அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சதுரத்தரை யோக்கிய
(திருவேட்களம்)
முருகா!
தேவரீரது திருவருட்கருணையை
ஒரு போதும் மறவேன்.
தனனத்தன
தாத்தன தானன
தனனத்தன தாத்தன தானன
தனனத்தன தாத்தன தானன ......தனதான
சதுரத்தரை நோக்கிய பூவொடு
கதிரொத்திட ஆக்கிய கோளகை
தழையச்சிவ பாக்கிய நாடக ...... அநுபூதி
சரணக்கழல்
காட்டியெ னாணவ
மலமற்றிட வாட்டிய ஆறிரு
சயிலக்குல மீட்டிய தோளொடு ......
முகமாறுங்
கதிர்சுற்றுக நோக்கிய பாதமு
மயிலிற்புற நோக்கிய னாமென
கருணைக்கடல் காட்டிய கோலமும் ......
அடியேனைக்
கனகத்தினு நோக்கினி தாயடி
யவர்முத்தமி ழாற்புக வேபர
கதிபெற்றிட நோக்கிய பார்வையு ...... மறவேனே
சிதறத்தரை
நாற்றிசை பூதர
நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
சிதறக்கட லார்ப்புற வேயயில் ......
விடுவோனே
சிவபத்தினி
கூற்றினை மோதிய
பதசத்தினி மூத்தவி நாயகி
செகமிப்படி தோற்றிய பார்வதி ......
யருள்பாலா
விதுரற்கும
ராக்கொடி யானையும்
விகடத்துற வாக்கிய மாதவன்
விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் ......
மருகோனே
வெளியெட்டிசை
சூர்ப்பொரு தாடிய
கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய
விறல்மெய்த்திரு வேட்கள மேவிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
சதுரத்
தரை நோக்கிய பூவொடு,
கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை
தழையச் சிவ பாக்கிய நாடக ...... அநுபூதி
சரணக்
கழல் காட்டி, என் ஆணவ
மலம் அற்றிட வாட்டிய, ஆறுஇரு
சயிலக்குலம் ஈட்டிய தோளொடு, ...... முகம்ஆறும்
கதிர்
சுற்றுக நோக்கிய பாதமும்,
மயிலில் புறம் நோக்கு இயல் நாம் என
கருணைக்கடல் காட்டிய கோலமும், ...... அடியேனைக்
கனகத்தினும் நோக்கி இனிதாய், அடி
யவர் முத்தமிழால் புகவே, பர
கதி பெற்றிட நோக்கிய பார்வையும் ...... மறவேனே.
சிதறத்
தரை நால் திசை பூதரம்
நெரிய, பறை மூர்க்கர்கள்
மாமுடி
சிதற, கடல் ஆர்ப்பு உறவே அயில் ......
விடுவோனே!
சிவபத்தினி, கூற்றினை மோதிய
பதசத்தினி, மூத்த விநாயகி,
செகம் இப்படி தோற்றிய பார்வதி ...... அருள்பாலா!
விதுரற்கும்
அராக் கொடியானையும்
விகடத்து உறவு ஆக்கிய மாதவன்
விசையற்கு உயர் தேர்ப்பரி ஊர்பவன்
......மருகோனே!
வெளி
எட்டு இசை சூர்ப்பொருது ஆடிய
கொடி கைக்கொடு, கீர்த்தி உலாவிய
விறல் மெய்த் திருவேட்களம் மேவிய ......
பெருமாளே.
பதவுரை
தரை சிதற --- பூமியானது உடைபடவும்,
நால்திசை பூதரம் நெரிய --- நான்கு திசைகளில்
உள்ள மலைகள் நெரிந்து போகவும்,
பறை மூர்க்கர்கள்
மாமுடி சிதற
--- அழிவதற்குரிய கொடியவர்களாகிய அசுரர்களின் பெரிய முடிகள் அறுபட்டு விழவும்,
கடல் ஆர்ப்பு உறவே
அயில் விடுவோனே --- கடலானது பெரிதும் ஒலி செய்து வாய்விட்டு அலறவும் வேலாயுதத்தை
விடுத்து அருளியவரே!
சிவ பத்தினி --- சிவபெருமானது திருத்தேவியாரும்,
கூற்றினை மோதிய பத சத்தினி --- இயமனை
உதைத்தருளிய திருவடியை உடையவரும் ஆகிய பராசத்தி,
மூத்த விநாயகி --- எல்லாவற்றிற்கும் முந்தியவரும், தனக்குமேல் தலைமை இல்லாதவரும்,
செகம் இப்படி தோற்றிய பார்வதி அருள்பாலா
--- உலகத்தை இவ்வண்ணமாகத் தோன்ற அருள்செய்த பார்வதியம்மையாரும் பெற்றருளிய
திருக்குமாரரே!
விதுரற்கும் அராக் கொடியானையும் விகடத் துறவு ஆக்கிய மாதவன் --- விதுரருக்கும், பாம்புக் கொடி கொண்ட
துரியோதனனுக்கும், மனம் வேறுபடும்படியான
தொடர்பை உண்டு பண்ணிய கண்ணபிரானும்,
விசையற்கு உயர்
தேர்ப் பரி ஊர்பவன் மருகோனே --- அருச்சுனனுக்கு உயர்ந்த தேரின்கண்
குதிரைகளைச் செலுத்துபவரும் ஆகிய வாசுதேவருடைய திருமருகரே!
வெளி எட்டு இசை
சூர்ப் பொருது --- புகழ் விண்ணளவு ஒங்கிய சூரபன்மனுடன் போர் செய்து
ஆடிய கொடி கைக்கொடு
கீர்த்தி உலாவிய --- அசைகின்ற சேவலைக் கொடியாகத் திருக்கையில் ஏந்தி புகழ்
விளங்க உலவிய,
விறல் மெய்த்
திருவேட்களம் மேவிய பெருமாளே --- பாவங்களைப் போக்கும் சத்தியமும்
விளங்கும் திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையின்
மிக்கவரே!
சதுரத் தரை நோக்கிய
பூவொடு ---
நான்கு இதழ் கொண்டதாய், தரையின் நான்கு
திசைகளையும் நோக்கியதாய் உள்ள மூலாதாரக் கமலத்துடன்
கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை தழைய
--- சூரியன், சந்திரன், அக்கினி என்னும் மூன்று சுடர்களால் ஆன
மண்டலங்கள், ஆறாதார நிலைகள்
குளிர்ந்து தழைய,
சிவபாக்கிய நாடக
அநுபூதி சரணக் கழல் காட்டி --- ஆன்மாக்களுக்கு சிவப் பேற்றைத்
தருவதான நடனப் பெரும்பேறு ஆகிய அநுபவஞானமாகிய திருவடித் தாமரையை அடியேனுக்குக் காட்டியருளி,
என் ஆணவ மலம் அற்றிட
வாட்டிய
--- என்னுடைய மூலமலமாகிய ஆணவத்தின் வலி அடியுடன் தொலையுமாறு தேய்த்த
ஆறுஇரு சயிலக் குலம்
ஈட்டிய தோளொடு முகம் ஆறும் --- பன்னிரண்டு சிறந்த மலைகள் போன்ற திருத்தோள்களையும், ஆறு திருமுகங்களையும்,
கதிர் சுற்று உக நோக்கிய பாதமும் --- ஞான ஒளி சுற்றிலும் பரவி ஆன்மாக்களைப் பாதுகாக்கின்ற
திருவடியும்,
மயிலின் புறம்
நோக்கு --- மயிலின்
முதுகில் நோக்கிப் பார்,
இயல் நாம் என --- இயல்பாக உள்ள
பொருள் நாம் என்று
கருணைக் கடல் காட்டிய கோலமும் ---
கருணைக் கடலைக் காட்டி அருளிய திருக்கோலத்தையும்,
அடியேனை கனகத்தினும் இனிதாய் நோக்கி --- அடியேனை பொன்னைக் காட்டிலும் இனிய பார்வையுடன் பார்த்து,
அடியவர் முத்தமிழால் புகவே --- உன்
அடியவர்கள் போல யானும் முத்தமிழ் கொண்டு உய்யும் நெறி அடையுமாறும்,
பரகதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே --- நான் மேலான நற்கதியைப் பெறுமாறும்
நோக்கி அருளிய திருக்கண்ணோக்கமும் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
பொழிப்புரை
பூமியானது உடைபடவும், நான்கு திசைகளில்
உள்ள மலைகள் நெரிந்து போகவும், அழிவதற்குரிய
கொடியவர்களாகிய அசுரர்களின் பெரிய முடிகள் அறுபட்டு விழவும், கடலானது
பெரிதும் ஒலி செய்து வாய்விட்டு அலறவும் வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!
சிவபெருமானது திருத்தேவியாரும், இயமனை உதைத்தருளிய திருவடியை உடையவரும்
ஆகிய பராசத்தி, பழமையானவரும், தனக்கு மேல் தலைமை இல்லாதவரும், உலகத்தை இவ்வண்ணமாகத் தோன்ற அருள் செய்த
பார்வதி அம்மையாரும் பெற்றருளிய திருக்குமாரரே!
விதுரருக்கும், பாம்புக் கொடி கொண்ட
துரியோதனனுக்கும், மனம் வேறுபடும்படியான
தொடர்பை உண்டு பண்ணிய கண்ணபிரானும், அருச்சுனனுக்கு உயர்ந்த தேரின்கண்
குதிரைகளைச் செலுத்துபவரும் ஆகிய வாசுதேவருடைய திருமருகரே!
விண்ணளவு ஒங்கிய புகழுடன் விளங்கிய
சூரபன்மனுடன் போர் செய்து, அசைகின்ற சேவலைக் கொடியாகத்
திருக்கையில் ஏந்தி புகழ் விளங்க உலவிய, பாவங்களைப் போக்கும்
சத்தியமும் விளங்கும் திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும்
பெருமையின் மிக்கவரே!
நான்கு இதழ் கொண்டதாய், தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள மூலாதாரக் கமலத்துடன் முச்சுடர்களால்
அதாவது, சூரிய, சந்திர, அக்கினிச் சுடர்களால் ஆன மண்டலங்கள், ஆறாதார நிலைகள் குளிர்ந்து தழைய,
ஆன்மாக்களுக்கு
சிவப் பேற்றைத் தருவதான நடனப் பெரும்பேறு ஆகிய அநுபவ ஞானமாகிய திருவடித்
தாமரையை அடியேனுக்குக் காட்டியருளி, என்னுடைய
மூலமலமாகிய ஆணவப்பகையின் வலி அடியுடன் தொலையுமாறு தேய்த்த பன்னிரண்டு சிறந்த
மலைகள் போன்ற திருத்தோள்களையும், ஆறு திருமுகங்களையும், ஞானஒளி சுற்றிலும் பரவி ஆன்மாக்களைப்
பாதுகாக்கின்ற திருவடியையும், "மயிலின் முதுகில்
நோக்கிப் பார், இயல்பாக உள்ள பொருள்
நாம்" என்று கருணைக் கடலைக் காட்டி அருளிய திருக்கோலத்தையும், அடியேனை பொன்னைக் காட்டிலும் இனிய
பார்வையுடன் பார்த்து, உன் அடியவர்கள் போல
யானும் முத்தமிழ் கொண்டு உய்யும் நெறி அடையுமாறும், நான் மேலான நற்கதியைப் பெறுமாறும்
நோக்கி அருளிய திருக்கண்ணோக்கமும் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
விரிவுரை
சதுரத்
தரை ---
மூலாதாரம்
நால் இதழ்க் கமல வடிவினை உடையது. அது எரு இடு வாசலுக்கும், கரு இடு வாசலுக்கும் இடையே
இருப்பது. அதன் இடையே முக்கோண சக்கரமும், அதற்கிடையே பிரணவமும், அதற்கு இடையே விநாயகமூர்த்தியும்
அமைந்து இருக்கும்.
"ஆசை
நாலு சதுரக்கமல" என்று தொடங்கும் பழமுதிர்ச்சோலைத் திருப்புகழையும் நோக்குக.
எருஇடும்
வாசல் இருவிரல் மேலே
கருஇடும்
வாசல் இருவிரல் கீழே
உருஇடு
சோதியை உள்வல் லார்க்குக்
கருவிடும்
சோதி கலந்து நின்றானே. --- திருமந்திரம்.
மூலாதாரம்
நாபிக்குக் கீழ் பன்னிரண்டு அங்குலத்தில் அமைந்து உள்ளது.
நாபிக்கும்
கீழே பன்னிரண்டு அங்கும்
தாபிக்கும்
மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும்
மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக்
கொண்டு ஈசன் குடி புகுவானே. --- திருமந்திரம்.
நோக்கிய
பூவொடு கதிர் ஒத்திட ---
இதய
கமலம் மூலாதாரத்தை நோக்கிய வண்ணமாகத் தொங்கிக் கொண்டு இருக்கின்றது.
சந்திரநாடியைத் தடுத்து, சூரிய நாடியில்
பிராணவாயுவைச் செலுத்தினால் நன்மை.
கோளகை
---
மண்டலித்துப்
படுத்துள்ள பாம்பு வடிவில் விளங்குவது குண்டலி சத்தி. அதனை எழுப்பி மூலாக்கினியை
ஜொலிப்பிக்கச் செய்ய வேண்டும்.
குண்டலியின்
வடிவத்தையும் தன்மையையும் சிற்றம்பலநாடிகள் கூறுமாறு காண்க.
மூல
குண்டலியாம் உரகமூச்சு எறிந்து
வாலது
மேல் கீழ் மண்டலம் இட்டு,
படந்தனைச்
சுருக்கிப் படுத்து உறங்குவது
நடந்துமேல்
நோக்கி, ஞானவீடு அளிக்கும்
மண்டலம்
மூன்று மருவுதூண் புகஅக்
குண்டலி
எழுப்பும் கொள்கைஈது என்றான்...
சிவ
பாக்கிய நாடகம் ---
இறைவனுடைய
திருநடனம் உயிர்களுக்கு இன்பத்தை வழங்குவதன் பொருட்டு என்று உணர்க.
அநுபூதி ---
அநுபவ
ஞானம்.
சரணக்கழல்
காட்டி என் ஆணவ மலம் அற்றிட வாட்டிய ---
இறைவனுடைய
திருவடிக் காட்சியினால் ஆணவ மலம் தனது வலிகுன்றி ஒடுங்கும்.
பரகதி
பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே ---
அருணகிரிநாத
சுவாமிகளை ஆறுமுகப் பெருமான் ஆட்கொண்ட திறத்தினைப் பாராட்டு முகத்தால் எழுந்தது
இத் திருப்புகழ்.
முருகவேள்
மயில்மிசை எழுந்தருளி வந்து அருட்கோலம் காட்டி அடிகளாருக்கு அநுக்கிரகம்
புரிந்தனர்.
ஆறுதிருமுகங்களையும், பன்னிரு திருத்தோள்களையும் அழகிய
கருணைத் திருக்கோலத்தையும் மறவேன் என்று அடிகள் கூறுகின்றார்.
முருகனுடைய
அருட்பார்வையை மிகவும் அழகாக எடுத்து உரைக்கின்றார்.
ஆணவ
அழுக்கு அடையும் ஆவியை விளக்கி,அநு
பூதிஅடைவித்தது
ஒர் பார்வைக்காரனும்....
என்கின்றார்
திருவேளைக்காரன் வகுப்பிலே.
ஆறுமுகப்
பெருமானுடைய அருட்பார்வை அருணகிரிநாதருடைய ஆணவ அழுக்கைப் போக்கி, அநுபவஞானத்தை வழங்கியது.
அடியவர்கட்கு
எல்லா நலங்களையும் நல்குவது எம்பிரானுடைய திருக்கண்கள்.
நிமலக்
குருபர ஆறிரு பார்வையும்
அருளைத் தரஅடி யார்தமை நாடொறும்
நிகரற் றவரென வேமகிழ் கூர்தரு ......
முரியோனே..
--- (கலகக் கயல்விழி) திருப்புகழ்.
மேவினார்க்கரகு
அள் தேக்கு துவாதச அக்ஷ, ஷடாக்ஷர,
மேரு
வீழ்த்த பராக்ரம வடிவேலா... --- (ஆவிகாப்பது) திருப்புகழ்.
விதுரற்கும்
அராக் கொடியானையும் விகடத்து உறவாக்கிய மாதவன் ---
கண்ணபிரான்
பாண்டவர் பொருட்டு தூது சென்று விதுரரையும் துரியோதனனையும் வேறுபடுத்தியதை மிக
அழகாக எடுத்து அடிகள் கூறுகின்றனர்.
விகடம்
- வேறுபாடு.
பகையாக்கிய
என்று கூற வேண்டியதை உறவாக்கிய என்று மாற்றி உரைக்கின்றனர். "தேவர் அனையர்
கயவர்" என்று திருவள்ளுவர் நகைச்சுவை படக் கூறியது போல. அந்த வரலாறு அடியில்
வருமாறு.
பாண்டவர்க்கு
உரிய தாயபாகத்தைத் துரியோதனன் தர மறுத்தனன். அதனால் பாண்டவர்கள் தங்களுக்குச்
சேரவேண்டிய பாதி ராஜ்யத்தை சமாதானமாக வாங்கித் தருமாறு கண்ணபிரானைத் துரியோதனன்
பால் தூது அனுப்பினார்கள்.
பகவான்
அத்தினாபுரம் சென்றார். ஆனால் துரியோதனனுடைய அரண்மனையில் தங்காமல் விதுரருடைய
மாளிகையில் தங்கினார். விதுரர் சிறந்த பக்தர் என்ற காரணம் மட்டுமல்ல. பீஷ்மரும் சிறந்த பக்தர் தான். அவருடைய
மாளிகையிலும் தங்கலாம். விதுரருக்கும் துரியோதனனுக்கும் வேற்றுமையை உண்டாக்கும்
பொருட்டு பெருமான் அவ்வாறு செய்தார்.
தனஞ்செயன்
கையில் உள்ள வில் பிரமாவினுடைய வில்.
காண்டீபம் எனப்படும். விதுரர் கையில் உள்ளது விஷ்ணுவினுடைய வில் ஆகிய கோதண்டம்.
விதுரருடைய வில்லை அர்ச்சுனனுடைய வில் வெல்லாது. அதை ஒழிக்கும் பொருட்டே
கண்ணபிரான் விதுரர் வீட்டிற்கு விருந்தாகச் சென்றனர்.
இருந்து
உவந்தருள் இறைவனை இறைஞ்சினான்; இறைஞ்சி,
பெருந்
துவம் தனைப் பிறப்பையும் இறப்பையும் பிரித்தான்-,
'மருந்து வந்தனை அமரருக்கு
அருளிய மாயோன்
விருந்து
வந்தனன்!' என்று, உளம் உருகிய விதுரன்.
கோடு
கொண்ட கைக் குரிசிலை, அலர்ந்த கோகனதக்
காடு
கண்டெனக் கண்டு, தன் கண் இணை களியா,
தோடு
கொண்ட தார் விதுரன், இப் பிறப்பையும் தொலைத்தான்;
வீடு
கண்டவர்க்கு இயம்பவும் வேண்டுமோ?
வேண்டா.
உள்ளினான்; உணர்ந்து, உள்ளமும் உருகினான்; எழுந்து
துள்ளினான்; விழுந்து, இணை அடி சூடினான்; துயரைத்
தள்ளினான்; மலர்த் தடக் கையால் தத்துவ அமுதை
அள்ளினான்
எனக் கண்களால் அருந்தினான்-அளியோன்.
'முன்னமே துயின்றருளிய
முது பயோததியோ!
பன்னகாதிபப்
பாயலோ! பச்சை ஆல் இலையோ!
சொன்ன
நால் வகைச் சுருதியோ! கருதி நீ எய்தற்கு
என்ன
மாதவம் செய்தது, இச் சிறு குடில்!' என்றான்.
கண்ணபிரானே
விருந்தாக வந்து அருளியதற்கு, விதுரன் மிகப்
பெரிதும் மகிழ்ந்து பகவானுக்கு பற்பல உபசாரம் செய்தான். "திருமாலே! நீ முன்னே
துயில் கொண்டு அருளிய திருப்பாற்கடலா? ஆதிசேடன்
என்னும் பாம்புப் படுக்கையா? பசுமையான ஆலமரத்தின் இலையா? உனது திருவாய்
மலர்ந்து அருளிய நான்கு வேதங்களா? தேவரீர் எழுந்தருள அடியேனுடைய இந்தச்
சிறுகுடிசையானது என்ன மாதவம் புரிந்த்தோ? உன்னைக் கண்டதால் இந்தப் பிறவியும்
தொலைந்த்து" என்று பலபடப் புகழ்ந்தான். அவருடைய நல்லருள் பெற்றான்.
மறுநாள்
இராஜ சபையில் துரியோதனன் தனது சிறிய தந்தையாகிய விதுரரை மிகவும் சினந்து பேசினான்.
"பகைவர்கள் பால் இருந்து தூதாக வந்த இடையனுக்கு நீ எவ்வாறு உணவு தரலாம்? நீ தாசி மகன்.அதனால் என்னுடைய அன்னம்
அருந்துகின்ற நீ பாண்டவர் மீது அன்பு வைத்தனை" என்று பெரிய சபையில் விதுரரை
இகழந்து உரைத்தனன்.
கரிந்து
மாலை சருகு ஆகவும், புதிய கமல
வாள்முகம் வெயர்க்கவும்,
திருந்து
கண் இணை சிவக்கவும், கொடிய செய்ய
வாய் இதழ் துடிக்கவும்,
இருந்த
பேர் அவையின் நெடிது உயிர்த்திடும்
இராசராசன், 'அவனுக்கு இவன்
விருந்து
செய்த உறவு என்கொல்?' என்று அரசர் எதிர்
விதூரனை விளம்புவான்:
'வன்பினால் அவனி வௌவ என்றுகொல், என்
மனையில் உண்டியை மறுத்தவன்
தன்
பதாகினியொடு இனிது அருந்தும்வகை தன் இல்
இன் அமுது இயற்றினான்?'
என்
பிதாவொடு பிறந்தும், இன்று அளவும் என்
கைஓதனம் அருந்தியும்,
அன்புதான்
உடையன்அல்லன்; என் பகைதனக்கும்
உற்ற பகை அல்லனோ?
'முதல் விழைந்து, ஒருவன் உடன் இயைந்த பொருள்
பற்றி, இன்புற முயங்கினும்,
அதிகம்
என்ற பொருள் ஒருவன் வேறு தரின்,
அவனையே ஒழிய அறிவரோ?
பொது
மடந்தையர் தமக்குமண்ணில் இது புதுமை அல்ல;
அவர் புதல்வனாம்
விதுரன்
இன்று அவனொடு உறவு கொண்டது ஓர்
வியப்பை என் சொலி வெறுப்பதே!'
விதுரர்
அதுகேட்டு வெகுண்டார். "அடா! துரியோதனா! இவ்வாறு கூறிய உன் வாயை வடிவாளால்
தொளைத்து உன் தலையையும் துணிப்பன். நீ எனக்கு ஒரு பொருளன்று. குரு குலத்தில்
ஒருவன் மகனைக் கொன்றனனன் என்று வானவர் பழிப்பர் என்று உனக்கு உயிர்ப்பிச்சை
தந்தனன். இல்லையேல், நீ நாவுடன் இன்னும்
இருப்பாயோ? மூடனே! நாளை
நடக்கின்ற யுத்தத்தில் அறம் வெல்லும். பாவம் தோற்கும். நீ அறநெறியினின்றும்
வழுவியவன். உன்னுடன் நின்று போர் புரிந்தால் பாண்டவரே வெல்லுவர். ஆனால், அப்பொழுதும் என்னை பட்ச பாதத்துடன் போர்
புரிந்ததாக நீ கூறுவாய். ஆதலின், இந்த வில்லை வெட்டுவேன். நீ உயிருடன்
உள்ளவரை இந்த அத்தினபுரத்தில் தங்கமாட்டேன். தீர்த்த யாத்திரை செல்லுவேன்"
என்று கூறி, தனது ஒப்பற்ற வில்லை
இரண்டு துண்டுகளாக வெட்டிவிட்டு நீங்கினார். பாண்டவர்களுடைய வெற்றிக்கு இதுவும்
ஒரு சிறந்த காரணம்.
இன்ன
வாறுஇவன் உரைத்த போது,அவன்
எழுந்திருந்து, "வசை சொன்ன நீ
சொன்ன
வாய்குருதி சோர வாள்கொடு
தொனைத்து நின்முடி துணிப்பன்யான்.
மன்னவா
குருகு லத்திலே ஒருவன்
மைந்தன் ஆருயிரை வௌவினான்
என்ன
வானவர் நகைப்பரே, எனை
உரைத்த நாவுடன் இருத்தியோ?
"சொல்இரண்டு
புகலேன் இனிச்சமரில்
நின்று வெங்கணை தொடேன்" எனா
வில்இரண்டினும்
உயர்ந்த வில்அதனை
வேறுஇரண்டுபட வெட்டினான்
மல்இரண்டினையும்
இருவராகி முன்
மலைந்த காளமுகில் வந்துதன்
இல்இரண்டு
தினம் வைகுதற்கு உலகில்
எண்ணிலாத தவம் எய்தினான்.
விசையற்கு
உயர் தேர்ப் பரி ஊர்பவன் மருகோனே ---
இராவண
சங்காரம் செய்தவரும், திருப்பாற் கடலைக்
கடைந்தவரும் ஆகிய கண்ணபிரான் கருணையினால் தேர் ஓட்டுவதாகிய இழிந்த செயலை செய்தார். “சீர்படைத்த
கேண்மையினால் தேர் ஊர்தற்கு இசைந்து அருளும் செங்கண்மால்” என்கின்றது வில்லிபாரதம்.
"பத்தற்கு இரதத்தைக் கடவிய பச்சைப் புயல்" என்றார் அடிகளார் "முத்தைத்
தரு" எனத் தொடங்கும் திருப்புகழில்.
தரும
வீம அருச்சுன நகுல
சகாதே வர்க்குப் ...... புகல் ஆகிச்
சமர
பூமியில் விக்ரம வளைகொடு
நாள்ஓர் பத்து எட் ...... டினில் ஆளும்
குரு
மகீதலம் உட்பட, உளம் அது
கோடாமல் சத் ...... ரியர் மாள,
குலவு
தேர்கடவு அச்சுதன் மருக!
குமாரா! கச்சிப் ...... பெருமாளே. --- (கருமமான) திருப்புகழ்.
பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர்
வென்றிட, சகுனி கவறால் பொருள்
பங்கு உடை அவனி பதி தோற்றிட, ...... அயலேபோய்ப்
பண்டையில்
விதியை நினையாப் பனி-
ரண்டு உடை வருட முறையா, பல
பண்புடன் மறைவின் முறையால், திரு ...... வருளாலே
வஞ்சனை
நழுவி நிரைமீட்சியில்
முந்து தமுடைய மனைவாழ்க்கையின்
வந்தபின், உரிமை அது கேட்டிட, ...... இசையாநாள்,
மண்கொள
விசையன் விடு தேர்ப்பரி
உந்தினன் மருக! வயலூர்க் குக!
வஞ்சியில்
அமரர் சிறைமீட்டருள் ...... பெருமாளே. --- (சஞ்சல சரித)
திருப்புகழ்.
திருதராட்டிரன்
உதவு நூற்றுவர்
சேண் நாடு ஆள்வான், நாள் ஓர் மூவா ...... றினில் வீழ,
திலக
பார்த்தனுமு உலகு காத்து அருள்
சீர் ஆமாறே தேர்ஊர் கோமான் ...... மருகோனே!
குருதி
வேல்கர! நிருத ராக்ஷத
கோபா! நீபா! கூதாளா! மா ...... மயில்வீரா!
குலிச
பார்த்திபன் உலகு காத்து அருள்
கோவே! தேவே! வேளே! வானோர் ......
பெருமாளே. --- (பருதியாய்) திருப்புகழ்.
சூது பொரு தருமன் நாடு தோற்று, இரு
ஆறு வருஷம் வன வாசம் ஏற்று, இயல்
தோகை உடனுமெ விராட ராச்சியம் ...... உறைநாளில்,
சூறை
நிரை கொடு, அவர் ஏக மீட்டு, எதிர்
ஆளும் உரிமை தருமாறு கேட்டு, ஒரு
தூது செல, அடுவல் ஆண்மை தாக்குவன், ......எனமீள,
வாது
சமர் திருத ரான ராட்டிர
ராஜ குமரர், துரியோதன னால், பிறர்
மாள, நிருபரொடு சேனை தூள்பட, ...... வரி சாப
வாகை
விஜயன் அடல் வாசி பூட்டிய
தேரை முடுகு நெடுமால், பராக்ரம
மாயன் மருக! அமர் நாடர் பார்த்திப ......
பெருமாளே. --- (மோதுமறலி)
திருப்புகழ்.
கீர்த்தி
உராவிய விறல் மெய்த் திருவேட்களம் ---
திருவேட்களத்தில்
உள்ள அன்பர்கள் இனிது அறம் செய்வதால் எங்கும் கீர்த்தி உலாவுகின்றது.
உரைப்பார்
உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல்
நிற்கும் புகழ். --- திருக்குறள்.
தன்னை
அடைந்தவரது பாவங்களைத் தீர்க்கும் ஆற்றலும் உண்மையும் உடையது அத் திருத்தலம்.
திருவேட்களம்
என்ற இத் திருத்தலம் ,சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம். சிதம்பரத்தில்
இருந்து 2 கி.மீ. தொலைவில்
அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தின் உள்ளே புகுந்து பின்புறம் இசைக் கல்லூரியைக்
கடந்து சென்று இத்திருத்தலத்தை அடையலாம்.
இறைவர்
: பாசுபதேசுவரர், பாசுபதநாதர்.
இறைவியார்
: சற்குணாம்பாள், நல்லநாயகி.
தல
மரம் : மூங்கில்.
தீர்த்தம் : தீர்த்தக்குளம் - கோயிலின் எதிரில்.
அருச்சுனன்
தவம் செய்து, பாசுபதம் பெற்ற தலமாகக்
கருதப்படுவது. பாரதப் போரில் வெற்றி பெறுவதற்காக அருச்சுனன் பாசுபதம் பெற விரும்பி
சிவபெருமானை நோக்கி மூங்கில் காடாக இருந்த திருவேட்களத்தில் கடும் தவம்
செய்கிறான். (கயிலைமலை சென்று தவம் முயன்றதாக, வில்லிபாரதம் கூறுகிறது என்பதை
அறியவும்)
அருச்சுனனின் தவத்தைக் கெடுக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான்.
சிவபெருமான் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து தனது அம்பால் பன்றியைக் கொன்றார்.
அதே பன்றியின் மீது அருச்சுனனும் அம்பினை எய்தான். அந்த பன்றியை யார் கொன்றார்கள்
என்பது குறித்து சிவனுக்கும் அருச்சுனனுக்கும் சொற்போரும், விற்போரும் நடந்தது. விற்போரில் அருச்சுனின்
வில் முறிந்தது. இதனால் கோபமடைந்த அவன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். இந்த
அடி மூவுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. இதனால் அன்னை பார்வதி
கோபமடைந்தாள். சிவன் பார்வதியை சமாதானப்படுத்தி தனது திருவடியால் அருச்சுனனை தூக்கி
எறிகிறார். அவன் சிவனின் திருவடி தீட்சை பெற்று, அன்னையின் கருணையால் இத்தல
தீர்த்தத்தில் விழுகிறான். சிவன்,
உமாதேவியுடன்
காட்சி கொடுத்து, அருச்சுனனுக்கு
பாசுபதம் கொடுத்து அருளினார். அருச்சுனன் வில்லால் அடித்த தழும்பு லிங்கத்தின்
மீது இருப்பதை இன்றும் காணலாம். கிராதமூர்த்தியாக பார்வதிதேவியுடன் பாசுபத அத்திரத்தைக்
கையில் ஏந்திய இறைவனின் உற்சவ விக்கிரகமும், அருச்சுனனின் உற்சவ விக்கிரகமும்
இவ்வாலயத்தில் உள்ளன. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அருச்சுனனுக்கு பாசுபத அத்திரம்
அளித்த விழா நடைபெறுகிறது.
திருஞானசம்பந்தர்
தில்லையில் தங்கியிருப்பதற்கு மனமில்லாமல் திருவேட்களம் என்ற இத்தலத்தில் தங்கி இருந்து
கொண்டு தான் சிதம்பரத்திற்கு எழுந்தருளி நடராஜப் பெருமானை தரிசித்து வந்தார்.
திருஞானசம்பந்தர், அப்பர் வழிபட்டு, திருப்பதிகங்கள் அருளிய திருத்தலம்.
வள்ளல்
பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மாயம் மிகும்
வாள் களம் உற்றாங்கு விழி மாதர் மயல் அற்றவர் சூழ் வேட்களம் உற்று ஓங்கும்
விழுப்பொருளே" என்று போற்றி உள்ளார்.
கருத்துரை
முருகா!
தேவரீரது திருவருட்கருணையை ஒரு போதும் மறவேன்.
No comments:
Post a Comment