நன்றி மறவாமை வேண்டும்

 


நன்றி மறவாமை

---

 

      பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசத்தைக் கழித்துகரந்துறை வாசத்திற்கு (அஞ்ஞாத வாசம்) விராட தேசமே தகுந்தது என எண்ணிபாண்டவர்கள் விராடனுடைய நாட்டின் எல்லையில்மயான பூமியில் உள்ள காளி கோயிலின் எதிரில் உள்ள வன்னி மரத்தில் தமது படைக்கலங்களை ஒளித்து வைத்துதமது உருவை ஒருவரும் காணாவண்ணம் மாற்றிக் கொண்டுவிராட நாட்டில் புகுகின்றனர்.

 

     தருமன், "கங்கன்" என்னும் துறவி ஆகின்றான். அவனை விராட மன்னன் தனது துணையாக ஏற்றுக் கொள்கின்றான். வீரத்தில் வல்லவனான பீமன், "பலாயனன்" என்னும் பெயருடன் தலைமைச் சமையல்காரனாக விராடன் அரண்மனையில் புகுகின்றான். ஊர்வசி தனக்கு முன்னரே அளித்திருந்த சாபத்தின் பலனாகபேடி உருவத்தைத் தாங்கிவில்லில் மிகுந்தவனாகிய அருச்சுனன், "பிருகன்னளை" என்னும் பெயரோடு,விராட மன்னனின் மகளாகிய உத்தரைக்குப் பாங்கியாகவும்நடன ஆசிரியராகவும் ஆகின்றான். நகுலன், "தாமக்கிரந்தி" என்னும் பெரயோடுவிராட மன்னனின் குதிரைப் படைகளைக் காக்கும் தொழிலை மேற்கொள்கின்றான். கண்ணனே வியக்கும்படியாக    ஞானசாத்திரங்களில் வல்லவனாகிய சகாதேவன், "தந்திரிபாலன்" என்னும் பெயர் தாங்கிவிராட மன்னனின் ஆநிரை ( ஆ - பசு. நிரை - கூட்டம்) காக்கும் தொழிலை மேற்கொள்கின்றான்.பாஞ்சாலி, "விரதசாரிணி" என்னும் பெயரோடு,விராட மன்னன் தேவிக்கு வண்ணமகளாகப் பணியில் அமர்கின்றாள். இத்தனை உபகாரமும் விராட மன்னனின் கருணையினால் நடந்தது. 

 

     தேவ மைந்தர்களான பாண்டவர்களும்,  அயோனிஜையாக வேள்வியில் அவதரித்த பாஞ்சாலியும் வாழ்ந்திருந்த காலத்தில் விராட நாடு எல்லா வளங்களும் நிறைந்ததாக விளங்கியது.

 

     விராட நாட்டுக்கு வந்த வாசவன் என்னும் மற்போர் வீரனை வெல்லுதற்கு உரியவன்தலைமைச் சமையல்காரனான பலாயனனே என்று கங்கன் சொல்லவிராட மன்னனின் ஆணைக்கு இணங்கபலாயனனால் வாசவன் தோற்கடிக்கப் பட்டான்.

 

     கீசகன் தனது தமக்கையும்விராட மன்னனின் தேவியும் ஆன சுதேட்டிணையைக் காண வந்தபோதுஅவளுடன் இருந்த விரதசாரிணியைக் கண்டு அவளைக் காமுற்றான். பின்னர்

அவனைபலாயனன் கொன்று வீழ்த்தினான். அது கண்டு வெகுண்டு   எழுந்த உபகீசகர்களையும் பலாயனன் கொன்று அழித்தான்.

 

     துரியோதனன் தனது ஒற்றர்களை நாலாபக்கமும் ஏவிபாண்டவர்கள் வாழும் இடத்தை வெளிப்படுத்த முயன்று கொண்டு இருந்தான். ஒற்றர்களில் ஒருவன் விராடனது நாட்டின் வளமிக்க வாழ்வையும்கீசகன் ஒரு வண்ணமகள் காரணத்தால் மடிந்ததையும் துரியோதனனுக்கு அறிவிக்கின்றான்..

 

      துரியோதனன் ஆணைக்கு இணங்கிவிராட மன்னனது ஆநிரையைக் (பசுக் கூட்டத்தைக்) கவரதிரிகர்த்தன் என்பவன் படை எடுத்து வருகின்றான். திரிகர்த்தனை வென்றுஅவனால் சிறைபிடிக்கப்பட்ட விராட மன்னனை பலாயனன் மீட்கின்றான். தமக்கிரந்தி பகைவர்களது குதிரைகளைக் கவரதந்திரிபாலன் ஆநிரையை மீட்டு வருகின்றான்.

 

       இதை அறிந்த துரியோதனன் பெரும் படைகளுடன் விராட நாட்டின் மீது போர்த் தொடுக்கின்றான். அவனை எதிர்கொள்ள,  விராட மன்னின் மகன் உத்தரன் தக்க சாரதியைத் தேடுகின்றான். விரதசாரிணி சொல்லபிருகன்னளை சாரதி ஆகின்றான். போரில் தோற்று ஒடிய உத்தரனைத் தேரினை ஓட்டும்படி பணித்துபிருகன்னளை போர் புரிகின்றான். 

 

       போர் முகத்தில் தனக்கு எதிராக வந்த பேடியைக் கண்டு துரோணர் ஐயுறுகின்றார். நான்கு நாழிகையில்பிருகன்னளை ஆக இருந்த அருச்சுனன்ஊர்வசியின் சாபம் தீர்ந்தபடியால்தனது பழைய உருவைப் பெறுகின்றான். போரில் அனைவரையும் வென்றுஉத்தரனோடு விராட நாடு திரும்புகின்றான். விசயன் மீண்டு வந்துவன்னிமரப் பொந்தில் முன்பு போல ஆயுதங்களை வைத்துபேடி வடிவம் கொண்டுஉத்தரனுடன் விராடனது தலைநகர்க்கு மீளுகின்றான்.

 

       தன் மகனது வெற்றி அது என்று எண்ணிய விராட மன்னன்அவனை வரவேற்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்யப் பணித்துஅவன் நாடு திரும்பும் வரையில்கங்கனோடு பகடை ஆடுவதில் ஈடுபடுகின்றான். தன் மகனது வெற்றியைப் பேசிய விராட மன்னனுக்கு, "அது பேடியின் வெற்றி" என்கின்றான். மனம் வெகுண்ட விராட மன்னன் தனது கையில் இருந்த பகடைக் காயைகங்கன் மேல் வீசஅது கங்கனது நெற்றியில் பட்டு குருதி வழியவிரதசாரிணி ஓடிவந்துகுருதியைத் தனது ஆடையால் மாற்றுகின்றாள். கங்கனது குருதி நிலத்தில் விழுந்தால்விராட நாட்டுக்குக் கேடு என்று சொல்லுகின்றாள் விரதசாரிணி. விராடன் தனது செயலுக்கு வருந்துகின்றான். அரண்மனை புகுந்த உத்தரன் கங்கனை வணங்கிநெற்றியில் இருந்த வடுவைக் கண்டுஅது தனது

தந்தையால் நிகழ்ந்தமை அறிந்துபொறுக்குமாறு வேண்டுகின்றான். விராட தேசத்தில் உருமாறி இருப்பவர்கள் பஞ்சபாண்டவர்களும் பாஞ்சாலியுமே என உத்தரன் அறிவிக்கின்றான்.

 

       பாண்டவர்களும் பாஞ்சாலியும் தமது உண்மை உருவை வெளிப்படுத்துகின்றனர். தருமனது நெற்றியில் உண்டான வடுவின் காரணத்தைப் பாஞ்சாலி கூறபீமன் சினம் கொள்ள

அருச்சுனன் வில்லை எடுக்கின்றான். தருமன் தனது தம்பியரின் சினத்தை மாற்றப் பின்வருமாறு அறிவுரை கூறுகின்றான். 

 

       "பற்றி எரியும் தன்மையினை உடைய பெரும் காட்டில் வாழும் காலம் முடிந்துஅஞ்ஞாத வாசத்திற்குத் தக்க நாடு என எண்ணிஇந்த விராட நாட்டுக்கு வந்தோம். விராட மன்னனின் தயவால்,  நம்முடைய எண்ணம் ஈடேற இங்கு பாதுகாப்பாகத் தங்கி இருந்தோம். விராட மன்னனால் பல நன்மைகளை அடைந்த நாம் அவற்றைக் கருத்தில் கொள்ளாதுசினம் மிகுதியால் எனது நெற்றியில் வடுவினை உண்டாக்கிய ஒரு சிறு தவற்றினை விராட மன்னன் செய்தான் என்பதை மட்டும் பெரிதாக எண்ணிஅவன் மீது கோபத்தை வெளிப்படுத்த எண்ணுவது தவறு" 

 

       "ஒருத்தர் ஓர் உதவி செய்தாலும்காலத்தினால் செய்த அந்த உதவியை மறவாமல்பிறகுஅந்த உதவியைச் செய்தவர்செய்கின்ற பல குற்றங்களையும் பொறுப்பது பெரியோர் செய்கை. ஆனால்கீழ்மக்களோஒருவர் தமக்குப் பல உதவிகளைச் செய்து இருந்தாலும்அவரது ஒரு செயல் தீமையைத் தருவதாய் முடிந்தால்அவர் முன்பு செய்த பல உதவிகளையும் மறந்து அவர் மீது சினம் கொள்ளாமல்,   அமைதியாய் இருக்கமாட்டார்".

 

       "எனவேநீங்கள் கயவர் தன்மையை மேற்கொள்வது நல்லதல்ல. பெரியோர் தன்மையை மேற்கொண்டு விராடன் செய்த பல நன்மைகளை எண்ணிஎன் நெற்றியில் வடுச்செய்த இந்த ஒரு தீமையை மறந்துவிட வேண்டும்" என்று பலவாறு அறிவுரை வழங்கினான். 

 

       குந்திதேவியின் கட்டளை தனது மகன்கள் ஐவரும் எந்நாளும் ஒற்றுமை உணர்வோடு இருக்க வேண்டும் என்பது. தாயின் கட்டளையை மனம் கொண்ட பீமார்ச்சுனர்அண்ணனது சொல்லுக்கு மாறாது சினம் தணிந்தனர்.

 

            இந்த நிகழ்வை வில்லிபுத்தூரார்பின்வரும் பாடல்களில் அமைத்துக் காட்டினார்.

 

"ஒன்று உதவி செய்யினும் அவ் உதவி மறவாமல்

பின்றை அவர் செய்பிழை பொறுத்திடுவர் பெரியோர்;

நன்றி பலவாக ஒரு நவை புரிவரேனும்

கன்றிடுவது அன்றி முது கயவர் நினையாரே."

 

"அனலும் முதுகானகம் அகன்றுநெடுநாள் நம்

நினைவு வழுவாமல் இவன் நீழலில் இருந்தோம்;

சினம் மிகுதலில் தவறு செய்தனன் எனப்போய்

முனிதல் பழுது ஆகும் என முன்னவன் மொழிந்தான்".

 

            நாலடியார் இந்த உண்மையைப் பின்வருமாறு அறிவிக்கின்றது.

 

"ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த

பிழைநூறும் சான்றோர் பொறுப்பர்: --- கயவர்க்கு

எழுநூறு நன்றிசெய்து ஒன்று தீது ஆயின்

எழுநூறும் தீதாய் விடும்".

 

இதன் பொருள் ---

 

            ஓர் உதவியைச் செய்தவர்,பின்னர் தமக்குப் பலநூறு தீமைகளைச் செய்திருந்தாலும்பெரியோர் அதைப் பொருட்படுத்த மாட்டார். ஆனால்கீழ்மக்களுக்கு எழுநூறு நன்மைகள் செய்திருந்துதவறிப் போய் ஒரு தீமை செய்ய நேர்ந்து விட்டால்அந்த ஒரு தீமையையே மனத்தில் கொண்டுமுன்னர் செய்த எழுநூறு நன்மைகளையும் தீமையாகவே எண்ணுவர்.

 

            கயவர் அறிவுநன்மைகளில் அழுந்தி நில்லாமல் தீமைகளையே முனைந்து எண்ணி நிற்கும் என்பது கருத்து.

 

            "நிலம்புடை பெயர்வது ஆயினும்ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்" என்கின்றது புறநானூறு.  உலகமே தலைகீழாகப் போய்விடும் என்ற போதும்ஒருவன் செய்த உதவியை அழிக்க முயன்றவர்க்கு உய்வு இல்லை.

 

     "நன்றி செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வு இல என்னும் குன்றா வாய்மை"  என்கின்றது கல்லாடம்.

 

            வேதங்களை எல்லோராலும் படித்து அறிந்துகொள்ள முடியாது. எனவேஅவற்றில் சொல்லப்பட்ட நீதிகளை நீதிநூல்களாக வடித்துப் பெரியோர் தந்தனர். நீதி நூல்களில் சொல்லி உள்ள கருத்துக்களுக்கு விளக்கமாக புராணங்கள் எழுந்தன.

 

            எனவே, "செய்ந்நன்றி அறிதல்" என்னும் ஓர் அதிகாரத்தைத் திருவள்ளுவ நாயனார் வைத்துஅதில்

 

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்உய்வு இல்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

 

என்று அருளிச் செய்தார்.

No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...