அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தாரகாசுரன் சரிந்து
(தேவனூர்)
முருகா!
தேவரீரை அடியேன் ஆவல்
தீர நின்று புகழ்தல் வேண்டும்.
தான
தான தந்த தந்த, தான தான தந்த தந்த
தான தான தந்த தந்த ...... தனதான
தார
காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து
சாதி பூத ரங்கு லுங்க ...... முதுமீனச்
சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று
தாரை வேல்தொ டுங்க டம்ப ...... மததாரை
ஆர
வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து
மானை யாளு நின்ற குன்ற ...... மறமானும்
ஆசை
கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்
ஆவல் தீர என்று நின்று ...... புகழ்வேனோ
பார
மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க
பால மாலை கொன்றை தும்பை ...... சிறுதாளி
பார
மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு
பானல் கூவி ளங்க ரந்தை ...... அறுகோடே
சேர
வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த
சீத ளார விந்த வஞ்சி ...... பெருவாழ்வே
தேவர்
யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
தாரகாசுரன்
சரிந்து வீழ, வேருடன் பறிந்து
சாதி பூதரம் குலுங்க, ...... முதுமீனச்
சாகர
ஓதை அம் குழம்பி நீடு தீ கொளுந்த, அன்று
தாரை வேல் தொடும் கடம்ப! ...... மத தாரை
ஆரவார
உம்பர் கும்ப வாரண அசலம் பொருந்தும்
ஆனையாளும், நின்ற குன்ற ...... மறமானும்,
ஆசை
கூரு நண்ப! என்று, மா மயூர! கந்த!
என்றும்
ஆவல் தீர என்று நின்று ...... புகழ்வேனோ?
பாரம்
ஆர் தழும்பர், செம்பொன் மேனியாளர், கங்கை, வெண்,
கபால
மாலை, கொன்றை, தும்பை, ...... சிறுதாளி,
பார
மாசுணங்கள், சிந்து வார ஆரம், என்பு, அடம்பு,
பானல் கூவிளம், கரந்தை, ...... அறுகோடே,
சேரவே
மணந்த நம்பர், ஈசனாரிடம் சிறந்த
சீதள அரவிந்த வஞ்சி ...... பெருவாழ்வே!
தேவர்
யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு
தேவனூர் விளங்க வந்த ...... பெருமாளே.
பதவுரை
பாரம் ஆர் தழும்பர் --- உமாதேவியாரின்
தனபாரங்களின் தழும்பை உடையவரும்,
செம்பொன் மேனியாளர் --- சிவந்த பொன்னைப் போன்ற திருமேனியை உடையவரும்,
கம் கை --- பிரம கபாலத்தைத்
திருக்கையில் ஏந்தியவரும்,
வெண்கபால மாலை --- பிரமனுடைய
வெண்ணிறத்துக் கபாலமாலை,
கொன்றை தும்பை சிறுதாளி --- கொன்றை மலர், தும்பை மலர், சிறுதாளி என்னும் ஒருவகைக் கொடி மலர்,
பார மாசுணங்கள் --- பெரிய பாம்புகள்,
சிந்து --- கங்கை நதி,
வார ஆரம் --- அன்போடு சாத்தப்பட்ட மலர்
மாலைகள்,
என்பு --- எலும்பு,
அடு அம்பு --- யாவற்றையும்
அழிக்கவல்ல பாசுபத அத்திரம்,
பானல் --- கருங்குவளை,
கூவிளம் --- வில்வம்,
கரந்தை --- திருநீற்றுப் பச்சை,
அறுகோடே --- அறுகம்புல், இவை யாவும்
சேரவே மணந்த நம்பர்
ஈசனார்
--- சேர அணிந்துகொண்டுள்ள
சிவபெருமானாகிய தனிப்பெரும் தலைவருடைய
இடம் சிறந்த சீதள அரவிந்த
வஞ்சி பெருவாழ்வே --- இடப்பாகத்தில்
சிறந்து விளங்கும் குளிர்ந்த தாமரைக் கொடி போன்ற உமாதேவியாரின் பெரிய வாழ்வாக
விளங்கும் புதல்வரே!
தேவர் யாவரும்
திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு --- தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி பூமியில்
வந்து வணங்குகின்ற
தேவனூர் விளங்க வந்த
பெருமாளே
--- தேவனூர் என்னும் திருத்தலமானது விளக்கம் பெற எழுந்தருளி உள்ள பெருமையில்
சிறந்தவரே!
தாரக அசுரன் சரிந்து
வீழ
--- தாரகனாகிய அசுரன் உடல் சரிந்து விழுமாறும்,
வேருடன் பறிந்து சாதி
பூதரம் குலுங்க --- குலமைலகள் வேரோடு கட்டு அவிழ்ந்து குலுங்குமாறும்,
முது மீனச் சாகர ஓதை
அம் குழம்பி நீடு தீ கொளுந்த --- முதிர்ந்த மீன்கள் வாழும் ஆரவாரம் உடைய கடல் நீரானது
குழம்பி, நீண்ட நெருப்பினால்
எரியுமாறும்,
அன்று தாரை வேல் தொடும்
கடம்ப
--- அந் நாளிலே கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய கடப்ப மலரை அணிந்த முருகக் கடவுளே!
மத தாரை --- மதநீர் ஒழுகும்
வாயை உடையதும்,
ஆரவார --- ஆரவாரத்தை உடையதும்,
உம்பர் கும்ப வாரண அசலம் --- தேவலோகத்தில்
உள்ள மத்தகத்தைக் கொண்ட, மலை போன்ற ஐராவதம்
என்னும் யானையிடம்
பொருந்தும்
ஆனையாளும்
--- அமர்ந்த தேவயானை அம்மையும்,
நின்ற குன்ற மறமானும் --- வள்ளிமலையிலே தினைப்புனத்தைக்
காவல் புரிந்து நின்ற குறமகளாகிய வள்ளியம்மையாரும்,
ஆசை கூரு நண்ப என்று --- அன்பு
மிகுதியாகக் கொள்ளும் நண்பரே என்றும்,
மாமயூர கந்த என்றும் --- பெருமை தங்கிய
மயில்வாகனரே என்றும், கந்தக் கடவுளே
என்றும்,
ஆவல் தீர என்று
நின்று புகழ்வேனோ --- எனது ஆசை தீர மனம் ஒருநிலையில் நின்று புகழ்வது எந்த நாள்?
பொழிப்புரை
உமாதேவியாரின் தனபாரங்களின் தழும்பை
உடையவரும், சிவந்த பொன்னைப் போன்ற திருமேனியை உடையவரும், பிரம கபாலத்தை
ஏந்தியவரும், பிரமனுடைய
வெண்ணிறத்துக் கபாலமாலை, கொன்றை, தும்பை, சிறுதாளி என்னும் ஒருவகைக் கொடி மலர், பெரிய பாம்புகள், கங்கை நதி, அன்பினைத் தரத்தக்க பூமாலைகள், எலும்பு, யாவற்றையும் அழிக்கவல்ல பாசுபதக் கணை, கருங்குவளை, வில்வம், கரந்தை, அறுகம்புல் இவை யாவும் சேர்ந்து
அணிந்துகொண்டுள்ள சிவபெருமானாகிய தனிப்பெரும் தலைவருடைய இடப்பாகத்தில் சிறந்து விளங்கும்
குளிர்ந்த தாமரை வல்லியாகிய உமையம்மையாருக்கு பெரிய வாழ்வாக விளங்கும் புதல்வரே!
தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி பூமியில்
வந்து வணங்கும் தேவனூர்
என்னும் திருத்தலமானது விளக்கம் பெற எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!
தாரகனாகிய அசுரன் உடல் சரிந்து விழுமாறும், வேரோடு கட்டவிழ்ந்து குல மலைகள்
குலுங்குமாறும், முதிர்ந்த மீன்கள் வாழும் ஆரவாரம் உடைய
கடலானது குழம்பி, நீண்ட நெருப்பினால்
எரியுமாறும், அந்த நாளிலே கூரிய வேலாயுதத்தைச்
செலுத்திய கடப்ப மலரை அணிந்த முருகக் கடவுளே
மதநீர ஒழுகும் வாயையும், ஆரவாரத்தை உடையதும், தேவலோகத்தில் உள்ள பெருந்தலை கொண்டதுமான மலை போன்ற ஐராவதம் என்ற யானையிடம் அமர்ந்த தேவயானை என்னும் மானைப் போன்றவளும், குறமகளாகிய
வள்ளியம்மையாரும், அன்பு மிகுதியாகக் கொள்ளும் நண்பரே
என்றும், பெருமை தங்கிய
மயில்வாகனரே என்றும், கந்தக் கடவுளே என்றும், எனது
ஆசை தீர மனம் ஒருநிலையில் நின்று புகழ்வது எந்த நாள்?
விரிவுரை
தாரகாசுரன்
சரிந்து வீழ ---
தாரகன்
சூரபன்மனுடைய இளைய தம்பி. மாயையில் மிக்க வல்லவன். தேவர்களுக்கு பெரிய இடையூறு
செய்தவன். நீதி நெறியை அழித்தவன். திருமால் விட்ட சக்கராயுதத்தைப் பூமாலையாகத் தனது
மார்பில் ஏற்றவன்.
சாதி
பூதரம் குலுங்க ---
சாதி
பூதரம் - குல மலைகள். பூமியைத் தாங்குவதனால் மலைக்கு அப் பெயர் உண்டாயிற்று. குலமலைகள் எட்டும் முருகப் பெருமான் வேலை
விட்டதனால் வேருடன் குலுங்கின.
தாரை
வேல்
---
தாரை
- கூர்மை. வேல் என்பது ஞானம். ஞானம் கூர்மையானது. "கூர்த்த மெய்ஞ்ஞானத்தால்
கொண்டு உணர்வார் தம் கருத்தின் நோக்கரிய நோக்கே" என்பது மணிவாசகம்.
மெய்ஞ்ஞானம்
வெளிப்பட்டபோது தாரகனாகிய மாயாமலமும், வினைத்
தொகுதிகளாகிய மலைகளும், பிறவியாகிய பெருங் கடலும்
அழிந்தன.
ஆசை
கூரும் நண்ப என்றும் மாமயூர கந்த என்றும் ஆவல்
தீர என்று நின்று புகழ்வேனோ ---
கஜவல்லியும்
வனவல்லியும் விரும்பும் குமாரக் கடவுளே, மயூரவாகனா, கந்தவேளே என்று கூறித் துதிக்க
வேண்டும். பதினாயிரம் திருப்புகழைப் பாடி
அருணகிரிநாதர் அறுமுக வள்ளலைத் துதிக்கின்றனர். அங்ஙனம் துதித்தும் அவருக்கு ஆவல்
அடங்கவில்லை. முருகவேளுடைய திருப்புகழாகிய அமிர்தம் தெவிட்டாதது. அது பாடும்தொறும்
பரமானந்தம் தர வல்லது. ஊனையும் உயிரையும் உள்ளத்தையும் உணர்வையும் ஒருங்கே
உருக்கவல்லது. அதனால் அடிகள், "என் ஐயனே
நின்னை ஆவல் தீர என்று தான் துதிப்பேனோ" என்று வேண்டுகின்றனர்.
இந்த
அடி எத்துணை அழகாக அமைந்துள்ளது என்பதனை அன்பர்கள் ஊன்றிப் பார்க்க. எவ்வளவு
உணர்ச்சியுடன் இது விளங்குகின்றது. உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது. அருணை அடிகளாரது அன்பின் பெருக்கை அளப்பதற்கு
இது ஒரு அளவுகோலாக அமைந்துள்ளது. உன்னும் தொறும் உன்னும் தொறும் உவட்டாத உவகை ஊற்றெடுக்கின்றது.
இந்த உலகையே மறக்கச் செய்கின்றது. தேகாபிமானத்தையும் துறக்கச் செய்கின்றது. தமிழின்பத்தைச்
சிறக்கச் செய்கின்றது.
அதனால்தான்
அடிகள் அனுபூதியில் "பாடும் பணியே பணியா அருள்வாய்" என்கின்றனர். "அன்பில்
பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும். ஆதலால், மண்மேல் நம்மை சொல் தமிழ் பாடுக"
என்று தூமறை பாடும் வாயராகிய சிவபெருமான் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குக் கட்டளை
இட்டு அருளினார். "என்புருகிப்
பாடுகின்றிலை" என்பது மணிவாசகம். ஆனபடியால், இறைவனை மனம் உருகி கண்ணீர் மல்கி
காதலாகி நல்ல தூய செந்தமிழ் மொழிகளால் புகழ்ந்து துதித்தல் வேண்டும். அதனால், முத்திப் பேறு எளிதில் வாய்க்கும்.
பத்தியால்
யான்உனைப் பலகாலும்
பற்றியே
மாதிருப்புகழ் பாடி
முத்தன்
ஆமாறுஎனைப் பெருவாழ்வின்
முத்தியே
சேர்வதற்கு அருள்வாயே.. --- திருப்புகழ்.
பாரம்
ஆர் தழும்பர்
---
பாரம்
- தனபாரம். கச்சியில் காமாட்சியம்மை கம்பா நதியில் மணலால் சிவலிங்கத்தை நிறுவி
வழிபட்டனர். அம்மையின் அன்பை உலகறியச் செய்யும் எண்ணம் கொண்டனர் இறைவர். வெள்ளத்தை ஏவினார். அம்மை தன் உயிர்க்குப்
பரிந்து ஓடாமல், சிவலிங்கமூர்த்திக்கு
ஊறு வரக் கூடாதே என்று தணியாத அன்புடன் சிவலிங்கத்தைத் தழுவினார். அம்மையின்
அன்பைக் கண்ட ஐயர் குழைந்தனர். தழுவக்
குழைந்தபடியால், அம்மையின்
வளைச்சுவடும், திருமுலைத் தழும்பும்
ஏற்பட்டன.
பூதியாகிய
புனித நீர் ஆடிப்
பொங்கு கங்கை தோய் முடிச்சடை புனைந்து
காதில்
வெண் குழை கண்டிகை தாழக்
கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி
தேவனார் ஆயும் மாதவஞ் செய்
அவ் வரங்கொலோ? அகிலம் ஈன்று அளித்த
மாது
மெய்ப் பயன் கொடுப்பவே கொண்டு
வளைத் தழும்புடன் முலைச் சுவடு அணிந்தார். --- பெரியபுராணம்.
தங்கச்
சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து,மத
வெங்கண்
கரிஉரி போர்த்தசெஞ் சேவகன் மெய் அடையக்
கொங்கைக்
குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங்கைக்
கரும்பும் அலரும் எப்போதும் என் சிந்தையதே. --- அபிராமி அந்தாதி.
கங்கை
---
கம்
- தலை. பிரமனது தலையைக் கையில் கொண்டவர்.
தேவர்
யாவரும் திரண்டு பாரின்மீது வந்து இறைஞ்சு தேவனூர் ---
தேவனூரின்
பெருமை அளவிடற்கரியது. விண்ணவர் அனைவரும் திரண்டு மண்ணுலகில் வந்து எம்பெருமானை
வழிபடுகின்றனர். வழிபட்டு அளத்தற்கரிய அரும் பெரும் நலன்களைப் பெற்றுச்
சிறப்புறுகின்றனர். இறைவனை வழிபடுவதற்கு ஏற்ற இடம் மண்ணுலகே ஆகும். அதனால் இங்கு
வந்து பிறக்க திருமாலும் அயனும் அவாவுகின்றனர்.
புவனியில்
போய்ப் பிறவாமையில் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே,இந்தப் பூமி
சிவன்உய்யக்
கொள்கின்றவாறு என்று நோக்கித்
திருப்பெருந்துறை உறைவாய், திருமாலாம்
அவன்
விருப்பு எய்தவும், மலரவன் ஆசைப்
படவும்,நின் அலர்ந்தமெய்க் கருணையும்
நீயும்
அவனியில்
புகுந்து, எமை ஆட்கொள்ள வல்லாய்,
ஆரமுதே! பள்ளி எழுந்தரு ளாயே. --- மணிவாசகம்.
திருமால்
வந்து இங்கு பலதலங்களில் வழிபட்டு அருள் பெற்றனர். திருமாற்பேறு, திருவீழிமிழலை முதலியன.
பிரமதேவர்
வழிபட்டு அருள் பெற்றனர். திருப்பிரமபுரம், விரிஞ்சிபுரம், எண்கண் முதலியன. ஆதலின், அவர்கள் விரும்புவது நம் தமிழகம். ஆனால், அவர்கள் உலகை நாம் விரும்புவதில்லை.
கொள்ளேன்
புரந்தரன் மால்அயன் வாழ்வு குடிகெடினும்.... --- மணிவாசகம்.
மாலயன்
பெறு பதத்தையும் பொருள்என மதியேன்... ---
கந்தபுராணம்.
அண்டரோடு
இருக்கும் அரும்பதம் வேண்டேன்;
அயன்திரு மாலவர் பதமும்
கொண்டுநான்
சுகிக்க விரும்பிலேன்; குமர
குருபர எனநிதம் உருகி,
பண்தவறாது
உன்திருப்புகழ் பாடிப்
பரவியே பணிசெயும் உண்மைத்
தொண்டரோடு
இணங்கும் பேறுஅதே வேண்டும்,
சுவாமியே! தணிகைநா யகனே! --- தணிகைநாயகன் மாலை.
கருத்துரை
பார்வதி
பாலரே! தேவனூர் தேவரே! வேலாயுதரே!
தேவரீரை அடியேன் ஆவல் தீர நின்று புகழ்தல் வேண்டும்.
No comments:
Post a Comment