நம்முடனேயே ஐந்து பகைவர்

 


நம்முடனேயே ஐந்து பகைவர்

-----

 

     உலகத்தில் சொத்துப் படைத்தவர்கள் எல்லாம் நிலமும், பொன்னும், வீடும் படைத்திருக்கிறார்கள். சிலருக்கு நிலம், பொன் இல்லாவிட்டாலும் வீடு இருக்கிறது. பலருக்கு வீடு இல்லை என்ற நிலை உள்ளது. ஆனால் நம் எல்லோருக்கும் வீடு என்று ஒன்று இருக்கின்றது. உயிர்கள் தங்கி வாழ்கின்ற அந்த வீட்டிற்கு உடம்பு என்று பெயர். தேகமாகிய வீட்டில் இருக்கின்ற உயிரைத் 'தேகி' என்பார்கள். தேகமாகிய வீட்டுக்கு முகவரி உண்டு; பெயர் உண்டு. முகவரி உள்ள அந்த வீட்டில் உயிர் குடியிருக்கிறது. மனிதன் என்று உயிர் உள்ளவனைத்தான் சொல்கிறோம். முதலியார்,செட்டியார் என்றெல்லாம் முகவரி போட்டுச் சொல்வது உயிருக்கு அடையாளம் அல்ல. அது வாழும் உடம்பை அடையாளம் காண்பதற்காகத்தான். உயிரோடு வாழ்கிற உடம்புக்குத்தான் அத்தகைய முகவரி இட்டுச் சொல்கிறோம். உடம்பில் வாழ்கிற உயிர் புறப்பட்டுப் போய் விட்டால் அந்த உடம்புக்கு முகவரி இல்லை. எல்லா உடம்புக்கும் அப்பொழுது ஒரே பெயர்தான் அமைகிறது. மக்கள் வசிக்காத இடிந்த வீடுகளை முகவரி இல்லாமல் 'குட்டிச்சுவர்'  என்று அழைப்பதைப் போல, உடம்பாகிய வீட்டிலிருந்து உயிர் போய்விட்டால், பேர் இல்லை. அதைப் "பிணம்" என்று அழைக்கிறோம்.

 

 "ஊர் எல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

 பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டுச்

 சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

 நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே"

 

என்கிறார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூலர்.

 

     உடம்பாகிய இந்த வீட்டில் உயிர் குடியிருக்கிறது. இந்த வீடு உயிருக்குச்  சொந்தமானதும் அல்ல. இந்த உடம்பு உயிருக்குச் சொந்தம் என்றால், உயிர் நினைத்தபடி உடம்பு அமைய வேண்டும். நமக்குச் சொந்தமான வீட்டினை,  நாம் விரும்பினால் மேலும் விரிவு படுத்திக் கொள்ளலாம். மாறுதல்களைச் செய்து கொள்ளலாம். நமக்குப் பிள்ளைகள் அதிகமானாலும், மருமகப்பிள்ளைகள் வீட்டுக்கு வந்தாலும் மேலும் தேவையான அறைகளைத் தடுத்துக் கொள்ளலாம். வீட்டுக்குச் சொந்தக்காரர் தம் விருப்பப்படி அதில் பலவிதமான மாறுதல்களைச் செய்து கொள்ள முடியும். ஆனால் வீட்டில் வாடக்கைக்குக் குடியிருப்பவர் எந்த மாறுதலையும் செய்துகொள்ள முடியாது.

 

     உயிர் குடி இருப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த உடம்பில் வேண்டிய மாறுதல்களைச் செய்து கொள்ள முடியாது.  நமக்கு இரண்டு கைகள் போதவில்லை.  நான்கு கைகள் வேண்டும் என்று விரும்பினால் மற்றக் கைகளை ஒட்டிக் கொள்ள முடியாது. நடப்பதற்கு இரண்டு கால்கள் போதாது என்று மேலும் இரண்டு கால்களை ஒட்டி வைத்துக் கொள்ள முடியாது. ஆகையால் இந்த உடம்பு நமக்குச் சொந்தம் அல்ல. இதில் நாம் குடியிருக்கிறோம். வீட்டைப் படைத்தவன் எந்த எந்த மாதிரியாகப் படைத்தானோ அதில் சிறிதளவு கூட மாற்றம் செய்ய முடியாது. இப்படி இருந்தும் இந்த உடம்பு நமக்குச் சொந்தம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

 

     நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார் இதை மிக அழகாகப் பாடி உள்ளார்.

 

"உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி

உடம்பிடை நின்ற உயிரை அறியார்;

உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார்

மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே" 

 

இதன் பொருள் ---

 

     அதிசூக்கும சரீரம் முதலில் சூக்கும சரீரத்தைப் பற்றிப் பின்பு அவ்விரண்டும் கூடித் தூல சரீரத்தைப் பற்றுதலினால் உயிர் அம் மூன்று சரீரத்தோடும் பொருந்தித் தனது செயலைச் செய்துவரும் நிலையைப் பலர் அறியாது, `உடம்புதான் உயிர்` என மயங்குகின்றனர். உடம்போடு உயிருக்குள்ள தொடர்பு, வினை காரணமாகச் சிறிது கால அளவினதே என அறியாதவர்கள், தூய திருமடங்களின் உள்ளே எவ்வாறோ புகுந்துவிட்ட  நாய் `இந்த இடம் நமக்கு நிலையானது அல்ல` என்பதை உணராமல், நிலைத்த ஒன்றுபோல நினைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள உணவைத் தனக்கே உரியனவாக எண்ணிக் களிப்பதுபோலக் களித்திருக்கின்றார்கள்.

 

     நமக்கு என்று ஒன்று இருந்தால், அதில் என்ன என்ன இருப்பவை என்ன என்று தெரிந்திருக்கவேண்டும்.  நாம் ஒரு பெட்டியை வாங்கிப் பல பொருள்களை வைத்துக் கொள்கிறோம். அந்தப் பெட்டி நம்முடையது. அதில் பல பொருள்களையும் வைத்தது நாம்தான்.  எப்போது கேட்டாலும் அந்தப் பெட்டியில் என்ன இருக்கின்றன என்று நம்மால் சொல்ல முடியும். இந்த உடம்பு நமக்குச் சொந்தம் என்றால் இதற்குள் என்ன இருக்கின்றன என்று சொல்ல நமக்குத் தெரிய வேண்டும்.  வயிற்று வலி வந்தால் அது எப்படி வந்தது என்று நமக்குத் தெரிவதில்லை. மருத்துவரிடம் போய்க் காட்டுகிறோம். அவருக்கும் தெரிவதில்லை. எக்ஸ்ரே எடுக்க வேண்டுமென்கிறார். எக்ஸ்ரேக்கும் தெரியாமல் எத்தனையோ நோய்கள் இருக்கின்றன. 

 

     நாம் பல ஆண்டுகள் ஒரு வீட்டில் மாதம் மாதம் வாடகை கொடுத்துக் கொண்டு வாழ்ந்தால் அந்த வீட்டை நம்முடையது என்று சொல்கிறோம். "என்னுடைய வீட்டுக்கு வாருங்கள்" என்று அழைக்கிறோம். அது வழக்கமாகப் போய்விட்டது. அதைப் போல இந்த உடம்பில் நாம் குடியிருப்பதனால் இதை நம்முடையது என்று சொல்லலாம். அந்த மட்டும் உண்மை. ஆனால் குடியிருக்கும் போதாவது அது நமக்கு முழுச் சொந்தமாக இருக்கிறதா? நம்முடைய விருப்பப்படி அதில் வாழமுடியுமா? 

 

     ஒருவர் இறக்கும்போது அவருக்கு ஒரு வீடுதான் சொந்தமாக இருந்தது. வீட்டில் ஒருவர் குடியிருந்தார். இறந்தவருக்கு ஐந்து பிள்ளைகள். அவர்களும் அந்த வீட்டிலேயே வசிக்க வந்துவிட்டார்கள். சின்னஞ்சிறு பிள்ளைகள், செல்லப் பிள்ளைகளாக வாழ்ந்தவர்கள். அவர்கள் செய்கின்ற குறும்பு சொல்லி முடியாது. அந்த வீட்டில் குடியிருந்தவர் திருவாசகம் பாடலாம் என்று உட்காருகிறார். அந்த சமயம் பார்த்து,வீட்டு உரிமையாளரின் பிள்ளைகளில் ஒருவன் ஒரு தகர டப்பாவை வைத்துக் கொண்டு மிருதங்கம் வாசிக்கிறான். அவனுக்கு மிருதங்கம் கிடைக்கவில்லை. ஆகவே, தகர டப்பாவை வைத்துக் கொண்டு கர்ணகடோரமான ஒலியை எழுப்புகிறான். கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்று பேசுகிறான். நல்ல மணமுள்ள ஊதுவத்தியை அவர் வாங்கி வந்திருந்தார். இறைவன் படத்திற்கு முன்னாலே உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யும்போது, அந்த மணமுள்ள வத்தியை ஏற்றி வைத்திருந்தார். அதே சமயத்தில் மற்றொரு பிள்ளை அவர் வீட்டு ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு சுருட்டு ஒன்றைப் புகைக்கிறான். இருக்கிற நாற்றம் போதாது என்று புகையிலைச் சுருட்டு நாற்றத்தை வேறு விடுகிறான். அது அவர் மூக்கில் ஏறித் தலைவலி எடுக்கிறது. கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப்படி சுருட்டுக் குடிக்க எனக்கு உரிமை உண்டு" என்று அவன் பேசுகிறான். அந்த வீட்டின் வாயிலிலே அழகழகான வண்ணக் கோலங்களைக் குடியிருக்கிறவர் போடுகிறார். அடுத்த கணம் மற்றொரு பிள்ளை வாளி நிறையத் தண்ணீரைக் கொண்டு வந்து அதில் கொட்டிக் கோலம் அழிந்து போகும்படி செய்கிறான். கேட்டால் "இது என் வீடு. என் விருப்பப்படி வீதியில் தண்ணிர் கொட்டுவேன். அதைக் கேட்க நீர் யார்?" என்று பேசுகிறான். நல்ல தென்றல் காற்று வருகிறதே என்று அவர் தம் வீட்டு ஜன்னலின் பக்கம் உட்கார்ந்து கொண்டு திருமுறையைக் கொஞ்சம் படிக்கலாம் என்று ஆரம்பிக்கிறார். மற்றொரு பிள்ளை வந்து ஜன்னலை அடைக்கச் சொல்லுகிறான். கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப்படி நடக்கத்தான் வேண்டும்" என்று பேசுகிறான்.

 

     இப்படி அந்த வீட்டின் சொந்தக்காரர்களாகிய ஐந்து பிள்ளைகளாலும், அந்த வீட்டில் குடியிருக்கின்ற ஒருவர் ஐந்து விதமான புலன்களினாலும் அனுபவிக்கின்ற அனுபவங்களுக்குத் தடை உண்டாகிறது. அவர்களுடைய வீட்டில் வசிக்கிற அவர் என்ன செய்வார் குடிக் கூலி கொடுத்துக் கொண்டுதான் அந்த வீட்டில் வசிக்கிறார். ஆனால் தம் விருப்பப்படி எதையும் அங்கே அனுபவிக்கச் சுதந்தரம் இல்லை.

 

     இதைப் போன்றதுதான் நம்முடைய வாழ்வும். நம்முடைய உடம்பாகிய வீட்டில் நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சி இது. 'அற்புதமாகத் திருமுறையைப் பாடுகிறார்களே; அதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கலாம்' என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் அவனுடைய காதோ அதைக் கேட்கப் போகிறதில்லை. அந்த வீட்டுக்கு எதிரேயுள்ள கடையிலிருந்து வரும் திரைப் பாடலைக் கேட்கத் தாவுகிறது. இறைவன் நமக்கு உண்டாக்கிய கைகளால் நல்ல நல்ல பூக்களை எடுத்து, அலங்கரித்து அருச்சனை செய்யலாம்,  என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் இவனுடைய கைகள் அதைச் செய்யப் போவதில்லை. செய்யத்தகாத பல காரியங்களை எல்லாம் செய்ய மனம் திரும்புகிறது. இறைவனது திருவுருவத்திற்கு மலராலும், அணியாலும் அலங்காரம் செய்திருப்பதைக் கண் குளிரக் கண்டு கொஞ்சம் களிக்கலாம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்தக் கண்கள் அதைக் காணப்போவதில்லை; பார்க்கத் தகாத பொருளை எல்லாம் காசு கொடுத்துப் பார்க்கப் போகின்றன. திருக்கோயிலைச் சுற்றி அழகான நந்தவனங்களை எல்லாம் வைத்து இருக்கிறார்கள். அங்கே போய்க் கொஞ்சம் நல்ல காற்றை அனுபவித்துவிட்டு வரலாம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் இவன் கால்கள் அங்கே போவதில்லை. இறைவனுக்கு நிவேதனம் செய்து கோயிலிலே நல்ல பிரசாதங்கள் கொடுக்கிறார்கள்; அவற்றை வாங்கிச் சாப்பிடுவோம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால், இவன் நாக்கு அதைச் சுவைப்பதில்லை. சுவை உணர்வைத் தூண்டி உணவு விடுதிக்கு இழுத்துப் போய்க் காசு கொடுத்து, வாங்கித் தின்னச் சொல்லி விட்டு, வீட்டுக்கு வந்து வாந்தி எடுக்கச் செய்கிறது.

 

     இப்படியாக, இந்த உடம்பாகிய வீட்டில் இருக்கிற நாம், நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமென்று விரும்பினாலும் கூட, இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் என்று சொல்லிக் கொள்ளுகிற உயிரோடு கூடவே வாழுகின்ற ஐந்து இந்திரியங்களும் நம்மை அந்த அந்தக் காரியங்களைச் செய்யவொட்டாமல் தடுக்கின்றன. உண்மையில் இந்திரியங்கள் நமக்குத் துணை புரியவேண்டும். கோயிலுக்குப் போகலாம், இறைவன் திருவுருவத்தைத் தரிசிக்கலாம்; அதனை மனத்திலே தாங்கிச் சிறிது நேரம் தியானம் செய்யலாம் என்பன போன்ற நினைப்புக்கள் நமக்கு வந்தாலும்,அந்த நினைப்பின்படி நடக்கவொட்டாமல், ஐந்து இந்திரியங்களும் நம்மை வேறு வழிக்கு இழுத்துச் சென்று துன்பப்படுத்துகின்றன.

 

     மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து கருவிகளையும் பொறிகள் என்று சொல்வார்கள். இந்திரியம் என்பது வடமொழி. உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம் அனுபவிப்பதற்கு இந்த ஐந்து பொறிகளும் உதவுகின்றன. காதாகிய பொறியினால் அனுபவிப்பது ஓசை. கண்ணாகிய பொறியினால் அனுபவிப்பது காட்சிப் பொருள். மூக்காகிய பொறியினால் அனுபவிக்கக் கூடியது மணம். உடம்பாகிய பொறியினால் அனுபவிக்கக் கூடியது பரிசம். நாக்காகிய பொறியினால் அனுபவிக்கக் கூடியது சுவை.

 

     பல சமயங்களில் மனம் நினைப்பதை இந்திரியங்கள் செய்வதில்லை. நல்ல உணவைத்தான் சாப்பிட வேண்டுமென்று நினைக்கிறோம். சாப்பிடுகின்ற பொறி அதனைக் கேட்பதில்லை. நல்ல பொருள்களையே காண வேண்டுமென்று நினைக்கிறோம். ஆனால் காணுகின்ற பொறி காணத் தகாத பொருளைத்தான் காண்கின்றது. இவ்வாறு இந்த உடம்பாகிய வீட்டில் இருக்கின்ற ஐந்து பொறிகளும், நாம் ஏதேனும்ஒன்றை நினைத்தால் அதற்கு ஏற்ப நடப்பதில்லை. நமக்கு அவை பகைவர்களாகவே இருக்கின்றன. 

 

     இந்த ஐந்து பொறிகளும் மதம் பிடித்த யானைக்குச் சமானம் என்று திருவள்ளுவ நாயனார் சொல்லுகிறார். "உரன் என்னும் தோட்டியான் ஒர் ஐந்தும் காப்பான்,வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து" என்பது திருக்குறள். இந்த்த் திருக்குறளில் யானையைப் பற்றிச் சொல்லவில்லையே என்று தோன்றலாம். அங்குசத்தைப் பற்றிச் சொன்னதால், யானை என்பதை வருவித்துக் கொள்ளவேண்டும். 'மனத் திண்மை என்னும் அங்குசத்தால் பொறிகள் ஐந்தாகிய மதயானைகளை அடக்கிக் காப்பவன், எல்லாவற்றையும் விட மேலானது என்று சொல்லப் பெறும் முத்தி நிலத்தில் சென்று முளைக்கும் வித்துப் போன்றவன்' என்பது இதற்குப் பொருள்.

 

     இந்த உலகத்தில் சாவியாய்ப் போகும் நெல் உண்டு. பயனுள்ள நெல்லும் உண்டு. அறுவடை செய்த எல்லா நெல்லும் நல்ல நெல்லாக இருப்பதில்லை. அறுவடை செய்த நெல்லைத் தூற்றினால் பதர் தனியாகப் பறந்து போய் விழுவது தெரியும். நெல்லாக இருக்கிறவற்றிலும் எல்லா நெல்லும் விதை நெல்லாக இருப்பதில்லை. பெரும்பாலானவை உணவுக்குப் பயன்படும் நெல்லாகத்தான் இருக்கும். விதை நெல் சற்றுக் கனமாக இருக்கும். நன்றாக விளைந்து முற்றிய நெல்லையே விதையாகத் தேர்ந்தெடுப்பார்கள்.விளைகின்ற நெல்லிலே சாவியாய்ப் போன நெல் இருப்பது போல, மனித இனத்திலும் சாவியாய்ப் போன மனிதர்கள் இருக்கிறார்கள். தம்முடைய அருமையான வாழ்நாளை வீணாக அடிக்கிற மனிதர்கள் அவர்கள். இவர்களை மக்கள் என்று சொல்லக்கூடாது. "மக்கட் பதடி எனல்" என்று சொல்கிறார் திருவள்ளுவ நாயனார். தான் பேசுகின்ற பேச்சினாலே தனக்கும் பயன் இல்லாமல், கேட்பவர்களுக்கும் பயன் இல்லாமல் வழவழவென்று பயனில்லாத சொற்களையே பேசுகின்றானே அவனை மனிதன் என்று சொல்லக்கூடாதாம்; பதடி என்று சொல்ல வேண்டுமாம்.

 

     இனிமேல் இந்த உலகத்தில் பிறவாமல் முத்தி இன்பத்தை அடைய இப்பொழுதே கடைக்கால் போடுபவர்கள் விதை நெல்லுக்கு ஒப்பானவர்கள். நன்றாக முற்றி விளைந்த நெல்தான் விளையும்.முற்றின இந்த நெல் முத்தி என்னும் உலகத்தில் விளைவதாகும். 'வரன்’ என்னும் வைப்பாவது முத்தியுலகம். 

 

     மாயாகாரியமாகிய இந்தப் பூவுலகத்திலே வந்து பிறந்த ஆன்மா, இன்பதுன்பங்களை அனுபவித்து, பத்திநெறியிலே நின்று தவம் பண்ணி, இறைவன் திருவருளைப் பெற்றுச் சிறந்து நின்றால், அது திரும்பவும் இந்த உலகத்திலே வந்து பிறவாமல், முத்தி உலகத்திலே போய் விளைகின்றது. இந்த ஆன்மாவானது. இந்தப் பூவுலகத்தில் வளர்ந்து விளைந்து கடைசியில் விதை நெல்லாக முற்றி, முத்தியுலகத்தில் போய் விளைகின்றது. இன்பதுன்பத்திற்கு அப்பாற்பட்ட ஆனந்தத்தை அங்கே அடைகின்றது. இங்கே விளைந்த வித்து அங்கே போய் முளைக்கிறது. தேவர்கள் நம்மைக் காட்டிலும் சிறந்த இன்ப வாழ்வை அனுபவிக்கிறார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் அவர்கள்அடைவது இன்ப வாழ்வு அல்ல; சுக வாழ்வு. முத்தி உலகத்தில் பெறப்படும் ஆனந்தம் என்பது,சுகத்திற்கும் துக்கத்திற்கும் அப்பாற்பட்டது.

 

     "விளக்கினை ஏற்றி வெளியினை அறிமின்" என்றார் திருமூலர். வெளி என்பது வெளிச்சத்தைக் குறிக்கும். விளக்கிலிருந்து வெளிச்சம் வருகிறது. ஆனால் அந்த விளக்குக்கு அடியில் அந்த விளக்கின் நிழல் படிந்திருக்கும். தேவர்கள் விளக்கு ஒளியைப் போன்றவர்கள். இன்பமாகிய ஒளியும்,  துன்பமாகிய நிழலும் உடையவர்கள். ஆனந்தம் என்பது சுகமும் அல்லாமல், துக்கமும் அல்லாமல் எல்லாவற்றையும் கடந்து, நிழலே விழாத சூரியனின் ஒளியைப் போன்றது. துன்பத்தின் சுவடே இல்லாத ஆனந்தத்தை அடைய வேண்டும் என்றால் முத்தியை அடைய வேண்டும். அதனைப் பெறுவதற்கு, அந்த முத்தியை விளைவிக்கக் கூடிய இந்தப் பூலோகத்தில் வந்து பிறந்து, நற்பணிகளை எல்லாம் செய்து, பொறிகளை அடக்கித் தவம் பண்ண வேண்டும்.  ஈரம் காய்ந்து முற்றிய வித்தைப் போல ஆக வேண்டும். ஐம்பொறிகளை அடக்கி, ஈரமின்றி முற்றினால், முத்தி நிலத்தில் முளைத்துப் போகம் பெறலாம்.

 

     திருவள்ளுவர் ஐந்து களிறுகளை அடக்க வேண்டுமென்று சொல்கிறார். இந்த ஐந்து யானைகளும் மதம் பிடித்த யானைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் இழுத்துக் கொண்டு போகின்றது. அவற்றை அடக்க வேண்டும். களிற்றை அடக்குவதற்கு யானைப் பாகன் தன் கையில் அங்குசத்தை வைத்திருக்கிறான். பொறிகளை அடக்கும் அங்குசம்தான் ஞானம். யார் ஞானம் என்ற அங்குசத்தைப் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் ஐந்து பொறிகளாகிய யானைகளை அடக்கி விடுவார்கள். அந்த ஞானத்திற்குத்தான் 'உரன்’  என்று பெயர். உரன் பெற்றவர்கள், ஞானம் பெற்றவர்கள், ஆன்மாவுக்குத் துன்பத்தைத் தருவதற்குக் காரணமான ஐந்து இந்திரியங்கள் என்ற மதம் பிடித்த யானைகளை அடக்குகிறார்கள். அவ்வாறு பொறிகளை அடக்கி வென்றவர்கள் முத்தி நிலத்தில் விளைகின்ற வித்துப் போன்றவர்கள்.

 

     முத்தி அடைவதற்கு எளிய வழி ஒன்றுஇருக்கிறது. "உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம் ஐந்துபொறிகளின் மூலம் அனுபவிக்க விரும்பினால், அப்படியே அனுபவி. ஆனால் அதில் ஒரே ஒரு சின்ன மாறுதல் செய்ய வேண்டும். ஐந்து புலன்களை அவ்வவ் வழியே போகவிடு. அவ்வாறு போக விடுவதில் ஒரு ஒழுங்கு இருக்கட்டும்" என்று நம் பெரியோர்கள் நமக்குச் சொன்னார்கள்.

 

     அடங்காத கொண்டி மாடு இருக்கிறது. அதை அவிழ்த்து விட்டால் வயல்களில் போய் மேய்ந்து பயிர்களை அழித்துவிடும் அதனைக் கட்டிப் போட்டே வைத்தாலும் பயனில்லை. அதை மேயவும் விட வேண்டும். பயிர் பச்சைகளை அழித்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக,  பழைய காலத்தில் பசுக்கள் மேய்வதற்காக என்று ஒவ்வோர் ஊரிலும் மேய்ச்சல் நிலத்தை ஒதுக்கியிருப்பார்கள்.  மாடு புல்தரையில் மேயவும் அதே சமயத்தில் அப்பால் இருக்கிற வயலில் இறங்கிப் பயிரை அழிக்காமல் இருக்கவும் மாட்டுக்காரன் அந்த மைதானத்தின் நடுவே ஒரு முளையை அடித்து, நீளமான கயிற்றினால் மாட்டைக் கட்டி, அந்தக் கயிற்றின் மறுமுனையை இந்த முளையில் கட்டி விடுகிறான்.  மாடு எத்தனை ஓடினாலும், முளையைச் சுற்றி சுற்றித்தான் ஓட முடியும். அது ஓட ஓடக் கயிறு முளையில் சுற்றிக் கொண்டே வருகிறது. கயிறு சுற்றச் சுற்ற மாட்டுக்கும் முளைக்கும் உள்ள தூரம் குறைந்து கொண்டே வரும். மாடு முளையை நெருங்கி வந்து விடும். பின்னும் சுற்றும்போது, கயிறு குறுகிவிடுகிறது. அப்போது வேறு வழியில்லாமல், மாடு அப்படியே முளையின் அடியில் படுத்துக் கொண்டுவிடுகிறது.

 

     அதுபோல, இறைவன் என்ற முளையை அடித்து, ஐந்து பொறிகளான மாட்டை அந்த முளையோடு நீண்ட கயிற்றினால் கட்டி மேய விடவேண்டும். நன்றாகச் சாப்பிட வேண்டுமென்று நாக்கு விரும்புகிறது. "சாப்பாடா வேண்டும்? வா கோயிலுக்கு. அங்கே நல்ல சர்க்கரைப் பொங்கல் கொடுக்கிறார்கள். புளியோதரை கொடுக்கிறார்கள். அவற்றை வாங்கி நன்றாகச் சாப்பிடு" என்று சொல்ல வேண்டும். சர்க்கரைப் பொங்கல் வேண்டுமென்ற நாவின் ஆசையை இங்கே நாம் அடக்கவில்லை. ஆனால் இறைவன் பிரசாதத்தைச் சாப்பிட வேண்டுமென்ற நாட்டத்தை எழுப்புகிறோம். இறைவன் என்ற முளையை அடித்துவிட்டதால், ஆண்டவனுடைய பிரசாதத்தைச் சாப்பிட வேண்டுமென்ற ஆசை எழுகிறது. இதனால் இறைவனுடன் தொடர்பு உண்டாகிறது. சர்க்கரைப் பொங்கல் சாப்பிட வேண்டுமென்ற ஆசை அப்படியே இராது. வர வரக் குறைந்து கொண்டே வரும். இறைவனுடைய சம்பந்தமுள்ள பொருள்களையே நாடும்படியாக முளையடித்து விட்டால் ஒழுங்கற்ற பொறிகளிடம் ஒர் ஒழுங்கு உண்டாகும். அவை யாவும் கடைசியில் வேறு ஒன்றையும் நாடாமல் செயலற்று நிற்கும் நிலைமை வந்து விடும்.

 

     அழகான பொருள்களைப் பார்க்க விரும்பும் கண்களுக்கு, அழகாக அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள இறைவன் திருவுருவத்தைப் பார்க்கப் பழக்கவேண்டும். காது இனிமையான இனிமையான இசையைக் கேட்க வேண்டுமென்று விரும்புகிறது. இனிமையான இறைவன் திருப்புகழைக் கேட்கச் செய்யவேண்டும். கேட்கக் கேட்க இறைவனுடைய தொடர்பு அதற்கு ஏற்படுகிறது. இப்படியே ஒவ்வொரு புலனையும் ஆண்டவன் என்ற முளையை அடித்துத் தொடர்பு படுத்திவிட்டு அதனதன் இச்சைப்படி போக விட வேண்டும்.

 

     இது ஒன்றும் செயற்கு அரிய செயல் அல்ல. ஒரு குழந்தை எல்லாப் புத்தகத்தையும் கிழிக்கிறது. நாம் ஏதாவது ஒரு முக்கியமான புத்தகத்தை வைத்துவிட்டுப் போனால் அதனைக் கிழித்து விடுகிறது. "அதைக் கிழிக்காதே; அடிப்பேன்" என்று கோபித்துக் கொண்டால்,நம்மிடம் இருக்கும் பயத்தில் அப்போதைக்கு அது அதனைக் கிழிக்காமல் இருக்கும். நாம் கொஞ்சம் அப்புறம் போனால் அதைக் கிழித்துவிடும்."இங்கே நார் இருக்கிறது. இதைக் கிழித்து வை" என்று பழக்க வேண்டும். குழந்தையின் கிழிக்கிற கை, அந்த நாரைக் கிழிக்கிறது. கிழிய வேண்டியது கிழிகிறது. அதுபோல, நமது பொறிகளைப் பழக்கவேண்டும்.

 

     புலன்களாகிய யானைகளை இந்த முறையில் நம்முடைய அறிவினாலே ஒழுங்குபடுத்த வேண்டும். அந்த யானைகளை நம் விருப்பப்படி நடக்க வைக்க, அறிவாகிய அங்குசம் நம்மிடம் இருக்கிறது. அந்த அங்குசத்தினால் அவற்றை அடக்கி, இறைவன் என்ற முளையை (தறியை) அடித்து, அதைச் சுற்றிச் சுற்றி எல்லா விதமான இன்ப அனுபவங்களையும் அடையச் செய்தால், அவைதம் விருப்பப்படியே ஒடியாடி,கடைசியில் இறைவனுடைய தொடர்பினால் மனத்தோடு ஒன்றி இறைவன் திருவடியிலேயே படுத்துவிடும். "கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே" என்றார் அப்பர் பெருமான்.

 

     "எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின்" என்றார் திருவள்ளுவ நாயனார். நினைத்தவை அனைத்தையும் செயலாக மாற்றுபவர்கள் மனத்திண்மை உடையவர்கள். நினைத்ததில் சிலவற்றைச் செயலாக மாற்றுபவர்கள் முயற்சி உடையவர்கள். நினைத்தவற்றில் பலவற்றைச் செயலாக மாற்ற இயலாதவர்கள் மனத்திண்மை அடியோடு அற்றவர்கள்.

 

     எண்ணியதை எண்ணியபடி செயலிலே செய்வதற்கு மனத்திலே திண்மை வேண்டும். அவர்கள் தங்களால் செய்யக்கூடிய செயல்களையே எண்ணுவார்கள். அவற்றைச் செயலிலே காட்ட முயற்சி செய்வார்கள். அந்த முயற்சிக்கு எவ்வளவு இடையூறு வந்தாலும் அஞ்ச மாட்டார்கள். தங்கள் முயற்சியிலே கொஞ்சமேனும் தளரமாட்டார்கள். நான் எல்லாவற்றையும் செய்து விடுகிறேன் என்று அளக்க மாட்டார்கள். இவர்களைக் "கருமமே கண்ணாயினார்" என்பார் குமரகுருபர அடிகளார்.

 

     முதலில், செய்யக் கூடியவற்றையே நினைக்கும் பக்குவம் வந்துவிட்டால், பிறகு நினைத்த எல்லாவற்றையும் செய்யும் பக்குவம் வரும். அந்தப் பக்குவம் வருவதற்கு மனத்திண்மை வேண்டும். இந்த மனத்திண்மை ஒரு நாளில் வராது. பொறிகளை வசப்படுத்தி, நினைப்பையும் சொல்லையும் செயலையும் ஒரு நெறியிலே செலுத்த அந்தத் திண்மையே வேண்டும்.

 

     ஐந்து பொறிகளும் சேர்ந்து ஒன்றுபட்டு இறைவனுக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்ற நினைப்பு வருகிறது. ஆனால் ஐந்து பொறிகளும் அதற்கு விரோதமாக இருக்கின்றன. அவற்றை அடக்கும் திண்மை நம்மிடம் இருப்பதில்லை. நாம் தினமும் வழிபாடு செய்கிறோம். ஏதாவது கூச்சல் கேட்டால் அது என்ன சத்தம் என்று கேட்கக் காது போய்விடுகிறது. இறைவனுக்கு அழகாக அலங்காரம் பண்ணியிருக்கிறார்கள்  ஆனால் கோயிலுக்குள் போனால் இறைவனைக் கண் பார்ப்பதில்லை. அங்கே உள்ள வேறு காட்சிகளைப் பார்க்க ஓடி விடுகிறது. பட்டினத்து அடிகள்,

 

"கைஒன்று செய்ய,விழிஒன்று நாட,கருத்து ஒன்று எண்ண,

பொய்ஒன்று வஞ்சக நா ஒன்று பேச,புலால் கமழும்

மெய்ஒன்று சார,செவிஒன்று கேட்கவிரும்பும் யான்

செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினைதீர்த்தவனே."

 

என்று பாடுகிறார்.

 

     ஐந்து இந்திரியங்களும் வெவ்வேறாகக் சிதறுண்டு இருந்தாலும் அவற்றை நெறிப்படுத்தி இறைவன்பால் ஒருமுகமாகச் செலுத்துவது வழிபாடு. வழிபாடு செய்ய உட்கார்ந்தும் இந்த ஐந்து இந்திரியங்களை வெவ்வேறு வழியில் செல்ல விட்டு, மனம் எதையோ நினைத்துக் கொண்டிருந்தால் அது வழிபாடு ஆகாது. வாய்ப் பாட்டுக்காரர் ஒரு பாட்டுப் பாட, குழல் ஊதுகிறவர் வேறொரு பாட்டை வாசிக்க, மிருதங்கக்காரன் ஏதோ ஒரு தாளத்துக்கு வாசித்தால் அது கச்சேரி ஆகாது. ஒரே கூச்சலாக இருக்கும். அது போலத்தான் ஐந்து இந்திரியங்களும் வெவ்வேறு காரியங்களைச் செய்ய,  நாம் வழிபாடு செய்தால் அது வழிபாடாக இராது. "முருகா! நான் உன்னை வழிபடவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால்,இந்த உடம்பாகிய வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிற பொறிகளாகிய ஐந்து பேர்களும் நான் ஆசைப்படுவது போல வழிபாடு செய்யவிடவில்லையே" என்று அருணகிரிநாதர் முறையிடுகிறார்.

 

     இருள் என்பது மாயை, அஞ்ஞானம். நாம் இன்றைக்குச் செய்கிற செயல்கள் எல்லாம் அஞ்ஞானத்தின் விளைவு. இந்தக் செயல்களுக்குப் பொறிகளாகிய ஐந்து பேர்கள் துணையாக இருக்கிறார்கள். இன்பத்தை அடைவதற்கு உரிய செயல்கள் என்ன என்னவோ அவற்றை நாம் செய்யலாம் என்று நினைத்தால் இந்த ஐந்து பேர்களும் அதற்குச் சத்துருக்களாக இருக்கிறார்கள். நாம் சில நல்ல செயல்களைச் செய்ய வேண்டுமென்ற சங்கற்பம் செய்து கொள்ளுகிறோம். ஆனால் அவற்றைச் செய்யவொட்டாமல் இவர்கள் தடுக்கிறார்கள்.

 

     குறிப்பிட்ட ஒரு பொருளை மாத்திரம் நினைந்து சுழலுவது  இருக்கிறதே அதற்கு 'உன்னுதல்' என்று பெயர். முதலிலே பவலவற்றை நினைக்கிறோம். இறைவன் திருக்கோயில் போக வேண்டும்; அங்கே பாடுகிற அருட்பாடல்களைக் கேட்க வேண்டும்; அங்கே அலங்காரம் செய்து வைத்திருக்கிற மூர்த்தியைக் காண வேண்டும்; அங்கே இறைவனுக்கு நிவேதனம் செய்த பிரசாதத்தை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறோம். இவை எல்லாம் பல செயல்களாக இருந்தாலும் அவ்வளவும் ஆண்டவன் என்ற ஒரு பொருளோடு சம்பந்தம் உடையன. அவற்றை எல்லாம் நினைத்தல் "ஒர்தல்" எனப்படும். வெளியில் வரையறையின்றிச் சுற்றித் திரிந்த மனம் இப்போது ஆண்டவன் என்ற பொருளைச் சுற்றியுள்ள வட்டத்திற்குள் சுழலுகிறது.

 

     ஆனால் அது மாத்திரம் போதாது. அதுவே முடிவும் அல்ல. அதற்குப் பின் இறைவன் திருவடியில் மனம் நின்று சுழல வேண்டும். இறைவன் திருவடியில் தூங்க வேண்டும். மனம் வேறு ஒன்றையும் நினைக்காமல் இறைவனையே நினைந்து,அங்கே சுழல வேண்டும். இந்தத் தூக்கத்தைத்தான் தியானம் என்று சொல்வார்கள்.

 

     "மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார், நிலமிசை நீடு வாழ்வார்" என்றும், "தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்மனக்கவலை மாற்றல் அரிது" என்றும் திருக்குறள் கூறுகிறது. திருக்குறளின் உரையில் "சேர்தல்" என்பதற்கு "இடைவிடாது நினைத்தல்" என்று பரிமேலழகர் பொருள் எழுதியிருக்கிறார்.

 

     இறைவனுடைய தாள்கள் இரண்டு. 'உன தாள்' என்பதற்கு 'உன்னுடைய தாள்கள்' என்று பொருள். உன என்பதில் உள்ள அகரம், பின்வருவது பன்மைச் சொல் என்பதைக் குறிக்கும். உனது தலை என்று சொல்லலாம். அது ஒருமை. உனதாள் என்பதில் உள்ள தாள்,பாதங்கள் என்ற பொருளில் வந்த பன்மை. 

 

     "என் உடம்பாகிய வீட்டில் மெய், வாய், விழி, மூக்கு, செவி என்னும் பொறிகளாகிய ஐந்து பாதகர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் உன்னைப் பற்றியவற்றை எண்ணலாம் என்றால் விடமாட்டேன் என்கிறார்கள். உன்னை உன்ன வேண்டுமென்றால்,உன்ன விடமாட்டேன் என்கிறார்கள். (உன்னுதல் - நினைத்தல்) மலரிட்டு உன் தாளைத் தியானம் பண்ணலாம் என்றால் அதற்கும் விடமாட்டேன் என்கிறார்கள். நான் என்ன செய்வேன்? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே!" என்று முறையிடுகிறார் அருணகிரிநாதர்.

 

"ஓர ஒட்டார், ஒன்றை உன்ன ஒட்டார், மலர்இட்டு உனதாள்

சேர ஒட்டார் ஐவர்; செய்வது என் யான்? சென்று தேவர் உய்யச்

சோர நிட்டூரனை சூரனை கார் உடல் சோரி கக்கக்

 கூர கட்டாரி இட்டு ஓர் இமைப் போதினில் கொன்றவனே!"

 

என்பது அவர் முறையிட்டுப் பாடிய பாடல்.

 

     தேவர்கள் உய்ய வேண்டும் என்பதற்காகவே சென்று சூரபதுமனை வதைத்தான் முருகன். மற்ற மற்ற அசுரர்களை எல்லாம் கொல்ல முருகன் போகவில்லை. வீரபாகு முதலிய வீரர்கள் பார்த்துக் கொண்டனர். ஆனால், சூரபதுமனைச் சம்மாரம் செய்ய முருகனே அவன் இருக்குமிடம் சென்றான். தேவர்கள் தங்கள் உரிமைகளை எல்லாம் பறிகொடுத்தார்கள்; இன்பமயமாக இருந்த வாழ்க்கை துன்பமயம் ஆகிவிட்டது. அவர்களது வாழ்க்கையை மீண்டும் இன்பமயமாகக் செய்ய, அவர்கள் உய்யும்படியாகச் செய்ய, முருகன் சூரபதுமன் இருக்கும் இடத்துக்குச் சென்றான்.பகைவன் இருக்குமிடத்திற்கே சென்று,  முற்றுகை இட்டு, அவன் தோற்று ஒடும்படியாகச் செய்வது பெரிய வெற்றி. பகைவன் தன்னுடைய நாட்டுக்கு வந்து முற்றுகை போடும்போது, அவனைத் தோல்வியுறச் செய்து ஒடச் செய்வது சாமானிய வெற்றி.

 

     முருகன் வெற்றிவேலைத் தனது திருக்கரத்திலே தாங்கியவன். அவனை வெல்வதற்குத் தன் கையில் உள்ள வேலை விட்டாலே போதும். ஆயினும், முருகன் தானே அவன் இருக்குமிடத்திற்கு நேரில் சென்றான். சூரனை முருகன் கொன்றது ஓர் இமைப் போதினில்தான் என்கிறார். முருகன் அவனோடு பலகாலம் தனது படைகளோடு போரிட்டான். இதற்குள் ஒரு விநாடியிலாவது அவனுக்கு ஞானம் பிறந்து, "இறைவா! என்னை மன்னித்துவிடு" என்று அவன் காலில் வந்து வீழ்ந்திருந்தாலும் முருகன் மன்னிக்கக் காத்துக் கொண்டுதான் இருந்தான்.

 

     "இராவணன் செய்த அபராதத்திற்காக அவன் மீது இராமனுக்கு சினம் இருந்தால்,  நிராயுதபாணியாக நின்ற இராவணனை இதுதான் சமயம் என்று ஒரே அம்பால் கொன்றிருக்கலாம். "இன்று போய் நாளை வா" என்றான். அந்தச் சமயத்தில் அவன் காட்டிய கருணை வீரக கருணை. 

 

"ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த

பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு

நாளை வா' என நல்கினன், நாகு இளங் கமுகின்

வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்".

 

என்பது கம்பராமாயணம்.

 

     இராவணனிடம் போர் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அவனுடைய துணைவர்கள் எல்லோரும், படைகள் எல்லாம், புயற்காற்றில் அடிபட்ட பூளைப் பூவைப் போலப் போய் விட்டன. அந்தச் சமயத்தில், "இன்று போய் நாளை வா" என்கிறான் கருணை வள்ளலாகிய இராமன். "இன்றைக்குப் போ. இரவில் நன்றாக எண்ணிப் பார். சீதையைத் திருப்பி அனுப்பிவிடுவோம் என்ற  எண்ணம் தோன்றலாம். அப்படித் தோன்றினால், நாளைக்கு நீ வரவேண்டியதில்லை. அப்படியின்றிப் போர் செய்யும் எண்ணம் இருந்தால் நாளைக்கு வா" என்கிறான்.

 

     அங்கே தன்னுடைய சிறந்த கருணை வீரத்தைக் காட்டினான் இராமன். இங்கே முருகன் நினைத்திருந்தால் சூரபதுமனை இருந்த இடத்தில் இருந்துகொண்டே வேலை விடுத்து, கணப்பொழுதில் கொன்று இருக்கலாம். ஆனால், இவன் நல்லவனாக மாட்டானா? தேவர்களுடைய அரசை அவர்களுக்கே திரும்பவும் கொடுத்து, அவர்களைச் சிறையிலிருந்து விடுவித்து விடமாட்டானா?” என்று பல காலம் போரை நீளச் செய்து காத்திருந்தான். தன் விசுவரூபத்தைக் கூட காட்டினான். சூரனுடைய ஆணவம் அடங்கவில்லை. இமைப் பொழுதில் சூரசம்மாரம் நிகழ்ந்தது.

 

     நம்மோடு உடன் இருக்கின்ற ஐந்து புலன்களும் நமக்கு இதம் புரிவன போலத் தோன்றி நம்மை நல்வழிபடுத்தத் துணை புரியாமையால், இவற்றை 'இதசத்துரு' என்று சொல்வார்கள். இறைவன் திருவருளால் அவர்களை நன்மை புரிய வைக்கவேண்டும். ஐந்து புலன்களும் மதம் பிடித்த யானைகள் போல உள்ளன. அவற்றை, (உரன் என்னும் தோட்டியால்) மனத் திண்மையால் அடக்க வேண்டும். வெறி பிடித்த பசுக்கள் போல உள்ளவற்றை நல்லபடியாக மேய்த்து, பால் கறக்கும் பசுக்களாக மாற்ற வேண்டும்.

வேலின் பெருமை

 


வேலின் பெருமை

-----

 

      முருகனுடைய அவதாரத்திற்கு அடிப்படைக் காரணமே சூரனைச் சங்கரிப்பதுதான். சூரசங்காரம் செய்ததே அவன் திருக்கரத்தில் உள்ள வேல்தான். அந்த வேலின் பெருமையை அருணகிரிநாதர் விரித்துக் கூறுகிறார். சூரன் என்பது ஆணவமலத்தைக் குறிக்கும். ஆணவம் உண்மை அறிவை விளங்கவொட்டாமல் செய்வது. அறிவு விளக்கம் பெறாதவன் விலங்குத் தன்மையை உடையவன். ஆணவமலத்தின் வலிமையை அழித்து, மெய்யறிவை விளங்கச் செய்ய வேண்டும். ஒளியின் முன்னே இருள் தனது வலிமை குறைந்துபோகும். ஆணவமலம் துன்பத்தை விளைக்கும். மெய்யறிவு இன்பத்தை விளைக்கும். மெய்யறிவு என்றாலும், மெய்யுணர்வு என்றாலும், ஞானம்  என்றாலும் ஒன்றே. ஞானசத்தியின் அடையாளம் முருகன் திருக்கையில் உள்ள வேல். அது ஆணவமலத்தை வலியிழக்கச் செய்தது என்பதுதான் சூரசம்மாரத்தை விளக்குவது. 

 

     ஏதாவது பொருளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் உள்ளபடியே சொன்னால் அந்தப் பொருளில் ஈடுபாடு தோன்றாது. வருணனைகளோடு அழகுபடுத்திச் சொன்னால் சுவை பிறக்கும். அழகான பொருளை அலங்காரம் பண்ணி வைக்கும்போது அதனைத் தரையில் வைக்க மாட்டார்கள். அடியிலே அழகான பீடம் போட்டு, அதனையும் அலங்காரம் செய்து அதன்மேல்தான் வைப்பார்கள். 

 

     முருகப் பெருமான் திருக்கரத்திலுள்ள வேலின் பெருமையைச் சொல்ல வந்த அருணகிரிநாதர் அதனை அழகாகச் சொல்கிறார். முருகன் தன் கையிலுள்ள வேலினால்தான் சூரனைச் சங்காரம் பண்ணினான். அவனது தந்தை யார் தெரியுமா? அவர், "தேர் அணி இட்டுப் புரம் எரித்தவர். "தேர் அணி இட்டு" என்றால் தேரை அலங்காரம் பண்ணி என்று பொருள். சிவபபரம்பொருள் முப்புரங்களைச் சங்கரித்தார். பறக்கும் கோட்டைகள் மூன்று இருந்தன. இரும்பாலான கோட்டை, வெள்ளியால் ஆன கோட்டை, தங்கத்தாலான கோட்டை ஆகிய மூன்றையும் முருகப் பெருமானுடைய தந்தை எரித்தார். அந்த மூன்று கோட்டைகளையும் உடைய மூன்று அசுரர்கள் மிக்க துன்பத்தைப் பிறருக்கு அளித்து வந்தார்கள். அதனால் அவர்களுடைய புரங்களை அழித்தான்.  உடம்பினாலும், 

உள்ளத்தினாலும் அசுரர்களாக இருந்தவர்களைப் பற்றிப் புராணம் கூறுகிறது. உள்ளத்தினால் அசுரராக இருப்பவர்கள் எல்லாக் காலத்திலும் உண்டு. தனது செயல்களால் தானே இன்பம் அடைகிறவன் மனிதன். தன் செயல்களால் தானும் இன்புற்றுப் பிறரையும் இன்புறச் செய்பவன் தேவன். தன் செயலால் பிறருக்குத் துன்பத்தை விளைவித்து அதைக் கண்டு இன்புறுகிறவன் அசுரன். இன்றைக்கும் தமது செயல்களால் பிறருக்குத் துன்பத்தை விளைவித்து இன்பம் காணுகின்றவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் அசுர சாதியைச் சேர்ந்தவர்களே. மூன்று கோட்டைகளுக்கும் சொந்தக்காரராகிய அசுரர்கள் என்ன செய்தார்கள்? ஆகாயத்தில் விமானம் போல மூன்று கோட்டைகளும் பறந்து வந்து மக்கள் மிகுதியாக வாழும் பகுதியில் அப்படியே இறங்கும். அவை கீழே உட்கார்ந்து கொண்டவுடன்அந்தப் பகுதியிலுள்ள மக்கள் அப்படியே நசுங்கிச் செத்துப் போவார்கள். இவ்வாறு மக்களைச் சாகச் செய்து பார்ப்பதில் அவர்களுக்குக் களிப்பு. இதைக் கண்டு தேவர்களுக்கு மிக்க கலக்கம் ஏற்பட்டு விட்டது. உலகம் வாழ்ந்தால்தான் தேவர்கள் எல்லோரும் வாழ முடியும். 

 

     உலகம் இப்படி அசுரர்களால் அழிந்து ஒழிந்து போவதைக் கண்டு, தேவர்கள் அலறி அடித்துக் கொண்டு போய் இறைவனிடம் முறையிட்டார்கள். தேவர்களும் கொஞ்சம் அகங்காரத்தோடுதான் இருந்தார்கள். அவர்களுடைய அகங்காரத்தையும் போக்க வேண்டுமென்று இறைவன் நினைத்தான். நாம் ஒரு செயலைச் செய்தால், அதில் ஒரு பகுதி தான் நிறைவேறுகிறது. இறைவன், ஒரு செயலைச் செய்யும் போது, பல செயல்கள் நிறைவேறும். அவன் திரிபுரத்தில் இருந்த அசுரர்களை அடக்க விரும்பினான். அதோடு தேவர்களுடைய அகங்காரத்தையும் போக்க எண்ணினான். உடனே தேரில் ஏறிப் புறப்பட்டான். 

 

     சிவபுராணத்தில் திருமாலுக்கு அகங்காரம் வந்ததாகவும், சிவபெருமான் அடக்கியதாகவும் வருகிறது. விஷ்ணு புராணத்தை எடுத்துப் பார்த்தால், சிவபெருமானுக்கு அகங்காரம் சில சமயங்களில் உண்டானதாகவும், திருமால் அடக்கியதாகவும் இருக்கும். அவற்றைக் கொண்டு சிவபெருமான் உயர்ந்தவரா, விஷ்ணு உயர்ந்தவரா என்னும் வாதத்தில் நாம் இறங்கிவிடக் கூடாது.  நாடகக் குழுவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பலவிதமான நாடகங்களை நடித்துக் காட்டுகிறார்கள். ஒரு நாடகத்தில் அண்ணன் அரசனாக வருகிறான்; தம்பி வேலைக்காரனாக வருகிறான். மற்றொரு நாடகத்தில் தம்பி அரசனாக வருகிறான்; அண்ணன் வேலைக்காரனாக வருகிறான். இரண்டு பேரும் ஒரே நாடகத்தில் அரசனாக இருக்க முடியாது அல்லவா? அவர்கள் இரண்டு பேரில் யாரும் உண்மையில் அரசன் அல்ல; வேலைக்காரனும் அல்ல. மாறிமாறி வேலைக்காரனாகவும் அரசனாகவும் வந்தாலும், இரண்டு பேரும் உண்மையில் சமமானவர்களே.

 

     சிவனும் திருமாலும் மாறி மாறி வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். அவர்கள் போட்டுக் கொள்ளுகிற வேஷம் எதுவும் உண்மை அல்ல. கதைகளின் உட்கருத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

     திரிபுர சங்காரக் கதையில் அகங்காரம் திருமால் முதலான தேவர்களுக்கும் உண்டானது. தேரும் படைக்கலங்களும் இல்லாமலேயே தம்மால் திரிபுர சம்மாரத்தைச் செய்யமுடியும் என்பதைக் காட்ட, வில்லை வளைத்து, அம்பினை எய்யாமல், தேவர்களின் அகங்காரத்தை எண்ணி வேடிக்கையாகச் சிரித்தார். திரிபுரங்கள் எரிந்தன. தேவர்களினட் அகந்தையும் எரிந்தது.சிவபிரான் தன் சிரிப்பினால் மூன்று கோட்டைகளையும் எரித்துச் சாம்பலாக்கினாலும், அந்த மூன்று அசுரர்களையும் அழிக்கவில்லை.

 

     அந்த மூன்று அசுரர்களும் பொல்லாத பிள்ளைகளாக இருந்தார்கள். அவர்களுக்கு அனுகூலமாக மூன்று கோட்டைகள் கிடைத்தன. அவர்கள் அந்தக் கோட்டையின் உதவியால் துன்பத்தை விளைவித்தார்கள். தன் குழந்தையின் கையிலுள்ள கோலைப் பிடுங்கி எரித்துவிடும் தாயைப் போல, தன் குழந்தைகளாகிய அசுரர்களுடைய மூன்று கோட்டைகளையும் எரித்தான் சிவபிரான்.  ஆனால் அந்த மூன்று பேரையும் எரிக்கவில்லை. புரங்கள் எரிந்தவுடன் அந்த மூன்று அசுரர்களும் இறைவன் காலில் வந்து விழுந்தார்கள். அவனுடைய சந்நிதியில் அவர்கள் நல்லவர்கள் ஆகிவிட்டார்கள். இறைவன் தன் திருவிடியில் வந்து வீழ்ந்த வாணனை மிருதங்க வித்துவானாக வைத்துக் கொண்டான். மற்ற இரண்டு பேரையும் தன் வாயில் காவலராக வைத்துக் கொண்டான். அதைப் போலவே, தன்னையும் ஆக்க வேண்டும் என்று வேண்டி சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடுகிறார்.

 

"மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில்

    இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்

காவலாளர் என்று ஏவிய பின்னை

    ஒருவன் நீ கரி காடு அரங்காக

மானை நோக்கியோர் மாநடம் மகிழ

    மணிமுழா முழக்க அருள் செய்த

தேவ தேவ! நின் திருவடி அடைந்தேன்,

    செழும்பொழில் திருப்புன்கூர் உள்ளானே."

 

 இதன் பொருள் ---

 

     தேவதேவனே! வளமை மிக்க சோலைகளை உடைய திருப்புன்கூரில் எழுந்தருளி இருப்பவனே!  நீ, முப்புரத்தை அழித்த காலத்தில் அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை உனது திருக் கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்த பின்பு, 

 மற்றொருவனை, நீ, கரிந்த காடே அரங்கமாக, உமையவளை நோக்கி ஒப்பற்ற பெரிய நடனத்தை மகிழ்ந்து செய்யும் பொழுது அழகிய மத்தளத்தை முழக்கும்படி அருள்செய்ததை அறிந்து வந்து அடியேன் உன் திருவடியை அடைந்தேன். என்னையும் ஏன்றுகொண்டு அருள்.

 

     இந்தக் கதையின் உட்கருத்து --- ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களோடும் உள்ள ஆன்மா, இந்த உலகத்தில் பிறந்து துன்பத்தை அடைகிறது. மலத்தோடு சேர்ந்திருக்கும் ஆன்மா களிம்போடு சேர்ந்துள்ள தாமிரத்திற்கு ஒப்பானது. தாமிரத்தை ரசவாதத்தால் பொன்னாக்குவார்கள். ஆனால் ஈயத்தைப் பொன்னாக்க மாட்டார்கள். பாதரசத்தை விட்டு, அதோடு சில மூலிகைச் சாற்றைப் பிழிந்து புடம் இட்டுப் பொன்னாக்குவதால் அதற்கு ரசவாதம் என்று பெயர் வந்தது. தாமிரத்தை நன்றாக விளக்கி வைத்துப் பார்த்தாலே அது பொன்போல ஒளிர்வதைப் பார்க்கலாம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அதில் மாசு ஏறி, அதன் ஒளி மங்குகிறது. தங்கத்தின் தன்மை தாமிரத்தில் இருக்கிறது. தாமிரத்தோடு களிம்பு ஏறாமல் தடுத்தால் அது தங்கம். களிம்பு இல்லாத தாமிரம் தங்கம்; களிம்புள்ள தங்கம் தாமிரம்.

 

     தங்கம் இறைவன். தாமிரம் ஆன்மா. ஆன்மாவிடத்தில் என்றும் ஒட்டிக் கொண்டு பிறவிக்குக் காரணமாக இருக்கிறது மலம் அல்லது பாசம் என்பது. உயிர் இறைவனை ஒட்ட விடாமல் செய்து கொண்டிருப்பது அந்தக் களிம்பாகிய மலம். அது மூன்று விதம்; ஆணவம், கன்மம், மாயை என்பன.  நான், எனது என்று கொள்ளும் அகங்கார மமகாரம் ஆணவம்-  புண்ணிய பாவ வினைகள் கன்மம் -  கடவுளை உணராமல் ஒன்றை ஒன்றாக மயங்கிக் கிடப்பது மாயை. இந்த மூன்றும் சேர்ந்த களிம்பினால் உயிர் மூடப்பட்டிருக்கிறது. இறைவன் எந்தக் காலத்திலும் மல சம்பந்தம் இல்லாதவன். ஆன்மாக்கள் யாவுமே மலத்தோடு சம்பந்தப்பட்ட தாமிரமாக இருக்கின்றன. தாமிரம் தங்கமாக வேண்டும். தாமிரத்தோடு சேர்ந்த களிம்பு போன்றது மலம். அதைப் போக்கும் ஞானமே அக்கினி. மலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று கோட்டைகளையும் வைத்துக் கொண்டுதான் உயிர்கள் பலவிதமான தீமைகளைப் புரிகின்றன. தன் சிரிப்பினாலேயே திரிபுரங்களையும் சங்காரம் செய்த இறைவனை ஆன்மாக்கள் பற்றிக் கொண்டால், அவனுடைய சிரிப்பாகிய ஞான அக்கினியினால் மூன்று மலங்களும் சாம்பலாகிவிடும்.

 

"கருமருவு குகை அனைய காயத்தின் நடுவுள்

   களிம்புதோய் செம்பு அனைய யான்

காண்தக இருத்தியே ஞானஅனல் மூட்டியே

    கனிவுபெற உள்உருக்கிப்

பருவம் அது அறிந்து, நின் அருளான குளிகைகொடு

   பரிசித்து,வேதிசெய்து,

பத்து மாற்றுத் தங்கம் ஆக்கியே பணிகொண்ட

    பட்சத்தை என்சொல்லுவேன்"

 

என்று இறைவன் செய்த ரசவாதம் குறித்துத் தாயுமானவர் பாடுகிறார். "குகையாகிய உடம்பில் களிம்பு தோய்ந்த செம்பைப் போல் உள்ளவன் ஆன்மாவாகிய நான். என்னை ஞான அனலால் உருக்கிக் களிம்பைப் போக்கி அருளாகிய குளிகையைக் கொண்டு தங்கம் ஆக்கினாய்" என்கிறார்.

 

     "ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள்ளுருக்கி" என்பதைக் கவனிக்க வேண்டும். ஞானத்தினால் உருக்கம் உண்டாகும். உள்ளம் உருகாவிட்டால் கனிவு இல்லை; இரக்கம் இல்லை; அருள் இல்லை; பிறருடைய துன்பத்தைக் கண்டு இரங்கும் இளகிய மனம் இல்லை. அன்பர்கள் இறைவனைத் துதிக்க அவர்களுடைய மனத்திலே இளக்கம் ஏற்படும்-  உள்ளம் உருகும். ஞானத் தீயினாலே  உயிரைப் பற்றிக் கொண்டிருக்கிற மலமாகிய களிம்பு பொசுங்கிப் போகும். களிம்பு நீங்கிய தாமிரம் தங்கத்தோடு தங்கமாகச் சேர்ந்து விடுவதைப் போல, மலமாகிய களிம்பு நீங்கிய ஆன்மா இறைவனைச் சார்ந்து விடும்.  இறைவன் தன்னுடைய சிரிப்பினாலேயே ஆன்மாக்களைப் பற்றி இருக்கிற மும்மலக் கோட்டைகளை எரித்து விடுகிறான். தீயவர்களை அவன் சுட்டு எரிப்பதில்லை. அவர்களிடமுள்ள தீமையையே போக்கி ஆட்கொள்கிறான். இத்தனை பெரிய தத்துவங்களை விளக்குகிறது திரிபுர சங்காரம்.

 

     திரிபுர சம்மாரத்தை ஒரு புராணக் கதையாகவே சொல்லுவது மூடர்களின் செயல். அவர்கள் உண்மையை உணராதவர்கள். முப்புர தகனம் என்பது மும்மலங்களை எரித்த அருட்செயல் என்கிறார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

 

"அப்பு அணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்;

முப்புரம் ஆவது மும்மல காரியம்,

அப்புரம் எய்தமை யார் அறிவாரே"    --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     சிவபெருமான் திரிபுரம் எரித்த வரலாற்றைப் புராணங்கள் கூறக் கேட்கின்ற, அறிவில்லாதார் அவ் வரலாற்றை மட்டுமே கேட்டு, அவ்வளவில் சிவபெருமானைப் புகழ்வதோடு அமைந்து விடுகின்றனர். அவ்வரலாற்றால் அறியத் தக்க உண்மையை அறிகின்றவர் மிகச் சிலரே. இரும்பு, வெள்ளி, பொன் என்பவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் முறையே ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலக் கட்டினைக் குறிக்கும். சிவபெருமான் அக் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கினான்என்பது, `அம் மும்மலங்களின் வலியை அழித்து,கட்டு அறுத்து அருள் புரிந்தான்,  புரிகின்றான், 

புரிவான் என்னும் உண்மையையே சிறப்பாக உணர்த்தி நிற்கும்.

 

     இப்படி, திரிபுரங்களை எரித்து அருளிய சிவபரம்பொருளின் திருமகன்தான் முருகப் பெருமான். அவன் திருக்கையில் வேல் இருக்கின்றது. ஐம்முகச் சிவத்திடம் உள்ள அருட்பண்பை, அறுமுகச் சிவத்திடமும் காணலாம். ஞானசத்தியாகிய வேலைக் கொண்டு, சூரபதுமனுடைய அசுரத் தன்மையை மாற்றி, அவனை வேலும் மயிலுமாக ஏற்றுக் கொண்டு அருளினான் முருகப் பெருமான். அதனால் தேவேந்திர லோகம் பிழைத்தது என்று மங்களமாக முடிக்கிறார் அருணகிரிநாதர்.

 

     முருகன் திருக்கையில் உள்ள வேல் மூன்று காரியங்கள் செய்தது.  கிரெளஞ்சமலை குலைந்தது -  அரக்கர் படை குலைந்தது - சூரன் தலைவனாக இருந்து நடத்திய பெரும்படையும் கெட்டது. கிரெளஞ்சம் என்பது அன்றில் என்ற பறவையின் பெயர். அது நெய்தல் நிலத்தில் இருக்கும். பனை மரங்களில் ஆணும் பெண்ணுமாய் இரட்டை இரட்டையாகவே வாழும்; கணமும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கும். அந்தப் பறவையைக் காதலுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்வது வழக்கம். அதன் பெயரை உடையது கிரெளஞ்ச மலை. கெட்டவர்கள் நல்ல பேரோடு நல்லவர்களைப் போல தோற்றம் அளிப்பதுண்டு. அதை இது நினைவூட்டுகிறது. பிறருக்குத் தீங்கு செய்யும் கயவர்கள், 

மனிதர்களைப் போலவே இருப்பார்கள் என்று சொல்லுகிறது திருக்குறள். தாமரை போன்ற முகம் உடையவள் என்கிறோம். தாமரைக்கும் முகத்துக்கும் வேறுபாடு தெரியும். தம்பி மாதிரியே அண்ணன் இருக்கிறான் என்றால், தம்பி வேறு, அண்ணன் வேறு என்று தெரியும். ஒப்பாகச் சொல்லும் பொருள்களுக்குள் வித்தியாசத்தை அறிந்து கொள்ளலாம். ஆனால் நல்லவர், பொல்லாதவர் என்ற இருவருக்குள்ளும் வேறுபாடே தெரியாதாம். "மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன ஒப்பாரி யாம் கண்டது இல்" என்பது திருக்குறள்.  யார் கயவர் என்பதைக் கண்டுகொள்ள முடியாது. 

 

     கிரெளஞ்சாசுரன் காதல் உள்ளம் படைத்த அன்றில் பறவையைப் போலக் காட்சி அளித்தான். காதல் ஒட்டுவது; பகை வெட்டுவது. காதலுக்கு உதாரணமாகிய அன்றில் பறவையைப் போலப் புறத்திலே தோற்றம் அளித்த அவன், ஒர் அழகான மலைபோல் நின்றான், புலி பசுத்தோலைப் போர்த்துக் கொண்டதுபோல். பலர் உண்மையான மலை என்று எண்ணினார்கள். தவம் செய்வதற்குரிய அழகான இடம் என்று எண்ணிச் சிலர் அந்த மலையில் இருந்த குகைக்குள் செல்வார்கள். அந்தச் சமயம் பார்த்து அவன் அதை மூடிக் கொண்டு விடுவான். அவ்வளவுதான், உள்ளே போனவர்கள் அத்தனை பேரும் நசுங்கிச் செத்துப் போவார்கள். இது கிரெளஞ்சாசுரன் வேலை. இந்த அசுரனது சூழ்ச்சி நாளடைவில் எல்லோர்க்கும் தெரிந்தது. தேவர்களுக்கும் தெரிந்தது. அவர்கள் இறைவனிடம் முறையிட்டார்கள். இந்தக் கிரெளஞ்ச மலையைத் தன் கையிலுள்ள வேலினால் அணு அணுவாகக் குலைத்தான் முருகன். அவன் செங்கையில் உள்ள கூர்மையான வேல்  அணுக, கிரெளஞ்ச மலை குலைந்தது. கிரவுஞ்சம் என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். உயிர்களின் வினைத் தொகுதியை முருகன் விடுத்த ஞானசத்தியாகிய வேல் அழித்தது என்பதே இதற்குப் பொருள்.

 

     அதற்குப் பிறகு தாரகாசுரனாகிய யானைமுகன் தன் படையுடன் வந்தான். பின்பு சிங்கமுகாசுரன் வந்தான். முருகனது கூர்மையான வேல் அவர்களையும் சங்காரம் செய்துவிட்டது. சூரனுக்குத் துணையாக இருந்த கிரெளஞ்சம் குலைந்தது என்றவுடனேயே எதற்கும் அஞ்சாது இருந்து அசுரக் கூட்டதிற்கு அச்சம் வந்துவிட்டது. அடுத்துத் தாரகன் முதலிய அசுரர் நேரே அணிவகுத்து வளைந்த படையும் நிலை குலைந்தது.

 

     சூரபதுமனே போர்க்களத்திற்கு வந்துவிட்டான். மயிலின் மேல் சின்னஞ்சிறு குழந்தையாக வீற்றிருக்கிற இளம்பூரணரைப் பார்த்தவுடன், "இவனா நம் படைகளை எல்லாம் அழிக்க வந்தவன்? இந்தச் சின்னஞ்சிறு குழந்தையை ஒரு நொடியில் என்ன செய்கிறேன் பார்!’ என்று கொக்கரித்தான். வேல் அவன் படையையும் அழித்தது.

 

     பெரிய போர்கள் மூன்று. பாரதப்போர், இராமாயணப் போர், சூரசங்காரம் என்பன அவை. பாரதப் போர் பதினெட்டு நாட்கள் நடந்ததாம். இராமராவண யுத்தம் அதைவிடப் பெரியது. அது பதினெட்டு மாதங்கள் நடந்தது என்பார்கள். ஆனால் சூரசங்காரப்போர் பதினெட்டு ஆண்டுகள் நடந்தது என்பர். அது எவ்வளவு பெரிய போர் என்பதை அதனால் தெரிந்து கொள்ளலாம். இந்தப் போரிலே தன் சிரிப்பினாலேயே திரிபுர சங்காரம் செய்த சிவபெருமானுடைய குமாரன் தன் செங்கை வேலினால் முதலில் சூரனது படைக்குப் பெரிய பாதுகாப்பாக அமைந்திருந்த கிரெளஞ்ச மலையை அணு அணுவாகிப் போகும்படி குலைத்தான்.  பின்பு மற்ற அசுரர் படைகளை ஒழிந்து போகும்படி செய்தான். கடைசியில் சூர்ப் பேரணி கெடச் சூரனையும் சங்காரம் செய்தான். பிறருக்குத் துன்பம் விளைவித்து வந்த அசுரர்களை எல்லாம் அழித்தான் முருகன். 

 

     அதனால் தேவேந்திர லோகம் பிழைத்தது. மனிதர்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொருவரிடமும் சூரசங்காரம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. நிகழவும் வேண்டும். ஒவ்வொரு மனிதனுடைய மனத்திலும் இருக்கின்றவை அசுர சம்பத்தாகிய தீய குணங்கள். தேவ சம்பத்தாகிய நல்ல குணங்களும் இருக்கின்றன. சூரபன்மனுடைய தாயின் பெயர் மாயை. மாயையின் பிள்ளைதான் சூரன். மாயையின் பிள்ளைகளே தீய குணங்கள். மாயையின் பிள்ளையாகிய சூரன் தேவர்கள் நல்ல காரியங்களைச் செய்யவொட்டாமல் தடுத்துச் சிறையில் போட்டுப் பலவிதமான துன்பங்களைச் செய்தான். நம் மனத்திலே இருக்கிற மாயையின் பிள்ளைகளாகிய காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய தீய குணங்களோ நல்ல குணங்களை அடக்கி, ஆன்மாக்களுக்கு மிகுந்த துன்பத்தை விளைவித்து வருகின்றன. தேவர்களுடைய வாழ்க்கையைப் போல இருக்க வேண்டியது நம் மனம். ஆனால், அது அசுரர்களின் பூமியாகிவிட்டது. அதனால் ஆன்மாக்கள் விடுதலை பெறாமல் துன்பம் அடைகின்றன. அது மாற வேண்டுமானால் தீய குணங்கள் மாற வேண்டும். அசுரர்களுடைய ஆளுகைக்கு உட்பட்டிருக்கிற மனம், தேவர் உலகம் ஆக வேண்டும். சூரனைத் தேவர்களால் அழித்துவிட முடியாது. அதற்கு ஏற்ற ஆற்றல் அவர்களிடம் இல்லை. அதைப்போலவே நம்முடைய மனத்தில் தோன்றுகிற தீய குணங்களை நாமே அழித்துவிட முடியாது. அதற்கு ஏற்ற ஆற்றல் நமக்கு இல்லை. இறைவன் அருளால் ஞானம் ஏற்பட்டு அவை அழிய வேண்டும். 

 

     நல்லதைக் கேட்கின்ற குழந்தைகளுக்கு நல்லதை அளிக்கும் தாயாகவும், கெட்ட காரியங்களைச் செய்கின்ற குழந்தைகளை அடித்து உதைத்து அவர்களை நல்வழிப்படுத்துகின்ற தாயாகவும் இறைவன் இருக்கின்றான். அறக் கருணை உடையவனாகவும், மறக் கருணை உடையவனாகவும் அவன் இருக்கிறான். அணைத்துக் காப்பாற்றுவது அறக்கருணை; அடித்துக் காப்பாற்றுவது மறக் கருணை. அசுரர்களை அழித்தது மறக்கருணை.

 

     முருகப் பெருமான் புரிந்தருளிய மறக்கருணையின் திறத்தை வள்ளல்பெருமான் பின்வருமாறு பாடிக் காட்டுகிறார்.

 

"வானம் எங்கே? அமுத பானம் எங்கே? அமரர்

                        வாழ்க்கை அபிமானம்  எங்கே?

            மாட்சி எங்கே? அவர்கள் சூழ்ச்சி எங்கே? தேவ

                        மன்னர் அரசாட்சி எங்கே?

ஞானம் எங்கே? முனிவர் மோனம் எங்கே? அந்த

                        நான்முகன் செய்கை எங்கே?

            நாரணன் காத்தலை நடத்தல் எங்கே? மறை

                        நவின்றிடும் ஒழுக்கம் எங்கே?

ஈனம்அங்கே செய்த தாருகனை, ஆயிர

                        இலக்கம் உறு சிங்கமுகனை,

            எண்ணஅரிய திறல் பெற்ற சூரனை, மறக்கருணை

                        ஈந்துபணி கொண்டிலை எனில்,

தானம்இங்கு ஏர்சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

                        தலம் ஓங்கு கந்தவேளே!

            தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

                        சண்முகத் தெய்வமணியே!"

 

     நோயாளிகள் இரண்டு பேருடைய நோயையும் குணப்படுத்துபவன் ஒரே மருத்துவன்தான். ஆனால், அவன் ஒருவனுக்கு மருந்தைத் தேனிலே குழைத்துத் தருவான்.  மற்றவனுக்கோ கத்தியை எடுத்து உடலை அறுத்துச் சிகிச்சை செய்வான். நோயின் தன்மையைப் பொறுத்து மருத்துவம் செய்யப்படும். அதைப்போலவே இறைவன் எல்லோருக்கும் கருணை காட்ட வேண்டும் என்றே விரும்புகிறான். அவன் காட்டுகின்ற ஒரு கருணை மென்மையாகத் தோன்றுகிறது. மற்றொன்று கடுமையாகத் தோன்றுகிறது. மென்மையாகத் தோன்றுவது அறக்கருணை, கடுமையாகத் தோன்றுவது மறக்கருணை; முருகன் சூரபதுமனிடம் மறக்கருணை காட்டி ஆட்கொண்டான்.

 

     கந்தபுராணத்தை மூன்று நிலையில் பார்க்கலாம். ஒன்று கதையியல். சூரபதுமன் வதையைக் கூறுவது கதை. இரண்டாவது உலகியல்; மூன்றாவது அருளியல். ஒருவன் தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாததோடு பிறர் செய்கின்ற நல்ல காரியங்களையும் செய்ய விடாமல் தடுத்து, அவர்களுக்குத் துன்பத்தை உண்டாக்கி வந்தால் அவன் அசுரன்தான். அவனைத் தண்டித்து நல்லவர்கள் நல்ல காரியங்களைச் செய்யும்படியாக உதவுபவன் முருகன். இது உலக இயலை ஒட்டிய தத்துவம்.

 

     உள்ளமாகிய பீடத்தில் தேவர்களுடைய சம்பத்து ஆகிய நல்ல குணங்கள் தங்கள் கடமைகளைச் செய்யவொட்டாமல், அந்தப் பீடத்திலே அசுரர்களுடைய சம்பத்து ஆகிய காமக் குரோத லோப மோக மத மாச்சரியங்கள் வந்து ஆக்கிரமித்துக்கொண்டு, 

ஆன்மாவுக்குப் பல துன்பங்களை விளைவித்து வருகின்றன. நல்லறிவு என்றும், மெய்யறிவு என்றும் ஞானம் என்றும் சொல்லப்படும்கூர்மையான வேல் பாய்ந்தால்,அஞ்ஞானத்தின் விளைவாகிய அசுரக் கூட்டங்கள் அழிந்து ஒழிந்து போகின்றன என்பது அருளியலை ஒட்டிய தத்துவம்.

 

     அருணகிரிதாநர் கந்தர் அலங்காரத்தில் பின்வருமாறு பாடுகிறார், 

 

"தேர் அணி இட்டுப் புரம் எரித்தான் மகன் 

     செங்கையில் வேல்

கூர்அணி இட்டு அணுவாகி, கிரவுஞ்சம்

     குலைந்து, அரக்கர்

நேர்அணி இட்டு வளைந்தகடகம் 

     நெளிந்தது; சூர்ப்

பேர் அணி கெட்டது, தேவேந்த்ர

   லோகம் பிழைத்ததுவே".

 

இதன் பொருள் ---

 

     பூமி, சக்கரவாளகிரி, சூரிய, சந்திரர் முதலியவைகளால் செய்யப் பெற்ற தேரை அலங்கரித்துச் செலுத்தியும், திரிபுரங்களைத்  தனது பார்வையினாலேயே எரித்து அருளிய சிவபரம்பொருளின் திருக்குமாரர் ஆகிய முருகப் பெருமான் திருக்கரத்தில் இருந்த வெற்றிவேலானது கூர்மையுடன் தைத்து, கிரவுஞ்ச மலையானது அணுஅணுவாகத் தூள்பட்டு அழிந்து, அணிவகுத்து வந்து வளைந்து கொண்ட அசுரர்களின் வட்டவடிவச் சேனை தளர்ந்து ஓடியது. சூரபதுமனுடைய நடுச் சேனை அழிந்தது. தேவேந்திரனுடைய உலகமானது அசுர பயத்தின் நீங்கிப் பிழைத்தது.

 

     இவ்வாறு வேலின் பெருமையை அருணகிரிநாதர் இப்பாட்டில் விரித்துக் கூறி, அதன் உட்பொருளை நமக்கு விளங்க வைத்தார் என்பதை உணர்ந்து நாமும், பொருள் உணர்ந்து ஓதி நற்கதியைப் பெறுவோமாக.

 

 

 

063. இடுக்கண் அழியாமை - 04. மடுத்தவாய் எல்லாம்

 திருக்குறள்  பொருட்பால்  அ. அரசியல் அதிகாரம் 63 -- இடுக்கண் அழியாமை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "பாரம் சுமக்கையி...