நோய்களால் நலியாமல் காப்பாய் முருகா!

                                               நோய்களால் நலியாமல் காப்பாய் முருகா!

-----

 

     முருகன் பவரோக வைத்தியநாதப் பெருமான். அவருடைய சீடர்களாகிய அகத்தியர் போகர் முதலியோர்களும் மருத்துவர்கள். முருகனை மனமொழி மெய்களால் வழிபடும் அடியார்கட்கு நோய் வராது. நோயற்ற இனிய வாழ்வில் வாழ்வார்கள்.

 

"முருகா என உனை ஓதும் தவத்தினர், மூதுஉலகில்

அருகாத செல்வம் அடைவர்வியாதி அடைந்து நையார்,

ஒருகாலமும் துன்பம் எய்தார்பரகதி உற்றிடுவார்,

பொருகாலன் நாடுபுகார், சமராபுரிப் புண்ணியனே".  --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை

 

       இது திருப்போரூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள முருகப் பெருமான் மீதுதிருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் பாடி அருளிய பாடல்களுள் ஒன்று. நோயால் துன்பப் படாமல் காத்து அருள் புரியுமாறு முருகப் பெருருமானே வேண்டி சுவாமிகள் பாடிய பின்வரும் பாடலும் நித்திய பாராயணத்திற்கு உரியது.

 

"நோயுற்று அடராமல் நொந்து மனம் வாடாமல்

பாயில் கிடவாமல் பாவியேன் - காயத்தை

ஓர் நொடிக்குள் நீக்கி எனை ஒண்போரூர் ஐயா! நின்

சீரடிக் கீழ் வைப்பாய் தெரிந்து."                                 --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை

 

    நோய்களால் வருந்தாமல், மனம் நொந்து வாடாமல், நோய் காரணமாப் படுக்கையில் கிடக்காமல் காத்து, வாழ்நாள் முடிவில் தன்னைத் திருவடி நிழலிலே இறைப்பாறும்படியாகத் திருவருள் புரிய வேண்டும் என்று திருப்போரூர் முருகனை வேண்டிப் பாடிய பாடல் இது.


      உலகிலே உள்ள எல்லா உயிர்களுக்கும் எக்காலும் நீங்காது தொல்லைப் படுத்தும் நோய்கள் மூன்று உள்ளன. அவைகளால் அல்லற்பட்டு உயிர்கள் உழல்கின்றன. இந்த மூன்று நோய்களினின்றும் தப்பி உய்ந்தவர் மிகச் சிலரே. எல்லா உயிர்கட்கும் என்றும் துன்பத்தைத் தரும் அந்த நோய்கள் பசிநோய்காமநோய்பிறவிநோய் என்பன ஆகும்.  பசி உடம்பைப் பற்றியது.  காமம் உள்ளத்தைப் பற்றியது.  பிறவி உயிரைப் பற்றியது. இவற்றைப் பற்றிச் சிந்திப்போம்.

 

     பசிநோய் செய்யும் கொடுமைகள் ஏழுத ஏட்டில் அடங்கா. சொல்லப் புகுந்தாலும் சொல்லில் அடங்கா. பசி நோயினால் பீடிக்கப்படாத உயிர்கள் உலகில் இல்லை. விரத நாளிலும் கூட அப் பசிநோயைத் தாங்காமல் உணவை பலவேறு உருவில் உட்செலுத்துகின்றனர்பசி நோய் வந்தபோதுநடந்து கூட போகாமல் பத்தும் பறந்து போகுமாம். மானம்குலம்கல்விவண்மைபொருளுடைமைதானம்தவம்உயர்ச்சிமுயற்சிவேட்கை என்ற பத்துக்கும் ஆபத்து வருகின்றது பசிப்பிணியால்.

 

"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசிவந்திடப் பறந்து போம்".                --- நல்வழி.

 

     பசி என்னும் நோயைத் தணித்துக் கொள்ள உயிர்கள் ஓயாது உழைக்கின்றன.  பசி நோய் மிகுந்தபோது கண்ணொளி மங்குகின்றது.  கைகால்கள் தடுமாறுகின்றன. ஏனைய கருவி கரணங்கள் தத்தம் செயல்களை இழக்கின்றன. நாக்கு புலர்கின்றது. கோபம் மலர்கின்றது. கொடிய செயல்களில் மனிதன் ஈடுபடுகின்றான். பெற்ற தாய் பசியின் கொடுமையால் குழந்தையை விற்றுவிடுகின்றாள். சிலர் உயிரைத் துறக்கின்றனர். சிலர் செயலை மறக்கின்றனர். சிலர் கடலுக்கு அப்பாலும் பறக்கின்றனர். சிலர் கடமைகளை மறக்கின்றனர்.

 

     பசி நோயை அவ்வப்போது உணவு என்ற மருந்தைக் கொடுத்துத் தற்கால சாந்தியாகத் தடுக்கின்றனர். பசிப்பிணியைப் போக்கும் அன்னதானமே எல்லா தானத்திலும் உயர்ந்தது எனக் கருதினார் சிறுத்தொண்டர். அதனை மேற்கொண்டார் இராமலிங்க அடிகள்.  அவர் திருவுள்ளம் பசி என்ற உடனே நடுங்குமாம்.

 

"எட்டரும் பொருளேதிருச்சிற்றம்பலத்தே

            இலகிய இறைவனேஉலகில்

பட்டினி உற்றார்,பசித்தனர்,களையால்

            பரதவிக்கின்றனர் என்றே,

ஒட்டிய பிறரால் கேட்டபோது எல்லாம்

            உளம் பகீர்என நடுக்குற்றேன்;

இட்ட உவ்வுலகில் பசிஎனில்,எந்தாய்!

            என்உளம் நடுங்குவது இயல்பே."           --- திருவருட்பா.

 

     பசி நோயை மாற்றுவதற்கு மணிமேகலை அரும்பாடு பட்டாள். பசி எல்லாவற்றையும் அழிப்பதனால் தான் திருவள்ளுவர் அதனை "அழிபசி" என்றார்.  

 

"அற்றார் அழிபசி தீர்த்தல்அஃது ஒருவன்

பெற்றான் பொருள் வைப்புஉழி".                --- திருக்குறள்.

 

     பசியைப் பொறுத்துக் கொள்ளுவதே பெரிய ஆற்றல் ஆகும்.  ஆயினும் அந்த ஆற்றலினும் பெரியது அப் பசியை மாற்றுவார் ஆற்றல் ஆகும்.

 

"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்".           

 

என்று அழகாகக் கூறுகின்றனர் பொதுமறை ஆசிரியர்.

 

     இத்தகைய பொல்லாத பசிநோயை முருகப் பெருமானுடைய திருநாமங்களை உள்ளம் குழைந்து உருகி ஒதி மாற்றிவிட்டதாகக் கூறுகின்றார் அருணகிரிநாதர்...

 

"குகனெ குருபர னேயென நெஞ்சில்

     புகழ,அருள்கொடு நாவினில் இன்பக்

     குமுளி சிவஅமுது ஊறுக உந்திப் ... பசிஆறி"....---  திருப்புகழ்.

 

     காமநோயினால் கலங்காத மனிதர்களோ தேவர்களோ இல்லை. எறும்பு முதல் யானை ஈறாக உள்ள எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்களும் இந் நோயினால் இடர்ப்படுகின்றன. அயிராவதம் என்னும் வெள்ளையானை மேல் பவனிவரும் இந்திரன்,  காமநோயினால் பூனையாகிப் பதுங்கி ஓடினான். சந்திரன் உடல் தேய்ந்தான். இராவணன் மாய்ந்தான். தவத்தினின்றும் விசுவாமித்திரன் ஓய்ந்தான். சச்சதந்தன் சாய்ந்தான். கீசகன் தீய்ந்தான். இதன் வலிமைதான் என்னே தளர்ந்த வயதிலும் இந் நோயினால் இடர்ப்படுகின்றனர். பலர் பழியையும் பாவத்தையும் பாராது பரதவிக்கின்றனர். இந்த நோய்க்குத் தற்கால சாந்தியாக உள்ள நல் மருந்து தருமபத்தினி. அந்த நன்மருந்தை நாடாது,  புன்மருந்தை நாடி இரவு பகலாக ஏக்குற்றுபார்த்தவர் பரிகசிக்கபொன்னையும் பொருளையும் அள்ளிக் கொடுத்துசன்மார்க்கத்தில் கிள்ளிக் கொடுக்காமல் மீளா நரகத்திற்கு ஆறாகின்றனர்.

 

"உடம்பினால் ஆயபயன் எல்லாம்உடம்பினில் வாழும்

உத்தமனைக் காணும் பொருட்டு".

 

என்பதனை அறியாமல்உடம்பையும் பாழ்படுத்துகின்றனர்.  காமநோயினால் நகுஷன் விண்ணிழந்தான். அசமஞ்சன் மண்ணிழந்தான். காகாசுரன் கண்ணிழந்தான்.

 

     இந் நோயை அறவே அகற்றினாரும் உள்ளனர். குமரகுருபரரும்சிவப்பிரகாசரும்அப்பர் பெருமானும் எடுத்துக் காட்டாக உள்ளனர். அருணகிரிநாதர் இக் காமநோயைக் கடிந்தார். அவருடைய திருப்பாடல் சான்று பகர்கின்றது. முருகனுடைய திருவடித் தியானமே காமநோய்க்கு நன்மருந்து என்கிறார் அருணகிரிநாதர்.

 

"கடத்தில் குறத்தி பிரான் அருளால்,கலங்காத சித்தத்

திடத்தில் புணைஎன யான் கடந்தேன்சித்ர மாதர்அல்குல்

படத்தில்கழுத்தில்பழுத்த செவ்வாயில்பணையில்உந்தித்

தடத்தில்தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே."  ---  கந்தர் அலங்காரம்.

 

     அடுத்து உள்ளது பிறவிநோய். இந்த நோய்தான் மிகக் கொடியது. இறைவன் என்றோ அன்றே நாம் உண்டு. அன்று தொட்டு இன்று வரை பிறவிநோய் தொடர்ந்து நம்மை வாட்டுகின்றது. பிறவி நோயை மாற்றும் பொருட்டு நம் நாட்டில் அறிஞர்கள் எத்துணையோ முயற்சிகள் செய்தனர். கானகம் சென்றனர். கனலில் நின்றனர். புனலில் மூழ்கினர். புல்லைத் தின்றனர். புலன்களை வென்றனர். தனத்தை வெறுத்தனர். மனத்தை ஒறுத்தனர். உடம்பை வறுத்தனர்.

 

"பிறப்பு என்னும் பேதைமை நீங்கசிறப்பு என்னும்

செம்பொருள் காண்பது அறிவு".

 

என்பது பொய்யாமொழி. 

 

     செய்யாமொழியிலும் இத்துணைத் தெளிவாகக் கூறவில்லை. செம்பொருள் என்பது முருகனுடைய திருவடி. அது சிறந்த வடிவு உடையது. ஏனைய தேவர்களது பாதமும் சிவப்பாக இருந்தாலும்அத்தேவர்கள் செத்துப் பிறக்கின்றவர்கள். "பெம்மான் முருகன் பிறவான் இறவான்”. "கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய்”."செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள" என்ற அருள் வாக்குகளைச் சிந்தித்துத் தெளிக. 

 

"பலகாலும் உனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி

     படிமீது துதித்து உடன் வாழ ...... அருள்வேளே,

பதியான திருத்தணி மேவு சிவலோகம் எனப் பரிவு ஏறு

     பவரோக வயித்திய நாத ...... பெருமாளே".     ---  (நிலையாத) திருப்புகழ்.

 

     எனவேமுருகவேளின் திருநாமத் துதியினால் உடல்நோயாகிய பசியையும்திருவடித் தியானத்தினால் உள்ளநோயாகிய காமத்தையும் பிறவி நோயையும் மாற்றுதல் வேண்டும்.

 

     திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் பாடி அருளிய மேற்குறித்த பாடல்களுக்குக் கருத்தாக அமைந்த அருணகிரிநாதப் பெருமான் பாடி அருளியநித்திய பாராயணத்திற்கு உரியதிருப்புகழ்ப் பாடலைக் காண்போம்.

 

"இருமல்,உரோக முயலகன்,வாதம்,

     எரிகுண,நாசி ...... விடமேநீர்

இழிவுவிடாத தலைவலி,சோகை,

     எழுகள மாலை,...... இவையோடே,

 

பெருவயிறுளை,எரிகுலை,சூலை,

     பெருவலி,வேறும் ...... உளநோய்கள்,

பிறவிகள் தோறும் எனை நலியாத-

     படிஉன தாள்கள் ...... அருள்வாயே.

 

வரும் ஒரு கோடி அசுரர் பதாதி

     மடிய,அநேக ...... இசைபாடி

வரும்ரு கால வயிரவர் ஆட,

     வடிசுடர் வேலை ...... விடுவோனே

 

தரு நிழல் மீதில் உறை முகில் ஊர்தி

     தரு திரு மாதின் ...... மணவாளா!

சலம் இடை பூவின் நடுவினில் வீறு

     தணிமலை மேவு ...... பெருமாளே.

  

இதன் பதவுரை ---

 

            வரும் ஒரு கோடி அசுரர் பதாதி மடிய --- போருக்கு வந்த ஒரு கோடி அசுர சேனைகள் மாளும்படியும்,  அநேக இசைபாடி வரும் --- பலப்பல வகையான இசைப்பாடல்களைப் பாடி வந்து,  ஒரு கால வயிரவர் ஆட ---  ஒப்பற்ற காலபைரவர் நடம் ஆடவும்,  வடிசுடர் வேலை விடுவோனே --- கூர்மையும் ஒளியும் உடைய வேலாயுதத்தை விடுத்தவரே! 

 

தரு நிழல் மீதில் உறை --- கற்பகமரத்தின் நிழலில் வாழ்கின்றமுகில் ஊர்தி தரு --- மேக வாகனனாம் இந்திரன் தந்ததிரு மாதின் மணவாளா --- தெய்வயானையம்மையின் கணவரே! 

 

சலம் இடை பூவின் நடுவினில் வீறு --- கடலுக்கு நடுவில் விளங்கும் பூதலத்தில் நடுவிடத்தில் பெருமை பெற்று விளங்கும்தணி மலை மேவு பெருமாளே --- திருத்தணிமலை மீது எழுந்தருளியுள்ள பெருமை மிகுந்தவரே!

 

            இருமல் --- இருமல் நோயும்,  உரோக முயலகன் --- முயலகன் என்ற நோயும்வாதம் --- வாத நோய்களும்,  எரிகுண --- வெப்பு நோயும்,  நாசி விடமே --- மூக்கும் பீனசமும்,  நீரிழிவு --- நீரிழிவு என்ற நோயும்விடாத தலைவலி --- நீங்காத தலைவலியும்,  சோகை --- சோகை நோயும்,  எழு களமாலை --- கழுத்தைச் சுற்றி எழுகின்ற கண்ட மாலையும்,  இவையோடே --- ஆகிய இவைகளுடன்,  பெருவயிறு --- பெருவயிறு என்னும் மகோதரமும்ஈளை --- சுவாச காசமும்,  எரிகுலை --- குலை எரிச்சலும்,  சூலை --- சூலை நோயும்,  பெருவலி --- பெரிய நோயும்வேறும் உள நோய்கள் --- இவை அன்றி மற்றும் உள்ள நோய்களும்பிறவிகள் தோறும் --- ஒவ்வொரு பிறவியிலும்,  எனை நலியாதபடி --- அடியேனைப் பற்றி துன்புறுத்தாத வண்ணம்உன தாள்கள் அருள்வாயே --- தேவரீருடைய திருவடிகளைத் தந்தருளுவீர்.

 

            இத்திருப்புகழைஅன்பர்கள் நாள்தோறும்ஒருமைப் பட்ட உள்ளத்துடன்,உருகிய சிந்தையுடன் ஓதினால்நோய்கள் தீண்டப் பெறமாட்டார்கள். தீண்டிய நோய்கள் விலகப் பெறுவார்கள்.  நோயின்றி வாழ்ந்தும் வளம் பெறுதற்பொருட்டு அடிகளார் இத்திருப்புகழை இனிது பாடிக் கொடுத்தருளினார். 

 

     மனிதனை உயிருடன் வைத்து வதைக்கின்ற நோய் இருமல். இதில் ஆஸ்துமாக்ஷயம்புகை இருமல்தூறு இருமல் என்று பலவகை உண்டு. இருமல் என்னும் நோயானாது இரவுக் காலத்தில் அதிகமாக வருத்தும். எலும்பு குலுங்கிவிடுவது போலத் துன்புறுத்தும். இதனை, "உறக்கம் வரும் அளவில் எலும்பு குலுக்கி விடும் இருமல்" என்று பிறிதொரு திருப்புகழில்  பாடினார் அடிகளார். எனவேமேற்குறித்த திருப்புகழ்ப் பாடலில்இருமலை முதலில் வைத்துப் பாடினார்.

 

     முயலகன் என்பது ஒரு நோய். கை கால் இழுத்துக் கொண்டு துடிக்கச் செய்யும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற திருத்தலத்தை அடைந்தபோதுஅவ்வூர்த் தலைவர் கொல்லி மழவன் என்பவர்தம் குழந்தைக்கு வந்த முயலகன் என்ற நோய் தீரும் படி கோயிலிலே குழந்தையை வைத்து வருந்தினார்.அப்போது ஆலய வழிபாட்டிற்கு வந்த திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடியருளினார். அதனால் கொல்லிமழவன் புதல்வியின் முயலகன் என்ற நோய் நீங்கியது. அன்றியும் அக்கோயில் நடேசப் பெருமான் திருவடியின் கீழ் இருந்த முயலகனும் மறைந்தனன். அண்டவாதம்பட்சவாதம்பாரிசவாதம் முதலிய வாத நோய்கள் இறைவனைப் பிடிவாதமாக வணங்காத பாவிகட்கு வரும். எரிகுணம் என்பது வெப்புநோய்கைகால் கண் காது முதலிய இடங்களில் ஒரே எரிச்சலுடன் வரும். நாசியில் வரும் பீனசம் முதலிய நோய்கள். நீரில் சர்க்கரை வரும் பொல்லாத நோய். இது பலரைப் பிடித்து வாட்டி வருத்தும். தீராத தலைவலிகழுத்தைச் சுற்றி புற்று போல் எழுகின்ற கண்டமாலை.பானை போல் வயிறு பெருத்தல் (மகா + உதரம் = மகோதரம்) ஆகிய நோய்களும் மனிதனுக்கு வேதனையைத் தரும்.  சுவாசகாசம்கோழைசளி இவைகள் மிகுந்து வருத்தும்.குலை எரிச்சல் என்னும் நோய் வருத்தும். ஆலகால விடம் உள் புகுந்தது போல் குடலைப் புரட்டிப் புரட்டித் துன்புறுத்தும்.

 

     பெருநோய்தொழுநோய் என்கின்ற கொடிய நோய். இது தான் எல்லா நோய்கட்கும் அரசன் அதனால் இதைக் கண்டால் மற்ற நோய்கள் யாவும் தொழும். அதனால் தொழு நோய் எனப்பட்டது.

 

     மேற்குறித்த நோய்கள் மட்டும் அல்லாதுஇன்னும் என்னென்ன நோய்கள் உள்ளனவோஅவை யாவும் எல்லாம் இந்தப் பிறவியில் மட்டும் அல்ல. இனி எடுக்கப் போகும் பிறவிகள் தோறும் பற்றி வருத்தா வண்ணம் அருள்புரிவாய் என்று முருகப் பெருமானை அடிகளார் வேண்டினார். நமக்கும் பொருத்தமான வேண்டுதல் இதுவே ஆகும்.

 

     முருகன் பவரோக வைத்தியநாதப் பெருமான். அவருடைய சீடர்களாகிய அகத்தியர் போகர் முதலியோர்களும் மருத்துவர்கள். முருகனை மனம்மொழிமெய் என்னும் திரிகரணங்களால் வழிபடும் அடியார்கட்குப் பிணியே வராது. வந்தாலும் முருகன் காப்பாற்றி அருள் புரிவான். நோயற்ற இனிய வாழ்வில் வாழ்வார்கள்.

 

 

 

 

 

 

 

 

சும்மா இரு மனமே

 


சும்மா இருப்பாய் மனமே

-----

 

"வேதாகம சித்ர வேலாயுதன்வெட்சி பூத்த தண்டைப்

பாதார விந்தம் அரணாக அல்லும் பகலும் இல்லாச் 

சூதானது அற்ற வெளிக்கேஒளித்துசும்மா இருக்கப் 

போதாய்இனி மனமே! தெரியாது ஒரு பூதர்க்குமே".

 

என்று நெஞ்சுக்கு அறிவுறுத்தலாக அருணகிரிநாதர் பாடிய கந்தர் அலங்காரப் பாடல் இது.

 

இதன் பொருள் ---

 

     மனமே! வேதங்களும் ஆகமங்களும் துதிக்கின்ற அழகிய வேற்படையை உடைய முருகப் பெருமானின் வெட்சி மலரை அணிந்துள்ளதும்தண்டையினை அணிந்துள்ளதும் ஆகிய திருவடித் தாமரையையே அரணாகக் கொண்டு மறப்பும் நினைப்பும் அற்ற வஞ்சகம் அற்ற பரவெளியில்உலக பசு பாச தொந்தங்களில் அகப்படாமல் மறைந்து,உரை அற்ற நிலையாகிய பேசா அனுபூதியில் நிலைத்து இருக்கும் பொருட்டு,சென்ற நாள் ஒழியினும்இனியாவது வருவாயாக. இந்த செந்நெறியானது ஒருவருக்கும் தெரியாத ஒன்று ஆகும். 

 

     நம்முடைய மனம் நல்ல வழியைக் காட்டினாலும் காட்டும்அல்லாதவழியைக் காட்டினாலும் காட்டும். அது குரங்கு போன்றது. குரங்கு குருவிகள் கட்டுகிற கூட்டைப் பிரித்து எறியும். மாலைகளைப் பிய்த்து எறியும். கட்டியதைப் பிரித்து எறியும் இயல்புடைய குரங்குகளை ஆட்கொண்டான் இராமன். அந்தக் குரங்குகள்குரங்கரசனாகிய சுக்கிரீவனது தலைமையில்ஆங்காங்கே சிதறிக் கிடந்த கற்களை எல்லாம் ஒன்று சேர்த்துக் கொண்டு வந்து இலங்கைக்கு அணை கட்டின. கட்டியதைப் பிரிக்கும் இயல்புடைய குரங்குகள், இராமனோடு சேர்ந்தமையால் பிரிந்தவற்றை ஒன்று சேர்த்துக் கட்ட உதவின. அவ்வாறே மனம் என்னும் குரங்கு தன் விருப்பப்படி திரிந்தால் நாம் நல்ல எண்ணங்களைக் கட்டக் கட்ட அவற்றைக் குலைத்துசெய்கின்ற முயற்சியை எல்லாம் சின்ன பின்னம் ஆக்குகிறது துன்பத்தை உண்டாக்குகிறது. அதே குரங்கை இராமன் ஆண்டது போல  நாமும் அடக்கி விடுமோனால் அதுவே நமக்கு உதவியாக இருக்கும்.

 

     மதம் பிடித்த யானையினிடம் யாராவது போனால் தன் துதிக்கையினால் அவர்களைப் பற்றி இழுத்து மிதித்து அழித்து விடுகிறது. அதைக் கண்டால் எல்லோரும் ஒடுகிறார்கள். அந்த யானையை அடக்கிய பிறகு தன்னைக் குத்தி நோவ அடிக்கும் மாவுத்தனுக்குப் பணிந்துகீழே கிடக்கும் அங்குசத்தை எடுத்துக் கொடுக்கிறது. தன்னைக் கட்டுவதற்குரிய இரும்புச் சங்கிலியைத் தன் துதிக்கையினாலேயே அவனிடம் எடுத்துக் கொடுக்கிறது. காலையும் தூக்கிக் காட்டுகிறது. மதம் அடங்கின யானையாக நமது மனம் ஆகிவிட்டால்தன்னைக் கட்டுகிற வழியை அதுவே காட்டும். இல்லாவிட்டால் மதம் பிடித்த யானை சுற்றியுள்ளவர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்துதன்னை அடக்க வருகின்ற மாவுத்தனையும் கொன்று வீழ்த்துவது போலத் துன்பம் கொடுத்து நம்மையே வீழ்த்திக் கொன்று விடும். 

 

     அத்தகைய மனத்தைப் பார்த்து அருணகிரிநாதர் உருப்படுவதற்கான வழியைக் காட்டுகிறார். முன்பு மதம் பிடித்த யானை போலத் தன் இச்சைப்படி எங்கெங்கோ ஒடித் திரிந்து கொண்டிருந்தது. தன் வழியில் குறுக்கிடுபவர்களின் மேல் சினம் கொண்டு சீறி விழுந்தது. உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் தானே பற்றிக் கொள்ள வேண்டும் என்ற பேராசையால் அலைந்து ஓடிக் கொண்டு இருந்தது. அழுக்கு மூட்டையைச் சுமந்து செல்லும் கழுதை போல அது இருந்தது. இப்பொழுது அந்த மனம் மடைமாறிச் சென்றது. நல்ல மனம் ஆகிவிட்டது. வெகுளி அடங்கி இருக்கிறது. தன்னிடமுள்ள பொருள்களை எல்லாம் தானமாகப் பிறருக்குக் கொடுத்துப் பற்று நீங்கி இருக்கிறது. முன்பு சிறிது கண்ணை மூடினாலும் என்ன என்ன என்னமோ வரும்.யார் யார் முகமோ தோன்றும். இப்பொழுது கண்ணை மூடும் பொழுது முருகப் பெருமானின் திருவுருவந்தான் வருகின்றது. அவன் திருவடி சம்பந்தமான நினைவுகள்தான் வருகின்றன. 

 

     ஞானம் என்ற பெரும் பொன்னைப் பெற்ற ஆன்மா பயப்படுகிறது. இதை மனமாகியசிறுவன் அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமேஎன அஞ்சுகிறது. மாயை பலப்பலவிதமாக வந்து வேறு வேறு விளையாடல்களைச் செய்யும். அவற்றினின்றும் பிழைத்து ஞானச் செல்வத்தைக் காப்பாற்ற வேண்டுமே  என்று பெரியோர்கள்அஞ்சுவார்கள்.

 

     நமக்குக் கிடைத்த பொன்னை வீட்டில் வைத்திருந்தால் திருடர் பயம். பொன்னைக் கொண்டு போய் வங்கியில் பாதுகாப்பாக வைத்து விடுகிறோம். அவ்வாறே பணத்தையும் வீட்டில் வைத்து இருந்தால் பயம். பாதுகாப்பாக வங்கியில் கொண்டு வைத்து விடுகிறோம்.நிலையில்லாமல் அழிந்து போகும் பொன்னுக்கும் பொருளுக்குமே இவ்வளவு பாதுகாப்பு என்றால்பலகாலம் செய்த தவப் பயனாகப்பெற்ற அருட்செல்வத்தைப் பாதுகாக்க எவ்வளவு விழிப்புணர்வு இருக்க வேண்டும்! எனவே இறைவன் திருவருளால் பெற்ற ஞானச் செல்வத்தைப் பாதுகாத்து வைக்க வேண்டுமே என்று அறிவு பயப்படுகிறது. 

 

     இரவு நேரத்தில் தாமத குணத்தினால் சோர்வு வருகிறது. பகல் பொழுதிலோ சத்துருக்கள்  நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். போதாக் குறைக்கு என்று இதசத்துருக்களும் (இதம் செய்வது போலத் தோன்றுகின்ற சத்துருக்கள்) கூடவே இருக்கின்றார்கள். ஆகவேஒப்பற்ற பொருளாகிய அருட்செல்வத்தைக் காப்பாற்றப்  பகலும் கூடாதுஇரவும் கூடாது.  பகல் என்பது நினைப்பு இரவு என்பது மறப்பு. உலகத்தோடு ஒட்டிவாழ்ந்து கொண்டே போகிற நிலை பகல். செயலை மறந்து தூக்கத்திற்குள்அடங்கிக் கிடக்கிற நிலை இரவு. இந்த இரண்டு நிலையும் நமக்கு உறுதியான பயன் ஒன்றையும்அளிக்கவில்லை. பகலும் இரவும் நாம் ஓயாமல் ஒழியாமல் வேலை செய்கிறோம். இரவில்படுத்துத் தூங்குவதும் ஒரு வேலைதானேஅவை உயிருக்கு நலம் செய்யும் பயனைஅளிப்பதில்லை.

 

     நனவுநிலை சகலாவத்தை எனப்படும்.  சகல அவத்தைகளும் பகலில்விழிப்பு நிலையில் உண்டு. தூக்கமாகிய நிலை கேவல அவத்தை எனப்படும். சகலத்தில் பயனற்ற வீண் வேடிக்கைக் காரியங்களைச் செய்கிறோம். கேவலத்தில் அந்த முயற்சியும் இல்லாமல் தூங்குகிறோம். பகலில் தூங்கினாலும்ஆன்மா கேவல அவத்தையில் உள்ளதாகவே கொள்ளவேண்டும். ஆகவேபகலும் இரவும் நமக்கு இன்பத்தைத் தருவதில்லை. அனுபவிக்கின்ற இன்பம் அனைத்தும் துன்ப சொரூமானவையே. இன்பம் போலத் தோன்றுகின்ற துன்பத்தையே அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். ஆன்மாவுக்கு இன்பத்தைத் தருவதற்குப் பகல்இரவு அற்ற இடம் வேண்டும்.

 

     ஒர் அருமையான பொருள் கிடைத்துவிட்டால்யாருடைய கண்ணிலும் படாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது போலவே கிடைத்தற்கரிய பேறான ஞானத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அருணகிரிநாதர் மனத்தைப் பார்த்துச் சொல்கிறார்.  ஒரு பூதர்க்கும் தெரியாத ஓர் இடம் உண்டு. நமக்கு இரவும் கூடாது. பகலும் கூடாது. இரவுபகல் அற்றஅந்த வெளிக்குப் போய் விடலாம் வாஎன்று அழைக்கிறார். ஒரு பூதர்க்கும் தெரியாத இடம் மட்டுமல்ல. ஒரு பூதர்க்கும் அறிய ஒண்ணாத இடமும் அதுதான். 

 

     போகிற வரைக்கும்துணை வேண்டும். போன பிறகும் துணை வேண்டும். கள்ளர் நம்மைக் கண்டு அஞ்சி நெருங்காமல் போக வேண்டும் என்றால் ஆயுதம் கையில் உடைய ஒருவன் துணையாக வர வேண்டும். பெரிய பெரிய அசுரர்களைச் சங்காரம் செய்து வாகை சூடிக்கொண்டிருக்கும் தேவசேனாபதியாகிய முருகப் பெருமான் திருக்கையில் வேலாயுதம் உள்ளது. அவனுடைய பாதாரவிந்தங்களையே சரணாகப்பற்றிக் கொண்டு ஈடேறலாம்என்கிறார். பாதம் = திருவடி. அரவிந்தம் = தாமரை. திருவடித் தாமரையைப் பாதாரவிந்தம் என்கிறார்.

 

     முருகன் திருக்கையில் உள்ள வேல் ஞானசத்தி ஆகும். தாமத குணத்தைப்போக்கிஅறியாமையை நீக்கிஅறிவைக் கொடுப்பது அந்த ஞானவேல். ஞானத்திற்கு உருவம் இல்லை 'அவன் மிக்க அறிவாளி'  என்றால்அவனிடமுள்ளஅறிவைக் காண இயலாது. அதற்கு உருவம் இல்லை. அவன் அறிவுக்கு ஒர் உருவம் கொடுக்க வேண்டுமென்றால் நாம், 'அவன் பெரிய அறிவாளி பட்டதாரி' என்று கூறுகிறோம். அறிவுக்கு உருவம் இல்லையானாலும் பட்டதாரி என்பதன் மூலம் அதற்கு ஒரு வகையாக அடையாளம் கூறுகிறோம். அதையே உருவம் என்று சொல்லலாம். இறைவனோடு தொடர்வுடைய அறிவு எதுவோஅது மெய்ஞ்ஞானம். ஞானம் இருவகைப்படும். கல்விகேள்வியினாலே வருவது அபரஞானம். உணர்வினாலேஅனுபவத்தினாலே பெறுவது பரஞானம். 

 

     அபர ஞானத்தைத் தர உதவியாக இருப்பவை நூல்கள். எல்லா நூல்களிலும் சிறந்தது வேதம். வேதம் இறைவன் அருளியது என்பர். அது எல்லோருக்கும் பொதுவானது. வேதத்தோடு சேர்த்துச் சொல்லப்படுபவை ஆகமங்கள். அந்த அந்தச் சமயத்தவர்களுக்கு ஏற்றபடி தனித்தனியே ஆகமங்கள் இருக்கின்றன. பொதுவான வேதத்தையும்சிறப்பான ஆகமங்களையும் சேர்த்து வேதாகமம் என்று சொல்வது வழக்கம். வேதத்தில் மந்திரம் மிகவும் முக்கியம். ஆகமத்தில் தந்திரம் மிகவும் முக்கியம். எனவேவேதத்தை மந்திரம் என்றும் ஆகமத்தைத் தந்திரம் என்றும் சொல்வர். வேதம் இறைவனைப் பற்றியும்அறங்களைப் பற்றியும் சொல்கிறது. ஆகமங்கள் இறைவனை அடைவதற்குரிய வழிபாட்டு முறைகளைச் சொல்கின்றன. வேதம் அறத்தை எடுத்துச் சொல்வதன் மூலம் வாழ்வியலைக் கூறும். ஆகமம் வழிபாட்டு நிலைகளைக் கூறும்.

 

     ஞானம் எப்படி வருகிறது?  வேதமாக வருகிறது. ஆகமமாக வருகிறது. "ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்" என்பார் மணிவாசகர். பிற நூல்களாக வருகிறது. முருகப் பெருமான் திருக்கரத்திலுள்ள வேலை "ஞானவேல்" என்று சொல்வார்கள் அருணகிரிநாதர் அந்த ஞானத்திற்கு உருவம் கொடுத்து ஞானம் தரும் நூலாகிய வேதத்தையும்ஆகமத்தையும் நினைத்துவேதாகமவேல் என்று சொல்கிறார்.இ றைவனோடு சம்பந்தப்பட்டட எல்லாவற்றையுமே வேதம் என்பது வழக்கம். சிவபிரான் ஏறிச் செல்லும் இடபம் வேதம். அவன் அணிகின்ற ஆடை வேதம். அவன்பாதுகை வேதம். அவன் சிலம்பு வேதம் என்பர்.

 

"மறையே நமது பீடிகையாம்;மறையே நமது பாதுகையாம்;

மறையே நமது வாகனமாம்;மறையே நமது நூபுரமாம்;

மறையே நமது கோவணமாம்;மறையே நமது விழியாகும்;

மறையே நமது மொழியாகும்;மறையே நமது வடிவாகும்" 

 

என்பது திருவிளையாடல் புராணம்.

 

"மன்னுகலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடாத் 

தன்னையே கோவணமாச் சாத்தினன் காண் சாழலோ"

 

என்பது திருவாசகம்.

 

     அருணகிரிநாதப் பெருமான் இந்த முறையை நினைத்துமுருகன் வேதாகமத்தையே வேலாக வைத்திருக்கிறன் என்கிறார். அந்த வேல் சித்திரவேல். எனவே "வேதாகமச் சித்ர வேலாயுதன்" என்றார். கிடைப்பதற்கரிய பொருள் ஒன்று கிடைத்தால்,அதை அறிவுடைய மனிதனால்தான் காப்பாற்ற முடியும். உயர்ந்த ஞானச் செல்வத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால்அதற்குப் பாதுகாவலாக இருப்பது ஞானவேல். 

 

     அந்த ஞானவேல் உலகத்தைத் தனக்குள் அடக்கி ஆண்ட சூரபதுமனது உடலைத் துளைத்துஅவனுக்குக் கவசம் போல் இருந்த கிரெளஞ்ச மலையையும் பொடிப் பொடியாக்கியது.  வேல் நமக்குத் துணையாக வேண்டுமென்றால் அந்த வேலை உடைய வேலாயுதன் திருவடியை நாம் பற்றிக் கொள்ள வேண்டும். அவன் காலைப் பற்றினால் வேலை விடுத்து நம்மைக் காப்பாற்றுவான்.    

 

     அநாதி காலம் தொட்டு அடியவர்கள் எப்போதும் அருச்சனை செய்து வரும் முருகனது திருவடியில் அடியவர்கள் தூவிய மலர்கள் இருக்கின்றன. வெம்மையுடைய மனிதன் கையில் பட்டால் மலர் வாடிவிடும். செடியில் இருப்பது போலவேஅதையும் விட மிக்க மலர்ச்சியோடுமுருகன் திருவடிகளில் வெட்சி மலர் கிடக்கிறது. அவ்வளவு தண்மை உடையது அவன் திருவடி. மலரை அணிந்ததோடு தண்டையையும் அணிந்த திருவடி அது.

 

     'அந்தத் திருவடித் தாமரைகளை நமக்கு அரணாகப் பற்றிக் கொண்டு போவோம் வாமனமே!என்கிறார் அருணகிரிநாதர். நாம் பற்றிக் கொள்வது கால். நமக்கு அஞ்சல் என்று சொல்வது கை. நாம் தண்ணீர் விடுகிற இடம் வேர். நமக்குக் காய் தருகிற இடம் செடியின் மேற்பகுதி. அவனது திருவடியைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டு, 'நீயே சரணம்என்று கதறினால் அவன் கை, 'அஞ்சல்என்று சொல்லும். அவனது வெட்சி பூத்ததண்டை அணிந்த பாததாமரையைப் பற்றிக் கொண்டால்அவன் கையிலுள்ள வேல் நம்மைப் பாதுகாக்கும்.  நாம் பாதுகாப்பான இடத்தை அடையலாம்.

 

     இப்போதே  "இனி இங்கே ஒரு கணமும் இருக்கக் கூடாது. இந்தக் கணமே வேறு இடத்திற்குப் போய் விடுவோம்என்கிறார் அருணகிரிநாதர் தமது நெஞ்சை நோக்கி. அது பகலும் இரவும் அற்ற இடம்நினைப்பும்  மறப்பும் அற்ற இடம்இன்பதுன்பம் அற்ற இடம்.  நமக்கு கிடைத்துள்ள அருள்ஞானச் செல்வத்தைக் கள்வர்கள் பறித்துக் கொண்டு விடுவார்களோ என்று அச்சப்பட அவசியம் இல்லாத இடம்.

 

     இப்படித்தான் அருளாளர்கள் இறைவனது திருவருளால் ஞானத்தைப் பெற்ற மாத்திரத்தில் அவனுடைய திருவடியில் சேர்ந்து எல்லை இல்லா இன்ப நலங்களைத் துய்க்க ஒடுகிறார்கள்.  அவர்களது உடல் நம்மிடையே இருந்தாலும் மனத்தால் அவர்கள் நம்மைவிட்டு வெகுதூரம் சென்று விடுகிறார்கள். அப்படி ஒடிவிட வேண்டுமென்ற உள்ளம் படைத்த மக்களுக்குச் சொல்வதைப் போல தமது  நெஞ்சத்துக்குச் சொல்கிறார் அருணகிரிநாதர்.  இங்கே இரவு பகல் இருக்கிறது. ஞானத்தைக் குலைக்கும் அஞ்ஞானமாகிய சூது இருக்கிறது. "அல்லும் பகலும் இல்லாச் சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துசும்மா இருக்கப்போதாய்" என்கிறார். 

 

     சூதானது அற்ற வெளி என்றால் இரவுபகல் இல்லாத இடம். இரவு அற்ற இடம் என்றால்அங்கே பகல் உண்டு என்று தோன்றும். பகல் அற்றது என்றால் இரவு உண்டு என்று ஆகும். இரண்டும் ஒன்றுக்கொன்று இனமானவை. வெண்தாமரை என்ற சொல்,செந்தாமரை என்ற இனத்தை நினைப்பூட்டுகிறது. அதைப் போல இரவு என்று சொன்னால் பகல் இருப்பது நினைவுக்கு வருகிறது. அருணகிரிநாதர் காட்டுகின்ற வெளியோ பகலும் இரவும் இல்லாத இடம். மறதிநினைப்பு ஆகிய இரண்டும் அங்கே இல்லை. இன்பமும் இல்லைதுன்பமும் இல்லை. எங்கும் ஓரே ஆனந்தம். ஆனந்த வெள்ளம் எங்கும் பாய்கிறது. சூது அற்ற இடம் அது. வெறும் வெட்ட வெளியான இடம் அது. 

 

     வெளி என்பது ஆகாயம். ஆகாயம் ஐந்து பூதங்களுக்குள் ஒன்று.  மற்றப் பூதங்களை எல்லாம் தன்னுள் அடக்கி வைத்திருப்பதுஅது பூத ஆகாயம். அந்த வெளி சூது உடைய வெளி. அதற்குமேல் ஓர் ஆகாயம் உண்டு. அதற்குச் சிதாகாசம் என்று பெயர். அது எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி வைத்திருப்பது. பூத ஆகாசத்திற்குத் தோற்றம் உண்டுமுடிவு உண்டு. சிதாகாசத்திற்குத் தோற்றக் கேடு இல்லை. கால எல்லைக்குள்பூத எல்லைக்குள்மூச்சுக் காற்றுக்குள் அடங்கி வாழ்கின்ற நாம் காலனுக்குப் பயப்பட்டே வாழ வேண்டும். இந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இடத்தில்இரவும் பகலும் அற்ற வெளியில் சிதாகாசத்தில் இருக்கின்ற இறைவனோடு நாம் போய்ச் சேர்ந்து விட்டால்அங்கே காலபயம் இல்லை.

 

     "பிணி மேய்ந்து இருந்த இருகால் குரம்பை இது நான் உடையது. இது பிரிந்தால் தருவாய் எனக்கு உன் திருவடிக் கீழ் ஓர் தலைமறைவே" என்றார் அப்பர் பெருமான். அப்படித் தலைமறைவாக இருக்கின்ற இடத்தை வேறு யாரும் அறிந்துகொள்ள முடியாது. அங்கே போவதற்கும் இறைவன் துணையாக இருப்பான். அங்கே போன பிறகும் துணையாக எப்பொழுதும் இருப்பான். இங்கேஇந்தப் பூவுகில்இருந்தால் ஒரு கணம்கூடச் சும்மா இருக்க முடிவதில்லை.  ஒரு கணம்கூடத் தூக்கம் வருவதில்லை. எப்போதும் வேலை. பகலும் வேலைஇரவும் வேலை. பகலும்இரவும் இல்லா இடத்தில் வேலையே இருக்காது. எனவே, "சும்மா இருக்கப் போதாய்" என்கிறார்.

 

     சும்மா இருப்பது என்பதுசெயல் அடங்கிபேச்சு அடங்கிமனம் அடங்கி இருப்பதைக் குறிக்கும். மோன நிலை அது. இந்த மூன்றையும் "காஷ்டமெளனம்", "வாக்குமெளனம்", "மனோமெளனம்" என்றுசொல்வர். மனோமௌனம் என்பதுதான் பூரணமௌனம். இறைவனுடைய அருளைத் அடைந்த மாத்திரத்தில் அடியவர்கள் சொல் அடங்கிசெயல் அடங்கிமனம் அடங்கிச் சிதாகாசப் பொருளோடு ஒன்றுபட்டுச் சும்மா இருக்கிறார்கள். அனுபவத்தில் ஈடுபடு ம்போது எல்லாம் அடங்கிவிடும். ஆராய்ச்சிக்கும் பேச்சுக்கும் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து செல்வதால் பயன் இல்லை. "ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா என்று திருஞானசம்பந்தர் சொல்கிறார். இறைவனைப் பற்றியும்உயிரைப் பற்றியும்அவனருளைப் பெறுவது பற்றியும் ஆராய்ச்சி பண்ணத்தான் வேண்டும். உண்பதற்கு உணவு கிடைத்தால் அது உண்ணத் தகுந்த உணவுதானா என ஆராய்ச்சி செய்யலாம். அது உணவுதான் என்று அறிந்த பிறகு அதை உண்டு மகிழாமல் 'இது எந்த அரிசியால் ஆனது?அது எங்கே விளைந்தது அது பழையதாபுதியதாஎந்தக் கடையில் வாங்கியது?" என்றெல்லாம் துருவித் துருவி ஆராய்ச்சி செய்வதால் ஒரு பயனும் இல்லை. பயனற்ற ஆராய்ச்சியால் இன்பமும் இல்லை. ஆன்மாவுக்கு உண்மையான ஆனந்தத்தைத் தருபவன் இறைவன் எனத் தெரிந்து கொண்டுவிட்டால்அவன் அருளைப் பெறுவதற்கு அந்தக் கணமே முயலவேண்டும்.  ஞானமாகிய செல்வம் கிடைத்துவிட்டால் அதைக் கொண்டு இறைவனோடு ஒன்றுபட்டு இயைந்து ஏகாந்தமாக இன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கும் நிலைதான் சும்மா இருக்கும் நிலை. சும்மா இருப்பதுதான் அனுபவம். அருணகிரியார் உபதேச முறையில் மனமே வாசும்மா இருக்கலாம்" என்று சொல்கிறார்.

 

     அப்படிச் சும்மா இருக்கின்ற நிலை ஒருவராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாத நிலை ஆகும். மனத்தை வசப்படுத்துதல் அவ்வளவு எளிது அல்ல. "சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது" என்ற தாயுமான அடிகளார் வேறு எந்த எந்தக் காரியங்கள் எளிதானவை என்று பட்டியல் இட்டுக் காட்டுகிறார்.சும்மா இரு’ என்று எளிதில் சொல்லி விடலாம். அதுதான்  கடினம் என்றார் தாயுமானவர். அதற்கு அருள் செய்யச்சொல்லி இறைவனை வேண்டுகிறார்.

 

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்,

          கரடிவெம் புலிவாயையும்

     கட்டலாம்ஒருசிங்கம் முதுகின்மேற் கொள்ளலாம்,

                  கட்செவி எடுத்து ஆட்டலாம்,

வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும்

                  வேதித்து விற்று உண்ணலாம்,

      வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்,

                   விண்ணவரை ஏவல்கொளலாம்,

சந்ததமும் இளமையோடு இருக்கலாம்மற்றொரு

                   சரீரத்தினும் புகுதலாம்,

      சலமேல் நடக்கலாம்கனல்மேல் இருக்கலாம்,

                   தன்னிகரில் சித்திபெறலாம்,

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற

                   திறம்அரிதுசத்தாகிஎன்

     சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே

                   தேசோ மயானந்தமே.

 

இதன் பொருள் ---

 

     என் சிந்தனையில் மெய்ப்பொருளாகத் திகழ்கின்ற அறிவு வடிவான தெய்வமேஒளிமயமான ஆனந்தமேமதயானையை வசமாக்கி விடலாம்கரடிபுலியின் வாயைக் கட்டலாம்சிங்கத்தின் மீது ஏறலாம்பாம்பைக் கையில் பிடிக்கலாம்மற்ற உலோகங்களைப் பொன்னாக்கலாம்,  இன்னொருவருக்குத் தெரியாமல் நடமாடலாம்தேவர்களை அடிமையாக்கலாம்எப்போதும் இளமையோடு இருக்கலாம்இன்னோர்  உடலில் புகலாம்நீர்மேல் நடக்கலாம்நெருப்பின்மேல் நடக்கலாம்இணையில்லாத சித்திகளையும் பெறலாம். ஆனால்,  இத்தனையையும் செய்தாலும்சிந்தனையை அடக்கிச் சும்மா’ இருப்பது சிரமம். அந்தத் திறன் எளிதில் வந்துவிடாதுஅதை எனக்கு அருள்வாய்! 

 

     சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கின்ற அரிய நிலையைப் பெறுவதற்கு இறைவன் திருவருள் புரியவேண்டும். அந்த நிலையை ஒருவராலும் உணர்ந்து கொள்ள முடியாது. அந்த நிலை இறைவன் திருவடியையே தஞ்சமாக அடைந்தவர்க்கே வாய்க்கும். நினைப்பு மறப்புஇன்பதுன்பம் ஏதும் அறியாத இடம் இரவுபகல் அற்ற பரவெளி. அந்தப் பரவெளியில் ஒளித்துச் சும்மா இருப்பதற்கு இனியாவது வருவாயாக என்று நெஞ்சுக்கு நீதி புகல்கின்றார் அருணகிரிநாதர்.

 

     சும்மா இருப்பதுதான் சுகம். அந்த சுகம் எப்போது வாய்க்குமோ   என்று ஏங்கினார் வள்ளல்பெருமான்.

 

"இன்று வருமோநாளைக்கே வருமோஅல்லது மற்று

என்று வருமோ அறியேன்,எம்கோவே! - துன்றுமல

வெம்மாயை அற்றுவெளிக்குக் வெளி கடந்து

சும்மா இருக்கும் சுகம்."

 

     சொல் அற்ற நிலையில் சும்மா இரு என்று பரமகுருநாதன் ஆகிய முருகப் பெருமான் உபதேசித்த அனுபவத்தை"சும்மா இரு சொல் அற என்றலுமேஅம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே" என்றர் கந்தர் அனுபூதியில். அந்த நிலையைத் தனக்குக் காட்டுமாறு அறுமுகப் பரம்பொருளை வேண்டி நின்றார் சிதம்பர சுவாமிகள்.

 

"சும்மா இரு என நீ சொல்அப் பொருள் ஒன்றும்

அம்மா! அறிந்திலம் என்று உரைத்த - எம்மான்

அருணகிரிநாதர் அனுபவம் நாயேற்குக்

கருணைபுரி போரூரா காட்டு"

 

     சும்மா இருக்கும் சுகத்தை விரைந்து பெற பரமகுருநாதன் திருவடிகளைச் சரணடைந்துஅவனது பரமகருணைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதனைப் பெறுவதற்கான தாகமும் வேகமும் நமது உள்ளத்தில் இருத்தல் வேண்டும்.

 

 

 

 

 

 

பொது --- 1126. பட்டாடைக்கே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பட்டு ஆடைக்கே (பொது) முருகா!  திருவடியில் அணுக வரம் அருள்வாயே தத்தா தத்தா தத்தா தத்தா      தத்தா தத்தத் .....