திரு நாவலூர் - 0754. கோலமறை ஒத்த





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கோலமறை  ஒத்த (திருநாவலூர்)
 
முருகா!
ஆவி தளர்வுற்று வாடும் இந்தப் பெண்ணை நித்தம் அணைந்து மகிழவேணும்

தானதன தத்த தானதன தத்த
     தானதன தத்த ...... தனதான

கோலமறை யொத்த மாலைதனி லுற்ற
     கோரமதன் விட்ட ...... கணையாலே

கோதிலத ருக்கள் மேவுபொழி லுற்ற
     கோகிலமி குத்த ...... குரலாலே

ஆலமென விட்டு வீசுகலை பற்றி
     ஆரழலி றைக்கு ...... நிலவாலே

ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த
     மாசைகொட ணைக்க ...... வரவேணும்

நாலுமறை கற்ற நான்முகனு தித்த
     நாரணனு மெச்சு ...... மருகோனே

நாவலர்ம திக்க வேல்தனையெ டுத்து
     நாகமற விட்ட ...... மயில்வீரா

சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி
     சீரணி தனத்தி ...... லணைவோனே

சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற
     தேவர்சிறை விட்ட ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


கோலமறை ஒத்த மாலை தனில் உற்ற
     கோர மதன் விட்ட ...... கணையாலே,

கோதுஇல தருக்கள் மேவு பொழில் உற்ற
     கோகில மிகுத்த ...... குரலாலே,

ஆலம்என விட்டு வீசுகலை பற்றி
     ஆர்அழல் இறைக்கும் ...... நிலவாலே,

ஆவி தளர்வுற்று வாடும் எனை நித்தம்
     ஆசை கொடு அணைக்க ...... வரவேணும்.

நாலுமறை கற்ற நான்முகன் உதித்த
     நாரணனும் மெச்சு ...... மருகோனே!

நாவலர் மதிக்க வேல் தனை எடுத்து
     நாகம் அற விட்ட ...... மயில்வீரா!

சேல்எனும் விழிச்சி, வேடுவர் சிறுக்கி,
     சீர் அணி தனத்தில் ...... அணைவோனே!

சீதவயல் சுற்று நாவல் தனில் உற்ற
     தேவர் சிறை விட்ட ...... பெருமாளே.


பதவுரை

         நாலுமறை கற்ற நான்முகன் உதித்த நாரணனும் மெச்சு மருகோனே --- நான்கு வேதங்களையும் கற்ற பிரமதேவனைத் தோற்றுவித்த நாரணனாகிய திருமால் மெச்சுகின்ற திருமருகரே!

         நாவலர் மதிக்க வேல்தனை எடுத்து நாகம் அற விட்ட மயில்வீரா --- புலவர்கள் போற்றித் துதிக்கும்படி, கிரெளஞ்ச மலை பொடியாகுமாறு வேலாயுதத்தை விடுத்து அருளிய மயில்வீரரே!

         சேல் எனும் விழிச்சி --- சேல் மீனைப் போன்ற கண்களை உடையவர்,

        வேடுவர் சிறுக்கி --- வேடர் குலத்தில் வளர்ந்த இளம்பெண்ணாகிய வள்ளநாயகியின்,

        சீர் அணி தனத்தில் அணைவோனே --- சிறந்த அழகு மிக்க மார்பகங்களில் அணைபவரே!

         சீதவயல் சுற்று நாவல்தனில் உற்ற --- குளிர்ந்த வயல்களால் சூழப்பட்டுள்ள திருநாவலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள,

      தேவர் சிறை விட்ட பெருமாளே --- தேவர்களைச் சிறையினின்றும் விடுவித்து அருளிய பெருமையில் மிக்கவரே!

        மாலைதனில் உற்ற --- மாலைக் காலத்தில் வந்து சேர்ந்,

     கோல மறை ஒத்த கோரமதன் விட்ட கணையாலே --- அழகில் மிகுந்துவனும், உருவம் இல்லாதவனும் ஆகிய அநங்கன் என்னும் மன்மதன், அச்சத்தை விளைவிக்கும்படி விடுத்த அம்பினாலும்,

         கோது இல தருக்கள் மேவு பொழில் உற்ற கோகிலம் மிகுத்த குரலாலே --- குற்றமற்ற செழிப்பான மரங்கள் நிறைந்துள்ள சோலையில் வாழும் குயில்கள் எழுப்பிய மிகுந்த குரல் ஓசையினாலும்,

         ஆலம் என விட்டு வீசுகலை பற்றி ஆர் அழல் இறைக்கும் நிலவாலே --- விடத்தைப் போல, வீசி எறிகின்ற நெருப்பை வாரி இறைக்கின்ற நிலவினாலும்,

         ஆவி தளர்வு உற்று வாடும் எனை --- உள்ளம் மிகவும் தளர்ந்து வாடுகின்ற இந்த அடியாளை,

        நித்தம் ஆசைகொடு அணைக்க வரவேணும் --- தினமும் ஆசையோடு அணைத்து இன்பத்தைத் தந்து அருள தேவரீர் வந்து அருள வேண்டும்.


பொழிப்புரை

     நான்கு வேதங்களையும் கற்ற பிரமதேவனைத் தோற்றுவித்த நாரணனாகிய திருமால் மெச்சுகின்ற திருமருகரே!

     புலவர்கள் போற்றித் துதிக்கும்படி, கிரெளஞ்ச மலை பொடியாகுமாறு வேலாயுதத்தை விடுத்து அருளிய மயில்வீரரே!

         சேல் மீனைப் போன்ற கண்களை உடைய, வேடர் குலத்தில் வளர்ந்த இளம்பெண்ணாகிய வள்ளநாயகியின், சிறந்த அழகு மிக்க மார்பகங்களில் அணைபவரே!

         குளிர்ந்த வயல்களால் சூழப்பட்டுள்ள திருநாவலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள, தேவர்களைச் சிறையினின்றும் விடுவித்து அருளிய பெருமையில் மிக்கவரே!

         மாலைக் காலத்தில் வந்து சேர்ந், அழகில் மிகுந்துவனும், உருவம் இல்லாதவனும் ஆகிய அநங்கன் என்னும் மன்மதன், அச்சத்தை விளைவிக்கும்படி விடுத்த அம்பினாலும், குற்றமற்ற செழிப்பான மரங்கள் நிறைந்துள்ள சோலையில் வாழும் குயில்கள் எழுப்பிய மிகுந்த குரல் ஓசையினாலும்,  விடத்தைப் போல, வீசி எறிகின்ற நெருப்பை வாரி இறைக்கின்ற நிலவினாலும், உள்ளம் தளர்ந்து வாடுகின்ற இந்த அடியாளை,
தினமும் ஆசையோடு அணைத்து இன்பத்தைத் தந்து அருள தேவரீர் வந்து அருள வேண்டும்.
 

விரிவுரை

இத் திருப்புகழ்ப் பாடல் அகப்பொருள் துறையில் அமைந்தது. தலைவனைப் பிரிந்து வாடுகின்ற தலைவியின் நிலையை விளக்குவதாக அமைந்துள்ளது. பக்குவப்பட்ட ஆன்மாக்கள் இறைவனை நினைந்து, அவனை அடைய எண்ணி உள்ளத்தில் வாடுகின்ற நிலையை இதனால் விளக்குவதாக அமைந்துள்ளது.

இந்தப் பாடலில், தலைவனை எண்ணி, மன்மதனுடைய மலர்க் கணையாலும், குயில்களின் இனிய குரலோசையாலும், குளிர்ந்த நிலவொளியாலும் வாடுகின்ற தலைவியின் நிலையைக் குறித்துள்ளது.

மாலைதனில் உற்ற கோல மறை ஒத்த கோர மதன் விட்ட கணையாலே ---

காமவேளின் மணம் பொருந்திய அம்புகளாகிய மலர்கள் வேகமாக வந்து மேலே பட்டுச் சேர்வதாலும் தலைவிக்குத் துன்பம் உண்டாகும். யயாதி, நகுஷன், புரூரவன், சர்யாதி, முதலிய ராஜரிஷிகளையும்,  காசிபர், சியவனர், கௌதமர், பராசரர், விசுவாமித்திரர் முதலிய பிரம்ம ரிஷிகளையும்,  இந்திரன், அக்கினி, பிரமன், திருமால் முதலிய இமையவர்களையும் தனது மலர்க்கணைகளால் மயக்கி வாகை சூடியவன் மன்மதன்.

மன்மதன் கணைகள் ஐந்து. அவையாவன--- தாமரை, மா, அசோகு, முல்லை, நீலம் என்பன.

இவற்றின் பெயர் முறையே: உன்மத்தம், மதனம், சம்யோகம், சந்தாபம், வசீகரணம் என்பனவாம்.

இவை செய்யும் அவத்தை :- சுப்ரயோகம், விப்ரயோகம், சோகம், மோகம், மரணம்.

சுப்ரயோகம் --- காதலரைக் குறித்தே சொல்லும் நினைவுமாய் இருத்தல்.

விப்ரயோகம் --- காதலரின் பிரிவால் வெய்து உயிர்த்து இரங்கல்;

சோகம் --- உணவில் வெறுப்பு உண்டாகச் செய்தல். சோம்பி இருத்தல்.

மோகம் --- விருப்பம் மிகுதல், மூர்ச்சித்தல். மயங்கி இருத்தல்.

மரணம் --- மிகுந்த அயர்ச்சியும் மயக்கமும் உண்டாகும் நிலை..

இங்ஙனம் நாயகி நாயக பாவத்தில் எழுந்த பாடல்கள் பல.

துள்ளுமத வேள் கைக்  கணையாலே
  தொல்லை நெடுநீலக்     கடலாலே
மொள்ளவரு சோலைக்     குயிலாலே
  மெய்யுருகு மானைத்    தழுவாயே”     --- திருப்புகழ்.   

தென்றலையம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த்
தென்றலையம்புய மின்கோ மருக செழுமறைதேர்
தென்றலையம்பு சகபூ தரவெரி சிந்திமன்றல்
தென்றலையம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே.    --- கந்தரந்தாதி.

இங்ஙனம் பரமான்மாவின் மீது வேட்கை கொண்ட ஜீவான்மா அவ்வேட்கைத் தீர மலர் மாலையை விரும்புகின்றது.

நீலங்கொள் மேகத்தின்   மயில்மீதே
     நீவந்த வாழ்வைக்கண்    டதனாலே
 மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்
     மார்தங்கு தரைத்தந்   தருள்வாயே”      --- திருப்புகழ்.

மன்மதனுடைய மலர்க்கணைகள் ஐந்து. அவை பரிமள மிக்க மா, அசோகு, தாமரை, முல்லை, நீலோற்பலம். பஞ்சபாண பூபன் என்றும் மன்மதனுக்கு ஒரு பெயர் உண்டு. 

மன்மதனுடைய கணைகளைப் பற்றியும், அவனுக்குத் துணை செய்யும் பொருள்களைப் பற்றியும் வரும் பாடல்களைக் காண்க.

வனசம், செழும் சூதமுடன், அசோகம் தளவம்,
     மலர்நீலம் இவை ஐந்துமே
  மாரவேள் கணைகளாம்; இவை செயும் குணம்; முளரி
     மனதில் ஆசையை எழுப்பும்;

வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;
     மிக அசோகம் துயர் செயும்;
  வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;
     மேவும்இவை செயும் அவத்தை;

நினைவில் அதுவே நோக்கம், வேறொன்றில் ஆசையறல்,
     நெட்டுயிர்ப்பொடு பிதற்றல்,
  நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்
     நேர்தல், மௌனம் புரிகுதல்,

அனையவுயிர் உண்ணுஇல்லை என்னல் ஈரைந்தும் ஆம்!
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,

இவை உயிர்களுக்கு ஊட்டும் பண்புகள் --- தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும். சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும். அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும். குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும். நீலமலர் உயிரை ஒழிக்கும்,

இவை உண்டாக்கும் நிலைகளாவன: எண்ணத்தில் அதுவே கருதுதல், மற்றொன்றில் ஆசை நீங்கல், பெருமூச்சுடன் பிதற்றுதல், உள்ளம் திடுக்கிடல், உணவில் வெறுப்பு, உடல் வெதும்புதல், மெலிதல், பேசாதிருத்தல், ஆசையுற்ற உயிர் உண்டோ இல்லையோ என்னும் நிலையடைதல் ஆகிய இவை பத்தும் ஆகும்.

மன்மதனுக்குத் துணை செய்யும் கருவிகள்......

வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;
     மேல்விடும் கணைகள் அலராம்;
  வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;
     வேழம்கெ டாதஇருள் ஆம்;

வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய
    வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;
  மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;
    மனதேபெ ரும்போர்க் களம்;

சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;
    சார்இரதி யேம னைவிஆம்;
  தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்
    தவறாதி ருக்கும் இடம்ஆம்;

அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்
    அமுதமே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
    அறப்பளீ சுரதே வனே!

ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு......

---     கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும்.
---     அம்பு கரிய வண்டின் கூட்டம் ஆகும்.
---     உயிர்களின் மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும்.
---     தேர் உலவும் தென்றற் காற்று ஆகும்.
---     குதிரைகள் பச்சைக் கிளிகளே ஆகும்.
---     யானை அழியாத இருளாகும்.
---     மிகுபடை பெண்கள் ஆவர்.
---     உடைவாள் தாழை மடல் ஆகும்.
---     போர் முரசு நீண்ட கடலாகும்
---     கொடி மகர மீன் ஆகும்.
---     சின்னம் வேனிலில் வரும் குயிலோசைகும்.
---     பெரிய போர்க்களம் உயிர்களின் உள்ளமே ஆகும்.
---     பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும்.
---     குடை சந்திரன் ஆவான்.
---     காதலி அழகு பொருந்திய இரதியே ஆவாள்.
---     அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள் முடி ஆகும்.
---     எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் பெண்களின்  அல்குல் ஆகும்.

மன்மதனுடைய கணைகளினால் அறிவாற்றல் அழியும். அவன் கணையினால் மாதவம் இழந்தோர் பலர்.

கோது இல தருக்கள் மேவு பொழில் உற்ற கோகிலம் மிகுத்த குரலாலே ---

குற்றமற்ற செழிப்பான மரங்கள் நிறைந்துள்ள சோலையில் வாழும் குயில்கள் எழுப்புகின்ற இனிமையான ஓசையானது தலைவியின் தன்பத்தை மிகுக்கும்.

ஆலம் என விட்டு வீசுகலை பற்றி ஆர் அழல் இறைக்கும் நிலவாலே ---

முழுநிலவின் குளிர்ந்த ஒளியானது காதல் வயப்பட்டோர்க்கு நெருப்புப் போலத் தகிக்கும்.

பரவையார் மீது கால் கொண்ட நம்பியாரூரர் நிலையைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுமாறு காண்க.

ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல்கதிர்
தூர்ப்பதே! எனைத் தொண்டு கொண்டு ஆண்டவர்
நீர்த் தரங்க நெடுங் கங்கை நீள் முடிச்
சாத்தும் வெண்மதி போன்று இலை தண்மதி! 

ஏ! குளிர்ந்த இயல்பினையுடைய சந்திரனே! எனது துன்பத்தைக் கண்ட பின்னும் மேலும் மேலும், எப்போதும் போல் உனது போக்கின்படியே போகாமல் நின்று, உனது இயல்பான குளிர்ந்த கிரணம் அல்லாது இயல்புக்கு மாறான வெப்பக் கதிர்களைத் தூவுவதா!? எனைத் தடுத்து ஆளாகக் கொண்ட இறைவன் தனது நீர்மை பொருந்திய அலைகளையுடைய நெடிய கங்கை சூடிய நீண்ட முடியிலே அருளினால் எடுத்து அணிந்து கொண்ட வெள்ளிய சந்திரனைப்போல் நீ அமைந்தாய் இல்லையே.

நம்பியாரூரரை நினைந்து வருந்தும் பரவையாரின் நிலையைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் விளக்குமாறு காண்க.

"ஆரநறும் சேறு ஆட்டி, அரும் பனிநீர்
     நறும் திவலை அருகு வீசி,
ஈர இளந் தளிர்க்குளிரி படுத்து, மடவார்
     செய்த இவையும் எல்லாம்
பேரழலின் நெய் சொரிந்தால் ஒத்தன; மற்று
     அதன்மீது சமிதை என்ன
மாரனும் தன் பெருஞ்சிலையின் வலிகாட்டி
     மலர்வாளி சொரிந்தான் வந்து".

மணமுடைய கலவைச் சந்தனச் சேற்றைப் பூசியும், அரிய மணமுடைய பனிநீரை மழைபோலச் சிறு துளிகளாகப் பக்கங்களில் எல்லாம் வீசித் தெளித்தும், குளிரியினது ஈரமுள்ள இளந்தளிர்களை இட்டும், இவ்வாறாகத் தோழிப் பெண்கள் செய்த இவைகளும் இவை போன்றன பிறவும் ஆகிய எல்லா உபசாரங்களும் முன்னரே பெருநெருப்பாய் மூண்ட அதன்மேல் அதனை வளர்க்குமாறு நெய்யையும் சொரிந்தது போல் ஆயின. அதன்மேலும்,  அந்த அழலைப் பின்னும் வளர்க்க உணவு தருவது போல, மன்மதனும் வந்து தனது ஒப்பற்ற வில்லின் வலிமையைக் காட்டிப் பூவாகிய அம்புகளை மேன்மேலும் எய்தான்.

"மலர் அமளித் துயில் ஆற்றாள்; வரும் தென்றல்
     மருங்கு ஆற்றாள்: மங்குல் வானில்
நிலவு உமிழும் தழல் ஆற்றாள், நிறை ஆற்றும்
     பொறை ஆற்றாள்; நீர்மையோடும்
கலவமயில் என எழுந்து கருங்குழலின்
     பரம் ஆற்றாக் கையள் ஆகி,
இலவ இதழ்ச் செந்துவர்வாய் நெகிழ்ந்து, ஆற்றா
     மையின் வறிதே இன்ன சொன்னாள்".

பூம்படுக்கையிலே வீழ்ந்த பரவையார் அந்த மலர் அமளியிலே படுத்துத் துயிலைச் செய்யாதவராய், நிலாமுற்றத்திலே துயிலை விளைக்கக் கூடியதாய்த் தமது பக்கத்திலே வந்து மெல்லென வீசும் தென்றல் காற்றுத் தமது மேலே பட, அதனையும் பொறாதவர் ஆயினர். மேகங்கள் தவழும் வானில் இருந்து ஒளி வீசும் நிலாவினுடைய கதிர்கள் நெருப்பை உமிழ்தலால் அவ் வெப்பத்தையும் பொறுக்க முடியாதவர் ஆயினர். தமக்கு உரிய தன்மையோடு காக்கின்ற பெண்மைக் குணமாகிய நிறையைக் கொண்டு செலுத்த வல்ல பொறை எனும் சத்தியைத் தாங்க இயலாதவர் ஆயினர். மலரணையில் வீழ்ந்து கிடந்தவர் இக்குணத்துடன் சிறிய தோகைமயிலைப் போல எழுந்து தமது கரிய கூந்தலின் பாரத்தையும் தாங்கமுடியாத நிலை உடையவராய், இலவம் பூப்போன்று இயல்பிலேயே சிவந்த வாய் நெகிழ்ந்து தரிக்கலாகாத வருத்தத்தாலே தமக்குத் தாமே
பின்வருமாறு சொல்வார் ஆயினார்.

கந்தம் கமழ்மென் குழலீர்! இது என்?
     கலைவாள் மதியம் கனல்வான் எனை இச்
சந்தின் தழலைப் பனிநீர் அளவித்
     தடவும் கொடியீர்! தவிரீர்! தவிரீர்!
வந்து இங்கு உலவும் நிலவும் விரையார்
     மலய அனிலமும் எரியாய் வருமால்;
அந்தண் புனலும் மரவும் விரவும்
     சடையான் அருள் பெற்று உடையார் அருளார்.      

வாசனை வீசும் மெல்லிய கூந்தலையுடைய சேடியர்களே! இது என்ன ஆச்சரியம்! அமிர்த கலைகளுடைய ஒளிவீசும் சந்திரனோ என்னைச் சுடுவாயின் ஆயினான். இந்தச் சந்தனக் குழம்பைப் பனிநீருடன் கலந்து என்மேல் பூசுகின்ற கொடியீர்களே!
நீவிரோ இச்செயலைத் தவரீர்! தவிரீர். இங்கு வந்து உலாவி நிற்கும் தென்றலோ தீ உருவமாய் வருகின்றது. அழகிய குளிர்ந்த கங்கைப் புனலையும் பாம்பையும் ஒருங்கே தம்மிடத்து வைத்த சடையவராம் சிவபெருமானது அருள்பெற்று என்னை உடையாராகிய நம்பிகளோ என்பால் அருள் செய்கின்றாரில்லை.

 
நாலுமறை கற்ற நான்முகன் உதித்த நாரணனும் மெச்சு மருகோனே ---

நான்கு வேதங்களையும் கற்ற பிரமதேவன் திருமாலின் உந்திச் சுழியில் இருந்து தோன்றியவன். வேதங்களில் வல்லவனாக இருந்து, படைப்புத் தொழிலைப் புரியும் பிரமதேவனேயை, அவனது தலையில் குட்டிச் சிறை இருத்திய முருகவேள் திருமால் மெச்சுகின்ற மருகன் ஆவார். "பச்சைப் புயல் மெச்சத் தகு பொருள்" என்று முருகப் பெருமானை, "முத்தைத் தரு" எனத் தொடங்கும் திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளது அறிக.

நாவலர் மதிக்க வேல்தனை எடுத்து நாகம் அற விட்ட மயில்வீரா ---

நாவலர் - பேசுதலில் வல்லவர் என்று பொதுவாகப் பொருள்படும். கற்ற புலவர்களைக் குறிக்கும். கற்பது என்பது கற்கவேண்டிய அறிவு நூல்களைக் கற்பதே ஆகும். அறிவு நூல்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் அறிவுறுத்துபவை ஆகும். பொருள் ஈட்டுவதற்கும், உலக இன்பத்தைத் துய்ப்பதற்கும் மட்டுமே பயன் தருபவை அறிவு நூல்கள் ஆகா. அவை உலக நூல்கள். உலக நூல்கள் உயிருக்கு உண்டாகும் தடுமாற்றத்தைப் போக்கத் துணை புரியமாட்டா.

கற்றதனாலாய பயன் கடவுளைக் கருதுவதே. கற்றதும் கேட்டதும் கொண்டு, கற்பனை கடந்த கருணை வடிவான பரம்பொருளைக் கசிந்து உருகி நினைந்து உய்தல் வேண்டும். அவ்வாறு இறைவனை நினைந்து நெஞ்சம் நெகிழாது சிறிது படித்த மாத்திரத்தே தலை கிறுகிறுத்து, தற்செருக்குற்று தன்னைப் போல் படித்தவரிடம் தர்க்கித்து மண்டையை உடைத்து வறிதே கெடுதல் கூடாது.

கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக?
கடபடம் என்று உருட்டுதற்கோ? கல்லால் எம்மான்
குற்றம்அறக் கைகாட்டும் கருத்தைக் கண்டு
குணங்குறி அற்று இன்பநிலைகூட அன்றோ.  --- தாயுமானார்.

நாகம் என்பது மலையைக் குறிக்கும். இங்கே கிரவுஞ்ச மலையையும், நக்கீரதேவர் அடைபட்டு இருந்த மலையையும் குறிக்கும்.

கிரவுஞ்சம் என்பது ஒரு பறவை. தாரகனுக்கு நண்பனாகிய ஒரு அரக்கன் மாயையில் வல்லவன். அவன் கிரவுஞ்சறப் பறவை போன்று ஒரு மலை வடிவத்தை எடுத்து, தேவர்களையும் முனிவர்களையும் தன்னிடத்தில் வழி உள்ளது போல் காட்டி, அவ்வழியாகச் செல்லுபவர்களின் அறிவை மயக்கி அழிப்பான். அகத்திய முனிவரை ஒரு சமயம் அவ்வாறு அழிக்க முயன்றான். அவர் சினந்து, அவன் எப்போதும் மலை வடிவாகவே இருக்குமாறும், முருகவேளின் வேலால் அழியுமாறும் சாபம் கொடுத்துச் சென்றார்.  அதனால் அவன் மலை உருவாகவை இருந்து முனிவர்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்தான்.  முருகப் பெருமானின் துணைவர்களாகிய இலட்சத்து வன்பது வீரர்களையும் தன்னிடத்தில் வழி உள்ளது போலக் காட்டி, அவர்கள் உள்ளே நுழைந்தவுடன், இடி மழை காற்று இருள் ஆகியவற்றை உண்டாக்கி அவர்களை மயக்கித் துன்புறுத்தினான். அதனை உணர்ந்த ஆறுமுகப் பரம்பொருள், தமது திருக்கரத்தில் உள்ள நூறுகோடி சூரிய ஒளி பொருந்திய வேலாயுதத்தை விடுத்து கிரவுஞ்ச மலையைத் தூளாக்கி அழித்து, அதில் மயங்கி இருந்த தனது துணைவர்களை விடுவித்து அருளினார். 

கிரவுஞ்சம் என்பது உயிர்கள் பிறவிகள் தோறும் புரிந்து வரும் ஆகாமியம், பிராரத்தம், சஞ்சிதம் என்னும் மூவினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானின் திருக்கரத்தில் பொருந்தி உள்ள ஞானசத்தி ஆகிய வேற்படை, கிரவுஞ்ச மலையாகிய வினைத் தொகுதியை அழித்தது. "வினை ஓட விடும் கதிர்வேல்" என்று கந்தர் அனுபூதியிலும், "நீசர்கள் தம்மோடு எனது தீவினை எல்லாம் மடிய நீடு தனிவேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழிலும், "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டு, அன்று அசுரர் தண்டத்தைச் செற்று" என்று கச்சித் திருப்புகழிலும்,
  
சுரர்க்கு வஞ்சம். செய் சூரன்
     இள க்ரவுஞ்சம் தனோடு
          துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தி, அன்று இந்த்ர லோகம்
     அழித்தவன் பொன்றுமாறு,
          சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!

என்று திருப்பரங்குன்றத் திருப்புகழிலும், அடிகளார் அருளி உள்ளது காண்க.

மேலும், நாவலர் என்னும் சொல் நக்கீரதேவரைக் குறித்ததாகவும் கொள்ள  இடமுண்டு. கீரம் - சொல், நக்கீரர் - நல்ல இனிய சொற்களை உடையவர். இவர் கடைச் சங்கத்து நாற்பத்தொன்பது புலவர்களில் தலைமை பெற்றவர். அஞ்சா நெஞ்சும் ஆழ்ந்த அறிவும் உறுதியும் உடைய நல்லிசைப் புலவர்.

சிவ பூசையில் வழுவியவரை ஒன்று கூட்டி ஆயிரம் என்ற எண்ணிக்கை ஆனவுடன் உண்ணுகின்ற ஒரு பெண் பூதம் இருந்தது. அதன் பேர் கற்கிமுகி. அப்பூதம் ஆங்காங்கு பூசையில் மனந்திரிந்து வழுவியவர்களை எல்லாம் கொண்டு போய் ஒரு பெரிய மலைக்குகையில் அடைத்து வைத்து அவர்கட்கு உணவு தந்து கொண்டிருந்தது. 999 பேர் சேர்ந்திருந்தனர். இன்னும் ஒருவர் குறைவு. அந்தப் பூதம் மற்றொருவரைத் தேடிக் கொண்டிருந்தது.

நக்கீரர் ஒரு சமயம் தல யாத்திரை மேற்கொண்டு சென்றார். ஒரு குளக்கரையில் சிவபூசை செய்து கொண்டிருந்தார். கற்கிமுகி என்னும் குதிரை முகத்தை உடைய பூதம் அங்கு வந்து சேர்ந்தது. ஓர் இலையை உதிர்த்தது. அந்த இலை பாதி நீரிலும் பாதி நிலத்திலுமாக வீழ்ந்தது. நீரில் வீழ்ந்த பாதி மீனாகவும், நிலத்தில் வீழுந்த பாதி பறவையாகவும் மாறியது. பறவை நிலத்துக்கும் மீன் நீருக்குமாக இழுத்துப் போர் புரிந்தன; இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் பூசையில் மனம் பதியாது அதனையே நோக்கி நின்றார். பூசையில் வழுவிய அவரை எடுத்துக்கொண்டு போய் பூதம் குகையில் அடைத்துவிட்டது. இப்போது ஆயிரம் என்ற எண்ணிக்கை முற்றியது. இனி அவர்களை உண்ணுவதற்குப் பூதம் எண்ணியது. ஆனால் பூதம் குளித்து விட்டுத்தான் உண்ணும். குளிக்கச் சென்றது பூதம்.

அங்கு முன்னமேயே அடைபட்டிருந்தோர் அனைவரும் “பாவி! நீ அல்லவா எங்கட்கு எமனாக வந்தாய்.  நீ வராமல் இருந்தால் பூதம் எம்மை இப்போது உண்ணமாட்டாதே. பால் பழம் முதலிய உணவுகளைத் தந்து எம்மைக் கொழுக்க வைத்தது பூதம். இனி அப்பூதம் வந்து எம்மை விழுங்குமே. என் செய்வோம்” என்று கூறி வருந்தி வாய்விட்டுப் புலம்பினார்கள்.

நக்கீரதேவர் அவர்களுடைய அவல நிலையைக் கண்டு இரங்கினார். “நீங்கள் அஞ்சவேண்டாம்.. முன் இலக்கத்தொன்பது பேர் அடைபட்ட கிரவுஞ்சம் என்ற பெருமலையை வேலால் பிளந்த எம்பெருமான் இருக்கிறான். அப் பரமனைப் பாடினால் அவன் வேல் நமக்குத் துணை புரியும்” என்று கூறி, முருகவேளை நினைத்து உருகினார். “மலையைப் பிளந்த கருணை மலையே! மன்னுயிர்களைக் காக்கும் மயிலேறிய மாணிக்கமே! இப்போது எம்மைக் காத்தருள்வாய்” என்று வேண்டினார் .

'உலகம் உவப்ப' என்று தொடங்கித் திருமுருகாற்றுப்படை என்ற இனிய பாடலைப் பாடினார். தேனும் பாலும் கற்கண்டும் ஒவ்வாத இனிய சுவையுடைய அத் திருப்பாடலைச் செவிமடுத்த செந்தமிழ்க் கடவுளாகிய எந்தைக் கந்தவேள், தமது திருக்கரத்தில் விளங்கும் வேலை விடுத்தருளினார். அவ்வேல் மலையையும், கற்கிமுகி என்ற பூதத்தையும் பிளந்து, நக்கீரரையும், அவருடன் சேர்ந்த மற்றையோரையுங் காத்தருளியது.

அருவரை திறந்து, வன் சங்க்ராம கற்கிமுகி
 அபயம் இட அஞ்சல் என்று அம் கீரனுக்கு உதவி”          --- பூதவேதாள வகுப்பு

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
    கவிப்புலவன் இசைக்குஉருகி வரைக்குகையை இடித்துவழி காணும்   
                                                                            ---  வேல்வகுப்பு.
  
ஓராயிரம் பேரை வருடத்தில் ஒருநாளில்
     உண்கின்ற கற்கி முகிதான்
ஒன்று குறை யாகிவிடும் அன்று நக்கீரர்வர
    ஓடிப் பிடித்து அவரையும்   
காராய குன்றத்து அடைத்துஉரிய நியதிக்
    கடன் துறை முடிக்க அகலக்
கருதி "முருகாறு" அவர் உரைத்தருள நீலக்
    கலாப மயில் ஏறி அணுகிப்
பேரான குன்றந் திறந்து,இவுளி முகியைப்
    பிளந்து, நக்கீரர் தமையும்
பெரியவேல் கொண்டு, புனல் கண்டுசுனை மூழ்கி,
    பிரான் முகலி நதியின் மேவச்
சீராய திருவருள் புரிந்த கரன் ஊராளி
    சிறுதேர் உருட்டி அருளே
செய செய என அமரர் தொழ, அசுரர் மிடி சிதறு முனி
    சிறுதேர் உருட்டி அருளே.         --- திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்.

இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்.

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாவும் சிந்தனைக்கு உரியது.
  
வேடுவர் சிறுக்கி ---

சிறுக்கி என்னும் சொல்லுக்கு, வேலைக்காரப் பெண் என்றும் இளம்பருவம் உடைய பெண் என்றும் பொருள். வேடர் குலத்தில் வளர்ந்த இளம்பெண்ணாகிய வள்ளநாயகியைக் குறித்து நின்றது.

சீதவயல் சுற்று நாவல்தனில் உற்ற தேவர் சிறை விட்ட பெருமாளே ---

குளிர்ந்த வயல்களால் சூழப்பட்டுள்ள திருநாவலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள, தேவர்களைச் சிறையினின்றும் விடுவித்து அருளிய பெருமையில் மிக்கவர் முருகப் பெருமான்.

திருநாமநல்லூர் என்று இப்போது வழங்கப்படுகின்ற திருநாவலூர் நடு நாட்டுத் திருத்திலம் ஆகும். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரம் தாண்டி உளுந்தூர்ப்பேட்டைக்கு முன்பாக, மடப்பட்டு தாண்டி, பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரிந்து எதிரே இடப்பக்கமாக செல்லும் பண்ருட்டி சாலையில் இரண்டு கி. மீ. சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம்.

இறைவர்         : பக்தஜனேசுவரர், திருநாவலேசுவரர்.
இறைவியார்     : மனோன்மணி, சுந்தரநாயகி, சுந்தராம்பிகை.
தல மரம்          : நாவல்.
தீர்த்தம்           : கோமுகி தீர்த்தம்.

சுக்கிரன் வழிபட்ட திருத்தலம். 

சுந்தரரின் தந்தையாரான சடைய நாயனார் அவதரித்து சிவத் தொண்டாற்றிய பெரும்பதி.

          அவதாரத் தலம்   : திருநாவலூர்.
          வழிபாடு          : இலிங்க வழிபாடு.
          முத்தித் தலம்     : திருநாவலூர்.
          குருபூசை நாள்    : மார்கழி - திருவாதிரை.

சுந்தரர் அவதாரத் திருத்தலம்.

          அவதாரத் தலம்   : திருநாவலூர்.
          வழிபாடு          : குரு வழிபாடு.
          முத்தித் தலம்     : திருஅஞ்சைக்களம் / திருக்கயிலாயம்
          குருபூசை நாள்    : ஆடி - சுவாதி.

          இது சுந்தரரின் தாயாரான இசைஞானியார் வாழ்ந்து, தொண்டாற்றி, முத்தி பெற்றத் தலமுமாகும்.

          சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய திருப்பதிகம் உள்ளது. திருக்கோயிலின் உள்ளே சுந்தரர் சந்நிதி உள்ளது.  பரவை, சங்கிலியார் சூல எதிரில் வெள்ளையானை நிற்க, சுந்தரர் கையில் தாளம் ஏந்தி காட்சி தருகிறார்.

நரசிங்க முனையரையர் அவதரித்து, அரசு வீற்றிருந்தவர்; குறுநில மன்னர்.

          அவதாரத் தலம்   : திருநாவலூர்.
          வழிபாடு          : சங்கம வழிபாடு.
          முத்தித் தலம்     : திருநாவலூர்.
          குருபூசை நாள்    : புரட்டாசி - சதயம்.

தேடாத வளத்திற் சிறந்த திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டினை அரசுபுரிந்த முனையராயர் என்னும் குறுநில மன்னர் மரபிலே வந்தவர் நரசிங்கமுனையரையர். அவர் பகைவரை வென்று தீதகலச் செய்து அரசு புரிந்தனர்; சிவனடியார்களின் திருவடியை அடைதலே அரும்பேறென்று அடியாரைப் பணிந்தார். சிவன்கோயிலின் செல்வங்களைப் பெருக்கிக் காத்தலைத் தம் உயிரினும் சிறப்பாகச் செய்தனர். சிவநெறித் திருத்தொண்டுகளைக் கனவிலும் மறவாமல் கடமையாகச் செய்து வந்தார்.

திருவாதிரை நாள்தோறும் சிவபெருமானுக்கு நியமமாக விசேட பூசை செய்து, அன்று வரும் அடியார்கள் ஒவ்வொருவருக்கும் நூறு பொன் குறையாமல் கொடுத்துத் திருவமுது அளித்து வழிபட்டு வந்தார். ஒரு திருவாதிரை நாளில் அடியார்களுடனே “மான நிலையழி தன்மை வரும் காமக்குறி மலர்ந்த ஊனநிகழ் மேனியராகிய” ஒருவரும், திருநீறு அணிந்து வந்தனர். அவர் நிலையினைக் கண்டு அருகிலிருந்தவர்கள் இழந்து அருவருத்து ஒதுங்கினர்.

நரசிங்கர் அதுகண்டு அவரை அணுகி வணங்கிப் பேணினார். நல்லொழுக்கம் இல்லாதவர்களாயினும் திருநீறு அணிந்தவர்களை உலகம் இகழ்ந்து நரகில் அடையாமல் உய்யவேண்டுமென உளம்கொண்டு அவரைத் தொழுது அவருக்கு இரட்டிப்பொன் (இருநூறு பொன்) கொடுத்து உபசரித்து விடை கொடுத்தருளினார்.

நரசிங்கமுனையரையர் ஒரு நாள் வீதிவலம் வரும் பொழுது வீதியில் தேர் உருட்டி விளையாடும் நம்பியாரூரரைக் கண்டார். அவர் தம் அழகில் பெரிதும் ஈடுபட்ட அரசர் சடையனாரிடம் சென்று அவரிடம் தாம் கொண்ட நட்புரிமையினால் நம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலுக்கு இணங்கி நம்பியை அளித்தார். நம்பியைப் பெருஞ் செல்வமெனக் கொண்ட நரசிங்கமுனையார் அவரை அரச திருவெலாம் பொருந்த திருமணப் பருவம் அடையும்வரை வளர்த்தார். இவ்வாறு அன்பர் பணிசெய்து நம்பியை வளர்க்கும் பேறு பெற்றமையாலே இறைவரது திருவடி நீழலில் சேர்ந்து மீளாத நிலைபெற்றனர்.

 உள் பிரகாரத்தில் நரசிங்க முனையரையர் பூசித்த மிகப்பெரிய சிவலிங்க மூர்த்தம் உள்ளது.

 கருவறைச் சுவரில் சண்டேசுவரர் வரலாறு சிற்ப வடிவில் - பால் கறப்பது, தந்தையார் மரத்தின் மீதேறிப் பார்ப்பது, திருமஞ்சனம் செய்வது, தந்தையின் கால்களை துணிப்பது, இறைவன் கருணை செய்வது வடிக்கப்பட்டுள்ளது.

 நவக்கிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு எதிராக அவன் வழிப்பட்ட சுக்கிரலிங்கம் உள்ளது. நவக்கிரகங்களில் நடுவில் உள்ள சூரியன் திசைமாறி மூலவரைப் பார்த்தவாறு உள்ளார்.

 சுந்தரர் மடாலயம் அழகான முன்மண்டபம். சுந்தரர் கையில் செண்டுடன் அழகாக காட்சி தருகிறார். இங்குள்ள உட்கோயில் தொண்டீச்சரம் எனப்படுகிறது. இது முதல்பராந்தகனின் முதல் மகன் இராசாதித்தனால் கட்டுவிக்கப் பெற்றது என்பது கல்வெட்டுச் செய்தி. 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...