049. காலம் அறிதல் --- 02. பருவத்தோடு ஒட்ட

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 49 -- காலம் அறிதல்

 

     இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "காலத்தோடு பொருந்த வாழும் வாழ்வானதுஒருவன் தான் பெற்ற செல்வத்தைத் தன்னை விட்டு நீங்காதபடிக்கு கட்டும் கயிறு ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     பொருந்த வாழ்தலாவதுஅறிவுஆண்மைபெருமை என்னும் மூவகை ஆற்றல்களும்,தானசாமபேததண்டம் என்னும் நால்வகை உபாயங்களும் உண்டான போதும்காலம் அறிந்து வாழ்தல் ஆகும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

பருவத்தொடு ஒட்ட ஒழுகல்திருவினைத்

தீராமை ஆர்க்கும் கயிறு.  

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---                

 

         பருவத்தோடு ஒட்ட ஒழுகல்--- அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல்

 

     திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு--- ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல் பிணிக்கும் கயிறாம்.

                  

     '(காலத்தோடு பொருந்துதல் - காலம் தப்பாமல் செய்தல். 'தீராமைஎன்றதனால்தீர்தல் மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்து வருதலான்அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா"திருப்புல்லாணி மாலை"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

சீரார் பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினையே
தீராமை ஆர்க்கும் கயிறு எனலால் செங்கதிர்மகற்கு
நேராய் உரைத்தொர் வரையின்கண் நாள்செல நின்று,  இலங்கைப்                                     

போராடல் வென்று திருவை உற்றான் புல்லைப் பூரணனே.                                                    

 

இதன் பொருள் ---

 

செங்கதிர் மகற்கு --- சுக்கிரீவனுக்கு. 

 

     இச் செய்யுளில் இராமபிரான் இராவணனோடு போருக்குச் செல்ல மழைக்காலம் முடியுமட்டும் ஒரு மலையில் தங்கியிருந்த செய்தி கூறப்படுகிறது. திருவை உற்றான் --- சீதையை அடைந்தான். புல்லைப் பூரணன் --- திருப்புல்லாணியில் எழுந்தருளிய திருமால்.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

                                

 

காலம் ஆன கழிவதன் முன்னமே

ஏலும் ஆறு வணங்கி நின்று ஏத்துமின்,

மாலும் மாமல ரானொடு மாமறை

நாலும் வல்லவர் கோன் இடம் நல்லமே.     --- அப்பர் தேவாரம்.

 

இதன் பொருள் ---

         

     திருமாலும்பிரமனும்பெருமைமிக்க வேதங்கள் நான்கும் வல்லவர்களாகிய முனிவர்களும் ஆகிய அனைவர்க்கும் கோனாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் திருநல்லம். ஆதலால்பொருந்திய காலம் கழிவதற்கு முன்பேஇயலும் நெறியில் வணங்கி நின்று வழிபடுவீராக.

 

 

காலமும் நாள் கழியும் நனி

    பள்ளி மனத்தின் உள்கிக்

கோலம் அதுஆயவனைக் குளிர்

    நாவல ஊரன் சொன்ன

மாலை மதித்து உரைப்பார்,மண்

    மறந்து வானோர் உலகில்

சாலநல் இன்பம் எய்தித் தவ

    லோகத்து இருப்பவரே       --- சுந்தரர் தேவாரம்.

 

இத்ன ஒபுர்ள ---

 

     காலமும் நாள்தோறும் கழியாநிற்கும்அதனால்குளிர்ந்த திருநாவலூரனாகிய நம்பியாரூரன்கருணையால் திருவுருக்கொண்ட இறைவனைத் திருநனிபள்ளியுள் வைத்து மனத்தில் நினைத்துப் பாடிய இப்பாமாலையின் பெருமையை உணர்ந்து பாடு வோர்தேவருலகில் மிக்க இன்பத்தைத் துய்த்துபின்பு மண்ணுலகத்தில் வருதலை மறந்துசிவலோகத்தில் இருப்பவரே யாவர்.

 

காலம் உண்டாகவே காதல் 

     செய்து உய்ம்மின்கருத அரிய

ஞாலம் உண்டானொடு நான்முகன் 

     வானவர்நண்ண அரிய

ஆலம் உண்டான் எங்கள் 

     பாண்டிப் பிரான்தன்அடியவர்க்கு

மூல பண்டாரம் வழங்குகின்றான்,

     வந்துமுந்துமினே.     ---  திருவாசகம்.

 

இதன் பொருள் ---

     

     நினைத்தற்கு அருமையான உலகத்தை உண்ட திரு மாலோடுபிரமர்மற்றைய தேவர்களும் அடைதற்கு அரியஅருமை யான நஞ்சத்தை அமுதாகக் கொண்டவனாகியஎங்கள் பாண்டிப் பெருமானாகிய இறைவன் தன் அடியவர்களுக்குத் தனது முதற் கருவூலத்தைத் திறந்து அள்ளி வழங்குகின்றான். அதனைப் பெறுவதற்கு விரைவாக வந்து முந்திக் கொள்ளுங்கள். முன்னதாகவேஅவனிடத்தில் அன்பு செய்து பிழையுங்கள்.

 

நாள்கூட்டம் மூர்த்தம் அவற்றோடு நன்றுஆம்அக்

கோள்கூட்டம் யோகம் குணன்உணர்ந்து தோள்கூட்டல்

உற்றானும் அல்லானும் ஐந்தும் உணர்வானாற்

பெற்றான்நாட் கொள்க பெரிது.      --- சிறுபஞ்சமூலம்.

 

இதன் பதவுரை ---

 

     நாள் கூட்டம் --- நாட் பொருத்தமும்மூர்த்தம் --- முழுத்தமும்அவற்றோடு --- அவற்றுடனேநன்று ஆம் --- நன்மையாகியஅக் கோள்கூட்டம் --- அந்த கோளின் பெருத்தமும்யோகம் --- யோகமும்குணன் உணர்ந்து --- (இவற்றாலுண்டாகிற) நன்மையும்ஆராய்ந்தறிந்துபெற்றால் --- (இவை ஐந்தும் நன்மையாயிருக்கிற) நாளைப் பெற்றால்,ஐந்தும் உணர்வான் --- இவ் வைந்தனையுமறிந்து சில நன்மையாகிய காரியங்களைச் செய்வோனும்தோள் கூட்டல் உற்றானும் --- (ஒருவனோடு ஒருத்தியைத்) தோள் கூட்டலுற்றவனும்,பெரிதுநாள் கொள்க --- மிகவும் நல்ல நாளாகக் கொள்க.

 

         நாள் பொருந்துதலும்மூர்த்தமும்நன்றாய்க் கோள் கூடுதலும்அமிர்தயோக முதலாயின யோகமும்இவற்றினான் வருநன்மையும் ஆராய்ந்துணர்வான் நாட்பெற்றால் அந்நாளை நன்றென்று கொள்கஒருவனோடொருத்தியைக் கூட்டல் உற்றவனும் மற்றும் சில நன்மைக் காரியஞ் செய்யல் உற்றவனும்.

 

 

அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது

நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது

கன்றுவிட்டு ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய்

அம்புவிட்டு ஆக்கறக்கு மாறு.  ---  பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது --- தாம் பூண்ட அன்பினால் ஒருவன் நெகிழுமாறு அவனை வழிபட்டுத் தமது செயலை முடித்துக் கொள்ளாது,  நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது --- நினைத்த அப்பொழுதிலேயே கடியன கூறிமுடித்துக் கொள்ளுதல்கன்று விட்டு ஆ கறக்கும் போழ்தில் --- கன்றினைச் செலுத்தி ஆவினைக் கறக்க இருக்கும்போதுகறவானாய் --- அங்ஙனங் கறவாதவனாகிஅம்புவிட்டு ஆ கறக்குமாறு --- அம்பினைச் செலுத்தி ஆவினைக் கறக்க நினைக்குமாற்றை ஒக்கும்.

 

         தமது செயலைச் செய்வோரிடத்தில் அன்பாகவும் விரைவின்றியும் இருந்து காலம் பார்த்து செயலை முடித்துக்கொள்க.

 

         ஆவினை விரைவு காரணமாகத் துன்புறுத்துவான் பாலினைப் பெறாததுபோல விரைவாகவும் அன்பின்றியும் இருப்பான் பிறரிடமிருந்து காரியத்தைக் கொள்ள முடியாது. அங்ஙனம் கொண்டாலும் அதனாற் பயன்பெறுதல் இல்லை.

 


'களப்பலி நாக கன்னிகை புதல்வன்

     கருதலான் தனக்கு நேர்ந்திடவும்,

கிளப்ப அருந் திதியை மயக்கிவான் மதியம் 

     கிளர் ஒளிஅருக்கனைக் கேட்ப,

வளப்படும் திதியின் முந்துற எமக்கே 

     வழங்கிடும்படி மதி கொளுத்தி,

உளப் பொலிவுடனே விசயனுக்கு அருளால்

     உருளுடைக் கொடிகொள் தேர் ஊர்ந்தாய்.  --- வில்லிபாரதம், 17-ஆம் நாள் போர்.

     

இதன் பொருள் ---

 

     நாக கன்னிகை புதல்வன் --- நாக கன்னிகையாகிய உலூபியின்புத்திரனான இராவான்கருதலான் தனக்கு --- பகைவனாகிய துரியோதனனுக்குகளம் பலி --- போர்க்களத்திற் பலி கொடுக்கப்படுதற்குநேர்ந்திடவும் ---சம்மதித்து இருக்கவும்கிளப்பு அரு திதியை --- மாற்றுதற்கு அரிய திதியை, மயக்கி --- மாற்றிவான் --- ஆகாயத்தில்மதியம் --- சந்திரன்கிளர் ஒளி அருக்கனை --- விளங்குகிற ஒளியையுடைய சூரியனைகேட்ப ---சேரும்படிவளம் படும் --- மேன்மைப்பட்டதிதியை --- அமாவாசையைமுந்துற --- முற்படும்படி செய்துஎமக்கே --- எங்களுக்கேவழங்கிடும்படி --- (அவன் தன்னைப் பலியாகக்) கொடுக்கும்படி மதி கொளுத்தி --- (அவனுக்கு) அறிவை உண்டாக்கிஉளம் பொலிவுடன் --- மன மகிழ்ச்சியோடுவிசயனுக்கு --- அருச்சுனனுக்குஅருளால் --- கருணையினால்உருள் உடை கொடி கொள் தேர் ---சக்கரங்களை உடையதுவசத்தைக் கொண்ட தேரைஊர்ந்தாய் --- ஓட்டினாய்.

 

     அமாவாசையாவது --- சூரியனும் சந்திரனும் கூடும்நாள்: கிருஷ்ணபக்ஷத்துப் பதினைந்தாம் திதி. 

 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...