திரு ஆமாத்தூர் - 0743. கால முகில்என





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கால முகில்என (திரு ஆமாத்தூர்)

முருகா!
தேவரீரது திருவடியில் பொருந்தி இருக்கும்
தவ உணர்வைத் தந்து அருளவேண்டும்.


தான தனதன தனதன தனதன
     தான தனதன தனதன தனதன
     தான தனதன தனதன தனதன ...... தனதான


கால முகிலென நினைவுகொ டுருவிலி
     காதி யமர்பொரு கணையென வடுவகிர்
     காணு மிதுவென இளைஞர்கள் விதவிடு .....கயலாலுங்

கான மமர்குழ லரிவையர் சிலுகொடு
     காசி னளவொரு தலையணு மனதினர்
     காம மிவர்சில கபடிகள் படிறுசொல் ...... கலையாலுஞ்

சால மயல்கொடு புளகித கனதன
     பார முறவண முருகவிழ் மலரணை
     சாயல் தனின்மிகு கலவியி லழிவுறும் .....அடியேனைச்

சாதி குலமுறு படியினின் முழுகிய
     தாழ்வ தறஇடை தருவன வெளியுயர்
     தாள தடைவது தவமிக நினைவது ......   தருவாயே

வேலை தனில்விழி துயில்பவ னரவணை
     வேயி னிசையது நிரைதனி லருள்பவன்
     வீர துரகத நரபதி வனிதையர் ......        கரமீதே

வேறு வடிவுகொ டுறிவெணெய் தயிரது
     வேடை கெடவமு தருளிய பொழுதினில்
     வீசு கயிறுட னடிபடு சிறியவன் ...... அதிகோப

வாலி யுடனெழு மரமற நிசிசரன்
     வாகு முடியொரு பதுகர மிருபது
     மாள வொருசரம் விடுமொரு கரியவன் ......மருகோனே

வாச முறுமலர் விசிறிய பரிமள
     மாதை நகர்தனி லுறையுமொ ரறுமுக
     வானி லடியவ ரிடர்கெட அருளிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கால முகில் என நினைவு கொடு, ருவு இலி
     காதி அமர்பொரு கணை என, வடு வகிர்
     காணும் இதுஎன இளைஞர்கள் விதவிடு .....கயலாலும்,

கானம் அமர் குழல் அரிவையர், சிலுகொடு
     காசின் அளவு ஒரு தலை அணும் மனதினர்,
     காமம் இவர் சில கபடிகள், படிறுசொல் ....கலையாலும்

சால மயல்கொடு, புளகித கன தன-
     பாரம் உற வண முருகு அவிழ் மலர்அணை
     சாயல் தனில் மிகு கலவியில் அழிவுஉறும்......அடியேனைச்

சாதி குலம் உறு படியினில் முழுகிய
     தாழ்வு அதுஅற, இடை தருவன வெளி உயர்
     தாள் அதுஅடைவது, தவ மிக நினைவது ....தருவாயே.

வேலை தனில் விழி துயில்பவன் ரவணை,
     வேய் இன் இசையது நிரைதனில் அருள்பவன்,
     வீர துரகத நரபதி, வனிதையர் ......        கரமீதே,

வேறு வடிவுகொடு உறி வெணெய் தயிரது
     வேடை கெட, முது அருளிய பொழுதினில்
     வீசு கயிறுடன் அடிபடு சிறியவன், ......    அதிகோப

வாலி உடன் எழு மரம் அற, நிசிசரன்
     வாகு முடி ஒரு பது, கரம் இருபது
     மாள ஒருசரம் விடும்ஒரு கரியவன் ......மருகோனே!

வாசம் உறுமலர் விசிறிய பரிமள,
     மாதை நகர்தனில் உறையும் ஒர் அறுமுக
     வானில் அடியவர் இடர்கெட அருளிய ...... பெருமாளே.


பதவுரை

      வேலை தனில் அரவணை விழி துயில்பவன் --- திருப்பாற்கடலில் ஆதிசேடன் என்னும் பாம்புப் படுக்கையில் அறிதுயில் அமர்ந்தவன்,

     வேயின் இசை அது நிரை தனில் அருள்பவன் --- புல்லாங்குழல் இசையால் பசுக் கூட்டங்களுக்கு அருள் புரிபவன்,

      வீர துரகத --- வீரமுள்ள குதிரையாகிய கல்கி அவதாரத்தை எடுக்கப் போகின்றவன்,

      நர பதி ---  கண்ணனாக அவதரித்து அருச்சுனனுக்குத் தலைவானவன்,

      வேறு வடிவு கொடு உறி வெ(ண்)ணெய் தயிர் அது வேடை கெட அமுது அருளிய பொழுதினில் --- வேற்று உருவம் கொண்டு உறியில் இருந்த வெண்ணெய், தயிர் இவைகளைத் திருடி உண்ணும் வேட்கை தீர அனைவரும் உண்ணப் பங்கிட்டு அருளியபோதில்,

      வனிதையர் கரம் மீதே வீசு கயிறு உடன் அடிபடு சிறியவன் --- ஆயர்குலப் பெண்கள் தமது கையால் வீசி எறியப்பட்ட கயிற்றால் அடிபட்ட சிறுவன்,

      அதி கோப வாலியுடன் எழு மரம் அற --- மிக்க கோபம் கொண்டிருந்த வாலியுடன், ஏழு மராமரங்களும் அற்று விழவும்,

      நிசிசரன் வாகு முடி ஒருபது(ம்) கரம் இருபது(ம்) மாள --- அரக்கனாகிய இராவணனின் பத்துத் தலைகளும், இருபது தோள்களும் மாளவும்,

     ஒரு சரம் விடும் ஒரு கரியவன் மருகோனே --- ஒப்பற்ற அம்பினை விடுத்த, கருநிறம் கொண்ட திருலின் திருமருகரே!

      வாசம் உறு மலர் விசிறிய பரிமளம் --- நறுமணம் மிக்க மலர்களில் இருந்து வீசிய சுகந்தமானது பொருந்தியுள்ள,

     மாதை நகர் தனில் உறையும் ஒர் அறுமுக --- திருவாமாத்தூர் என்னும் திருத்தரத்தில் வாழும் ஆறுமுகப் பரம்பொருளே!

      வானில் அடியவர் இடர் கெட அருளிய பெருமாளே --- விண்ணுலகத்தினில் இருந்த அடியார்களின் துன்பம் நீங்க அருள் புரிந்த பெருமையில் மிக்கவரே!

      காலமுகில் என --- காலத்தே மழையைப் பொழியும் மேகத்தைப் போ

     நினைவு கொ(ண்)டு --- உயிர்களுக்கு இன்பத்தை விளைக்கவேண்டும் என்னும் எண்ணத்தோடு,

     உருவு இலி --- உருவம் இல்லாதவனான மன்மதன்,

     காதி அமர்பொரு கணை என --- போரிடுவதற்கு விடுத்த அம்பினைப் போலவும்,

      வடுவகிர் காணும் இது என --- மாவடு வகிர் போலவும் உள்ளது என்று சொல்லும்படி,

     இளைஞர்கள் விதவிடு(ம்) கயலாலும் --- இளைஞர்கள் சிறப்பித்துக் கூறுகின்ற கயல் மீன் போன்ற கண்களும்,

      கானம் அமர் குழல் அரிவையர் --- காடு போன்று அடர்ந்த கூந்தலும் உடைய விலைமகளிர்,

     சிலுகொடு --- கூச்சல் குழப்பத்தை விளைவித்து,

     காசின் அளவு ஒருதலை அணும் மனதினர் --- கிடைத்த பொருளுக்குத் தக்கபடி ஒருதலையாக, மனம் பொருந்தாமல் ஆடவரை அணுகுகின்ற மனத்தினை உடையவர்கள்.

      காமம் --- காம இன்பத்தைத் தருகின்ற

     இவர் சில கபடிகள் --- இவர்கள் கள்ள நெஞ்சத்தினை உடையவர்கள்,

     படிறு சொல் கலையாலும் --- வஞ்சகமாகப் பேசுகின்றதில் வல்லவர்கள்,

     சால மயல்கொடு --- மிக்க மோகம் கொண்டவர் போ,

      புளகித கனதன பாரம் உற அண ---  இன்பம் மிகும்படியாக பெருத்த முலைகள் பொருந்த அணைபவர்,

     முருகு அவிழ் மலர் அணை சாயல் தனில் --- நறுமணம் வீசும் மலர்ப்படுக்கை உள்ள இடத்தில்,

      மிகு கலவியில் அழிவு உறும் அடியேனை --- மிக்க புணர்ச்சி இன்பத்தில் அழிவினைத் தேடிகொள்ளுகின்ற அடியவனாகிய என்னை,

      சாதி குலம் உறு படியினின் முழுகிய தாழ்வு அது அற --- சாதி குலம் முதலிய பேதங்கள் நிறைந்த இந்த உலகில் பிறந்து, அந்த உணர்விலேயே முழுகி இருந்த தாழ்வானது அற்றுப்போ,

       இடை தருவன --- வழியிலே வந்து உதவுகின்,

     வெளி உயர் தாள் அது அடைவது தவம் --- பரவெளியிலே திகழ்கின்ற தேவரீரது திருவடிகளைச் சரணாக அடைவதே தவமாகும்.

     மிக நினைவு அது தருவாயே --- அந்தத் தவ உணர்வில் பொருந்தி இருக்கும் அருளைத் தருவீராக.

 
பொழிப்புரை

     திருப்பாற்கடலில் ஆதிசேடன் என்னும் பாம்புப் படுக்கையில் அறிதுயில் அமர்ந்தவன். புல்லாங்குழல் இசையால் பசுக் கூட்டங்களுக்கு அருள் புரிபவன். வீரமுள்ள குதிரையாகிய கல்கி அவதாரத்தை எடுக்கப் போகின்றவன். கண்ணனாக அவதரித்து அருச்சுனனுக்குத் தலைவானவன். வேற்று உருவம் கொண்டு உறியில் இருந்த வெண்ணெய், தயிர் இவைகளைத் திருடி உண்ணும் வேட்கை தீர அனைவரும் உண்ணப் பங்கிட்டு அருளியபோதில்,  ஆயர்குலப் பெண்கள் தமது கையால் வீசி எறியப்பட்ட கயிற்றால் அடிபட்ட சிறுவன். மிக்க கோபம் கொண்டிருந்த வாலியுடன், ஏழு மராமரங்களும் அற்று விழவும், அரக்கனாகிய இராவணனின் பத்துத் தலைகளும், இருபது தோள்களும் மாளவும், ஒப்பற்ற அம்பினை விடுத்த, கருநிறம் கொண்ட திருலின் திருமருகரே!

     நறுமணம் மிக்க மலர்களில் இருந்து வீசிய சுகந்தமானது பொருந்தியுள்ள,  திருவாமாத்தூர் என்னும் திருத்தரத்தில் வாழும் ஆறுமுகப் பரம்பொருளே!

     விண்ணுலகத்தினில் இருந்த அடியார்களின் துன்பம் நீங்க அருள் புரிந்த பெருமையில் மிக்கவரே!

      காலத்தே மழையைப் பொழியும் மேகத்தைப் போ உயிர்களுக்கு இன்பத்தை விளைக்கவேண்டும் என்னும் எண்ணத்தோடு, உருவம் இல்லாதவனான மன்மதன், போரிடுவதற்கு விடுத்த அம்பினைப் போலவும், மாவடு வகிர் போலவும் உள்ளது என்று சொல்லும்படி, இளைஞர்கள் சிறப்பித்துக் கூறுகின்ற கயல் மீன் போன்ற கண்களும், காடு போன்று அடர்ந்த கூந்தலும் உடைய விலைமகளிர், கூச்சல் குழப்பத்தை விளைவித்து, கிடைத்த பொருளுக்குத் தக்கபடி ஒருதலையாக, மனம் பொருந்தாமல் ஆடவரை அணுகுகின்ற மனத்தினை உடையவர்கள். காம இன்பத்தைத் தருகின்ற இவர்கள் கள்ள நெஞ்சத்தினை உடையவர்கள். வஞ்சகமாகப் பேசுகின்றதில் வல்லவர்கள். மிக்க மோகம் கொண்டவர் போ, இன்பம் மிகும்படியாக பெருத்த முலைகள் பொருந்த அணைபவர். நறுமணம் வீசும் மலர்ப்படுக்கை உள்ள இடத்தில், இவர்களுடன் கூடி மிக்க புணர்ச்சி இன்பத்தில் அழிவினைத் தேடிகொள்ளுகின்ற அடியவனாகிய என்னை, சாதி குலம் முதலிய பேதங்கள் நிறைந்த இந்த உலகில் பிறந்து, அந்த உணர்விலேயே முழுகி இருந்த தாழ்வானது அற்றுப்போ, வழியிலே வந்து உதவுகின், பரவெளியிலே திகழ்கின்ற தேவரீரது திருவடிகளைச் சரணாக அடைவதே தவமாகும். அந்தத் தவ உணர்வில் பொருந்தி இருக்கும் அருளைத் தருவீராக.


விரிவுரை

காலமுகில் என நினைவு கொடு ---

கால முகில் - மழை வேண்டும் காலத்துப் பொழிகின்ற மேகம்.

கொண்டு என்னும் சொல், கொடு எனக் குறுகி வந்தது.

உருவு இலி ---

உருவு இலி - உருவம் இல்லாதவன். அங்கம் இல்லாதவன் அநங்கன்.

இந்த நிகழ்வு, பின்வரும் பிரமாணங்களால் தெளியப்படும்.

பொருந்திறல் பெருங்கைமா உரித்து
     உமை அஞ்சவே ஒருங்கு நோக்கி,
பெருந்திறத்து அநங்கனை அநங்கமா
     விழித்ததும் பெருமை போலும்
வருந்திறல் காவிரி வடகரை
     அடை குரங்காடுதுறை
அருந்திறத்து இருவரை அல்லல்கண்டு
     ஓங்கிய அடிகளாரே.                 --- திருஞானசம்பந்தர்.

கரும்பமர் வில்லியைக் காய்ந்து,
     காதல் காரிகை மாட்டு அருளி,
அரும்பு அமர் கொங்கை ஓர்பால்
     மகிழ்ந்த அற்புதஞ் செப்ப அரிதால்,
பெரும்பகலே வந்து என் பெண்மை
     கொண்டு பேர்த்தவர் சேர்ந்தஇடம்
சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த
     செம்மைத் தோணிபுரந்தானே.        --- திருஞானசம்பந்தர்.

இத் தேவாரப் பாடலின் பொழிப்புரை:

சிவபெருமான் கரும்பினை வில்லாகக் கொண்ட மன்மதனைக் கோபித்து நெருப்புக் கண்ணால் எரித்து, பின்னர் அவனது அன்பிற்குரிய மனையாளாகிய இரதி வேண்ட அவள் கண்ணுக்கு மட்டும் உருவம் தோன்றுமாறு செய்து, கோங்கின் அரும்பு போன்ற கொங்கைகளையுடைய உமாதேவியை ஒரு பகுதியாகக் கொண்டு மகிழ்ந்த அற்புதம் செப்புதற்கரியதாகும். நண்பகலிலே வந்து எனது பெண்மை நலத்தைக் கவர்ந்து கொண்டு திரும்பவும் அவர் சென்று சேர்ந்த இடம் வண்டுகள் விரும்பி உறைகின்ற சோலைகள் சூழப்பெற்ற நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் ஆகும்.

அடியாராம் இமையவர்தம் கூட்டம் உய்ய
         அலைகடல்வாய் நஞ்சு உண்ட அமுதே! செங்கண்
நெடியானும் நான்முகனும் காணாக் கோல
         நீலவிட அரவுஅணிந்த நிமலா! வெந்து
பொடியான காமன்உயிர் இரதி வேண்டப்
         புரிந்து அளித்த புண்ணியனே! பொங்கர் வாசக்
கடிஆரும் மலர்ச்சோலை மருங்கு சூழும்
         கவின்மருகல் பெருமானே காவாய் என்றும்.     --- பெரியபுராணம்.

காதி அமர்பொரு கணை என ---

உயிர்களுக்குக் காம இச்சையை விளைவித்தல் பொருட்டு, தனது கரும்பு வில்லில், மலர்க்கணைகளை மன்மதன் தொடுக்கின்றான். அந்த அம்பு உள்ளத்தில் தைத்ததுமே உயிர்கள் விரக தாபம் மேலிட்டு வருந்தும். அது தணிக்கும் வாய்க்காலைத் தேடும்.

அந்த அம்பைப் போல உள்ளன விலைமாதரின் கண்கள் என்கின்றார் அடிகளார்.

வடுவகிர் காணும் இது என ---

மாம்பிஞ்சைப் பிளந்தது போல இருக்கும் பெண்களின் கண்கள். "மாவடு வகிர் அன்ன கண்ணி பங்கா" என்பார் மணிவாசகனார்.
  
இளைஞர்கள் விதவிடு கயலாலும் ---

விதவிடும் என்னும் சொல் கடைகுகுறைந்து விதவிடு என வந்தது.

விதவிடுதல் - சிறப்பித்து உரைத்தல். விதந்து பேசுதல்.

காம உணர்வு கொண்ட இளைஞர்கள் தாம் காணும் பெண்களின் கண்களை கயல் மூன் பொல உள்ளன என்று சிறப்பித்துக் கூறுவர்.

கானம் அமர் குழல் அரிவையர் ---

காடு போன்று அடர்ந்த கூந்தலை உடையவர். அரிவை என்பது பொதுவாகப் பெண்களைக் குறிக்கும் என்றாலும், இருபது முதல் இருபத்தைந்து வயது உள்ள பெண்களை அரிவை என்னும் சொல் குறித்து நிற்கும்.

சிலுகொடு ---

சிலுகு - கூச்சல், குழப்பம், சண்டை.
சிலுகுதல் - கூச்சல், குழப்பம்.

தெரிவை, மக்கள், செல்வம், உரிமை மிக்க வுண்மை
     தெரிவதற்கு உள்ளம் ...... உணராமுன்,
சினம் மிகுத்த திண்ணர் தனி வளைத்து, வெய்ய
     சிலுகு தைத்து வன்மை ...... சிதையாமுன்,
பரவை புக்கு தொய்யும் அரவு அணைக்குள் வைகு
     பரமனுக்கு நல்ல ...... மருகோனே!        --- திருப்புகழ்.

காசின் அளவு ஒருதலை அணும் மனதினர் ---

காசு - பொருள். காசு என்னும் சொல்லுக்கு குற்றம் என்றும் பொருள் உண்டு.

அண்ணு என்னும் சொல் அணு என வந்தது. 
அண்ணுதல் - நெருங்குதல்.

பொருளாசைக் கொண்டோரிடம் குற்றம் நிறைந்து இருக்கும்.  இராம்பிரான் காசு இல் கொற்றம் உடையவர் என்பதைக் கம்பநாட்டாழ்வார்,  "காசு இல் கொற்றத்து இராமன்" என்று பாடி இருப்பது அறிக.

கிடைத்த பொருளுக்குத் தக்கபடி ஒருதலையாக, மனம் பொருந்தாமல் ஆடவரை அணுகுகின்ற மனத்தினை உடையவர்கள் விலைமாதர்கள் என்பதைப் பின்வரும் பிராணத்தால் அறிக.

களபம் ஒழுகிய புளகித முலையினர்,
     கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்,
     கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர், ...... எவரோடும்
கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்,
     பொருள்இல் இளைஞரை வழிகொடு, மொழிகொடு,
     தளர விடுபவர், தெருவினில் எவரையும் ...... நகையாடி,

பிளவு பெறில்அதில் அளவுஅளவு ஒழுகியர்,
     நடையில் உடையினில் அழகொடு திரிபவர்,
     பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு, ......குழைவோடே,
பிணமும் அணைபவர், வெறிதரு புனல்உணும்
     அவச வனிதையர், முடுகொடும் அணைபவர்,
     பெருமை உடையவர், உறவினை விட,அருள் ...... புரிவாயே.
                                                               --- திருச்செந்தூர்த் திருப்புகழ்.

 
காமம் இவர் சில கபடிகள் ---

காம இன்பத்தைத் தருகின்ற இவர்கள் கள்ள நெஞ்சத்தினை உடையவர்கள்.

இவர்தல் - சொல்லுதல், உலாவுதல், பார்த்தல், பொருந்துதல், மேற்கொள்ளுதல்.

காம உணர்வை உடையவர்கள், காம உணர்வோடு உலாவுபவர்கள். காம உணர்வோடு பார்ப்பவர்கள், காம உணர்வோடு பொருந்துபவர்கள்.

படிறு சொல் கலையாலும் ---

படிறு - வஞ்சனை, பொழ், குறும்பு, களவுப் புணர்ச்சி, கொடுமை.

இத்தனை குணங்களை உள்ளத்தில் கொண்டு பேசுகின்றதில் வல்லவர்கள் விலைமாதர்கள்.

சால மயல்கொடு ... மிகு கலவியில் அழிவு உறும் அடியேனை ---

மிக்க மோகம் கொண்டவர் போல நடித்து, பொருளைப் பறித்து, பொருள் அளவு இன்பம் மிகும்படியாக பெருத்த முலைகள் பொருந்த அணைபவர்கள் விலைமதர்கள். விலைக்கு ஏற்ப அணைவதால் விலைமாதர் எனப்பட்டனர். அவர்களிடத்தில் மயங்கி, கடி உலவு காயில் பகல் இரவு எனாது கலவி தனில் மூழ்கியவன் வறியவன் ஆவான். அவனிடத்தில் கயமைக் குணம் பொருந்தி இருக்கும். கயமை என்பது கீழ்மை. கீழ்மைக் குணம் பொருந்தியவனிடத்தில் மேன்மைக் குணம் விளங்காது.

 
சாதி குலம் உறு படியினின் முழுகிய தாழ்வு அது அற ---

பிறப்பு என்பது எல்லா உயிர்களுக்கும் அவை முற்பிறப்பில் ஈட்டிய வினைத் தொகுதியாகிய சஞ்சிதம் என்னும் இருப்பு வினையில், இறையருளால் அனுபவித்துக் கழிக்கவேண்டிய பிராரத்தம் என்னும் நுகர்வினைக்கு ஏற்பவே பிறவி உண்டாகின்றது.

இதனைக் கம்பநாட்டாழ்வார் கூறுமாறு காண்க...

இனையது ஆதலின் எக்குலத்து யாவர்க்கும்
வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்,
அனைய தன்மை அறிந்தும் அழித்தனை
மனையின் மாட்சி என்றான் மனுநீதியான்  --- வாலி வதைப்படலம், கம்பராமாயணம்

எந்தக் குலத்தில் தோன்றியவர்க்கும் உயர்வும் இழிவும் அவரவர் செய்த செயல்களாலேயே வரும். இதனை உணர்ந்து இருந்தும் பிறன் மனைவியின் கற்பினை அழித்தாய் - என்று மனு நீதி சாஸ்திரத்தில் சொன்னபடி நடக்கும் என்று இராம பிரான் வாலியிடம் கூறினான்

திருவள்ளுவர் சொன்னதும் அதுவே.....

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமையான்.

அனைத்து மக்கள் உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையானது. ஆனால், செய்கின்ற நன்மை தீமை என்னும் தொழில்களின் வேறுபாட்டால், மேன்மை என்பது ஒரு தன்மையாக இருக்காது.

மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர், கீழ் இருந்தும்
கீழ் அல்லார் கீழ் அல்லவர்.

உயர்ந்த சூழலில் இருந்தும், மேன்மைப் பண்பும் செய்கையும் இல்லாதார் மேலான சான்றோர் ஆகமாட்டார். தாழ்ந்த சூழலில் இருந்தும், தாழ்ந்த பண்பும், செய்கையும் இல்லாதவர் கீழானவர் ஆகமாட்டார்.

பகவான் கிருஷ்ணன் சொன்னதும் அதுவே ---

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்ம விபாகசஹ
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரம வ்யயம்..      --- பகவத் கீதை 4-13.

குணத்துக்கும் கர்மத்துக்கும் ஏற்ப நான்கு வருணங்களை நான் படைத்தேன். அதற்குக் கர்த்தா எனினும், என்னை அவிகாரி என்றும், அகர்த்தா என்றும் அறிவாயாக.

குணபேதத்தால் படைப்பு உண்டாகின்றது. சத்துவகுணம் நிறைந்திருக்கும் உயிர் அந்தணன். சத்துவகுணமும், சிறிது ரசோ குணமும் கூடி இருப்பவன் சத்திரியன். ரசோகுணம் பெரும்பகுதியும், சிறிது சத்துவம், தமோ குணம் ஆகியவை கூடி இருப்பவன் வைசியன். தமோகுணம் பெரிதும், சிறிது ரசோகுணமும் சேர்ந்து இருப்பவன் சூத்திரன்.

சத்துவத்தின் நிறம் வெண்மை.
ரசோகுணத்தின் நிறம் சிவப்பு.
தமோ குணத்தின் நிறம் கறுப்பு.

அந்தணனுடைய நிறம் வெண்மை.
சத்திரியன் செந்தாமரை போன்றவன்.
வைசியனுக்கு நிறம் மஞ்சள்.
சூத்திரனுக்கு நிறம் கறுப்பு.

இந்த நிறத்தில் உண்மையில் தூல உடம்பில் புலப்படுபவை அல்ல. தூல உடலில் ஐரோப்பியர் எல்லோரும் வெள்ளையர். ஆனால், அவர்கள் எல்லாரும் அந்தணருக்கு உரிய இயல்பினை உடையவர் அல்லர். அமெரிக்க இந்தியர் நிறம் சிவப்பு. ஆனால், அவர்கள் எல்லோரும் சத்திரியர் அல்லர். மங்கோலியர் மஞ்சள் நிறம். ஆயினும் அவர்கள் யாவரும் வைசியர் இல்லை. இராமனும், கிருஷ்ணனும் போன்ற இந்தியர் கறுப்பு நிறம். ஆயினும் அவர்கள் அனைவரும் சூத்திரர் அல்லர். ஆக, தூல உடம்பின் தன்மை, உயிரின் தன்மையை விளக்காது.

எனவே, நான்கு வருணங்களின் நிறமானது மனதை ஒட்டியாதகவே அமையும். சமுதாயத்தில் உள்ள நிலைமையை வைத்து, பிறப்பை அனுசரித்து வருணத்தை நிர்ணயிப்பது பொருந்தாது. நான்கு வருணங்கள் என்பவை மனத்தின் பரிபாகத்தை ஒட்டியதாகவே அமையும். ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்களுக்கு இடையில், அடைந்திருக்கும் மனப் பக்குவத்திற்கு ஏற்ப, ஒருவன் அந்தணனகவும், ஒருவன் சத்திரியன் ஆகவும், இன்னொருவன் வைசியன் ஆகவும், மற்றொருவன் சூத்திரனாகவும் இருப்பான்.

ஔவையார் சொன்னதும் அதுவே....

சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை, சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியர், இடாதார் இழிகுலத்தார்,
பட்டாங்கில் உள்ள படி.

இந்த உண்மைகளை உணராது சாதி குலம் பற்றி மேம்போக்காக அவரவர் அறிந்தபடி ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்துக் கொள்வது, பிறவியின் ஏற்றத்திற்கு உதவாது.

சாதிகுலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி, நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு
பேதைகுணம் பிறர்உருவம் யான்எனது என் உரைமாய்த்துக்
கோதுஇல் அமுது ஆனானைக் குலாவு தில்லைக் கண்டேனே.

சாதி, குலம், பிறவி என்கின்ற சூழலிலே அகப்பட்டு அறிவு கலங்குகின்ற அன்பில்லாத நாய் போன்ற எனது துன்பத்தினைக் களைந்து, அடிமை கொண்டு அறியாமைக் குணத்தையும் அன்னியருடைய வடிவம் என்ற எண்ணத்தையும் நான், எனது என்று சொல்லும் வார்த்தையையும் அறவே அழித்து, குற்றம் இல்லாத அமுதம் ஆனவனைத் தில்லையம்பலத்தில் கண்டேன் என்கின்றார் மணிவாசகப் பெருமான்.

"சாதி மதம் மயம் எனும் சங்கடம் விட்டு அறியேன்" என்கின்றார் வள்ளல்பெருமான். அப் பெருமான் மேலும் அறிவுறுத்துவதை அறிவோமாக...

நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
     நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே,
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலை,நீ
     விழித்து இதுபார் என்று எனக்கு விளம்பியசற் குருவே,
கால்வருணம் கலையாதே வீணில்அலை யாதே
     காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே,
மால்வருணங் கடந்தவரை மேல்வருணத்து ஏற்ற
     வயங்குநடத்து அரசேஎன் மாலைஅணிந் தருளே.

இருள்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
     இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு,
மருள்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
     வழக்கெலாம் குழிக்கொட்டி, மண்மூடிப் போட்டு,
தெருள்சாரும் சுத்தசன் மார்க்கநல் நீதி
     சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும்
அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே!
     அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே!.

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
     சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்,
     அலைந்து அலைந்து வீணேநீர் அழிதல் அழகு அலவே,
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
      நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
      மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.

என்னதான், அறிவுரைகளை அருளாளர்களும் ஆன்றோரும் பகர்ந்து இருந்தாலும், இன்னமும் பகரமாக சாதி மத உணர்வுகளை விடாமல் பற்றி இருந்துகொண்டு, அடியவர்கள் என்னும் பெயரோடு உலவுகின்ற அன்பர்கள் இதனைத் தெளிந்து உய்ய வேண்டும்.

"சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாதே?" என்று திருவாசகத்தின் இறுதிப் பகுதியில் மணிவாசகனார் அருளி இருப்பதையாவது அன்பர்கள் நுனித்து உணர்வார்களாக. "பிறந்த இனம் பற்றி விடாது வருகிற தன்மைகள் நம்மிடம் இருந்து நீங்குதலும் ஆகாது போகுமோ?"  இறைவன் வெளிப்படும்போது இது நிகழும் என்கின்றார்.  இறையருள் கிட்டவேண்டுமானால், சதி, குலம், மதம், என்னும் பேதங்களை விட்டுவிட வேண்டும்.

இடை தருவன வெளி உயர் தாள் அது அடைவது தவம் ---

வாழுகின்ற வழியிலே உயிருக்கு உறுதுணையாக வந்து உதவுவது இறைனுடைய திருவடி மட்டுமே.

பின் வரும் திருக்குறள் பாக்களைச் சிந்தையில் வைக்கவும்...

கற்றதனால் ஆய பயன் என்கொல்? வால் அறிவன்
நல்தாள் தொழாஅர் எனின்.

மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

முதல் அதிகாரத்தில் வரும் பத்துத் திருக்குறள் பாக்களில், ஏழில் திருவள்ளுவ நாயனார் இறைவனுடைய "திருவடி, தாள்" குறித்துத் தான் பேசுகின்றார் என்பதில் இருந்தே இறைவனுடைய திருவடி தான் உயிர்க்கு மேலான இன்பத்தைத் தரவல்லது என்பது தெளிவாகும்.

எனவே, அத்தகு திருவடியை அடைவதே தவம் ஆகும் என்கின்றார் அடிகளார். திருவடியை அடைவதே தவம், என்பது, திருவடியை அடையத் தகுந்த நெறியில் வாழ்வதே தவம் என்று கொள்ளவேண்டும். இறைவன் திருவடி விளங்குகின்ற இடம் "யான் எனது என்று அற்ற இடம்" என்கின்றார் குமகுருபர அடிகள். எனவே, யான் என்னும் அகப்பற்றையும், எனது என்னும் புறப்பற்றையும் ஒழித்து வாழ்வதே சிறந்த தவம் ஆகும்.

அதற்கு உபாயமா, அடிகாளர் அருளியுள்ள கந்தர் அலங்காரப் பாடல் ஒன்றை அறிக.

தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியை, தானம் என்றும்
இடுங்கோள், இருந்தபடி இருங்கோள், எழுபாரும் உய்யக்
கொடும் கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்
விடும் கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே.


மிக நினைவு அது தருவாயே ---

அந்தத் தவ உணர்வில் பொருந்தி இருக்கும் அருளைத் தந்து அருள வேண்டும் என்று முருகப் பெருமானை அடிகளார் வேண்டுகின்றார்.
  
வேலை தனில் அரவணை விழி துயில்பவன் ---

திருப்பாற்கடலில் ஆதிசேடன் என்னும் பாம்புப் படுக்கையில் அறிதுயில் அமர்ந்தவர் திருமால்.

"நச்சுஅரவு அணைதுயில் அச்சுதன்" என்று திருத்தணிகைத் திருப்புகழில் அடிகாளர் அருளி இருக்குமாறு காண்க.

வேயின் இசை அது நிரை தனில் அருள்பவன் ---

"இனிது ஊதும் வேயால், நேக விதப் பசுத் திரள் சாயாமல் மீள அழைக்கும் அச்சுதன்" என அடிகளார் விராலிமலைத் திருப்புகழில் அருளியது காண்க.

வீர துரகத ---

துரகதம் - குதரை.  கல்கி.  திருமாலின் பத்துவதாரங்களில், இனி நிகழப் போகும் அவதாரம் திருமால் குதிரை உருவாய் வந்து உலகில் நேர்மையை நிலைநிறுத்துவர்.

நர பதி ---  

கண்ணனாக அவதரித்து அருச்சுனனுக்குத் தலைவானவன்,

வேறு வடிவு கொடு உறி வெ(ண்)ணெய் தயிர் அது வேடை கெட அமுது அருளிய பொழுதினில் வனிதையர் கரம் மீதே வீசு கயிறு உடன் அடிபடு சிறியவன் ---  

திருமால் துவாபர யுக முடிவில் தேவகி வயிற்றில் திருவவதாரம் புரிந்து ஆயர்பாடியில் யசோதை மகனாக வளர்ந்தார். முற்பிறப்பில் தாருக வனத்து முனிவர்களாகவும், தண்டக வனத்தில் முனிவர்களாகவும், இருந்து தவஞ் செய்தவர்கள் கோபிகைகள். ஆதலால் அவர்கள் உள்ளங்கவர் கள்வனாக கண்ணபிரான் சென்று, அவர்கள் உள்ளத்தையும் தயிரையும் ஒருங்கே களவு செய்தருளினார்.

இரட்டைப் புலவர்கள் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, ஒரு பனமுடிப்பை பிள்ளையார் பின்புறத்தில் வைத்து நீராடச் சென்றார்கள். விநாயகர் புலவர்களிடம் விளையாடக் கருதி அப் பண முடிப்பை மறைத்தருளினார்.

இரட்டையர்கள் வந்து பார்த்தார்கள். பணமுடிப்பு இல்லை. வறிய புலவர்கட்கு உள்ளம் எப்படியிருக்கும்? உடனே பெருமானைப் பார்த்துப் பாடுகின்றார்கள்.

தம்பியோ பெண்திருடி, தாயாருடன் பிறந்த
வம்பனோ நெய்திருடி மாயனாம்,-அம்புவியில்
மூத்த பிள்ளையாரே முடிச்சு அவிழ்த்துக் கொண்டீரோ?
கோத்திரத்தில் உள்ள குணம்.

உள்ளமாகிய பாலில் தீய நினைவுகளாகிய நீர் வற்ற ஞானமாகிய நெருப்பை மூட்டிக் காய்ச்சி, பக்குவமாகிய இளஞ்சூட்டில் ஐந்தெழுத்தாகிய உறை விட்டு, உறுதியாக உறியில் வைத்து, அசையாமல் நிருவிகற்ப சமாதியில் நிலைத்து நின்று, அன்பு என்ற மமதையிட்டு அறிவு என்ற கயிற்றைக் கொண்டு கடைந்தால், இறையருளாகிய வெண்ணெய் வெளிப்படும்.

கண்ணபிரான் திருவிளையாடல்

1. கண்ணபிரான் நித்தம் நித்தம் வெண்ணெய்யும், பாலும், தயிரும் திருடியதால் யசோதை உரலிலே கட்டும்பொருட்டு தாம்புக் கயிற்றை எடுத்து வயிற்றிலே சுற்றினாள். அது ஒரு சாண் எட்டாதாயிற்று. வேறு ஒரு கயிற்றை முடிந்தாள். அதுவும் எட்டவில்லை. இவ்வாறு பல கயிறுகளை முடிந்தும் கட்ட முடியாது திகைத்தாள். கண்ணபிரான் தாயாருடைய அன்பினைக் கருதி வயிற்றைச் சுருக்கிக் கொண்டார். கட்டிவிட்டாள். உரலில், கயிற்றினால் கட்டப்பட்ட வயிற்றை உடையவர் என்ற பொருளில் தாமோதரன் என்ற பேர் பெற்றார்.

கட்டுப்பட்ட கண்ணபிரான் ஒரு நல்ல கருமம் புரியத் திருவுள்ளம் பற்றினார்.

2. நந்தகோபனுடைய வாசலில் இரு மருத மரங்கள் இருந்தன. அவற்றின் இடையே சென்றார். உரல் அதில் நுழைய முடியவில்லை.

பெருமாள் திருவடியால் உதைத்தருளினார். அம் மரங்கள் வேருடன் சாய்ந்து வீழ்ந்தன. அம் மரங்களிலிருந்து இரு புண்ணிய உருவங்கள் வெளிப்பட்டன. தேவர்கள் பூ மழை பொழிந்தார்கள்.

குபேரனுடைய புதல்வர்கள் இருவர் நளகூபரன், மணிக்ரீவன் என்ற பெயருள்ளவர்கள். பேராற்றல் படைத்தவர்கள். மன்மதனைப் போன்ற வனப்புடையவர்கள். கயிலாய மலையின் சாரலில் சிறிது மதுவுண்டு மயங்கி மனைவியருடன் நிர்வாணமாக நீராடிக் கொண்டிருந்தார்கள். அங்கே நாரத முனிவர் வந்தார். அவரைக் கண்டு பெண்கள் நாணி ஆடையை உடுத்துக் கொண்டார்கள். மது மயக்கத்தால் கந்தருவர் இருவர்களும் ஆடையுடுக்காமல் நாரதரை எதிர்கொண்டு வணங்காமலும் இருந்தார்கள்.

நாரதர் சீற்றமுற்று, “மூடர்களே! நீவீர் முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் மருத மரங்களாயிருந்து கண்ணனுடைய கருணைக் கழலின் தொடர்பால் இச்சாபம் நீங்கப் பெறுவீர்கள்” என்று கூறினார். அந்தக் கந்தருவர்கள் நந்தகோபாலனுடைய வீட்டின் வாசலில் மருத மரங்களாய் முளைத்து முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் நின்றார்கள். ஐயனுடைய துய்ய சரணம் தீண்டியதால் வெய்ய சாபம் விலகப் பெற்றார்கள். கண்ணபிரானைத் தொழுதார்கள். துதி செய்தார்கள். இதனால் ஆடை உடுத்தாதவர் மரமாவார்.

காயாத பால் நெய் தயிர்க் குடத்தினை
     ஏயா எணாமல் எடுத்து, இடைச்சிகள்
     காணாத ஆறு குடிக்கும் அப்பொழுது, ...... உரலோடே
கார் போலும் மேனி தனைப் பிணித்து, ஒரு
     போர் போல் அசோதை பிடித்து அடித்திட,
     காதோடு காது கையில் பிடித்துஅழுது, ......இனிதுஊதும்
வேயால், நேக விதப் பசுத் திரள்
     சாயாமல் மீள அழைக்கும் அச்சுதன்,
     வீறுஆன மாமன் எனப் படைத்துஅருள் ...... வயலூரா!  --- விராலிமலைத் திருப்புகழ்.

கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர்தனை
     நச்சியெ திருடிய ...... குறையால், வீழ்
குற்கிர வினியொடு நல்திற வகை அறி
     கொற்ற உவணம் மிசை ...... வரு கேசன்,
அச் சுதை நிறைகடல், நச்சுஅரவு அணைதுயில்
     அச்சுதன் மகிழ்தரு ...... மருகோனே!                     --- திருத்தணிகைத் திருப்பகழ்.

ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு,
பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு,
வேய்த் தடந்தோளினார் வெண்ணெய் கோள் மாட்டாது, அங்கு
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்,
அடியுண்டு அழுதானால் இன்று முற்றும்.                       --- பெரியாழ்வார்.


அதி கோப வாலியுடன் எழு மரம் அற ---

எனது மொழி வழுவாமல் நீ ஏகு கான் மீதில்,
     என விரகு குலையாத மாதாவும் நேர் ஓத,
     இசையும் மொழி தவறாமலே ஏகி, மாமாதும், ...... இளையோனும், 
இனிமையொடு வரும் மாய மாரீச மான் ஆவி
     குலையவரு கர தூஷணா வீரர் போர்மாள,
     இறுகி நெடு மரம் ஏழு தூளாகவே, வாலி ......உயிர்சீறி,

அநுமனொடு கவி கூட வாராக நீர் ஆழி
     அடைசெய்து, அணை தனில் ஏறி, மாபாவி ஊர்மேவி,
     அவுணர்கிளை கெடநூறி, ஆலால மாகோப ......நிருதஈசன் 
அருணமணி திகழ்பார வீராகரா மோலி
     ஒருபதும் ஒர் கணை வீழவே மோது போராளி,
     அடல்மருக! குமர!ஈச! மேலாய வானோர்கள் ......பெருமாளே.--- பொதுத் திருப்புகழ்.

சானகி கற்புத் தனைச் சுட, தன்
     அசோக வனத்தில் சிறைப் படுத்திய
     தானை அரக்கர் குலத்தர் அத்தனை ...... வரும் மாள,
சாலை மரத்துப் புறத்து ஒளித்து, அடல்
     வாலி உரத்தில் சரத்தை விட்டு, ஒரு
     தாரை தனைச் சுக்ரிவற்கு அளித்தவன் ....மருகோனே!
                                                                ---  திருவண்ணாமலைத் திருப்புகழ்.

வடிவுடைய மானும், இகல் கரனும், திகழ்
     எழுவகை மராமரமும், நிகர் ஒன்றும்இல்
     வலிய திறல் வாலி உரமும், நெடுங்கடல் .... அவைஏழும்
மற நிருதர் சேனை முழுதும் இலங்கைமன்
     வகை இரவி போலும் மணியும், அலங்க்ருத
     மணிமவுலி ஆன ஒருபதும், விஞ்சு இரு- ...... பதுதோளும்
அடைவலமும் மாள விடு சர அம்புஉடை
     தசரத குமார, ரகுகுல புங்கவன்,
     அருள்புனை முராரி மருக!                          --- சுவாமிமலைத் திருப்புகழ்.


நிசிசரன் வாகு முடி ஒருபது(ம்) கரம் இருபது(ம்) மாள ஒரு சரம் விடும் ஒரு கரியவன் மருகோனே ---

அரக்கனாகிய இராவணனின் பத்துத் தலைகளும், இருபது தோள்களும் மாளவும், ஒப்பற்ற அம்பினை விடுத்த, கருநிறம் கொண்ட திருலின் திருமருகர் முருகப் பெருமான்.

இராவணன் வஞ்சனை உடையவன் என்று அருணகிரிநாதர் கூறுகின்றார். இராவணன் சீதையைச் சிறை பிடித்தது பிழை அன்று என்றும், தன் தங்கை சூர்ப்பணகையை இலட்சுமணன் மூக்கு அறுத்தபடியால் பழிக்குப் பழி வாங்கும் பொருட்டுச் சீதையைச் சிறை பிடித்தான். ஆகவே அது வீரச் செயல் என்றும், இராவணன் சீதையைச் சிறைப் பிடித்தானே அன்றி பத்து மாதகாலமாக அவளைத் தீண்டாமல் இருந்ததுவே அவன் பெருந்தன்மைக்கு அறிகுறி என்றும் வாதிக்கின்றவர்களும் உண்டு.

இராவணன் தன் தங்கை சூர்ப்பணகையின் மூக்கரிந்த இராம லட்சுமணரைப் பழிக்குப் பழி வாங்க நினைத்திருப்பான் ஆயின், ’இன்ன நேரத்தில் நான் வருவேன்’ என்று ஓர் அறிக்கை மூலம் எச்சரிக்கைத் தந்து, அதுபடி சென்று போர் புரிந்து, இராம லட்சுமணரை வென்று, சீதையைச் சிறை எடுப்பது அல்லவா வீரச் செயல்? அதுதானே, வீரர்கட்கு முறை? அப்படிக்கு இன்றி, மான் அனுப்பி, மான் பின்னே இராம லட்சுமணர்கள் சென்ற பின், சன்னியாச வடிவில் வந்து, அன்னங்கேட்டு, அன்னமிட வந்த சீதையைக் கன்னமிட்டனன். இராமர் இல்லாதபோது ஒரு பெண்மணியைச் சிறை செய்வது என்ன முறை? ஆகவே, ராவணன் செய்தது வீரச்செயல் அன்று, காம மயக்கத்தால் செய்த வஞ்சனைச் செயல். இலட்சுமணரைப் பழிவாங்க நினைத்தால், அவர் மனைவி ஊர்மிளையை அல்லவா கவர்ந்து வரவேண்டும். இவைகளை அன்பர்கள் உணர்க.

இராவணன் சேனைகளுடன் போருக்கு வந்து எதிர்த்து, தனது பராக்கிரமத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசி, வம்பு வார்த்தைகளும் இகழ்ச்சி யுரைகளும் பேசித் தனது சிறுமையைப் புலப்படுத்தினான்.

திருமால் இராமபிரானாகக அவதரித்து, இராவணாதி அவுணரை வென்றனர். வெற்றி என்பது ஸ்ரீராமருக்கு மிகவும் உரியது. அவருடைய கணை வெற்றி பெறாது மீளாது. அதனால் ஸ்ரீராம ஜெயம் என்று குறிக்கின்ற வழக்கம் ஏற்பட்டது.

வஞ்சம் கொண்டும் திட ராவண-
     னும் பந்துஎன் திண் பரி தேர்கரி
     மஞ்சின் பண்பும் சரி ஆமென ...... வெகுசேனை
வந்தம்பும் பொங்கிய தாக
     எதிர்ந்தும், தன் சம்பிரதாயமும்
     வம்பும் தும்பும் பல பேசியும் ...... எதிரே கை

மிஞ்ச என்றும் சண்டை செய் போது
     குரங்கும் துஞ்சும் கனல் போலவெ
     குண்டும் குன்றும் கரடு ஆர் மரம் ...... அதும்வீசி
மிண்டும் துங்கங்களினாலெ
     தகர்ந்து அங்கம் கம் கர மார்பொடு
     மின் சந்தும் சிந்த, நிசாசரர் ...... வகைசேர-

வும், சண்டன் தென்திசை நாடி,
     விழுந்து, ங்கும் சென்றுஎம தூதர்கள்
     உந்து உந்து உந்து என்றிடவே, தசை ......நிணமூளை
உண்டும் கண்டும் சில கூளிகள்
     டிண்டிண்டு என்றும் குதி போட,
     உயர்ந்த அம்பும் கொண்டுவெல் மாதவன் ......மருகோனே!
                                                             ---  திருச்செந்தூர்த் திருப்புகழ்.

வாசம் உறு மலர் விசிறிய பரிமளம் மாதை நகர் தனில் உறையும் ஒர் அறுமுக ---

நறுமணம் மிக்க மலர்களில் இருந்து வீசிய சுகந்தமானது பொருந்தியுள்ள திருவாமாத்தூர் என்னும் திருத்தரத்தில் வாழும் ஆறுமுகப் பரம்பொருள்.

திரு ஆமாத்தூர் தல வரலாறு

விழுப்புரம் - திருவண்ணாமலை - செஞ்சி பேருந்துச் சாலையில், 2. கி.மீ. சென்றால் "திருவாமாத்தூர்" கைகாட்டியில் இடப்புறமாகப் பிரிந்து செல்லும் பாதையில் 6 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். விழுப்புரம் - சூரப்பட்டு நகரப் பேருந்து திருவாமாத்தூர் வழியாகச் செல்கிறது. விழுப்புரம் சென்னையில் இருந்து 160 கி.மி. தொலைவில் உள்ளது.

இறைவர்               : அழகிய நாதர், அபிராமேசுவரர்
இறைவியார்           : முத்தாம்பிகை
தல மரம்                : வன்னி மரம்
தீர்த்தம்                  : பம்பை ஆறு, ஆம்பலப்பொய்கை.

மூவர் முதலிகள் வழிபட்டதும், திருப்பதிகங்கள் பெற்றதும் ஆகிய அருமைத் திருத்தலம்.

ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பில்லாமல் படைக்கப்பட்டிருந்தன. தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் சிங்கம், புலி முதலிய மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட்டன. நந்திதேவரும் அவைகள் வேண்டுவது சரியே என்று கூறி பம்பை நதிக்கரையிலுள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேசுவரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறினார். அவ்வாறே பசுக்களும் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றன. ஆக்கள் (பசுக்கள்) பூஜித்த காரணத்தால் இத்தலம் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது. இந்த திரு ஆமாத்தூர் தலத்தை யார் புகழ்ந்து பேசினாலும் அல்லது மற்றவர்கள் புகழக் கேட்டாலும் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று தல புராண வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் உள்ள சிவாலயம் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்புடையது.

இறைவன் கோயிலும், இறைவி கோயிலும் தனித்தனியே சாலையின் இருபுறமும் எதிரெதிரே கோபுரங்களுடன் அமைந்துள்ளன. இறைவன் கோயில் கோபுரம் 7 நிலைகளுடன் கிழக்கு நோக்கி நல்ல சுற்று மதிலுடன் விளங்குகின்றது. அம்பாள் கோவில் கோபுரம் 5 நிலைகளுடன் மேற்கு நோக்கி உள்ளது. சுவாமி கோவில் இராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் எதிரே பெரிய சுதை நந்தி நம்மை வரவேற்கிறது. இறைவன் குடியிருக்கும் ஆலயம் இரண்டு பிரகாரங்கள் கொண்டது. அச்சுதராயர் என்றவர் இந்த ஆலயத் திருப்பணி செய்தவர்களில் முதன்மையானவர். அவரின் சிலை வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கிறது. மேலும் வெளிப் பிராகாரத்தில் உள்ள சித்தி விநாயகர் சந்நிதியும், தனிக் கோயிலாகவுள்ள சண்முகர் சந்நிதியும், ஈசான்ய லிங்கேஸ்வரர் சந்நிதியும் தரிசிக்கத்தக்கது. வெளிப் பிரகார வலம் முடித்து சித்தி விநாயகர் சந்நிதி அருகே உள்ள படிகளேறி உள்பிரகாரத்தை அடையலாம். நேரே தெற்கு நோக்கிய நடராச சபை உள்ளது. உள்பிரகார சுற்றில் 63 மூவர், காலபைரவர், தேவ கோஷ்டத்தில் சனகாதி முனிவர்களுடன் தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், சிவபூஜை விநாயகர் ஆகியோரைக் காணலாம். கருவறை அகழி அமைப்புடன் உள்ளது. மூலவர் வாயிலில் இருபுறங்களிலும் துவார பாலகர் வண்ணச் சுதையில் உள்ளனர். அபிராமேஸ்வரர் என்றும், அழகிய நாதர் என்றும் வழங்கும் இத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு மூர்த்தியாவார். பசுக்கள் பூஜை செய்ததின் அடையாளமாக சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திரனின் பிறை போல் வளைந்து பசுவின் கால் குளம்பின் சுவடு தென்படுகிறது. இறைவன் சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படுகிறார். இரண்டாம் பிரகாரத்தில் இராமர், முருகன், திருமகள் ஆகியோர் சந்நிதிகள் இருக்கின்றன. மதங்க முனிவரால் உருவாக்கப் பெற்ற தீர்த்தம் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது. இதில் நீராடாமல், நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டாலே சிவபுண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.

சாலையில் எதிரே உள்ள அம்பாள் கோபுர வாயில் வழியாக உள்ள நுழைந்தால் கொடிமரம், பலிபீடம், சிம்மம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. உள் வாயிலின் இருபுறமும் வண்ணச் சுதையால் அமைந்த துவாரபாலகியர் உருவங்கள் உள்ளன. அம்பாள் முத்தாம்பிகை மேற்கு நோக்கி அருட்காட்சி தருகிறாள். இந்த அம்பாள் ஒரு வரப்பிரசாதி. அம்பாள் சந்நிதிக்கு நுழையும் போதே வலதுபுறம் மூலையில் வட்டப்பாறை அம்மன் சந்நிதி (அம்பாளின் சாந்நித்யரூபம்) உள்ளது. தற்போது இச் சந்நிதியில் சிவலிங்கமே உள்ளது.

வட்டப் பாறை: அம்பிகை சந்நிதியின் பிரகாரச் சுற்றில் தென் புறம் ஒரு வட்டப் பாறையும், அருகில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் இராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்பு கொண்டபோது இந்த வட்டப் பாறை முன் உடன்பாடு செய்துகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. ஊரில் உள்ள எல்லோரும் வட்டப் பாறையின் மீது கை வைத்து சத்தியம் செய்து தங்கள் வழக்குகளை தீர்த்துக் கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இந்த வட்டப் பாறை ஒரு சிறிய சந்நிதி. இதன் முன் பொய் சொல்வோர் மீளாத துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று ஐதீகமுண்டு.

வட்டப்பாறை அம்மன் சந்நிதி தொடர்பாகச் சொல்லப்படும் ஒரு வரலாறு

அண்ணன் ஒருவன் இளையவனான தன் தம்பியை ஏமாற்றிச் சொத்தினைத் தனக்குச் சேர்த்துக் கொண்டான். வயது வந்து உண்மையறிந்த தம்பி அண்ணனிடம் சென்று தனக்குரிய சொத்தைத் தருமாறு கேட்டான். அண்ணன் மறுக்க, தம்பி பஞ்சாயத்தைக் கூட்டினான். பஞ்சாயத்தார் வட்டப்பாறை அம்பாள் சந்நிதியில் அண்ணனை சத்தியம் செய்து தருமாறு கூறினர். அண்ணன் இதற்கென ஒரு சூழ்ச்சி செய்தான். தம்பியின் சொத்தால் பெற்ற மதிப்பைத் திரட்டிப் பொன் வாங்கி அதைத் தன் கைத்தடியில் பூணுக்குள் மறைத்துக் கொண்டான். அத்தடியுடன் பஞ்சாயத்து நடக்கும் அவைக்கு வந்து, தம்பியிடம் தடியைத் தந்துவிட்டு, அம்பாள் சந்நிதியில் இருகைகளாலும் "‘தன்னிடம் தம்பியின் சொத்து ஏதுமில்லை, எல்லாம் அவனிடமே உள்ளது" என்று சத்தியம் செய்து கொடுத்தான். சூழ்ச்சியறியாத அனைவரும் வேறுவழியின்றி அவனைத் தம்பியுடன் அனுப்பி விட்டனர். தம்பியிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்ட கைத்தடியுடன் சென்ற அண்ணன், இத்தலத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள தும்பூர் நாகம்மன் கோயிலை அடைந்தபோது அம்பாளின் தெய்வ சக்தி தன்னை ஒன்றும் செய்யவில்லை என்று இறுமாப்புக் கொண்டு அம்பாளையும் சேர்த்துத் திட்டினானாம். அப்போது கரும் பாம்பு ஒன்று தோன்றி அவனைக் கடித்துச் சாகடித்தது என்று வரலாறு சொல்லப்படுகிறது. அவ்வாறு கடித்துச் சாகடித்த இடத்தில் இன்றும் பெரிய நாகச்சிலை ஒன்றுள்ளது. இந்நிகழ்ச்சியை மெய்ப்பிக்கும் வகையில் இன்றும் முத்தாம்பிகை அம்பாளின் மார்பில் பாம்பின் வால் சிற்பம் உள்ளது. சிவாச்சாரியாரிடம் கேட்டு நேரில் காணலாம். அம்பாளுக்குச் செய்யப்பட்டுள்ள வெள்ளிக் கவசத்திலும் பாம்பின் வால் செதுக்கப்பட்டுள்ளது.

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "சூர்ப் புடைத்தது ஆம் மா தூர விழத் தடிந்தோன் கணேசனோடும் ஆமாத்தூர் வாழ் மெய் அருட் பிழம்பே" என்று போற்றி உள்ளார்.

கருத்துரை

முருகா! தேவரீரது திருவடியில் பொருந்தி இருக்கும்
தவ உணர்வைத் தந்து அருளவேண்டும்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...