அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அறிவு இலாதவர்
(திருநெல்வாயில்)
முருகா!
உலுத்தர்களைப் பாடி, வறுமையில் கிடந்து புரளாமல்,
தேவரீரைப்
பாடி உய்ய அருள்.
தனன
தானன தானனாத் தனந்த
தனன தானன தானனாத் தனந்த
தனன தானன தானனாத் தனந்த ...... தனதான
அறிவி
லாதவ ரீனர்பேச் சிரண்டு
பகரு நாவினர் லோபர்தீக் குணங்க
ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் ......
புனையாதர்
அசடர்
பூமிசை வீணராய்ப் பிறந்து
திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி
யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் ......
தெரியாத
நெறியி
லாதவர் சூதினாற் கவர்ந்து
பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச
நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த ......
தமிழ்கூறி
நினைவு
பாழ்பட வாடிநோக் கிழந்து
வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து
நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி ......
யருள்வாயே
நறிய
வார்குழல் வானநாட் டரம்பை
மகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கி
நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்து ......
களிகூர
நடுவி
லாதகு ரோதமாய்த் தடிந்த
தகுவர் மாதர்ம ணாளர்தோட் பிரிந்து
நசைபொ றாதழு தாகமாய்த் தழுங்கி ......
யிடர்கூர
மறியு
மாழ்கட லூடுபோய்க் கரந்து
கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து
வளரு மாவிரு கூறதாய்த் தடிந்த ......
வடிவேலா
மருவு
காளமு கீல்கள்கூட் டெழுந்து
மதியு லாவிய மாடமேற் படிந்த
வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த .....பெருமாளே.
பதம் பிரித்தல்
அறிவு
இலாதவர், ஈனர், பேச்சு இரண்டு
பகரும் நாவினர், லோபர், தீக் குணங்கள்
அதிக பாதகர், மாதர்மேல் கலன்கள் ......புனை
ஆதர்,
அசடர்,
பூமிசை வீணராய்ப் பிறந்து
திரியும் மானுடர், பேதைமார்க்கு இரங்கி
அழியும் மாலினர், நீதிநூல் பயன்கள் ......
தெரியாத
நெறி
இலாதவர், சூதினால் கவர்ந்து
பொருள்செய் பூரியர், மோகமாய்ப் ப்ரபஞ்ச
நிலையில் வீழ்தரு மூடர்பால், சிறந்த ......
தமிழ்கூறி,
நினைவு
பாழ்பட வாடி, நோக்கு இழந்து,
வறுமை ஆகிய தீயின்மேல் கிடந்து
நெளியும், நீள்புழு ஆயினேற்கு இரங்கி ....அருள்வாயே.
நறிய
வார்குழல் வானநாட்டு அரம்பை
மகளிர் காதலர் தோள்கள் வேட்டு இணங்கி
நகை கொடு ஏழிசை பாடிமேல் பொலிந்து ......
களிகூர,
நடுவு
இலாத குரோதமாய்த் தடிந்த
தகுவர், மாதர் மணாளர் தொள் பிரிந்து
நசை பொறாது, அழுது, ஆகம் மாய்த்து, அழுங்கி
...இடர்கூர,
மறியும்
ஆழ்கடல் ஊடு போய்க் கரந்து,
கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து
வளரும் மா, இரு கூறதாய்த் தடிந்த ...... வடிவேலா!
மருவு
காள முகீல்கள் கூட்டு எழுந்து
மதி உலாவிய மாடம் மேல் படிந்த
வயல்கள் மேவு நெல்வாயில் வீற்றிருந்த .....பெருமாளே.
பதவுரை
நறிய வார்குழல்
வானநாட்டு அரம்பை மகளிர் --- நறுமணம் உள்ள நீண்ட கூந்தலை உடைய
தேவலோகத்துப் பெண்கள்
காதலர் தோள்கள்
வேட்டு இணங்கி
--- தங்கள் காதலர்களின் தோள்களை விரும்பித் தழுவி,
நகை கொடு ஏழிசை
பாடிமேற் பொலிந்து களிகூர --- உள்ள மகிழ்ச்சியோடு ஏழிசையைப் பாடி, மங்கலம் மிகுந்து களிப்பினை அடையவும்,
நடு இலாத
குரோதமாய்த் தடிந்த தகுவர் மாதர் --- நடுநிலைமை தவறி, சினம் மிகுந்தவராய் தேவர்களைத்
துன்புறுத்தி வந்த அசுரர்களின் மனைவியர்,
மணாளர் தோள்
பிரிந்து
--- தங்கள் கணவரின் தோள்களைப் பிரிந்து,
நசை பொறாது அழுது ---
அவரது
அன்பைப் பெறாமையால் அழுது,
ஆகம் மாய்த்து --- தங்கள் உடம்பை
மாய்த்துக் கொண்டும்,
அழுங்கி --- வருந்தியும்,
இடர்கூர --- துன்பப்படவும்,
மறியும் ஆழ்கடல் ஊடு போய்க் கரந்து --- அலைகள் மறித்து எழுகின்ற ஆழ்ந்த கடலின் நடுவில் போய்
ஒளிந்து,
கவடு கோடியின்
மேலுமாய்ப் பரந்து வளரும் --- கிளைகள் கோடிக்கணக்கின்
மேலுமாய்ப் பரந்து வளர்ந்து
மா இரு கூறு அதாய்த் தடிந்த வடிவேலா --- மாமரமாய் நின்ற
சூரபதுமன் இரண்டு கூறாகும்படி வெட்டிப் பிளந்த கூர்மை பொருந்திய வேலாயுதரே !
மருவு காள முகீல்கள் கூட்டு
எழுந்து
--- பொருந்திய கரு மேகங்கள் கூட்டமாக எழுந்து,
மதி உலாவிய மாடமேல்
படிந்த
--- சந்திரன் உயர்ந்த மாடங்களின் மீது படிந்து உள்ளதும்,
வயல்கள் மேவு நெல்வாயில்
வீற்றிருந்த பெருமாளே --- வயல்கள் சூழ்ந்துள்ளதுமாகிய
திருநெல்வாயில் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்த பெருமையில் மிக்கவரே!
அறிவு இலாதவர் --- அறிவு அற்றவர்கள்,
ஈனர் --- ஈனத் தன்மை உடையவர்கள்,
பேச்சு இரண்டு பகரும் நாவினர் --- இருவிதமாகப்
பேசும் நாவினை உடையவர்கள்,
லோபர் --- கஞ்சத்தனம்
உடையவர்கள்,
தீக் குணங்கள் அதிக பாதகர் --- தீய குணங்களுடன், மிகுந்த பாவங்களைப் புரிபவர்கள், மேற்கொண்டு மிக்க
பாவங்களைச் செய்பவர்கள்,
மாதர் மேல் கலன்கள்
புனை ஆதர்
--- பொதுமகளிருக்கு அணிகலன்களைப் புனைந்து அழகு பார்க்கும் அறிவிலிகள்,
அசடர் --- கீழ்மக்கள்,
பூமிசை வீணராய்ப்
பிறந்து திரியும் மானுடர் --- பூமியில் பிறந்து பயனற்றவர்களாகத்
திரிகின்ற மனிதர்கள்,
பேதைமார்க்கு இரங்கி
அழியும் மாலினர் --- பெண்கள் மீது இரக்கம் கொண்டு அழியும் மோக மனத்தினர்,
நீதிநூல் பயன்கள்
தெரியாத
--- நீதி நூல்களின் பயன்களைத் தெரியாதவர்,
நெறி இலாதவர் --- நன்னெறியில் நில்லாதவர்கள்,
சூதினால் கவர்ந்து பொருள் செய் பூரியர் --- சூதாட்டத்தால் பிறர் பொருளைக்
கவர்ந்து பெருக்கும் கீழ்மக்கள்,
மோகமாய்ப் ப்ரபஞ்ச
நிலையில் வீழ்தரு மூடர் --- ஆசைப் பெருக்கால் உலகியல் இன்பத்திலேயே
உழலுகின்ற மூடர்கள்,
பால் சிறந்த தமிழ்கூறி
--- ஆகிய இவர்களிடம் சிறப்பு மிக்க தமிழ்ப் பாடல்களைப் பாடிக்காட்டி,
நினைவு பாழ்பட --- நினைவானது
பாழ்பட்டுப் போய்,
வாடி --- உடம்பும் உள்ளமும் வாடி,
நோக்கு இழந்து --- பார்வையும் இழந்து,
வறுமை ஆகிய தீயின் மேல்
கிடந்து நெளியும் --- வறுமை என்னும் தீயின் மேல் கிடந்து நெளிகின்ற,
நீள் புழு ஆயினேற்கு --- நீண்ட புழுவைப் போல ஆன அடியவனுக்கு,
இரங்கி அருள்வாயே --- மனம் இரங்கி
அருள் புரிவாயாக.
பொழிப்புரை
நறுமணம் உள்ள நீண்ட கூந்தலை உடைய தேவலோகத்துப்
பெண்கள் தங்கள் காதலர்களின் தோள்களை விரும்பித் தழுவி, உள்ள
மகிழ்ச்சியோடு ஏழிசையைப் பாடி, மங்கலம்
மிகுந்து களிப்பினை அடையவும், நடுநிலைமை தவறி, சினம் மிகுந்தவராய் தேவர்களைத்
துன்புறுத்தி வந்த அசுரர்களின் மனைவியர், தங்கள்
கணவரின் தோள்களைப் பிரிந்து, அவரது அன்பைப் பெறாமையால் அழுது, தங்கள் உடம்பை
மாய்த்துக் கொண்டும், வருந்தியும், துன்பப்படவும், அலைகள்
மறித்து எழுகின்ற ஆழ்ந்த கடலின் நடுவில் போய் ஒளிந்து, கிளைகள் கோடிக்கணக்கின் மேலுமாய்ப்
பரந்து வளர்ந்து மாமரமாய் நின்ற சூரபதுமன் இரண்டு கூறாகும்படி வெட்டிப் பிளந்த கூர்மை
பொருந்திய வேலாயுதரே !
பொருந்திய கரு மேகங்கள் கூட்டமாக
எழுந்து, சந்திரனனைத்
தொடுகின்ற உயர்ந்த மாடங்களின் மீது படிந்து உள்ளதும், வயல்கள் சூழ்ந்துள்ளதுமாகிய
திருநெல்வாயில் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்த பெருமையில் மிக்கவரே!
அறிவு அற்றவர்கள், ஈனத் தன்மை உடையவர்கள், இருவிதமாகப் பேசும் நாவினை உடையவர்கள், கஞ்சத்தனம் உடையவர்கள், தீய குணங்களுடன், மிகுந்த பாவங்களைப் புரிபவர்கள், மேற்கொண்டு மிக்க
பாவங்களைச் செய்பவர்கள், பொதுமகளிருக்கு
அணிகலன்களைப் புனைந்து அழகு பார்க்கும் அறிவிலிகள், கீழ்மக்கள், பூமியில் பிறந்து பயனற்றவர்களாகத்
திரிகின்ற மனிதர்கள், பெண்கள் மீது இரக்கம் கொண்டு அழியும் மோக மனத்தினர்,
நீதி நூல்களின் பயன்களைத் தெரியாதவர், நன்னெறியில் நில்லாதவர்கள், சூதாட்டத்தால் பிறர் பொருளைக் கவர்ந்து பெருக்கும் கீழ்மக்கள், ஆசைப் பெருக்கால் உலகியல் இன்பத்திலேயே
உழலுகின்ற மூடர்கள், ஆகிய இவர்களிடம்
சிறப்பு மிக்க தமிழ்ப் பாடல்களைப் பாடிக்காட்டி, நினைவானது
பாழ்பட்டுப் போய், உடம்பும் உள்ளமும்
வாடி, பார்வையும்
இழந்து, வறுமை என்னும் தீயின்
மேல் கிடந்து நெளிகின்ற, நீண்ட புழுவைப் போல ஆன அடியவனுக்கு மனம் இரங்கி அருள் புரிவாயாக.
விரிவுரை
மறியும்
ஆழ்கடல் ஊடு போய்க் கரந்து கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து வளரும் மா இரு கூறு அதாய்த்
தடிந்த வடிவேலா ---
மாயையின்
மகனாகிய சூரபன்மன் சிவமூர்த்தியின்பால் பற்பல வரம் பெற்று, அதனால் உள்ளம் தருக்கி,
அறநெறிப் பிறழ்ந்து அமரர்க்கு அலக்கண் விளைத்தான். குமாரக்கடவுள் தேவர்
சிறை தீர அருள் உள்ளம் கொண்டு, போரைத் தொடங்கி அசுரர் அனைவரையும் சாய்த்தனர்.
முடிவில் சூரபன்மன் போர்க்கோலம் கொண்டு ஆயிரத்தெட்டு அண்டங்களிலும் உள்ள சேனைகளைத்
திரட்டிக் கொண்டு போர்க்களம் வந்தான். அப் பெரும் சேனையைக் கண்ட பூதவெள்ளங்களும்
சேனாதிபதிகளும் வீரபாகு தேவர் ஒழிந்த ஏனைய வீரர்களும் உள்ளம் நடுங்கினர். தேவர்கள்
அளக்க ஒண்ணாத தும்பத்தை அடைந்தனர். குகப்பெருமானார் அப்பெருஞ் சேனைகளையெல்லாம்
அழித்தனர்.
முருகப் பெருமானுடைய விசுவரூபத்தைக்
கண்டு வெருண்ட சூரபதுமன்,
"முருகப்
பெருமானை வெல்லுவதும் கொல்லுவதும் பின்னர் ஆகட்டும். இக் குமரனைக் கொணர்ந்து
என்னுடன் போர் புரிய விடுத்த தேவர் யாவரையும் முன்னே கொல்லுவன்" என்று
சீறினான். கதிரவனும் அஞ்ச, உலக முழுதும் ஓரே
இருள் வடிவாக நின்று ஆர்ப்பரித்தான். ஆலாலவிடம் போல் தோன்றிய அவ் இருளைக் கண்டு
அமரர் அஞ்சினர். அவ் இருளில் சூரபன்மன் மலை போன்ற பேருருவம் கொண்டு வானவரை
விழுங்குமாறு வானிடை எழுந்தான். அதனைக் குறிப்பினால் அறிந்த வானோரும் ஏனோரும்
திசைதொறும் ஓடி திக்கு வேறு இன்றி திகைத்துக் கூற்றை எதிர்ந்த உயிர்களைப் போல்
பதறிக் கதறித் துதிக்கலுற்றார்கள்.
நண்ணினர்க்கு இனியாய் ஓலம், ஞான நாயகனே ஓலம்,
பண்ணவர்க்கு இறையே ஓலம், பரஞ்சுடர் முதலே ஓலம்,
எண்ணுதற்கு அரியாய் ஓலம், யாவையும் படைத்தாய்
ஓலம்,
கண்ணுதல் பெருமான் நல்கும் கடவுளே ஓலம்
ஓலம்.
தேவர்கள் தேவே ஓலம், சிறந்த சிற்பரனே ஓலம்,
மேவலர்க்கு இடியே ஓலம், வேற்படை விமலா ஓலம்,
பாவலர்க்கு எளியாய் ஓலம், பன்னிரு புயத்தாய்
ஓலம்,
மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம், ஓலம்.
என்று பலவாறு முறையிட்டு, "எம்பெருமானே!
அடியேங்களைக் காத்து அருளும்" என்று வேண்டினார்கள். முருகவேள் தமது
திருக்கரத்தில் உள்ள வேற்படையை நோக்கி, "இங்கு
இவன் உடலைப் பிளந்து எய்துதி இமைப்பில்" என்று பணித்து அருளினர். முருகப்
பெருமான் விடுத்த வேலாயுதம் ஆயிரகோடி சூரிய ஒளியை உடையதாய், நெருப்பைச் சிந்திக்கொண்டு
சென்றது. அதனால் சூரபன்மன் கொண்ட
இருளுருவம் அழிந்தது.
ஏயென முருகன் தொட்ட இருதலை படைத்த
ஞாங்கர்
ஆயிர கோடி என்னும் அருக்கரில் திகழ்ந்து
தோன்றித்
தீஅழல் சிகழி கான்று சென்றிட அவுணன்
கொண்ட
மாஇருள் உருவம் முற்றும் வல்விரைந்து
அகன்றது அன்றே.
அதுகண்ட சூரபன்மன், வேலாயுதத்தினது வெம்மையை ஆற்றாது
கடலுக்கு நடுவண் ஒளித்தனன். வேல் கடலின்
அருகில் சென்றவுடன் கடல் வற்றி வறண்டு விட்டது.
திரைக்கடலை உடைத்துநிறை புனல்கடிது
குடித்துஉடையும்
உடைப்புஅடைய அடைத்துஉதிரம் நிறைத்துவிளை
யாடும்....
--- வேல் வகுப்பு.
சூரபன்மன் அண்ட முகடு முட்ட, நூறாயிர யோசனை அளவுடைய பெரு மரமாகி
நின்று, மண்ணும் விண்ணும்
விழல் பரப்பி, கிளைகளை அசைத்து, உலகங்களுக்கு எல்லாம் பேரிடர்
விளைத்தான். அப்போது உடுக்கள் உதிர்ந்தன. சூரியசந்திரர் கதி மாறினர். மண்ணுலகம்
இடிந்தது. குலமலைகள் பொடிபட்டன. திக்கயங்கள் மடிவுற்றன. அது கண்ட வேலாயுதம்
வெகுண்டு ஆயிரகோடி அக்கினி அண்டங்களின் தீப்பிழம்பு முழுவதும் ஒன்றுபட்டது போலாகி, மடம் பிடித்திட்ட வெஞ்சூர் மாமுதல்
தடிந்தது அன்றே. வேலாயுதத்தால் மாமரம் பிளக்கப்பட்டதும், மாளா வரம் பெற்ற சூரன் மடிந்திலன் ஆகி, பழைய அசுர வடிவம் கொண்டு, வாள் கொண்டு எதிர்த்துச் சீறினான்.
ஒப்பற்ற வேற்படை அவனுடைய உடம்பை இருகூறாகப் பிளந்து கடலிடை அவன் அடலை மாய்த்து, வேதங்கள் ஆர்த்தன. தேவர்கள் துதித்துச்
சிந்தும் பூமழைக்கு இடையே சென்று,
அங்கியின்
வடிவம் நீங்கி, அருள் வடிவைத் தாங்கி, வானகங்கையில் முழுகி கந்தக் கடவுளது
கரமலரில் வந்து அமர்ந்தது.
புங்கவர் வழுத்திச் சிந்தும் பூமழை
இடையின் ஏகி
அங்கியின் வடிவம் நீங்கி, அருள்உருக் கொண்டு, வான்தோய்
கங்கையில் படிந்து மீண்டு, கடவுளர் இடுக்கண்
தீர்த்த
எங்கள்தம் பெருமான் செங்கை எய்திவீற்று
இருந்ததுஅன்றே.
சிவபெருமான் தந்த வர பலத்தால், சூரபன்மன் அழிவிலன் ஆகி, மீட்டும் எழுந்து ஒரு கூறு சேவலும், மற்றொரு கூறு மயிலுமாகி, மிக்க சினத்துடன் சிறகுகளை வீசி, அதனால் உலகங்களைத் துன்புறுத்தி, முருகவேள் திருமுன் வந்தான்.
தாவடி நெடுவேல் மீளத் தற்பரன் வரத்தால்
வீடா
மேவலன் எழுந்து மீட்டு மெய்பகிர் இரண்டு
கூறும்
சேவலும் மயிலும் ஆகி சினங்கொடு தேவர்
சேனை
காவலன் தன்னை நாடி அமர்த்தொழில் கருதி
வந்தான்.
அவ்வாறு மீட்டும் அமர் புரிய வந்த
ஆற்றலின் மிக்க அந்த இரு பறவைகளையும் எம்பெருமான் கருணை நாட்டத்துடன் நோக்கி
அருளினார். உடனே சேவலும் மயிலும் போர் புரியும் எண்ணமும் சீற்றமும் செற்றமும்
நீங்கி, தெளிந்த உள்ளமும், சிவஞானமும், அன்புருவமும் பெற்றன. செவ்வேள் பரமன்
சேவலைக் கொடியாகவும், மாமயிலை வாகனமாகவும்
கொண்டருளினார். ஆயிரத்தெட்டு அண்டங்களும் வணங்க வாழ்ந்த சூரபன்மன் சேவலும் மயிலும்
ஆகி அகிலாண்ட கோடி எல்லாம் வணங்கி வாழ்த்தும் வரம்பிலாப் பேறு பெற்றான். அவனது தவத்தின் பெருமை அளப்பரியது. முருகப்
பெருமானது அருட் பார்வையின் பெருமையை அளக்க வல்லார் யாவர்? ஞானிகளது பார்வையால்
இரும்பு பொன்னாவது போல், கந்தவேள் கருணை
நோக்கால், சூரன் மறவடிவு நீங்கி, அறவடிவு பெற்றான்.
மருள்கெழு புள்ளே போல வந்திடு சூரன், எந்தை
அருள்கெழு நாட்டம் சேர்ந்த ஆங்குஅவன்
இகலை நீங்கித்
தெருள்கெழு மனத்தன் ஆகி நின்றனன், சிறந்தார் நோக்கால்
இருள்கெழு கரும்பொன் செம்பொன் ஆகிய
இயற்கை யேபோல்.
தீயவை புரிந்தா ரேனும் முருகவேள்
திருமுன் உற்றால்
தூயவர் ஆகி மேலைத் தொல்கதி
அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ, அடுசமர்
அந்நாள் செய்த
மாயையின் மகனும் அன்றோ வரம்புஇலா
அருள்பெற்று உய்ந்தான்.
இடுக்கண் தீர்ந்த இமையவர், முருகப்பெருமான் மீது பூமழை பொழிந்தனர்.
பாமலர் மொழிந்தனர்.
“அரியும் அயனோடு அபயம்
எனவே
அயிலை இருள் மேல் விடுவோனே” --- (இருவர்)
திருப்புகழ்.
“கவடு கோத்து எழும்
உவரி மாத்திறல்
காய் வேல் பாடேன்” --- திருப்புகழ்.
காய் வேல் பாடேன்” --- திருப்புகழ்.
நன்னெறியில்
செல்வோரை இறைவன் அறக்கருணை காட்டி ஆட்கொள்கின்றான். அந்நெறி வழுவுவோரை மறக்கருணை காட்டி
ஆட்கொள்கின்றான். அறக்கருணை காட்டி ஆளும் திறத்தை ஆளுடைய பிள்ளையார் வாழ்வில் காணமுடிகிறது.
மறக்கருணை காட்டி ஆளும் திறத்தை மற்ற மூவர் வாழ்விலும் கண்டு தெளிகின்றோம். இதனை அப்பர்
வாக்கால் நன்கு உணரலாம்.
ஒதுவித்
தாய்முன் அறவுரை காட்டி அமணரொடே
காதுவித்
தாய்கட்ட நோய்பிணி தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித்
தாய்நின் பணிபிழைக் கில்புளி யம்வளாரால்
மோதுவிப்
பாய்உகப்பாய் முனி வாய்கச்சி யேகம்பனே.
என்பது
அப்பர் அருள்வாக்கு.
பின்வரும்
அருள்நந்தி சிவத்தின் அருள்வாக்குளை எண்ணுக.
இதம்
அகிதங்கள் என்பது- இகல்மனம் வாக்குக்
காயத்து
இதம்
உயிர்க்கு உறுதி செய்தல்; அகிதம் மற்று அது
செய்யாமை;
இதம்
அகிதங்கள் எல்லாம் இறைவனே ஏற்றுக்
கொண்டு இங்கு
இதம்
அகிதத்தால் இன்பத் துன்பங்கள் ஈவன்
அன்றே.
நலம்
தீங்குகள் என்பன மனம் மொழி மெய்களால் உயிர்க்கு உறுதி பயப்பவற்றைச் செய்தலும்
செய்யாது விடுதலுமாகும். இறைவனே ஒரு செயலின் நன்மை தீமைகளை மதிப்பிட வல்லவன்.
ஆகையால் அவற்றை அவனே கைக் கொண்டு அதனைச் செய்த உயிர்களுக்கு இன்பத்தையும்
துன்பத்தையும் கூட்டுவான்.
இதம்
அகிதம் என்ற வட சொற்களுக்கு முறையே நலம் தீங்கு என்று பொருள். இதம் என்பது
உயிர்க்கு உறுதி பயப்பவற்றைச் செய்தல். அகிதம் என்பது செய்யத் தகாதவற்றைச் செய்தல்
மட்டும் இன்றி செய்யத் தக்கவற்றைச் செய்யாமையுமாகும்.
இறைவன்
இங்கு ஏற்பது என்னை இதம் அகிதங்கள்? என்னின்
நிறைபரன்
உயிர்க்கு வைத்த நேசத்தின் நிலைமை ஆகும்;
அறம்மலி
இதம் செய்வோருக்கு அநுக்கிரகத்தைச்
செய்வன்;
மறம்மலி
அகிதம் செய்யின் நிக்கிரகத்தை
வைப்பன்.
உயிர்கள்
செய்த நலம் தீங்குகள் இரண்டினையும் இறைவனே ஏற்றுக் கொள்வான் என்பது ஏன்? எனில் எவ்விடத்தும் நீக்கம் இன்றி
நிறைந்திருக்கும் இறைவன் உயிர்களிடத்து பேரருளினால் அவை வீடு பேறு அடைவதன்
பொருட்டேயாகும். அறம் மிகுந்த நன்மைகளைச் செய்வோர்க்கு இறைவன் அருள்புரிவான். மறம்
மிகுந்த தீங்கு புரிவோரை அதற்கு ஏற்ப ஒறுப்பான்.
நிக்கிரகங்கள்
தானும் நேசத்தால் ஈசன்
செய்வது;
அக்கிரமத்தால்
குற்றம் அடித்துத் தீர்த்து
அச்சம் பண்ணி
இக் கிரமத்தி னாலே ஈண்டு அறம் இயற்றிடு
என்பன்;
எக் கிரமத்தினாலும் இறைசெயல் அருளே
என்றும்.
இறைவன்
உயிர்களை ஒறுத்தலும் கூட அவன் திருவருட் செயலேயாகும். எவ்வாறு என்னில் முறைமை
தப்பிக் குற்றம் இழைத்த உயிரை ஒறுத்து இனித் தீவினை செய்யாத வண்ணம் அச்சுறுத்தி இனியேனும்
அறத்தோடு பொருந்திய செயல்களைச் செய்வாயாக என்று உள் நின்று உணர்த்துவான்.
எம்முறையில் பார்த்தாலும் இறைவனின் செயல் என்றென்றும் அருளே ஆகும்.
தந்தை
தாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் தம்சொல்
ஆற்றின்
வந்திடா
விடின், உறுக்கி, வளாரினால் அடித்து,
தீய
பந்தமும்
இடுவர்; எல்லாம் பார்த்திடின் பரிவே
ஆகும்;
இந்த
நீர் முறைமை அன்றோ- ஈசனார் முனிவும்
என்றும்?
தந்தையும்
தாயும் தாம் பெற்றெடுத்த மக்கள் தம் சொல்படி நடக்கவில்லை எனின் அம்மக்களைச்
சொல்லால் கடிந்தும், வளாரினால் அடித்தும், அதற்கும் பணியாத போது கட்டி வைத்து
அவர்களைத் திருத்த முயல்வார்கள். வெளிப்பார்வைக்குச் சினத்தால் ஒறுப்பது போல்
தோன்றினாலும் ஆய்ந்து பார்க்கும் போது தாய்தந்தையர்களின் இச் செயல்கள்யாவும் தம்
மக்களிடத்து அவர்கள் கொண்ட அன்பினால் விளைந்தனவே ஆகும். அவ்வாறே இறைவன் உயிர்களை
ஒறுப்பது என்றென்றும் அவன் அருளால் விளைந்ததே.
சொன்னதைக்
கேட்டு அதன்படி நடப்போர்க்கு நலம் செய்வது அறக்கருணை எனப்படும். இது வடமொழியில் அநுக்கிரகம் எனப்படும். சொன்னதைக்
கேட்டு அதன்படி நடவாதாரை அவரவர் தன்மைக்கேற்ப இடர் கொடுத்து, அந்த இடரால் அவர்களை நன்னெறிப்படுத்தி
நலம் செய்வது மறக்கருணை எனப்படும். இது வடமொழியில் நிக்கிரகம் எனப்படும்.
அகரம்என அறிவாகி உலகமெங்கும் அமர்ந்து,அகர
உகரமக ரங்கள் தம்மால்
பகரும்ஒரு முதலாகி, வேறும் ஆகி,
பலவேறு திருமேனி தரித்துக்கொண்டு,
புகரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்து எய்தப்
போற்றுநருக்கு அறக்கருணை புரிந்து,அல் லார்க்கு
நிகரில்மறக் கருணைபுரிந்து ஆண்டுகொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வாம். --- விநாயக புராணம்.
மறக்கருணையும் தனி அறக்கருணையும் தந்து
வாழ்விக்கும் ஒண்மைப் பதம்..... --- திருவருட்பா.
அனுக்கிரகம்
- அருள் செய்தல். நிக்கிரகம் - ஒறுத்தல்.
கல்லாலின் புடை அமர்ந்து, கண்ணுதற் கடவுள் சனகாதி நால்வருக்கும், எல்லாமாய் அல்லவுமாய், இருந்த தன்னை இருந்தபடி இருந்து காட்டி, மோனநிலையில் அமர்ந்தனர். அதனால் உலகில்
உள்ள உயிர்கள் யாவும் இணை விழைச்சு இன்றியும், உயிர்கள் உற்பத்தி யின்றியும் வாளா கிடந்தன. அதனாலும், குமர உற்பத்தி குறித்தும், மாலயனாதி வானவர், இறைவருடைய மோன நிலையை மாற்றும் பொருட்டு மன்மதனை ஏவினார்கள். நெருப்பு மலையிடம்
ஒரு சிறு ஈ சென்றது போல் பரஞ்சுடர் முன்னே மதனன் சென்று, கரும்பு வில்லை வளைத்து கரும்புநாண் மாட்டி மலர்க்கணைகளைப்
பொழிந்தான். தென்முகப் பரமாசிரியர் சிறிதே நெற்றிக் கண்ணைத் திறந்தனர். அதினின்றும்
தோன்றிய சிறு நெருப்புப் பொறியால் மதனன் சாம்பல் குவியலாக ஆனான். மாரனை எரித்த அக்கண்ணினின்றும்
குமாரன் தோன்றினார்.
காமனை எரித்து நிக்கிரகம் புரிந்தது சிவபெருமானுடைய திருவிழிகள். குமரனைத்
தந்து அநுக்கிரகம் புரிந்ததும் அத்திருவிழிகளே ஆகும்.
முருகப் பெருமான் திரு அவதாரமும் துட்ட நிக்கிரகம், சிட்ட அனுக்கிரகம்
புரியவே என்பதை உணர்த்தினார் அடிகளார் இத் திருப்புகழில்.
தேவலோகத்து மங்கையர்ம, தமது துணைவர்களாகிய தேவர்களோடு கூடி மகிழ்ந்து
வாழ அருள் புரிந்தது முருகப் பெருமான் புரிந்த அறக்கருணை என்பதை, "நறிய வார்குழல்
வானநாட்டு அரம்பை மகளிர் காதலர் தோள்கள் வேட்டு இணங்கி, நகைகொடு ஏழிசை பாடி,
மேல் பொலிந்து களிகூர" என்னும் வரிகளாலும், அறநெறி தவறி நின்ற
அசுரரை மாய்த்தது மறக்கருணை என்பதை, "நடு இலாத குரோதமாய்த் தடிந்த தகுவர்
மாதர் மணாளர் தோள் பிரிந்து,
நசை
பொறாது அழுது, ஆகம் மாய்த்து, அழுங்கி, இடர்கூர" என்னும் வரிகளாலும்
காட்டினார் அடிகளார்.
மருவு
காள முகீல்கள் கூட்டு எழுந்து, மதி
உலாவிய மாடமேல் படிந்த, வயல்கள் மேவு நெல்வாயில்
வீற்றிருந்த பெருமாளே ---
காளம்
- கருமை.
"முகில்"
என்னும் சொல்லானது "முகீல்" என வந்தது. முகில்
- மேகம்.
சநிதிரனைத்
தொடுகின்ற அளவு உயர்ந்துள்ள மாடமாளிகைகளின் மீது கருமேகங்கள் படிந்து உள்ளன என்று
நெல்வாயில் என்னும் திருத்தலத்தின் அருமையை ஓதுகின்றார் அடிகளார். வயல்களால் சூழப்பட்டு
உள்ளது என்பதன் மூலம் அத் திருத்தலத்தின் வளப்பத்தைக் காட்டுகின்றார்.
திருநெல்வாயில்
என்பது சோழ நாட்டு, காவிரி வடகரைத்
திருத்தலம். மக்கள் வழக்கில் சிவபுரி என்று வழங்கப்படுகின்றது, சிதம்பரத்தில்
இருந்து அண்ணாமலை பல்கலைக்கழகம் நுழைவு வாயில் வரை சென்று, பல்கலைக் கழகத்திற்குள் நுழையாமல்
வலப்புறமாகத் திரும்பி கவரப்பட்டு சாலையில் சென்று, அது பிரதான சாலையில் சேருமிடத்தில்
(கவரப்பட்டு சாலை இடப்புறமாகத் திரும்பி) நேரே பேராம்பட்டு செல்லும்
எதிர்ச்சாலையில் சென்றால் சிவபுரியை அடையலாம். திருவேட்களத்திலிருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.
இறைவர் :
உச்சிநாதேசுவரர்
இறைவியார்
: கனகாம்பிகை
தல
மரம் : நெல்லி மரம்
திருஞானசம்பந்தருக்கு
உச்சிப் பொழுதில் உணவு அளித்துப் பசியை கோக்கியதால் இறைவனுக்கு உச்சிநாதேஸ்வரர்
என்று பெயர் உண்டானதாகச் சொல்லப்படுகின்றது.பெரிய புராணத்தில் ஆதாரம் இல்லை. திருஞானசம்பந்தர்
திருவேட்களத்தில் தங்கி இருந்த நாட்களில் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட திருத்தலம்.
அறிவு
இலாதவர் ---
நல்
அறிவு சிறிதும் இல்லாதவர். எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி இரங்குகின்ற அறிவு.
உலகியல் அறிவைக் குறித்தது அல்ல. பிற உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக
எண்ணுகின்ற அறிவு. அல்லாதது எல்லாம் வெற்றறிவு. "அறிவினால் ஆகுவது உண்டோ,
பிறிதன் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை" என்னும் நாயனாரின் அருள்வாக்கை
எண்ணுக. அறிவினில் தலையான அறிவு எது? தமக்குத் தீய செயல்களைச் செய்பவர்க்கும்,
தாம் அவருக்கு அவற்றைத் திருப்பிச் செய்யாமல் விடுவது ஆகும்.
"அறிவினுள்
எல்லாம் தலை என்ப, தீய
செறுவார்க்கும்
செய்யா விடல்".
என்றார்
நாயனார்.
"அறிவு
எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்" என்கின்றது கலித்தொகை.
ஈனர் ---
ஈனம்
- இழிவு, கேவலம்.
ஈனத்
தன்மை உடையவர்கள் ஈனர். இழிந்தவர்கள்.
ஈனத்
தன்மைக்கு இலக்கணம் வகுக்கின்றது அறப்பளீசுர சதகம் என்னும் அருள் நூல்...
இரப்பவன் புவிமீதில் ஈனன்; அவனுக்கு இல்லை
என்னும் அவன் அவனின் ஈனன்;
ஈகின்ற பேர்தம்மை ஈயாமலே கலைத்
திடும்மூடன் அவனில் ஈனன்!
உரைக்கின்ற பேச்சிலே பலன்உண்டு எனக்காட்டி
உதவிடான் அவனில் ஈனன்!
உதவவே வாக்குஉரைத்து இல்லை என்றே
சொலும்
உலுத்தனோ அவனில் ஈனன்!
பரக்கின்ற யாசகர்க்கு ஆசைவார்த் தைகள்சொலிப்
பலகால் அலைந்து திரியப்
பண்ணியே இல்லைஎன் றிடுகொடிய
பாவியே
பாரில்எல் லோர்க்கும் ஈனன்!
அரக்கு இதழ்க் குமுதவாய் உமைநேச னே! எளியர்
அமுதனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர
கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! --- அறப்பளீசுர சதகம்.
உலகத்தில் இல்லை என்று பிச்சை
எடுப்பவன் இழிந்தவன். அவ்வாறு இரப்பவனுக்கு (பொருளைத் தன் பால் வைத்துக் கொண்டு) இல்லை என்று
சொல்பவன் அவனை
விடவும் இழிந்தவன். கொடுப்போரைக்
கொடுக்காமல் படிக்குத் தடுத்துவிடும் அறிவிலியானவன், ஈயாதவனிலும் இழிந்தவன். சொல்லும் சொல்லிலே நன்மை உண்டு என்று நம்பும்படி சொல்லி, பிறகு உதவி செய்யாதவன் அவனை விடவும் இழிந்தவன். கொடுப்பதாகவே
வாக்குறுதி கூறி, பிறகு
இல்லை என்றே கூறிவிடும் கஞ்சத்தனம் உள்ளவனோ எனின் அவனினும் இழிந்தவன். எங்கும் பரந்து திரிந்து பிச்சைக்கு வரும் இரவலர்க்கு, தாம் இரந்தது கிடைக்கும் என்ற நம்பிக்கை
உண்டாகும்படி ஆசைமொழிகள் கூறி, பலதடவை அலைந்து திரியும்படி செய்துவிட்ட பிறகு, இல்லை என்று சொல்லும் கொடிய பாவியே உலகத்தில் எல்லோரினும் இழிந்தவன்.
பேச்சு
இரண்டு பகரும் நாவினர் ---
வேளைக்கு
ஒரு விதமாகப் பேசுவது அறிவு உள்ளவர்க்கு அழகு அல்ல. சொன்ன சொல் தவறாது இருப்பதும்,
சொன்ன சொல்லை மாற்றிப் பேசாமல் இருப்பதும் அறிவு உடையோர் செயல்.
லோபர் ---
உலோபம்
- கடும் பற்றுள்ளம், இவறல், பேராசை, அகப்பட்ட பொருளைக் கைவிடாமை, தானும் நுகராமல்
பிறரையும் நுகரச் செய்யாமல் தடுக்கின்ற குணம். ஒருவருக்கும் ஒன்றும் கொடாதவன்.
உலோபியரின்
இயல்பு குறித்து, "குமரேச
சதகம்" என்னும் நூலில் கூறுவது காண்க.
"திரவியம் காக்கும் ஒரு பூதங்கள் போல்பணம்
தேடிப் புதைத்து வைப்பார்,
சீலை நலமாகவும் கட்டார்கள்,
நல்அமுது
செய்து உணார், அறமும் செயார்,
புரவலர்செய் தண்டம் தனக்கும், வலுவாகப்
புகும் திருடருக்கும் ஈவார்,
புலவரைக் கண்டவுடன் ஓடிப் பதுங்குவார்,
புராணிகர்க்கு ஒன்றும் உதவார்,
விரகு அறிந்தே பிள்ளை சோறுகறி தினும் அளவில்
வெகுபணம் செலவாகலால்
விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என
மிகுசெட்டி சொன்னகதைபோல்,
வரவுபார்க் கின்றதே அல்லாது லோபியர்கள்
மற்றொருவருக்கு ஈவரோ?
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
பொருளைக் காக்கும் ஒருவகைப் பூதங்களைப் போலப் பணத்தைச் சேர்த்துப் புதைத்து
வைப்பார். நல்ல
ஆடையாகவும் உடுத்தமாட்டார். நல்ல
உணவு சமைத்து உண்ணமாட்டார். எந்த நல்ல அறவழியிலும் பொருளைச் செலவு செய்யமாட்டார். அரசர்கள் விதிக்கும் தண்டத்திற்கும் வற்புறுத்தி நுழையும் திருடருக்கும்
கொடுப்பார். புலவர்களைப்
பார்த்தவுடன் ஓடி மறைவார். புராணங்களை எடுத்துக் கூறுவோர்க்குச் சிறிதும் கொடுக்கமாட்டார். குழந்தை அறிவு பெற்றுச் சோறும் கறியும் தின்னும் நிலையில், மிக்க பொருள் செலவழிவதனாலே, கிழவனாகிய குழந்தையே விளையாடுவதற்கு உரிய குழந்தை என்று மிகுந்த சிக்கனத்தோடு வாழும் உலோபி கூறிய
கதையைப் போல, உலோபியர்கள்
பொருள் வருவாயை நோக்குவதை அல்லாமல் பிறருக்கு கொடுப்பாரோ?
பெற்றார், பிறந்தார், பெருநட்டார், பேர்உலகில்
உற்றார், உகந்தார் எனவேண்டார் --- மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர், இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.
என்பது ஔவையார் அருளிய நல்வழி.
இப் பாடலின் பொருள் --- பெரிய இந்த உலகத்தில், இவர் எம்மைப் பெற்றவர், இவர்
எமக்குப் பிறந்த மக்கள், இவர் எம்முடைய நாட்டவர், இவர் எம்முடைய உறவினர், இவர்
எம்மை விரும்பி நேசித்தவர் என்று யாரையும் விரும்பாதவர்கள் உலோபிகள். அவர்கள்
வந்து தம்மைச் சரண் புகுந்தாலும் அவருக்கு ஒன்றும் கொடுக்க மாட்டார். பிறர் தமது
உடம்பில் அடித்துப் புண்ணை உண்டாக்கினால் அவருக்கு எல்லாம் கொடுப்பார்.
உலோபியர் இயல்பு குறித்து நாலடியார் கூறுமாறு காண்க...
"உண்ணான், ஒளி நிறான், ஓங்கு புகழ்
செய்யான்,
துன்னு அருங் கேளிர் துயர் களையான், கொன்னே
வழங்கான் பொருள் காத்து இருப்பானேல், 'அஆ!
இழந்தான்' என்று எண்ணப்படும்".
தானும் உண்ணாமல், பிறருக்கும் உதவிப் பெருமைப் படாமல், தனது சுற்றத்தார்
துயரைத் துடைக்கப் பொருளைத் தந்து உதவாமல், தேடிய செல்வத்தை வீணே பூட்டி வைத்துக்
காத்திருப்பவன் வாழ்க்கை, சீசீ, வாழ்க்கையா அது? அப்படிப் பட்டவன் இருந்து என்ன? போய் என்ன? அவன் இருந்தாலும் இறந்தவனாகவே கருதப்படுவான்.
"உடாஅதும், உண்ணாதும், தம் உடம்பு
செற்றும்,
கெடாஅத நல் அறமும் செய்யார், கொடாஅது
வைத்து ஈட்டினார் இழப்பர்;-வான் தோய் மலை நாட!-
உய்த்து ஈட்டும் தேனீக் கரி".
அடுத்தவரை நெருங்க விடாது, தானும் உண்டு மகிழாது பாடுபட்டுத் திரட்டிய
தேனைப் பிறர் எடுத்துச் செல்ல, தேனீக்கள் தாம் அழிந்து போகும். வான் முட்டும் மலைவளம் மிக்க நாட்டுக்குத்
தலைவனே! அது போலவே, தானும் உண்ணாமலும், நல்லாடை உடுக்காமலும், தனது உடம்பை
வறுத்திக் கொண்டும், நல்ல அறங்களையும் செய்யாது, பிறருக்கும் வழங்காது இருப்பவன்
செல்வமானது பயன்படாது பறிபோகும்.
தீக்
குணங்கள் அதிக பாதகர் ---
தீய
குணங்களுடன், மிகுந்த
பாவங்களைப் புரிபவர்கள்.
தீய
குணங்களும், தீய செயல்களும் தீமையையே தருபவை. அவை தீயினும் கொடியவை. எனவே, "தீயவை தீய பயத்தலால், தீயவை தீயினும்
அஞ்சப்படும்" என்றார் திருவள்ளுவ நாயனார்.
ஒருவன்
தனக்கு இன்பம் தருவதாக எண்ணிச் செய்கின்ற தீய செயல்கள், அப்போது இன்பம் போலக்
காணப்பட்டாலும், பின்னர் அவனுக்கு உண்டாக்கிய இன்பத்தை ஒழித்து, துன்பத்தையே
மிகுதியும் தரும். ஆதலால், தீவினைகளைச் செய்தவன், தீவினக்கு நெருப்பைக் காட்டிலும்
அதிகமாகப் பயப்படல் வேண்டும். ஏனெனில், ஒருவன் நெருங்கிய போது மட்டுமே தீயானது
சுடும். ஆனால் ஒருவன் செய்த தீவினையானது அவனை எல்லாக் காலத்தும், எல்லா
உடம்பிலும், எல்லா இடத்திலும் வந்து சுடும். அதனால், தீவினையைத் தீயினை விடவும்
கொடியதாக எண்ணி விலக்கவேண்டும் என்றார் நாயனார்.
பல்லாவுள்
உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம்
தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும்
அன்ன தகைத்தே, தற்செய்த
கிழவனை
நாடிக் கொளற்கு.
என்கின்றது
நாலடியார்.
பல
பசுக்கள் நிறைந்த கூட்டத்தின் உள்ளே ஒரு இளம் கன்றைப் போகவிட்டாலும், அந்தக்
கன்றானது தனது தாயை நாடிச் சென்று பற்றிக் கொள்வது போல், ஒருவன் செய்த பாவமும்
அவனோடு சென்று மற்றோர் காலத்தும், மற்றோர் தேசத்தும், மற்றோர் உடம்பிலும்
பிடித்துக் கொள்ளும்.
உள்ளதே
தோற்ற, உயிர் அணையும் அவ்வுடலில்
உள்ளதாம்
முற்செய்வினை உள்ளடைவே - வள்ளல்அவன்
செய்பவர்
செய்திப் பயன்விளைக்கும் செய்யே போல்
செய்வன்,
செயல்அணையா சென்று.
என்கின்றார்
மெய்கண்டதேவ நாயனார்.
முன்பிறவிகளில்
ஈட்டப்பட்டு உள்ளதாகிய சஞ்சித வினையே உயிர் நுகர்தற்குரிய இன்பமும் துன்பமும் ஆகிய
பயன்களையும் அவற்றை நுகர்தற்கு இடமாகிய உடம்பையும் தோற்றுவிக்க, உயிர் அவ்வுடம்பைப் பொருத்தி அப்பயன்களை
நுகரும்.
வினைப்
பயன்களை நுகரும் முறையிலேயே புதிய வினைகள் தோன்றி அடுத்த பிறவிக்கு வித்தாய்
அமையும்.
உழவர்
செய்யும் உழவுத் தொழில்தானே அவர்க்குப் பயன் கொடுப்பதில்லை. நிலந்தான் அத்தொழிலை
ஏற்று நின்று அதற்கு ஏற்ற பயனை உழவர்க்குக் கொடுக்கும். அதுபோல, உயிர்கள் செய்யும் நல்லனவும் தீயனவும்
ஆகிய வினைகளை இறைவனே ஏற்று நின்று அச்செயல்களின் பயன்களை அவற்றைச் செய்த
உயிர்களுக்குச் சேர்ப்பிப்பான்.
மாதர்
மேல் கலன்கள் புனை ஆதர் ---
ஆதர்
- அறிவற்றவர்.
பாடுபட்டுத்
தேடிய பணத்தைக் கொண்டு, சிற்றின்பத்தையும், பின்னர் நோய்களையும் வழங்குகின்ற பொதுமகளிருக்கு
அணிகலன்களைப் புனைந்து அழகு பார்ப்பவர்கள் அறிவிலிகள்.
அசடர் ---
கீழ்மக்கள். என்னதான் அறிவு நூல்களைச் சென்னாலும்
இவர்களுக்கு ஏறாது. அவர்களின் இயல்புக் குணமே மிகுந்து இருக்கும்.
நாலடியார்
கூறுமாறு காண்க....
"கப்பி
கடவதாக் காலைத் தன் வாய்ப் பெயினும்
குப்பை
கிளைப்போவாக் கோழிபோல், - மிக்க
கனம்பொதிந்த
நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த
வாறே மிகும்".
நொய்
அரிசியைத் தவிடு போகத் தெள்ளி, வேளை தவறாமல்
கொடுத்து வந்தாலும், குப்பையைக் கிளறித் தின்னத்தான் கோழி போகும். அதுபோல, என்னதான் பெரிய
உயர்ந்த அறிவு நூல் கருத்துக்களை எடுத்துக் கூறினாலும், கீழ்மக்கள் காதில் அவை
ஏறாது. அவர்கள் தங்களுக்கே இயல்பான இழிசெயல்களைச் செய்துகொண்டு தான் இருப்பர்.
"பொற்கலத்து
ஊட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
எச்சிற்கு
இமையாது பார்த்து இருக்கும்; - அச்சீர்
பெருமை
உடைத்தாக் கொளினும், கீழ் செய்யும்
கருமங்கள்
வேறு படும்".
தங்கக்
கிண்ணத்தில் போட்டு, சோறு ஊட்டிப்
பாராட்டினாலும்,
நாயானது
அடுத்த வீட்டில் எச்சில் இலை எப்போது விழும் என்று காத்திருக்கும். அதைப்
போலத்தான்,
கீழ்மக்களுக்கு
எவ்வளவு நல்லது செய்தாலும், அவர்கள் குணமும் செயலும் நல்ல வழியில் செல்லாது, தீமையானவற்றையே
நாடும்.
பூமிசை
வீணராய்ப் பிறந்து திரியும் மானுடர் ---
வீணர்
- பயன் அற்றவர்கள். மக்கள் யாக்கையைப் பெற்றதன் பலனை அடையாமல் வீணாக மனம் போன
போக்கில் திரிபவர்கள் வீணர்கள்.
வீணர்களின்
இலக்கணம் குறித்து "அறப்பளீசுர சதகம்" பகருமாறு காண்க.
வேட்டகம் சேர்வோரும் வீணரே! வீண் உரை
விரும்புவோர் அவரின் வீணர்!
விருந்து கண்டு இல்லாள் தனக்கு
அஞ்சி ஓடி மறை
விரகிலோர் அவரின் வீணர்!
நாட்டம் தரும் கல்வி இல்லோரும் வீணரே!
நாடி அவர் மேல்கவி சொல்வார்
நானிலம் தனில்வீணர்! அவரினும்
வீணரே
நரரைச் சுமக்கும் எளியோர்!
தேட்டஅறிவு இலாதபெரு வீணரே அவரினும்,
சேர் ஒரு வரத்தும் இன்றிச்
செலவு செய்வோர் அதிக வீணராம்!
வீணனாய்த்
திரியும் எளியேனை ஆட்கொண்டு
ஆட்டம் செயும் பதாம்புயம் முடியின் மேல் வைத்த
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர
கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
மாமனார் வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வருபவர் பயன்றறவர். அவரினும் பயனற்ற சொற்களைப் பேசுவோர் விரும்புவோர் வீணர். விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடி
மறையும் விவேகம் இல்லாதவர் வீணர். அறிவுக் கண்ணைத் தரும் கல்வி இல்லாதவரும் வீணரே. உலகில் கல்வி அறிவு
இல்லாதவரைத் தேடிச் சென்று அவர் மேல் பாடல்களைப் புனைந்து கூறுபவரும் வீணர். அவரினும்
மக்களைச் சுமக்கும் எளியவர் வீணர். பொருளைச் சம்பாதிக்கின்ற அறிவு இல்லாத பெருவீணர் ஆன அவரினும், வரக்கூடிய வருவாய் எதுவும் இல்லாமல் செலவு செய்பவர் பெரிய வீணர் ஆவார்.
பேதைமார்க்கு
இரங்கி அழியும் மாலினர் ---
பேதை
- அறிவற்றவன். இளம்பெண். இங்கு விலைமாதர்களைக் குறித்தது.
மால்
- மயக்க அறிவு.
பெண்கள்
தரும் இன்பத்தினே வேண்டி, அவர் மீது மீது இரக்கம் கொண்டு அழியும் மோக மனம் கூடாது என்கின்றார் அடிகளார்.
நீதிநூல்
பயன்கள் தெரியாத, நெறி இலாதவர் ---
நீதி
- ஒரு சமுதாயத்திற்கு, ஒரு குலத்திற்கு, ஒரு பகுதியினருக்கு என்று ஏற்பட்டது.
அறம்
- எல்லோருக்கும் பொதுவாக உள்ளது.
நெறி
- வழி, சமயம், விதி, ஒழுக்கம். இப்படித்தான்
வாழவேண்டும் என்னும் நெறிமுறை.
மன்னவர்க்கு
ஏற்பட்டது மனுநீதி. வேட்டையாடுதல் மன்னவர்க்கே உரியது. பிறருக்கு ஏற்றது அல்ல.
குற்றம் செய்வாரைத் தண்டித்தல்,
ஒறுத்தாரை
ஒறுத்தல் முதலியனவும் மன்னர் நீதி.
நஞ்சம்
அன்னவரை நலிந்தால் அது
வஞ்சம்
அன்று மனுவழக்கு........ --- கம்பராமாயணம்.
தீங்கு
செய்தார்க்கு நன்மை செய்யவேண்டும் என்பது அறம்.
அது மன்னனை ஒழிந்த ஏனையோருக்கு உரியது.
இன்னை
செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்னே
பயத்ததோ சால்பு. --- திருக்குறள்.
பொய்
சொல்லக்கூடாது என்பது எல்லோருக்கும் பொதுவான அறம்.
நீதி
நூல்களை ஓதித் தெளிந்து அவற்றில் விதித்த நெறிப்படி வாழ்ந்து பயன் பெறாதவர்கள்.
சூதினால்
கவர்ந்து பொருள் செய் பூரியர் ---
சூது
- சூதாட்டம், சூழ்ச்சி, வஞ்சகம்.
பூரியர்
- கீழ்மக்கள்.
பிறர்
பொருள் மீது உள்ள பற்று, அவர் மூது உள்ள
பொறாமை காரணமாக வஞ்சகத்தால் அவருடைய பொருளைக் கவர ஆடுகின்ற ஆட்டம் சூதாட்டம். திருமகளால்
புறக்கணிக்கப்பட்டாருடைய தொடர்புகள் மூன்று என்கின்றார் திருவள்ளுவ நாயனார். அவை, இரண்டு வகையான மனம் கொண்ட விலைமாதர்கள், அறிவு மயக்கத்தை உண்டுபண்ணும் கள், மற்றும் பொருளை
இழக்கச் செய்யும் சூது என்னும் மூன்று ஆவன.
இருமனப்
பெண்டிரும்,
கள்ளும், கவறும்
திருநீக்கப்
பட்டார் தொடர்பு.
சூதாட்டத்தில்
வென்று பொருளை அடைந்து வாழ்பவர் உண்டு என்றாலும், அவ்விதம் வென்ற பொருளாவது, இரையோடு கூடிய
தீண்டில் என்னும் மீன் பிடிக்கும் கருவியில் உள்ள இரும்பினை, இது முழுவதும்
இரை என்று கருதி, அதை உண்ண வந்த மீனானது, அக் கருவியினை
விழுங்கியது போலும் என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.
வேண்டற்க
வென்றிடினும் சூதினை, வென்றதூஉம்
தூண்டில்பொன்
மீன்விழுங்கி அற்று.
இரை
அல்லாத இரும்பினை இரை என்று எண்ணி, அதனை விழுங்கி இறந்துபோன மீனைப் போல, சூதாட்டத்தில்
சிக்கிக் கொண்ட ஒருவன் இரவு பகலாகச் சூதாடுவதாலும், உண்ணுவதும் உறங்குவதும்
இல்லாது இருத்தலாலும், பொருளை இழந்து வறுமை அடைவதாலும் உயிரை விடுகின்றான்.
மங்கலம்
அல்லாத சூது என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், இம்மையில் வயிறு ஆர உண்பதற்கு இல்லாமல் பசியால்
துன்பப்படுவார் என்றும், மறுமையில் நரகத் துன்பத்தில் விழுந்து
வருந்துவார் என்றும் நாயனார் அறிவுறுத்துகின்றார். சூது என்பது, உள்ள செல்வத்தை
எல்லாம் போக்கித் தரித்திரத்தையே உண்டுபண்ணுவது என்பதால் மூதேவி என்றார். சூதாடுகின்றவர்
தமக்கு வெற்றி வந்த காலத்தில், அதற்காக மகிழ்ந்து, மேலும் மேலும் ஆடுவதும், தோல்வி வந்தபோது
அதற்காக வருந்தி, வெற்றியைத் தேடும்பொருட்டு மேலும் மேலும் ஆடுவதையும்
தொழிலாகக் கொண்டு ஓயாது ஆடுவார். அதனால் உணவு கொள்வதிலும் அறிவு செல்லாது என்பதால்
பசியால் வருந்துவார். சூதினை ஆடுகின்ற காலத்தில், செக்கட்டானில் ஒன்று
வந்திருக்க,
வேறு
வந்ததாக,
வெற்றி
கொள்வதற்குச் சொல்லும் பொய்களாலும், காய்களை வைக்கும் காலத்தில் இடங்களை மாற்றி
வைக்கின்ற களவுச் செயல்களாலும் வருகின்ற பாவத்தைக் கொண்டு, மறுமைப் பயன்களையும்
இழந்து நரகத் துன்பத்தை அனுபவிப்பர். நற்பண்புகள் அனைத்தையும் கெடுப்பது சூது
ஆகும்.
வில்லிபாரதம்
சூதுபோர்ச் சருக்கத்தில் ஆழ்வார் காட்டியதை அறிவோமாக....
பாண்டவர்களை
வெல்வதற்கு சமுனி சொன்ன உபாயம் வருமாறு...
"இப்பிறப்பு
ஒழிய,
இன்னும்
ஏழ்எழு பிறப்பினாலும்
மெய்ப்பு
இறப்பு அற்ற நீதித் தருமனை வெல்ல மாட்டோம்,
ஒப்பு
அறப் பணைத்த தோளாய் உபாயம் எங்கேனும் ஒன்றால்,
தப்பு
அறச் சூதுகொண்டு சதிப்பதே கருமம் என்றான்".
இதன்
பொருள் --- இந்தப் பிறப்பில் வெல்ல முடியாது என்பது மாத்திரமே
அல்லாமல்,
இன்னும்
ஏழேழு பிறவிகளிலும் உண்மையே
பேசுதலில் இருந்து சிறிதும் தவறுதல் இல்லாத நியாயவழியில் நடக்கின்ற தருமபுத்திரனை
நாம் வெல்லமாட்டோம். தமக்குச் சமானமில்லாதபடி பருத்திருக்கின்ற தோள்களை உடையவனான துரியோதனனே!
ஏதேனும் ஒரு
உபாயம் செய்து,
அத்
தருமனை சூதாட்டத்தைக் கொண்டு அழிப்பதே இப்பொழுது செய்யவேண்டிய
காரியம் என்று கூறி முடித்தான் (சகுனி).
இதனை
மறுத்து,
விதுரர்
கூறுகின்றார்....
"வையமும்
அரசும் வாழ்வும் வாங்குகை கருத்தே ஆயின்,
பொய்
அடர் சூது கொண்டு புன்மையில் கவர வேண்டாம்,
ஐய!
நின் தந்தை ஓலை ஐவருக்கு எழுதி விட்டால்,
மெய்யுற
மறுத்துச் சொல்லார் வேண்டின தருவர் அன்றே".
இதன்
பொருள் --- ஐயனே! பூமியையும், அரசாட்சியையும், செல்வ வாழ்க்கையையும், தருமபுத்திரனிடத்திலிருந்து
கவர்ந்து கொள்வது உனது எண்ணமானால், பொய்ம்மை மிக்க சூதாட்டத்தினால்
தாழ்ந்த வழியால் கவர்ந்து கொள்ளவேண்டாம். மற்றுக் கவர்தற்குத் தக்க உபாயம் எதுவென்றால், உனது தந்தையான திருதராட்டிரன், வையமும் அரசும் வாழ்வும்
உனக்கே உரியனவாகத் தந்திடுமாறு பஞ்சபாண்டவர்கட்குத் திருமுகம் எழுதி அனுப்பினால், உண்மையாக, மறுப்புச் சொல்லாமல், நீ விரும்பியவை எல்லாவற்றையும்
அவர்கள் தந்திடுவார்கள்.
"தீதினால் வரித்து, நெஞ்சம் தீயவர்
ஆடும் மாயச்
சூதினால்
வென்று கொள்கை தோற்றமும் புகழும் அன்று;
போதில்
நான்முகனும் மாலும் புரிசடையவனும் கேள்வி
ஆதி
நான்மறையும் உள்ள அளவும் இவ் வசை அறாதே".
இதன்
பொருள் --- மனத்திற் குற்றம் உள்ளவர்களாகிய கீழ்மக்கள்,
தம்முடைய
இயற்கையான தீய குணத்தால், விரும்பி ஆடுகின்ற, வஞ்சனையை உடைய சூதாட்டத்தினால், நீங்கள் பாண்டவர்களை
வென்று,
அவர்களது
அரணையும் செல்வத்தையும் பறித்துக் கொள்வது, பெருமைக்கும் புகழுக்கும்
காரணம் ஆகாது.
அல்லாமலும், தாமரை மலரில் வசிக்கின்ற
பிரமதேவனும்,
திருமாலும், திரித்துவிட்ட சடையை
உடையவனான சிவபிரானும், எழுதாக்கிளவியாய் உபதேச கிரமத்திலே வருகின்ற பழமையாகிய நான்குவேதங்களும
இருக்கிற வரையிலும், சூதாட்டத்தினால் கவர்ந்தார் என்கிற இந்தப் பழி உங்களுக்கு நீங்கவே
மாட்டாது.
விதுரன்
கொடுத்த திருதராட்டிரன் திருமுகச் செய்தியை உணர்ந்து, தருமன் பேசுதல்...
'அடியும், ஆண்மையும், வலிமையும், சேனையும்,
அழகும், வென்றியும், தம்தம்
குடியும், மானமும், செல்வமும், பெருமையும்,
குலமும், இன்பமும், தேசும்,
படியும், மாமறை ஒழுக்கமும், புகழும், முன்
பயின்ற கல்வியும், சேர
மடியுமால்; மதி உணர்ந்தவர் சூதின்மேல்
வைப்பரோ மனம்? வையார்.
இதன்
பொருள் --- தலைமையும், பராக்கிரமமும், பலமும், சேனையும், அழகும், வெற்றியும், தம்தமது குடிப்பிறப்பின்
மேன்மையும்,
பெருமையும், செல்வமும், குலமும், இன்பமும்-, புகழும், ஒளியும், நற்குணமும்,சிறந்த வேதங்களில் கூறிய
விதிமுறைப்படி ஒழுகும் ஒழுக்கமும், கீ்ர்த்தியும், முன்னமே தொடங்கி
நெடுநாள் பழகித் தேர்ந்த கல்வியும் ஆகிய இவையெல்லாம் சூதாடுவார்க்கு ஒரு சேர அழியும்.
ஆதலால்,
அறிவினால்
அறிய வேண்டுபவற்றை அறிந்தவர்கள், சூதின்மேல்
மனத்தைச் செலுத்துவார்களோ? செலுத்த
மாட்டார்.
எனவே, சூதினால்
பிறருடைய பொருள்களைக் கவர்ந்து, பொருளைச் செய்ய எண்ணுபவர் கீழ்மக்கள் ஆவார்.
மோகமாய்ப்
ப்ரபஞ்ச நிலையில் வீழ்தரு மூடர் ---
மோகம்
- மாயையால் நிகழும் மயக்க உணர்ச்சி.
ஆணவம்
அறிவை மறைக்கும். மாயை அறிவை மறைக்கும். அறிவு மயங்கவே, தன் அல்லாத உடம்பைத் தனது என்றும், தன்னோடு ஒரு
சிறிதும் இயைபு அல்லாத பொருள்களைத் தனது என்றும் எண்ணி அறிவு மயங்கும். உடம்பைக்
கொண்டு இன்பத்தை அனுபவிக்கத் துணையாக உள்ள பொருள்களே நிலையானவை என்று எண்ணி, அவற்றிலையே மனம்
செல்லும். உடம்பும், பொருளும் நிலைத்து இராது என்னும் அறிவு மழுங்கி இருக்கும்.
அறிவை
ஆணவமும் மாயையும் மூடி, இருப்பதால்
மூடர் என்றார். உலகியல் இன்பத்தையே பெரிதாக எண்ணி உழல்பவர்கள் மூடர் ஆவார்.
பால் ---
மேற்கூறிய
கீழ்மைத் தன்மை உடையவர்களிடத்திலே சென்று,
சிறந்த
தமிழ் கூறி, நினைவு பாழ்பட, வாடி, நோக்கு இழந்து ---
உலகில்
பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழியே ஆகும். இறைவன் அருளை எளிதில்
பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே ஆம். இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து
தமிழ் ஆராய்ந்தமையாலும், பெற்றான் சாம்பான்
பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதி அனுப்பியது தமிழிலே ஆதலானும், சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும்
அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும் இதன் பெருமை நன்கு விளங்குகின்றது.
முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ். கல் புணையை நல் புணை ஆக்கியது தமிழ். எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ். இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது
போகச் செய்தது தமிழ். குதிரைச் சேவகனாக
வரச்செய்தது தமிழ். கல் தூணில்
காட்சிதரச் செய்தது தமிழ். பற்பல அற்புதங்களைச்
செய்ய வைத்தது தமிழ். இயற்கையான மொழி தமிழ். பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது
தமிழ். ஆதலால் நம் அருணகிரியார் “சிறந்த தமிழ்” என்று வியக்கின்றார்.
இத்தகைய தெய்வத் தமிழைப் பயின்று பாட்டு இசைக்கும் ஆற்றல் வாய்ந்து, எவன் பிறப்பு இறப்பை நீக்கி பேரானந்தத்தைத்
தருவானோ - எவன் பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெருமானோ - எவன் மறை ஆகமங்களால்
துதிக்கப் பெறும் மாதேவனோ, அந்த எம்பெருமானைப் பாடி உய்வு பெறாமல், கேவலம் உண்டு உடுத்து உழலும் சிறுதொழிலும், சிறுமையும் உடைய மனிதர்களைப் பாடுவது மதியீனம். காமதேனுவின் பாலை கமரில் உகுப்பதை ஒக்கும். தமது அறிவையும் தமிழையும்
அறிவுக்கு அறிவாகிய இறைவன் மாட்டுப் பயன்படுத்தாமல், கேவலம்
பொருள் விருப்பால் மனிதர்மாட்டுப் பயன்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கது.
யாம்ஓதிய கல்வியும், எம்அறிவும்
தாமேபெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே.
என்ற கந்தரநுபூதித் திருவாக்கை உய்த்து உணர்மின்கள்.
பயனில்லாத பதடிகள் இருக்கைதொறும் போய், தூய செந்தமிழை - இறைவனைப் பாடுதற்கு உரிய தீந்தமிழை - வறிதாக அப் பதர்களைப்
புனைந்துரையும் பொய்யுரையுமாகப் புகழ்ந்து பாடி, அவர்கள் தரும் பொருளைப் பெற்று மகிழும் பொருட்புலவர்கள் பலரும் உள்ளனர். பொருளுக்காக
யாரையும் எதையும் கூறிப் புகழ்ந்து பாடுவர். இவர்கள் சிறிது காலமே நின்று
மின்னலைப்போல் விரைவில் அழியும் பொருளையே பெற்று வீணுறுகின்றனர். என்றும் அழியாத
திருவருட் செல்வத்தை வாரி வாரி வழங்கும் எம்பெருமானைப் பாடி உய்யும் திறன் அறியாது
கெடுகின்றனர். இதனை அடிகளார் பல இடங்களிலும் வைத்துப் பாடி அறிவுறுத்தி உள்ளார்.
வஞ்சக லோபமூடர் தம்பொருள் ஊர்கள்தேடி
மஞ்சரி கோவை தூது பலபாவின்
வண்புகழ் பாரிகாரி என்றுஇசை வாதுகூறி
வந்தியர் போல வீணில்
அழியாதே.... --- திருப்புகழ்.
அறிவுஇலாப் பித்தர், உன்தன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்
அசடர், பேய்க் கத்தர், நன்றி
...... அறியாத
அவலர்மேல் சொற்கள் கொண்டு, கவிகள் ஆக்கிப் புகழ்ந்து,
அவரை வாழ்த்தித் திரிந்து, ...... பொருள்தேடி,
சிறிது கூட்டிக் கொணர்ந்து, தெருவு உலாத்தித் திரிந்து,
தெரிவைமார்க்குச் சொரிந்து, ...... அவமே, யான்
திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி, பரிந்து,
தெளிய மோட்சத்தை என்று ......
அருள்வாயே. ---
திருப்புகழ்.
புலவரை
ரட்சிக்கும் தாருவே, மது-
ரிதகுண வெற்பு ஒக்கும் பூவைமார் முலை
பொரு புய, திக்கு எட்டும் போய் உலாவிய ......
புகழாளா,
பொருஅரு
நட்புப் பண்பான வாய்மையில்,
உலகில் உனக்கு ஒப்பு உண்டோ எனா, நல
பொருள்கள் நிரைத்துச் செம்பாகம் ஆகிய
...... கவிபாடி,
விலைஇல்
தமிழ்ச் சொற்கு உன்போல் உதாரிகள்
எவர் என, மெத்தக் கொண்டாடி, வாழ்வு எனும்
வெறிகொள் உலுத்தர்க்கு, என்பாடு கூறிடு ...... மிடிதீர,
மிக
அருமைப்பட்டு, உன்பாத தாமரை
சரணம் எனப் பற்றும் பேதையேன் மிசை,
விழி அருள் வைத்து, குன்றாத வாழ்வையும்....அருள்வாயே. --- திருப்புகழ்.
கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்,
காடு எறியும் மறவனை நாடு
ஆள்வாய் என்றேன்,
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்,
போர்முகத்தை அறியானைப் புலியேறு
என்றேன்,
மல்ஆரும் புயம்என்றேன் சூம்பல் தோளை,
வழங்காத கையனை நான் வள்ளல்
என்றேன்,
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்
யானும்என்றன் குற்றத்தால் ஏகின்
றேனே. --- இராமச்சந்திர கவிராயர்.
குன்றும் வனமும் குறுகி வழிநடந்து
சென்று திரிவது என்றும் தீராதோ - என்றும்
கொடாதவரைச் சங்குஎன்றும், கோஎன்றும் சொன்னால்
இடாதோ அதுவே இது. ---
இரட்டையர்.
வேண்டுவார்
வேண்டுவதை வரையாது வழங்கும் வள்ளலாக, யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் தியாகாங்க சீலம்
உடையவனாக பரம்பொருள் இருக்க, அதனை உணர்கின்ற அறிவும், அதற்கேற்ற நல்வினைப்
பயனும்,
முயற்சியும்
இல்லாத அறிவிலிகள், தாம் கற்ற கல்வியின் பயன், இறைவனுடைய திருவடியைத்
தொழுவதே என்பதை உணராதவர்கள், பொருள் உள்ளோர் இடம்தேடிச் சென்று, இல்லாததை
எல்லாம் சொல்லி,
வாழ்த்திப்
பாடுவார்கள். பண்புகளே அமையாதவனை, அவை உள்ளதாகவும், உடல் வளமே இல்லாதவனை, அவை நிறைந்து
உள்ளதாககவும்,
கற்பனையாகப்
பாடுவார். எல்லாம் கற்பனையாகவே முடியும். பாடுவதும் கற்பனையே. பொருள் கிடைப்பதும்
கற்பனையே.
ஈயாத உலோபிகளை, பலகாலம் முயன்று அவர்கள் இடம் தேடிச்
சென்று பலபடப் புகழ்ந்து பாடியும், பொருள் ஒன்றும் கிடைக்காமையால்
மனம் வருத்தம் அடையும். உள்ளமும் உடம்பும் வாட்டமு உறும். பொய்யாகப் புகழ்ந்து பாடியதால்
எதுவும் கிடைக்கவில்லை. பொய் சொன்ன வாய்க்குப் போசனம் இல்லை என்று அறிவுறுத்தும் அருட்பாடல்
ஒன்று காண்க.
கைசொல்லும்
பனைகாட்டும் களிற்றுஉரியார்
தண்டலையைக்
காணார் போல,
பொய்சொல்லும்
வாயினர்க்குப் போசனமும்
கிடையாது! பொருள் நில்லாது!
மைசொல்லும்
கார் அளிசூழ் தாழைமலர்
பொய்சொல்லி வாழ்ந்த துண்டோ?
மெய்சொல்லி
வாழாதான் பொய்சொல்லி
வாழ்வதில்லை! மெய்ம்மை தானே! --- தண்டலையார்
சதகம்.
இறைவனைப்
பாடினால் எல்லாம் கிடைக்கும்.
தம்மையே
புகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப்
பாடாதே, எந்தை
புகலூர் பாடுமின், புலவீர்காள்!
இம்மையே
தரும், சோறும் கூறையும்;
ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;
அம்மையே
சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
கற்று
இலாதானை, “கற்று நல்லனே!”,
“காமதேவனை
ஒக்குமே”,
முற்றிலாதானை, “முற்றனே!”, என்று
மொழியினும் கொடுப்பார் இலை;
பொத்தில்
ஆந்தைகள் பாட்டு அறாப்புக
லூரைப் பாடுமின், புலவீர்காள்!
அத்தனாய்
அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
“தையலாருக்கு ஒர் காமனே!” என்றும்,
“சால நல அழகு உடை ஐயனே!”
“கை உலாவிய வேலனே!” என்று,
கழறினும் கொடுப்பார் இலை;
பொய்கை
ஆவியில் மேதி பாய்புக
லூரைப் பாடுமின், புலவீர்காள்!
ஐயனாய்
அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே. --- சுந்தரர்.
நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும்
உச்சிவம் எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம்
பிச்சர் நச்சு அரவு அரைப் பெரியசோதி, பேணுவார்
இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே. --- திருஞானசம்பந்தர்.
தமிழால் வைதாலும் முருகப் பெருமான் வாழவைப்பான் என்கின்றார் அடிகளார்.
மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழவைப்போன், வெய்ய
வாரணம்போல்
கைதான் இருபது உடையான் தலைபத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே. ---
கந்தர் அலங்காரம்.
பின்வருமாறு பாடிய புலவர்கள், வைது
அருள் பெற்றமையை வெளிப்படுத்தும்.
மாட்டுக் கோன் தங்கை மதுரை விட்டுத் தில்லைவனத்து
ஆட்டுக் கோனுக்குப் பெண்டு ஆயினாள், கேட்டிலையோ?
குட்டி மறிக்க ஒரு கோட்டானையும் பெற்றாள்,
கட்டுமணிச் சிற்றிடைச்சி காண்.
நச்சரவம் பூண்ட தில்லை நாதரே! தேவரீர்
பிச்சை எடுத்து உண்ணப் புறப்பட்டும் – உச்சிதமாம்
காளம் ஏன்? குஞ்சரம் ஏன்? கார்கடல்போல் தான்முழங்கும்
மேளம் ஏன்? ராஜாங்கம் ஏன்?
தாண்டி ஒருத்தித் தலையின்மேல் ஏறாளோ?
பூண்ட செருப்பால் ஒருவன் போடானோ? மீண்டஒருவன்
வையானோ? வில் முறிய மாட்டானோ? தென்புலியூர்
ஐயாநீர் ஏழை ஆனால்.
செல்லாரும் பொழில்சூழ் புலியூர் அம்பலவாண தேவனாரே!
கல்லாலும் வில்லாலும் செருப்பாலும் பிரம்பாலும் கடிந்து சாடும்
எல்லாரும் நல்லவர் என்று இரங்கி அருள் ஈந்தது என்ன? இகழ்ச்சி
ஒன்றும்
சொல்லாமல் மலரைக் கொண்டு எறிந்தவனைக் கொன்றது என்ன
சொல்லுவீரே.
அப்பன் இரந்து உண்ணி, ஆத்தாள் மலைநீலி,
ஒப்பரிய மாமன் உறிதிருடி, - சப்பைக் கால்
அண்ணன் பெருவயிறன், ஆறுமுகத்தானுக்கு இங்கு
எண்ணும் பெருமை இவை.
"சேணொணாயிடும் இதண்மேல் அரிவையை மேவியே, மயல் கொளலீ லைகள் செய்து, சேர நாடிய திருடா! அருள் தரு கந்தவேளே"
என்று தேவனூர்த் திருப்புகழில் அடிகளார் காட்டி உள்ளமையும் முருகப் பெருமானுக்குத்
தமிழின்பால் உள்ள நேயத்தை வெளிப்படுத்தும்.
"இவர் அலாது இல்லையோ பிரானார்" என்று வைத சுந்தரருக்கு அருள்
புரிந்தவர் சிவபெருமான். "வாழ்ந்து போதீரே" என்று வசை பாடியவருக்குக்
கண்ணளித்தவர் சிவபெருமான். பித்தா என்று தொடக்கத்திலேயே தம்மை வசை பாடிய
வன்தொண்டருக்கு, முடிவில், சிவபெருமான் வெள்ளை யானையை அனுப்பினார் என்பது சிந்தனைக்கு உரியது.
"பெண்அருங் கலமே, அமுதமே எனப் பெண்
பேதையர்ப் புகழ்ந்து, அவம் திரிவேன்,
பண்உறும் தொடர்பில் பித்த என்கினும், நீ
பயன்தரல் அறிந்து, நின் புகழேன்"
என்னும் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சோணசைல மாலையையும் சிந்திக்கவும்.
வறுமை
ஆகிய தீயின் மேல் கிடந்து நெளியும் நீள் புழு ஆயினேற்கு இரங்கி அருள்வாயே ---
தரித்திரமாகிய கொடுமை வடவாமுகாக்கினி போல் மனிதர்களைச் சுடும். கொடிய தீயில்
கிடந்து நெளிகின்ற புழுவைப் போல, இறைவனைப் பாடி வழிபடாதவர்கள் வறுமையில் கிடந்து
துன்புறுவார்கள் என்கின்றார் அடிகளார். அதனால்தான், ஔவையார், "கொடிது கொடிது வறுமை கொடிது" என்றார்.
கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது,
அதனினும் கொடிது இளமையில் வறுமை,
அதனினும் கொடிது ஆற்றஒணாத் தொழுநோய்,
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்,
அதனினும் கொடிது
இன்புற அவர் கையில் உண்பது தானே. ---
ஔவையார்.
தரித்திரம் மிக்க வனப்பினை ஒடுக்கி,
சரீரத்தை உலர்தர வாட்டும்.
தரித்திரம் தலைவன் தலைவியர்க்கு இடையே
தடுப்பரும் கலாம்பல விளைக்கும்,
தரித்திரம் அளவாச் சோம்பலை எழுப்பும்,
சாற்றரும் உலோபத்தை மிகுக்கும்,
தரித்திரம் மிக்க பொய்மை பேராசை
தரும், இதில் கொடியது ஒன்று இலையே. --- குசேலோபாக்கியானம்.
முடியாப் பிறவிக் கடலில் புகார், முழுதும் கெடுக்கும்
மிடியால் படியில் விதனப்படார், வெற்றிவேல் பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே. --- கந்தர் அலங்காரம்.
படிறு ஒழுக்கமும், மட மனத்து உள
படி பரித்து உடன் ...... நொடி
பேசும்
பகடிகட்கு, உள மகிழ மெய், பொருள்
பல கொடுத்து, அற ...... உயிர் வாடா,
மிடி எனப் பெரு வடவை சுட்டிட,
விதனம் உற்றிட ......
மிகவாழும்,
விரகு கெட்டு, அரு நரகு விட்டு, இரு
வினை அறப் பதம் ......
அருள்வாயே. --- திருப்புகழ்.
திமிர உததி அனைய நரக
செனனம் அதனில் ......
விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிதும் மிடியும் ......
அணுகாதே
அமரர் வடிவும் அதிக குலமும்
அறிவும் நிறையும் ...... வரவே,நின்
அருளது அருளி எனையும் மனதொடு
அடிமை கொளவும் ......
வரவேணும்... --- திருப்புகழ்.
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோகியவா
அடிஅந்தம் இலா அயில்வேல் அரசே,
மிடிஎன்று ஒருபாவி
வெளிப்படினே. --- கந்தர் அநுபூதி.
கருத்துரை
முருகா! உலுத்தர்களைப் பாடி, வறுமையில் கிடந்து புரளாமல், தேவரீரைப் பாடி உய்ய அருள்.
No comments:
Post a Comment