தச்சூர் - 0744. அச்சாய் இறுக்காணி

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அச்சாய் இறுக்காணி  (தச்சூர்)

முருகா!
விலைமாதர் மீது ஆசைவைத்து அழியாமல்,
உனது திருவடியைப் பற்றி உய்ய அருள்.

தத்தா தனத்தான தாத்தத் தனந்த
     தத்தா தனத்தான தாத்தத் தனந்த
     தத்தா தனத்தான தாத்தத் தனந்த ...... தனதான


அச்சா யிறுக்காணி காட்டிக் கடைந்த
     செப்பார் முலைக்கோடு நீட்டிச் சரங்க
     ளைப்போல் விழிக்கூர்மை நோக்கிக் குழைந்து ...... உறவாடி

அத்தா னெனக்காசை கூட்டித் தயங்க
     வைத்தா யெனப்பேசி மூக்கைச் சொறிந்து
     அக்கா லொருக்கால மேக்கற் றிருந்தி ...... ரிலையாசை

வைச்சா யெடுப்பான பேச்சுக் கிடங்க
     ளொப்பா ருனக்கீடு பார்க்கிற் கடம்பன்
     மட்டோ எனப்பாரின் மூர்க்கத் தனங்க ...... ளதனாலே

மைப்பா கெனக்கூறி வீட்டிற் கொணர்ந்து
     புற்பா யலிற்காலம் வீற்றுக் கலந்து
     வைப்பார் தமக்காசை யாற்பித் தளைந்து ...... திரிவேனோ

எச்சாய் மருட்பாடு மேற்பட் டிருந்த
     பிச்சா சருக்கோதி கோட்டைக் கிலங்க
     மிக்கா நினைப்போர்கள் வீக்கிற் பொருந்தி ...... நிலையாயே

எட்டா மெழுத்தேழை யேற்குப் பகர்ந்த
     முத்தா வலுப்பான போர்க்குட் டோடங்கி
     யெக்கா லுமக்காத சூர்க்கொத் தரிந்த ...... சினவேலா

தச்சா மயிற்சேவ லாக்கிப் பிளந்த
     சித்தா குறப்பாவை தாட்குட் படிந்து
     சக்கா கியப்பேடை யாட்குப் புகுந்து ...... மணமாகித்

தப்பா மலிப்பூர்வ மேற்குத் தரங்கள்
     தெற்கா குமிப்பாரில் கீர்த்திக் கிசைந்த
     தச்சூர் வடக்காகு மார்க்கத் தமர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அச்சாழ் இறுக்கு ஆணி காட்டி, கடைந்த
     செப்பார் முலைக்கோடு நீட்டி, சரங்க-
     ளைப்போல் விழிக்கூர்மை நோக்கிக் குழைந்து, ...... உறவாடி,

அத்தான் எனக்கு ஆசை கூட்டி, தயங்க
     வைத்தாய், எனப்பேசி, மூக்கைச் சொறிந்து,
     அக்கால் ஒருக்காலம் ஏக்கற்று இருந்திர் ...... இலை,ஆசை

வைச்சாய், டுப்பான பேச்சுக்கு இடங்கள்,
     ஒப்பார் உனக்கு ஈடு பார்க்கில், கடம்பன்
     மட்டோ? எனப் பாரின் மூர்க்கத் தனங்கள் ......அதனாலே,

மைப்பாகு எனக்கூறி வீட்டில் கொணர்ந்து,
     புல் பாயலில் காலம் வீற்றுக் கலந்து,
     வைப்பார் தமக்கு ஆசையால் பித்து அளைந்து ...... திரிவேனோ?

எச்சாய் மருள் பாடு மேற்பட்டு இருந்த
     பிச்சு ஆசருக்கு ஓதி! கோட்டைக்கு இலங்க
     மிக்கா நினைப்போர்கள் வீக்கில் பொருந்தி, ...... நிலையாயே

எட்டாம் எழுத்து ஏழையேற்குப் பகர்ந்த
     முத்தா! வலுப்பான போர்க்குள் தொடங்கி,
     எக்காலும் மக்காத சூர்க்கொத்து அரிந்த ...... சினவேலா!

தச்சா மயில் சேவல் ஆக்கிப் பிளந்த
     சித்தா! குறப்பாவை தாட்குள் படிந்து,
     சக்காகி அப் பேடையாட்குப் புகுந்து ...... மணமாகி,

தப்பாமல் இப் பூர்வ மேற்கு உத்தரங்கள்
     தெற்கு ஆகும் இப்பாரில் கீர்த்திக்கு இசைந்த
     தச்சூர் வடக்காகும் மார்க்கத்து அமர்ந்த ...... பெருமாளே.


பதவுரை


      எச்சாய் --- (பேரூழிக் காலத்தில் எல்லாம் அழிந்த பின்னும்) எஞ்சி இருக்கும் பொருளாய்

     மருள் பாடு மேற்பட்டு இருந்த பிச்சு ஆசருக்கு ஓதி --- மயக்க உணர்வினைக் கடந்தவராய் இருந்த பித்தராகிய சிவபெருமானுக்கு உபதேசித்தவரே!

       கோட்டைக்கு இலங்க மிக்கா நினைப்போர்கள் வீக்கில் பொருந்தி நிலையாயே --- மனம் என்னும் கோட்டையில் வீற்றிருக்க வைத்து,  நீள நினைந்து துதிப்பவர்களின் அன்பு என்னும் கட்டுக்குள் எப்போதும் பொருந்தி இருப்பவரே!

      எட்டாம் எழுத்தை ஏழையேற்குப் பகர்ந்த முத்தா --- தமிழில் எட்டு என்னும் பொருள் பொதிந்ததாகிய அகரப் பொருளை அறிவிலியாகிய அடியேனுக்கு உபதேசித்த, இயல்பாவே பாசங்களில் இருந்து நீங்கியவரே!

      வலுப்பான போர்க்குள் தொடங்கி --- வலிமை மிகுந்த போரினைத் தொடங்கி,

     எக்காலும் மக்காத சூர்க் கொத்து அரிந்த சினவேலா --- எப்போதும் அழியாத வரம் பெற்ற சூரபதுமனையும், அவன் குலத்தையும் அரிந்து தள்ளின உக்கிரமான வேலாயுதத்தை உடையவரே!

      தச்சா மயில் சேவல் ஆக்கிப் பிளந்த சித்தா --- ஒரு தச்சனைப் போல மயிலும் சேவலுமாய் வரும்படி மாமரத்தைப் பிளந்த சித்தரே!

      குறப்பாவை தாட்குள் படிந்து --- குறமகளாகிய வள்ளிநாயகியின் திருவடிகளில் பணிந்து,

     சக்கு ஆகி --- அவளுக்குக் கண்ணைப் போல விளங்கி,

     அப்பேடையாட்குப் புகுந்து மணமாகி --- அந்தப் பெண்ணின் உள்ளத்தில் இடம் கொண்டு, அவளை மணந்து,

      தப்பாமல் --- தவறுதல் இல்லாமல்,

     இப் பூர்வ மேற்கு உத்தரங்கள் தெற்காகும் இப்பாரில் --- சொல்லப்படுகின்ற கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் நால்திசை உள்ள இந்த உலகத்தில்,

     கீர்த்திக்கு இசைந்த தச்சூர் --- புகழ் பெற்று விளங்கும் தச்சூர் என்னும் திருத்தலத்தின்

     வடக்கு ஆகும் மார்க்கத்து அமர்ந்த பெருமாளே --- வடக்கே செல்லும் வழியில் (ஆண்டார்குப்பம் என்னும் திருத்தலத்தில்) திருக்கோயில் கொண்டு விளங்கும் பெருமையில் மிக்கவரே!

      அச்சாய் இறுக்கு ஆணி காட்டி --- வலிமை மிக்கதாய் அழுந்தப் பொருந்தி உள்ள ஆணியைப் போன்றதும்,

     கடைந்த செப்பு ஆர் முலைக் கோடு நீட்டி --- நன்றாகக் கடையப்பட்ட சிமிழைப் போன்றதும், மலை முகடு போன்ற முலைகளை முன் காட்டியும்,

       சரங்களைப் போல் விழிக் கூர்மை நோக்கி --- அம்புகளைப் போன்ற கண்களால் கூர்ந்து நோக்கி,

     குழைந்து உறவாடி --- உள்ளம் நெகிழ்வது போல் உறவாடியும்,

      அத்தான் எனக்கு ஆசை கூட்டித் தயங்க வைத்தாய் எனப் பேசி மூக்கைச் சொறிந்து --- அத்தான் என அழைத்து எனது உள்ளத்தில் ஆசையை மூட்டி, என்னை வாடும்படி வைத்து விட்டீர் என்று பேசி மூக்கை ஆசையுடன் சொறிந்துவிட்டு,

       அக்கால் ஒருக்காலம் ஏக்கற்று இருந்திர் இல்லை --- முந்தைய காலத்தில் நீங்கள் என்னை விரும்பி வராமல் இருந்தது இல்லை.

     ஆசை வைச்சாய் --- ஆசை வைத்துத்தான் இருந்தீர்கள்,

     எடுப்பான பேச்சுக்கு இடங்கள் --- (இப்போது நீங்கள் அப்படி இல்லையாதலால்) நிந்தையான பேச்சுக்கு இடம் ஆகி விட்டது.

      ஒப்பு ஆர் உனக்கு ஈடு --- உமக்கு ஒப்பானவர் யார் உள்ளனர்,

     பார்க்கில் கடம்பன் மட்டோ --- ஆராய்ந்து பார்த்தால் அழகே வடிவான கடம்பனும் இல்லை,

     எனப் பாரின் மூர்க்கத்தனங்கள் அதனாலே --- என்று பலவாறு மூர்க்கத்தனங்கள் கொண்ட செயல்களாலே,

     மைப்பாகு எனக் கூறி --- வெல்லப் பாகு போல் இனிமையாகப் பேசி,

       வீட்டில் கொணர்ந்து --- தமது வீட்டிற்கு அழைத்து வந்து,

     புல் பாயலில் காலம் வீற்றுக் கலந்து வைப்பார் தமக்கு ஆசையால் --- கோரைப் புல்லால் ஆன பாயில் பொருந்திக் கலந்து இன்பத்தைத் தரும் விலைமாதர்கள் மீது வைத்த ஆசையால்,

     பித்து அளைந்து திரிவேனோ --- பித்தன் ஆகி அடியேன் திரிவேனோ?


பொழிப்புரை

     பேரூழிக் காலத்தில் எல்லாம் அழிந்த பின்னும் எஞ்சி இருக்கும் பொருளாய், மயக்க உணர்வினைக் கடந்தவராய் இருந்த பித்தராகிய சிவபெருமானுக்கு உபதேசித்தவரே!

     மனம் என்னும் கோட்டையில் வீற்றிருக்க வைத்து,  நீள நினைந்து துதிப்பவர்களின் அன்பு என்னும் கட்டுக்குள் எப்போதும் பொருந்தி இருப்பவரே!

     தமிழில் எட்டு என்னும் பொருள் பொதிந்ததாகிய அகரப் பொருளை அறிவிலியாகிய அடியேனுக்கு உபதேசித்த, இயல்பாவே பாசங்களில் இருந்து நீங்கியவரே!

     வலிமை மிகுந்த போரினைத் தொடங்கி, எப்போதும் அழியாத வரம் பெற்ற சூரபதுமனையும், அவன் குலத்தையும் அரிந்து தள்ளின உக்கிரமான வேலாயுதத்தை உடையவரே!

     ஒரு தச்சனைப் போல மயிலும் சேவலுமாய் வரும்படி மாமரத்தைப் பிளந்த சித்தரே!

         குறமகளாகிய வள்ளிநாயகியின் திருவடிகளில் பணிந்து, அவளுக்குக் கண்ணாக விளங்கி, அந்தப் பெண்ணின் உள்ளத்தில் இடம் கொண்டு, அவளை மணந்து, தவறுதல் இல்லாமல், சொல்லப்படுகின்ற கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் நால்திசை உள்ள இந்த உலகத்தில், புகழ் பெற்று விளங்கும் தச்சூர் என்னும் திருத்தலத்தின் வடக்கே செல்லும் வழியில் (ஆண்டார்குப்பம் என்னும் திருத்தலத்தில்) திருக்கோயில் கொண்டு விளங்கும் பெருமையில் மிக்கவரே!

     வலிமை மிக்கதாய் அழுந்தப் பொருந்தி உள்ள ஆணியைப் போன்றதும், நன்றாகக் கடையப்பட்ட சிமிழைப் போன்றதும், மலை முகடு போன்ற முலைகளை முன் காட்டியும், அம்புகளைப் போன்ற கண்களால் கூர்ந்து நோக்கி, உள்ளம் நெகிழ்வது போல் உறவாடியும், "அத்தான் என அழைத்து எனது உள்ளத்தில் ஆசையை மூட்டி, என்னை வாடும்படி வைத்து விட்டீர்" என்று பேசி மூக்கை ஆசையுடன் சொறிந்துவிட்டு, "முந்தைய காலத்தில் ஒருபோதும் நீங்கள் என்னை விரும்பி வராமல் இருந்தது இல்லை. ஆசை வைத்துத்தான் இருந்தீர்கள். இப்போது நீங்கள் அப்படி இல்லையாதலால் நிந்தையான பேச்சுக்கு இடம் ஆகி விட்டது. உமக்கு ஒப்பானவர் யார் உள்ளனர்? ஆராய்ந்து பார்த்தால் அழகே வடிவான கடம்பனும் இல்லை" என்று பலவாறு மூர்க்கத்தனங்கள் கொண்ட செயல்களாலே, வெல்லப் பாகு போல் இனிமையாகப் பேசி, தமது வீட்டிற்கு அழைத்து வந்து, கோரைப் புல்லால் ஆன பாயில் பொருந்திக் கலந்து இன்பத்தைத் தரும் விலைமாதர்கள் மீது வைத்த ஆசையால், பித்தன் ஆகி அடியேன் திரிவேனோ?


விரிவுரை

இத் திருப்புகழின் முற்பகுதியில் அடிகளார் விலைமாதர் செய்யும் சாகசங்களை எடுத்துக் கூறி,  மம்மர் மிகுந்த நெஞ்சத்தவராகிய ஆடவரை அவர் மயக்கி, கிடைக்கின்ற பொருளுக்கு ஏற்ப இன்பத்தைத் தந்து, மேலும் மேலும் தம்மிடத்திலேயே தஞ்சம் அடைந்து இருக்குமாறு தந்திரங்கள் பலவற்றையும் புரிவதையும் காட்டி, அவர் தரும் கலவியே கருதி பித்தேறி இருப்பதை விடுத்து உய்யுமாறு அருள் புரிய இறைவனை வேண்டுகின்றார்.
  
எச்சாய் ---

ஆயிரம் சதுர் யுகங்கள் கடந்தபின்,  நூறு ஆண்டுகள் மழை இன்றி வெயில் காயும். புல் பூடுகள் இன்றி எல்லாம் மடியும். நூறு ஆண்டுகள் ஒழியாது மழை பொழியும். மண் நீரில் கரைந்து மறையும். எங்கும் பெரு வெள்ளமாய் விளங்கும். அப்போது ஓருயிரும் இன்றி எல்லாம் மூலப்பிரகிருதியில் ஒடுங்கும். அது சர்வ சங்கார காலம். அப்போது எஞ்சி இருப்பவர் சிவபெருமான் ஒருவரே ஆவார்.
  
அருவரை பொறுத்த ஆற்றலினானும்,
     அணிகிளர் தாமரை யானும்
இருவரும் ஏத்த எரி உரு ஆன
     இறைவனார் உறைவிடம் வினவில்,
ஒருவர் இவ் வுலகில் வாழ்கிலா வண்ணம்
     ஒலிபுனல் வெள்ளமுன் பரப்பக்
கருவரை சூழ்ந்த கடல்இடை மிதக்கும்
     கழுமல நகரென லாமே.        --- திருஞானசம்ப்தர்.
  
இதன் பொருள் ----
கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கிய ஆற்றலுடைய திருமாலும் , அழகிய செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் ஏத்தித் துதிக்கும்படியாகத் தீப்பிழம்பின் உருவாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , ஒருவரும் இவ்வுலகில் வாழ இயலா வண்ணம் , பேரூழிக் காலத்தில் பெருவெள்ளம் பெருக்கெடுக்க , அப்பரப்பில் கருவரை போன்ற திருமால் கிடந்து அறிதுயில் கொள்ளும் கடலிடைத் திருத்தோணி போன்று மிதந்த சிறப்பு வாய்ந்த திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .

பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும்போய்
இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்
வரும்கடன் மீளநின்று எம்இறை நல்வீணை வாசிக்குமே.  --- அப்பர்.

இதன் பொருள் ---
பெரிய கடல் இவ்வுலகை மூட ஊழி வெள்ளம் ஏற்படப் பிரமனுடைய சத்திய உலகத்தும் பெரிய கடல்நீர் பொங்கி அதனை மூழ்க்கப் பிரமனும் இறப்பான் . அந்நிலையில் பிரமனுடைய இறந்த உடலையும் கரிய கடல்போன்ற நிறத்தினனாகிய திரு மாலுடைய உடலையும் சுமந்து கொண்டு அவர்களுடைய தசைகழிந்த உடம்பின் எலும்புக் கூடுகளை அணிந்தவனாய் , ஒடுங்கிய உலகம் மீளத்தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து கொண்டு இருந்து எம்பெருமான் சிறந்த வீணையை வாசித்துக் கொண்டிருப்பான் .

சார்ந்தப் பெரு நீர்வெளம் ஆகவெ
     பாய்ந்த அப்பொழுது, ரும் இலாமலெ
          காந்தப் பெரு நாதனும் ஆகிய ...... மதராலே,
தாந்தக்கிட தாகிட தாகிட
     தோந்திக்கிட தோதிமி தோதிமி
          சேஞ்செக்கண சேகெண சேகெண ...... எனதாளம்
காந்தப் பதம் மாறி உலா உயர்,
     ஆந்தன் குரு நாதனும் ஆகியெ
          போந்தப் பெருமான்! முருகா! ஒரு ...... பெரியோனே!
                                                      ---  (வாய்ந்து அப்பிடை) திருப்புகழ்.


மருள் பாடு மேற்பட்டு இருந்த பிச்சு ஆசருக்கு ஓதி ---

பிச்சு - பித்து.   ஆசர் - ஆயத்தம். நேர்வந்து இருத்தலைக் குறிக்கும் சொல்.

ஆசர் என்னும் சொல்லை வைத்துத்தான்,  பள்ளிகளில் வருகைப் பதிவின்போது "ஆஜர்" என்று சொல்லும் வழக்கம் உண்டானது போலும்.

சிவபெருமானைப் பித்தா என்று அழைத்துப் பாடியவர் சுந்தரமூர்த்தி நாயனார். "பித்தா" என்று வைதாலும் வாழ்த்தாகக் கொள்பவர். "பண்ணுறும் தொடர்பில் பித்த என்கினும், நீ பயன் தரல் அறிந்து நின் புகழேன்" என்றார் சிவப்பிரகாச சுவாமிகள். பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும் பிழைத்தவை பொறுத்து அருள் செய்" என்றது திருவிசைப்பா.

இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவர் சிவபெருமான்.
மருள் உணர்வு அற்றவர்.

இயல்பாகவே பாசங்களில் கட்டுண்டு இருப்பவை உயிர்கள்.
மருள் உணர்வு நிரம்பியவை.

பாசங்களில் இருந்து விடுபட வேண்டுமானால், பாசங்களில் இருந்து விடுபட்டவரை அடைய வேண்டும்.

மருள் என்னும் மயக்க உணர்வு நீங்கவேண்டுமானால், மயக்க உணர்வு அற்றவரை அணுகவேண்டும்.


கோட்டைக்கு இலங்க மிக்கா நினைப்போர்கள் வீக்கில் பொருந்தி நிலையாயே ---

கோட்டை --- மனம் என்னும் கோட்டையைக் குறித்து நின்றது.

மனத்தை குகையாகவும் கொண்டு அந்தக் குகையில் வீற்றிருந்து அருள் புரிகின்ற பரம்பொருளை "குகன்" என்பர்.

மிக்கா - மிகுதியாக.

வீக்கு - கட்டு.  வீக்கில் - கட்டில்.

மனம் என்னும் கோட்டையில் இறைவனை வைத்து,  நீ நினைந்து வழிபடுகின்ற அடியவர்களின் அன்பு என்னும் கட்டுக்குள் அடங்கி நிற்பது பரம்பொருள். "பத்தி வலையில் படுவோன் காண்க" என்றார் மணிவாசகப் பெருமான். "அன்பு எனும் வலைக்கு உட்படு பரம்பொருளே" என்றார் வள்ளல்பெருமான்.


எட்டாம் எழுத்தை ஏழையேற்குப் பகர்ந்த முத்தா ---

தமிழில் எட்டு என்னும் எண்ணைக் குறிக்கின்றதும், இறைவனைக் குறிக்கின்றதும் ஆகிய எழுத்து "அ" ஆகும். சகல நிலையில் உயிர்களால் எட்டமுடியாத எழுத்து இது ஆகும். சுத்த நிலையில் உயிர்கள் எட்டுகின்ற எழுத்தும் இதுவே ஆகும்.

எழுத்து உயிரும் ஒற்றும் என இருவகையாய் மருவி உள்ளது. உலகம் உயிருடைப் பொருள்களும், உயிர்களும் என இரு பிரிவு உடையது. "அ" கரம் எல்லா எழுத்துக்களையும் கலந்து இயக்கி, தானும் தனித்து இயங்கும். இறைவனும் எல்லாப் பொருள்களையும் இனமாகக் கலந்து இயக்கி, தானும் தனித்து இயங்குவான். அகரம் இயங்காவழி அனைத்து எழுத்தும் எனைத்தும் இயங்கா. அவன் அசையாவழி அணுவும் அசையாது.

அகரத்தால் மெய்கள் ஒலித்து வருகின்றன. இறைவனால் அகிலமும் சலித்து வருகின்றன. ஒலி உலகமும், உயிர் உலகமும் ஒளிபெற்று உலாவி வருநிலை ஒருங்கே தெளிவுற வந்தது.

மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் ----  தொல்காப்பியம்.

அகரத்தோடு பொருந்தியே மெய்கள் நடக்கும் என ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வாறு கூறியிருக்கிறார்.

மெய் எழுத்துகளே என்றி, ஆ இ முதலிய மற்ற உயிர் எழுத்துக்களும் அகரத்தாலேயே உயிர்த்து வருகின்றன. சரம் அசரம் என்னும் இருவகை நிலைகளும் இறைவனால் இயங்கி வருதல் போல், உயிர்களும் மெய்களும்(உயிர்களும் உலகப் பொருள்களும்) அகரத்தால் முறையோடு இயங்கி வருகின்றன. 

இறைவன் அடங்கினால் எல்லாம் அடங்கும். அவன் அசைந்தால் அகிலமும் அசையும் என்னும் இத் தலைமைத் தன்மை அகரத்திற்கும் தகைமையாய் அமைந்து இருத்தலால், அது இங்கு ஆதிபகவனோடு நேர் உரிமையா நேர்ந்து நிலையா உணர வந்தது. 

வாயைத் திறந்த உடனே "அ" என்பது இயல்பாக எழுகின்றது.  ஆகவே, ஓசை உருவங்களாய் மருவி உள்ள எழுத்துக்களுக்கு எல்லாம் அது உறுதி புரிந்து நின்றது. தலைமைத் தன்மை பலவகையிலும் நிலைபெற்று உள்ளமையால், முதல் எழுத்து முதல்வன் என வந்தது. அகரம் என அகிலமும் நின்ற பரன் அறிய நின்றான்.

அகரஉயிர் எழுத்துஅனைத்தும் ஆகி வேறாய்
     அமர்ந்ததுஎன அகிலாண்டம் அனைத்தும்ஆகி,
பகர்வனஎல் லாம்ஆகி, அல்லது ஆகி,
         பரம்ஆகி, சொல்லஅரிய பான்மை ஆகி,
துகள்அறுசங் கற்பவிகற் பங்கள்எல்லாம்
         தோயாத அறிவுஆகிச் சுத்தம் ஆகி
நிகர்இல்பசு பதியான பொருளை நாடி
         நெட்டுஉயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம்.    ---  தாயுமானவர்.

அகர உயிர்போல் பரமன் அகிலாண்ட கோடி எங்கும் பரவி நிலவி உள்ளான் எனத் தாயுமானவர் இங்ஙனம் நேயமாப் பாடியுள்ளார். ஆதிபகவன் நிலையைக் குறித்து விரித்து, திருக்குறளுக்கு விருத்தியுரை போல் இது வந்து உள்ளது.

எழுத்துகளுள் நான் "அ"கரமாய் இருக்கின்றேன் என்று கண்ணபிரான் இவ்வாறு ஆதிமூலத்தின் தலைமை நிலையை அருச்சுனனிடம் உரிமையோடு கூறி இருக்கிறார்.

அகரமும் ஆகி அதிபனும் ஆகி           ---   திருப்புகழ்.

அகரம் என அறிவாகி உலகம் எங்கும்
         அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகரும் ஒரு முதலாகி வேறும் ஆகி
         பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகரில் பொருள் நான்கினையும் இடர்தீர்த்து எய்தப்
         போற்றுநருக்கு அறக்கருணை புரிந்து அல்லார்க்கு
நிகரில்மறக் கருணைபுரிந்து ஆண்டுகொண்ட
         நிருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வாம்.    ---  விநாயக புராணம்.

உலகுஎலாம் ஆகி, வேறுஆய்,
         உடனும்ஆய், ஒளிஆய், ஓங்கி,
அலகுஇலா உயிர்கள் கன்மத்து
         ஆணையின் அமர்ந்து  செல்லத்
தலைவனாய், இவற்றின் தன்மை
         தனக்கு எய்தல் இன்றித் தானே
நிலவுசீர் அமலன் ஆகி,
         நின்றனன், நீங்காது எங்கும்,

ஒன்று என மறைகள் எல்லாம்
         உரைத்திட, உயிர்கள் ஒன்றி
நின்றனன் என்று பன்மை
         நிகழ்த்துவது என்னை? என்னின்,
அன்று; அவை பதிதான் ஒன்றுஎன்று
         அறையும்; அக்கரங்கள் தோறும்
சென்றிடும் அகரம் போல
         நின்றனன், சிவனும் சேர்ந்தே.    ---  சிவஞான சித்தியார்.

அகரஉயிர் போல் அறிவாகி எங்கும்
நிகர்இல் இறை நிற்கும் நிறைந்து.        ---  திருவருட்பயன்.

அஞ்செழுத்தால் ஈந்து பூதம் படைத்தனன்,
அஞ்செழுத்தால் பல யோனி படைத்தனன்,
அஞ்செழுத்தால் இவ் அகலிடம் தாங்கினன்,
அஞ்செழுத்தாலே அமர்ந்து நின்றானே.        --- திருமந்திரம்.

திருவைந்தெழுத்தினுள் மகர அடையாளத்தால் உலகம் படைக்கப்பட்டது விளங்கும். அதுபோல் யகர அடையாளத்தால் உடலுடன் உயிரினை இணைத்தது விளங்கும். யோனி - உயிர். நகர அடையாளத்தால் விரிந்த வுலகத்தை இயைந்தியக்கிக் காக்கும் நடுநிலைமை விளங்கும். சிகரவகர அடையாளங்களால் எல்லாமாய் அமர்ந்தமை விளங்கும்.

ஐந்தின் பெருமையே அகல் இடம் ஆவது,
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவது,
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்,
ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.     --- திருமந்திரம்.

திருவைந்தெழுத்தின் அளவிலாப் பெருமையினாலேயே எல்லாவுலகமும் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. திருவைந்தெழுத்தின் சிறந்த திருக்குறிப்பே சிவபெருமான் திருக்கோவிலாகும். அது, சிவக்கொழுந்தாகிய சிவலிங்கம் காணப்படும் கருவரை நிலை சிகரம். அதன் அடுத்த மண்டபத்தில் காணப்படும் மனோன்மணி நிலை வகரம்; ஆனேற்று நிலை யகரம். அம்பலவாணர் நிலை நகரம். பலிபீட நிலை மகரம்.அறவோன் ஆகிய சிவபெருமான் அருளும் வழக்கமும் திருவைந்தெழுத்தேயாம். திருவைந்தெழுத்தை முறையாகக் கணிப்பாரைக் காக்கும் காவலன் சிவபெருமானாவன். (பாலன் - காவலன்)

அகார உகாரம் அகங்காரம் புத்தி;
மகாரம் மனம்; சித்தம் விந்து;- பகாது இவற்றை
நாதம் உளவடிவாம்; நாடில் பிரணவமாம்;
போதம் கடல்திரையே போன்று.       --- சிவஞானபோதம்.
     
இதன் பொருள்:

அகரம் அகங்காரத்தைச் செலுத்தும்; உகரம் புத்தியைச் செலுத்தும்; மகரம் மனத்தைச் செலுத்தும்; விந்து சித்தத்தைச் செலுத்தும்; நாதம் புருட தத்துவத்தைச் செலுத்தும்.

இந்த ஐந்தையும் இவ்வாறு தனித்தனியாகக் காணாமல் ஒன்றாகத் தொகுத்து நோக்கினால் அத் தொகுதியே ஓம் என்னும் பிரணவம் ஆகும்.

இந்த ஐந்து அக்கரங்களால் ஆன்மாவினிடத்து உணர்வுகள் கடலில் அலைகள் புதிது புதிதாய்த் தோன்றுதல் போலத் தோன்றுவனவாகும்.

இதன் பதவுரை ---

அகார உகாரம் - அகரமும் உகரமும்

அகங்காரம் புத்தி - முறையே அகங்காரத்தையும் புத்தியையும்    செலுத்தும்.

மகாரம் மன்ம - மகரம் மனத்தைச் செலுத்தும்

விந்து சித்தம் - விந்து சித்தத்தைச் செலுத்தும்

நாதம் உள வடிவாம் - நாதம் புருடதத்துவத்தைச் செலுத்தும்

இவற்றைப் பகாது நாடின் - இந்த ஐந்தையும் இவ்வாறு பகுத்துக் காணாது தொகுத்து நோக்கினால்

பிரணவமாம் - அத்தொகுதி பிரணவம் (ஓம்) ஆகும்.

போதம் கடல் திரையே போன்று - அகரம் முதலிய இந்த ஐந்து   அக்கரங்களால் அந்தக் கரணங்களிடத்து உணர்வுகள் புதிது   புதிதாகத் தோன்றுதல் கடலிடத்து அலைகள் புதிது புதிதாய் எழுந்து வருதல் போன்றதாகும்.

அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் ஆகிய ஐந்தும் சூக்கும பஞ்சாக்கரம் எனப்படும். அவற்றின் தொகுதியே ஓம் என்பதாகிய பிரணவம்.

தொகுதியாக நிற்கும் ஓம் என்பதனை சமட்டிப் பிரணவம் என்பர். ஓங்காரம் என்பதுவும் இதுவே. அகரம் முதலிய ஐந்தாக விரித்துக் கூறின் வியட்டிப் பிரணவம் எனப்படும்.

அகரம் முதலிய ஒவ்வொன்றும் பிரணவத்தின் கலை எனப்படும். கலை - கூறு; எனவே பிரணவம் ஐந்து கலைகளையுடையது என்பது விளங்கும். சொற்கூட்டம் அனைத்திற்கும் மூலம் ஓங்காரமேயாகும்.

பிரணவ கலைகளையும் அவற்றால் செலுத்தப்படும் அந்தக் கரணங்களையும் பின்வருமாறு அமைத்துக் காட்டலாம்.

பிரணவ கலைகள்     அந்தக்கரணங்கள்

நாதம்                  -       புருடதத்துவம்
விந்து                  -       சித்தம்                    
மகரம்                  -       மனம்
உகரம்                  -       புத்தி
அகரம்                  -       அகங்காரம்

பேராய அண்டங்கள் பலவும், பிண்ட
     பேதங்கள் பற்பலவும், பிண்டஅண்டத்தின்
வாராய பல பொருளும்,கடலும், மண்ணும்,மலை
     அளவும், கடல்அளவும், மணலும, வானும்
ஊராதவான் மீனும், அணுவும், மற்றை உள்ளனவும்
     அளந்திடலாம், ஓகோ உன்னை
யாராலும் அளப்பரிது என்றுஅனந்த வேதம்
     அறைந்து இளைக்க அதிதூரம் ஆகும் தேவே.   --- திருவருட்பா

எட்டும் இரண்டும் அறியாத என்னை
எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்.       ---  திருமந்திரம்.
  
எட்டு இண்டும் அறியாத என்செவியில்,
     எட்டு இரண்டும் இது ஆம் இலிங்கம்என,
     எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு! ......முருகோனே!
                                                                             --- (கட்டிமுண்டக) திருப்புகழ்.

எக்காலும் மக்காத சூர்க் கொத்து அரிந்த சினவேலா --- எப்போதும் அழியாத வரம் பெற்ற சூரபதுமனையும், அவன் குலத்தையும் அரிந்து தள்ளின உக்கிரமான வேலாயுதத்தை உடையவர் முருகப் பெருமான்.

தச்சா மயில் சேவல் ஆக்கிப் பிளந்த சித்தா ---

ஒரு தச்சன் மரத்தைப் பிளந்து செதுக்கி, விரும்பிய பொருள்களை வடிப்பது போல, மாமரம் ஆகி நின்ற சூரபதுமனை வேலாயுதத்தை விடுத்து இருகூறாகப் பிளந்தார் முருகப்பெருமான். ஒரு கூறு மயிலும்  இன்னொரு கூறு சேவலுமாய் நின்றது. விந்து வடிவான மயிலைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டார். நாத வடிவான சேவலைத் தனது கொடியில் பொருத்திக் கொண்டார் முருகப் பெருமான்.

முருகப் பெருமானுடைய விசுவ ரூபத்தைக் கண்டு வெருண்ட சூரபதுமன், "முருகப் பெருமானை வெல்லுவதும் கொல்லுவதும் பின்னர் ஆகட்டும். இக் குமரனைக் கொணர்ந்து என்னுடன் போர் புரிய விடுத்த தேவர் யாவரையும் முன்னே கொல்லுவன்" என்று சீறினான். கதிரவனும் அஞ்ச, உலக முழுதும் ஓரே இருள் வடிவாக நின்று ஆர்த்தனன். ஆலாலவிடம் போல் தோன்றிய அவ் இருளைக் கண்டு அமரர் அஞ்சினர். அவ் இருளில் சூரபன்மன் மலை போன்ற பேருருவம் கொண்டு வானவரை விழுங்குமாறு வானிடை எழுந்தான். அதனைக் குறிப்பினால் அறிந்த வானோரும் ஏனோரும் திசைதொறும் ஓடி திக்கு வேறு இன்றி திகைத்துக் கூற்றை எதிர்ந்த உயிர்களைப் போல் பதறிக் கதறித் துதிக்கலுற்றார்கள்.

நண்ணினர்க்கு இனியாய் ஓலம், ஞான நாயகனே ஓலம்,
பண்ணவர்க்கு இறையே ஓலம், பரஞ்சுடர் முதலே ஓலம்,
எண்ணுதற்கு அரியாய் ஓலம், யாவையும் படைத்தாய் ஓலம்,
கண்ணுதல் பெருமான் நல்கும் கடவுளே ஓலம் ஓலம்.

தேவர்கள் தேவே ஓலம், சிறந்த சிற்பரனே ஓலம்,
மேவலர்க்கு இடியே ஓலம், வேற்படை விமலா ஓலம்,
பாவலர்க்கு எளியாய் ஓலம், பன்னிரு புயத்தாய் ஓலம்,
மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம், ஓலம்.

"எம்பெருமானே! அடியேங்களைக் காத்து அருளும்" என்று வேண்டினார்கள். முருகவேள் தமது திருக்கரத்தில் உள்ள வேற்படையை நோக்கி, "இங்கிவன் உடலைப் பிளந்து எய்துதி இமைப்பில்" என்று பணித்து அருளினர். முருகப் பெருமான் விடுத்த வேலாயுதம் ஆயிரகோடி சூரிய ஒளியை உடையதாய், நெருப்பைச் சிந்திக்கொண்டு சென்றது. அதனால் சூரபன்மன் கொண்ட இருளுருவம் அழிந்தது.

ஏயென முருகன் தொட்ட இருதலை படைத்த ஞாங்கர்
ஆயிர கோடி என்னும் அருக்கரில் திகழ்ந்து தோன்றித்
தீஅழல் சிகழி கான்று சென்றிட அவுணன் கொண்ட
மாஇருள் உருவம் முற்றும் வல்விரைந்து அகன்றது அன்றே.

அதுகண்ட சூரபன்மன், வேலாயுதத்தினது வெம்மையை ஆற்றாது கடலுக்கு நடுவண் ஒளித்தனன். வேல் கடலின் அருகில் சென்றவுடன் கடல் வற்றி வறண்டு விட்டது.

திரைக்கடலை உடைத்துநிறை புனல்கடிது குடித்துஉடையும்
உடைப்புஅடைய அடைத்துஉதிரம் நிறைத்துவிளை யாடும்....---  வேல் வகுப்பு.

சூரபன்மன் அண்ட முகடு முட்ட, நூறாயிர யோசனை அளவுடைய பெரு மரமாகி நின்று, மண்ணும் விண்ணும் விழல் பரப்பி, கிளைகளை அசைத்து, உலகங்களுக்கு எல்லாம் பேரிடர் விளைத்தான்.  அப்போது உடுக்கள் உதிர்ந்தன. சூரியசந்திரர் கதி மாறினர். மண்ணுலகம் இடிந்தது. குலமலைகள் பொடிபட்டன. திக்கயங்கள் மடிவுற்றன. அது கண்ட வேலாயுதம் வெகுண்டு ஆயிரகோடி அக்கினி அண்டங்களின் தீப்பிழம்பு முழுவதும் ஒன்றுபட்டது போலாகி, மடம் பிடித்திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்தது. வேலாயுதத்தால் மாமரம் பிளக்கப்பட்டதும், மாளா வரம் பெற்ற சூரன் மடிந்திலன் ஆகி, பழைய அசுர வடிவம் கொண்டு, வாள் கொண்டு எதிர்த்துச் சீறினான். ஒப்பற்ற வேற்படை அவனுடைய உடம்பை இருகூறாகப் பிளந்து கடலிடை அவன் அடலை மாய்த்து, வேதங்கள் ஆர்ப்ப, தேவர்கள் துதித்துச் சிந்தும் பூமழைக்கு இடையே சென்று, அங்கியின் வடிவம் நீங்கி, அருள் வடிவைத் தாங்கி, வான கங்கையில் முழுகி கந்தக் கடவுளது கரமலரில் வந்து அமர்ந்தது.

புங்கவர் வழுத்திச் சிந்தும் பூமழை இடையின் ஏகி
அங்கியின் வடிவம் நீங்கி, அருள்உருக் கொண்டு, வான்தோய்
கங்கையில் படிந்து மீண்டு, கடவுளர் இடுக்கண் தீர்த்த
எங்கள்தம் பெருமான் செங்கை எய்திவீற்று இருந்ததுஅன்றே.

சிவபெருமான் தந்த வர பலத்தால், சூரபன்மன் அழிவில்லாதவன் ஆகி, மீட்டும் எழுந்து ஒரு கூறு சேவலும், மற்றொரு கூறு மயிலுமாகி, மிக்க சினத்துடன் சிறகுகளை வீசி, அதனால் உலகங்களைத் துன்புறுத்தி, முருகவேள் திருமுன் வந்தான்.

தாவடி நெடுவேல் மீளத் தற்பரன் வரத்தால் வீடா
மேவலன் எழுந்து மீட்டு மெய்பகிர் இரண்டு கூறும்
சேவலும் மயிலும் ஆகி சினங்கொடு தேவர் சேனை
காவலன் தன்னை நாடி அமர்த்தொழில் கருதி வந்தான்.

அவ்வாறு மீட்டும் அமர் புரிய வந்த ஆற்றலின் மிக்க அந்த இரு பறவைகளையும் எம்பெருமான் கருணை நாட்டத்துடன் நோக்கி அருளினார். உடனே சேவலும் மயிலும் போர் புரியும் எண்ணமும் சீற்றமும் செற்றமும் நீங்கி, தெளிந்த உள்ளமும், சிவஞானமும், அன்புருவமும் பெற்றன. செவ்வேள் பரமன் சேவலைக் கொடியாகவும், மாமயிலை வாகனமாகவும் கொண்டருளினார். ஆயிரத்தெட்டு அண்டங்களும் வணங்க வாழ்ந்த சூரபன்மன் சேவலும் மயிலும் ஆகி அகிலாண்ட கோடி எல்லாம் வணங்கி வாழ்த்தும் வரம்பிலாப் பேறு பெற்றான்.  அவனது தவத்தின் பெருமை அளப்பரியது! முருகப் பெருமானது அருட் பார்வையின் பெருமையும் அளப்பரியது. ஞானிகளது பார்வையால் இரும்பு பொன்னாவது போல், கந்தவேள் கருணை நோக்கால், சூரன் மறவடிவு நீங்கி, அறவடிவு பெற்றான்.

மருள்கெழு புள்ளே போல வந்திடு சூரன், எந்தை
அருள்கெழு நாட்டம் சேர்ந்த ஆங்குஅவன் இகலை நீங்கித்
தெருள்கெழு மனத்தன் ஆகி நின்றனன், சிறந்தார் நோக்கால்
இருள்கெழு கரும்பொன் செம்பொன் ஆகிய இயற்கை யேபோல்.

தீயவை புரிந்தா ரேனும் முருகவேள் திருமுன் உற்றால்
தூயவர் ஆகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ, அடுசமர் அந்நாள் செய்த
மாயையின் மகனும் அன்றோ வரம்புஇலா அருள்பெற்று உய்ந்தான்.

.....           .....           .....  சகம்உடுத்த
வாரிதனில், புதிய மாவாய்க் கிடந்த, நெடும்
சூர்உடலம் கீண்ட சுடர்வேலோய்! - போர்அவுணன்

அங்கம் இருகூறுஆய், அடல் மயிலும், சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்து, எழுந்து தோன்றுதலும், - அங்குஅவற்றுள்

சீறும் அரவைப் பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே! -  மாறிவரு

சேவல் பகையைத் திறல்சேர் பதாகை என
மேவத் தனித்து உயர்த்த மேலோனே!           --- கந்தர் கலிவெண்பா.

தழைந்து எழும் தொத்துத் தடங்கை கொண்டு அப்பி,
     சலம் பிளந்து எற்றிப் ...... பொருசூர், அத்
தடம் பெரும் கொக்கைத் தொடர்ந்து, இடம் புக்குத்
     தடிந்திடும் சொக்கப் ...... பெருமாளே.      --- பொதுத் திருப்புகழ்.

கடல் சலம் தனிலே ஒளி சூரனை
     உடல் பகுந்து, இரு கூறு எனவே, அது
     கதித்து எழுந்து, ஒரு சேவலும் மாமயில் ...... விடும்வேலா! --- அவிநாசித் திருப்புகழ்.

கொடியநெடும் கொக்குக் குறுகு அவுணன் பட்டுக்
     குரைகடல் செம்ப, சக்- ...... கரவாளச்
சிலை பக, எண் திக்குத் திகிரிகளும் பத்துத்
     திசைகளினும் தத்த, ...... செகம் ஏழும்
திருகு சிகண்டிப் பொன் குதிரை விடும் செட்டி!
     திறல! கொடும்பைக்கு உள் ...... பெருமாளே.    --- கொடும்பாளூர்த் திருப்புகழ்.

கொலைகாட்டு அவுணர் கெட, மாச் சலதி
     குளமாய்ச் சுவற, ...... முதுசூதம்
குறிபோய்ப் பிளவு பட,மேல் கதுவு
     கொதிவேல் படையை ...... விடுவோனே!     --- திருச்செந்தூர்த் திருப்புகழ்.


குறப்பாவை தாட்குள் படிந்து, சக்கு ஆகி, அப்பேடையாட்குப் புகுந்து மணமாகி ---

தீய என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டில், திருவல்லம் என்னும் திருத்தலத்திற்கு வடபுறத்தே, மேல்பாடி என்னும் ஊரின் அருகில், காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் அழகு உடைய வள்ளிமலை உள்ளது. அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும், பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி என்னும் ஒருவன் தனக்கு ஆண்மக்கள் இருந்தும், பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக வருந்தி, அடியவர் வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுக வள்ளலை வழிபட்டு, குறி கேட்டும், வெறி ஆட்டு அயர்ந்தும், பெண் மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.

கண்ணுவ முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும், திருமகள் மானாகவும், உபேந்திரன் நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர், சிவபெருமானிடம் சித்தத்தைப் பதிய வைத்து, அம்மலையிடம் மாதவம் புரிந்து கொண்டு இருந்தார். பொன் நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான், சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால் முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்று, தெய்வப் புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்று, உறுதியான தவத்தில் நிலைபெற்று நின்றார்.

ஆங்கு ஒரு சார், கந்தக் கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு இருந்த சுந்தரவல்லி, முன்னர் தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறு, அந்த மானின் வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்து, இங்கும் அங்கும் உலாவி, உடல் நொந்து, புன்செய் நிலத்தில் புகுந்து, வேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த குழியில் பல்கோடி சந்திரப் பிரகாசமும், மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக் குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது, குழந்தை தன் இனமாக இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது. குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது.

அதே சமயத்தில், ஆறுமுகப் பெருமானுடைய திருவருள் தூண்டுதலால், வேட்டுவ மன்னனாகிய நம்பி, தன் மனைவியோடு பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்று, அக் குழந்தையின் இனிய அழுகை ஒலியைக் கேட்டு, உள்ளமும் ஊனும் உருகி, ஓசை வந்த வழியே போய், திருப்பாற்கடலில் பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான். குழந்தையை எடுத்து, தன் மனைவியாகிய கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்து, குழந்தையை மார்போடு அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும் சிற்றூருக்குப் போய், சிறு குடிலில் புகுந்து, குழந்தையைத் தொட்டிலில் இட்டு, முருகப் பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர். மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடி, வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால், குழந்தைக்கு வள்ளி என்று பேரிட்டனர். உலக மாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள்.

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.

நாந்தகம் அனைய உண்கண் நங்கை கேள், ஞாலம் தன்னில்                     
ஏந்திழையார்கட்கு எல்லாம் இறைவியாய் இருக்கும்நின்னைப்                                
பூந்தினை காக்க வைத்துப் போயினார், புளினர் ஆனோர்க்கு                       
ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் அயன் படைத்திலன் கொல் என்றான்.

வார் இரும் கூந்தல் நல்லாய், மதி தளர்வேனுக்கு உன்தன்                  
பேரினை உரைத்தி, மற்று உன் பேரினை உரையாய் என்னின்,                                   
ஊரினை உரைத்தி, ஊரும் உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.

மொழிஒன்று புகலாய் ஆயின், முறுவலும் புரியாய் ஆயின்,                               
விழிஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்                                
வழி ஒன்று காட்டாய் ஆயின், மனமும் சற்று உருகாய் ஆயின்                             
பழி ஒன்று நின்பால் சூழும், பராமுகம் தவிர்தி என்றான்.   
    
உலைப்படு மெழுகது என்ன உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான் போல வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு மதியப் புத்தேள் கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு தன்மைத்து அன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம்.

இவ்வாறு எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

நம்பி சென்றதும், முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன்.  தாமதிக்காமல் வா" என்றார். என் அம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயா, நீங்கு உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனே, முருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

நம்பி, அக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக. உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவர் திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு வேண்டியது யாது?" என்று கேட்டான். பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார்.  நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ! ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார் பெருமான்.

(இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் - ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம் பெற, பக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார், பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார்  என்று கொள்வதும் பொருந்தும்.)

வள்ளிநாயகியைப் பார்த்து, "பெண்ணே! எனது பசியும் தாகமும் நீங்கியது. ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச் செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமா? புனம் காக்கும் என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோ? எமது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும், நல்லுணர்வு சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று கூறி, தினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.

தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தந்திமுகத் தொந்தியப்பரை நினைந்து, "முன்னே வருவாய், முதல்வா!" என்றார். அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர். அம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழமுனிவரைத் தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

முருகப் பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகி, அது கண்டு ஆனந்தமுற்று, ஆராத காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத் திருவுருவைத் தாங்கள் காட்டாமையால், அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து அருளவேண்டும்" என்று அடி பணிந்தார். பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள் மழை பொழிந்து, "பெண்ணே! நீ முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்து, பிரணவ உபதேசம் புரிந்து, "நீ தினைப்புனம் செல்.  நாளை வருவோம்" என்று மறைந்து அருளினார்.

அம்மையார் மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து,  "அம்மா! தினைப்புனத்தை பறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார், நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச் சென்றேன்" என்றார். 

"அம்மா! கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது. முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளது? சொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.   

மை விழி சிவப்பவும், வாய் வெளுப்பவும்,
மெய் வியர்வு அடையவும், நகிலம் விம்மவும்,
கை வளை நெகிழவும் காட்டும் தண் சுனை
எவ்விடை இருந்து உளது? இயம்புவாய் என்றாள்.  

இவ்வாறு பாங்கி கேட், அம்மையார், "நீ என் மீது குறை கூறுதல் தக்கதோ?" என்றார். 

வள்ளியம்மையாரும் பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில், ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கி, வேட்டை ஆடுவார் போல வந்து, "பெண்மணிகளே! இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோ? என்று வினவி அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது முறையல்ல" என்று கூறி, வந்தவர் கண்களும், இருந்தவள் கண்களும் உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று எண்ணி, புனம் சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன் தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்" என்றாள்.

தோட்டின் மீது செல் விழியினாய் தோகையோடு என்னைக்                   
கூட்டிடாய் எனில், கிழிதனில் ஆங்கு அவள் கோலம்
தீட்டி, மா மடல் ஏறி, நும் ஊர்த் தெரு அதனில்
ஓட்டுவேன், இது நாளை யான் செய்வது" என்று உரைத்தான்.                                 

பாங்கி அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல் ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத் தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன், மாதவிப் பொதும்பரில் மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கி, அவருடைய காதலை உரைத்து, உடன்பாடு செய்து, அம்மாதவிப் பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி நீங்கவும், பரமன் வெளிப்பட்டு, பாவையர்க்கு அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன், உனது இருக்கைக்குச் செல்" என்று கூறி நீங்கினார்.

இவ்வாறு பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி மகிழ்ந்து, வள்ளியம்மையை நோக்கி, "அம்மா! மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.

வள்ளிநாயகி அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு குடிலுக்குச் சென்றார்.

வள்ளிநாயகியார் வடிவேல் பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர். பாவையர்கள் ஓடி வந்து, எடுத்து அணைத்து, மேனி மெலிந்தும், வளை கழன்றும் உள்ள தன்மைகளை நோக்கி, தெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர் உள்ளம் வருந்தி, முருகனை வழிபட்டு, வெறியாட்டு அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி, "நாம் இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால், நம் அருளால் இது நீங்கும்" என்று குறிப்பில் கூறி அருளினார். அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.

முருகவேள் தினைப்புனம் சென்று, திருவிளையாடல் செய்வார் போல், வள்ளியம்மையைத் தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த பாங்கி, வெளி வந்து, பெருமானைப் பணிந்து, "ஐயா! நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள். இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம் ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.

தாய்துயில் அறிந்து, தங்கள் தமர்துயில் அறிந்து, துஞ்சா
நாய்துயில் அறிந்து, மற்றுஅந் நகர்துயில் அறிந்து, வெய்ய
பேய்துயில் கொள்ளும் யாமப் பெரும்பொழுது அதனில், பாங்கி
வாய்தலில் கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்.

(இதன் தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய தமரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில் திருவருளாகிய பாங்கி,  பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப் பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. தாய் துயில் அறிதல் என்னும் தலைப்பில் மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)

வள்ளி நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, என் பொருட்டு இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில் எழுந்தருளினீரே" என்று தொழுது நின்றார்.

பாங்கி பரமனை நோக்கி, "ஐயா! இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும். இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, நும் பதி போய், இவளைக் காத்து அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத் தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன் சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி விடுத்து, குகைக்குள் சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில் தங்கினார்.

விடியல் காலம், நம்பியின் மனைவி எழுந்து, தனது மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான் அறியேன்" என்றாள். நிகழ்ந்த்தைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம் கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி, எம்பெருமானே! பல ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது.  எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.

முருகவேள், "பெண்ணரசே! வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள் போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக் கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை விட்டு நீங்க, அம்மையாரும் ஐயனைத் தொடர்ந்து சென்றார்.

இடையில் நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக் கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும் சுற்றத்தாரையும் வதைத்து, எம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு வருத்தம் தருமே" என்றார். முருகப் பெருமான் பணிக்க, வள்ளிநாயகியார் "அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன் எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின் அடிமலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள் என்ன செய்வோம்? தாயே தனது குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா? எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப் பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.

கந்தக் கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்ய, வள்ளிநாயகியார் தமது மானுட வடிவம் நீங்கி, பழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்ட, நம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து, நாங்கள் செய்த தவப்பேறு" என்று மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து, திருத்தணிகையில் வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு, பெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால், அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.

இந்த அற்புதமான அருள் வரலாற்றை, வள்ளிநாயகியிடம் முருகப் பெருமான் சக்கு ஆகி நின்றதை, அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில் ஆங்காங்கே வைத்து அழகாகப் பாடி அருளி உள்ளார். பின்வரும் மேற்கோள்களைக் காண்க.

முருகப் பெருமான் கிழவேடம் பூண்டு வள்ளிநாயகியிடம் சென்றது...

குறவர் கூட்டத்தில் வந்து, கிழவனாய்ப் புக்கு நின்று,
     குருவி ஓட்டித் திரிந்த ...... தவமானை,
குணமதாக்கி, சிறந்த வடிவு காட்டிப் புணர்ந்த
     குமரகோட்டத்து அமர்ந்த ...... பெருமாளே.      --- கச்சித் திருப்புகழ்.

புன வேடர் தந்த பொன் குறமாது இன்புறப்
     புணர் காதல் கொண்ட அக் ...... கிழவோனே!    --- பழநித் திருப்புகழ்.

செட்டி வேடம் பூண்டு வள்ளிநாயகியிடம் சென்றது....

செட்டி என்று வன மேவி, இன்ப ரச
     சத்தியின் செயலினாளை அன்பு உருக
     தெட்டி வந்து, புலியூரின் மன்றுள் வளர் ......பெருமாளே.   --- சிதம்பரத் திருப்புகழ்.

சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர,
செட்டி என்று எத்தி வந்து, டி நிர்த்தங்கள் புரி
    சிற்சிதம் பொற்புயம் சேர முற்றும் புணரும் ......எங்கள் கோவே!
                                                                               --- சிதம்பரத் திருப்புகழ்.

வள்ளிநாயகிக்காக மடல் ஏறியது ....

பொழுது அளவு நீடு குன்று சென்று,
     குறவர்மகள் காலினும் பணிந்து,
          புளிஞர் அறியாமலும் திரிந்து, ...... புனமீதே,
புதியமடல் ஏறவும் துணிந்த,
     அரிய பரிதாபமும் தணிந்து,
          புளகித பயோதரம் புணர்ந்த ...... பெருமாளே.--- பொதுத் திருப்புகழ்.

முருகப் பெருமன் வள்ளிமலையில் திரிந்தது .....

மஞ்சு தவழ் சாரல் அம் சயில வேடர்
     மங்கை தனை நாடி, ...... வனமீது
வந்த, சரண அரவிந்தம் அது பாட
     வண்தமிழ் விநோதம் ...... அருள்வாயே.

குஞ்சர கலாப வஞ்சி, அபிராம
     குங்கும படீர ...... அதி ரேகக்
கும்பதனம் மீது சென்று அணையும் மார்ப!
     குன்று தடுமாற ...... இகல் கோப!                --- நிம்பபுரத் திருப்புகழ்.

மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை
     கலகலன் கலின் கலின் என, இருசரண்
     மலர்கள் நொந்து நொந்து அடிஇட, வடிவமும்...மிகவேறாய்,

வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்
     உறை செழும் புனம், தினை விளை இதண் மிசை
     மறவர் தங்கள் பெண்கொடி தனை, ஒருதிரு ....உளம் நாடி,

அருகு சென்று டைந்து, வள் சிறு பதயுக
     சத தளம் பணிந்து, தி வித கலவியுள்
     அற மருண்டு, நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் .....அணைவோனே
                                                                 --- திருவருணைத் திருப்புகழ்.

வள்ளிநாயகி தந்த தினைமாவை முருகப் பெருமான் உண்டது...

தவநெறி உள்ளு சிவமுனி, துள்ளு
     தனி உழை புள்ளி ...... உடன் ஆடித்
தரு புன வள்ளி,  மலை மற வள்ளி,
     தரு தினை மெள்ள ...... நுகர்வோனே!          ---  வெள்ளிகரத் திருப்புகழ்.
   
வள்ளிநாயகி முன்னர் அழகனாய் முருகப் பெருமான் தோன்றியது....

மால் உற நிறத்தைக் காட்டி, வேடுவர் புனத்தில் காட்டில்,
     வாலிபம் இளைத்துக் காட்டி, ...... அயர்வாகி,
மான்மகள் தனத்தைச் சூட்டி, ஏன் என அழைத்துக் கேட்டு,
     வாழ்வுறு சமத்தைக் காட்டு ...... பெருமாளே.       --- பொதுத் திருப்புகழ்.

வள்ளிநாயகியின் திருக்கையையும், திருவடியையும் பிடித்தது...

பாகு கனிமோழி மாது குறமகள்
     பாதம் வருடிய ...... மணவாளா!         --- சுவாமிமலைத் திருப்புகழ்.

கனத்த மருப்பு இனக் கரி, நல்
     கலைத் திரள், கற்புடைக் கிளியுள்
     கருத்து உருகத் தினைக்குள் இசைத்து, ...... இசைபாடி
கனிக் குதலைச் சிறுக் குயிலைக்
     கதித்த மறக் குலப் பதியில்
     களிப்பொடு கைப் பிடித்த மணப் ...... பெருமாளே.     --- பொதுத் திருப்புகழ்.

வள்ளிநாயகியின் எதிரில் துறவியாய்த் தோன்றியது...

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுனியும்
     வேங்கையும் ஆய் மறமின் ...... உடன்வாழ்வாய்.   --- திருவேங்கடத் திருப்புகழ்.

வள்ளிநாயகியைக் கன்னமிட்டுத் திருடியது....

கன்னல் மொழி, பின்அளகத்து, ன்னநடை, பன்ன உடைக்
     கண் அவிர் அச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக்
கன்னம் இடப் பின் இரவில் துன்னு புரைக் கல்முழையில்
     கல் நிலையில் புகா வேர்த்து ...... நின்ற வாழ்வே!     --- கண்ணபுரத் திருப்புகழ்.

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் தோளில் ஏற்றி ஓடியது...

ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு
     உரைப்பார்கள் சித்தத்து ...... உறைவோனே!
உரத்தோள் இடத்தில் குறத்தேனை வைத்திட்டு,
     ஒளித்து ஓடும் வெற்றிக் ...... குமரஈசா!          --- திருவருணைத் திருப்புகழ்.

வள்ளிநாயகியை முருகப் பெருமான் வணங்கி, சரசம் புரிந்தது.....

மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை
     கலகலன் கலின் கலின் என, இருசரண்
     மலர்கள் நொந்து நொந்து அடிஇட, வடிவமும்...மிகவேறாய்,

வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்
     உறை செழும் புனம், தினை விளை இதண் மிசை
     மறவர் தங்கள் பெண்கொடி தனை, ஒருதிரு ....உளம் நாடி,

அருகு சென்று டைந்து, வள் சிறு பதயுக
     சத தளம் பணிந்து, தி வித கலவியுள்
     அற மருண்டு, நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் .....அணைவோனே
                                                            --- திருவருணைத் திருப்புகழ்.

தழை உடுத்த குறத்தி பதத் துணை
     வருடி, வட்ட முகத் திலதக் குறி
     தடவி, வெற்றி கதித்த முலைக்குவடு ...... அதன்மீதே
தரள பொன் பணி கச்சு விசித்து, ரு
     குழை திருத்தி, அருத்தி மிகுத்திடு
     தணிமலைச் சிகரத்திடை உற்றுஅருள் ...... பெருமாளே.
                                                              --- திருத்தணிகைத் திருப்புகழ்.


இப் பூர்வ மேற்கு உத்தரங்கள் தெற்காகும் இப்பாரில் கீர்த்திக்கு இசைந்த தச்சூர் வடக்கு ஆகும் மார்க்கத்து அமர்ந்த பெருமாளே ---

சொல்லப்படுகின்ற கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் நால்திசை உள்ள இந்த உலகத்தில், புகழ் பெற்று விளங்கும் தச்சூர் என்னும் திருத்தலத்தின் வடக்கே செல்லும் வழியில் (ஆண்டார்குப்பம் என்னும் திருத்தலத்தில்) திருக்கோயில் கொண்டு விளங்குபவர் முருகப் பெருமான்.

சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச் சாலை வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது ஆண்டார்குப்பம் என்னும் திருத்தலம். இங்கே கோயில் கொண்டிருக்கிறார் முருகப் பெருமான். இவரை தரிசித்து வழிபட்டால் பதவி யோகம் வாய்க்கும் என்பது பெரியோர் வாக்கு. இதற்குக் காரணமாக, மிக அற்புதமான திருக்கதை ஒன்றையும் சொல்வார்கள்.

ஒருமுறை, சிவபெருமானைத் தரிசிக்க கயிலை மலைக்கு வந்த பிரம்மதேவன், வழியில் முருகப்பெருமான் இருப்பதைக் கவனிக்காமல் சென்றுகொண்டிருந்தார். அதிகாரத் தோரணையுடன் அவரை அருகில் அழைத்த முருகப்பெருமான், பிரணவத்துக்குப் பொருள் கூறுமாறு கேட்டார். அதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் பிரமதேவன் திணறியதும், அதனால் சினம் கொண்டு முருகப்பெருமான் பிரமனின் தலையில் குட்டி சிறையில் அடைத்த திருக்கதையும் நாமறிந்ததே.

அப்படி, பிரம்மனிடம் கேள்வி கேட்ட அதிகாரத் தோரணையுடன் இடுப்பில் கரங்களை வைத்து கம்பீரமாக நிற்கும் திருக்கோலத்தில் முருகப்பெருமான் அருள் புரியும் திருக்கோயில் இது. ஆகவே, இங்கு வந்து அவரைத் தரிசிக்கும் அன்பர்களுக்கு அதிகாரம் மிகுந்த பதவிகள் வாய்க்கும், ஏற்கெனவே பதவியில் உள்ளோருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

சம்வர்த்தனர் என்ற பக்தருக்காகவே முருகன் இங்கே கோயில் கொண்டார் என்றும், அந்தப் பக்தருக்காக பாலநதி எனும் தீர்த்தத்தை இங்கு ஏற்படுத்தினார் என்றும் தலபுராணம் விவரிக்கிறது.

அலங்கார கோலத்தில் மூலவர் முருகப்பெருமானைத் தரிசிக்கும்போது, காலை வேளையில் பாலனாகவும், நண்பகலில் வாலிபனாகவும் மாலையில் வயோதிகனாகவும் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.

அந்நியருக்கும் அருளியவர் இந்த ஆண்டவன் எனச் சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். ஒரு முறை இந்தப் பகுதி ஆண்டார்குப்பம் முருகன் கோயிலில் உள்ள சிற்பம் வழியே படைநடத்திச் சென்ற சுல்தான் ஒருவன், இந்த முருகனைத் தரிசிக்க வந்த அடியார்களிடம் தனக்காகவும் பிரார்த்திக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டானாம். அவர்களும் சுல்தானுக்காக முருகனிடம் பிரார்த்தித்துக்கொள்ள, அவரருளால் போரில் வெற்றி கிடைத்ததாம் சுல்தானுக்கு.

அதற்கு நன்றிக்கடனாக சுல்தான், முருகனுக்குக் கோயில் எழுப்ப நிலம் வழங்கியதாக சரித்திரத் தகவல்கள் சொல்கின்றன.  மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரில், நடுகல் அமைப்பில் பிரமனின் சிற்பம் திகழ்கிறது. பிரமதேவன் எக்காலமும் தனக்கு ஆணவம் தலைதூக்கக்கூடாது எனும் பிரார்த்தனையுடன் முருகனை தியானித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

பரணி நட்சத்திர நாளன்று கோயிலுக்கு வந்து, அன்றிரவு அபிஷேக - ஆராதனைகளை தரிசித்து, அங்கேயே தங்கி மறுநாள் கிருத்திகை வழிபாடுகளையும் தரிசிக்க, சிக்கலான வாழ்க்கைப் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும் என்பது அன்பர்களின் நம்பிக்கை.

கருத்துரை

முருகா! விலைமாதர் மீது ஆசைவைத்து அழியாமல்,
உனது திருவடியைப் பற்றி உய்ய அருள்.
No comments:

Post a Comment

வயலூர் --- 0910. இகல்கடின முகபட

      அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   இகல்கடின முகபட (வயலூர்)   முருகா! விலைமாதர் பற்றை விடுத்து , தேவரீர...