சினத்தைக் கத்துக் கொள்ள வேண்டும்.

 


சினம் உண்டாகாமல் காத்துக் கொள்ள வேண்டும்

-----

 

            "கோடிய மனத்தால்வாக்கினால்செயலால்கொடிய ஐம்புலன்களால் அடியேன் தேடிய பாவம் நரகமும் கொள்ளாஎன்பார் பட்டினத்து அடிகளார்மனம் கோடுவதால்அதனடிப்படையாக நல்ல வாக்கு உண்டாகாதுஇவ்விரண்டின் விளைவாக தீச்செயல்கள் விளையும்மனம் வாக்கு செயல் என்னும் மூன்றின் வழியே பாவங்கள் நிகழும்எனவேமனஅடக்கத்தைக் காத்துக் கொள்ளவேண்டும் என்றும், நாவடக்கத்தைக் காத்துக் கொள்ளவேண்டும் என்றும் அருளிய நாயனார்,  "சொல்லப்படுகின்ற அறங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தால்உயிருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் துணையாக வருவது ஒழுக்கமேஆதலால்ஒழுக்கத்தை எவ்விதத்திலும் குறைவுபடாமல் வருந்திப் பாதுகாக்கவேண்டும்என்றதோடுஉள்ளத்தைக் கள்ளத்தனத்தில் செல்லவிடாமல் காத்து ஒழுகவேண்டும் என்கின்றார்.

 

     அடுத்ததாகக் காத்துக்கொள்ள வேண்டியது பற்றிக் கூறவந்த திருவள்ளுவ நாயனார்சினத்தைக் கூறுகின்றார். உள்ளத்தில் கள்ளத்தனம் வைத்துஉண்மையை மறைத்துப் பொய் பேசுவது பற்றி உண்டாகும் கோபத்தை விலக்கல் வேண்டும் என்றார். கோபம் கொள்ளுதற்குக் காரணம் ஒருவனிடத்தில் உண்டான போதும்அதைக் காட்டாமல் இருத்தல் வேண்டும். 

 

     "வெகுளாமை" என்னும் அதிகராத்துள் வரும் முதல் திருக்குறளில், "தனது கோபம் பலிக்கும் இடத்தில்அது எழாதவாறு காப்பவனேஅருளினால் காப்பவன் ஆவான். அது பலியாத இடத்தில் காத்து என்னகாக்காவிட்டால் என்ன?" என்கின்றார் நாயனார்.

 

     வலியவரிடத்தில் வெகுளியைக் காத்துத்தான் ஆகவேண்டும். அங்கு வெகுளியைச் செலுத்துவதால் பயன் இல்லை. பயத்தின் மிகுதியால் தடுத்ததே அல்லாமல்,  அது அருளாகாது. மெலியவரிடத்தில் வெகுளி செல்லுமாயினும்,அங்குச் செல்லாமல் காப்பதே அருள் ஆகும் என்பதைக் காட்ட

     

செல்இடத்துக் காப்பான் சினம் காப்பான்,அல்இடத்துக்

காக்கில் என்காவாக்கால் என்.

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார்.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்....

 

பெருக்குக நாட்டாரை நன்றின்பால் உய்த்து,

தருக்குக ஒட்டாரைக் காலம் அறிந்தாங்கு,

அருக்குக யார்மாட்டும் உண்டி,சுருக்குக

செல்லா இடத்துச் சினம்.          --- நான்மணிக்கடிகை.

 

இதன் பதவுரை ---

 

     நட்டாரை நன்றின்பால் உய்த்துப் பெருக்குக --- ஒருவன் தனக்கு நண்பர் ஆயினாரை நல்வழியில் செலுத்திநல் வாழ்வில் அவரை உயர்த்துகஒட்டாரைக் காலம் அறிந்து தருக்குக --- பகைவர்களை உரிய காலம் தெரிந்துவெல்கயார் மாட்டும் உண்டி அருக்குக --- யாவர் வீட்டிலும் சென்று உணவு உண்ணுதலைச் சுருக்கிக் கொள்கசெல்லா இடத்து சினம் சுருக்குக --- செல்லும் தகுதியில்லாத இடத்தில்சினத்தைத் தணித்துக் கொள்க.

 

உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்குசினம் காத்துக்

கொள்ளும் குணமே குணம் என்க,- வெள்ளம்

தடுத்தல் அரிதோ?தடங்கரைதான் பேர்த்து

விடுத்தல் அரிதோ?விளம்பு.            --- நன்னெறி.

 

இதன் பொருள் ---

 

     மனத்தைத் தன்வயப்படுத்திக் கொண்டு ஓங்கி வளர்கின்ற சினத்தை வெளிவராமல் அடக்கிக் கொள்கிற குணமே மேலான குணம் என்று அறிவாயாக. பெருகி வருகின்ற நீர்ப்பெருக்கைத் தடுத்தல் அரிய செயலோமுன் கட்டப்பட்டிருந்த கரையை உடைத்து அதனுள் அடங்கிச் சென்ற வெள்ளத்தை வெளியில் செல்ல விடுத்தல் அரிய செயலோநீயே சொல்வாயாக.

 

உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளிச்

செயிரும் சினமும் கடிந்து- பயிரிடைப்

புல்களைந்து நெல்பயன் கொள்ளும் ஒருவன் போல்

நற்பயன் கொண்டு இருக்கற் பாற்று. --- அறநெறிச்சாரம்.

 

இதன் பதவுரை ---

 

     உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளி --- உயிரும் உடம்பும் வேறு வேறாகப் பிரிவது தவறாது என்பதை அறிந்துபயிரிடை புல் களைந்து --- பயிர்களின் இடையிடையே தோன்றிய களைகளைப் பிடுங்கி எறிந்துவிட்டுநெல் பயன்கொள்ளும் ஒருவன்போல் --- பயிர்களைக் காத்து நெல்லாகிய பயனை அடையும் உழவன்போலசெயிரும் சினமுங் கடிந்து --- மயக்கம் வெகுளிகளை நீக்கிநற்பயன் கொண்டு இருக்கற்பாற்று --- இன்பத்துக்கு ஏதுவாகிய நல்வினையை மேற்கொண்டு ஒழுகுதல் நல்லது.

 

நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி

கெடுங்காலம் இன்றிப் பரக்கும்,- அடுங்காலை

நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே

சீர்கொண்ட சான்றோர் சினம்.          --- நாலடியார்.

 

இதன் பதவுரை ---

 

     நெடுங் காலம் ஓடினும் --- நீண்ட காலம் சென்றாலும்நீசர் வெகுளி --- கீழ்மக்கள் கோபம்கெடுங்காலம் இன்றிப் பரக்கும் --- தணியுங்காலம் இல்லாமலே பெருகிக்கொண்டு போகும் ஆனால்அடுங் காலை நீர் கொண்ட வெப்பம்போல் --- காய்ச்சுங் காலத்தில் தண்ணீர் அடைந்த வெப்பத்தைப் போலதானே தணியும் சீர் கொண்ட சான்றோர் சினம் --- பெருமை மிக்க சான்றோரது கோபம் தானே தணிந்துவிடும்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "ஒருவன் தன்னைத் துன்பம் வந்து நேராமைக் காக்க எண்ணுவானாயின்தன் மனதில் சினம் வராமல் காத்துக் கொள்ளவேண்டும். காக்காவிட்டால்அந்தச் சினமானது தன்னையே அழித்துவிடும்"

என்கின்றார் நாயனார்.

 

தன்னைத் தான் காக்கின் சினம் காக்க,காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்.         --- திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாசிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய"சிவசிவ வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

தாவு சினத்தால் தலைஇழந்தான் தக்கன்உமா

தேவிமகள் ஆயும்,சிவசிவா! - ஆவல்மிகும்

தன்னைத்தான் காக்கில் சினம்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்.    

 

     சிவபெருமானைப் புறக்கணித்துத் தக்கன் ஒரு வேள்வி தொடங்கினான். சிவபெருமான் மீது அவன் கொண்ட சினமே அதற்குக் காரணம். அதற்கு எல்லாத் தேவர்களும் வந்திருந்தார்கள். சிவபெருமான் சினம் கொண்டார்அவர் நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரக் கடவுள் தோன்றிதக்கன் வேள்விக்குச் சென்றார். அங்கிருந்த திருமாலை மார்பில் அடித்தார்அவர் கீழே விழுந்தார். மற்றத் தேவர்கள் எல்லாம் ஓடினார்கள். சந்திரனைக் காலால் தேய்த்தார். சூரியன் பற்களைத் தகர்த்தார். பகன் என்னும் ஆதித்தன் கண்ணைப் பறித்தார்அக்கினியின் கையை வெட்டினார்நாமகளின் மூக்கை அரிந்தார்பிரமன் விழுந்தான்தக்கன்எச்சன்முதலியவர்கள் தலையை வெட்டினார்இந்திரன் குயில் உருவம் கொண்டு ஓடினான்மற்றத் தேவரெல்லாம் பலவாறு புண்பட்டு ஓடினர். பின்னர்தக்கன் இழந்த தலைக்காக ஆட்டுத் தலையை வைத்து அவனை உயிர்ப்பித்து அருளினார்.   

 

சந்திரனைத் தேய்த்து அருளித் தக்கன்தன் வேள்வியினில்

இந்திரனைத் தோள்நெரித்திட்டுச்சன் தலை அரிந்து,

அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்து,

சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த,

செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்

மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய்.

 

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்

ஓடிய வாபாடி உந்தீபற.

உருத்திர நாதனுக்கு உந்தீபற.

 

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய

கையைத் தறித்தான் என்று உந்தீபற

கலங்கிற்று வேள்வி என்று உந்தீபற.

 

பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப்

பார்ப்பது என்னேஏடி உந்தீபற

பணைமுலை பாகனுக்கு உந்தீபற.

 

புரந்தரனார் ஒரு பூங்குயில் ஆகி

மரந்தனில் ஏறினார் உந்தீபற

வானவர் கோன்என்றே உந்தீபற.

 

வெஞ்சின வேள்வி வியாத்திரனார் தலை

துஞ்சின வாபாடி உந்தீபற

தொடர்ந்த பிறப்புஅற உந்தீபற.

 

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்

கூட்டிய வாபாடி உந்தீபற

கொங்கை குலுங்க நின்று உந்தீபற.          

 

எனவரும் திருவாசகப் பாடல்களை ஓதி உணர்க.

 

மூங்கிலில் பிறந்த முழங்குதீ மூங்கில்

     முதல் அற முருக்குமா போல்

தாங்க அரும் சினத்தீ தன்னுளே பிறந்து

     தன்உறு கிளை எலாம் சாய்க்கும்,

ஆங்கு அதன் வெம்மை அறிந்தவர் கமையால்

     அதனை உள்ளடக்கவும் அடங்காது

ஓங்கிய கோபத் தீயினை ஒக்கும்

     உட்பகை உலகில் வேறு உண்டோ?     --- விவேக சிந்தாமணி.

 

இதன் பொருள் ---

 

     மலைகளில் அடர்ந்து இருக்கின்ற மூங்கில் காட்டில் மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்வதாலே நெருப்பு உண்டாகும். அந்த நெருப்பு மூங்கில்களை அழிக்கும். அத்தோடு அருகில் உள்ள கிளை மூங்கில்களையும் அழிக்கும். அதுபோல,ஒருவனிடத்தில் வந்த கோபமானது பெரியோர் தடுத்தாலும் அடங்காமல் அவனை அழிப்பது அல்லாமல் அவனுடைய சுற்றத்தையும் அழித்துவிடும். எனவேகொடுமையான கோபத்தை விட்டுவிட வேண்டும். அதைவிட உள் பகை வேறு இல்லை.

 

கோபத்தால் கௌசிகன் தவத்தைக் கொட்டினான்,

கோபத்தால் நகுடனும் கோலம் மாற்றினான்,

கோபத்தால் இந்திரன் குலிசம் போக்கினான்,

கோபத்தால் இறந்தவர் கோடி கோடியே. --- விவேக சிந்தாமணி.

 

இதன் பொருள் ---

 

     விசுவாமித்திரன் தனது கோப மிகுதியினாலே வசிட்டரோடு சபதம் புரிந்து தனது தவத்தை எல்லாம் இழந்தான். நகுடன் என்னும் அரசன் நூறு அசுவமேத யாகங்களைப் புரிந்து இந்திர பதவியை அடைந்தும்முனிவர்களிடம் தனது கோபத்தைக் காட்டியதால்அகத்திய முனிவரின் சாபத்தால்அப் பதவியை இழந்து மீண்டும் பாம்பாக ஆனான். இந்திரன் ஒரு காலத்தில் உக்கிரபாண்டியனோடு போர் புரிந்து தன்னுடைய வச்சிராயுதத்தைப் போக்கினான். கோபத்தால் எண்ணிறந்த பேர் உயிர் துறந்தனர்.

 

     கோபம் வந்தாலும் அதனை வெளியில் கொட்டிவிடுவது நல்லது. கோபத்தின் காரணத்தை உணர்ந்தவர் மன்னிப்புக் கேட்டுத் திருந்தவும் கூடும். அல்லது கோபத்தைக் கொட்டியவர் தனது தவறை உணர்ந்து திருந்தவும் கூடும்.

 

     ஆனால்உள்ளுக்குள் கோபத்தை வைத்துப் புகைந்துகொண்டு இருப்பது ஆபத்து. அது பழிதீர்த்தலில் கொண்டுபோய் முடியும். பழி தீர்த்தல் என்பது இருவகையிலும் தீமையே பயக்ககும்.

 

     "அதிக அகந்தைஅதிகப் பேச்சுபெரிய குற்றம்அதிக கோபம்தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் ஆசை,நம்பிக்கைத் துரோகம் இழைப்பது ஆகிய ஆறும் மனிதனின் ஆயுளை வெட்டும் கூரிய கத்திகள்".     --- விதுர நீதி.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...