
         உறையும்கற் பகத்தின்தன்
சீரின்ஆர்கழல் ஏத்தவல் லார்களைத்
         தீவினை அடையாவே.

         பொழிப்புரை :நீர் நிறைந்த கடலிடைத் துயிலும் திருமாலும் , பிரமனும் அடிமுடி காணாராய் எய்த்தகாலத்து , மண்ணுலகில் அடித்தளம் , விசும்பின் எல்லைவரை எழுந்து பவளம் போன்றநிறம் உடையவராய்த் தோன்றி , மேகம்தவழும் பொழில் சூழ்ந்த கடிக் குளத்தில் உறையும் கற்பகத்தின் சிறப்புமிக்க திருவடிகளை ஏத்த வல்லார்களைத் தீவினை அடையா .


பாடல் எண் : 10
குண்டர் தம்மொடு சாக்கியர் சமணரும்
         குறியினில் நெறிநில்லா
மிண்டர் மிண்டுஉரை கேட்டு,அவை மெய்எனக்
         கொள்ளன்மின், விடம்உண்ட
கண்டர், முண்டநல் மேனியர், கடிக்குளத்து
         உறைதரும் எம்ஈசர்
தொண்டர் தொண்டரைத் தொழுதுஅடி பணிமின்கள்
         தூநெறி எளிதாமே.

         பொழிப்புரை :குண்டர்களாகிய சாக்கியர் சமணர்கள் ஆகியோர் தாம் கூறும் குறிகளின் நெறிநில்லாமிண்டர்கள் . அவர்தம் பொய் யுரைகளைக் கேட்டு அவற்றை மெய்யெனக் கருதாதீர் . விடம் உண்டகண்டரும் திரிபுண்டரம் அணிந்த நன்மேனியரும் ஆகிய கடிக் குளத்தில் உறையும் எம் ஈசர்தம் தொண்டர் தொண்டரைத் தொழுது அடிபணிமின் . தூய சிவநெறி எளிதாம் .


பாடல் எண் : 11
தனமலி புகழ் தயங்குபூந் தராயவர்
         மன்னன், நல் சம்பந்தன்,
மனமலி புகழ் வண்தமிழ் மாலைகள்
         மாலதாய் மகிழ்வோடும்,
கனமலி கடல் ஓதம் வந்துஉலவிய
         கடிக்குளத்து அமர்வானை
இனம் மலிந்துஇசை பாடவல் லார்கள்போய்
         இறைவனோடு உறைவாரே.

         பொழிப்புரை :செல்வவளம் மிக்க புகழ் விளங்கும் பூந்தராய் மக்களின் மன்னனாகத் திகழும் ஞானசம்பந்தன் மனநிறைவோடு புகழ்ந்துரைத்த வண்டமிழ் மாலைகள் மீது அன்பு கொண்டு, மகிழ்வோடு, கடல் ஓதம் வந்துலவும் கடிக்குளத்து அமரும் இறைவனை அடியவர்களோடு கூடி அவற்றை இசையோடு பாடவல்லார்கள் போய் இறைவனோடு உறைவார்கள்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

சிறுநெருப்பு என்று மடியில் முடிந்துகொள்ளக் கூடாது.

  சிறுநெருப்பு என்று மடியில் முடிந்துகொள்ளலாமா ?  கூடாதே. -----                அரும்பெரும் பொருள் எதுவானாலும் ,  அதனை இகழ்தல் கூடாது. காரணம்...