பொது --- 1028. வினைத் திரளுக்கு

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

வினைத் திரளுக்கு (பொது)

 

முருகா! 

தமிழால் உன்னைப் பாடிப் பரவ அருள்வாய்

 

 

தனத்ததனத் தனத்ததனத்

     தனத்ததனத் தனத்ததனத்

          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான

 

 

வினைத்திரளுக் கிருப்பெனவித்

     தகப்படவிற் சலப்பிலமிட்

          டிசைக்குமிடற் குடிற்கிடைபுக் ...... கிடுமாய

 

விளைப்பகுதிப் பயப்பளவுற்

     றமைத்ததெனக் கருத்தமைவிற்

          சகப்பொருள்மெய்க் குறப்பருகக் ...... கருதாதே

 

எனக்கெதிரொப் பிசைப்பவரெத்

     தலத்துளரெச் சமர்த்தரெனப்

          புறத்துரையிட் டிகழ்ச்சியினுற் ...... றிளையாதுன்

 

எழிற்கமலத் திணைக்கழலைத்

     தமிழ்ச்சுவையிட் டிறப்பறஎய்த்

          திடக்கருணைத் திறத்தெனைவைத் ...... தருள்வாயே

 

சினத்தைமிகுத் தனைத்துலகத்

     திசைக்கருதிக் கடற்பரவித்

          திடத்தொடதிர்த் தெதிர்த்திடலுற் ...... றிடுசூரன்

 

சிரத்துடன்மற் புயத்தகலத்

     தினிற்குருதிக் கடற்பெருகச்

          சிறப்புமிகத் திறத்தொடுகைத் ...... திடும்வேலா

 

கனத்தமருப் பினக்கரிநற்

     கலைத்திரள்கற் புடைக்கிளியுட்

          கருத்துருகத் தினைக்குளிசைத் ...... திசைபாடி

 

கனிக்குதலைச் சிறுக்குயிலைக்

     கதித்தமறக் குலப்பதியிற்

          களிப்பொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

வினைத் திரளுக்கு இருப்பு என, வித்-

     தகப் படவில், சலபிலம் இட்டு,

          இசைக்கும் மிடல் குடிற்கு இடைபுக் ...... கிடு,மாய

 

விளைப் பகுதிப் பயப்பு அளவுற்று

     அமைத்தது என, கருத்து அமைவில்,

          சகப் பொருள் மெய்க்கு உறப் பருகக் ...... கருதாதே,

 

எனக்கு எதிர் ஒப்பு இசைப்பவர், எத்

     தலத்து உளர், எச் சமர்த்தர் என,

          புறத்து உரை இட்டு, இகழ்ச்சியின் உற்று,... இளையாது,உன்

 

எழில் கமலத்து இணைக்கழலைத்

     தமிழ்ச் சுவை இட்டு, இறப்பு அற, எய்த்-

          திடக் கருணைத் திறத்து, எனை வைத்து ......அருள்வாயே.

 

சினத்தை மிகுத்து, அனைத்துஉலகத்

     திசைக் கருதி, கடல் பரவித்

          திடத்தொடு எதிர்த்து, எதிர்த்திடல் உற் ...... றிடுசூரன்

 

சிரத்துடன், மல் புயத்து, அகலத்

     தினில் குருதிக் கடல் பெருக,

          சிறப்பு மிகத் திறத்தொடு உகைத் ...... திடும்வேலா!

 

கனத்த மருப்பு இனக் கரி,நல்

     கலைத் திரள், கற்புடைக் கிளியுள்

          கருத்து உருகத் தினைக்குள் இசைத்து,...... இசைபாடி

 

கனிக் குதலைச் சிறுக் குயிலைக்

     கதித்த மறக் குலப் பதியில்

          களிப்பொடு கைப் பிடித்த மணப் ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

 

     சினத்தை மிகுத்து --- கோபம் மிகுந்து,

 

     அனைத்து உலகத் திசைக் கரதி --- உலகின் அனைத்துத் திசைகளையும் வெல்லக் கருதி,

 

     கடல் பரவி --- கடல் மீதிலும் தனது ஆணை செல்லவேண்டும் என்று கருதி,

 

     திடத்தொடு அதிர்த்து எதிர்த்திடல் உற்றிடு சூரன் ---  வலிமையுடன் எவரையும் நடுங்கச் செய்து எதிர்த்தவனாகிய சூரபதுமனுடைய

 

     சிரத்துடன் --- தலையில் இருந்தும்,

 

     மற் புயத்து அகலத்தினில் --- திரண்ட தோள்களிலும், மார்பிலும் இருந்தும்,

 

     குருதிக் கடல் பெருக --- இரத்தமானது கடல் போல் பெருக்கெடுக்கும்படியாக,

 

     சிறப்பு மிகத் திறத்தொடு உகைத்திடும் வேலா --- புகழ் மிகுந்த சாமர்த்தியத்துடன் வேலாயுதத்தை விடுத்து அருளிய வேலவரே! 

 

     கனத்த மருப்பு இனக் கரி --- கனத்த தந்தங்களை உடைய யானைகளின் கூட்டமும்,

 

     நல் கலைத் திரள் --- அழகிய மான்களின் கூட்டமும்,

 

     கற்புடைக் கிளி உள் கருத்து உருக --- சொல்லுவதைக் கற்றுத் திருப்பிச் சொல்லவல்ல கிளிகளின் கூட்டமும் உள்ளம் உருகும்படியாக,

 

     தினைக்குள் இசைத்து இசை பாடி --- தினைப்புனத்தில் இருந்துகொண்டு இசையோடு பாடியவள் ஆகிய

 

     கனிக் குதலைச் சிறுக் குயிலை ---  கனிரசம் போன்றதும், மழலை ததும்புவதும் ஆன இனிய குரலைக் கொண்ட குயிலை ஒத்தவள் ஆகிய வள்ளிநாயகியை,

 

     கதித்த மறக் குலப் பதியில் --- வேடர் கூட்டத்தினர் வாழ்ந்திருந்த பதியில்,

 

     களிப்பொடு கைப் பிடித்த மணப் பெருமாளே --- உள்ள மகிழ்ச்சியுடன் கரம் பற்றிய மணவாளராகிய பெருமையில் மிக்கவரே!

 

      வினைத் திரளுக்கு இருப்பு என வித்தகப் படவில் --- வினைக் கூட்டங்களுக்கு இருப்பிடம் என்று சொல்லப்படும் அதிசயமான ஓடம் ஆகியதும்,

 

       சல(ம்) பிலம் இட்டு --- நீர் மிகுந்த குகையினை ஒத்து உள்ளதும்,

 

     இசைக்கும் மிடல் குடிற்கு இடை புக்கு இடும் --- கட்டப்பட்ட வலிமை மிக்கதும் ஆன உடலினுள் புகுந்துள்ள இந்த,

 

       மாய விளைப் பகுதிப் பயப்பு --- மாய வாழ்க்கையானது

 

     அளவுற்று அமைத்தது எனக் கருத்து அமைவில் --- நெடுங்காலம் நீடித்து இருக்கும் என்னும் கருத்தினைக் கொண்டு,

 

      சகப் பொருள் மெய்க்கு உறப் பருகக் கருதாதே --- உலகத்தில் உள்ள அனுபவப் பொருள்களின் உண்மைக்கு ஏற்ப அனுபவிக்க எண்ணாமல்,

 

      எனக்கு எதிர் ஒப்ப இசைப்பவர் --- எனக்கு எதிர் நிகராக உள்ளவர்,

 

     எத்தலத்து உளர் --- எந்த உலகத்து உள்ளார்?

 

     எச் சமர்த்தர் என --- எனக்கு எதிராக எந்த விதமான திறமையை உடையவர்கள் என்று

 

      புறத்து உரை இட்டு --- வெளியில் சொல்லிக் கொண்டு,

 

     இகழ்ச்சியின் உற்று இளையாது --- விழிப்பு இன்மையோடு இருந்து நான் இளைத்துப் போகாமல்,

 

      உன் எழில் கமலத்து இணைக் கழலை --- வீரக் கழலை அணிந்த உமது தாமரை மலர் போன்ற திருவடிகளை,

 

     தமிழ்ச் சுவை இட்டு --- இனிமையான தமிழ்ப் பாமாலைகளைக் கொண்டு வழிபட்டு,

 

     இறப்பு அற எய்த்திட--- மரணம் இல்லாப் பெருவாழ்வை அடியேன் பெற்றிட,

 

     கருணைத் திறத்து என வைத்து அருள்வாயே --- உனது கருணையின் வல்லபத்தில் அடியேனைச் என்னைச் சேர்த்து அருள் புரிவாயாக.


பொழிப்புரை

 

 

     கோபம் மிகுந்துஉலகின் அனைத்துத் திசைகளையும் வெல்லக் கருதி, கடல் மீதிலும் தனது ஆணை செல்லவேண்டும் என்று கருதி, வலிமையுடன் எவரையும் நடுங்கச் செய்து எதிர்த்தவனாகிய சூரபதுமனுடையதலையில் இருந்தும், திரண்ட தோள்களிலும், மார்பிலும் இருந்தும்,இரத்தமானது கடல் போல் பெருக்கெடுக்கும்படியாக,புகழ் மிகுந்த சாமர்த்தியத்துடன் வேலாயுதத்தை விடுத்து அருளிய வேலவரே! 

 

            கனத்த தந்தங்களை உடைய யானைகளின் கூட்டமும், அழகிய மான்களின் கூட்டமும், சொல்லுவதைக் கற்றுத் திருப்பிச் சொல்லவல்ல கிளிகளின் கூட்டமும் உள்ளம் உருகும்படியாக, தினைப்புனத்தில் இருந்துகொண்டு இசையோடு பாடியவள் ஆகிய கனிரசம் போன்றதும்,மழலை ததும்புவதும் ஆன இனிய குரலைக் கொண்ட குயிலை ஒத்தவள் ஆகிய வள்ளிநாயகியை,வேடர் கூட்டத்தினர் வாழ்ந்திருந்த பதியில், திருவுள்ளம் மகிழ்ந்து கரம் பற்றிய மணவாளராகிய பெருமையில் மிக்கவரே!

 

            வினைக் கூட்டங்களுக்கு இருப்பிடம் என்று சொல்லப்படும் அதிசயமான ஓடம் ஆகியதும், நீர் மிகுந்த குகையினை ஒத்து உள்ளதும், கட்டப்பட்ட வலிமை மிக்கதும் ஆன உடலினுள் புகுந்துள்ள இந்தமாய உடல் வாழ்க்கையானதுநெடுங்காலம் நீடித்து இருக்கும் என்னும் கருத்தினைக் கொண்டு, உலகத்தில் உள்ள அனுபவப் பொருள்களின் உண்மைக்கு ஏற்ப அனுபவிக்க எண்ணாமல், எனக்கு எதிர் நிகராக உள்ளவர்எந்த உலகத்து உள்ளார்? எனக்கு எதிராக எந்த விதமான திறமையை உடையவர்கள் என்றுவெளியில் சொல்லிக் கொண்டு, விழிப்பு இன்மையோடு இருந்து நான் இளைத்துப் போகாமல்,வீரக் கழலை அணிந்த உமது தாமரை மலர் போன்ற திருவடிகளைஇனிமையான தமிழ்ப் பாமாலைகளைக் கொண்டு வழிபட்டு, மரணம் இல்லாப் பெருவாழ்வை அடியேன் பெற்றிட, உனது கருணையின் வல்லபத்தில் அடியேனைச் என்னைச் சேர்த்து அருள் புரிவாயாக.

 

 

விரிவுரை

 

வினைத் திரளுக்கு இருப்பு என வித்தகப் படவில்--- 

 

படவு --- சிறிய ஓடம்.

 

"படவு அது ஏறிப் பாரொடு விண்ணும் பணிந்து ஏத்த" என வரும் திருவாசகப் பாடல் வரி காண்க.

 

படவு என்பது இங்கே ஆன்மா வினையின் காரணமாக எடுத்து வந்த உடம்பைக் குறிக்கும்.

 

வினைத் திரளுக்கு இருப்பிடமான சிறிய படகு என்று சொல்லப்படும் உடம்பை எடுத்துள்ள ஆன்மா பிறவியாகிய பெருங்கடலில் போக்கு வரவு புரிகின்றது.

 

இசைக்கும் மிடல் குடிற்கு இடை புக்கு இடும் --- 

 

மிடல் --- வலிமை.  குடில் --- உடல்.

 

மாயவிளைப் பகுதிப் பயப்பு--- 

 

மாயையால் விளைந்த உடம்பைக் கொண்டு வாழுகின்ற மாய வாழ்க்கை.

 

அளவுற்று அமைத்தது எனக் கருத்து அமைவில் சகப் பொருள் மெய்க்கு உறப் பருகக் கருதாதே--- 

 

மாய வாழ்க்கையானது ஒவ்வொருவருக்கும் அவரவது வினைப் பயனுக்கு ஏற்ப அனுபோகத்துக்கு உரியது. இவனைப் போகம் உள்ள வரையில் இந்த உடம்பு நிலைத்து இருக்கும். வினைப் போகம் தீர்ந்த உடனே, இல்லாமல் போய்விடும். "வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய், வினைதான் தீர்ந்தால் தினைப்போது அளவும் நில்லாது" என்பார் பட்டினத்தடிகள். 

 

எனக்கு எதிர் ஒப்ப இசைப்பவர் எத்தலத்து உளர் எச் சமர்த்தர் எனப் புறத்து உரை இட்டு இகழ்ச்சியின் உற்று இளையாது--- 

 

இந்த உண்மையை உணர்ந்து கொள்ளாமல், இந்த மாய உடம்பும் இதற்கென வகுக்கப்பட்ட வினைப் போகமும் எப்போதும் நிலைத்து இருக்கும் என்று எண்ணி,அறியாமையால் இறுமாந்து, "எனக்கு எதிர் யார்?" என்றும், "எனக்கு எதிர் ஆகும் திறம் உள்ளவர் யார்?" என்று வீறாப்பு பேசிக் கொண்டு இருந்து, அருமையாகப் பெற்ற இந்த உடம்பினைக் கொண்டு பெறவேண்டிய பயனை அறியாது இகழ்ச்சியாக இருத்தல் கூடாது. "யார் யார்க்கும் தாழ்ச்சி சொல்லல்" வேண்டும். பெருமையைப் பெறவேண்டுமானால், பணிவு இருக்கவேண்டும். "பணியுமாம் என்றும் பெருமை" என்றார் நாயனார்.

 

உன் எழில் கமலத்து இணைக் கழலை தமிழ்ச் சுவை இட்டு இறப்பு அற எய்த்திட கருணைத் திறத்து என வைத்து அருள்வாயே--- 

 

"எய்திட" என்னும் சொல், பாடல் சந்தம் நோக்கி, "எய்த்திட" என்று வந்தது.

 

ஆன்மா பற்றுக்கோடு இல்லாமல் வாழ முடியாது. நாமரூபம் இல்லாத ஆன்மா, வினைகளைத் துய்த்து, அருள் நலம் பெறப் பற்றுக்கோடாக உடம்பு வாய்த்தது. உடம்பில் இருந்துகொண்டு, உலகப் பற்றுக்களைச் சார்ந்து இருப்பதை விடுத்து, இறையை பற்றிக் கொண்டு வாழவேண்டும். ஏன் இறையைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்னும் வினா எழும்.

 

"பற்றுக பற்று அற்றான் பற்றினை, அப் பற்றைப்

பற்றுக பற்று விடற்கு"

 

என்னும் திருவள்ளுவ நாயனாரின் அருள்வாக்கும்,

 

"இப்பாசத்தைப் பற்று அற, நாம் பற்றுவான் பற்றிய பேரானந்தம்"

 

என்னும் மணிவாசகப் பெருமானாரின் அருள் வாக்கும் சிந்தைக்கு உரியவை.

 

இறைவன் திருவடிப் பற்றை இறுகப் பற்றிக் கொள்வதற்குத் தேவைப்படுவது, "தமிழ்ச் சுவை" என்றார் அடிகளார்.

உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழியே ஆகும். இறைவன் அருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே. இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆராய்ந்தமையாலும், பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதியனுப்பியது தமிழிலே ஆதலானும், சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும் அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும் இதன் பெருமை நன்கு விளங்குகின்றது. முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ்.கற்புணையை நற்புணையாக்கியது தமிழ்.எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ். இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ். குதிரைச் சேவகனாக வரச்செய்தது தமிழ்.கற்றூணில் காட்சிதரச் செய்தது தமிழ். பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ். இயற்கையான மொழி தமிழ். பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது தமிழ். 

சிவபெருமானும் தமிழ்ப் பாடலில் காதல் உடையவர். சுந்தர்மூர்த்தி சுவாமிகள் பாடலை மிகவும் விரும்பியவர்.

"மற்று,நீ வன்மை பேசி, வன்தொண்டன் என்னும் நாமம்  

பெற்றனை; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க

அர்ச்சனை பாட்டே ஆகும்;  ஆதலால் மண்மேல் நம்மைச்

சொல்தமிழ் பாடுக' என்றார் தூமறை பாடும் வாயார்".

 

"சொல்ஆர் தமிழ் இசைபாடிய தொண்டன் தனை ‘இன்னும்    

பல்லாறு உலகினில் நம்புகழ் பாடு' என்று உறு பரிவின்

நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன்

எல்லா உலகு உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான்".

 

"என்ற பொழுதில் இறைவர்தாம்

     எதிர்நின்று அருளாது எழும் ஒலியால்

மன்றின் இடை நம் கூத்து ஆடல்

     வந்து வணங்கி வன்தொண்டன்

ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி

     உரைசேர் பதிகம் பாடுதலால்

நின்று கேட்டு வரத் தாழ்த்தோம்

     என்றார் அவரை நினைப்பிப்பார்".

 

என வரும் பெரியபுராணப் பாடல்களையும்,அவை சார்ந்த அருள் வரலாறுகளையும் எண்ணி இன்பம் உறுக.

 

இறைவன், "தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டான்" என்று போற்றினார் மணிவாசகப் பெருமான். பெருமானுக்கு, அவர் ஆய்ந்த தமிழில் விருப்பம் மிகுதி. ஆதலால்,

 

"சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்

    பலத்தும்,என் சிந்தையுள்ளும்

உறைவான்,உயர்மதிற் கூடலின்

    ஆய்ந்த ஒண் தீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனையோ?அன்றி

    ஏழிசைச் சூழல்புக்கோ?

இறைவா! தடவரைத் தோட்கு என்கொல்

    ஆம் புகுந்து எய்தியதே"

 

என்று மணிவாசகப் பெருமான் திருக்கோவையாரில் வைத்துப் பாடி அருளினார்."தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன்" என்று பாடினார் அப்பர் பெருமான்.

 

கண்ணுதல் பெரும் கடவுளும் கழகமோடு அமர்ந்து

பண்உறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ்,ஏனை

மண்ணிடைச் சில இலக்கண வரம்புஇலா மொழிபோல்

எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?

 

தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும், முதலை

உண்ட பாலனை அழைத்ததும், எலும்பு பெண் உருவாக்

கண்டதும், மறைக் கதவினைத் திறந்ததும், கன்னித்

தண்தமிழ்ச் சொலோ, மறுபுலச் சொற்களோ சாற்றீரே.

 

எனத் திருவிளையாடல் புராணம் கூறுமாறு காண்க.

 

இவ்வாறெல்லாம் சிறப்புப் பெற்ற முத்தமிழால் பாடித் துதிக்கின்ற முத்தர்களின் துதியில் மகிழ்கின்றவர் சிவபெருமான். அவருக்கு உபதேசம் புரிந்து அருளியவர் முருகப் பெருமான் என்கின்றார் அடிகளார்.

 

முருகப் பெருமானைச் "செந்தமிழ்ப் பெருமாள்" என்றே அரணகிரிநாதப் பெருமான் இரண்டு திருப்புகழ்ப் பாடல்களில் வைத்துப் போற்றி உள்ளார். 

 

     எனவே, சுவை மிக்க தமிழால் இறைவனை வழிபட்டுப் பேறு பெறுதல் வேண்டும் என்பது தெளிவாகும்.

 

கனத்த மருப்பு இனக் கரி, நல் கலைத் திரள் கற்புடைக் கிளி உள் கருத்து உருக, தினைக்குள் இசைத்து இசை பாடி, கனிக் குதலைச் சிறுக் குயிலை கதித்த மறக் குலப் பதியில் களிப்பொடு கைப் பிடித்த மணப் பெருமாளே--- 

 

விலங்கினங்களும், பறவை இனங்களும் உள்ளம் உருகும்படியாக இனிய குரலால் பாடிக் கொண்டு தினைப்புனத்தில் காவல் காத்துக் கொண்டு இருந்தவர் வள்ளிநாயகியார். எம்பிராட்டியின் இனிய மொழியை, "இந்தளாம்ருத வசனம்" என்றும் "ரஞ்சிதாம்ருத வசனம்" என்றும், "கொல்லியைச் சேர்கின்ற சொல்லி" என்றும் அருணகிரிநாதப் பெருமான் போற்றிப் புகழ்ந்து உள்ளார். "கொச்சை மொழிச்சி" என்று "பச்சிலை இட்டு" எனத் தொடங்கும் திருப்புகழிலும், "பாகு கனிமொழி மாது" என்று பிறிதோர் திருப்புகழிலும் அடிகளார் வள்ளிநாயகியின் அருமையைப் புகழ்ந்து உள்ளார்.

 

கருத்துரை

 

முருகா! தமிழால் உன்னைப் பாடிப் பரவ அருள்வாய்

நமசிவாய - சிவாயநம



நமசிவாய - சிவாயநம

-----

 

     உலகில் உள்ள ஒவ்வொரு சமயத்திற்கும், வழிபடு தெய்வம் ஒன்று இருக்கும். கடவுள் என்று ஒரு பொருள் உண்டு என்று உடன்பாடாகவோ, இல்லை என்று எதிர்மறையாகவோ கூறாத புத்தம் முதலான சில சமயங்களும் உண்டு. கடவுள் உண்டு என்று சொல்லுகின்ற சமயங்களுள், வழிபடு தெய்வத்திற்கு உரிய மந்திரம் ஒன்று இருக்கும். அதனை உச்சரித்து வந்தால் நன்மை விளையும் என்பது நம்பிக்கை. "மந்திரம்" என்னும் சொல்லுக்கு, "நினைப்பவரைக் காப்பது" என்று பொருள் கூறுவர்.

 

     தமிழகத்தில் சைவம், வைணவம் என்று இரு தொன்மையான சபயங்கள் உள்ளன. அவை யாரால் எப்போது தோற்றுவிக்கப் பட்டவை என்பதை ஆராய்ந்து அறுதியிட முடியாது. அவ்வப்போது அவதரித்த நாயன்மார்களாலும், அருளாளர்களாலும், ஆழ்வாராதிகளாலும் அவை விளக்கம் செய்யப்பட்டன. 

 

     சைவசமயம் என்பது,  சிவசமயம், சிவநெறி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. "சிவம்" என்னும் சொல்லுக்கு "அன்பு" என்றே பொருள். அன்பு உள்ள இடத்தில் சிவம் விளக்கம் பெற்று இருக்கும். எனவே, "அன்பினில் விளைந்த ஆரமுதே" என்றும், "நேயத்தே நின்ற நிமலன்" என்றும் அருளினார் மணிவாசகப் பெருமான். அன்பு என்றாலும், சிவம் என்றாலும் ஒன்றே. அன்பு வேறு,சிவம் வேறு என்று சொல்லுவோர் அறிவில்லாதவர் என்பதால், 

 

"அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்;

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்;

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்,

அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே".

 

என்னும் திருமந்திரப் பாடலை அருளிச் செய்து, அன்பு வேறு சிவம் வேறு என்பார் அறிவில்லாதவர் என்றும், அன்பும் சிவமும் ஒன்று என்பதே உண்மை என்றும், இதனை உணர்ந்தார் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பர் (உள்ளத்தால் பொருந்தி இருப்பார்) என்றும் கூறுகின்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

 

     சைவத்திற்கு உரிய மந்திரமாகிய "நமசிவாய" என்னும் திருவைந்தெழுத்து அல்லது பஞ்சாக்கரம், "ஐந்துபதம்" என்று சொல்லப்படும். ஒவ்வொரு எழுத்துக்கும் பொருள் உண்டு. "அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம் சொல்லி" என்னும் சுந்தரர் தேவாரப் பாடலால் இது விளங்கும். ஐந்து எழுத்துக்களும் வெறும் எழுத்துக்கள் அல்ல. ஒவ்வொரு எழுத்தும் ஒரு பொருளைக் குறிக்கும்.

 

சி --- சிவம் (பதி, இறைவன்)

வ --- சத்தி (திருவருள் ஆற்றல்)

ய --- உயிர் (ஆன்மா)

ந --- திரோதம் (மறைப்பு ஆற்றல்)

ம --- மலம் (உயிர்களைக் கட்டியுள்ள அழுக்கு)

 

     இவற்றுள் நகாரத்தை முதலாக வைத்து, "நமசிவய" என்று ஓதுவது தூல பஞ்சாக்கரம் அல்லது தூல திருவைந்தெழுத்து. தூல பஞ்சாக்கரம் குறித்து, தேவார மூவரும் (திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், அப்பர் என்று அன்போடு வழங்கப்பெறும் திருநாவுக்கரசு நாயனார், சுந்தரர் என்று வழங்கப்பெறும் நம்பியாரூரர்) நமச்சிவாயத் திருப்பதிகம் அருளிச் செய்து உள்ளனர்.

 

     வள்ளல்பெருமானும் திருவருட்பாவில் நான்கு திருப்பதிகங்களை அருளிச் செய்து உள்ளார். இரண்டு திருப்பதிகங்களில் தூலபஞ்சாக்கரத்தையும், ஒரு திருப்பதிகத்தில் சூக்கும பஞ்சாக்கரத்தையும், ஒரு திருப்பதிகத்தில் காரண பஞ்சாக்கரத்தையும் வைத்துப் பாடி உள்ளார். "நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே" என்றும், "நமச்சிவாயத்தை நான் மறவேனே" என்றும் தூலபஞ்சாக்கரம் குறித்துப் பாடிய வள்ளல்பெருமான், "சிவாயநம என்று இடு நீறே" என்று தூலபஞ்சாகரத்தைக் குறித்து ஒரு திருப்பதிகமும் பாடி உள்ளார்.

 

     தூலபஞ்சாக்கரம் பொது. சூக்குமபஞ்சாக்கரம் சிறப்பு. நகரத்தை முதலாக வைத்து ஓதப் பெறுவது தூலபஞ்சாக்கரம் (நமசிவாய). இது காரிய சித்தியைத் தரக் கூடியது என்று பெரியோர் கூறுவர். சிகாரத்தை முதலாக வைத்து ஓதக் கூடிய சூக்குமபஞ்சாக்கரம் (சிவாயநம) காரியசித்தியோடு, ஞானசித்தியையும் அளிக்கவல்லது. இதனை,

 

"நம்முதல் ஓரைந்தின் நாடும் கருமங்கள்,

அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை

சிம்முதல் உள்ளே தெளிய வல்லார்கட்குத்

தம்முதல் ஆகும் சதாசிவன் தானே" 

 

என்னும் திருமந்திரப் பாடலால் தெளிய வைத்தார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

 

"சிவன்,அருள்,ஆவி,திரோதம், மலம் ஐந்தும்

அவன் எழுத்து அஞ்சின் அடைவாம்,- இவன் இன்று

நம்முதலா ஓதில் அருள் நாடாது,நாடும்அருள்

சிம்முதலா ஒதுநீ சென்று".     

 

என்று மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாகிய "உண்மை விளக்கம்" என்னும் நூல் கூறும்.   

 

     "நமசிவாய" என்று தூலமாக ஓதினால், இறையருள் கிடைக்காது. அருள் கிடைக்கவேண்டுமானால், "சிவாயநம" என்று ஓதவேண்டும்.

 

     மூவர் தேவாரத் திருப்பதிகங்களையும், திருமூலர் காட்டிய அருட்பாடல்களையும், வள்ளல்பெருமான் அருளிய திருப்பதிகங்களையும் ஊன்றிப் படித்தால் இந்த உண்மை விளங்கும். "நமசிவாய" எனப் போற்றப்படும் இடங்கள், இறைவனைத் துதிக்கும் பதிகங்களாகவும், "சிவாயநம" என்று போற்றப்படும் இடங்கள், தாம் பெற்ற அனுபவப் பேற்றினைக் கூறும் இடங்களாகவும் அமைந்துள்ளத்தைக் காணலாம்.

 

     "நமசிவாய வாழ்க" எனத் தொடங்கும் திருவாசகத்தில், "சிவாயநம எனப் பெற்றேன்" என்று மணிவாசகப் பெருமான் அருளி உள்ளதில் இருந்து இது தெளிவாகும். "நமசிவாய" என்பது திருப்பெயர். "சிவாயநம" என்பது உச்சரிப்புக்கு, தியானத்துக்கு உரிய மந்திரம். "நாதன் நாமம் நமச்சிவாயவே" என்று திருஞானசம்பந்தப் பெருமான் அருளி உள்ளார். "நாதன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே" என்று வள்ளல்பெருமான் அருளிச் செய்து உள்ளார்.

 

     "சிவாயநம" என்பது அனுபவத்துக்கு உரிய சூக்குமத் திருவைந்தெழுத்து என்பது பின்வரும் பாடல்களால் தெளியப்படும்...

 

"கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்,

உருவாய்த் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன், உனது அருளால்

திருவாய்ப் பொலியச் "சிவாயநம" என்று நீறு அணிந்தேன்,

தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே".

 

என்பது அப்பர் அருளிய தேவாரம்.

 

"நானேயோ தவம் செய்தேன்?

    "சிவாயநம" எனப் பெற்றேன்,

தேனாய் இன் அமுதமுமாய்த்

    தித்திக்கும் சிவபெருமான்

தானே வந்து எனது உள்ளம்

    புகுந்து, அடியேற்கு அருள்செய்தான்,

ஊன் ஆரும் உயிர்வாழ்க்கை

    ஒறுத்து அன்றே வெறுத்திடவே"

 

என்பது மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம்.

 

"நான்செய்த புண்ணியம் யாதோ?

     "சிவாயநம" எனவே

ஊன்செய்த நாவைக் கொண்டு ஓதப்பெற்

     றேன், எனை ஒப்பவர் ஆர்?

வான்செய்த நான்முகத் தோனும்

     திருநெடு மாலும் மற்றைத்

தேன்செய்த கற்பகத் தேவனும்

     தேவரும் செய்ய அரிதே".

 

என்பது வள்ளல்பெருமான் அருளிய திருவருட்பா.

 

     எனவே, "நமசிவாய" என்பது பெயர் என்பதும், "சிவாயநம" என்பது மந்திரம் என்பதும் தெளிவாக விளங்கும். உலகில், நமசிவாயம் என்னும் பெயர் உடையோர் பலர் உண்டு. சிவாயநம என்னும் பெயர் உடையோர் ஒருவரும் இல்லை. நடுவீதியில் இருந்துகொண்டு, நமசிவாயம் என்று அழைத்தால், யாராவது திரும்பிப் பார்ப்பார்கள். சிவாயநம என்று கூப்பிட்டால் சிரிப்பார்கள். இறைவன் திருநாமத்தைப் பெயராக சூட்டிக் கொள்வது வழக்கு. மந்திரத்தைப் பெயராக வைத்துக் கொள்வது வழக்கம் அல்ல. "சிவாயநம" என்பது சிந்தனைக்கு, தியானத்துக்கு மட்டுமே உரியது என்பதால், "சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை" என்றார் ஔவைப் பிராட்டியார்.

 

     வைணவர்களிலும், நாராயணன் என்பது இறைவனது திருப்பெயர். "நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்" என்று ஆழ்வார் பாடி உள்ளதை அறியலாம்.  "நாராயணாயநம" என்பது உச்சரிப்புக்கு, தியானத்துக்கு உரிய மந்திரம் ஆகும். "நாராயணாயநம" என்று யாரையும் கூவி அழைப்பது இல்லை.

 

     உண்மை இவ்வாறு இருக்க, சைவப் பெருமக்கள் மட்டும் ஒருவரை ஒருவர் கண்டால், "சிவாயநம" என்று கூவுவது பொருத்தமானது அல்ல. அது தவிர்க்கப்பட வேண்டும். "சிவாயநம" என்பது சூக்கும்பஞ்சாக்கரம். அது தியானத்துக்கு உரியது.

 

     "நமசிவாய" என்னும் தூலபஞ்சாக்கரம், சாதாரண பக்குவர்க்கு, சமயகுருவாக உள்ளவர் உபதேசிப்பது. "சிவாயநம" என்பது, ஞானகுருவாக உள்ளவர், தீவிர பக்குவர்க்கு உபதேசிப்பது. மந்திரங்களை உச்சரிக்கும் முறை கூறப்பட்டு உள்ளது. "மானசம்" என்பது மனதில் மந்திரங்களை உச்சரித்தல், "உபாஞ்சு" என்பது தன்னுடைய காதுகளுக்கு மட்டும் கேட்குமாறு மந்திரங்களை உச்சரித்தல், "வாசகம்" பிறர் காதுகளுக்கும் கேட்குமாறு மந்திரங்களை உச்சரித்தல். எனவே, மந்திரம் என்பது கூவி அழைப்பதற்கு உரியது அல்ல, உச்சரிப்புக்கு உரியது என்பதை அறிந்துகொள்ளுதல் வேண்டும்.

 

வேதத்தை விட்ட அறம் இல்லை



வேதத்தை விட்ட அறம் இல்லை

-----

 

     வேதத்தைவிட்டு விட்டு, அறம் என்ற வார்த்தையைப் பேசிப் பலன் இல்லை. வேதமே அறத்தின் இயல்புகளை உணர்த்தி, அதன் வழி உயிரானது இகபர நலன்களைப் பெறுவதற்காகத் தான். அதுதான் உலகியல் ஆகும். உலகியல் என்று நாம் இப்போது சொல்லிக் கொண்டு இருப்பது எல்லாம் பொருளற்றவை. வேதங்களை ஓதுவதே, அதில் கூறப்பட்டுள்ள நீதிநெறி முறைகளை உணர்ந்து கொண்டு, அவற்றின் வழி நின்று நன்னெறியைச் சார்வதற்கு ஆகும்.

 

"வேதத்தை விட்ட அறம் இல்லை, வேதத்தின்

ஓதத் தகும் அறம் எல்லாம் உ(ள்)ள, தர்க்க

வாதத்தை விட்டு, மதிஞர் வளம் உற்ற

வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே". 

 

என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

 

இதன் பொருள் ---

 

     'உலகியல் வேதநூல் ஒழுக்கம்" என்பார் தெய்வச் சேக்கிழார் பெருமான். உலகாசாரமாகிய நடை என்பது வேதநூலில் விதிக்கப்பட்ட ஒழுக்கமே ஆகும். "நடை" என்னும் சொல்லுக்கு, "ஆசாரம்", ஒழுக்கம்" என்னும் பொருள்கள் உண்டு. வேதங்களில் சொல்லப்படாத அறநெறி என்பதே இல்லை. எனவே, வேதத்திற்கு அறநூல் என்னும் சிறப்புப் பெயர் உண்டு. வேதம் அனைத்து மொழிகளிலும் உண்டு. செந்தமிழ்ப் பொது அறநூல் திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறள் ஆகும். அக் காரணம் பற்றியே அதற்குப் "பொதுமறை" என்னும் திருப்பெயரும் வழங்குவதாயிற்று. வீட்டியலுக்கு உரிய அறநூல் என்பது செந்தமிழ்ச் சிறப்புமறை ஆகிய, தேவார முதலிகள் அருளிய தேவாரம் முதலான பன்னிரு திருமுறைகளே. அவையே, "திருநான்மறை முடிவு" என்று அருளினார் ஔவைப் பிராட்டியார். பின்வரும் பாடலால் இது விளங்கும்,

 

"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும், முனிமொழியும் - கோவை

திருவாசகமும், திருமூலர் சொல்லும்,

ஒரு வாசகம் என்று உணர்".

 

இதன் பொருள் ---

 

     தேவர் குறளும் --- திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறளும், திரு நான்மறை முடிவும் --- சிறப்புப் பொருந்திய நான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும், மூவர் தமிழும் --- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சமயகுரவர் மூவர்களுடைய அருளிச்செயல்கள் ஆகிய தேவாரம் எனப் பொதுவாக வழங்கப்படுகின்ற தமிழ் வேதமும், முனிமொழியும் --- திருவாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்து அருளிய, கோவை திருவாசகமும் --- திருக்கோவையார் திருவாசகங்களும், திருமூலர் சொல்லும் --- (நமது கருமூலம் அறுக்க வந்து அவதரித்த) திருமூல நாயனார் அருளிய திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் --- (ஆகிய இவை யாவும்) ஒரு பொருளையே குறிப்பன என்று அறிவாயாக.

 

            திருக்குறள் முதலிய நூல்கள் அனைத்தும் பொருள்முடிவு வேறுபடாத மெய்ந்நூல்கள் ஆவன.

 

     எனவே, அம் மறைநூல்களை விட்டு வேறாக அறவொழுக்கம் இல்லை. அம் மறைநூல்களில் ஓதத் தகுந்த அற இயல்புகள் அனைத்தும் உள்ளன. அவற்றை ஓதி உணர்ந்து ஒழுகல் வேண்டும். வீணான தருக்க வாதங்களைக் கொண்டு வழக்கிடுகின்ற வல்லாண்மையை விட்டு,நான் எனது என்னும் பற்றுக்கள் அறப்பெற்று, இறைவன் திருவடி உணர்வு கைவந்த நுண்ணறிவு வாய்ந்த நல்லார்காள் எல்லா முறைவளமும் நிரம்பப் பெற்ற வேதங்களை இடையறாது இனிது ஓதித் திருவடிப் பேறாகிய வீட்டினைப் பெற்றார்கள் என்கின்றார் திருமூல நாயனார்.

 

     வேதத்தை எப்பொழுதும் ஓதுபவனாகிய பிரமதேவனும் வேதத்தைச் செய்தவன் இல்லை. ஏனெனில், வேதத்தைச் செய்தவன் முழுமுதற்பரம்பொருள் ஆகிய இறைவனே. அவனை அதனைச் செய்தது, பிரமதேவன் அதனை ஓதி, அறிவு விளங்கப் பெறுதற் பொருட்டும், மற்றும் கன்மத்தில் விருப்பம் உடையவர்க்கு வேள்விகளை உண்டாக்குதற்பொருட்டும், மெய்யுணர்வு பெற விரும்புவோர்க்கு மெய்ப்பொருளை உணர்த்தற் பொருட்டும் ஆகும்.

 

"வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்,

வேதம் உரைத்தானும் வேதா, விளங்கிட

வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா

வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே".

 

என்பது திருமூல நாயனார் அருளிய திருமந்திரம்.

 

     எனவே, வேதநூல் ஒழுக்கம் ஆகிய உலகியலை ஒருவன் அறிருந்திருந்தால்தான், அருளியலில் அவன் தலைப்பட முடியும். வேதங்களில் சொல்லப்பட்டுள்ள அறங்களை, ஐயம் திரிபு அற ஓதி உணர்ந்து, பிறர்க்கு உரைத்து, தான் அடங்கி நிற்கவேண்டும் என்பதே உலகியல் ஆகும். அதனை உணர்த்தவே, எல்லாம் வல்ல சிவபரம்பொருள், கல்லால மரத்தின் நிழலில் எழுந்தருளி இருந்து, அரும் தவசிகள் ஆகிய நால்வருக்கும், வேதங்களின் உட்பொருள் என்றும் புருஷார்த்தங்கள் என்றும் சொல்லப்படும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றின் உட்பொருளைச் சின்முத்திரையால் காட்டி, அதன் மூலம் அவர்களுக்கு உலக இயற்கை தெரியும்படியாகச் செய்தார்.

 

     இறைவனுடைய இந்த அருட்செயலின் பொருளை உணராதவர்கள் உணர்ந்து கொள்ளும்பொருட்டு, மணிவாசகப் பெருமான், திருவாசகத்தில், திருச்சாழல் என்னும் பகுதியில் வினாவிடையாகப் பின்வரும் பாடலைப் பாடினார்.

 

"அருந்தவருக்கு ஆலின்கீழ் அறம்முதலா நான்கினையும் 

இருந்தவருக்கு அருளுமதுஎனக்கறிய இயம்பு ஏடி, 

அரும்தவருக்கு அறம் முதல்நான்கு அன்று அருளிச் செய்திலனேல்

திருந்த அவருக்கு உலக இயற்கை தெரியாகாண் சாழலோ"

 

இந்த வினாவிடைப் பாடலின் பொருள். --- 

 

     ஏடீ --- தோழியே, அருந்தவருக்கு --- அருமையான தவத்தினை உடையவர்கள் ஆகிய சனகாதி முனிவர்க்கு,ஆலின்கீழ் இருந்து --- கல்லால மரத்தின் கீழ் இருந்து, அறம் முதலாம் நான்கினையும் --- அறம் முதலாகக் கூறப்படும் நாற்பொருள்களையும், அவர்க்கு அருளும் அது --- அவர்களுக்கு உரைத்தருளிய காரணத்தை, எனக்கு அறிய இயம்பு --- எனக்குத் தெரியும்படி தெளிவாகக் கூறுவாய்.

 

            அருந்தவருக்கு --- அருந்தவத்தினை உடைய சனகாதி முனிவர்கட்கு, அறம் முதல் நான்கும் --- அறம் முதலாகிய நாற்பொருள்களையும், அன்று அருளிச் செய்திலனேல் --- இறைவன் அந்நாளில் உணர்த்தி அருளிச் செய்யாவிடில்,திருந்து அவருக்கு --- திருந்திய உள்ளத்தினை உடைய அந்த சனகாதி முனிவர்க்கு, உலகு இயற்கை தெரியா காண் --- உலகின் இயல்புகள் புலப்படாமல் போயிக்கும் என்பதை அறிவாயாக.

 

     எனவே, இறைவன் வேதங்களின் பொருளை உணர்த்தியதே, உலகியல் பற்றி அறிந்து கொள்வதற்காகத் தான். உலக இயற்கை தெரியாமல், அருளியல் பற்றி ஏதும் அறிந்து தலைப்பட முடியாது. எழுத்துக்களை அறியாமல், சொற்களை அறிய முடியாது. எழுத்துப் பிழை அறச் சொற்களை அறிந்துகொள்ளாமல், அவற்றின் பொருளை உணர்ந்து கொள்ள முடியாது. "சொல்பாவும் பொருள் நோக்கித் தூங்காதார் மனத்து இருளை வாங்காதான்" என்று அருளினார் அப்பர் பெருமான்.

 

     பொறிபுலன்களில் வழிப்பட்டவர்க்கு, மெய்ப்பொருளை உபதேசிப்பது பயன் தராது. ஆசிரியர் மாட்டுத் தனது கருத்தை வைத்து, தன்னை மறந்து கேட்பவர்க்கே பயன் விளையும். எனவே, ஐம்புலன்களும் அழிந்த சிந்தையினை உடைய,எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அந்தணாளர்க்கு அறம், பொருள்,இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் மொழிந்து அருளினான் என்பதை, "ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர்க்குஅறம்பொருள் இன்ப வீடு மொழிந்த வாயான் முக்கண் ஆதி" என்றும், "அறம் கிளரும் நால்வேதம் ஆலின்கீழ் இருந்து அருளி" என்றும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குறிப்பிட்டு அருளினார்.

 

     "ஒன்றாக நல்லது கொல்லாமை" என்றார் திருவள்ளுவ நாயனார். "கொல்லா நெறியே குருவருள் நெறி" என்றார் வள்ளல்பெருமான். "கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே" என்றார் தாயுமான அடிகளார்.

 

     வேதங்களில் ஊன் வேள்வி சொல்லப்பட்டு இருக்கின்றதே என்னும் ஐயம் உண்டாகலாம். வேதம் பல்வேறு திறத்தார்க்கும் அவரவர்க்கு ஏற்புடைய அறங்களைக் கூறுவதாகலின், அதனுள் கூறப்பட்ட அறங்கள் அவ்வத்திறத்தார்க்கே உரியன. அல்லாமல், அதனுள் கூறப்பட்டுள்ள எல்லா அறங்களும் எல்லார்க்கும் உரியன அல்ல. ஊன் வேள்வி அல்லாமல், தூய நோன்புகளும் வேதங்களில் கூறப்பட்டு உள்ளது. எனவே, "வேதத்தை விட்ட அறம் இல்லை" என்றார். வேதத்தின் சிறப்பை வலியுறுத்த வந்த திருவள்ளுவ  நாயனார். 

 

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன்

உயிர் செகுத்து உண்ணாமை நன்று"

 

என்று அருளினார்.

 

     வேதம் அறத்தைக் கூறும் பொதுநூல் ஆகும். பொதுநூலில் பொதுவாக எல்லோருக்கும் உரிய அறம் கூறப்பட்டது. ஊன்வேள்வியே முழுப் பலனையும் தந்துவிடுமா? என்னும் வினா எழும்புமானால், எண்ணலங்காரமாக சில வாழ்வியல் முறைகள் நூல்களில் சொல்லப்பட்டு உள்ளவை பற்றிக் காண்போம்....

 

1.   குறிக்கோள் ஒன்று. "ஒன்று புரி கொள்கை" என்று திருமுருகாற்றுப்படையில் சொல்லப்பட்டு இருக்கும். அதாவது விடு பேற்றினை அடைவது. அது ஒன்றுதான் கொள்கை ஆக இருக்கவேண்டும். அதற்கு இருபிறப்பு நிலையை ஒருவன் அடைதல் வேண்டும்.

 

2.   இரு பிறப்பு என்பது உபநயனத்திற்கு முன் ஒரு பிறவி,அதற்குப் பின் இரண்டாவது பிறவி என்று அந்தணர்களை இருபிறப்பாளர்கள் என்று குறிப்பிடுவார்கள். 

 

3.   முத்தீ என்பது மூன்று தீயைக் குறிக்கும். வேள்விக்கு உரிய ஆகவனியம், காருக பத்தியம், தக்கினாக்கினி ஆகிய மூன்று யாகங்களை நாளும் வளர்த்தல்.

 

4.   இருக்கு, யஜீர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களை ஓதுவது. 

 

5.   ஐந்து பெரும் வேள்விகளைச் (யாகங்களைச்) செய்தல். 

 

6.   அறுதொழில் என்பது ஒதல் ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்,ஈதல் ஏற்றல் ஆகியவை. அந்தணர்களை அறுதொழிலாளர் என்று நூல்கள் கூறும்.

 

     இவையனைத்தும், வைதிக நெயைப் பின்பற்றுவோர் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டியவை. 

 

     இறுதியாகக் குறிப்பட்டி ஆறுதொழில்களில் வேட்டல் என்பது விருப்பம் என்னும் பொருளைத் தந்து, விரும்பிச் செய்யவேண்டியது, வேள்வி என்றும் யாகம் என்றும் சொல்லப்படும்.

 

     இதில் இல்லறத்தார் தினமும் செய்யவேண்டிய ஐந்து வேள்விகள்: கடவுள் வேள்வி,பிரமவேள்வி,  பூதவேள்வி, மானிடவேள்வி,பிதிர்வேள்வி.

 

1.   கடவுள் வேள்வி எனப்படுவது தேவவேள்வி என்றும் தேவயாகம் என்றும் சொல்லப்படும். இத் கடவுளரை வழிபாடு செய்வதைக் குறிக்கும். (வீட்டிலும், திருக்கோயில்களிலும், மற்ற பொது இடங்களிலும் கடவுளரை வழிபடுதல்)

 

2.   பிரமவேள்வி என்பது, பிரமயாகம் எனப்படும் வேதம் ஓதுதல் ஆகும். (வேதம் என்பது தமிழ்வேதத்தையும் குறிக்கும்.)

 

3.   பூதவேள்வி என்பது, பூதயாகம் என்றும் உயிர்வேள்வி என்றும் சொல்லப்படும். இது உயிர்களுக்கு உணவு இடுதல் ஆகும்.

 

4.   மானிட வேள்வி என்பது, மானுடயாகம் என்றும்மனிதவேள்வி என்றும்சொல்லப்படும் விருந்தோம்பல் ஆகும்.

 

5.   பிதிர்வேள்வி என்பது, பிதிர் யாகம் என்றும், தென்புலத்தார் கடன் தீர்த்தல் என்றும் சொல்லப்படும். இது திதி கொடுத்தல், தர்ப்பணம் கொடுத்தல் என்று இருவகைப்படும்.

 

     இந்த பஞ்சமகா யாகங்கள் அல்லது ஐம்பெரும் வேள்விகள், சைவமுறையில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.

 

1.   கன்மவேள்வி --- வைதிக முறையில் மேலே சொல்லப்பட்ட ஐந்து பெருவேள்விகளும் கருமயாகம் அல்லது கருமவேள்வி ஆகும்.

 

2.   தவவேள்வி --- சமயம், விசேடம் என்று சைவமுறையில் விதிக்கப்பட்ட தீக்கைகளின்படி (தீக்ஷைகளின்படி) சரியை, கிரியை, யோகம் என்னும் மூவகை நெறிகளில் நின்று ஒழுகுதல்.

 

3.   செபவேள்வி --- மேற்சொன்ன தீக்கைகளில் உபதேசமாகப் பெற்ற மந்திரத்தை உருவேற்றுதல்.

 

4.   தியான வேள்வி --- செபத்தின் வழி, சரியை, கிரியை, யோகம் எனப்படும் மூன்று வழிகளிலும், இறைவனை, முறையே உருவம், அருஉருவம், அருவம் என்னும் மூவகைத் திருமேனிகளைத் தியானித்தல்.

 

5.   ஞானவேள்வி --- இறைவனின் இயல்புகள், அவனுக்கு அடிமை ஆன உயிர்களின் இயல்புகள், உயிர்களைப் பற்றி உள்ள ஆணவம், மாயை, கன்மம் என்பனவற்றின் இயல்புகள் ஆகியவற்றை உள்ளவாறு உணர்த்தும் ஞானநூல்களை ஓதுதல், ஓதுவித்தல், கேட்பித்தல், நல்லாசிரியரிடம் நூல்களின் பொருளை இனிது கேட்டல், கேட்டதைச் சிந்தித்தல்.

 

     இன்னும் விரித்தால் மிகப் பெருகும். இந்த வைதிக முறையிலான வேள்விகளையும், சைவ முறையிலான வேள்விகளையும், ஒருவன் தனக்காகச் செய்வது மட்டும் அல்லாமல், பிறருக்காகவும் செய்தல் வேண்டும். "சர்வே ஜனா:சுகினோ பவந்து" என்பதும், "வையகமும் துயர் தீர்கவே" என்பதும், "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" என்பதும் இந்தக் கருத்தில் சொல்லப்படுபவையே.

 

     ஆக, வேள்விகளிலேயே மிக உயர்ந்த்து "ஞானவேள்வி" ஆகும். இது "ஞானயக்ஞம்" என்று வடமொழியில் கூறப்படும். உயர்ந்ததான இந்த ஞானவேள்வியினைத் தலைப்படுவதற்கே, வேதங்களில் அறம் குறித்துக் கூறபட்டது. எனவே, "வேதத்தை விட்ட அறம் இல்லை" என்று சொல்லப்பட்டது. அறவாழ்வில் தலைப்படுவதே உலகியல் ஆகும். அதை அறிந்துகொள்வதே உலக இயற்கை ஆகும். இந்த உலக இயற்கையை சனகாதி முனிவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, கல்லால மரத்தின் நிழலில் இறைவன் குருமுகமாக எழுந்தருளி இருந்து வேதங்களை உட்பொருளை உணர்த்தினான்.

 

     இவற்றை எல்லாம் விட்டுவிட்டு, உலகியல் என்று எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றோம்.

மூலம் 18

 “பொய்யாமை பொன்பெறினும், கள்ளாமை, மெல்லியலார் வையாமை, வார்குழலார் நச்சினும் - நையாமை, ஓர்த்துஉடம்பு பேரும்என்று ஊன்அவாய் உண்ணோனேல் பேர்த்துஉ...