திருக் கொள்ளம்பூதூர்

திருக் கொள்ளம்பூதூர்
(திருக்களம்புதூர், திருக்களம்பூர்)

        சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         கொரடாச்சேரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கி சுமார் ஒரு கி.மீ. சென்று இத்திருத்தலத்தை அடையலாம். கோயில் வரை பாதை உள்ளது.

இந்த ஊருக்குப் பக்கத்தில் முள்ளியாறு எனப்படு வெட்டாறு ஓடுகின்றது. இது அகத்தியக் காவிரி எனப்படும். ஆற்றின் எதிர்க்கரையில் திருஞானசம்பந்தர் திருக்கோயில் உள்ளது. இத் திருக்கோயிலை மக்கள் "நம்பர் கோயில்" என்று அழைக்கின்றனர். நம்பர் என்பது திருஞானசம்பந்தரைக் குறிக்கும்.

இறைவர்              : வில்வாரண்யேசுரர், வில்வவனநாதர்.

இறைவியார்           : சௌந்தரநாயகி, அழகு நாச்சியார்.

தல மரம்                : வில்வம்.

தீர்த்தம்                : பிரம தீர்த்தம், அகத்திய தீர்த்தம்காண்டீப தீர்த்தம் (அருச்சுன                                    தீர்த்தம்), முள்ளியாறு.

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் - கொட்ட மேகமழும்

         ஆலய அமைப்பு: ஒரு முகப்பு வாயிலுடன் கிழக்கு நோக்கி இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தே ரிஷபாரூடர், விநாயகர், சுப்பிரமணியர் திருமேனிகள் வண்ணத்தில் சுதையில் அமைக்கப்பட்டுள்ளன. துவார விநாயகர் இருபுறமும் உள்ளார். கோயிலின் முன் பிரம்ம தீர்த்தம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான முற்றவெளியைக் காணலாம். வலதுபுறம் நந்தவனத்தின் மத்தியில் மகாலட்சுமி சந்நிதி உள்ளது. இரண்டாவது வாயிலிலுள்ள கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. வாயிலின் இருபுறமும் பொய்யாத விநாயகர், தண்டபாணி சந்நிதிகள் தனித்தனிக் கோயில்களாக உள்ளன. வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் எவையுமில்லை. தெற்கு வெளிப் பிரகாரத்தில் இருந்து 2-ம் பிரகாரத்துள் நுழைய ஒரு மூன்று நிலை கோபுரம் உள்ளது. இதன் வழியே உள்ளே நுழைந்தால் நேரே அம்பாள் சந்நிதி உள்ளது.

         ஐந்து நிலை கோபுர வாயில் வழியே நுழைந்ததும் காணும் மண்டபத்திலுள்ள வலப்பக்க கற்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச் செலுத்தும் சிற்பம் உள்ளதைக் கண்டு மகிழலாம். உள் பிராகாரத்தில் வலம் வரும் போது நால்வர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், கஜமுத்தீசர், முல்லைவனநாதர், சாட்சிநாதர், பாதாளவரதர், மகாலிங்கர், விநாயகர், கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, விசாலாட்சி, சோழமன்னன், அவன் மனைவி ஆகிய சந்நிதிகள் உள்ளன. அடுத்தாற் போல ஆறுமுக சுவாமி, மகாலட்சுமி, பைரவர், பள்ளியறை, நவக்கிரகங்கள், சனிபகவான், சூரியன் சந்நிதிகள் உள்ளன.

         வலம் வந்து தரிசித்து, செப்புக் கவசமிட்ட கொடிமரத்தையும், கொடிமரத்து விநாயகரையும் வணங்கி, மண்டபத்தில் சென்றால் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. சந்நிதிக்கு முன்னால் வெளியில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்கள் உரிய கட்டட அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளது.

         அம்பாள் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி அருட்காட்சி தருகிறாள். சந்நிதிகளின் எதிரில் உள்ள தூண்களில் இத்திருக்கோயிலில் திருப்பணியைச் செய்வித்த நகரத்துச் செட்டியார் உருவங்கள் உள்ளன. துவாரபாலகர்களையும் துவார விநாயகரையும் முருகனையும் தரிசித்து மூலவர் மண்டபத்தை அடையலாம். நேரே மூலவர் தரிசனம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் தனிச் சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

         இவ்வாலயம் நாளும் காலை 6 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தோய்வுண்ட கள்ளம் பூதாதி நிலை கண்டு உணர்வு கொண்டவர் சூழ் கொள்ளம்பூதூர் வான்குல மணியே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பாடல் எண் : 896
பொன்னிவளம் தருநாடு புகுந்து, மிக்க
         பொருஇல்சீர்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்
பன்னகப்பூண் அணிந்தவர்தம் கோயில் தோறும்
         பத்தர்உடன் பதிஉள்ளோர் போற்றச் சென்று,
கன்னிமதில் திருக்களரும் போற்றி, கண்டம்
         கறைஅணிந்தார் பாதாளீச் சுரமும் பாடி,
முன்அணைந்த பதிபிறவும் பணிந்து போற்றி,
         முள்ளிவாய்க் கரைஅணைந்தார் முந்நூல் மார்பர்.

         பொழிப்புரை : காவிரியாறு வளம் பெருக்குகின்ற சோழநாட்டில் புகுந்து, ஒப்பில்லாத மிகுந்த சிறப்புகளையுடைய தொண்டர் கூட்டத்துடன், பாம்பை அணியாய்ப் பூண்ட இறைவரின் திருக்கோயில்கள் தோறும் இருந்தருளும் அன்பர்களுடன், அப்பதியில் உள்ளவர்களும் எதிர்கொண்டு போற்றச் சென்று, பகைவரால் அழித்தற்கரிய மதிற் சிறப்புடைய `திருக்களர்\' என்ற பதியையும் போற்றிப் பின்பு, கழுத்தில் நஞ்சுடைய இறைவரின் `பாதாளீச்சுரத்தினையும்\' பாடி வணங்கி, முன்னே வழிபட்டுச் சென்ற மற்றப் பதிகளையும் வணங்கிப் போற்றி, முந்நூல் அணிந்த மார்பையுடைய திருஞானசம்பந்தர் முள்ளிவாய்க் கரையைச் சேர்ந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 897
மலைவளர்சந் தனம்அகிலும் தேக்கும் உந்தி,
         மலர்ப்பிறங்கல் வண்டுஇரைப்பச் சுமந்து பொங்கி,
அலைபெருகி, ஆள்இயங்கா வண்ணம் ஆறு
         பெருகுதலால், அத்துறையில் அணையும் ஓடம்
நிலைபுரியும் ஓடக்கோல் நிலைஇ லாமை
         நீர்வாழ்நர் கரையின் கண் நிறுத்திப் போக,
கலைபயிலும் கவுணியர்கோன் அதனைக் கண்டு,அக்
         கரையின்கண் எழுந்தருளி நின்ற காலை.

         பொழிப்புரை : மலையில் வளர்கின்ற சந்தனம், அகில், தேக்கு முதலிய மரங்களை உந்தி அலைத்துக் கொண்டு, மலைபோன்ற மலர்க்குவியல்களை வண்டுகள் ஒலிக்கச் சுமந்து பெருகி, ஆள்கள் இயங்காதபடி ஆறு பெருகிவருவதால், அத்துறையில் அணையும் ஓடத்தை, நீரில் நிலை கொண்டு செலுத்தும் ஓடக்கோல் நிலைக்க மாட்டாமையால், நீர்வாழ் மக்களான இனத்தவர் கரையில் நிறுத்தி விட்டுச் சென்றுவிடவே, கலைகள் பலவற்றானும் புகழப் பெறும் கவுணியர் தலைவரான பிள்ளையார் அதைப் பார்த்து அக்கரையில் எழுந்தருளி நின்றபோது,


பெ. பு. பாடல் எண் : 898
தேவர்பிரான் அமர்ந்ததிருக் கொள்ளம் பூதூர்
         எதிர்தோன்ற, திருவுள்ளம் பணியச் சென்று
மேவுதலால், ஓடங்கள் விடுவார் இன்றி
         ஒழிந்திடவும், மிக்கதுஓர் விரைவால், சண்பைக்
காவலனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்து,
         கண்ணுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி,
நாவலமே கோலாக அதன்மேல் நின்று,
         நம்பர் தமைக் "கொட்டம்"என நவின்று பாட.

         பொழிப்புரை : தேவர்களின் தலைவரான இறைவர் வீற்றிருக்கும் `திருக்கொள்ளம்பூதூர்' என்ற திருப்பதி எதிரில் தோன்ற, அதைப் பார்த்து, அங்குச் சென்று பணிவதற்கு உள்ளம் எண்ணியதால் ஓடம் செலுத்துபவர்கள் அங்கே இல்லாத நிலையில், மிகு விரைவாகச் சீகாழித் தலைவரான பிள்ளையார், ஓடத்தின் கட்டை அவிழ்த்து, நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானின் தொண்டர்களை அவ்வோடத்தில் ஏற்றித் தன் நாவின் வல்லமையையே கோலாகக் கொண்டு அவ்வோடத்தின் மீது நின்று, இறைவரைப் பணிந்து `கொட்டமே' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாட,

         `கொட்டமே' எனத் தொடங்கும் திருப்பதிகம் காந்தாரபஞ்சமப் பண்ணில் அமைந்ததாகும் (தி.3 ப.6).


பெ. பு. பாடல் எண் : 899
உம்பர்உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம்
         செலச்செல்ல உந்துதலால், ஊடு சென்று
செம்பொன்நேர் சடையார்தம் கொள்ளம் பூதூர்
         தனைச்சேர, அக்கரையில் சேர்ந்த பின்பு,
நம்பர்அவர் தமைவணங்க, ஞானம் உண்ட
         பிள்ளையார் நல்தொண்டருடன் இழிந்து,
வம்புஅலரும் நறுங்கொன்றை நயந்தார் கோயில்
         வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார்.

         பொழிப்புரை : வானவர் உய்யுமாறு நஞ்சை உண்டருளிய இறைவரின் திருவருளினால், அவ்வோடம் செல்லும்படி உந்தப்படுதலால், செம்பொன் போன்ற சடையுடைய இறைவரின் திருக்கொள்ளம் பூதூரினைச் சேரும் வண்ணம் அக்கரையில் சேர்ந்த பின்பு, நம்பரான சிவபெருமானை வணங்குதற்கு ஞானப்பால் உண்ட ஞானசம்பந்தர் நல்ல திருத்தொண்டர்களுடனே ஓடத்திலிருந்து கீழே இறங்கிச் சென்று, மணம் கமழ்கின்ற கொன்றை மலரை விரும்பிச் சூடிய சிவ பெருமானின் திருக்கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்.

         மேற்கூறிய பதிகத்தில் பாடல்தொறும் `செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்குமாறு அருள் நம்பனே' என அருளப் பெறுதலின் ஓடம் கரையைச் சேருவதாயிற்று. `ஓடம் செலச் செல்ல உந்துதலால்' என ஆசிரியர் அருளியதைக் காண்க.
  

பெ. பு. பாடல் எண் : 900
நீள்நிலைக்கோ புரம்அதனை இறைஞ்சிப் புக்கு,
         நிகர்இலாத் தொண்டருடன் நெருங்கச் சென்று,
வாள்நிலவு கோயிலினை வலங்கொண்டு எய்தி,
         மதிச்சடையார் திருமுன்பு வணங்கி நின்று,
"தாணுவே! ஆற்றின்கண் ஓடம் உய்க்குந்
         தன்மையால் அருள்தந்த தலைவா! நாகப்
பூணினாய்! களிற்று உரிவை போர்த்த முக்கண்
         புனிதனே!" எனப் பணிந்து போற்றி செய்தார்.

         பொழிப்புரை : நீண்ட நிலைகளைக் கொண்ட திருக்கோபுரத்தை வணங்கி வாயிலுள் புகுந்து, ஒப்பில்லாத தொண்டர்கள் சூழ நெருங்கிச் சென்று, ஒளியுடைய திருக்கோயிலை வலங்கொண்டு, பிறைச் சந்திரனைச் சூடிய சடையையுடைய இறைவரின் திருமுன்பு வணங்கி நின்று, `அனைத்து உயிர்களையும் தாங்குபவரே! ஆற்றிடையே ஓடம் செலுத்தி வர அருள் சுரந்த தலைவரே! பாம்புகளை அணியாய் அணிந் தவரே! யானையின் தோலைப் போர்த்திக் கொண்ட முக்கண்களையுடைய தூயவரே!' எனப் பணிந்து போற்றினார்.

  
பெ. பு. பாடல் எண் : 901
போற்றிஇசைத்துப் புறம்போந்து,அங்கு உறையும் நாளில்,
         பூழியன்முன் புன்சமயத்து அமணர் தம்மோடு
ஏற்றபெரு வாதின்கண் எரியின் வேவாப்
         பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி,
ஆற்றவும்அங்கு அருள்பெற்றுப் போந்து, முன்னம்
         அணைந்தபதி களும்இறைஞ்சி, அன்பர் சூழ
நால்திசையும் பரவுதிரு நள்ளாறு எய்தி,
         நாடுஉடைநா யகர்கோயில் நண்ணினாரே.

         பொழிப்புரை : இங்ஙனம் இறைவரைப் போற்றி, வெளியில் வந்து, அப்பதியில் தங்கியிருந்த நாள்களில், பாண்டியனின் முன்னிலையில், புன்மையான சமயத்தவரான சமணர்களுடன் மேற்கொண்ட பெரிய வாதத்தில், தீயில் வேகாமல் இருந்து வெற்றி தந்த திருப்பதிகத்தின் தலைவரான திருநள்ளாற்றின் இறைவரை வணங்க வேண்டி, வழியில் முன்சென்று வணங்கிய பதிகளையும் திரும்பவும் வணங்கி, அன்பர் கூட்டம் சூழ்ந்துவரச் சென்று, நாற்றிசையும் போற்ற வரும் திருநள்ளாற்றைச் சார்ந்து, நாடுடை நாயகரின் கோயிலை திருஞானசம்பந்தர் அடைந்தார்.


3.006     திருக்கொள்ளம்பூதூர்       பண் - காந்தாரபஞ்சமம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கொட்ட மேகம ழுங்கொள்ளம் பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறுஅருள் நம்பனே.

         பொழிப்புரை :நல்லமணம் கமழும் திருக்கொள்ளம்பூதூர் என்னும் திருத்தலத்தில் திருநடனமாடும் இறைவனைத் தியானிப்பதால் , இந்த ஓடமாவது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத்தானே தள்ளப் படுவதாக . எம் நம்பிக்கைக்கும் , விருப்பத்திற்குமுரிய சிவபெரு மானே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வணங்க அருள்புரிவா யாக .

  
பாடல் எண் : 2
கோட்ட கக்கழ னிக்கொள்ளம் பூதூர்
நாட்ட கத்துஉறை நம்பனை உள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறுஅருள் நம்பனே.

         பொழிப்புரை :நீர்நிலைகளும் , வயல்களும் கொண்டு விளங்கும் திருக்கொள்ளம் பூதூர் என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற நம்பனைத் தியானிக்க , இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக . மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .


பாடல் எண் : 3
குலையின் ஆர்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர்
விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறுஅருள் நம்பனே.

         பொழிப்புரை :குலைகளோடு கூடிய தென்னை மரங்கள் சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில் , விலை கொடுத்து வாங்கிய பொருளைப் போன்ற அருமையுடன் என்னை ஆட்கொண்ட விகிர்தனாகிய உன்னைத் தியானிக்க இந்த ஓடமாவது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .


பாடல் எண் : 4
குவளை கண்மல ருங்கொள்ளம் பூதூர்த்
தவள நீறுஅணி தலைவனை உள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறுஅருள் நம்பனே.

         பொழிப்புரை :பெண்களின் கண்களைப் போன்று குவளை மலர்கள் மலர்ந்துள்ள திருக்கொள்ளம்பூதூரில் வீற்றிருக்கின்ற திருவெண்ணீறு அணிந்துள்ள தலைவனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் . புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .


பாடல் எண் : 5
கொன்றை பொன்சொரி யுங்கொள்ளம் பூதூர்
நின்ற புன்சடை நிமலனை உள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறுஅருள் நம்பனே.

         பொழிப்புரை :கொன்றை மரமானது பொன்னிறப் பூக்களை உதிர்க்கின்ற திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ள நிமலனைத் தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடக்கத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .


பாடல் எண் : 6
ஓடம் வந்துஅணை யுங்கொள்ளம் பூதூர்
ஆடல் பேணிய அடிகளை உள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறுஅருள் நம்பனே.

         பொழிப்புரை :திருநடனம் செய்யும் தலைவனான சிவபெரு மானைத் தியானிக்க ஓடமானது திருக்கொள்ளம்பூதூர் என்னும் தலத்தினை அடையும்படி ஆற்றைக் கடக்கத் தானாகவே தள்ளப் படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .


பாடல் எண் : 7
ஆறு வந்துஅணை யுங்கொள்ளம் பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை உள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறுஅருள் நம்பனே.

         பொழிப்புரை :ஆறு வந்தடைகின்ற திருக்கொள்ளம்பூதூரில் இடபம் தாங்கிய இறைவனைத் தியானிக்க ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .


பாடல் எண் : 8
குரக்கி னம்பயி லுங்கொள்ளம் பூதூர்
அரக்க னைச்செற்ற ஆதியை உள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறுஅருள் நம்பனே.

         பொழிப்புரை :குரங்குக் கூட்டங்கள் மரங்களில் ஆடிக் குதிப்பதால் உண்டாகும் ஒலி நிறைந்த திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளி யிருக்கின்றவனும் , இராவணனை மலையின் கீழ் நெருக்கியவனுமான ஆதிமுதல்வனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .


பாடல் எண் : 9
பருவ ரால்உக ளுங்கொள்ளம் பூதூர்
இருவர் காண்பரி யான்கழல் உள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறுஅருள் நம்பனே.

         பொழிப்புரை :பருத்த வரால்மீன்கள் துள்ளுகின்ற திருக் கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்கின்ற , திருமாலும் , பிரமனும் காண்பதற்கு அரியவனாய் நின்ற சிவபெருமானின் திருவடிகளைத் தியானிக்க இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .


பாடல் எண் : 10
நீர் அகக்கழ னிக்கொள்ளம் பூதூர்த்
தேர் அமண்செற்ற செல்வனை உள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறுஅருள் நம்பனே.

         பொழிப்புரை :நீர்வளம் மிக்க வயல்களையுடைய திருக் கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ளவனாய் , புத்தர்களும் , சமணர் களும் பகைத்துப் பேசும் செல்வனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடம் தானே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியார்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .


பாடல் எண் : 11
கொன்றை சேர்சடை யான்கொள்ளம் பூதூர்
நன்று காழியுள் ஞானசம் பந்தன்
இன்றுசொல் மாலைகொண்டு ஏத்த வல்லார்போய்
என்றும் வானவ ரோடுஇருப் பாரே.

         பொழிப்புரை :கொன்றை மலர்களை அணிந்த சடைமுடியுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கொள்ளம்பூதூரில் நற்புக ழுடைய காழியில் வசிக்கும் ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகப் பாமாலையால் இறைவனைப் போற்ற வல்லவர்கள் எப்பொழுதும் தேவர்களோடு கூடி மகிழ்வர் .


                                            
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

வயலூர் --- 0910. இகல்கடின முகபட

      அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   இகல்கடின முகபட (வயலூர்)   முருகா! விலைமாதர் பற்றை விடுத்து , தேவரீர...