போலி வேட நிலை

 


போலிவேட நிலை

-----

 

"ஏட்டுப் படிப்பை இதம் தெரிந்து கல்லாமல்,

கேட்டுப் படிப்பே கெழீஇ நின்று,-- நீட்டிமேல்

எல்லாம் தெரிந்ததா எண்ணிச் செருக்குவார்

புல்லறிவோர் எங்கும் புகுந்து".

 

"தருமதீபிகை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல் இது.

 

     நல்ல நூல்களை நன்கு உணர்ந்து படிக்காமல், பொல்லாத நெறியில் பொருந்தி இருந்து, எல்லாம் தெரிந்ததாகப் புல்லறிவாளர் செருக்குக் கொண்டு திரிவார் என்று போலிக் கல்வியால் உண்டாகும் கேடு குறித்துச் சொல்லப்பட்டது.

 

     "இதம் தெரிந்து கற்றல்" என்பது, அறிவு நலம் மிக்க இனிய நூல்களைத் தேர்ந்து, நல்ல குருவிடம் கற்றுத் தெளிதல். "கசடு அறக் கற்க" என்றார் திருவள்ளுவ நாயனார். உள்ளத்தில் உள்ள கசடு நீங்குவதற்காகவே அறிவு நூல்களைத் தேர்ந்து படித்தல் வேண்டும்.

 

     "கேட்டுப் படிப்பு" என்பது, தாமாக முயன்று நல்ல நூல்களைத் தேடி, கருத்து ஊன்றிப் படிக்காமல், கற்றவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்பவர்கள் சொல்வதை வியந்து அவர் சொன்னபடியே கேட்டு உருப்போட்டுக் கொள்ளுதல் ஆகும். உருப் போடுதல் ஒருவனை உருப்பட விடாது. கேட்டுப் படிப்பாய் நின்று கெடுநிலையில் தள்ளும். அப்படிப்பட்டவர் உள்ளத்தில், தீமைகளுக்கு அஞ்சுவதாகிய அச்சமும், நன்மைகளைச் செய்யாமையால் உண்டாகும் கேடுகளுக்கு அஞ்சுதல் ஆகிய  நாணமும் இல்லாமல் போகும். "அச்சமும் நாணமும் அறிவு இல்லோர்க்கு இல்லை" என்றது "நறுந்தொகை". எனவே, இவர்கள் அறிவாளிகளை மதிக்காமல், அவர்களுக்கு எதிரில் நின்றும் கூட காலித் தனமாய்,தாம் கற்றதை உளறுவார்கள். காரணம், தாம் கற்றுள்ளோம் என்னும் செருக்கு.

 

     உள்ளத்தில் கொண்டுள்ள மடத்தனத்தை நீக்கிக் கொள்ள முயலாது, தாம் கற்றவற்றை மற்றவர்களிடையில் பிதற்றிக் கொண்டு, வேடத்தை மாத்திரம் புனைந்து, உயர்ந்த மடங்களில் புகுந்துகொண்டு, அல்லது உயர்வாக மதிக்கப்பட வேண்டிய மடங்களை உருவாக்கிக் கொண்டு, தமது தவக்கோலத்தில் மறைந்து வாழ்ந்து கொண்டு, இழிந்த செயல்களில் களிப்புடன் ஈடுபடுவார்கள். "மடம்" என்னும் அறியாமை நீங்கி, அறிவுப் பொருளாக உள்ள இறைவனைத் தெளிந்து அறிந்து, அவனுடைய திருத்தாளைப் பற்றுதற்குத் தானும் நல்வழியில் நடந்து, பிறரையும் நல்வழிப்படுத்தவே மடங்கள் உண்டாயின. "மடம் புகு நாய்போல் மயங்குகின்றாரே" என்று வேடதாரிகளைச் சாடுகின்றார் திருமூல நாயனார். "தவம் மறைந்து அல்லவை செய்தல், வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்து அற்று" என்றார் திருவள்ளுவ நாயனார். தவக்கோலத்தில் இருந்துகொண்டு, தீய செயல்களை ஒருவன் செய்வது என்பது, வேட்டுவன் ஒருவன் புதர் அருகில் மறைந்து இருந்துகொண்டு, பறவைகளைப் பிடித்து புட்டிலில் அடைத்தது போன்ற செயல் ஆகும்.

 

     தனக்கு வந்து சேர்ந்த தீங்கைப் பொறுத்துக் கொள்ளுதலும்பிற உயிர்களின் நலம் கருதிஅவற்றிற்குத் தீங்கு செய்யாமையுமேதவத்திற்கு வடிவம் என்பது திருவள்ளுவ நாயனார் காட்டியது. துறவு மேற்கொள்ளும் சிலர் புற அடையாளங்களாக சிலவற்றை அணிந்துதுறவுக்கோலம் அல்லது தவவேடம் பூண்பர். வேடம் பூண்டார் எல்லோருமே துறவுபூண்டவர் அல்லர். அவருள் பல தீயவரும்வஞ்ச மனத்தினரும் உள்ளனர். தவ வேடத்திற்கு ஆகாத செயல்களை அவர்கள் மேற்கொள்ளுவர். மற்றவர் தம் மீது கொண்ட நம்பிக்கையைப் பயன்படுத்திக்கொண்டு,தவம் என்ற போர்வையில் தங்களின் உண்மை உருவை மறைத்துக் கொண்டுதமது எண்ணம் போல் வாழ்க்கையைவாழ்பவர்கள் இவர்கள். 

 

     வேடன் பறவைகளைப் போன்று போலியான ஒலிகளை எழுப்பிப் பறவைகளை ஏமாற்றிப் பிடிக்கின்றான். தவ வேடத்தில் மறைந்து கொண்டு போலித் துறவிகள் கவர்ச்சியான பேச்சாலும் தம் போலிச் செயல்களாலும் மக்களை ஏமாற்றி பொய்யான ஒழுக்கத்தை மேற்கொள்கின்றனர். "புதல்" என்பது புதர் என்றும் அறியப்படும். இது அடி அடர்ந்த செடிகள் நிறைந்துள்ளதைக் குறிக்கும். விலங்குகள் பதுங்கும் இடமாகப் புதர் இருக்கும். புதரில் மறைந்து இருந்து வேடர்கள் பறவைகளைத் தாக்குவர். பறவைகளின் மேல் அம்பு எய்தல்பொறியில் வைத்துப் பிடித்தல்கண்ணி வைத்துப் பிடித்தல்வலைவீசிப் பிடித்தல் என வேட்டுவன்தன்னைப் பறவைகள் காணாதவாறு ஒரு புதரில் மறைந்திருந்து பறவைகளைப் பிடிக்கும் செயல்கள் "புள்சிமிழ்க்கும்" தொழிலுக்குக் கூறப்படும்.

 

     "பிரதிபோதசந்திரோதயம்" என்னும் பழம்பெரும் நூலில், போலிவேடம் குறித்துப் பின்வருமாறு கூறப்பட்டு உள்ளது. இந்நூல் தமிழில், "மெய்ஞ்ஞான விளக்கம்" எனப்படும். இக் காலத்தில் காணக் கிடைப்பது கூட அரிது.

 

"இரவு எலாம் காமக் கணிகையர் முயக்கில்

     இன்பம் உற்று,இயல் பகல் எல்லாம், 

குரவராய் அணிவெண்ணீறு உருத்திராட்சம்

     கோலமார்ச்சாலம் ஆம் குழைவும்,

பரவுபாவனையும் தேவதா அர்ச்சனை தாம்

     பண்ணல் போல் உருப்பல பரப்பி,

விரவு மணி தொட்டு ஆட்டலும் பார்க்கின்,

     மிகக் கொடிது இவர் வஞ்ச வேடம்".      ---பிரதிபோதசந்திரோதயம்

 

     கோல மார்ச்சாலம் என்றது அழகிய பூனையை. போலிவேடம் பூண்டு ஒழுகுவோரை, "உருத்திராட்சப் பூனை" என்னும் வழக்கம் உண்டு. இதனை, "தண்டலையார் சதகம்" என்னும் நூல் பின்வருமாறு கூறும்.

 

"காதிலே திருவேடம்! கையிலே

   செபமாலை! கழுத்தின் மார்பின்

மீதிலே தாழ்வடங்கள்! மனத்திலே

   கரவடம்ஆம் வேடம் ஆமோ?

வாதிலே அயன்தேடும் தண்டலைநீள்

   நெறியாரே! மனிதர் காணும்

போதிலே மௌனம்! இராப் போதிலே

   உருத்திராக்கப் பூனை தானே"!

 

இதன் பொருள் ---

 

     வாதிலே அயன் தேடும்  தண்டலைநீள் நெறியாரே ---திருமாலுக்கும் தனக்கும் நேர்ந்த போட்டியிலே நான்முகன் தேடிய தண்டலைநீள்நெறி இறைவரே!காதிலே திருவேடம் --- காதில் உருத்திராக்கம் அணிந்ததிருக்கோலமும்கையிலே செபமாலை --- கையில் செபமாலையும்கழுத்தில் மார்பின் மீதில் தாழ்வடங்கள் --- கழுத்திலும் மார்பிலும் உருத்திராக்கத் தாழ்வடங்களும் (உடையவராய்)மனத்திலே கரவடம் ஆம் வேடம் ஆமோ ---உள்ளத்திலே வஞ்சகம் ஆகிய தோற்றம் தகுமோ? (அவ்வாறு இருத்தல் என்பது)மனிதர்காணும் போதிலே மௌனம்இராப் போதிலே உருத்திராக்கப் பூனைதான் ---மக்கள் பகலில் பார்க்கும்போது கண்மூடிப் பேசாதிருந்து,  இரவிலே திருடும் உருத்திராக்கப் பூனையின் செயல் போன்றதாகும்.

 

"திருத்தகு மூவர் புகல் திருப்பாட்டுத்

     தெள் அமுதத்தையும் தேக்காது,

உருக் கெடுத்து அகற்று நல் திருமூலர்

     ஓதும் மந்திரத்தையும் உணராது,

அருள்கெடுத்து, அறம்தாம் காட்டுவார் தமைப் போன்று

     அரும்பொருள் கவர்ந்து, அவரவர்க்குச்

குருக் கொடுத்து, ஒரு சாண் கும்பி தூர்க்கின்ற

     கொடியரால் இந்நிறை குழுவோர்".    ---பிரதிபோதசந்திரோதயம்

 

     மூவர் என்றது தேவார மூவர் ஆகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்அப்பர் என்னும் திருநாவுக்கரசு நாயனார்சந்தரமூர்த்தி சுவாமிகள் என்னும் நம்பியாரூரர் என்னும் மூவர் முதலிகளை. தேவாரப் பாடல்களை அன்புடன் பொருளுணர்ந்து ஓதி வரல் வேண்டும். நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார் அருளிய திருமந்திரத்தையும் பொருள் உணர்ந்து ஓதித் தெளிதல் வேண்டும். அவற்றை எல்லாம் உணராதுஅறவழியில் ஒழுகுபவர் போலத் தம்மைக் காட்டிக் கொண்டுபெரும்பொருளைப் பிறரிடம் இருந்து கவர்ந்து கொண்டுகுரு என்று சொல்லிக் கொண்டுதனது வயிற்றை வளர்க்கின்ற கொடியவர்களைக் குறித்துச் சொன்னது இது. "பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக" என்று திருமூல நாயனார் இவர்களை அடையாளம் காட்டினார் என்று அறிக.

 

"நிறைந்திடக் குடத்தின் மலம்உறபுறத்தில்

     நீர்கொடு கழுவினால் நிகர்ப்ப,

அறம் துடைத்து அன்பும் துடைத்துதம் உள்ளத்தில்

     அறா மலம் இருக்கதண் புனலால்

புறம் துடைத்துஅங்கம் முழுதும் வெண்ணீற்றைப்

     பூசணிக்காய் எனப் பொதிந்து,

பறந்து பற்பலர்கைப் பொருள்கொளச் சைவப்

     பழங்கள் போன்றவர் இவர் பலரால்".       ---பிரதிபோதசந்திரோதயம்

 

குடத்தின் உள்ளே அழுக்கு நிறைந்து இருக்கஅது நிறைந்து வழிந்ததால் குடத்தின் வெளியிலே உண்டான அழுக்க்கை மட்டும் நீரால கழுவுவது போலஉள்ளத்தில் அறம்அன்பு ஆகியவகளைத் துடைத்துதீராத ஆணவமலம் நிறைந்து இருக்கதனது உடல் அழுக்கை மட்டும் நீரால் குளித்துத் துடைத்துஉடல் முழுதும் திருவெண்ணீற்றைபூசணிக்காயைப் போலப் பூசிபிறர் தரும் பொருளைக் கைக்கொண்டுசைவப் பழங்கள் போன்று திரிபவர் பலர் உண்டு. பூசணிக்காயின் நிறம் பச்சை. ஆனால்வெளியில் திருநீறு பூசப்பட்டது போல் வெண்மை படர்ந்து இருக்கும்.

 

     வெளிப்படையாகத் திருட்டுத் தொழிலைச் செய்து தண்டத்திற்கு உள்ளாவோர் "நல்ல திருடர்கள்". "பொல்லாத திருடர்கள்" யார் என்பதைத் "தண்டலையார் சதகம்" காட்டுமாறு காண்போம்...

 

"செழுங்கள்ளி நிறைசோலைத் தண்டலைநீள்

     நெறியாரே! திருடிக் கொண்டே

எழுங்கள்ளர் நல்லகள்ளர்! பொல்லாத

     கள்ளர்இனி யாரோ என்றால்,

கொழுங்கள்ளர் தம்முடன்கும் பிடுங்கள்ளர்

     திருநீறு குழைக்குங் கள்ளர்

அழுங்கள்ளர் தொழுங்கள்ளர் ஆசாரக்

     கள்ளர்இவர் ஐவர் தாமே".

 

இதன் பொருள் ---

 

     செழுங்கள்ளி நிறை சோலைத் தண்டலை நிள்நெறியாரே- வளம் பொருந்திய கள்ளிகள் நிறைந்த சோலைகளையுடைய தண்டலை நீள்நெறி இறைவரே!திருடிக் கொண்டு எழும் கள்ளர் நல்ல கள்ளர் --- திருடிக்கொண்டு செல்லும் கள்ளர் எல்லாரும் நல்ல கள்ளர்களேஇனி பொல்லாத கள்ளர் யாரோ என்றால் --- எனின்தீய கள்ளர் யார் எனக் கேட்டால்கொழுங் கள்ளர் தம்முடன் கும்பிடுங் கள்ளர் --- செல்வம் படைத்தகள்ளருடன் கும்பிடும் கள்ளரும்திருநீறு குழைக்கும் கள்ளர் --- திருநீறு குழைத்திடுங் கள்ளரும்அழும் கள்ளர் --- அழுகின்ற கள்ளரும்தொழும் கள்ளர் --- தொழுகின்ற கள்ளரும் (என)ஆசாரக் கள்ளர் --- ஒழுக்கத்திலே மறைந்து பிறரை ஏமாற்றும் கள்ளராகியஇவர் ஐவர் தாமே --- இந்த ஐவருமே ஆவர்.

 

     ஆசாரக் கள்ளர்ஒழுக்கம் உடையார்போல நடித்து மக்களை நம்பச்செய்து ஏமாற்றுவதால் இவர்களைக் கண்டு பிடித்தல் அரிது. இவர்களால் ஒழுக்கமுடையோரும் மக்களால் நம்பப்படார். ஆகையால் வெளிப்படையாகத் திருடர் எனப் பெயர் பெற்றோர் நல்லவராகவும் இவர் தீயராகவும் கொள்ளப்பட்டனர். 

 

     இந்தப் பழம்பாடல்களுக்குப் புதுப்பாடங்களாய் மடங்களிலும்மன்றங்களிலும் திடமுற விளங்குவோர் அன்று இருந்தனர் என்பதால் அந்தப் பாடல்கள் எழுந்தன. இன்றும் உள்ளனர் என்பதைக் காணலாம். ஆசைகளை நீத்துவிட்டோம் என்று சந்நியாசம் பூண்டுகொண்டவர்க்குஉல்லாசமானவசதியான வாழ்க்கை தேவையில்லை. உலகவாழ்வில் அழுந்திஅறியாமையில் உள்ள மக்களுக்குமதிநலம் விளங்குமாறு செய்வதற்கேஅறநிலயங்களாகஞானசீலர்களால் மடங்களும் மன்றங்களும் நிறுவப்பட்டன. இல்லறத்தைத் துறந்துபிறந்த பயனை விரைந்து அடைவதற்கு என்று தரும மடத்தில் புகுந்தும்கரும மடம் கழியாமல்வாழ்பவர்கள் எமனிடம் என்ன பாடுபடுவார்கள்மடங்கள் செய்கின்ற அல்லது செய்யத் தவறிய காரியங்களை மக்களின் நன்மை கருதி ஆற்றிவர வேண்டும் எனக் கருதியே மன்றங்களும்சபைகளும்சங்கங்களும் ஆங்காங்கே நன்மக்களால் உருவாக்கப்பட்டன. அவைகளும் ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களால் பெரிதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. கேட்டுப் படிப்பும் ஏட்டுப் படிப்புமே இவைகளில் மிகுந்து விளங்குவதும் காணலாம்.

 

     இதனை,

 

"கொண்டமடம் நீங்காமல்கோலமடம் மேற்கொண்டு

கண்டபடி செய்து களிப்பரோ? --- சண்டன்

அணைந்தால் உறுவதனை ஆராய்ந்து சற்றே

உரந்தால் உள்ளத்துள் உற"

 

என்கின்றது, "தருமதீபிகை" என்னும் நூல். சண்டன் என்றது எமனை. எமன் வந்தால் என்ன ஆகும்அவன் புறத்தோற்றத்தைக் கண்டு நாம் மயங்குவது போல மயங்கமாட்டானே!!!!!

 

     வெளிப்பகட்டு கூடாது. தனக்கு நல்லவனே பிறர்க்கும் நல்லவன் ஆவான். சீலம் இல்லாமல் கோலம் புனைதல் கூடாது. கோலம் புனைவதே சீலமாக வாழத்தான். உலகம் பழித்ததை ஒழித்து விடுவதற்கே மழித்தலும்நீட்டலும். இதனை உணர்ந்து படித்துநெறியில் நிற்பவன் இழிந்து போகமாட்டான். பொருள் உணர்ந்து தான் ஓதித் தெளிந்ததைமக்களுக்குச் சொல்லி நல்வழிப்படுத்துவான்.

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...