049. காலம் அறிதல் --- 04. ஞாலம் கருதினும்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 49 -- காலம் அறிதல்

 

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறளில், "பொருந்துகின்ற காலத்தை அறிந்துதக்க இடத்தில் வலிமையுடன் செயலைச் செய்வதால்இந்த நிலவுலகத்தையே ஆள ஒருவன் கருதினாலும் கைகூடும்" என்கின்றார் நாயனார்.

 

     இடம் என்பதுமேலைத் திருக்குறளில் சொல்லப்பட்ட மூவகை ஆற்றல்களும்,நால்வகை உபாயங்களும் ஆகும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

 

ஞாலம் கருதினும் கைகூடும்காலம்

கருதி இடத்தால் செயின்.                       

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     ஞாலம் கருதினும் கைகூடும்--- ஒருவன் ஞாலம் முழுவதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது அவன் கையகத்ததாம்

 

     காலம் கருதி இடத்தான் செயின் --- அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின்.

 

     ('இடத்தான்என்பதற்கு மேல் 'கருவியான்என்பதற்கு உரைத்தாங்கு உரைக்ககைகூடாதனவும் கைகூடும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் காலம் அறிதற் பயன் கூறப்பட்டது.)

 

     இத் திருக்குறளுக்குப் பின்வரும் பாடல்கள் ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்.

 

அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி,

எடுத்த கருமங்கள் ஆகா--- தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா.           ---  மூதுரை.

 

இதன் பொருள் ---

 

     தொடுத்த --- கிளைத்தஉருவத்தால் நீண்ட --- வடிவத்தால் நீண்டஉயர் மரங்கள் எல்லாம் --- உயர்ந்த மரங்களெல்லாம்பருவத்தால் அன்றி --- பழுக்குங் காலம் வந்தாலல்லாமல்பழா --- பழுக்கமாட்டவாம்; (அதுபோல) அடுத்து முயன்றாலும் --- அடுத்தடுத்து முயற்சி செய்தாலும்ஆகு நாள் அன்றி --- முடியுங்காலம் வந்தால் அல்லாமல்எடுத்த கருமங்கள் --- மேற்கொண்ட காரியங்கள்ஆகா --- முடியாவாம்.

 

     எந்தச் செயலும் முடியும் காலத்திலேதான் முடியும்ஆகையால் அக்காலம் அறிந்து தொடங்க வேண்டும்.

 

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்,

விண்டு உமி போனால் முளையாதாம் --- கொண்டபேர்

ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி

ஏற்ற கருமஞ் செயல்.                 --- மூதுரை.

 

இதன் பொருள் ---

 

     பண்டு முளைப்பது --- (உமி நீங்குதற்கு) முன்னே முளைப்பதுஅரிசியே ஆனாலும் --- அரிசியே யாயினும்உமி விண்டு போனால் --- உமி நீங்கிப்போனால்முளையாது --- (அவ்வரிசி) முளையாது; (அது போல) கொண்ட --- பெற்றபேர் ஆற்றல் உடையார்க்கும் --- பெரிய வல்லமையை உடையவர்க்கும்அளவு இன்றி --- துணைவலி இல்லாமல்ஏற்ற கருமம் --- எடுத்துக்கொண்ட செயலைசெயல் ஆகாது --- செய்து முடித்தல் இயலாது.

 

     மிக்க வல்லமை உடையவர்க்கும் ஒரு செயலைச் செய்து முடிக்கத் துணைவலி வேண்டும்.

 

No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...