அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஆறும் ஆறும்
(தேவனூர்)
முருகா!
அடியேன் அவா அடங்கப் பெற்று,
மோன வீட்டை அடைந்து இன்புற்று
இருக்க அருள்வாய்.
தான
தான தந்த தந்த, தான தான தந்த தந்த
தான தான தந்த தந்த ...... தனதான
ஆறு
மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ...... அறுநாலும்
ஆறு
மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற
ஆரணாக மங்க டந்த ...... கலையான
ஈறு
கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி
யேது வேறி யம்ப லின்றி ...... யொருதானாய்
யாவு
மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கி
யான வாவ டங்க என்று ...... பெறுவேனோ
மாறு
கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வங்க
வாரி மேல்வெ குண்ட சண்ட ...... விததாரை
வாகை
வேல கொன்றை தும்பை மாலை கூவி ளங்கொ ழுந்து
வால சோம னஞ்சு பொங்கு ...... பகுவாய
சீறு
மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்
தேசி காக டம்ப லங்கல் ...... புனைவோனே
தேவர்
யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
ஆறும்
ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும்
ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ......
அறுநாலும்,
ஆறும்
ஆய சஞ்சலங்கள் வேறு அதா விளங்கு கின்ற
ஆரண ஆகமம் கடந்த ...... கலையான,
ஈறு
கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி,
ஏது வேறு இயம்பல் இன்றி, ...... ஒரு தானாய்,
யாவுமாய், மனம் கடந்த மோன வீடு அடைந்து, ஒருங்கி
யான் அவா அடங்க என்று ...... பெறுவேனோ?
மாறு
கூறி வந்து எதிர்ந்த சூரர் சேனை மங்க,
வங்க
வாரி மேல் வெகுண்ட சண்ட ...... வித, தாரை
வாகை
வேல! கொன்றை, தும்பை மாலை, கூவிளம் கொழுந்து,
வால சோமன், நஞ்சு பொங்கு ...... பகுவாய
சீறு
மாசுணம், கரந்தை, ஆறு, வேணி கொண்ட நம்பர்
தேசிகா! கடம்ப! அலங்கல் ...... புனைவோனே!
தேவர்
யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு
தேவனூர் விளங்க வந்த ...... பெருமாளே.
பதவுரை
மாறு கூறி வந்து எதிர்ந்த
சூரர் சேனை மங்க --- பகைமை பேசி வந்து
எதிர்த்துப் போரிட்ட சூரர்களின் சேனை அழிய,
வங்க வாரி மேல் வெகுண்ட --- கலங்கள் செலுத்தப்படும் கடலின் மீது
சினம் கொண்டு,
சண்ட வித தாரை வாகை
வேல
--- வேகம் கொண்டு
ஒழுங்காகச் செல்லக்கூடியதான வெற்றிவேலினை ஏந்தியவரே!
கொன்றை --- கொன்றைமலர்
மாலை,
தும்பை மாலை --- தும்பை மலர் மாலை,
கூவிளங் கொழுந்து --- வில்வத் தளிர்,
வால சோமன் --- இளம் திங்கள்,
நஞ்சு பொங்கு பகுவாய
சீறு மாசுணம்
--- நஞ்சு நிறைந்து பிளந்த
வாயோடு சீறுகின்ற பாம்பு,
கரந்தை --- திருநீற்றுப்
பச்சை,
ஆறு --- கங்கை நதி (ஆகியவற்றை)
வேணி கொண்ட நம்பர் தேசிகா --- திருச்சடையில் வைத்த சிவபரம்பொருளின்
குருநாதரே!
கடம்பு அலங்கல் புனைவோனே --- கடப்பமலர் மாலையை அணிந்தவரே!
தேவர் யாவரும்
திரண்டு
--- தேவர்கள் எல்லோரும் திரண்டு,
பாரின் மீது வந்து இறைஞ்சு --- இந்தப் பூலோகத்தில் வந்து வணங்குகின்ற
தேவனூர் விளங்க வந்த
பெருமாளே --- தேவனூர் என்னும்
திருத்தலத்தில் அருள் விளங்த வந்து அமர்ந்த பெருமையில் மிக்கவரே!
ஆறும் ஆறும் அஞ்சும்
அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் அறுநாலும் ஆறும்
ஆய சஞ்சலங்கள் வேறதா விளங்குகின்ற --- துன்பங்கள்
அனைத்தினுக்கும் காரணமாக விளங்குகின்ற தொண்ணூற்று ஆறு தத்துவங்களுக்கும் வேறாக
விளங்குகின்றதும்,
ஆரண ஆகமம் கடந்த --- வேதங்களின் உட்பொருளையும், ஆகமங்களின் உட்பொருளையும்
கடந்ததும்,
கலையான ஈறு கூற அரும் --- உபதேச கலையாகிய
சித்தாந்த்தாலும் முடிவாகக் கூறுதற்கு இயலாத
பெருஞ் சுவாமியாய் இருந்த நன்றி --- பெரும் தெய்வமாய்
இருந்த நன்மை தரும் பொருளை,
ஏது வேறு இயம்பல் இன்றி --- எங்கு இருந்தது, எப்படி இருந்தது என்று காரணம்
காட்டிச் சொல்ல முடியாத நிலையில்,
ஒரு தானாய் --- தனக்கு ஒப்பு
இல்லாததாய்,
யாவுமாய் --- உலக உயிர்கள், உலகப் பொருள்கள்
எல்லாமாகவும் விளங்கி,
மனங்கடந்த மோன வீடு
அடைந்து
--- மன உணர்வைக் கடந்ததான
மௌன வீட்டில் அடைந்து,
ஒருங்கி --- ஒருநெறிய மனம்
வைத்து,
யான் அவா அடங்க என்று பெறுவேனோ --- அவா அடங்கிய நிலையை அடியேன் பெறுவது
எந்த நாள்?
பொழிப்புரை
பகைமை பேசி வந்து எதிர்த்துப் போரிட்ட
சூரர்களின் சேனை அழிய, கலங்கள் செலுத்தப்படும் கடலின் மீது
சினம் கொண்டு, வேகம் கொண்டு
ஒழுங்காகச் செல்லக்கூடியதான வெற்றிவேலினை ஏந்தியவரே!
கொன்றைமலர் மாலை, தும்பை மலர் மாலை, வில்வத்
தளிர், இளம் திங்கள், நஞ்சு நிறைந்து பிளந்த
வாயோடு சீறுகின்ற பாம்பு, திருநீற்றுப் பச்சை, கங்கை நதி
(ஆகியவற்றை) திருச்சடையில் வைத்த சிவபரம்பொருளின் குருநாதரே!
கடப்பமலர் மாலையை அணிந்தவரே!
தேவர்கள் எல்லோரும் திரண்டு, இந்தப்
பூலோகத்தில் வந்து வணங்குகின்ற தேவனூர் என்னும் திருத்தலத்தில் அருள் விளங்க வந்து அமர்ந்த பெருமையில் மிக்கவரே!
துன்பங்கள் அனைத்தினுக்கும் காரணமாக
விளங்குகின்ற தொண்ணூற்று ஆறு தத்துவங்களுக்கும் வேறாக விளங்குகின்றதும், வேதங்களின்
உட்பொருளையும், ஆகமங்களின் உட்பொருளையும் கடந்ததும், உபதேச கலையாகிய சித்தாந்த்தாலும்
முடிவாகக் கூறுதற்கு இயலாத பெரும் தெய்வமாய் இருந்த நன்மை தரும் பொருளை,
எங்கு
இருந்தது, எப்படி இருந்தது என்று காரணம் காட்டிச் சொல்ல முடியாத நிலையில் தனக்கு
ஒப்பு இல்லாததாய், உலக உயிர்கள், உலகப் பொருள்கள் எல்லாமாகவும் விளங்குவதை, மன
உணர்வைக் கடந்ததான மௌன வீட்டில் அடைந்து,
ஒருநெறிய
மனம் வைத்து, அவா அடங்கிய நிலையை அடியேன் பெறுவது எந்த நாள்?
விரிவுரை
ஆறும்
ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும்
அறுநாலும் ஆறும் ஆய சஞ்சலங்கள் வேறதா விளங்குகின்ற ---
தத்துவம்
என்ற சொல்லுக்கு பொருள் முதல் கருவி, உள்ளது,
உண்மை, மற்றும் கொள்கை, மெய்ம்மை, முதன்மை, மெய்மம், நெறிமுறை என்பது பொருள். எவ்வகையாலேனும்
ஆன்மாவிற்குக் கருவியாய் நின்று உண்மைப் பொருளை உணர உதவுவதே தத்துவமாகும்.
தத்துவங்கள்
முப்பத்தாறு ஆகும். சுத்தமாயையில் தோன்றும் சிவ தத்துவம் ஐந்து. சிவம், சத்தி,
சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை ஆகிய ஐந்தும் சிவ தத்துவங்கள். அசுத்த மாயையில்
தோன்றும் வித்தியா தத்துவங்கள் ஏழு. அவை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம்,
புருடன், மூலப்பிரகிருதி ஆகும். பிரகிருதி மாயையில் தோன்றும் ஆன்ம தத்துவங்கள்
இருபத்து நான்கு. ஆக தத்துவங்க்ள் முப்பதாறு ஆகும்.
அந்தக்கரணங்கள்
நான்கும், ஞானேந்திரியங்கள்
ஐந்தும், கன்மேந்திரியங்கள்
ஐந்தும் ஆகிய பதினான்கும் ஆன்மாவின் அறிவு, தொழில்களுக்குக் கருவியாய் நிற்றல்
வெளிப்படை. அவற்றின் பின்னர்த் தோன்றும் தன் மாத்திரைகளும் பூதங்களும் ஆகிய
தத்துவங்கள் பத்தும் ஆன்மாவிற்கு கருவியாய் நின்று உதவுகின்றன. தன்மாத்திரைகள்
ஞானேந்திரியங்களுக்கும் கன்மேந்திரியங்களுக்கும் நிலைக்களமாய் அமைந்து அவை தம்மைப்
பற்றி நின்று செயற்படுமாறு உதவும். பூதங்கள் அவ்விரு வகை இந்திரியங்களுக்கும்
துணையாய் நின்று அவற்றின் ஆற்றலை மிகுவிக்கும். தன்மாத்திரைகளும் பூதங்களும்
இவ்வகையில் ஆன்மாவிற்கு உதவும் தத்துவங்களாய் உள்ளன.
இத்தத்துவங்கள்
இருபத்து நான்கும் ஆன்ம தத்துவம் எனப்படுகின்றன. இப்பெயருக்கான காரணம் அறிதற்குரியது. ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களாலும் கட்டுண்ட
ஆன்மாக்கள் சகலர் எனப்படுவர். சகலராகிய ஆன்மாக்களுக்குத் தலைவர் சீகண்ட உருத்திரர்.
அவரே இறைவனது ஆணை வழி நின்று பிரகிருதி முதல் நிலம் ஈறாக உள்ள தத்துவங்களைத்
தோற்றி ஒடுக்குபவர் ஆவர். ஆன்மதத்துவம் என்பதில் உள்ள ஆன்மா என்ற சொல் சகலராகிய
ஆன்மாக்களை முதலில் குறித்துப் பின்னர் அவர்கட்குத் தலைவராகிய சீகண்டவுருத்திரரைக்
குறித்தது அவரால் செயற்படுத்தப் படுதலின் அத்தத்துவங்கள் ஆன்மதத்துவம் எனப் பெயர்
பெற்றன. இது மரபாகச் சொல்லி வரும் விளக்கம்.
உலகுக்கு
முதற் காரணம் மாயை. அது சுத்த மாயை,
அசுத்த
மாயை என் இருபகுதியாய் நிற்கும். அசுத்த மாயையிலிருந்து தோன்றும் காரியமே
பிரகிருதி மாயை, நாம் வாழும்
உலகுக்கும், நமது உடம்புக்கும்
நேரே காரணமாய் இருப்பது இப் பிரகிருதியே ஆகும். பிரகிருதியிலிருந்து முதலில்
அந்தக்கரணங்களும் பின்னர் ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும், அவற்றின் பின்னர் தன்மாத்திரைகளும், அவற்றிலிருந்து ஐம்பூதங்களும் தோன்றும்.
பூதங்களின் பரிணாமமே இவ்வுலகம்.
உயிரினது
அறிவு இச்சை செயல்களை ஆணவ மலப் பிணிப்பிலிருந்து விடுவித்து உலக நுகர்ச்சியில்
ஈடுபடுத்துவதாகிய உதவியைச் செய்வதற்குச் சில கருவிகள் தேவைப்படுகின்றன. மேலும்
உயிர் பெறும் இன்ப துன்ப நுகர்ச்சி காலத்திற்கு உட்பட்டது. உரிய கால அளவிற்கு மேல்
நாம் நுகரும் இன்பத்தை நீட்டித்துக் கொள்ளவும் முடியாது. உரிய கால அளவு
முடிவதற்குள்ளே நாம் வெறுக்கும் துன்பத்தை விலக்கிக் கொள்ளவும் முடியாது என்பது
அனுபவ உண்மை. ஆகவே காலம் என்ற கருவியும் வேண்டும் என்பது புலனாகும். இது காறும்
கூறியவற்றால் ஆன்ம தத்துவங்கள் மட்டும் போதா அவற்றிற்கு அப்பாற்பட்டனவாய் வேறு
கருவிகளும் தேவைப்படுகின்றன என்பது தெளிவாகும்.
தத்துவங்களின்
கூறுகளும் காரியங்களும் தாத்துவிகம் எனப்படும். தைசத அகங்காரம், வைகாரிக அகங்காரம், பூதாதி அகங்காரம் ஆகிய மூன்றும்
அகங்காரத்தின் கூறுகள் என்பது நாம் அறிந்தது. ஆதலின் அவை தாத்துவிகங்கள் ஆகும்.
அதுபற்றியே அவை தத்துவங்களோடு வைத்து எண்ணப் பெறவில்லை. பல்வேறு வகையான
உடம்புகளும், அவ்வுடம்புகளின்
புறத்தும் அகத்தும் உள்ள உறப்புக்களும் தத்துவங்களின் காரியங்களாகும். ஆதலால் அவை
தாத்துவிகங்கள் எனப்படும். உடம்பாக அமையும் தாத்துவிகங்கள் அறுபது ஆகும்.
பின்வரும் அட்டவணையில் அவற்றைக் காணலாம்.
தாத்துவிகம்
60
பிருதிவியின்
கூறு 5
எலும்பு, தசை, மயிர், தோல், நரம்பு
அப்புவின்
கூறு 5
சிறுநீர், இரத்தம், சிலேத்துமம், வியர்வை, சுக்கிலம் அல்லது சோணிதம்
தேயுவின்
கூறு 5
இருதயத்தில் வெப்பம், பசித் தீ, கண்ணில் வெப்பம், உடம்பில் வெப்பம், கபால வெப்பம்
வாயுவின்
கூறு 10
உதானன், பிராணன், அபானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவ தத்தன், தனஞ்சயன் என்னும்
வாயுக்கள்.
ஆகாயத்தின்
கூறு 10
அத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, குகுதை, சங்கினி, சிகுவை, புருடன் என்னும் நாடிகள்
ஞானேந்திரியங்களின்
விடயங்கள் 5
சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்
கன்மேந்திரியங்களின்
விடயங்கள் 5
வசனம் (பேச்சு), கமனம் (நடை), தானம் (கொடை), விசர்க்கம் (போக்கு), ஆனந்தம்(இன்பம்)
அகங்காரத்தின்
கூறு 3
தைசதம், வைகாரியம், பூதாதி
குற்றங்கள் 5 காமம், குரோதம், உலோபம், மோகம், மதம் (மாற்சரியம் குரோதத்துள்
அடங்கும்)
குணத்தின்
கூறுகள் 3
சாத்துவிகம், இராசதம், தாமதம்
வாக்குகள் 4
சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி.
இப்படியாகச்
சொல்லப்பட்ட தத்துவங்கள் முப்பத்தாறும், தாத்துவிகங்கள் அறுபதும், உயிருக்கு
மெய்யுணர்வைத் தந்து, பேரின்ப நிலையைப் பெறுவதறுக்த் துணை புரிபவையே ஆகும். இவற்றால் ஆன்மாவுக்கு அழியாத ஆனந்தம்
விளையாது.
எனவேதான்,
"ஆறு ஆறையும் நீத்து, அதன் மூல் நிலையைப் பேறா அடியேன் பெறுமாறு உளதோ?"
என்று பாடினார் அருணை வள்ளலார்.
வடலூர்
வள்ளல் அருளியதைக் காண்போம்.....
தத்துவம்என்
வசமாகத் தான்செலுத்த அறியேன்,
சாகாத கல்வி கற்கும் தரம் சிறிதும் அறியேன்,
அத்தநிலை
சத்தநிலை அறியேன், மெய் அறிவை
அறியேன், மெய் அறிந்து அடங்கும் அறிஞரையும்
அறியேன்,
சுத்தசிவ
சன்மார்க்கத் திருப்பொதுவின் இடத்தே
தூயநடம் புரிகின்ற ஞாயம் அறிவேனோ?
எத்துணையும்
குணம் அறியேன், எங்ஙனம் நான் புகுவேன்?
யார்க்கு உரைப்பேன்? என்னசெய்வேன்?
ஏதும்அறிந் திலனே?
தத்துவம்
அனைத்தும் தனித்தனி கடந்தேம்,
தத்துவ அதீதமேல் நிலையில்
சித்துஇயல்
முழுதும் தெரிந்தனம், அவைமேல்
சிவநிலை தெரிந்திடச் சென்றேம்,
ஒத்தஅந்
நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
ஒருங்கு உறக் கரைந்து போயினம் என்று
அத்தகை
உணர்ந்தோர் வழுத்தநின்று ஓங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
தத்துவ
அதீதத் தலைவனைக் காணற்குத்
தத்துவம் உன்னுவது ஏன் - நெஞ்சே
தத்துவம் உன்னுவது ஏன். --- திருவருட்பா.
துருத்தியாம்
குரம்பை தன்னில்
தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று
விருத்திதான் தருக
வென்று
வேதனை பலவுஞ் செய்ய
வருத்தியால்
வல்ல வாறு
வந்துவந்து அடைய நின்ற
அருத்தியார்க்கு
அன்பர் போலும்
அதிகைவீ ரட்ட னாரே. --- அப்பர் தேவாரம்.
இதன்
பொழிப்புரை ---
தோல்
துருத்தி போன்ற உடம்பிலே தொண்ணுற்றாறு தத்துவங்களும் தாத்துவிகங்களும் உறைவிடம் கொண்டு
தங்கள் வாழ்வுக்கு உரிய பொருள்களை அளிக்க வேண்டுமென்று பல துயரம் செய்யுமாறு உயிரினங்களை
வருத்துவதனாலே , தம்மால் இயன்ற அளவு பெருமானாகிய
தம்மை நாடி வந்து அடைந்த விருப்பினை உடைய அடியவர்பால் அதிகை வீரட்டனார் தாமும் அன்பராய்
உதவுகிறார் .
பத்து
ஏழு எட்டு ஈரெட்டு ஏழ் ரட்டால்
வைத்தே பத்திப் ...... படவேயும்,
பைப்
பீறல் கூரைப் பாசத் தா
சற்காரத்துக்கு ...... இரைதேடி,
எத்
தேசத்து ஓடித் தேசத்தோடு
ஒத்து ஏய் சப்தத் ...... திலும் ஓடி,
எய்த்தே, நத்தா பற்றா, மல் தாது
இற்றே முக்கக் ...... கடவேனோ? ---
பொதுத் திருப்புகழ்.
வாத
பித்தமொடு சூலை விப்புருதி,
ஏறு
கல்படுவன் ஈளை பொக்கு இருமல்
மாலை புற்று எழுதல் ஊசல் பல்சனியொடு
......அந்திமாலை
மாசு
அடைக் குருடு, காது அடைப்பு, செவிடு,
ஊமை, கெட்டவலி மூலம் முற்றுதரு,
மாலை உற்ற தொணுறாறு தத்துவர்கள் ......
உண்டகாயம்..
--- சிதம்பரத் திருப்புகழ்.
வாதம், பித்தம், மிடாவயிறு, ஈளைகள்,
சீதம், பற்சனி, சூலை, மகோதரம்,
மாசு அம் கண், பெரு மூல வியாதிகள்,
.....குளிர்காசம்,
மாறும் கக்கலொடே, சில நோய், பிணி-
யோடும், தத்துவ காரர் தொணூறு அறு-
வாரும் சுற்றினில் வாழ்
சதிகாரர்கள், ......வெகுமோகர்,
சூழ் துன் சித்ர கபாயை, மு
ஆசைகொடு
ஏதும் சற்று உணராமலெ மாயைசெய்,
சோரம் பொய்க் குடிலே சுகமாம்
என, ......இதின்மேவித்
தூசின் பொன் சரமோடு குலாய், உலகு
ஏழும் பிற்பட ஓடிடு மூடனை,
தூ அம் சுத்த அடியார் அடி சேர,நின் ......அருள்தாராய். --- பழநித் திருப்புகழ்.
ஆரண
ஆகமம் கடந்த
---
வேதங்களின்
உட்பொருளையும், ஆகமங்களின் உட்பொருளையும் கடந்த நிலையில் விளங்குவது இறை
பரம்பொருள்.
வேதம்
- அறிவு நூல். ஆகமம் - வழிபாட்டு நூல். வேதங்களும்
ஆமகங்களும் பரம்பொருளின் உண்மையை அறுதியிட்டு உறுதியாக உரைக்க முடியாமல்
திகைக்கின்றன.
"வேதங்கள்
ஐயா என, ஓங்கி ஆழ்ந்து அகன்ற
நுண்ணியனே" என்பார் மணிவாசகனார்.
வேதக்
காட்சிக்கும், உபநிடத்து உச்சியில்
விரித்த
போதக்
காட்சிக்கும் காணலன்.... --- கந்த புராணம்.
பாயிரமா
மறைஅனந்தம் அனந்தம் இன்னும்
பார்த்துஅளந்து காண்டும்எனப் பல்கால் மேவி
ஆயிரமா
யிரமுகங்க ளாலும் பன்னாள்
அளந்துஅளந்து,ஓர் அணுத்துணையும் அளவு காணா
தே,இரங்கி அழுது,சிவ சிவஎன்று ஏங்கித்
திரும்பஅருட் பரவெளிவாழ் சிவமே, ஈன்ற
தாய்இரங்கி
வளர்ப்பதுபோல் எம்போல் வாரைத்
தண்ணருளால் வளர்த்து என்றும் தாங்கும்
தேவே
--- திருவருட்பா.
கல்லாலின்
புடையமர்ந்து நான்மறை ஆறு
அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள்
நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய்
அல்லதுமாய் இருந்தனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல்
சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
--- திருவிளையாடல் புராணம்.
திருவாளர்
கனகசபைத் திருநடஞ்செய்து அருள்வார்,
தேவர் சிகாமணி எனக்குத் திருமாலை கொடுத்தார்,
உருவாளர்
அருவாகி ஒளியாகி வெளியாய்
ஓங்குகின்றார்,
என்னுடைய உயிர்த்துணைவர், அவர்தம்
பெருவாய்மைத்
திறம்சிறிதும் பேச முடியாதே,
பேசுவது ஆர், மறைகள்எலாம் கூசுகின்ற என்றால்,
துருவாமல்
இங்கு எனக்குக் கிடைத்ததை என் சொல்வேன்,
சொல் அளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி.
--- திருவருட்பா.
அருளாளர்
பொற்பொதுவில் அற்புதநா டகஞ்செய்
ஆனந்த வண்ணர்,எனை ஆள்உடையார், சிறியேன்
தெருளாத
பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
சீராளர், அவர்பெருமைத் திறத்தைஎவர்
புகல்வார்,
மருளாத
ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
மருண்டனவே? என்னடிஎன் மனவாக்கின் அளவோ?
இருளாமை
என்று உறுமோ அன்று சிறிது உரைப்பேன்
என்னவும்
நாண் ஈர்ப்பது இதற்கு என்புரிவேன் தோழி.
--- திருவருட்பா.
நாதவரை
சென்றுமறை ஓர் அனந்தம் கோடி
நாடிஇளைத்து இருந்தன, ஆகமங்கள் பரநாத
போதவரை
போந்து, பல முகங்கொண்டு தேடிப்
புணர்ப்பு அறியாது இருந்தன என்று அறிஞர் புகல்வாரேல்,
பாதவரை
வெண்ணீறு படிந்து இலங்க, சோதிப்
படிவம் எடுத்து அம்பலத்தே பரதநடம் புரியும்
போது
அவரைக் காண்பதலால், அவர்பெருமை என்னால்
புகல வசம் ஆமோ? நீ புகலாய் என் தோழி. --- திருவருட்பா.
நாதாந்த
வரையும்எங்கள் நாயகனார் செங்கோல்
நடக்கின்றது என்கின்றார், நாதாந்தம் மட்டோ?
போதாந்த
நிலையும், உயர் யோகாந்த நிலையும்,
புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார்,
புகலும்
வேதாந்த
வெளியும், மிகு சித்தாந்த வெளியும்,
விளங்கும் இவற்று அப்பாலும், அதன்மேல் அப்பாலும்
வாதாந்தத்து
அதன்மேலும் அதன்மேல் அப்பாலும்
மன்றாடி அருட்செங்கோல் சென்றாடல் அறியே.
--- திருவருட்பா.
கலையான
ஈறு கூற அரும்
---
வேதாந்தத்தால்
உணர முடியாதது மட்டுமல்ல. உபதேச கலையாகிய சித்தாந்தத்தாலும் முடிவாகக் கூறுதற்கு
இயலாத நிலையில் விளங்குவது பரம்பொருள்.
பெருஞ்
சுவாமியாய் இருந்த நன்றி ---
சிறுதெய்வம்
அல்ல. பெருந்தெய்வம் என்கின்றார் அடிகளார்.
"மெய்த்தேவர்" என்றார் மணிவாசகப் பெருமான்.
"அத்
தேவர் தேவர் அவர் தேவர் என்று இங்ஙன்
பொய்த்தேவு
பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பத்து
ஏதும் இல்லாது, என பற்று அற நான் பற்றி நின்ற
மெய்த்தேவர்
தேவர்க்கே சென்று ஊதாய் கோத்தும்பீ."
--- திருவாசகம்.
தாயாகி
தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம்,
தன்னை
நிகரில்லாத தனித் தலைமை தெய்வம்,
வாயார
வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம்,
மலரடி
என் சென்னிமிசை வைத்த பெரும் தெய்வம்,
காயாது
கனியாகிக் கலந்து இனிக்கும் தெய்வம்க்,
கருணை
நிதித் தெய்வம், முற்றும் காட்டுவிக்கும் தெய்வம்,
சேயாக
எனை வளர்க்கும் தெய்வம், மகா தெய்வம்,
சிற்சபையில்
விளங்குகின்ற தெய்வமற், அதே தெய்வம். --- திருவருட்பா.
ஏது
வேறு இயம்பல் இன்றி ---
ஏது
- எங்கு இருந்தது, எப்படி இருந்தது என்று காரணம் காட்டிச் சொல்ல முடியாத நிலையில்
உள்ளது பரம்பொருள். ஏது என்பது பிரமாணம்
என்றும் சொல்லப்படும். ஆகமப் பிரமாணம், உவமைப் பிரமாணங்களால் அறி முடியாதது.
ஏதுக்க
ளாலும், எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க
வேண்டா, சுடர்விட்டு உளன் எங்கள் சோதி,
மாதுக்கம்
நீங்கல் உறுவீர், மனம்பற்றி வாழ்மின்,
சாதுக்கள்
மிக்கீர், இறையே வந்து சார்மின்களே.
என்பது
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருப்பாசுரத்தில் ஒரு பாடல்.
இதன்
பொழிப்புரை ---
இறைவனை
அன்பால் வழிபடும் ஞானிகளே! அனுமானப் பிரமாணத்தாலும் உரையளவையாலும் இறைவனை மிகுதியாகச்
சோதிக்க வேண்டா. அவன் ஊனக்கண் கொண்டு நோக்க, புறத்தே சோதிவடிவமாகவும், அன்போடு கூடி அகத்தால் ஞானக்கண் கொண்டு நோக்க
உள் ஒளியாகவும் விளங்குபவன். அவனை விரைவில் வந்து சார்ந்து, மனம் ஒன்றி வழிபட்டுப் பிறவித் துன்பத்தைப்
போக்கிக் கொள்ளுங்கள். இறைவன் அளவைகளால் அறியப்படும் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன்.
இதற்கு
விளக்கமாக தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணப் பாடல் பின்வருமாறு
.....
மன்னும்
ஏதுக்க ளால்எனும் வாய்மைதான்
தன்னது
ஒப்பு வேறு இன்மையில், சங்கரன்
இன்ன
தன்மையை ஏது எடுத்துக்காட்டு
அன்ன
ஆற்றால் அளப்பிலன் என்றதாம்.
இதன்
பொழிப்புரை ---
நிலைபெற்ற
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா என்றதன் உண்மையாவது, இறைவனுக்கு உவமையாகக் காட்டத்தகும் பொருள், வேறு ஏதும் இல்லை. ஆகையால், அப்பெருமானின் தன்மை அவ்வேதுக்களாலும், எடுத்துக்காட்டுகளாலும் அவை போன்ற மற்ற அளவைகளாலும்
அளந்து கூறற்கு அரியது என்று விளக்கியபடியாம்.
இறைவன்
தனக்கு உவமையில்லாதவன். உயிர்களோ சிற்றறிவும் சிற்றுணர்வும் உடையன. இந்நிலையில் அவ்வுயிர்கள்
அப்பெருமானை ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிப்பது எங்ஙனம்? இயலாது என்பது கருத்து.
ஒருதானாய்,
யாவுமாய் ---
தனக்கு
உவமை இல்லாததாகவும், ஒப்பு கூற முடியாததாகவும் விளங்குவது பரம்பொருள். "தானே தனக்கு
நிகராய் விளங்கும் தணிகாசலத்து எம் அரசே" என்று வள்ளல்பெருமான் பாடி இருப்பதை
அறிக. அந்த ஒப்பு உயர்வு அற்ற பரம்பொருள், உலக உயிர்களிலும், உலகப் பொருள்களிலும் உள்ளுறை
பொருளாக விளங்குகின்றது.
மனங்கடந்த மோன வீடு அடைந்து ---
"தனு
கரணாதிகள் தாம் கடந்து அறியும் ஒர் அனுபவம் ஆகிய அருட்பெருஞ்சோதி" என்று வள்ளல்பெருமான்
அருளிய வண்ணம், இறைவன் அனுபவப் பொருளாக உள்ளான் என்பது விளங்கும். கரணம் என்பது புறக்
கரணங்களையும், அந்தக் கரணங்களையும்
குறிக்கும். மனம் என்பது அந்தக் கரணங்களில் ஒன்று. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்"
என்றும்,
"உள்ளத்து
உணர்ச்சியில் கொள்ளவும் படான்" என்றும் மணிவாசகப் பெருமான் அருளிய அருமையை உணர்க.
சொல்லும்
பொருளும் இறந்த சுடர் வடிவாக உள்ள பொருளை, மௌன வீட்டில் தான் அனுபவிக்க
முடியும்.
அறிவு
வடிவாக நிளங்கும் இறைவனை மோனம் என்ற கோயிலில் கண்டு வழிபடவேண்டும். ஞானத்தில்
எல்லையாகத் திகழ்வது மோனம் என உணர்க. "மோனம் என்பது ஞானவரம்பு" என்று
உபதேசிக்கின்றார் ஔவையார்.
மன
சம்பந்தம் அற்ற இடத்திற்கு மௌனம் என்று பேர்.
வாய்
பேசாததற்கு மௌனம் என்று கூறுவது ஒரு அளவுக்குப் பொருந்தும். அது வாய்மௌனம்
எனப்படும்.
கைகால்
அசைக்காமல் வாய்பேசாமல் இருப்பதற்கு காஷ்டமௌனம் என்று பேர்.
மனமே
அற்ற நிலைக்குத் தான் பூரண மௌனம் என்று பேர்.
அங்கே
தான் பூரண இன்ப ஊற்று உண்டாகும்.
அந்த
இன்ப வெள்ளத்தில் திளைத்தவர் இந்திர போக இன்பத்தை வேப்பங்காயாக எண்ணுவர்.
இந்த
மௌனத்தை அருளுமாறு திருப்புகழில் அருணகிரியார் ஆறுமுகக் கடவுளை வேண்டுகின்றார்.
அருவம்
இடைஎன வருபவர், துவர்இதழ்
அமுது பருகியும் உருகியும், ம்ருகமத
அளகம் அலையவும், அணிதுகில் அகலவும் ...... அதிபார
அசல
முலைபுள கிதம்எழ, அமளியில்
அமளி படஅந வரதமும் அவசமொடு
அணையும் அழகிய கலவியும் அலம்அலம்,..... உலகோரைத்
தருவை
நிகரிடு புலமையும் அலம்அலம்,
உருவும் இளமையும் அலம்அலம், விபரித
சமய கலைகளும் அலம்அலம், அலமரும்...... வினைவாழ்வும்
சலில
லிபியன சனனமும் அலம்அலம்,
இனிஉன் அடியரொடு ஒருவழி பட.இரு
தமர பரிபுர சரணமும் மவுனமும் ......
அருள்வாயே.
--- திருப்புகழ்.
அகலம்
நீளம் யாதாலும், ஒருவராலும் ஆராய
அரிய மோனமே கோயில் ...... எனமேவி,
அசையவே
க்ரியா பீட மிசை புகா, மகா ஞான
அறிவின் ஆதர ஆமோத ...... மலர்தூவி,
சகல
வேதன அதீத, சகல வாசக அதீத,
சகல மா க்ரியா அதீத, ...... சிவரூப,
சகல
சாதக அதீத, சகல வாசனை அதீத
தனுவை நாடி, மா பூசை ...... புரிவேனோ? --- திருப்புகழ்.
அந்த
மோனமாகிய கோயிலின் அகல நீளத்தை எவராலும் எதனாலும் ஆராய்ந்து அறிய முடியாது. அதை ஞானகுரு உணர்த்த உணர்வினாலேயே உணரமுடியும்.
அதனைப் பெற்ற தாயுமானப் பெருந்தகையார் கூறுகின்ற அமுத வசனங்களை இங்கு உன்னுக...
ஆனந்த மோனகுரு ஆம்எனவே, என்அறிவில்
மோனம் தனக்குஇசைய முற்றியதால், - தேன்உந்து
சொல்எல்லாம் மோனம், தொழில்ஆதி யும்மோனம்,
எல்லாம்நல் மோனவடி வே.
எல்லாமே மோனநிறைவு எய்துதலால், எவ்விடத்தும்
நல்லார்கள் மோனநிலை நாடினார், - பொல்லாத
நான்எனஇங்கு ஒன்றை நடுவே முளைக்கவிட்டு,இங்கு
ஏன்அலைந்தேன் மோனகுரு வே.
மோன குருஅளித்த மோனமே ஆனந்தம்,
ஞானம் அருளும்அது, நானும்அது, - வான்ஆதி
நின்ற நிலையும்அது, நெஞ்சப் பிறப்பும்அது
என்றுஅறிந்தேன் ஆனந்த மே.
அறிந்தஅறிவு எல்லாம் அறிவுஅன்றி இல்லை,
மறிந்தமனம் அற்ற மவுனம் - செறிந்திடவே
நாட்டினான், ஆனந்த நாட்டில் குடிவாழ்க்கை
கூட்டினான் மோன குரு.
குருஆகித் தண்அருளைக் கூறுமுன்னே, மோனா!
உரு,.நீடுஉயிர், பொருளும் ஒக்கத் - தருதிஎன
வாங்கினையே, வேறும்உண்மை வைத்திடவும் கேட்டிடவும்
ஈங்குஒருவர் உண்டோ இனி.
இனிய கருப்புவட்டை என் நாவில் இட்டால்
நனிஇரதம் மாறாது, நானும் - தனிஇருக்கப்
பெற்றிலேன், மோனம் பிறந்தஅன்றே மோனம்அல்லால்
கற்றிலேன் ஏதும் கதி.
ஏதுக்கும் சும்மா இருநீ எனஉரைத்த
சூதுக்கோ, தோன்றாத் துணையாகிப் - போதித்து
நின்றதற்கோ, என்ஐயா! நீக்கிப் பிரியாமல்
கொன்றதற்கோ பேசாக் குறி.
குறியும் குணமும்அறக் கூடாத கூட்டத்து
அறிவுஅறிவாய் நின்றுவிட, ஆங்கே - பிறிவுஅறவும்
சும்மா இருத்திச் சுகங்கொடுத்த மோன! நின்பால்
கைம்மாறு நான்ஒழிதல் காண்.
நான்தான் எனும்மயக்கம் நண்ணுங்கால், என்ஆணை
வான்தான் எனநிறைய மாட்டாய்நீ, - ஊன்றாமல்
வைத்தமவு னத்தாலே மாயை மனமிறந்து
துய்த்துவிடும் ஞான சுகம்.
ஞானநெறிக்கு ஏற்றகுரு, நண்ணரிய சித்திமுத்தி
தானந் தருமம் தழைத்தகுரு, - மானமொடு
தாய்எனவும் வந்துஎன்னைத் தந்தகுரு, என்சிந்தை
கோயில்என வாழும் குரு.
சித்தும் சடமும் சிவத்தைவிட இல்லைஎன்ற
நித்தன் பரமகுரு நேசத்தால், - சுத்தநிலை
பெற்றோமே, நெஞ்சே! பெரும்பிறவி சாராமல்
கற்றோமே மோனக் குரு.
ஒருங்கி ---
ஒருநெறிய
மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன். "எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு என்னை மறந்து
இருந்தேன், இறந்தே விட்டது இவ்வுடம்பே"
என்று கந்தர் அலங்காரத்திலு அடிகளார் அருளியது காண்க.
யான்
அவா அடங்க என்று பெறுவேனோ ---
பற்று, அவா, ஆசை, பேராசை என்று நான்கு வகை எழுச்சிகள்
மனதில் எழும்.
1. உள்ள பொருளில்
வைத்திருக்கும் பிடிப்பு பற்று எனப்படும்.
2. இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று கொழுந்து விடுகின்ற
நினைவு அவா எனப்படும்.
3. பிறர் பொருளை
விரும்பி நிற்பது ஆசையாகும்.
4. எத்தனை வந்தாலும் மன நிறைவு
பெறாமல், நெய்விட, நெய்விட எரிகின்ற நெருப்பின் தன்மைபோல்
சதா உலைந்து அலைந்து மேலிடுகின்ற விருப்பத்துக்குப் பேராசை என்று பெயர்.
பற்று ---
எந்தப்
பொருளின் மீதும் பற்றின்றி நின்றவர்க்கே பிறப்பு அறும்.
பற்றுஅற்ற
கண்ணே பிறப்புஅறுக்கும் மற்று
நிலையாமை
காணப் படும். --- திருக்குறள்.
‘அற்றது பற்றெனில்
உற்றது வீடு’ --- திருவாய்மொழி
அவா ---
உள்ளது
போதும் என்று அலையாமல், இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று விரும்புவோர்
துன்பத்தை அடைவார்கள். இந்த அவாவே பெருந்துயரை விளைவிக்கும்; பிறப்பைக் கொடுக்கும்.
அவா
என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப்
பிறப்பு ஈனும் வித்து. --- திருக்குறள்.
அவா
இல்லார்க்கு இல்லாகும் துன்பம், அஃது உண்டேல்
தவாஅது
மேல்மேல் வரும். --- திருக்குறள்.
அவா
என்ற ஒன்று ஒருவனுக்குக் கெடுமாயின் அவன் வீடுபேறு எய்திய போதுமட்டுமன்றி
இம்மையிலும் இடையறாத இன்பத்தை அடைவான்.
இன்பம்
இடையறாது ஈண்டும், அவா என்னும்
துன்பத்துள்
துன்பம் கெடின். --- திருக்குறள்
ஆசை ---
பிறர்
பொருளின் மீது வைப்பது ஆசையாகும். இது பற்றினும், அவாவினும் கொடிது.
பிறருடைய
மண்ணை விரும்புவது மண்ணாசை, மண் ஆசையால்
மடிந்தவன் துரியோதனன். பிறருடைய மனைவியை
விரும்புவது
பெண்ணாசை. பெண்ணாசையால் பெருங்கேடு அடைந்தவர்கள் இராவணன், இந்திரன், சந்திரன், கீசகன் முதலியோர்கள்.
பேராசை ---
உலகமெல்லாம்
கட்டியாள வேண்டும். தொட்டன எல்லாம் தங்கமாக வேண்டும். கடல் மீது நம் ஆணை
செல்லவேண்டும். விண்ணும் மண்ணும் நம்முடையதாக வேண்டும் என்று எண்ணி, ஒரு கட்டுக்கு அடங்காது, கங்கு கரையின்றி தலை விரித்து எழுந்து
ஆடுகின்ற அசுர தாண்டவமே பேராசை.
கொடும்
கோடை வெய்யிலில் ஒருவன் குடையும் செருப்பும் இன்றி நடந்து சென்று கொண்டிருந்தான்
அவ்வழியில் ஒருவன் பாதரட்சை அணிந்து கொண்டு குடையும் பிடித்துக் கொண்டு குதிரைமீது
சென்றான். அவனைப் பார்த்து நடந்து போனவன், “ஐயா! வணக்கம். குதிரைமேல் போகின்ற
உனக்குப் பாதரட்சை எதற்காக? எனக்குத் தந்தால்
புண்ணியம்” என்றான்.
கேட்டவன்
வாய் மூடுவதற்கு முன் குதிரை மீது சென்றவன் பாதரட்சையைக் கழற்றிக் கொடுத்தான்.
‘ஐயா! குதிரையில்
செல்வதனால் நீர் சீக்கிரம் வீட்டுக்குச் சென்று விடலாம். நான் நடந்து போகின்றவன்.
அதலால் தயவு செய்து தங்கள் குடையைத் தாருங்கள்’ என்றான்.
குதிரைமேல்
போகின்றவன் சற்றும் சிந்தியாமல் இரக்கத்துடன் குடையைக் கொடுத்தான்.
நடப்பவன்
மனம் மிக்க மகிழ்ச்சியடைந்து, “ஐயா! தங்கள் தரும
குணம் பாராட்டுவதற்கு உரியது. நிரம்ப நன்றி. பெருங்கருணை புரிந்து குதிரையைக்
கொடுங்கள்” என்றான்.
குதிரை
மீது இருந்தவன் “அப்படியா!” என்று சொல்லி பளிச்சென்று இறங்கிக் குதிரையை அடிக்கும்
சவுக்கினால் அவனைப் பளீர் பளீர் என்று அடித்தான் அடிபட்டவன் சிரித்தான்.
“நான் அடிக்கிறேன்; நீ சிரிக்கிறாய்; என்ன காரணம்?” என்று கேட்டான்.
“இவ்வாறு கேட்டு
அடிபடவில்லையானால் என் ஆயுள் உள்ளவரை என் மனதில் ஒரே கொந்தளிப்பு இருந்திருக்கும்.
செருப்பைக் கேட்டவுடன் கொடுத்தார்! குடையைக் கேட்டவுடன் கொடுத்தார்! குதிரையைக்
கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். கேளாமல் போய் விட்டோமே?” என்று எண்ணி எண்ணி வருந்துவேன். இப்போது
கேட்டேன்; நீர் குதிரையைக்
கொடுக்காமல் சவுக்கடி கொடுத்தீர். சவுக்கடி பட்டது பெரிதன்று, சந்தேகம் தீர்ந்தது பெரிது” என்று கூறி
அவனை வணங்கிவிட்டுச் சென்றான். இதற்குத்தான் பேராசை யென்று பெயர்.
ஆசைக்குஓர்
அளவு இல்லை, அகிலம் எல்லாம் கட்டி
ஆளினும், கடல் மீதிலே
ஆணை செலவே நினைவர்; அளகேசன் நிகராக
அம்பொன் மிக வைத்தபேரும்
நேசித்து
ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்;
நெடுநாள் இருந்த பேரும்
நிலையாகவே
இனும் காயகற்பம் தேடி
நெஞ்சு புண் ஆவர்; எல்லாம்
யோசிக்கும்
வேளையில், பசிதீர உண்பதும்
உறங்குவதும் ஆகமுடியும்;
உள்ளதே
போதும், நான் நான்எனக்
குளறியே
ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப்
பாசக்
கடற்குளே வீழாமல், மனதுஅற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்,
பார்க்கும்இடம்
எங்கும்ஒரு நீக்கம்அற நிறைகின்ற
பரிபூரண ஆனந்தமே. --- தாயுமானார்.
ஆசைச்
சுழற் கடலில் ஆழாமல், ஐயா, நின்
நேசப்
புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ. --- தாயுமானார்.
ஆசைஎனும்
பெருங் காற்றுஊடுஇலவம்
பஞ்சுஎனவும் மனது அலையுங்காலம்
மோசம்
வரும், இதனாலே கற்றதும்
கேட்டதும் தூர்ந்து முத்திக்குஆன
நேசமும்நல்
வாசமும்போய், புலனாய்இல்
கொடுமை பற்றி நிற்பர்,அந்தோ!
தேசுபழுத்து
அருள்பழுத்த பராபரமே!
நிராசைஇன்றேல் தெய்வம் உண்டோ? --- தாயுமானார்.
“பேராசை எனும்
பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ” ---
கந்தரநுபூதி
கடவுளுக்கும்
நமக்கும் எவ்வளவு தூரம்? என்று ஒரு சீடன்
ஆசிரியனைக் கேட்டான். ஆசிரியர் "ஆசையாகிய சங்கிலி எவ்வளவு நீளம் உளதோ அவ்வளவு
தூரத்தில் கடவுள் இருக்கின்றார்" என்றார்.
சங்கிலி
பல இரும்பு வளையங்களுடன் கூடி நீண்டுள்ளது. ஒவ்வொரு வளையமாக கழற்றி விட்டால் அதன்
நீளம் குறையும். அதுபோல் பலப்பல பொருள்களின் மீது வைத்துள்ள ஆசைச் சங்கிலி மிகப்
பெரிதாக நீண்டுள்ளது. ஒவ்வொரு பொருளின் மீதும் உள்ள ஆசையைச் சிறிது சிறிதாகக்
குறைக்க வேண்டும். முற்றிலும் ஆசை அற்றால் அப்பரம் பொருளை அடையலாம்.
“ஆசா நிகளம் துகள் ஆயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே” --- கந்தரநுபூதி
ஆசையால்
கோபமும், கோபத்தால் மயக்கமும் வரும்.
காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றங்களும்
நீங்கினல்தான் பிறவி நீங்கும்.
“காமம் வெகுளி மயக்கம்
இம்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்” ---
திருக்குறள்.
தேவர்
யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே ---
தமிழ்நாட்டின்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் வட்டாரத்தில் தேவனூர் என்னும் ஊர் அமைந்துள்ளது.
விழுப்புரம்
மாவட்டத்தில் செஞ்சி என்னும் ஊருக்கு
வடகிழக்கிலும்,
திருக்கோயிலூர்
என்னும் ஊருக்கு அருகிலும் தேவனூர் என்னும் ஊர் அமைந்துள்ளது.
தேவனூர்
என்பது ஒரு தேவார வைப்புத் தலமாகவும் சுந்தரர் தேவாரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தென்னூர்
கைம்மைத் திருச்சுழியல் திருக்கானப்பேர்
பன்னூர்
புக்கு உறையும் பரமற்கு இடம் பாய்நலம்
என்னூர்
எங்கள் பிரான் உறையும் திருத் தேவனூர்
பொன்னூர்
நாட்டுப் பொன்னூர் புரிசை நாட்டுப் புரிசையே.
--- சுந்தரர் தேவாரம்.
கருத்துரை
No comments:
Post a Comment