பொது --- 1021. படிதனில் உறவெனும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

படிதனில் உறவெனும் (பொது)

 

முருகா! 

உமது அடியார்களுடன் கூடி முத்திநெறியில் நிற்க அருள்வாய்.

 

 

தனதன தனதன தனதன தனதன

     தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான

 

 

படிதனி லுறவெனு மனைவர்கள் பரிவொடு

     பக்கத் திற்பல கத்திட் டுத்துயர் ...... கொண்டுபாவப்

 

பணைமர விறகிடை யழலிடை யுடலது

     பற்றக் கொட்டுகள் தட்டிச் சுட்டலை ...... யொன்றியேகக்

 

கடிசம னுயிர்தனை யிருவிழி யனலது

     கக்கச் சிக்கென முட்டிக் கட்டியு ...... டன்றுபோமுன்

 

கதிதரு முருகனு மெனநினை நினைபவர்

     கற்பிற் புக்கறி வொக்கக் கற்பது ...... தந்திடாயோ

 

வடகிரி தொளைபட அலைகடல் சுவறிட

     மற்றுத் திக்கெனு மெட்டுத் திக்கிலும் ......வென்றிவாய

 

வலியுட னெதிர்பொரு மசுரர்கள் பொடிபட

     மட்டித் திட்டுயர் கொக்கைக் குத்திம ...... லைந்தவீரா

 

அடர்சடை மிசைமதி யலைஜல மதுபுனை

     அத்தர்க் குப்பொருள் கற்பித் துப்புகழ் ...... கொண்டவாழ்வே

 

அடியுக முடியினும் வடிவுட னெழுமவு

     னத்திற் பற்றுறு நித்தச் சுத்தர்கள் ...... தம்பிரானே.

 

பதம் பிரித்தல்

 

 

படிதனில் உறவு எனும் அனைவர்கள் பரிவொடு

     பக்கத்தில் பல கத்திட்டுதுயர் ...... கொண்டுபாவ,

 

பணைமர விறகு இடை,அழல் இடை,உடல் அது

     பற்ற,கொட்டுகள் தட்டிச் சுட்டுலை ...... ஒன்றி ஏக,

 

கடிசமன் உயிர்தனை,இருவிழி அனல் அது

     கக்கசிக்கென முட்டிக் கட்டி ...... உடன்று போமுன்,

 

கதிதரு முருகனும் எனநினை நினைபவர்

     கற்பில் புக்கு அறிவு ஒக்கக் கற்பது ...... தந்திடாயோ?

 

வடகிரி தொளைபட,அலைகடல் சுவறிட,

     மற்றுத் திக்கெனும் எட்டுத் திக்கிலும் ......வென்றிவாய,

 

வலியுடன் எதிர்பொரும் அசுரர்கள் பொடிபட,

     மட்டித்திட்டு உயர் கொக்கைக் குத்தி ...... மலைந்தவீரா!

 

அடர்சடை மிசை மதி,அலைஜலம் அது புனை

     அத்தர்க்குப் பொருள் கற்பித்துப் புகழ் ...... கொண்டவாழ்வே!

 

அடிஉக முடியினும் வடிவுடன் எழு மவு-

     னத்தில் பற்று உறு நித்தச் சுத்தர்கள் ...... தம்பிரானே.

 

பதவுரை

 

     வட கிரி தொளை பட--- வடக்கில் உள்ள கிரவுஞ்சமலை பிளவுபட்டு அழியவும்,

 

     அலை கடல் சுவறிட--- அலைகளை உடைய கடல் வற்றிப் போகவும்,

 

     மற்றுத் திக்கு எனும் எட்டுத் திக்கிலும் வென்றி வாய--- மற்று எட்டுத் திக்குகளிலும் வெற்றி வாய்க்கவும்,  

 

     வலியுடன் எதிர் பொரும் அசுரர்கள் பொடிபட--- வலிமையுடன் போர் புரிய வந்த அரக்கர்கள் அழிந்துபடவும்,

 

     மட்டித்திட்டு--- மடித்து விட்டு,

 

     உயர் கொக்கைக் குத்தி மலைந்த வீரா --- உயர்ந்த மாமரமாகக் கடலில் உருமாறி நின்று சூரபதுமனைக் குத்தி எதிர்த்த வீரரே!

 

     அடர் சடைமிசை --- அடர்ந்த திருச்சடையில்,

 

     மதி--- பிறைச்சந்திரனையும்,

 

     அலை ஜலம் அது புனை --- அலைகளை உடைய கங்கை நதியையும் புனைந்துள்ள,

 

     அத்தர்க்குப் பொருள் கற்பித்து--- சிவபரம்பொருளுக்குப் பிரணவப் பொருளைக் கற்பித்து,

 

     புகழ் கொண்ட வாழ்வே --- பெரும்புகழைக் கொண்ட செல்வமே!

 

     அடி உக முடியினும்--- உக முடிவுக் காலத்திலும்,

 

     வடிவுடன் எழும்--- தங்களது நிலை மாறாமல் காட்சி தருகின்,

 

     மவுனத்தில் பற்று உறு --- மோனஞானத்தில் திளைத்து இருக்கின்,

 

     நித்தச் சுத்தர்கள் தம்பிரானே ---நித்தியத்துவம் பெற்ற சுத்தமுத்தர்க்குத் தனிப்பெரும் தலைவரே!

 

 படி தனில் உறவு எனும் அனைவர்கள்--- இந்த உலகத்தில் உறவு என்று சொல்லப்படுகின்ற எல்லோரும்,

 

     பரிவொடு பக்கத்தில் பல கத்திட்டுத் துயர் கொண்டு பாவ---. அன்போடு எனது அருகில் இருந்துகூவி அழுதுதுக்கத்தில் இருக்க,

            

     பணை மர விறகு இடை--- பெருத்த மரக் கட்டைகளில் உண்டாகும்,

 

     அழல் இடை உடலது பற்ற--- நெருப்பானது உடலைப் பற்றும்படியா,

 

     கொட்டுகள் தட்டிச் சுட்டு--- பறைகளின் முழக்கத்திடையில் சுட்டு,

 

     அலை ஒன்றி ஏக --- அலைகள் உடைய நீரில் முழுகி அவரவர் இருப்பிடம் செல்லும்படியாக,

 

      கடி சமன்--- அச்சத்தைத் தருகின்ற இயமன்,

 

     உயிர் தனை --- எனது உயிரை,

 

     இரு விழி அனல் அது கக்க--- தனது இருவிழிகளும் கோபத்தால் நெருப்பைக் கக்குமாறு வந்து,

 

     சிக்கென முட்டிக் கட்டி உடன்று போ முன்--- சிக்கெனப் பிடித்துக் கட்டி ஈர்த்துக் கொண்டு போகும் முன்னர்,

 

    கதி தரு முருகனும் என நினை நினைபவர் கற்பில் புக்கு அறிவு ஒக்கக் கற்பது தந்திடாயோ --- நற்கதியை நமக்கு அருள்பவர் முருகப் பெருமானே என தேவரீரை நினைப்பவர்களுடைய நெறியில் அடியேனும் நின்றுநல்லறிவு வாய்க்கும்படி தேவரீரை ஓதி வழிபட அருள் புரிய மாட்டாயோ?

       

பொழிப்புரை

 

     வடக்கில் உள்ள கிரவுஞ்சமலை பிளவுபட்டு அழியவும்அலைகளை உடைய கடல் வற்றிப் போகவும்மற்று எட்டுத் திக்குகளிலும் வெற்றி வாய்க்கவும்,  வலிமையுடன் போர் புரிய வந்த அரக்கர்கள் அழிந்துபடவும்மடித்து விட்டுஉயர்ந்த மாமரமாகக் கடலில் உருமாறி நின்று சூரபதுமனைக் குத்தி எதிர்த்த வீரரே!

 

            அடர்ந்த திருச்சடையில்,  பிறைச்சந்திரனையும்,அலைகளை உடைய கங்கை நதியையும் புனைந்துள்ள சிவபரம்பொருளுக்குப் பிரணவப் பொருளைக் கற்பித்துப் பெரும்புகழைக் கொண்ட செல்வமே!

 

            உக முடிவுக் காலத்திலும்தங்களது நிலை மாறாமல் காட்சி தருகின்மோன ஞானத்தில் திளைத்து இருக்கின்ற நித்தியத்துவம் பெற்ற சுத்தமுத்தர்க்குத் தனிப்பெரும் தலைவரே!

 

     இந்த உலகத்தில் உறவு என்று சொல்லப்படுகின்ற எல்லோரும்அன்போடு   எனது அருகில் இருந்துகூவி அழுதுதுக்கத்தில் இருக்க, பெருத்த மரக் கட்டைகளில் உண்டாகும் நெருப்பானது உடலைப் பற்றும்படியாகப் பறைகளின் முழக்கத்திடையில் சுட்டுஅலைகள் உடைய நீரில் முழுகி அவரவர் இருப்பிடம் செல்லும்படியாகஅச்சத்தைத் தருகின்ற இயமன்தனது இருவிழிகளும் கோபத்தால் நெருப்பைக் கக்குமாறு வந்துஎனது உயிரைச்சிக்கெனப் பிடித்துக் கட்டி ஈர்த்துக் கொண்டு போகும் முன்னர்நற்கதியை நமக்கு அருள்பவர் முருகப் பெருமானே என தேவரீரை நினைப்பவர்களுடைய நெறியில் அடியேனும் நின்றுநல்லறிவு வாய்க்கும்படி தேவரீரை ஓதி வழிபட அருள் புரிய மாட்டாயோ?

 

விரிவுரை

 

 

படி தனில் உறவு எனும் அனைவர்கள்--- 

 

படி --- உலகம்.

 

பரிவொடு பக்கத்தில் பல கத்திட்டுத் துயர் கொண்டு பாவ---. 

 

"சத்து ஆன புத்தி அது கெட்டே கிடக்கநமன்

         ஓடித் தொடர்ந்துகயிறு ஆடிக் கொளும்பொழுது,

    பெற்றோர்கள் சுற்றி அழ,உற்றார்கள் மெத்த அழ..",

 

என்று திருவிடைமருதூர்த் திருப்புகழில் அடிகளார் காட்டியது போபெற்றோர்களும்உற்றார்களும்ஊராரும் மற்றும் உள்ளோரும்,நமது உயிர் பிரிந்த பின்னர் பிணத்தைச் செற்றி இருந்துகொண்டு கத்திக் கத்தி அழுவார்கள்.

 

மரண பக்குவம் ஆகின்ற காலத்தில் இறைவன் திருநாமத்தைச் சொல்ல வராது. கூடி இருப்பவர்களாவது சொல்லவேண்டும். அதைக் கேட்டுக் கொண்டே உயிர் பிரியவேண்டும். நல்வினைப் பயன் இருந்தால் நடக்கும். இல்லாதபோதுஐயோஅம்மா என்ற அலறல் சத்தம்தான் இருக்கும். சாகப் போகின்றவனும் அலறுவான். கூட இருப்பவர்களும் அலறுவார்கள். "செத்த பிணத்தின் முன்,இனிச் சாகும் பிணங்கள் கத்தும்"

 

உயிரினது இந்த தன்மையை அறிந்த அப்பர் பெருமான்இறைவன் திருநாமமாகிய பஞ்சாட்சரத்தைசாகும் தருவாயிலும் சொல்லும் பாக்கியத்தை அருள் புரியுமாறு சிவபெருமானிடம் வேண்டுகின்றார். "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்றும், "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்றும் வழக்குச் சொற்கள் உண்டு. இளமையில் இருந்தே இறைவன் திருநாமத்தைச் சொல்லி வரவேண்டும். ஒருக்கால் மரணபயத்தால்சொல்ல நாக்கு எழாதநிலை வந்துவிடக் கூடாது என்பதால்சாகின்ற போதும் உனது திருநாமத்தைச் சொல்லுகின்ற பாக்கியத்தை அருள்வாய் என்று வேண்டுகின்றார்.

 

"தூமென்  மலர்க்கணை கோத்துத்தீ வேள்வித் தொழில்படுத்த

காமன் பொடிபடக் காய்ந்த கடல்நாகைக் காரோண!நின்

நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும்

சாம்அன்று உரைக்கத் தருதிகண்டாய் எங்கள் சங்கரனே".

 

இதன் பொருள் ---

 

     தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை உம்மிடத்தே வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல்நாகைக் காரோணத்தில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே எங்களுக்கு நன்மையை அளிப்பவனே! உன் திருப் பெயரை உனது திருமுன் நின்று துதித்து,"நமசிவாய" என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லகின்ற பாக்கியத்தை அருள் புரிவாயாக.

 

     கரும்பினை வில்லாகவும்மலர்களை அம்புகளாகவும் உடைய மன்மதன்தேவர்களின் தூண்டுதலால்சிவபிரானுடைய யோக நிலையைக் கலைத்துகாம உணர்வைத் தூண்டவேண்டிதிருக்கயிலாயம் வந்துபெருமான் மீது மலர் அம்புகளைத் தொடுத்தான். சிவபெருமான் தனது நெற்றி விழியால் மன்மதனைப் பார்த்தார். மன்மதன் வெந்து பொடியானான்.

 

பட்டினத்து அடிகளாரும் இவ்வாறே வேண்டுகின்றார் பின்வரும் பாடலில்....

 

"ஐயும் தொடர்ந்துவிழியும் செருகி,அறிவு அழிந்து,

மெய்யும் பொய்யாகி விழுகின்ற போதுஒன்று வேண்டுவல் யான்,

செய்யும் திருவொற்றியூர் உடையீர்திருநீறும் இட்டு,

கையும் தொழப்பண்ணிஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே".      

                                

இதன் பொருள் ---

 

திருவொற்றியூரில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே! அடியேன் ஒரு வரத்தை உம்மிடம் யாசிக்கின்றேன். அதனைத் திருவருள் செய்யவேண்டும். கோழையும் கட்டிகண்களும் உள்வாங்கிஉணர்வும் கெட்டுஉடம்பும் பொய்யாகி விடுகின்ற காலத்தில்திருநீற்றை அணிந்துகைகளால் உம்மைத் தொழுதுபஞ்சாட்சரத்தை ஓதும்படியாக அருள் புரியவேண்டும்.

 

உயிர் உடலைப் பிரியும் காலத்தில்எப்பொருளிலும் ஆசை வைக்காதுஇறைவன் திருவடித் தியானத்தோடு பிரியவேண்டும்.

 

 

பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்ற கொட்டுகள் தட்டிச் சுட்டு அலை ஒன்றி ஏக--- 

 

பணை மர விறகு --- பெருத்த மரத்தின் விறகுக்கட்டை.

 

இதை "முருட்டு மெத்தை" என்பார் அப்பர் பெருமான்.

 

அலை ஒன்றி ஏக --- அலைகள் உள்ள நீர்த் தடத்தில் முழுகிச் செல்லுவார்கள்.

 

இறந்தவனைச் சுற்றி உற்றாரும்,நண்பரும்,பிறரும் ஒலியெழுப்பி அழுவார்கள். இதுவரை பெற்றோரிட்ட பெயரும்மற்றோரிட்ட பெயரும்பெற்ற பட்டப் பெயர்களும் ஒருங்கே நீக்கப் பெற்றுப் பிணம் என்றே எல்லோரும் அழைக்கும் நிலை வந்து விடுகின்றது. சுடுகாட்டிற்குச் சுமந்து சென்று,அங்கே சுடலையில் வைத்து இதுகாறும் அரிதின் முயன்று அழகுபடுத்தப்பட்டுக் காக்கப்பட்டு வந்த உடலைத் தீக்கு இரையாக்குவார்கள். அவ்வாறு உடலுக்குத் தீ மூட்டிய உறவினரும் மற்றோரும்திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து நீங்கி,தீட்டுப் போக நீரில் மூழ்கிக் குளித்து இறந்தவனைப் பற்றிய நினைப்பையும் ஒழித்து விடுகிறார்கள் என்கிறார் திருமூலர்.

 

ஊர் எல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் 

பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டுச் 

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு 

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே.        --- திருமந்திரம்.

 

எத்துணை எத்துணைச் சிறந்த அன்பைச் செலுத்தினோரும் முடிவில் உயிர் நீத்தவுடன் உடம்பைக் கொண்டு போய் சுடலையில் தீ வைத்து நீரில் மூழ்கி அவ்வன்பைத் துறந்து மறந்து நீங்குவர். இத்தகையோர் மீதுள்ள பாசத்தினின்று கழன்று இமைப்பொழுதும் நீங்காதான் இரு தாளில் அன்பைச் செலுத்திசெந்தமிழ் மலர்களை அவன் திருவடிமலர்களில் சூட்டி வழிபடுமாறு உபதேசிக்கின்றார்.

 

கடி சமன்--- 

 

கடி ---  அச்சம். 

 

சமன் --- எல்லோரையும் சமமாகவே பாவிப்பவன். 

 

கதி தரு முருகனும் என நினை நினைபவர் கற்பில் புக்கு அறிவு ஒக்கக் கற்பது தந்திடாயோ --- 

 

உயிர்களுக்குக் கதி மூன்று உண்டு. அவை... 1. அதோகதி2. ஊர்த்துவகதி3. பரகதி என்பன ஆகும்.  

 

கதி என்பதற்கு வழி என்று பொருள்.

 

அதோகதி என்பது கீழ்நோக்கிச் செல்லும் கதி. இது மீளாத துன்பத்தைத் தரும் நரகத்தைக் குறிக்கும்.

 

ஊர்த்துவகதி என்பது மேல்நோக்கிச் செல்லுதல் ஆகும். கீழான பிறவிக்குச் செல்லாமல் திரும்பவும் மனிதப் பிறவிக்கே வருவது. 

 

பரகதி என்பது வீடுபேறு என்னும் மோட்சத்தைக் குறிக்கும்.

 

அதோகதியை முயற்சி ஏதும் இல்லாமலே அடையலாம். பாவத்தையே பயின்ற உயிர்கள் இந்த கதியை எளிதாக அடையலாம். அதோகதிக்கு உள்ளது மலநடை.

 

ஊர்த்துவகதிக்கு முயற்சி இன்றியமையாதது. புண்ணியம் செய்த உயிர்கள் அதோகதியை அடையமாட்டா. பாவம் செய்யும் உயிர்கள் ஊர்த்துவ கதிக்கு வரமாட்டா. ஊர்த்துவகதியில் உள்ளது அறநடை.

 

நடை என்பது ஒழுக்கம் எனப்படும்.  

 

மலம் என்பது அழுக்கு. உயிர்க்கு உள்ள அழுக்கு மலம் எனப்படும். அது முயற்சியால் களையக் கூடிய அழுக்கே ஆகும்.

 

அறவழி ஒழுக்கத்தினால் பெறப்படும் நன்மையையும்மல ஒழுக்கத்தினால் அடையப்படும் தீமையையும் பகுத்து உணர்ந்துஅதோகதியில் செல்வதை விடுத்துஊர்த்துவகதியில் செல்வதற்கு முயற்சி வேண்டும். 

 

அதோகதிக்கும்ஊர்த்துவகதிக்கும் மேலானது பரகதியாகும். தனக்கு மேலாக ஒன்று இல்லாதது. அங்கே சென்றவர் திரும்பி வருவதில்லை. அங்கே விளைவது அழியாத பேரின்பம். இந்தப் பரகதியானது எல்லா உயிர்க்கும் கிடைப்பது இல்லை. 

 

ஒவ்வொருவருக்கும் அவரவர் வினைப்படி பிறவி உண்டாகின்றது. நாமாக வேண்டி மனிதப் பிறவி வருவதில்லை. விரும்பி யாரும் குருடாகவோசெவிடாகவோமுடமாகவோ,ஏழையாகவோசெல்வந்தனாகவோஅறிவுடையவராகவோஅறிவில்லாதவராகவோ பிறப்பதில்லை. எல்லாம் விதிப்படியே நிகழ்கின்றது. விதி என்பது இந்தப் பிறவியில் நாம் அனுபவித்தற்கு என்று விதிக்கப்பட்ட பிராரத்த வினையைக் குறிக்கும். இதை யாராக இருந்தாலும் அனுபவித்தே கழிக்கவேண்டும். இதில் இருந்து தப்பியவர் யாரும் இல்லை.

 

முயற்சியே இல்லாமல்மனம் போனபடி குறிக்கோள் இல்லாமல் வாழ்கின்றவருக்கு விதியை வெல்லக்கூடிய மதி இருக்காது. 

 

தேடிச் சோறுநிதம் தின்று— பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி— மனம்

வாடித் துன்பம் மிக உழன்று — பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து— நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி — கொடுங்

கூற்றுக்கு இரை எனப் பின்மாயும் — பல

வேடிக்கை மனிதரைப் போலே...

 

இவர்கள் வாழ்ந்து மடிவார்கள். இவர்கள் அடைவது அதோகதி ஆகும்.

 

ஆற்று வெள்ளத்தைக் கடக்கவேண்டுமானால், "எனக்கு நீந்தத் தெரியும்" என்று ஒருவன் தனது முயற்சியால் முயன்றால்ஒருவேளை முடியவும் கூடும். அல்லாமல் முடிந்து போகவும் கூடும். அவரவர் சமத்தைப் பொறுத்தது. இது ஊர்த்துவகதியில் கொண்டு சேர்க்கும். மீண்டும் பிறவிக்கே வரும் நிலை இது. ஆனால்,துன்பம்மரணம் என்னும் அபாயம் இருந்துகொண்டே இருக்கும்.

 

ஆனால்கடலைக் கடக்கவேண்டுமானால்தெப்பம் ஒன்று அவசியம் தேவை. பிறவியைக் கடலுக்கு உருவகப்படுத்துவர் பெரியோர். பிறவிக் கடலைக் கடந்தால்,பிறவி அற்ற,துன்பம் அற்ற,பேரின்ப நிலையாகிய பரகதியை அடையலாம்.

 

இதற்கு மதி நிச்சயம் தேவை. அந்த மதி தான் தெப்பம்.  பிறவியாகிய கடலில் இருந்துமுத்தியாகிய கரையினைச் சேர்வதற்குதெப்பமாக இருந்து உதவுவது இறைவன் திருநாமம். அதை உறுதியாகப் பற்றிக் கொண்டால்பிறவிக் கடலைக் கடந்துமுத்திக் கரையை அடைந்து விடலாம். 

 

இதுதான்விதியை மதியால் வெல்வது ஆகும். விதி வலியதுதான். அதனை நமது முயற்சியால் மட்டுமே வென்றுவிட முடியாது. கடலைக் கடக்கத் தெப்பம் போல்விதியை வெல்ல,இறைவன் திருநாமம் துணை வேண்டும். இறைவன் திருநாமத்தை எண்ணுவதுதான் மதி.

 

"ஊழில் பெருவலி யாவுள,மற்று ஒன்று 

சூழினும் தான் முந்துஉறும்"

 

என்று ஊழின் வலிமையைப் பற்றி, "ஊழ்" என்னும் அதிகாரத்திலே தெரிவித்த திருவள்ளுவ நாயனார், "ஆள்வினை உடைமை" என்னும் அதிகாரத்தில்,

 

"ஊழையும் உப்பக்கம் காண்பர்உலைவு இன்றித்

தாழாது உஞற்றுபவர்"

 

என்று ஊழை வெல்லுகின்ற உபாயத்தையும் அருளிச் செய்தார்.

 

ஊழை வெல்லுகின்ற உபாயம் எதுஔவைப் பிராட்டியார், "நல்வழி" என்னும் நூலில் காட்டுகின்றார் பாருங்கள்...

 

"சிவாயநம" என்று சிந்தித்து இருப்போர்க்கு

அபாயம் ஒருநாளும் இல்லை; --- உபாயம்

இதுவே மதியாகும்அல்லாத எல்லாம்

விதியே மதியாய் விடும்.

 

இதன் பொருள் ---

 

"சிவாயநம" என்னும் திருவைந்தெழுத்து அல்லது பஞ்சாட்சர மந்திரத்தை எப்போதும் தியானிப்பவர்களுக்கு ஒரு நாளும் துன்பம் (அபாயம்) உண்டாகாது. விதியை வெல்வதற்கு இதுவே சிறந்த வழி (உபாயம்) ஆகும். இதுவே சிறந்த அறிவும் (மதி) ஆகும்.

 

இவ்வாறு இறை திருநாமத்தைச் சிந்திக்காத,மற்ற அறிவு எல்லாம் விதியின்படியே ஆகிவிடும்.

 

"சிவாயநம" என்று ஔவையார் காட்டினார். அவரவர் வணங்குகின்ற தெய்வத்திற்கு உரிய மந்திரத்தை எப்போதும் உச்சரித்து வரலாம். 

 

எப்போதும் என்றால்வேறு எந்த வேலையும் செய்யாமல் என்று பொருள் அல்ல. அவரவருக்கு உள்ள கடமைகளைச் செவ்வனே இறைச் சிந்தனையோடு முடித்துஎஞ்சிய காலத்தில் வீண்பொழுது போக்காமல்இறைவன் திருநாமத்தை எண்ணி வரவேண்டும். வீணான பொழுது போக்கால் எந்த லாபமும் இல்லை. 

 

புண்ணியம் என்று எண்ணிஇறைவன் திருநாமத்தைச் சொல்லுவதால்புண்ணியம் மட்டும்தான் கிடைக்கும். புண்ணியமும் பிறவியில் கொண்டு சேர்க்கும். மீண்டும் துன்பம்தான்.

 

இறைவன் திருநாமத்தைபிறவியில் இருந்து ஈடேறுவதற்காகச் சொல்லுங்கள். காமியம் வேண்டாம். நிஷ்காமியமாகச் சொல்லுங்கள். நாளும் பயின்று வந்தால்நீங்கள் மறந்தாலும்உங்களுடைய நாக்குதானாகவே இறைவன் திருநாமத்தை உச்சரிக்கும் நிலை வந்து விடும்.

 

அப்பர் பெருமான் பரகதியை வேண்டும் பாடல்....

 

கருவாய்க் கிடந்து உன்கழலே நினையுங் கருத்துடையேன்;

உருவாய்த் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன்உனது அருளால்;

திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன்;

தருவாய் சிவகதி நீபாதிரிப்புலியூர் அரனே.

 

இதன் பொழிப்புரை ---

 

திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானே! தாயின் கருவிலே கிடந்த போது உன் திருவடிகளையே தியானிக்கும் கருத்து உடையேனாய் இருந்தேன். கருவின் நீங்கி வெளிப்பட்ட உருவம் கிட்டிய பிறகு உன் அருளினால் இப்பொழுது ஆராய்ந்து உன் திருநாமங்களைப் பலகாலும் சொல்லப் பழகியுள்ளேன். வாய்க்குச் செல்வம் விளங்குமாறு திருவைந்தெழுத்தை ஓதித் திருநீறு இப் பொழுது அணியப் பெற்றேன் ஆதலின் அடியேனுக்கு மங்கலமான மார்க்கத்தைத் தருவாயாக.

 

கற்பில் புக்கு என்றார் அடிகளார். 

 

கற்பு --- கல்விதியானம்ஆணைகதிஉறுதிநீதிநெறி என்று பொருள்கள் உண்டு.

 

வட கிரி தொளை பட--- 

 

வடகிரி --- வடக்கில் உள்ள கிரவுஞ்ச மலை.

 

வடம் --- கனமானது. பெருத்தது.

 

கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். வினைகள் அளப்பில. பெருத்தே இருக்கும்.

 

இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கிகிரவுஞ்சும் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன்தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்துகிரவுஞ்ச மலையைப் பிளந்துஅதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.

 

"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.

 

"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்

     இள க்ரவுஞ்சம் தனோடு

          துளக்க எழுந்துஅண்ட கோளம் ...... அளவாகத்

துரத்தி,அன்று இந்த்ர லோகம்

     அழித்தவன் பொன்றுமாறு,

          சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"

 

என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.

 

கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம்கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்துஅவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.

 

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்

கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்

பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட

தனி வேலை வாங்கத் தகும்."

 

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.

 

"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடியநீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடிநமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.

 

அலை கடல் சுவறிட--- 

 

சுவறுதல் --- வற்றிப் போதல்.

 

அலைகள் எழுவதால் கடலானது சதாகாலமும் இரைந்து கொண்டே இருக்கும். கடலால் சூழப்பட்டது இந்த உலகம்.

 

"அலைகடல் உடுத்த தலம்" என்பார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். "ஆழிசூழ் உலகம்" என்பார் கம்பநாடர். "நீர் ஆரும் கடல் உடுத்த நிலமடந்தை" என்பார் மனோன்மணீயம் சுந்தரனார். "இருங் கடல் உடுத்த இப் பெருங் கண் மாநிலம்" என்பது புறநானூறு.

 

காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இல்லாமல் கடலில் அலைகள் சிறிதும் பெரிதுமாக வந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கடலால் சூழப்பட்டு உள்ளது இந்த நிலவுலகம். இந்த நிலவுலகத்தில் எடுத்துள்ள இந்தப் பிறப்பினை அடிகளார் இங்குக் குறித்தார்.

 

செய்த வினைகளின் காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இன்றிப் பிறவிகள் வருதலின்பிறவியைப் பெருங்கடல் என்றனர் நம் முன்னோர்.

 

(1)   கடலில் ஓயாமல் அலைகள் வீசிக்கொண்டே இருக்கின்றனபிறவியாகிய கடலில் இன்ப துன்பங்களாகிய அலைகள் வந்துகொண்டே இருக்கின்றன.

 

(2)      கடலில் கப்பல்கள் மிதந்து கொண்டே இருக்கின்றன. பிறவியாகிய கடலிலும் ஆசைகளாகிய மரக்கலங்கள் மிதக்கின்றன.

 

(3)      கடலில் திமிங்கிலங்கள் முதலைகள் வாழ்கின்றன. பிறவியாகிய கடலிலும் நம்மை எதிர்க்கின்ற பகைவர்கள் வாழ்கின்றனர்.

 

(4)      கடலில் பலவகைப்பட்ட மீன்கள் உலாவி வயிறு வளர்க்கின்றன. பிறவியாகிய கடலிலும்மனைவி மக்கள் முதலியோர் உலாவி வயிறு வளர்க்கின்றனர்.

 

(5)      கடலுக்குள் மலைகள் இருக்கின்றன. பிறவியாகிய கடலிலும் அகங்காரமாகிய மலை பெரிதாக வளர்ந்திருக்கின்றது.

 

(6)      கடல் ஆழமும் கரையும் காணமாட்டாமல் பயங்கரமாக இருக்கின்றது. பிறவியாகிய கடலும் எவ்வளவு சம்பாதித்துப் போட்டாலும் போட்ட இடங்காணாது முடிவு இன்றி பயங்கரத்தை விளைவிக்கின்றது.

 

உலக வாழ்வில் அமிழ்ந்து கிடப்பவர் கேவலம் வயிற்றை வளர்க்கும் பொருட்டும்மனைவி மக்களைக் காப்பாற்றும் பொருட்டும் மெய்போன்ற பொய்களைப் பற்பல விதமாகவும்சாமர்த்தியமாகவும் பேசி உழல்வர்.

 

(1)     ஒரு நாளைக்கு 50ரூபாய் சம்பாதிக்கும் வழி இப்புத்தகத்தில் உள்ளது. இதன் விலை ரூபாய் 100.

 

(நாளொன்றுக்கு ஐம்பது ரூபாய் சம்பாதிக்கும் வழியைத் தெரிந்தவன் புத்தகத்தை இருபக்கமும் கம்பியால் பொதிந்து விற்றுக்கொண்டு அலைய வேண்டாமே?)

 

(2)       இந்த மருந்து 250வியாதிகளைக் கண்டிக்கும். இம்மருந்தை உண்டு 3மணி நேரத்தில் குணமில்லை என்றால் ரூ. 1000இனாம்.

 

(3)       நோயில்லாத பொழுது டாக்டர் சர்டிபிகேட் தந்து லீவு எடுத்தல்இவை போல் எத்தனையோ ஆயிரம் மெய் போன்ற பொய்கள்.

 

     உயிர்களின் வினைப் பயனுக்கு ஏற்ப பிறவியானது தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால்பிறவியைப் பெருங்கடல் என்றனர் நமது முன்னோர். பிறவிப் பெருங்கடலை வற்றிப் போகச் செய்வது ஞானம். எனவேதனது ஞானசத்தியாகிய வடிவேலை விடுத்துகடல் வற்றிப் பொகுமாறு செய்தார் இளம்பூரணர் ஆகிய முருகப் பெருமான்.

 

அடர் சடைமிசை மதி அலை ஜலம் அது புனை அத்தர்க்குப் பொருள் கற்பித்துப் புகழ் கொண்ட வாழ்வே---

 

இறைவன் புரிந்த இரு அருள் விளையாடல்களை இங்குச் சுவாமிகள் குறித்தார். ஒன்றுபிறைச்சந்திரனைசு சூடி, "சந்திரமௌலீசுவரர்" ஆனது.. மற்றொன்றுகங்கையைச் சடையில் தரித்து, "கங்காதரர்" ஆனது. 

          

பிறைசூடி ஆனது

 

பரம்பொருளின் அடர்ந்த சடை என்பது ஞானத்தைக் குறிக்கும். சானமே வடிவாகிய பரம்பொருள்தன்னச் சரண் புகுந்த உயிர்களின் குற்றத்தை மன்னித்துக் காத்து அருள் புரியும். இதைக் காட்டவேபிறைச் ணந்திரனைசு சூடியுள்ளதைக் குறிக்கின்றார் அடிகளார். தக்கனுடைய சாபத்தால் வருந்திய சந்திரன்சிவபெருமானைச் சரண் புகஅவனுடைய சாபம் தீர்ந்தது என்பதை அறிந்துள்ளோம். 

 

பிரமனது மானத புத்திரருள் ஒருவனாகியத் தட்சப்பிரசாபதி,தான்பெற்ற அசுவினி முதல் ரேவதி ஈறாயுள்ள இருபத்தியேழு பெண்களையும்அநுசூயாதேவியின் அருந்தவப் புதல்வனாகிய சந்திரன் அழகில் சிறந்தோனாக இருத்தல் கருதி அவனுக்கு மணம்புரிவித்துஅவனை நோக்கி, “நீ இப்பெண்கள் யாவரிடத்தும் பாரபட்சமின்றி சமநோக்காக அன்பு பூண்டு ஒழுகுவாயாக” என்று கூறிப் புதல்வியாரைச் சந்திரனோடு அனுப்பினன். சந்திரன் சிறிது நாள் அவ்வாறே வாழ்ந்துபின்னர் கார்த்திகை உரோகணி என்ற மாதர் இவரும் பேரழகு உடையராய் இருத்தலால்,அவ்விரு மனைவியரிடத்திலே கழிபேருவகையுடன் கலந்துஏனையோரைக் கண்ணெடுத்தும் பாராதவன் ஆனான். மற்றைய மாதர்கள் மனம் வருந்தி,தமது தந்தையாகிய தக்கனிடம் வந்து தம் குறைகளைக் கூறி நின்றனர். அது கண்ட தக்கன் மிகவும் வெகுண்டுசந்திரனை அழைத்து “உனது அழகின் செருக்கால் என் கட்டளையை மீறி நடந்ததனால் இன்று முதல் தினம் ஒருகலையாகத் தேய்ந்து ஒளி குன்றிப் பல்லோராலும் இகழப்படுவாய்” என்று சபித்தான்.

 

அவ்வாறே சந்திரன் நாளுக்குநாள் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்து பதினைந்து நாட்கள் கழிந்தபின் ஒருகலையோடு மனம் வருந்திஇந்திரனிடம் சென்றான். பின்னர் பிரமதேவனிடம் சென்றான். எங்கும் அவனது துன்பத்திற்குத் தீர்வு கிடைக்கவில்லை. இறுதியில்சந்திரன் திருக்கயிலைமலைச் சென்றுநந்தியெம்பெருமானிடம் அனுமதி பெற்று,மகா சந்நிதியை அடைந்துஅருட்பெருங்கடலாகியச் சிவபெருமானை முறையே வணங்கிதனக்கு நேர்ந்த சாபத்தை விண்ணப்பித்து, “பரம தயாளா! எனக்கு உற்ற இவ்விடரை நீக்கி இன்பம் அருள்வீர்” என்ற குறையிரந்து நின்றனன்.மலைமகள் மணாளன் மனமிரங்கி, "அஞ்சேல்" என அபயம் தந்துஅவ்வொரு கலையினைத் தமது திருமுடியில் தரித்து, “உனது கலைகளில் ஒன்று நமது திருமுடியில் இருத்தலால் நாளுக்கு ஒரு கலையாகக் குறைந்தும் இருக்கக் கடவாய்எப்போது ஒரு கலை உன்னை விட்டு நீங்காது” என்று கருணை பாலித்தனர். இவ் வரலாறு கந்தபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

 

கங்காதரர் ஆனது.

 

முன்னொரு காலத்தில் உமாதேவியார்திருக்கயிலாய மலையிலுள்ள சோலையிலே விளையாட்டாக ஒன்றும் பேசாதவராய்ச் சிவபெருமானுக்குப் பின்புறத்தில் வந்து அவருடைய இரு கண்களையும் தமது திருக்கரங்களால் பொத்தினார். அதனால் எல்லா உயிர்களும் வருத்தமடையும்படி புவனங்கள் எங்கும் இருள் பரந்தது. சிவபெருமானுடைய திருக்கண்களினாலேயே எல்லாச் சோதியும் தழைத்த தன்மையினால்சூரியன் சந்திரன் அக்கினி ஆகிய இவர்களின் சுடர்களும் மற்றைத் தேவர்களின் ஒளிகளும் அழிந்து எல்லாம் இருள்மயமாயின. அம்மையார் அரனாரது திருக்கண்களைப் பொத்திய அக் கணமொன்றில் உயிர்கட்கு எல்லாம் எல்லையில்லாத ஊழிக்காலங்கள் ஆயின. அதனை நீலகண்டப்பெருமான் நோக்கிஆன்மாக்களுக்குத் திருவருள் செய்யத் திருவுளங்கொண்டுதம்முடைய நெற்றியிலே ஒரு திருக்கண்ணை உண்டாக்கிஅதனால் அருளொடு நோக்கிஎங்கும் வியாபித்த பேரிருளை மாற்றிசூரியன் முதலாயினோர்க்கும் சிறந்த பேரொளியை ஈந்தார். புவனங்களிலுள்ள பேரிருள் முழுதும் நீங்கினமையால் ஆன்மகோடிகள் உவகை மேற்கொண்டு சிறப்புற்றன. சிவபெருமானுடைய செய்கையை உமாதேவியார் நோக்கி அச்சம் எய்தி அவருடைய திருக்கண்மலர்களை மூடிய இருகர மலர்களையும் துண்ணென்று எடுத்தார்,எடுக்கும் பொழுது தமது பத்துத் திருவிரல்களிலும் அச்சத்தினாலே வியர்வைத் தோன்றஅதனை உமாதேவியார் நோக்கி திருக்கரங்களை உதறினார். அவ்வியர்வைப் பத்துக் கங்கைகளாய் ஆயிர நூறுகோடி முகங்களைப் பொருந்திச் சமுத்திரங்கள்போல் எங்கும் பரந்தன. அவற்றை அரியரி பிரமாதி தேவர்களும் பிறருங் கண்டு திருக்கயிலையில் எழுந்தருளிய தேவதேவன்பால் சென்றுவணங்கித் துதித்து, “எம்பொருமானே! இந்த நீர்ப்பெருக்கு எங்கும் கல்லென்று ஒலித்து யாவரும் அழியும்படி அண்டங்கள் முழுவதையும் கவர்ந்ததுமுன்னாளில் விடத்தை உண்டு அடியேங்களைக் காத்தருளியது போல் இதனையும் தாங்கி எங்களைக் காத்தருளுவீர்” என்று வேண்டினார்கள். மறைகளும் காணாக் கறைமிடற்று அண்ணல்,அந்நதியின் வரலாற்றை அவர்களுக்குச் சொல்லிஅதனை அங்கே அழைத்துதமது திருச் சடையிலுள்ள ஓர் உரோமத்தின் மீது விடுத்தார்.

 

அதனைக் கண்டு மகிழ்ந்து நான்முகனும் நாராயணனும் இந்திரனும் “எம்மை ஆட்கொண்ட எந்தையே! இவ்வண்டங்களை எல்லாம் விழுங்கிய கங்கை உமது அருட்சத்தியாகிய அம்பிகையாரது திருக்கரத்தில் தோன்றினமையாலும்உமது திருச்சடையில் சேர்ந்தமையாலும் நிருமலமுடையதாகும். அதில் எமது நகரந்தோறும் இருக்கும்படி சிறிது தந்தருளல் வேண்டும்” என்று வேண்டினார்கள். சிவபெருமான் திருச்சடையில் புகுந்திருந்த கங்கையில் சிறிதை அள்ளி அம்மூவர்களுடைய கைகளிலும் கொடுத்தார். அவர்கள் வாங்கி மெய்யன்போடு வணங்கி,விடைபெற்றுக் கொண்டு தத்தம் நகர்களை அடைந்து,அங்கே அவற்றை விடுத்தார்கள். அந்த மூன்று நதிகளுள் பிரமலோகத்தை அடைந்த கங்கை,பகீரத மன்னனுடைய தவத்தினால் பூமியில் மீண்டும் வரசிவபெருமான் பின்னும் அதனைத் திருமுடிமேல் தாங்கிபின் இந்த நிலவுலகிற் செல்லும்படி விடுத்தார். அந்நதி சகரர்கள் அனைவரும் மேற்கதி பெற்றுய்யும்படி அவர்கள் எலும்பில் பாய்ந்து கடலில் பெருகியது. இதனை ஒழிந்த மற்றை இரு நதிகளும் தாம் புகுந்த இடங்களில் இருந்தன. தமது அருட் சத்தியாகிய உமையம்மையாருடைய திருக்கரத்தில் தோன்றிய கங்கா நதி உலகங்களை அழிக்காவண்ணம் திருவருள் மேலீட்டால் சிவபெருமான் அதனைத் திருமுடியில் தரித்துகங்காதரர் ஆனார்.

 

மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே,மற்றுஒருத்தி

சலமுகத்தால் அவன்சடையில் பாயும்அது என்னேடீ,

சலமுகத்தால் அவன்சடையில் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்

பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ.

                                                                                                           --- திருவாசகம்.

 

சிவபரம்பொருளுக்கு முருகப் பெருமான் மெய்ப்பொருளைக் கற்பித்த வரலாறு.

 

திருக்கயிலாய மலையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளியிருந்தார். முருகப் பெருமான் தனியாக இருந்த திருக்கோயில் ஒன்றிலே எழுந்தருளியிருந்தார். அக்கோயில் சிவபெருமானுடைய திருவோலக்க மண்டபத்திற்குச் செல்லும் வழியில் அமைந்திருந்தது. ஒருநாள் தேவர்களும் திருமாலும் இந்திரனும் நான்முகனும் சிவபிரானை வழிபடுதல் பொருட்டுத் திருக்கயிலையை அடைந்தார்கள். அத் தேவர்களுள் நான்முகன் ஒழிந்த பிற தேவர்கள் முருகக்கடவுளையும் வணங்கிச் சென்றார்கள். நான்முகன் ஒருவன் மட்டும் "இம் முருகன் சிறுவன் தானே,இவனை எதற்காக வணங்கவேண்டும்" என்னும் எண்ணம் உடையவனாய் வணங்காது ஒதுங்கிச் சென்றான்.

 

இறைவனை வணங்கச் சென்ற தேவர்களில் நான்முகன் ஆணவத்தோடு சென்ற தன்மையை அறுமுகப்பரமன் அறிந்து கொண்டார். நான்முகனுடைய செருக்கினை அழித்தொழிக்கத் திருவுள்ளம் கொண்டு,"தேவர்கள் வெளியே வரும் பொழுது நான்முகனைப் பிடித்துக் கொண்டுவந்து என்முன் நிறுத்துவாயாக" என்று தம்முடைய இளவலாகிய வீரவாகு தேவர்க்குக் கட்டளையிட்டருளினார். வீரவாகு தேவரும் அறுமுகப்பரமன் கட்டளைப்படி நான்முகனைப் பிடித்து வந்து திருமுன் நிறுத்தினார். இதனைக் கண்ட பிறதேவர்கள் அச்சம் கொண்டவர்களாய்த் திக்குக்கு ஒருவராக ஓடிப் போயினர்.

 

முருகக்கடவுள் நான்முகனைப் பார்த்து, "நீ எதனில் மிக்கவன்வாழ்வில் மிகுந்தவன் என்றால்,எந்தையாகிய சிவபிரானை நாள் தோறும் வந்து வணங்கவேண்டிய கட்டாயமில்லை. வீரத்தில் மிக்கவன் என்றால்இப்போதுஎன் தம்பியாகிய வீரவாகுவால் பிடிபட்டு வந்ததுபோல் வந்திருக்க மாட்டாய்எல்லாவற்றையும் நான் படைப்பேன் என்று  கூறுவாயாகில்,உன்னையும் திருமாலையும் சிவகணத்தவரையும் நீ படைக்கவில்லை" என்று இப்படிப் பலவாறு கூறவும்நான்முகன் அப்பொழுதுகூட வணங்காமலும் மறுமொழி கூறாமலும் நின்றான். உடனே முருகப்பெருமான் அந் நான்முகனுடைய தலையில் பலமாகக் குட்டிக் கடிய சிறையில் அடைத்தருளினர். பிறகுபடைப்புத் தொழிலையும் தாமே மேற்கொண்டருளினர். இவ்வாறு சிலகாலம் சென்றது. திருமால் முதலியோர் இச்செய்தியைச் சிவபிரானிடம் தெரிவித்தனர். சிவபிரான் திருமால் முதலிய தேவர்களைப் பார்த்துச், "செம்மையான ஞானசத்தியின் திருவுருவத்தினைத் தனக்குத் திருவுருவமாகக் கொண்ட தலைவனாகிய முருகன் எம்மினும் வேறுபட்டவன் அல்லன். யாமும் அவனிலிருந்து வேறாக உள்ளேம் அல்லேம். இளமை பொருந்திய வடிவினை உடைய அம்முருகனிடத்தில் அன்பு செய்தவர்கள் நம் மிடத்தில் அன்பு செய்தோர் ஆவர்.  பிழை செய்தவர்கள் நம்மிடத்திலும் பிழை செய்தவர்களாவர். மிகுந்த குற்றத்தினைச் செய்த நான்முகனுக்குக் கிடைத்த தண்டமானது தகுதியுடையதே ஆகும். அந் நான்முகனை எவ்வாறு சிறையில் இருந்து வெளிப்படுத்த முடியும்?" என்று கூறினார். தேவர்கள் நான்முகன் செய்த குற்றத்தினைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.

 

சிவபெருமான் நந்திதேவரை அழைத்து, "நீ முருகனிடம் சென்று வணங்கிநான்முகனைச் சிறையில் இருந்து வெளிவிடுமாறு நாம் கூறியதாகக் கூறிவிடச் செய்து முருகனையும் இங்கு அழைத்துக்கொண்டு வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். திரு நந்திதேவர் அறுமுகப் பரமனிடம் சென்று வணங்கிச் சிவபெருமான் கூறிய செய்தியைத் தெரிவித்தார். அவ்வளவில் முருகப்பெருமான் நான்முகனைச் சிறையிலிருந்து விடுவித்துத் தாமும் திருக்கயிலையை அடைந்தார். சிவபெருமான் முருகக்கடவுளைப் பார்த்து, "அறிவினாலே பெருந்தன்மைய உடைய பெரியவர்கள் செய்தற்கரிய பிழைகளைத் தமது மனம் அறிந்து செய்யமாட்டார்கள். சிற்றறிவு உடையவர்கள் அறிந்தோ அறியாமலோ பிழைகளைச் செய்வார்கள். பெரியோர்கள் அக்குற்றத்தினை ஒரு பொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள்.  சிறந்த அறிவு இன்மையாலே நான்முகன் உன்னை வணங்காது சென்றான். நீ அவனுடைய குற்றத்தைப் பொறுக்காமல் பெரிதாகக் கொண்டு தண்டம் செய்து வருத்திவிட்டாய். தேவர்களுடைய துன்பத்தைப் போக்கி இன்பத்தினைக் கொடுக்க வந்த நீ இவ்வாறு இயற்றுதல் தகுதியாகுமோ?" என்று உசாவினார்.

 

முருகக்கடவுள் சிவபிரானைப் பார்த்து "எந்தையே! நான்முகனைச் சிறந்த அறிவில்லாதவன் என்றீர். சிறந்த அறிவில்லாதவன் பிரணவம் என்னும் அருமறையின் மெய்ப்பொருளை உணரமாட்டான். இத்தகைய நிலையில் உள்ளவனுக்குப் படைப்புத் தொழிலை ஏன் வழங்கினை?" என்று உசாவினார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ பிரணவத்தின் பொருளை அறிவாயானால் கூறுவாயாக" என்று சொன்னார். அதற்கு முருகப் பிரான், "அதனைக் கூறவேண்டிய முறைப்படி கூற வேண்டுமே அல்லாமல் கண்டபடி சொல்லலாமோ?" என்றார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ விருப்பத்தோடு தங்கியிருக்கும் தணிகைமலைக்கு அருளுரை பெறும்பொருட்டு நாம் வருகின்றோம். மாசிமகமும் வருகின்றது. அப்பொழுது கூறுவாயாக" என்றார். அவ்வாறே தணிகைமலைக்குச் சென்று வடகிழக்கு எல்லையில் ஒரு கணப்பொழுது தணிகைவேலனை எண்ணி அமர்ந்தார். குரு நாதனாகிய முருகக்கடவுள் சிவபிரான் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து தந்தையாகிய சிவபிரானுக்குப் பிரணவ மறைப் பொருளை முறையோடு உரைத்தருளினார்.

 

தனக்குத் தானே மகனும் குருவும் மாணவனும் ஆகிய சிவபிரான் ஓங்கார வடிவினனாகிய முருகக் கடவுளின் அறிவுரையைக் கேட்ட அளவில் பெருமுழக்கஞ் செய்து நகைத்துக் கூத்தாடினார். சிவபெருமான் அவ்வாறு பெருமுழக்கம் செய்து இன்பக் கூத்தாடியபடியால் அவ்விடம் "வீராட்டகாசம்" என்று பெயர் பெற்றது. பிரணவப் பொருளைக் கூறியபடியால் தணிகை "பிரணவ அருத்த நகர் "என்னும் பெயரையும் பெற்றது. திருத்தணிகையில் ஒரு கணப்பொழுது தவம் முதலிய நல்வினைகளைச் செய்பவர்கள் பெறுதற்கரும் பயனை அடைவார்கள்.

 

அருள்உரு ஆகும் ஈசன் அயற்கு இது புகன்ற பின்னர்,

முருகவேள் முகத்தை நோக்கி முறுவல் செய்து,அருளை நல்கி,

"வருதியால் ஐய" என்று மலர்க்கை உய்த்து,அவனைப் பற்றித்

திருமணிக் குறங்கின் மீது சிறந்து வீற்றிருப்பச் செய்தான்.

 

காமரு குமரன் சென்னி கதும்என உயிர்த்துச் செக்கர்த்

தாமரை புரையும் கையால் தழுவியே,"அயனும் தேற்றா

ஓம்என உரைக்கும் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ?

போம் எனில்,அதனை இன்னே புகல்" என இறைவன் சொற்றான்.

 

"முற்றுஒருங்கு உணரும் ஆதி முதல்வ! கேள்,உலகமெல்லாம்

பெற்றிடும் அவட்கு நீமுன் பிறர் உணராத ஆற்றால்

சொற்றது ஓர்இனைய மூலத்தொல் பொருள் யாரும் கேட்ப

இற்றென இயம்பலாமோ,மறையினால் இசைப்பது அல்லால்".

 

என்றலும்,நகைத்து,"மைந்த எமக்குஅருள் மறையின் என்னா,

தன்திருச் செவியை நல்க,சண்முகன் குடிலை என்னும்

ஒன்றொரு பதத்தின் உண்மை உரைத்தனன்,உரைத்தல் கேளா

நன்றருள் புரிந்தான்" என்ப ஞான நாயகனாம் அண்ணல்.

 

எனவரும் கந்தபுராணப் பாடல்களைக் காண்க.

 

"முக்கண் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து" என வரும் அருணகிரிநாதர் வாக்கையும் காண்க. இதனால் முருகன் சுவாமிநாதன் எனப் பெற்றார்.

 

நாத போற்றி எனமுது தாதை கேட்க,அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே.     --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

 

நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்   --- கந்தர்அநுபூதி 

 

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா....                 --- (விறல்மாரன்) திருப்புகழ்.

 

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது.ஆதலால் ஐம்முகச் சிவனார் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால்அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு,வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

 

அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.

                                                                       --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

 

"சுசி மாணவ பாவம்" என்பது பாம்பன் சுவாமிகள் பாடியருளிய அட்டாட்ட விக்கிரக லீலைகளில் ஒன்று. மூவராலும் அறிய ஒண்ணாத ஆனந்த மூர்த்தியாகிய சிவபரம்பொருள்,மாணவ பாவத்தை உணர்த்தி,உலகத்தை உய்விக்கும் பருட்டும்தனக்குத்தானே மகனாகி,தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணர,முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது என்பதைப் பின்வரும் தணிகைப் புராணப் பாடல் இனிது விளக்கும்.

 

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்,

தனக்குத் தான் நிகரினான்,தழங்கி நின்றாடினான்.    --- தணிகைப் புராணம்.

 

மின் இடைசெம் துவர் வாய்கரும் கண்

     வெள் நகைபண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுதுஎங்கள் அப்பன்

     எம்பெருமான்இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன்மகன்தகப்பன்

     தமையன்எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

     பொன் திருச் சுண்ணம் இடித்தும்நாமே!

 

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகிஉபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

 

அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும்,முறையே சிவம்சத்திசதாசிவம்மகேசுவரம்சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால்சத்திக்குச் சிவன் மகன் என்றும்சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும்சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

 

திருக்கோவையாரிலும்,

 

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம்மகனாம்தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

 

என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

 

வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.             --- திருமந்திரம்.

 

கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு,எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்....         --- குமரகுருபரர்.

 

பூத்தவளே புவனம் பதினான்கையும்,பூத்தவண்ணம்

காத்தவளேபின் கரந்தவளேகறைக் கண்டனுக்கு

மூத்தவளேஎன்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.  --- அபிராமி அந்தாதி.


தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்,ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனிஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. --- அபிராமி அந்தாதி.

 

சிவம்சத்தி தன்னை ஈன்றும்,சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்துங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும்,பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே. --- சிவஞான சித்தியார்.

 

அடி உக முடியினும் வடிவுடன் எழும் மவுனத்தில் பற்று உறு நித்தச் சுத்தர்கள் தம்பிரானே--- 

 

உக முடிவு --- எல்லாம் அழிந்து ஒடுங்கிய நிலை.

 

அந்த நிலையிலும்இறைவன் திருவடியில் சாயுச்சிய நிலையை அடைந்துஅமைதி பெற்று இருப்பவர்கள் நித்தச் சுத்தர்கள் ஆவர். இவர்களை நித்திய சூரிகள் என்றும் சொல்லுவர்.

 

கருத்துரை

 

முருகா! உமது அடியார்களுடன் கூடி முத்திநெறியில் நிற்க அருள்வாய்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...