திரு ஆமாத்தூர் - 0742. கருமுகில் போல்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கருமுகில் போல் (திரு ஆமாத்தூர்)

முருகா!
விலைமாதர் வசமாகி அழியாமல் திருவருள் புரிவாய்.


தனதன தானத் தானன, தனதன தானத் தானன
     தனதன தானத் தானன ...... தனதான


கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடு
     கனியமு தூறித் தேறிய ...... மொழிமாதர்

கலவிகள் நேரொப் பாகிகள் மதனிகள் காமக் க்ரோதிகள்
     கனதன பாரக் காரிகள் ...... செயலோடே

பொருகயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக் காரிகள்
     பொருளள வாசைப் பாடிகள் ...... புவிமீதே

பொதுவிகள் போகப் பாவிகள் வசமழி வேனுக் கோரருள்
     புரிவது தானெப் போதது ...... புகல்வாயே

தருவடு தீரச் சூரர்கள் அவர்கிளை மாளத் தூளெழ
     சமனிலை யேறப் பாறொடு ...... கொடிவீழத்

தனதன தானத் தானன எனஇசை பாடிப் பேய்பல
     தசையுண வேல்விட் டேவிய ...... தனிவீரா

அரிதிரு மால்சக் ராயுத னவனிளை யாள் முத் தார்நகை
     அழகுடை யாள்மெய்ப் பாலுமை ...... யருள்பாலா

அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடிய
     அழகர்தென் மாதைக் கேயுறை ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


கருமுகில் போல்மட்டு ஆகிய அளகிகள், தேனில் பாகொடு
     கனி அமுது ஊறித் தேறிய ...... மொழிமாதர்,

கலவிகள், நேர் ஒப்பாகிகள், மதனிகள், காம க்ரோதிகள்,
     கனதன பாரக் காரிகள், ...... செயலோடே

பொருகயல் வாளைத் தாவிய விழியினர், சூறைக் காரிகள்,
     பொருள் அளவு ஆசைப் பாடிகள், ...... புவிமீதே

பொதுவிகள், போகப் பாவிகள், வசம் அழிவேனுக்கு ஓர் அருள்
     புரிவது தான் எப்போது? து ...... புகல்வாயே.

தரு அடு தீரச் சூரர்கள், அவர்கிளை மாளத் தூள்எழ,
     சமன் நிலை ஏற, பாறொடு ...... கொடிவீழ,

தனதன தானத் தானன எனஇசை பாடி, பேய்பல
     தசை உண வேல் விட்டு ஏவிய ...... தனிவீரா!

அரி திருமால் சக்ராயுதன் அவன் இளையாள், முத்து ஆர்நகை
     அழகு உடையாள், மெய்ப் பால் உமை ...... அருள்பாலா!

அரவொடு, பூளைத் தார்,மதி, அறுகொடு, வேணிச் சூடிய
     அழகர், தென் மாதைக்கே உறை ...... பெருமாளே.

பதவுரை

     தரு அடு தீரச் சூரர்கள் --- தேவலோகத்தில் உள்ள கற்பக மரத்தை அழித்த சூரர்கள்,

     அவர் கிளை மாளத் தூள் எழ --- அவருடைய சுற்றமும் மாண்டு பொடியாகப் போ,

     சமன் நிலை ஏற --- இயமனுடைய கொலைத் தொழில் நிறைவே,

     பாறொடு கொடி வீழ --- பருந்துகளுடன் காக்கைகளும் வந்து நெருங்,

      தனதன தானத் தானன என இசைபாடி --- தனதன தானத் தானன என்னும் சந்தங்களுடன் பொருந்,

     பேய் பல தசை உ(ண்)ண --- பேய்கள் பிணங்களின் தசைகளை உண்ணுமாறு,

     வேல் விட்டு ஏவிய தனி வீரா --- வேலலாயுதத்தை விடுத்து அருளிய ஒப்பற்ற வீரரே!

      அரி --- உயிர்களின் பாவத்தைப் போக்குபவர் ஆகிய

     திருமால் --- திருமால்,

     சக்ராயுதன் --- சுதரிசனம் என்னும் சக்கரத்தை ஆயுதமாக உடைவயன்,

     அவன் இளையாள் ---  ஆகிய அவனுக்கு இளையவளும்,

     முத்தார் நகை --- முத்துப் போன்ற பற்களை உடையவளும்,

     அழகு உடையாள் --- பேரழகினை உடையவளும்,

     மெய்ப் பால் உமை அருள் பாலா --- (சிவபெருமான்) திருமேனியில் ஒரு பாகத்தில் இருப்பவளும் ஆகிய உமாதேவியார் அருளிய திருக்குழந்தையே!

      அரவொடு --- பாம்பினுடன்,

     பூளைத் தார் --- பூளைப் பூவால் ஆன மாலை,

     மதி --- பிறைச் சந்திரன்,

     அறுகொடு வேணிச் சூடிய அழகர் --- அறுகம்புல் ஆகியவற்றைத் திருச்சடையில் வைத்தருளிய அழகர் ஆகிய சிவபெருமான்,

     தென் மாதைக்கே உறை பெருமாளே --- எழுந்தருளி உள்ள திரு ஆமாத்தூர் என்னும் திருத்தலத்தில் வாழுகின்ற பெருமையில் மிக்கவரே!

      கரு முகில் போல் மட்டு ஆகிய அளகிகள் --- கரிய மேகம் போன்றதும், நறுமணம் பொருந்தியதுமாகிய கூந்தலை உடைவயர்கள்,

     தேனில் பாகொடு கனி அமுது ஊறித் தேறிய மொழி மாதர் --- தேனில் வெல்லப்பாகுடன், கனிரசம் ஊறியது போன்ற இனிய பேச்சுக்களை உடைய விலைமாதர்கள்.

      கலவிகள் நேர் ஒப்பாகிகள் --- புணர்ச்சியைப் பொருந்துவதில் இசைவு உடையவர்கள்,

     மதனிகள் --- மதம் பிடித்தவர்கள்,

     காம க்ரோதிகள் --- காம உணர்வும், கோபக் குணமும் கொண்டவர்கள்,

     கன தனபாரக் காரிகள் --- பெருத்த தனங்களை உடையவர்கள்,

     செயலோடே பொரு கயல் வாளைத் தாவிய விழியினர் --- வேகத்துடன் சண்டை செய்யும் கயல் மீனையும் வாளை மீனையும் மீறிய கண்களை உடையவர்கள்.

      சூறைக்காரிகள் --- கொள்ளை ஆசைக்காரிகள்,

     பொருள் அளவு ஆசைப் பாடிகள் --- பொருளின் அளவுக்குத் தக்கபடி தமது ஆசையைச் செலுத்துபவர்கள்,

     புவி மீதே பொதுவிகள் --- உலகில் இவர்கள் பொதுமகளிர்,

     போகப் பாவிகள் வசம் அழிவேனுக்கு --- காம போகம் ஒன்றையே கருதுகின்ற பாவிகள் ஆகிய இவர்கள் வசமாகி அழிகின்ற அடியேனுக்கு,

   ஓர் அருள் புரிவது தான் எப்போது --- ஒப்பற்ற திருவருளைப் புரிவது தான் எக்காலம்?

    அது புகல்வாயே --- அதனை அருள்வீராக.

பொழிப்புரை 

     தேவலோகத்தில் உள்ள கற்பக மரத்தை அழித்த சூரர்கள் சுற்றதோடு மாண்டு பொடியாகப் போ, இயமனுடைய கொலைத் தொழில் நிறைவே, பருந்துகளுடன் காக்கைகளும் வந்து நெருங், தனதன தானத் தானன என்னும் சந்தங்களுடன் பொருந், பேய்கள் பிணங்களின் தசைகளை உண்ணுமாறு,
வேலாயுதத்தை விடுத்து அருளிய ஒப்பற்ற வீரரே!

         உயிர்களின் பாவத்தைப் போக்குபவரும்,  சுதரிசனம் என்னும் சக்கரத்தை ஆயுதமாக உடைவயரும் ஆகிய திருமாலுக்கு இளையவளும், முத்துப் போன்ற பற்களை உடையவளும், பேரழகினை உடையவளும், சிவபெருமான் திருமேனியில் ஒரு பாகத்தில் இருப்பவளும் ஆகிய உமாதேவியார் அருளிய திருக்குழந்தையே!

         பாம்பினுடன், பூளைப் பூவால் ஆன மாலை, பிறைச் சந்திரன், அறுகம்புல் ஆகியவற்றைத் திருச்சடையில் வைத்தருளிய அழகர் ஆகிய சிவபெருமான், எழுந்தருளி உள்ள அழகிய திரு ஆமாத்தூர் என்னும் திருத்தலத்தில் வாழுகின்ற பெருமையில் மிக்கவரே!

         கரிய மேகம் போன்றதும், நறுமணம் பொருந்தியதுமாகிய கூந்தலை உடைவயர்கள். தேனில் வெல்லப்பாகுடன், கனிரசம் ஊறியது போன்ற இனிய பேச்சுக்களை உடைய விலைமாதர்கள். புணர்ச்சியைப் பொருந்துவதில் இசைவு உடையவர்கள். கர்வம் பிடித்தவர்கள். காம உணர்வும், கோபக் குணமும் கொண்டவர்கள். பெருத்த தனங்களை உடையவர்கள். வேகத்துடன் சண்டை செய்யும் கயல் மீனையும் வாளை மீனையும் மீறிய கண்களை உடையவர்கள். உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, பொருளையும் கொள்ளை கொள்பவர்கள். பொருளின் அளவுக்குத் தக்கபடி தமது ஆசையைச் செலுத்துபவர்கள். உலகில் இவர்கள் பொதுமகளிர். காம போகம் ஒன்றையே கருதுகின்ற பாவிகள் ஆகிய இவர்கள் வசமாகி அழிகின்ற அடியேனுக்கு, ஒப்பற்ற திருவருளைப் புரிவது தான் எக்காலம்? அதனை அருள்வீராக.


விரிவுரை


கரு முகில் போல் மட்டு ஆகிய அளகிகள் ---

மட்டு - மணம். அளகம் - கூந்தல்.

மணமுள்ள மலர்களைச் சூடிக் கொள்வதாலும், மணமுள்ள பொருள்களை இட்டுக் கொள்வதாலும் மணமுள்ள கூந்தல் அமைந்து உள்ளது.

தேனில் பாகொடு கனி அமுது ஊறித் தேறிய மொழி மாதர் ---

தேன், வெல்லப்பாகு, பழரசம். இவை யாவும் இனிமையும் சுவையும் நிறைந்தவை.

இனிமையாகவும், மென்மையாகவும் பேசும் இயல்பை உடைவயர்கள் பெண்கள். "பாலொடு தேன் கலந்து அற்றே, பணிமொழி வால் எயிறு ஊறிய நீர்" என்றார் திருவள்ளுவ நாயனார். பால் சுவை மிக்கது. தேனும் சுவை மிக்கது. இரண்டுமே நன்மை பயப்பவை. பாலும் தேனும் கலந்த போது, அந்தக் கலவையின் சுவையானது இன்னது என்று அறியலாகாத இனியதொரு சுவையை உடையது. அதுபோல இன்னது என்று அறிய முடியாத இன்பம் தருகின்ற இனிய மொழியை உடையவள் ஆகிய தலைவியின் காதல் சிறப்பை உரைத்தது இத் திருக்குறள். பணிவுடைய சொல் என்பதால், பணிமொழி என்று நாயனார் காட்டிய நயத்தையும் எண்ணுக. இது பெண்மக்களின் இயல்பு.

தம்பால் வரும் ஆடவரை மயக்குவதே தொழிலாக உடையதால், இனிமையாகவும் மென்மையாகவும் பேசுவதில் தேர்ந்தவர்கள் விலைமாதர்கள்.

மதனிகள், காம க்ரோதிகள் ---

காமம்,  குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறுகுணங்களும், உயிர்க்கு உரிய ஆறு பகைகள் என்று சொல்லப்படும். "அறுபகை" என்றார் திருஞானசம்பந்தர். உயிர்க்குத் துன்பத்தை விளைப்பவை இவை. ஆதலால், அரிட்டவர்க்கம் எனப்படும்.

காமம், குரோதம், மதம் ஆகிய மூன்றையும் குறித்ததால், உபலக்கணமாக மற்ற மூன்றையும் கொள்ளலாம்.

காமஉள் பகைவனும், கோபவெம் கொடியனும்,
                  கனலோப முழுமூடனும்,
         கடுமோக வீணனும், கொடுமதம் எனும் துட்ட
                  கண்கெட்ட ஆங்காரியும்,
ஏமம்அறு மாச்சரிய விழலனும், கொலை என்று
                  இயம்பு பாதகனும் ஆம், இவ்
         எழுவரும், இவர்க்கு உற்ற உறவுஆன பேர்களும்
                  எனைப் பற்றிடாமல் அருள்வாய்!
சேமமிகு மாமறையின் ஓம் எனும் அருள்பதத்
                  திறன்அருளி, மலயமுனிவன்
         சிந்தனையில் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ
                  தேசிக சிகாரத்னமே!
தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
                  தலம் ஓங்கு கந்தவேளே!
         தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
                  சண்முகத் தெய்வமணியே!      --- திருவருட்பா.

பொருள் அளவு ஆசைப் பாடிகள் ---

கிடைக்கும் பொருளின் அளவுக்குத் தக்கபடி ஆசையைச் செலுத்துபவர்கள் விலைமாதர்கள்.

அம்கை நீட்டி அழைத்து, பாரிய
     கொங்கை காட்டி மறைத்து, சீரிய
     அன்பு போல் பொய் நடித்து, காசுஅளவு ......    உறவாடி
அம்பு தோற்ற கண் இட்டு, தோதக
     இன்ப சாஸ்த்ரம் உரைத்து, கோகிலம்
     அன்றில் போல் குரல் இட்டு, கூரிய ...... நகரேகை

பங்கம் ஆக்கி அலைத்து, தாடனை
     கொண்டு வேட்கை எழுப்பி, காமுகர்
     பண்பில் வாய்க்க மயக்கிக் கூடுதல் ...... இயல்பாகப்
பண்டு இராப் பகல் சுற்றுச் சூளைகள்,
     தங்கள் மேல் ப்ரமை விட்டு, பார்வதி
     பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ ......   அருள்வாயே.   ---  திருப்புகழ்.

அகல்வினை உள்சார் சட்சமயிகளொடு வெட்காது அட்கிடும்
     அறிவிலி, வித்தாரத் தனம், ...... அவிகார
அகில் கமழ் கத்தூரி, தனி அணைமிசை கைக் காசுக்கு அளவு
     அருள்பவர் நட்பே கொட்பு உறும் ...... ஒருபோதன்

பகல் இரவில் போதில் பணி பணிஅற விட்டார் எட்டிய
     பரம மயச் சோதிச் சிவ ......          மயமாம், நின்
பழநி தனில் போய் உற்பவ வினைவிள, கள்சேர் வெட்சி,
     குரவு பயில் நல்தாள் பற்றுவது ...... ஒருநாளே?           ---  திருப்புகழ்.

முத்தார் நகை அழகு உடையாள், மெய்ப் பால் உமை ---

முத்துப் போன்ற பற்களை உடைய பேரழகியும், சிவபெருமானின் இடப்பாகத்தில் உறைபவளும் ஆகிய உமாதேவியார்.

திருவாமாத்தூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள அம்பிகைக்கு, முத்தாம்பிகை என்னும் திருநாமம் உள்ளது. இந்த அம்மை மிக்க சக்தி வாய்ந்தவள். இந்த முத்தம்மாள் என்னைத் துரத்திக் கொத்துவாளோ" எனக் கூறித் தன் முன்னிலையில் பொய் சொன்ன ஒருவனைப் பாம்பாக வெருட்டித் துரத்திக் கொத்தின தேவி இவள்.

இதனை மெய்ப்பிக்கும் வகையில் முத்தாம்பிகை அம்பாளின் திருமார்பில் பாம்பின் வால் சிற்பம் உள்ளது. தரிசிப்போர் சிவாச்சாரியாரிடம் கேட்டு நேரில் காணலாம். அம்பாளுக்குச் செய்த அலங்காரம் செய்யப்பட்ட வெள்ளிக் கவசத்திலும் பாம்பின் வால் செதுக்கப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தப் பெருமானும் இவ்வாறே பாடி உள்ளதை, அருணகிரிநாதப் பெருமான், பின்னர் பாடி வைத்தார். 

புத்தர் புன்சம ண்ஆதர் பொய்ம்மொழி
         நூல்பி டித்துஅலர் தூற்ற நின்னடி
பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதுஎன்
முத்தை வென்ற முறுவ லாள்உமை
         பங்கன் என்றஇமை யோர்ப ரவிடும்
அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே.            ---  திருஞானசம்பந்தர்.

அறுகொடு வேணிச் சூடிய அழகர் ---

திரு ஆமாத்தூர் இறைவருக்கு அபிராமேசுவரர் என்றும் அழகியநாதர் என்றும் திருப்பெயர்கள் பொருந்தி உள்ளன.

வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று
வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்
கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்
கடியதோர் விடையேறிக் காபா லியார்
சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசித்
தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.   

என்று அப்பர் பெருமான் பாடி உள்ளார். இத் திருத்தாண்டகத்தின், ஒவ்வொரு பாடலின் முடிவிலும், "அழகியரே" என்று இருப்பது காண்க.

தென் மாதைக்கே உறை பெருமாளே ---

தென் - ஞானம், அழகு.  

இயற்கை அழகு பொருந்திய திரு ஆமாத்தூர். வழிபடும் அடியவருக்கு ஞானத்தை வழங்குவது திரு ஆமாத்தூர்.

திரு ஆமாத்தூர் தல வரலாறு

விழுப்புரம் - திருவண்ணாமலை - செஞ்சி பேருந்துச் சாலையில், 2. கி.மீ. சென்றால் "திருவாமாத்தூர்" கைகாட்டியில் இடப்புறமாகப் பிரிந்து செல்லும் பாதையில் 6 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். விழுப்புரம் - சூரப்பட்டு நகரப் பேருந்து திருவாமாத்தூர் வழியாகச் செல்கிறது. விழுப்புரம் சென்னையில் இருந்து 160 கி.மி. தொலைவில் உள்ளது.

இறைவர்               : அழகிய நாதர், அபிராமேசுவரர்
இறைவியார்           : முத்தாம்பிகை
தல மரம்                : வன்னி மரம்
தீர்த்தம்                  : பம்பை ஆறு, ஆம்பலப்பொய்கை.

மூவர் முதலிகள் வழிபட்டதும், திருப்பதிகங்கள் பெற்றதும் ஆகிய அருமைத் திருத்தலம்.

ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பில்லாமல் படைக்கப்பட்டிருந்தன. தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் சிங்கம், புலி முதலிய மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட்டன. நந்திதேவரும் அவைகள் வேண்டுவது சரியே என்று கூறி பம்பை நதிக்கரையிலுள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேசுவரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறினார். அவ்வாறே பசுக்களும் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றன. ஆக்கள் (பசுக்கள்) பூஜித்த காரணத்தால் இத்தலம் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது. இந்த திரு ஆமாத்தூர் தலத்தை யார் புகழ்ந்து பேசினாலும் அல்லது மற்றவர்கள் புகழக் கேட்டாலும் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று தல புராண வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் உள்ள சிவாலயம் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்புடையது.

இறைவன் கோயிலும், இறைவி கோயிலும் தனித்தனியே சாலையின் இருபுறமும் எதிரெதிரே கோபுரங்களுடன் அமைந்துள்ளன. இறைவன் கோயில் கோபுரம் 7 நிலைகளுடன் கிழக்கு நோக்கி நல்ல சுற்று மதிலுடன் விளங்குகின்றது. அம்பாள் கோவில் கோபுரம் 5 நிலைகளுடன் மேற்கு நோக்கி உள்ளது. சுவாமி கோவில் இராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் எதிரே பெரிய சுதை நந்தி நம்மை வரவேற்கிறது. இறைவன் குடியிருக்கும் ஆலயம் இரண்டு பிரகாரங்கள் கொண்டது. அச்சுதராயர் என்றவர் இந்த ஆலயத் திருப்பணி செய்தவர்களில் முதன்மையானவர். அவரின் சிலை வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கிறது. மேலும் வெளிப் பிராகாரத்தில் உள்ள சித்தி விநாயகர் சந்நிதியும், தனிக் கோயிலாகவுள்ள சண்முகர் சந்நிதியும், ஈசான்ய லிங்கேஸ்வரர் சந்நிதியும் தரிசிக்கத்தக்கது. வெளிப் பிரகார வலம் முடித்து சித்தி விநாயகர் சந்நிதி அருகே உள்ள படிகளேறி உள்பிரகாரத்தை அடையலாம். நேரே தெற்கு நோக்கிய நடராச சபை உள்ளது. உள்பிரகார சுற்றில் 63 மூவர், காலபைரவர், தேவ கோஷ்டத்தில் சனகாதி முனிவர்களுடன் தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், சிவபூஜை விநாயகர் ஆகியோரைக் காணலாம். கருவறை அகழி அமைப்புடன் உள்ளது. மூலவர் வாயிலில் இருபுறங்களிலும் துவார பாலகர் வண்ணச் சுதையில் உள்ளனர். அபிராமேஸ்வரர் என்றும், அழகிய நாதர் என்றும் வழங்கும் இத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு மூர்த்தியாவார். பசுக்கள் பூஜை செய்ததின் அடையாளமாக சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திரனின் பிறை போல் வளைந்து பசுவின் கால் குளம்பின் சுவடு தென்படுகிறது. இறைவன் சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படுகிறார். இரண்டாம் பிரகாரத்தில் இராமர், முருகன், திருமகள் ஆகியோர் சந்நிதிகள் இருக்கின்றன. மதங்க முனிவரால் உருவாக்கப் பெற்ற தீர்த்தம் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது. இதில் நீராடாமல், நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டாலே சிவபுண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.

சாலையில் எதிரே உள்ள அம்பாள் கோபுர வாயில் வழியாக உள்ள நுழைந்தால் கொடிமரம், பலிபீடம், சிம்மம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. உள் வாயிலின் இருபுறமும் வண்ணச் சுதையால் அமைந்த துவாரபாலகியர் உருவங்கள் உள்ளன. அம்பாள் முத்தாம்பிகை மேற்கு நோக்கி அருட்காட்சி தருகிறாள். இந்த அம்பாள் ஒரு வரப்பிரசாதி. அம்பாள் சந்நிதிக்கு நுழையும் போதே வலதுபுறம் மூலையில் வட்டப்பாறை அம்மன் சந்நிதி (அம்பாளின் சாந்நித்யரூபம்) உள்ளது. தற்போது இச் சந்நிதியில் சிவலிங்கமே உள்ளது.

வட்டப் பாறை: அம்பிகை சந்நிதியின் பிரகாரச் சுற்றில் தென் புறம் ஒரு வட்டப் பாறையும், அருகில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் இராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்பு கொண்டபோது இந்த வட்டப் பாறை முன் உடன்பாடு செய்துகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. ஊரில் உள்ள எல்லோரும் வட்டப் பாறையின் மீது கை வைத்து சத்தியம் செய்து தங்கள் வழக்குகளை தீர்த்துக் கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இந்த வட்டப் பாறை ஒரு சிறிய சந்நிதி. இதன் முன் பொய் சொல்வோர் மீளாத துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று ஐதீகமுண்டு.

வட்டப்பாறை அம்மன் சந்நிதி தொடர்பாகச் சொல்லப்படும் ஒரு வரலாறு

அண்ணன் ஒருவன் இளையவனான தன் தம்பியை ஏமாற்றிச் சொத்தினைத் தனக்குச் சேர்த்துக் கொண்டான். வயது வந்து உண்மையறிந்த தம்பி அண்ணனிடம் சென்று தனக்குரிய சொத்தைத் தருமாறு கேட்டான். அண்ணன் மறுக்க, தம்பி பஞ்சாயத்தைக் கூட்டினான். பஞ்சாயத்தார் வட்டப்பாறை அம்பாள் சந்நிதியில் அண்ணனை சத்தியம் செய்து தருமாறு கூறினர். அண்ணன் இதற்கென ஒரு சூழ்ச்சி செய்தான். தம்பியின் சொத்தால் பெற்ற மதிப்பைத் திரட்டிப் பொன் வாங்கி அதைத் தன் கைத்தடியில் பூணுக்குள் மறைத்துக் கொண்டான். அத்தடியுடன் பஞ்சாயத்து நடக்கும் அவைக்கு வந்து, தம்பியிடம் தடியைத் தந்துவிட்டு, அம்பாள் சந்நிதியில் இருகைகளாலும் "‘தன்னிடம் தம்பியின் சொத்து ஏதுமில்லை, எல்லாம் அவனிடமே உள்ளது" என்று சத்தியம் செய்து கொடுத்தான். சூழ்ச்சியறியாத அனைவரும் வேறுவழியின்றி அவனைத் தம்பியுடன் அனுப்பி விட்டனர். தம்பியிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்ட கைத்தடியுடன் சென்ற அண்ணன், இத்தலத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள தும்பூர் நாகம்மன் கோயிலை அடைந்தபோது அம்பாளின் தெய்வ சக்தி தன்னை ஒன்றும் செய்யவில்லை என்று இறுமாப்புக் கொண்டு அம்பாளையும் சேர்த்துத் திட்டினானாம். அப்போது கரும் பாம்பு ஒன்று தோன்றி அவனைக் கடித்துச் சாகடித்தது என்று வரலாறு சொல்லப்படுகிறது. அவ்வாறு கடித்துச் சாகடித்த இடத்தில் இன்றும் பெரிய நாகச்சிலை ஒன்றுள்ளது. இந்நிகழ்ச்சியை மெய்ப்பிக்கும் வகையில் இன்றும் முத்தாம்பிகை அம்பாளின் மார்பில் பாம்பின் வால் சிற்பம் உள்ளது. தரிசிப்போர் சிவாச்சாரியாரிடம் கேட்டு நேரில் காணலாம். அம்பாளுக்குச் செய்த அலங்காரம் செய்யப்பட்ட வெள்ளிக் கவசத்திலும் சர்ப்பத்தின் வால் செதுக்கப்பட்டுள்ளது.

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "சூர்ப் புடைத்தது ஆம் மா தூர் விழத் தடிந்தோன் கணேசனோடும் ஆமாத்தூர் வாழ் மெய் அருட் பிழம்பே" என்று போற்றி உள்ளார்.

கருத்துரை

முருகா! விலைமாதர் வசமாகி அழியாமல் திருவருள் புரிவாய்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...