049. காலம் அறிதல் --- கொக்கு ஒக்க

                                                                        திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 49 -- காலம் அறிதல்

 

     இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "காலம் பொருந்தாது ஒடுங்கி இருக்க வேண்டிய காலத்தில்கொக்கானது அடங்கி இருக்கும் விதம் போல் ஒடுங்கி இருக்கவேண்டும். காலம் பொருந்தி வந்தபோதுகொக்கானது விரைந்து மீனைக் கொத்திக் கொள்வது போல் விரைந்து செயல்பட வேண்டும்.

 

திருக்குறளைக் காண்போம்... 

 

 

கொக்கு ஒக்க கூம்பும் பருவத்துமற்று அதன்

குத்து ஒக்க சீர்த்த இடத்து.                     

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

         கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க--– வினைமேற் செல்லாதிருக்கும் காலத்துக் கொக்கு இருக்குமாறு போல இருக்க

 

     மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க--- மற்றைச் செல்லும் காலம் வாய்த்தவழிஅது செய்து முடிக்குமாறு போலத் தப்பாமல் செய்து முடிக்க.

 

         (மீன் கோடற்கு இருக்கும் வழிஅது வந்து எய்தும் துணையும் முன் அறிந்து தப்பாமைப் பொருட்டு உயிரில்லது போன்று இருக்கும் ஆகலானும்எய்தியவழிப் பின் தப்புவதற்கு முன்பே விரைந்து குத்தும் ஆகலானும்இருப்பிற்கும் செயலிற்கும் கொக்கு உவமையாயிற்று. 'கொக்கு ஒக்கஎன்றாராயினும், 'அது கூம்புமாறு போலக் கூம்புகஎன்றும் குத்து ஒக்க என்றாராயினும் அது 'குத்துமாறு போலக் குத்துகஎன்றும் உரைக்கப்படும். இது தொழிலுவமம். ஆகலின் உவமை முகத்தான் இருப்பிற்கும் செயலிற்கும் இலக்கணம் கூறியவாறாயிற்று.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாககுமார பாரதி என்பார் பாடி அருளிய, "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

ஞானசம் பந்தர்அங்கே நண்ணியபின்,எண்ணிலாது

ஆனி விளைத்தாரே அமணர்க்கு - மானியார்

கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்

குத்துஒக்க சீர்த்த இடத்து.       

 

இதன் பொருள் ---

 

         மதுராபுரியிலே அரசு புரிந்த நெடுமாற நாயனார்க்கு மனைவியார் சோழ அரசருடைய திருமகளார் ஆகிய மங்கையர்க்கரசியார். அவர் சமய குரவராகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரால் திருப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடப்பட்டவர். அப் பெருமானார் மதுரைக்கு எழுந்தருளிய போது பலவிதத்திலும் துன்பத்தை இழைத்தனர். இறையருளால் திருஞானசம்பந்தப் பெருமானார் அவர்களை வாதில் வென்று சைவ ஒளி விளங்கச் செய்தார். பிறகு சமண இருள் அகன்றது. பரசமயகோளரி ஆகிய அப் பரமாசாரியருடைய திருவருளினாலே நெடுங்காலம் தம்முடைய நாயகருக்குச் சைவ வழித் துணையாகிபாண்டி நாடு எங்கும் சைவத் திருநெறியைப் பரிபாலனம் செய்து கொண்டு இருந்து,தம் நாயகரோடும் சிவபதத்தை அடைந்தார்.

 

     பின் வரும் பாடல்இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணலாம்...

 

அடக்கம் உடையார் அறிவு இலர் என்று எண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா --- மடைத்தலையில்

ஓடுமீன் ஓட, உறுமீன் வரும் அளவும்

வாடி இருக்குமாம் கொக்கு.          --- மூதுரை.

 

இதன் பொருள் ---

 

     கொக்கு --- கொக்கானதுமடைத் தலையில் --- நீர் மடையினிடத்துஓடும் மீன் ஓட --- ஓடுகிற சிறு மீன்கள் ஓடிக்கொண்டிருக்கஉறு மீன் --- (இரையாவதற்கு ஏற்ற) பெரிய மீன்வரும் அளவும் --- வரும் வரையும்வாடி இருக்கும் --- அடங்கியிருக்கும்; (அதுபோல) அடக்கம் உடையார் --- தக்க பகைவர் வரும் வரையும் அடங்கியிருப்பவரைஅறிவு இலர் என்று எண்ணி --- அறிவில்லாதவரென்று கருதிகடக்க --- அவரை வெல்லுவதற்குகருதவும் வேண்டா --- நினைக்கவும் வேண்டுவதில்லை.

 

         அடக்கம் உடையவரின் வலிமையை அறியாது அவரை வெல்ல நினைப்பவனுக்குத் தப்பாது கேடு வரும்.

 

No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...