திரு மாணிகுழி - 0757. மதிக்கு நேர்எனும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மதிக்கு நேரெனும் (திருமாணிகுழி)
  
முருகா!
விலைமாதர் அழகை விரும்பி வீணில் அழியாது,
தேவரீரது திருவடி இன்பத்தில் திளைத்திருக்க அருள்.


தனத்த தானன தானான தானன
     தனத்த தானன தானான தானன
     தனத்த தானன தானான தானன ...... தந்ததான

 
மதிக்கு நேரெனும் வாண்முகம் வான்மக
     நதிக்கு மேல்வரு சேலேனு நேர்விழி
     மணத்த வார்குழல் மாமாத ராரிரு ......கொங்கைமூழ்கி

மதித்த பூதர மாமாம னோலயர்
     செருக்கி மேல்விழ நாடோறு மேமிக
     வடித்த தேன்மொழி வாயூற லேநுகர் ......பண்டநாயேன்

பதித்த நூபுர சீர்பாத மாமலர்
     படைக்குள் மேவிய சீராவொ டேகலை
     பணைத்த தோள்களொ டீராறு தோடுகள் .....தங்குகாதும்

பணக்க லாபமும் வேலொடு சேவலும்
     வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை
     படைத்த வாகையு நாடாது பாழில்ம ...... யங்கலாமோ

கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படை
     நொறுக்கி மாவுயர் தேரோடு மேகரி
     கலக்கி யூர்பதி தீமூள வேவிடும் ...... வஞ்சவேலா

களித்த பேய்கண மாகாளி கூளிகள்
     திரட்பி ரேதமெ லேமேவி மூளைகள்
     கடித்த பூதமொ டேபாடி யாடுதல் ...... கண்டவீரா

குதித்து வானர மேலேறு தாறுகள்
     குலைத்து நீள்கமு கூடாடி வாழைகொள்
     குலைக்கு மேல்விழ வேரேறு போகமும் .....வஞ்சிதோயுங்

குளத்தி லூறிய தேனூறல் மாதுகள்
     குடித்து லாவியெ சேலோடு மாணிகொள்
     குழிக்குள் மேவிய வானோர்க ளேதொழு .....தம்பிரானே.


பதம் பிரித்தல்


மதிக்கு நேர் எனும் வாள்முகம், வான்மக
     நதிக்கு மேல்வரு சேல் எனும் நேர்விழி,
     மணத்த வார்குழல் மாமாதரார் இரு......கொங்கைமூழ்கி,

மதித்த பூதரம் ஆமா மனோலயர்,
     செருக்கி மேல்விழ, நாள்தோறுமே மிக
     வடித்த தேன்மொழி வாய் ஊறலே நுகர் ......பண்டநாயேன்,

பதித்த நூபுர சீர்பாத மாமலர்
     படைக்குள் மேவிய சீர் ஆவொடே, கலை
     பணைத்த தோள்களொடு ஈராறு தோடுகள் .....தங்குகாதும்,

பணக் கலாபமும், வேலொடு, சேவலும்,
     வடிக்கொள் சூலமும், வாள்வீசு நீள்சிலை
     படைத்த வாகையும் நாடாது, பாழில்.....மயங்கல்ஆமோ?

கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படை
     நொறுக்கி, மாவுயர் தேரோடுமே கரி
     கலக்கி, ஊர்பதி தீ மூளவே விடும் ...... வஞ்சவேலா!

களித்த பேய்கணம், மாகாளி, கூளிகள்,
     திரள் பிரேத மெலே மேவி, மூளைகள்
     கடித்த பூதமொடே பாடி ஆடுதல் ...... கண்டவீரா!

குதித்து வானரம் மேல் ஏறு தாறுகள்
     குலைத்து, நீள் கமுகு ஊடாடி, வாழைகொள்
     குலைக்கு மேல்விழவே ஏர் ஏறு போகமும், ...வஞ்சிதோயும்

குளத்தில் ஊறிய தேன் ஊறல், மாதுகள்
     குடித்து உலாவியெ சேலோடு, மாணிகொள்
     குழிக்குள் மேவிய வானோர்களே தொழு .....தம்பிரானே.


பதவுரை


      கதித்து மேல் வரு மாசூரர் சூழ் படை நொறுக்கி --- விரைந்து மேல் எழுந்து வருகின்ற பெரிய சூரர்கள் சூழ்ந்துள்ள சேனைகளைப் பொடியாக்கியும்,

     மா உயர் தேரோடுமே கரி கலக்கி --- குதிரைகள், பெரிய தேர்கள், யானைகள் ஆகிய படைகளைக் கலக்கியும்,

     ஊர் பதி தீ மூளவே விடும் வஞ்ச வேலா --- ஊர்களும், நகரங்களும் நெருப்பு பற்றி எரியும்படியும் விடுத்தருளிய கொடுமை வாய்ந்த வேலாயுதத்தை உடையவரே!

      களித்த பேய்க் கணம் --- களிப்புடன் இருந்த பேய்க் கூட்டங்களும்,

     மா காளி --- வல்லமை மிக்க காளியும்,

     கூளிகள் --- பெருங்கழுகுகளும்,

     திரள் பிரேதம் மேலே மேவி --- போர்க்களத்தில் திரளாகக் கிடந்த பிணங்களின் மேல் விழுந்து

     மூளைகள் கடித்த பூதமொடே பாடி ஆடுதல் கண்ட வீரா  --- மூளைகளைக் கடித்துத் தின்ற பூதங்களோடு பாடி ஆடுதலைக் கண்ட வீரரே!

      நீள் கமுகு ஊடாடி  குதித்து வானரம் மேல் ஏறு தாறுகள் குலைத்து --- நீண்டு வளர்ந்துள்ள பாக்கு மரங்களின் இடையே குரங்குகள் குதித்து ஊடாடுவதால், குலைகள் அறுபட்டு,

     வாழை கொள் குலைக்கு மேல் விழவே --- அவை வாழைக் குலைகள் மேல் விழுகின்ற

     ஏர் ஏறு போகமும் --- அழகு நிறைந்த செல்வமும்,

      வஞ்சி தோயும் குளத்தில் ஊறிய தேன் ஊறல் --- பெண்கள் குளிக்கும் குளத்தில் மலர்களில் இருந்து கசிகின்ற தேனோடு,

     மா துகள் குடித்து உலாவியெ சேலோடு --- மலர்களில் இருந்து சிந்திய சிறந்த மகரந்தங்களையும் குடித்து உலாவுகின்ற மீன்களும் நிறைந்திருக்கும்

      மாணி கொள் குழிக்குள் மேவிய வானோர்களே தொழும் தம்பிரானே --- திருமாணிகுழி என்னும் திருத்தலத்தில் தேவர்கள் தொழ எழுந்தருளி இருக்கின்ற தனிப்பெருந்தலைவரே!

      மதிக்கு நேர் என்னும் வாள்முகம் --- சந்திரனுக்கு ஒப்பானது என்னும்படியான ஒளி பொருந்திய முகமும்,

     வான் மக நதிக்கு மேல் வரு --- பெரும் சிறப்புப் பொருந்திய கங்கை நதியின் மேல் வாழுகின்ற

     சேல் என்னும் நேர் விழி --- சேல் மீன் என்று என்னும்படியான கண்களும்,

      மணத்த வார்குழல் --- மணம் பொருந்திய கூந்தலும் உடைய,

     மா மாதரார் இரு கொங்கை மூழ்கி --- விலங்குத் தன்மை பொருந்திய (விலை) மாதர்களுடைய இரு மார்பகங்களின் அழகில் மனமானது முழுகி,

      மதித்த பூதரம் ஆம்ஆம் --- பெரிதாக எண்ணப்படும் மலைகளே இவை ஆகும் என்று,

     மனோலயர் செருக்கி --- மயங்கி அறிந்து, அவைகளின்பால் மனமானது வசப்பட்டு,

     மேல் விழ --- அவற்றின் மேல் விழுந்து

      நாள் தோறுமே மிக வடித்த தேன்மொழி வாய் ஊறலே நுகர் --- இனிமையாகப் பேசுகின்ற அவர்களின் வாயில் ஊறுகின்ற எச்சிலை நன்றாக வடித்து எடுக்கப்பட்ட தேன் என நுகர்கின்ற

     பண்ட நாயேன் --- கீழ்மை பொருந்திய நாயாகிய அடியேன்,

     பதித்த நூபுர சீர்பாத மாமலர் --- சிலம்புகள் பொருந்தி உள்ள சிறந்த திருவடி மலர்களையும்,

     படைக்குள் மேவிய சீரா ஓடே --- படைக்கலங்களில் ஒன்றாகப் பொருந்திய உடைவாளையும்,

     கலை பணைத்த தோள்களொடு --- ஒளி பொருந்திப் பருத்து விளங்கும் பன்னிரு திருத்தோள்களையும்,

     ஈராறு தோடுகள் தங்கு காதும் --- தோடுகள் பொருந்திய உள்ள பன்னிரண்டு திருச்செவிகளையும்,    

     பணிக் கலாபமும் --- பாம்பினைக் கொத்தியுள்ள அலகுளை உடைய மயிலையும்,

     வேலோடு சேவலும் --- வேலாயுதத்தோடு, சேவல் கொடியையும்,

     வடிக்கொள் சூலமும் --- கூர்மையான சூலாயுதத்தையும்,

     வாள் வீசு நீள் சிலை படைத்த வாகையும் நாடாது --- ஒளி வீசும் நீண்ட வில்லைப் பிடித்த வெற்றியையும்  ஆராய்ந்து விரும்பாது,

     பாழில் மயங்கலாமோ --- பாழான எண்ணங்களில் முழுகி அறிவு மயக்கம் கொள்ளுதல் தகுமோ?  தகாது.


பொழிப்புரை

     விரைந்து மேல் எழுந்து வருகின்ற பெரிய சூரர்கள் சூழ்ந்துள்ள சேனைகளைப் பொடியாக்கியும்,  குதிரைகள், பெரிய தேர்கள், யானைகள் ஆகிய படைகளைக் கலக்கியும், அசுரர்களின் ஊர்களும், நகரங்களும் நெருப்பு பற்றி எரியும்படியும் விடுத்தருளிய கொடுமை வாய்ந்த வேலாயுதத்தை உடையவரே!

         களிப்புடன் இருந்த பேய்க் கூட்டங்களும், வல்லமை மிக்க காளியும், பெருங்கழுகுகளும், போர்க்களத்தில் திரளாகக் கிடந்த பிணங்களின் மேல் விழுந்து மூளைகளைக் கடித்துத் தின்ற பூதங்களோடு பாடி ஆடுதலைக் கண்ட வீரரே!

         நீண்டு வளர்ந்துள்ள பாக்கு மரங்களின் இடையே குரங்குகள் குதித்து ஊடாடுவதால், குலைகள் அறுபட்டு, அவை வாழைக் குலைகள் மேல் விழுகின்ற அழகு நிறைந்த செல்வமும், பெண்கள் குளிக்கும் குளத்தில், மலர்களில் இருந்து கசிகின்ற தேனோடு, மலர்களில் இருந்து சிந்திய சிறந்த மகரந்தங்களையும் குடித்து உலாவுகின்ற மீன்களும் நிறைந்திருக்கும் திருமாணிகுழி என்னும் திருத்தலத்தில் தேவர்கள் தொழ எழுந்தருளி இருக்கின்ற தனிப்பெருந்தலைவரே!

         சந்திரனுக்கு ஒப்பானது என்னும்படியான ஒளி பொருந்திய முகமும், பெரும் சிறப்புப் பொருந்திய கங்கை நதியின் மேல் வாழுகின்ற சேல் மீன் என்று என்னும்படியான கண்களும், மணம் பொருந்திய கூந்தலும் உடைய, விலங்குத் தன்மை பொருந்திய (விலை) மாதர்களுடைய இரு மார்பகங்களின் அழகில் மனமானது முழுகி, பெரிதாக எண்ணப்படும் மலைகளே இவை ஆகும் என்று, மயங்கி அறிந்து, அவைகளின்பால் மனமானது வசப்பட்டு, அவற்றின் மேல் விழுந்து, இனிமையாகப் பேசுகின்ற அவர்களின் வாயில் ஊறுகின்ற எச்சிலை நன்றாக வடித்து எடுக்கப்பட்ட தேன் என நுகர்கின்ற கீழ்மை பொருந்திய நாயாகிய அடியேன், சிலம்புகள் பொருந்தி உள்ள சிறந்த திருவடி மலர்களையும், படைக்கலங்களில் ஒன்றாகப் பொருந்திய உடைவாளையும், ஒளி பொருந்திப் பருத்து விளங்கும் பன்னிரு திருத்தோள்களையும், தோடுகள் பொருந்திய உள்ள பன்னிரண்டு திருச்செவிகளையும், பாம்பினைக் கொத்தியுள்ள அலகுளை உடைய மயிலையும், வேலாயுதத்தோடு, சேவல் கொடியையும், கூர்மையான சூலாயுதத்தையும், ஒளி வீசும் நீண்ட வில்லைப் பிடித்த வெற்றியையும் ஆராய்ந்து விரும்பாது,  பாழான எண்ணங்களில் முழுகி அறிவு மயக்கம் கொள்ளுதல் தகுமோ?  தகாது.


விரிவுரை

வான் மக நதிக்கு மேல் வரு சேல் என்னும் நேர் விழி ---

மகம் - மேன்மை, சிறப்பு.

பெரும் சிறப்புப் பொருந்திய கங்கை நதியின் மேல் வாழுகின்ற
சேல் மீன் என்று என்னும்படியான கண்களை உடையவர்கள் பெண்கள்.

மா மாதரார் இரு கொங்கை மூழ்கி ---

மா - மாமரம், பெருமை, அழகு, வலி, திருமகள், கலைமகள், செல்வம், விலங்கு.

மா என்னும் சொல்லுக்கு அழகு என்னும் பொருளைக் கொண்டு, 'அழகிய மாதர்களின் கொங்கையில் முழுகி' என்று உரை கண்டிருப்பர் சிலர்.

அது பொருந்தாது என்பது அறிக. மா என்பது, இங்கே விலங்குத் தன்மை என்னும் பொருளில் வந்தது. விலங்குகள் பிற உயிரின் துன்பத்தைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், தமது தேவையை மட்டுமே தேடிக்கொள்ளும்.

மக்கள் நன்மை உடையவர். விலங்குகள் தீமை உடையவை. தக்கது இது, தகாதது இது என்று பகுத்து அறியும் இயல்பு அற்றவை விலங்குகள்.

வாலிக்கு இராமபிரான் கூறியதாகப் பின்வரும் கம்பராமாயணப் பாடல்களைக் காண்க...

நன்று தீது என்று இயல் தெரி நல் அறிவு
இன்றி வாழ்வது அன்றோ விலங்கின் இயல்?
நின்ற நல் நெறி நீ அறியா நெறி
ஒன்றும் இன்மை உன் வாய்மை உணர்த்துமால்.

தக்க இன்ன தகாதன இன்ன என்று
ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்து உள
மக்களும் விலங்கே; மனுவின் நெறி
புக்கவேல் அவ் விலங்கும் புத்தேளிரே.    ---  கம்பராமாயணம்.

மேவுஅயரும் மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மாஅயர அன்றுஉரிசெய் மைந்தன்இடம் என்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்
பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே.

என வரும் திருஞானசம்பந்தர் தேவாரத்தில், "மா" என்பது யானையைக் குறித்து வந்துள்ளது காண்க.


பண்ட நாயேன் ---

பண்டர் - கீழ்மக்கள்.

பல அரிய நூல்களோடு, பெரியபாரணத்துக்கு அருமையான ஓர் ஆய்வினைப் பெருநூலாகச் செய்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு அருளிய பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தம் அவர்களை அறியாதவர் இருக்க முடியாது. அப் பேரறிஞருடைய தந்தையார், பெருஞ்சொல் விளக்கனார், முதுபெரும் புலவர், அ. மு. சரவண முதலியார் அவர்களை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. 1930 - களில் அப் பெரும்புலவர் பெருமானார் ஆற்றிய சொற்பொழிவுகள்,  நூல் வடிவில் வந்துள்ளன.

அப் பெரும்புலவருடைய சொற்பொழிவின் சில பகுதிகளை இங்கே நான் தருகின்றேன்.....

"நாயில் கடையான பாவியேனை" என்னும் தொடர் போலத் திருவாசகத்தில் "நாயனையேன்", "நாயில் கடையேன்" என வரும் தொடர்கள் ஆறுபத்தேழு இடங்களில் வருதலையும் காண்க.  இங்ஙனம் ஆளுடைய அடிகள் பல இடங்களில் நாயேன், நாயனையேன் என்றும் நாயினும் கடையேன் என்றும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட பொருள்களை உடைய தொடர்களைக் கூறுமாறு என்னை? இன்னும் ஒரே அடியில் "நாயில் கடையாம் நாயேனை" (குழைத்தபத்து, 8) எனக் கூறியருளியதற்குப் பொருள் யாது என அறிந்துகொண்டு மேற்செல்லுவோம்.

பெரியோர்கள் மக்களிடத்தில் பெரும்பாலும் இயல்பாய் அமைந்து கிடக்கும் இழிகுணங்களைத் தம்பால் ஏற்றிக் கூறுவர். அதனால், நாயினும் கடையேன் என்று கூறுங்கால் நாயினிடத்தில் இயல்பாக அமைந்து கிடக்கும் குணங்கள் மக்களிடத்தில் அங்ஙனம் இல்லாமல் இருத்தல் வேண்டும்.  அவை எவை என ஆராய்வோம்.

1.  தன் தலைவனைப் போலவே பல்லாயிர மக்கள் உடை முதலியவற்றால் புனைந்து கொண்டு வரினும், சிறிதும் ஐயுறாது அவனை அறிந்து கொள்ளும் இயல்பு உடைமை.

2. ஒரு பிடி சோறு ஒரு காலத்தில் ஒருமுறை ஒருவன் உதவினானாயின், அவனைத் தன் வாழ்நாள் உள்ளவரையும் நினைவில் பதித்து வைத்து இருத்தலுடன், அவனை எங்கேனும் காணின், தான் எத்துணைத் துன்ப நிலையில் இருப்பினும், அதனைச் சிறிதும் பொருட்படுத்தாது, தன் வாலைக் குழைத்து, இன்முகம் காட்டல் முதலியவற்றால் தன் நன்றி அறிவை அவனுக்குக் காட்டுதல்.

3.  தன் தலைவன் ஒரு பணியின்கண் தன்னை ஏவினான் ஆயின், அப்பணி தன்னால் செய்தற்கு அரிதாயினும், அதில் செல்லின் தன் உயிர்க்கு ஈறு நேரும் ஆயினும், அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அப்பணியில் செல்லுதல்.

இம் மூன்று பண்புகளும் நாயின்கண் இருத்தல் கண்கூடு.

இனி, இப்பண்புகள் மக்களிடத்தில் எம்மட்டில் காணப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

மக்களில் சிலர் தலைவன் ஒருவன் உளன் என்னும் உணர்ச்சியே இன்றித் திரிகின்றனர். சிலர் தாமே தலைவர் எனத் தருக்குவர்.  சிலர் பொருள் முதலியவற்றால் சிறிது சிறந்த ஒருசில மக்களையே தலைவராகக் கருதித் தடுமாறுகின்றனர். சிலர் இறைமைக் குணங்கள் இலர் ஆயினாரைத் தலைவர் எனத் திரிபு உணர்ச்சி கொண்டு திரிகின்றனர். சிலர் 'தலைவன் ஒருவன் இருக்கலாம், ஆனால் அவன் இவன் தான் எனத் துணிந்து கூற இயலாது' என்பர். மற்றொரு சிலர் 'இன்ன இன்ன இலக்கணம் உடையவன் தலைவன் ஆவான்' என அறிந்து வைத்தும், 'ஆர்ஆர் எனக்கு என்ன போதித்தும் என்ன, என் அறிவினை மயக்க வசமோ' என்னும் திண்மை இலராய் மதிநுட்பம் நூலோடு அமைந்து, கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாகிய சொல்வன்மை உடையவராய ஒருவர் வந்து, 'நீவிர் கருதும் இலக்கணம் உடையவன் தலைவன் அல்லன்' என வேறு சில இலக்கணங்களைக் கூறினாராயின், மயங்கி விடுகின்றனர். இங்ஙனம், மக்கள் தம் தலைவனை உள்ளவாறு உணர்ந்து கொள்ளாது தலைதடுமாறுகின்றார்கள்.  ஆகலின், தன் தலைவனை நன்கு உணர்ந்து கொள்ளும் நாயினும் நாயினும் கடையர் ஆயினர்.

இனி, இருட்டு அறையில் குருட்டுச் சேய்போல் கிடந்து உழன்ற உயிர்களைத் தன் பெரும் கருணையால் எடுத்து, உடல், கரணம், உலகம் முதலியவற்றை உதவி, அவ் உயிர்கள் நிலைத்தல் பொருட்டு ஒன்றாயும், பொருள்களை அறியும்படி அறிவித்தல் பொருட்டு வேறாயும், அங்ஙனம் அறியினும் அறிந்தவாறே நுகரும் சுதந்தரம் அவைகட்கு இன்மையினால் அவற்றை நுகர்வித்தல் பொருட்டு உடனாயும் நின்று அருளி, ஒவ்வொரு மாத்திரையும் உண்டி முதலியவற்றால் ஓம்பி அருளும் தலைவனது கைம்மாறு இல்லாத நன்றியை ஏனைய உயிர்களிலும் திறந்து பாராட்டுதற்கு உரியவர் பகுத்தறிவு ஆகிய மன உணர்வைப் பெற்ற மக்களே அன்றோ.  அவர்களில் பெரும்பகுதியினர் அங்ஙனம் நினைக்கின்றார்கள் இல்லை. ஆதலின், அவர்கள் ஒரு பொழுது உணவு கொடுத்தவனைத் தன் உயிர் உள்ள அளவும் நினைத்துப் பாராட்டும் நாயினும் கடையர் ஆயினர்.

இனி, அவ் இறைவன் தானே உயிர்கள் தன்னை அறிந்து அடைய ஒட்டாமல் மறைத்து நிற்கும் மலத்தின் இலக்கணங்கள் இவை எனவும், உயிர்களின் இயல்கள் இவை எனவும், தனது தன்மை இது எனவும், நமக்கு அறிவு நூல்கள் வாயிலாக விளக்கி அருளினான்.  இவ்வாற்றான், இன்ன செயல்களை மேற்கொள்ளக் கடவீர் எனத் தலைவன் பணித்தும், அச் செயல்கள் மக்களால் செய்யக் கூடியனவுமாய் இருந்தும், அவைகளை மேற்கொள்ளாமல், பிற துறைகளில் சென்று உழலும் மக்கள், தன்னால் இயலாதது ஒன்றைத் தன் தலைவன் பணித்தானாயினும், அதனை விரைந்து மேற்கொள்ளும் நாயினும் கடையர் ஆயினர்.

நான்காவதாக, நாயினிடத்துப் பிறிதொரு அரிய குணம் காணப்படுகின்றது.  அதாவது, தன் தலைவன் நேரில் நின்று யாதொரு காரணமும் இன்றி, தனக்கு எத்துணைக் கொடிய இன்னலை விளைப்பினும் அதனை ஒரு பொருட்படுத்தாது அத்துன்பம் தன் உடலின் கண்ணதாய் இருக்கும் போதும், தன் வாலைக் குழைத்து அவனுக்குத் தன் நன்றி அறிவைக் காட்டுதல் ஆகும்.  இவ் உண்மையை,

யானை அனையவர் நண்பு ஒரீஇ, நாய் அனையார்
கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும் --  யானை
அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால் குழைக்கும் நாய்

என்னும் நாலடியார்ச் செய்யுளும் நன்கு விளக்கியது.

இனி, இக்குணம் மக்களிடத்தில் எம்மட்டில் காணப்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.  கடவுள் நம்பிக்கை உடையராய்ச் சிறிது அன்பினையும் மேற்கொண்ட மக்களில் பெரும்பாலோர் தமக்குத் துன்பம் நேர்ந்துழி, அது தாம் செய்த தீவினை காரணமாக வந்தது என்று அறிந்து வைத்தும், பாழும் கடவுளே, நீதியற்ற கடவுளே, எம்மை இங்ஙனம் துன்புறுத்தல் தகுமா நின்கண் கருணை இல்லையா எனக் கதறிப் பதறுவதுடன், அந் நம்பிக்கையையும் இழந்து கடவுள் இல்லை என்னும் கொள்கையை உடையர் ஆதலைக் காண்கின்றோம்.  இதனாலும் மக்கள் நாயினும் கடையர் ஆகின்றனர்.

ஐந்தாவதாக, நாயினிடம், செயலுக்குக் காரணம் காணும் இயல்பு உண்டு.  மக்களில் பெரும்பாலோரிடம் அது இல்லை.  இல்லாதது மட்டுமில்லை. திரிபாகக் காணுதலையும் அறிகின்றோம்.  எங்ஙனம் எனில், ஒரு நாயை ஓர் இளைஞன் மறைவில் நின்று கல்லால் அடிக்கிறான்.  தன்மீது பட்டதும், தனக்குத் துன்பம் செய்ததும் கல்.  ஆனால், எந்த நாயும் அந்தக் கல்லைக் கடிப்பது இல்லை.  அடித்தவனைக் கண்டால் அவன் மேலே வீழ்ந்து கடிக்கும்.  இன்றேல் வாளா போய்விடும்.

மக்களுள் யாருக்கேனும் ஒரு துன்பம் வந்தால், அதற்கு மூல காரணம் தாம் முன் செய்த வினை என்று அறியாதது மட்டுமல்ல.  அவ்வினையினால் செலுத்தப்பட்டுத் துன்பம் செய்தவர்களிடம் பகைமை பூண்டு, அவர்களைத் துன்புறுத்தக் காண்கின்றோம். 

எனவே, நாயின் மேலே பட்ட கல்லைப் போன்று, துன்புறுத்தியவர்களே காரணாய் உள்ளவர் என்று தவறாகக் கருதுகின்ற மக்களை விட, உண்மையான காரணத்தை அறிந்து செயல்படுகின்ற நாய் எத்துணைச் சிறந்தது என்பதை அறிக. மக்களின் அத் தவறான செயலைக் குறித்துத் தான், "எய்தவன் இருக்க அம்பை நோவது" என்ற பழமொழியும் எழுந்து வழங்குவது ஆயிற்று.

மேற்காட்டிய பல நற்குணங்களை உடைய நாயினிடத்து, ஒரு இழிகுணம் காணப்படுகின்றது. அதாவது, தன் வயிறு நிறைய உண்டு, தேக்கெறிந்து கக்கிய உணவைச் சிறிதும் அருவருப்பு இல்லாமல் புதியதாகவே நினைந்து உண்ணுதல்.

மக்களும் தாம் நுகர்ந்த பொருள்களையே மீண்டும் மீண்டும் சலிப்பும் அருவருப்பும் இல்லாமல் நுகர்தல் கண்கூடாகக் காணப்படுவதாகும்.

நாய்க்கு உள்ள மற்றொரு இழிகுணம் குறிக்கோள் இல்லாது அலைதல். அது மக்களிடத்தும் காணப்படுவது. இத் தன்மையால் மக்கள் நாய்க்கு ஒப்பிடப்படுகின்றார்கள்.

இவ்வாறு பெருஞ்சொல் விளக்கனார், முதுபெரும்புலவர் திரு. அ. மு. சரவண முதலியார் அவர்கள் அழுது அடி அடைந்த அன்பராகிய மாணிக்கவாசகப் பெருமான் பாடிய திருவாசகத்தை அடிப்படையாகக் கொண்டு, நாய்க்கு உள்ள நல்ல குணங்களையும், தீய குணங்களையும் விளக்கிக் காட்டி உள்ளார்.

அருளாளர்கள், "நாயினும் கடையேன்" என்று தம்மைப் பாடும்போதெல்லாம் நாய்க்கு உரிய நல்ல குணங்கள் தம்மிடமும் மக்களிடமும் இல்லாத நிலையைக் காட்டித் தான், "நாயில் கடையேன், நாயினும் இழிந்தவன்" என்றும் பாடினார்கள்.  நாயை அவர்கள் இழித்து உரைக்கவில்லை.


படைக்குள் மேவிய சீரா ஓடே ---

முருகப் பெருமானின் படைக்கலங்களில் ஒன்றாகப் பொருந்தியது உடைவாள் என்பதைப் பின்வரும் பிரமாணங்களால் அறியலாம்.

ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து, எனக்குக்
காலையும் மாலையும் முன் நிற்குமே, கந்தவேள் மருங்கில்
சேலையும், கட்டிய சீராவும், கையில் சிவந்த செச்சை
மாலையும், சேவல் பதாகையும், தோகையும், வாகையுமே.

தாராகணம் எனும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால்
ஆராது, உமைமுலைப் பால்உண்ட பாலன் அரையில்கட்டும்
சீராவும் கையில் சிறுவாளும், வேலும் என் சிந்தையவே,
வாராது அகல் அந்தகா! வந்தபோது உயிர் வாங்குவனே.     --- கந்தர் அலங்காரம்.

........      ........ வலாரி பெற்று எடுத்த கற்பக ......வனமேவும்

தே நாயகா! எனத் துதித்த உத்தம,
     வான்நாடர் வாழ, விக்ரமத் திருக்கழல்
     சேராத சூரனைத் துணித்து அடக்கி, ...... வரைமோதிச்

சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ,
     மாறா நிசாசரக் குலத்தை இப்படி
     சீராவினால் அறுத்து அறுத்து ஒதுக்கிய ......பெருமாளே.
                                                                     --- (ஆனாதஞான) திருப்புகழ்.

நீள் கமுகு ஊடாடி  குதித்து வானரம் மேல் ஏறு தாறுகள் குலைத்து, வாழை கொள் குலைக்கு மேல் விழவே ---

நீண்டு வளர்ந்துள்ள பாக்கு மரங்களின் இடையே குரங்குகள் குதித்து ஊடாடுவதால், குலைகள் அறுபட்டு, அவை வாழைக் குலைகள் மேல் விழுகின்ற வளம் பொருந்திய திருத்தலம் திருமாணிகுழி.

கமுகினில் குலை அற, கதலியில் கனி உக,
     கழையின் முத்தம் உதிர, கயல் குதித்து உலவுநல்
     கனவயல் திகழ் திருக் கரபுரத்து அறுமுகப் ......பெருமாளே.
                                                                    --- (ஒருவரைச்) திருப்புகழ்.

தெங்கம் பழம் கமுகின் குலை சாடி, கதலிசெற்று,
கொங்கம் பழனத்து ஒளிர் குளிர் நாட்டினை நீ, உமைகூர்
பங்கு அம்பலவன் பரங்குன்றில் குன்று அன்ன மா பதைப்பச்
சிங்கம் திரிதரு சீறூர்ச் சிறுமி எம் தேமொழியே.
                                                                     --- திருக்கோவையார்.

மாணி கொள் குழிக்குள் மேவிய வானோர்களே தொழும் தம்பிரானே ---

திருமாணிகுழி என்னும் திருத்தலத்தில் தேவர்கள் தொழ எழுந்தருளி இருக்கின்ற தனிப்பெருந்தலைவரே என்கின்றார் அடிகளார்.

("வாளைகள் குதித்து உலாவிய வேளூரில் மேவிய தம்பிரானே" என்றும், "வாளைகள் குதித்து உலாவிய வேலூரில் மேவிய தம்பிரானே" என்றும் பாடபேதங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகின்றது)

திருமாணிகுழி என்பது நடு நாட்டுத் திருத்தலம். கடலூர் நகரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் திருமாணிகுழி உள்ளது.

1) கடலூரில் இருந்து குமணங்குளம் செல்லும் நகரப் பேருந்து திருமாணிகுழி வழியாகச் செல்கிறது. இதில் வந்தால் கோயிலின் வாயிலிலேயே இறங்கலாம்.

2) கடலூரில் இருந்து திருவகீந்திபுரம் வழியாக நடுவீரப்பட்டி செல்லும் பேருந்தில் சென்று திருமாணிகுழி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் சாலை ஓரத்திலுள்ள கோவில் அடையலாம்.

3) கடலூரில் இருந்து திருவகீந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்று திருமாணிகுழி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் சாலை ஓரத்திலுள்ள கோயிலை அடையலாம்.

இறைவர் : வாமனபுரீசுவரர், உதவிநாயகர், மாணிக்கவரதர்.
இறைவியார் : அம்புஜாட்சி, உதவிநாயகி,   மாணிக்கவல்லி.
தல மரம்              : கொன்றை.
தீர்த்தம்               : சுவேத தீர்த்தம், கெடிலநதி.

திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளிய திருத்தலம்.

இத்திருத்தலம் தேவாரப் பாடல்களில் "உதவி மாணிக்குழி" என்று குறிக்கப்படுகிறது. இதனால் 'உதவி ' என்பது ஊர்ப் பெயராக இருந்து, காலப்போக்கில் 'மாணிகுழி' என்னும் கோயில் பெயரே ஊருக்குப் பெயராகியிருக்கலாம் என்று தோன்றுகின்றது. (இதற்கேற்ப தலபுராணத்தில் வரும் செய்தி வருமாறு:-)

    வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட, இறைவன் அவ்வணிகனைத் திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார்; இதனால் இத்தலம் 'உதவி ' என்றும் இறைவன் 'உதவி நாயகர் ' இறைவி 'உதவி நாயகி ' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

கல்வெட்டிலும் சான்றாக, இத்தலம் 'உதவி ' என்றே குறிக்கப்பெறுகின்றது.

 திருமால் பிரம்மசாரியாக வந்து மாவலிபால் மூன்றடிமண் கேட்டு அவனை அழித்த பழிதீ ர இங்கு வந்து வழிபட்டாராதலின் இக்கோயில் 'மாணிகுழி ' என்று பெயர் பெற்றது. (மாணி - பிரம்மசாரி)

பெரிய புராணத்தில், சுந்தரர் கெடில நதியில் நீராடித் திருமாணிகுழியைத் தரிசித்ததாக குறிப்பிருந்தும் அப்பெருமான் பாடிய திருப்பதிகம் எதுவும் கிடைக்கவில்லை.

 நடராச சபையிலுள்ள நடராசர் திருமேனியில் பஞ்சாட்சரம் பொறிக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.

 சுவாமி எப்போதும் இறைவியுடன் இருப்பதாக மரபாதலின், மூலவர் சந்நிதியில் எப்போதும் திரை போடப்பட்டுள்ளது. (இத்திரையின் மேற்புறத்தில் ஏகாதச ருத்திரர்களில் ஒருவராகிய பீமருத்திரர் உருவம் எழுதப்பட்டுள்ளது.) மகாவிஷ்ணு மாணியாக - பிரம்மசாரியாக வழிபடுவதற்குக் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

மூலவர் தரிசனத்திற்கு செல்லும் வாயிலில் வாமனாவதார வரலாறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.

ஆலய வழிபாட்டில் அர்ச்சனை, தீபாராதனை, பூசை முதலியன முதலில் பீமருத்திரருக்கே நடைபெற்று, பின்னர் சுவாமிக்கு நடைபெறுகிறது.

இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்திருத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது.

கருத்துரை

முருகா! விலைமாதர் அழகை விரும்பி வீணில் அழியாது, தேவரீரது திருவடி இன்பத்தில் திளைத்திருக்க அருள்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...