பொது --- 1023. குகையில் நவநாதரும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

குகையில் நவநாதரும் (பொது)

 

முருகா! 

அறிவும் அறியாமையும் கடந்த அறிவு 

திருமேனியாக உடைய உமது ஞானக்கழலைச் சார்ந்து 

இன்புற அருள் புரிவீர்.

 

 

தனதனன தான தந்த தந்த

     தனதனன தான தந்த தந்த

     தனதனன தான தந்த தந்த ...... தனதான

 

 

குகையில்நவ நாத ருஞ்சி றந்த

     முகைவனச சாத னுந்த யங்கு

     குணமுமசு ரேச ருந்த ரங்க ...... முரல்வேதக்

 

குரகதபு ராரி யும்ப்ர சண்ட

     மரகதமு ராரி யுஞ்செ யங்கொள்

     குலிசகைவ லாரி யுங்கொ டுங்க ...... ணறநூலும்

 

அகலியபு ராண மும்ப்ர பஞ்ச

     சகலகலை நூல்க ளும்ப ரந்த

     அருமறைய நேக முங்கு விந்தும் ...... அறியாத

 

அறிவுமறி யாமை யுங்க டந்த

     அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன்

     அருணசர ணார விந்த மென்று ...... அடைவேனோ

 

பகைகொள்துரி யோத னன்பி றந்து

     படைபொருத பார தந்தெ ரிந்து

     பரியதொரு கோடு கொண்டு சண்ட ...... வரைமீதே

 

பழுதறவி யாச னன்றி யம்ப

     எழுதியவி நாய கன்சி வந்த

     பவளமத யானை பின்பு வந்த ...... முருகோனே

 

மிகுதமர சாக ரங்க லங்க

     எழுசிகர பூத ரங்கு லுங்க

     விபரிதநி சாச ரன்தி யங்க ...... அமராடி

 

விபுதர்குல வேழ மங்கை துங்க

     பரிமளப டீர கும்ப விம்ப

     ம்ருகமதப யோத ரம்பு ணர்ந்த ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

குகையில் நவ நாதரும், சிறந்த

     முகை வனச சாதனும், தயங்கு

     குணமும், அசுர ஈசரும், தரங்க ...... முரல்வேதக்

 

குரகத புராரியும், ப்ர சண்ட

     மரகத முராரியும், செயம் கொள்

     குலிச கை வலாரியும், கொடுங்கண் ...... அறநூலும்,

 

அகலிய புராணமும், ப்ர பஞ்ச

     சகலகலை நூல்களும், பரந்த

     அருமறை அநேகமும், குவிந்தும் ...... அறியாத,

 

அறிவும் அறியாமையும் கடந்த

     அறிவு திருமேனி என்று உணர்ந்து, உன்

     அருண சரண அரவிந்தரம் என்று ...... அடைவேனோ?

 

 

பகைகொள் துரியோதனன் பிறந்து

     படைபொருத பாரதம் தெரிந்து,

     பரியது ஒரு கோடு கொண்டு, சண்ட ...... வரைமீதே

 

பழுது அற வியாசன் அன்று இயம்ப

     எழுதிய விநாயகன், சிவந்த

     பவளமத யானை பின்பு வந்த ...... முருகோனே!

 

மிகு தமர சாகரம் கலங்க

     எழு சிகர பூதரம் குலுங்க,

     விபரித நிசாசரன் தியங்க ...... அமர் ஆடி,

 

விபுதர்குல வேழ மங்கை, துங்க

     பரிமளப டீர கும்ப விம்ப

     ம்ருகமத பயோதரம் புணர்ந்த ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

 

            பகைகொள் துரியோதனன் பிறந்து--- பிறவியிலேயே பாண்டவர்கள் மீது பகைமை உணர்வு கொண்ட துரியோதனன் பூமிக்குச் சுமையாகத் தோன்றி

 

            படை பொருத பாரதம் தெரிந்து--- படைகளோடு போர் புரிந்த வரலாறாகிய மகாபாரதத்தை யோகக் காட்சியால் உணர்ந்து,

 

            பழுது அற வியாசன் அன்று இயம்ப--- உலகிலே உள்ள குற்றங்கள் நீங்கும் பொருட்டு,  வேதவியாசர் அந்நாளில் கூறுதலும்,

 

            சண்ட வரை மீதே--- பெரிய மேருமலையின் மீது

 

            பரியதொரு கோடு கொண்டு எழுதிய--- பருத்த ஒற்றைக் கொம்பினைக் கொண்டு நன்கு எழுதி அருளிய  

 

            விநாயகன்--- தனக்கு மேல் தலைவன் இல்லாதவரும்,

 

            சிவந்த பவள--- சிவந்த பவளம் போன்ற நிறத்தை உடையவரும்,  

 

     மதயானை--- மதங்களைப் பொழிகின்ற யானைமுகம் உடையவரும் ஆகிய பிள்ளையாரின்,

 

            பின்பு வந்த முருகோனே--- தம்பியாக அவதரித்த முருகக் கடவுளே!

 

            மிகு தமர சாகரம் கலங்க--- மிகுந்த ஒலியுடன் கூடிய கடல் கலங்கவும்,

 

            எழு சிகர பூதரம் குலுங்க--- கொடுமுடிகளை உடைய ஏழு குலமலைகள் குலுங்கவும்,

 

            விபரித நிசாசரன் தியங்க அமர் ஆடி--- மாறுபட்ட புத்தியை உடைய சூரபன்மன் திகைக்கும்படியாகவும் போர் செய்து,

 

            விபுதர்குல வேழ மங்கை--- தேவ குலத்திலே வந்து தோன்றிய தெய்வயானை அம்மையாருடைய,

 

            துங்க பரிமள படீர கும்ப விம்ப ம்ருகமத--- தூய மணம் வீசும் சந்தனத்தை அணிந்துகுடம் போன்ற வடிவுடன்கஸ்தூரி தரித்து விளங்கும்

 

            பயோதரம் புணர்ந்த பெருமாளே --- தனபாரங்களை மருவிய பெருமையில் சிறந்தவரே!

 

            குகையில் நவநாதரும்--- குகையில் தவம் இயற்றும் ஒன்பது நாதர்களும்,

 

            சிறந்த முகை வனச சாதனும்--- உயர்ந்த மலராகிய தாமரையில் பிறந்த பிரமதேவனும்,

 

            தயங்கு குணமும் --- தெளிந்துள்ள சத்துவம்இராஜசம்தாமதம் ஆகிய முக்குணங்களும்,

 

            அசுரேசரும்--- அசுரர்களின் தலைவர்களும்,

 

            தரங்கம் முரல் வேதக் குரகத புராரியும்--- கடல் அலைபோல் முழங்குகின்ற வேதங்களை நான்கு குதிரைகளாகக் கொண்டு முப்புரத்தை எரித்த உருத்திரமூர்த்தியும்,

 

            ப்ரசண்ட மரகத முராரியும்--- வலிமை மிக்க பச்சை நிறமுடையவரும்முரன் என்ற அசுரனைக் கொன்றவரும் ஆகிய திருமாலும்,

 

            செயங்கொள் குலிச கை வலாரியும்--- வெற்றியைக் கொள்ளும் வச்சிரப் படையைக் கையில் ஏந்திய இந்திரனும்,

 

            கொடுங்கண் அறநூலும்--- மிக்க அறிவு மயமாகிய அறநூல்களும்,

 

            அகலிய புராணமும்--- விரிவான புராணங்களும்,

 

            ப்ரபஞ்ச சகலகலை நூல்களும் --- உலகிலுள்ள எல்லாக் கலை நூல்களும்,

 

            பரந்த அருமறை அநேகமும்--- எங்கும் பரவியுள்ள அரிய அநேக வேதங்களும்,

 

            குவிந்தும் அறியாத--- இவைகள் யாவும் ஒருங்கு திரண்டு அறிய முயன்றும் அறியப்படாத

 

            அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திருமேனி என்று உணர்ந்து--- அறிவையும்அறியாமையையும் கடந்து அப்பாலைக்கு அப்பாலாய் உள்ள உண்மை அறிவே ஒரு திருமேனியாகத் தேவரீருக்கு அமைந்து உள்ளது என்பதை அநுபவத்தினால் உணர்ந்து,

 

            உன் அருண சரண அரவிந்தம் என்று அடைவேனோ--- தேவரீருடைய சிவந்த திருவடித் தாமரையை எந்த நாள் சார்ந்து இன்புறுவேனோ?

 

பொழிப்புரை

 

            பிறவியிலேயே பாண்டவர்கள் மீது பகைமை உணர்வு கொண்ட துரியோதனன் பூமிக்குச் சுமையாகத் தோன்றி படைகளோடு போர் புரிந்த வரலாறாகிய மகாபாரதத்தை யோகக் காட்சியால் உணர்ந்துஉலகிலே உள்ள குற்றங்கள் நீங்கும் பொருட்டு,  வேதவியாசர் அந்நாளில் கூறுதலும்பெரிய மேருமலையின் மீது இருந்துபருத்த ஒற்றைக் கொம்பினைக் கொண்டு நன்கு எழுதி அருளியதனக்கு மேல் தலைவன் இல்லாதவரும்சிவந்த பவளம் போன்ற நிறத்தை உடையவரும்,  மதங்களைப் பொழிகின்ற யானைமுகம் உடையவரும் ஆகிய பிள்ளையாரின்தம்பியாக அவதரித்த முருகக் கடவுளே!

 

            மிகுந்த ஒலியுடன் கூடிய கடல் கலங்கவும்கொடுமுடிகளை உடைய ஏழு குலமலைகள் குலுங்கவும்மாறுபட்ட புத்தியை உடைய சூரபன்மன் திகைக்கும்படியாகவும் போர் செய்து,தேவ குலத்திலே வந்து தோன்றிய தெய்வயானை அம்மையாருடையதூய மணம் வீசும் சந்தனத்தை அணிந்துகுடம் போன்ற வடிவுடன்கஸ்தூரி தரித்து விளங்கும் தனபாரங்களை மருவிய பெருமையில் சிறந்தவரே!

 

            குகையில் தவம் இயற்றும் ஒன்பது நாதர்களும்உயர்ந்த மலராகிய தாமரையில் (திருமாலின் கமல உந்தியில்) பிறந்த பிரமதேவனும்தெளிந்துள்ள சத்துவம்இராஜசம்

தாமதம் ஆகிய முக்குணங்களும்அசுரர்களின் தலைவர்களும்கடல் அலைபோல் முழங்குகின்ற வேதங்களை நான்கு குதிரைகளாகக் கொண்டு முப்புரத்தை எரித்த உருத்திரமூர்த்தியும்வலிமை மிக்க பச்சை நிறமுடையவரும்முரன் என்ற அசுரனைக் கொன்றவரும் ஆகிய திருமாலும்வெற்றியைக் கொள்ளும் வச்சிரப் படையைக் கையில் ஏந்திய இந்திரனும்மிக்க அறிவு மயமாகிய அறநூல்களும்விரிவான புராணங்களும்,  

உலகிலுள்ள எல்லாக் கலை நூல்களும்எங்கும் பரவியுள்ள அரிய அநேக வேதங்களும்

இவைகள் யாவும் ஒருங்கு திரண்டு அறிய முயன்றும் அறியப்படாதஅறிவையும்

அறியாமையையும் கடந்து அப்பாலைக்கு அப்பாலாய் உள்ள அறிவே ஒரு திருமேனியாக அமைந்து உள்ளது என்பதை அநுபவத்தினால் உணர்ந்துதேவரீருடைய சிவந்த திருவடித்தாமரையை எந்த நாள் சார்ந்து இன்புறுவேனோ?

 

விரிவுரை

 

 

குகையில் நவநாதரும் ---

 

நவநாதர் --- ஒன்பது நாதர்கள். இவர்கள் நாதத்தை அறிந்தவர்கள்.  அறிந்து அதன் மேல் நிலையைப் பெற்றவர்கள். முப்பத்தாறாவது தத்துவம் நாத தத்துவம்.

 

ஆறுஆறையும் நீத்துஅதன் மேல்நிலையைப்

பேறா அடியேன் பெறுமாறு உளதோ...       ---  கந்தர் அநுபூதி.

 

வேதமுடி மேற்சுடராய் ஆகமத்தின் முடிமேல்

    விளங்கும்ஒளி யாகியநின் மெல்லடிகள் வருந்தப்

பூதமுடி மேல்நடந்து நான்இருக்கும் இடத்தே

     போந்துஇரவில் கதவுதனைக் காப்புஅவிழ்க்கப் புரிந்து,

நாதமுடி மேல்விளங்குந் திருமேனி காட்டி,

     நற்பொருள்என் கைதனிலே நல்கியநின் பெருமை

ஓதமுடி யாதுஎனில்,என் புகல்வேன்,அம் பலத்தே

     உயிர்க்குஇன்பந் தரநடனம் உடையபரம் பொருளே.    ---  திருவருட்பா.

 

இவர்கள் பெரிய சித்தர்களும் ஆவார்கள். மிகப் பெரிய கருமங்களை எளிதில் புரிபவர்கள். காயத்தை அழியாது கற்பங்கள் பல நிறுத்தி,தவத்தையே தனமாகக் கொண்ட தனிஞானத் தலைவர்கள்.

 

இவர்களின் பெயர்கள்....

 

சத்தியநாதர்சதோகநாதர்ஆதிநாதர்அநாதிநாதர்வகுளிநாதர்மதங்கநாதர்மச்சேந்திரநாதர்கடேந்திரநாதர்கோரக்கநாதர்.

 

இவர்கள் சிவயோகத்தின் நுணுக்கம் தெரிந்த தவயோக சீலர்கள். இவர்கள் மிகவும் சிறந்தவர்களாதலின்முதற்கண் அடிகள் இவர்களை இங்குக் கூறுகின்றனர்.

 

அன்றியும் நாதர் என்ற பேர் பெற்றவர்கள் இருவர் உளர். ஒருவர் திருமூலநாதர். மற்றொருவர் அருணகிரிநாதர். இந்த இருவர்களும் நாதத்தை அறிந்தவர்கள்.

 

சிறந்த முகை வனச சாதனும்---

 

வனசம் --- தாமரை. வனம் --- தண்ணீர். ஜம் --- பிறத்தல். தண்ணீரில் பிறத்தலால் தாமரை இப்பேர் பெற்றது. தாமரையில் பிறந்தவன் பிரமதேவன். சாமானிய தாமரை அன்று.  திருமாலுடைய நாபியினின்றும் வந்த தாமரை. ஆதலின்சிறந்த முகை வனசன் என்றனர். பிரமதேவன் சிருட்டித் தலைவன் ஆதலின்மண்ணுடன் தொடர்பு உடைய தாமரையைக் கோயிலாகக் கொண்டனன்.

 

தயங்கு குணமும்---

 

தயங்குதல் --- தெளிதல். கலங்கிய குணங்களும் உண்டு. இங்கே நன்கு தெளிந்துள்ள குணங்களையே கூறுகின்றனர். இவைகள் சத்துவம்,இராஜசம்தாமதம். இம்மூன்றும் ஆன்மாக்களுக்கு உள்ளவை.  இவைகள் விலக வேண்டியவை.

 

இறைவனுடைய குணங்கள் அருட்குணங்கள். அவைகளை உடைய இறைவன் குணநிதிகுணகடல் எனப்படுவான். குணமிலான் என்று இறைவனைக் கூறுமிடங்களில் மேற்கூறிய முக்குணங்களும் இல்லாதவன் என்று பொருள் செய்துக் கொள்ளவேண்டும். குணமே இல்லாதவன் என்று எண்ணுதல் கூடாது. ஒருகுணமும் இல்லையானால்அது பொருளாக இருக்க முடியாது. இறைவனுடைய அருட்குணங்கள் எட்டு. அவை --- தன்வயத்தனாதல்தூயவுடம்பினன் ஆதல்இயற்கை உணர்வினன் ஆதல்முற்றும் உணர்தல்இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்பேரருள் உடைமைமுடிவில் ஆற்றல் உடைமைவரம்பு இல் இன்பம் உடைமை.

 

அசுரேசரும்---

 

அசுர ஈசர். அசுரர் தலைவர்கள். இவர்களில் பலர் நற்குணமுடையராய்உறுதியுடையராய்மாதவம் செய்வதில் வல்லாராய் விளங்கினார்கள். ஆகவேஇந்த வரிசையில் இவர்களும் இடம் பெற்றார்கள்.

 

தரங்க முரல் வேதக் குரகத புராரியும்---

 

புர அரி --- புராரி. முப்புரங்களை எரித்தவர். இவர் மூவரில் ஒருவராகிய உருத்திர மூர்த்தி என அறிக. பரசிவம் என்று மயங்க வேண்டாம்..

 

தரங்கம் --- அலை. முரலுதல் --- ஒலித்தல். கடல் அலைபோல் இனிது ஒலிக்கும் வேதம். திரிபுர சம்மார காலத்தில் உருத்திரமூர்த்திக்கு வேதங்கள் குதிரைகளாக அமைக்கப்பட்டன.

 

மரகத முராரியும்---

 

பச்சை நிறம் உடைய திருமால்.  ரன் என்ற அவுணனை வதைத்தபடியால் (முர அரி) முராரி என்று பேர் பெற்றனர்.

 

ஜெயங்கொள் குலிச கை வலாரியும்---

 

குலிசம் --- வச்சிராயுதம். இது மிக்க ஆற்றல் உடையது. ததீசி முனிவருடைய எலும்பினால் செய்யப்பட்டது. பல அசுரர்களை வென்றது.

 

வலன் என்ற அரக்கனைக் கொன்றதனால்இந்திரன் வலாரி என்று பேர் பெற்றனன்.

 

கொடும் கண் அறநூலும்---

 

கண் --- அறிவு. கொடு என்ற சொல் மிகுதியைத் தெரிவிக்கின்றது.  மிகுந்த அறிவு மயமான அற நூல்கள்.

 

அகலிய புராணமும்---

 

தருமங்களை விரிவாகக் கூறுவது புராணங்கள். வேதத்தில் நுணுக்கமாகக் கூறிய அறங்களை விரித்துக் கூறுவது புராணம் என்க.  ஒரு நுண்ணிய பொருளைப் பெரிதாகக் காட்டும் பூதக் கண்ணாடி போன்றது. இவை பதினெட்டு --  இலிங்கம்காந்தம்,  கூர்மம்சைவம்

பிரம்மாண்டம்பௌடிகம்மச்சியம்மார்க்கண்டேயம்வராகம்வாமனம்காரூடம்நாரதீயம்,பாகவதம்வைணவம்பதுமம்பிரமம்ஆக்நேயம்பிரமகைவர்த்தம்.

 

ப்ரபஞ்ச சகலகலை நூல்களும்---

 

பஞ்சம் --- விரிவு. "ப்ர" என்ற உபசர்க்கம் மிகுதியைத் தெரிவிக்கின்றது.  மிகவும் விரிந்தபடியால் உலகத்திற்குப் ப்ரபஞ்சம் என்ற பேருண்டு.  சகலகலை என்பது விரிந்துள்ள அறுபத்துநான்கு கலைகள்.

 

அருமறை அநேகமும் ---

 

மறை --- வேதம். உண்மையை வெளிப்படையாக உரையாமையால் மறை எனப்பட்டது. பல உண்மைகள் இலைமறை காய்போல் இதில் மறைந்து உள்ளன. மறை இறைவாக்கு. "சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்" என்ற சேக்கிழார் பெருமான் திருவாக்கினாலும், "பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ" என்னும் மணிவாசகத்தாலும் அறிக.

 

மறைகள் ஆயிரக் கணக்காக விரிந்து இருந்தது. "மறை ஆயிரங்களும்" என்கின்றார் அருணகிரியார். "ஆயிரம் ஆரணம்" என்கின்றார் அப்பமூர்த்திகள்.

 

அவைகளைச் சுருக்கி நான்காக அமைத்தனர் வியாதமுனிவர்.

 

குவிந்தும் அறியாத அறிவும்அறியாமையும் கடந்த அறிவு திருமேனி ---

 

மேற்கூறிய மும்மூர்த்திகளும்வேதம் முதலிய நூல்களும் ஒன்று கூடிமுயன்றும் அறியமாட்டாத அறிவு ஒன்று உளது. அந்த அறிவையும் கடந்து அப்பால் சென்றால்அங்கே ஒரு அறியாமை உளது. அதனையும் கடந்த இடத்தில் விளங்கும் அறிவே இறைவனுக்குத் திருமேனியாக விளங்குகின்றது.

 

அறிவுஒன்று அறநின்று அறிவார் அறிவில்

பிறிவுஒன்று அறநின்ற பிரான் அலையோ..   ---  கந்தர் அநுபூதி.

 

கலையறிவுகட்கும் அப்பால் உள்ள நுண்ணறிவுக்கும் அப்பால்பட்ட மூல இருளுக்கும் அப்பால்பட்டு உள்ள அறிவு அது. அது இத் தன்மைத்து என்று யாராலும் இயம்புதல் முடியாது.

 

அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்

எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.      ---  கந்தர் அநுபூதி.

 

மிகப் பெரிய அநுபவத்தால் அறிகின்றது.  அதனை நம் போன்றோர் எழுதவோ,  கூறவோ

நினைக்கவோ முடியாது என உணர்க.

 

பலகாலும் செய்த மாதவப்பயனால்அவனருளே கண்ணாகக் கொண்டு காண்கின்றபோது

அந்த அறிவுஅறிவுக்கு அறிவாகப் புலப்படும்.  அதனை அறிவதுவே மேலான இன்பம்.

 

அறிவை அறிபவர் அறியும் இன்பந்தனை...  ---  (அகரமுதலென) திருப்புகழ்.

 

அதனைஇறைவனிடமே வேண்டிப் பெறவேண்டும்.

 

சுருதி மறைகள்இருநாலு திசையில் அதிபர்முநிவோர்கள்,

     துகள்இல் இருடி எழுபேர்கள், ...... சுடர்மூவர்,

சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர்,நவநாதர்,

     தொலைவில் உடுவின் உலகோர்கள், ...... மறையோர்கள்,

 

அரிய சமயம் ஒருகோடிஅமரர் சரணர் சதகோடி,

     அரியும் அயனும் ஒருகோடி, ...... இவர்கூடி

அறிய அறிய அறியாத அடிகள் அறிய அடியேனும்

     அறிவுள் அறியும் அறிவுஊற ...... அருள்வாயே..   --- திருப்புகழ்.

 

இறைவனுடைய திருமேனி நமது உடம்பு போன்றது என்று மயங்கித் திரிபவர் பலர். வாய்க்கு வந்தவாறு பிதற்றுவர் பலர். நமது உடம்பு எலும்பு நரம்பு உதிரம் முதலிய ஏழு தாதுக்களால் ஆனது.  இறைவனுடைய உருவம் இத்தன்மையது அன்று. அது அறிவு மயமானது. அந்த அறிவும் நமக்கு உள்ள உலகஅறிவுகலையறிவுவேறுள்ள ஆராய்ச்சியறிவுகள் அன்று.

 

அந்த அறிவின் இலக்கணத்தைத் தான் இந்தத் திருப்புகழில் பதின்மூன்று வரிகளால் மிக விரிவாக அடிகள் நமக்கு அறிவுறுத்துகின்றனர்.

 

இதனை நினைக்கும் தோறும் நெஞ்சம் விம்முகின்றது. உள்ளம் குழைகின்றது. இறைவனுடைய தன்மையை இங்ஙனம் இனிது எடுத்து நமக்கு உணர்த்தும் இப்பாடல் மிகவும் போற்றுதற்கு உரியது.

 

சிங்கமுகன் கூறுகின்றான்....

 

ஞானம்தான் உருஆகிய நாயகன் இயல்பை

யானும் நீயுமாய் இசைத்தும் என்றால்,அஃது எளிதோ?

மோனம் தீர்கிலா முனிவரும் தேற்றிலர்முழுதும்

தானும் காண்கிலன் இன்னமும் தன்பெருந்தலைமை.

 

முருகவேளை வழிபடுவது எதற்குஎனின்அறிவு திருமேனியாகக் கொண்ட பரம்பொருளை வழிபடுவதனால் அறிவு நலத்தை நாம் பெற்று உய்யலாம் என்க.

 

"அறிவுடையார் எல்லாம் உடையார்அறிவிலார்

என்உடையரேனும் இலர்."    

 

என்று திருவள்ளுவ நாயனார் கூறியபடிஅறிவு எல்லா நலன்களையும் எளிதில் தரும். அறிவு நிரம்பப் பெற்றவன் அஞ்சாமையையும் அமைதியையும் பெறுவான்.  பின்னே வருவதை முன்னே அறிவான். ஆகவேஅறிவு நமக்கு இன்றியமையாத சிறந்த செல்வம்.

 

அறிவு திருமேனியாக உடைய அறுமுகப் பெருமான் அடிமலரைச் சிந்தித்து வாழ்த்தி வந்திப்போர்அறிவு நலத்தையும்அதனால் ஏனைய நலங்களையும் எளிதில் பெற்று இன்புறுவர் என்பது உறுதி.

 

பகைகொள் துரியோதனன்---

 

துரியோதனன் பிறப்பிலேயே பாண்டவர்கள்மீது பகை கொண்டனன். காரணம் கலி அம்சமாகப் பிறந்தானாதலின்.

 

அழுக்காறும் வஞ்சனையும் பொய்மையும் கொண்டுதீயவர்களோடு நட்புக் கொண்டு

தூயவர்களுக்கு எந்நாளும் தீமையே புரிந்து உலகிற்குக் கேடு புரிந்தான்.

 

பாரதம் தெரிந்து ---

 

வியாத முனிவர் இமயமலையிலே மூன்று ஆண்டுகள் யோகம் செய்துஒருமைப்பட்ட சிந்தையினால் உண்டாகிய உணர்வு விழியினால் பாரத வரலாற்றை உள்ளவாறு தெரிந்தார். அதனைப் பின்னர் அவர் கவிகளாகப் பாட எண்ணினார்.

 

பழுதற வியாசன் அன்று இயம்ப ---

 

பாரதத்திற்கும் அறம் என்ற ஒரு பேருண்டு. அதன்கண் பேசப்படாத அறங்களே இல்லை. எல்லா அறங்களையும் பாரதம் வகுத்தும் தொகுத்தும் கூறும். அதனால்தான் அதனை வியாசர் பாடி விநாயகரைக் கொண்டு மேருமலையில் எழுதுவித்தார்.

 

சாமானியரான தாயாதிகள் கலகமான ஒரு கதையாக அது இருக்குமாயின்விநாயகர் அதை எழுதமாட்டார். வேறு நூல்களில் காணப்படாத சில அரிய பெரிய நுணுக்கமான நீதிநெறிகள் இதன்கண் இருப்பதனால்இதனைப் படித்துப் பாருளோர் உய்வு பெறவேண்டும் என்ற கருத்தை வியாசர் மேற்கொண்டார் என்பதை நாம் அறியும் பொருட்டு, "பழுதற" என்ற சொல்லை இங்கு அடிகளார் பெய்தனர்.

 

பரியதொரு கோடு கொண்டு சண்டவரை மீதே எழுதிய விநாயகன்---

 

வியாசர் பாரதத்தைப் பாடத் தொடங்கும்போது,அதனை எழுத வல்லவர் ஐந்துகரப் பண்டிதராகிய விநாயகர் ஒருவரே எனக் கருதினார். விநாயகரை வேண்டி வழிபட்டார். பிள்ளையார் அவருக்கு முன் தோன்றியருளினார்.

 

"அப்பனே! அடியேன் பாடும் பாரதத்தை மேருமலையில் எழுதி அருள வேண்டும்”.

 

"அன்பனே! நூதனமாகப் போடப் போகின்றாய். தாமதமாகப் பாடுதல் கூடாது. நான் எழுதும் வேகத்திற்குத் தக்கபடி கூறவேண்டும்”.

 

"அண்ணலே! அவ்வண்ணமே ஆகட்டும். ஆனால் அடியேன் பாடும் கவிகளின் பொருளை அறிந்து எழுதவேண்டும்”.

 

விநாயகர் அதற்கு உடன்பட்டு எழுதத் தொடங்கினார். தமது திருக்கரத்தில் உள்ள ஞானமாகிய கொம்பினால் எழுதுகின்றார்.  இடையியை மிகக் கடின பதங்கள் அமைந்த கவிகளைப் பாடி,அதன் பொருளை விநாயகர் சிறிது சிந்திக்கும் நேரத்தில்பல ஆயிரம் கவிகளை மனதில் பாடிக்கொண்டுஅவர் எழுதுகின்ற விரைவுக்குத் தக்கபடி வியாசர் கூறினார்.

 

இவ்வாறு வியாசர் கூற விநாயகர் மேருமலையில் அப் பெரும் காவியத்தை எழுதியருளினார்.  இதனைப் பிற திருப்புகழ்ப் பாடல்களிலும ஆசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார்.

 

இலகுக டலைகற் கண்டு தேனொடும்

     இரதம் உறுதினைப் பிண்டி பாகுடன்

     இனிமையின் நுகருற்றும்பிரான் ஒரு ...... கொம்பினாலே

 

எழுது என மொழிய,பண்டு பாரதம்

     வடகன சிகரச் செம்பொன் மேருவில்

     எழுதிய பவளக் குன்று...--- (அலகிலவுணரை) திருப்புகழ்.

 

பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்

     கோடுஒடித்த நாளில் வரை வரை பவர்

     பால்நிறக்க ணேசர் குவா குவா கனர் ...... இளையோனே..  ---  (சீர்சிறக்கு) திருப்புகழ்.

 

சிறந்த பவள மதயானை---

 

பவள மதயானை என்றார். யானையின் நிறம் கறுப்பு. ஆனால்விநாயகப் பெருமான் திருமேனியின் நிறம் பவளம். அவரது தந்தையார் ஆகிய சிவபரம்பொருளும் "பவளம் போல் மேனியன்" ஆவார்.

 

யானைக்குக் கன்னமதம்கபோலமதம்பீஜமதம் என மும்மதங்கள் உண்டு. விநாயகப் பெருமானுக்கு யானை உறுப்புக் கழுத்துக்கு மேல் மட்டுமே உள்ளது. எனவேவிநாயகப் பெருமானுக்கு மும்மதம் என்பது பொருந்தாது. 

 

மும்மதம் என்பன இச்சா ஞானக் கிரியைகளின் உருவகம்ஆகும் என்பதை அறிதல் வேண்டும். அவை,நமது ஆணவ அழுக்கினால் உண்டான துர்நாற்றத்தைப் போக்கி அருள் புரியும்.

 

இது குறித்தொரு வரலாறு

 

வாழ வைத்தவர் வீழ்ந்து ஒழிய வேண்டும். அப்பொழுதான் என் பெருமை தலை எடுக்கும் என்று எண்ணும் ஏழை அறிவினர் சிலர்அன்னாளிலும் இருந்தனர். அவர்களுள் ஒருவன்தான் சலந்தரன். சலந்தராசுரன் தன் மனைவியாகிய பிருந்தை தடுத்தும் கேளாதுசிவபெருமானோடு போர் புரிய வேண்டிக் கயிலை நோக்கி வரும் வழியில்சிவபெருமான் ஓர் அந்தண வடிவம் கொண்டு நின்று, "எங்குச் செல்கின்றாய்" என்று வினவஅவன் "சிவனோடு போர் புரிந்து வெல்லச் செல்கிறேன்" என்ன,  பெருமான், "அது உனக்குக் கூடுமோ?கூடுமாயின்தரையில் நான் கீறும் சக்கரத்தை எடுப்பாய்" என்று ஒரு சக்கரம் கீறஅதை அவன் தோளின்மீது எடுக்கஅப்போது அது அவன் உடம்பைப்  பிளக்கவே அவன் இறந்தொழிந்தான்.

 

சலந்தரன் உடல் குருதிபொறுக்க முடியாத துர்நாற்றமாய் உலகைப் போர்த்தது. அதனால் தாங்க முடியாமல் தடுமாறிய அகில உலகமும்ஐங்கரக் கணபதியை ஆராதித்தது.உடனே ஆனைமுகப் பெருமானின் ஊற்றெடுத்த அருள்மதம்எங்கும் வியாபித்துஅப் பொல்லாத நாற்றத்தைப் போக்கியது. அதன் மூலம் உலகமும் உய்ந்தது என்கின்றது காஞ்சிப் புராணம்.

 

விழிமலர்ப்பூ சனைஉஞற்றித் திருநெடுமால் 

     பெறும் ஆழி மீளவாங்கி,

வழிஒழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி 

     முடைநாற்றம் மாறும் ஆற்றால்

பொழிமதநீர் விரை ஏற்றி விகடநடப் 

     பூசைகொண்டு புதிதாநல்கிப்

பழிதபு தன் தாதையினும் புகழ்படைத்த 

     மதமாவைப் பணிதல்செய்வாம்.            --- காஞ்சிப் புராணம்.                                           

 

 உள்ளம் எனும் கூடத்தில் ஊக்கம் எனும்

     தறிநிறுவிஉறுதியாகத்

தள்ளரிய அன்பு என்னும் தொடர் பூட்டி,

     இடைப்படுத்தித் தறுகண் பாசக்

கள்ளவினை பசுபோதக் கவளம் இடக்

     களித்து உண்டுகருணை என்னும்

வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை  நினைந்து

     வரு வினைகள் தீர்ப்பாம்.            --- திருவிளையாடல் புராணம்.

 

எனவேஇச்சைகிரியைஞானம் என்னும் மூன்று அருட்சத்திகளே மும்மதம் என்பதை அறிவுறுத்தவே, "கருணை மதம் பொழிகின்ற சித்தி வேழம்" என்றது திருவிளையாடல் புராணம்.

 

அமராடி விபுதர் குல வேழமங்கை.... பயோதரம் புணர்ந்த பெருமாளே---

 

முருகப் பெருமான் தேவசேனாபதியாகிசூராதியவுணருடன் போர் புரிந்து அவர்களை வென்றுஇரந்திரனுக்குப் புதல்வியாக வந்த தெய்வயானை அம்மையாரை மணந்தருளினார்.

 

தெய்வயானை என்பது கிரியாசத்தி. அது சமதமாதி குணங்களின் பொருட்டுமும்மலங்களாகிய அசுரர்களை அழித்ததற்கு அடையானமாகி நிற்பது.

 

கருத்துரை

  

முருகா! அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திருமேனியாக உடைய உமது ஞானக்கழலைச் சார்ந்து இன்புற அருள் புரிவீர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                        

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...