திருவேட்களம் - 0759. மாத்திரை ஆகிலும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மாத்திரை ஆகிலும் (திருவேட்களம்)

முருகா!
விலைமாதர் இன்பத்தைக் கருதிப் பொருள் தேட முயன்று 
வீணர்களைப் புகழ்ந்து அழியாமல்,
இல்லாளுடன் பொருந்தி இருந்து இன்புற அருள்வாய்.


தாத்தன தானன தாத்தன தானன
     தாத்தன தானன ...... தனதான


மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்
     வாழ்க்கையை நீடென ...... மதியாமல்

மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள்
     மாப்பரி வேயெய்தி ...... அநுபோக

பாத்திர மீதென மூட்டிடு மாசைகள்
     பாற்படு ஆடக ...... மதுதேடப்

பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி
     பாற்கட லானென ...... வுழல்வேனோ

சாத்திர மாறையு நீத்தம னோலய
     சாத்தியர் மேவிய ...... பதவேளே

தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
     தாட்பர னார்தரு...... குமரேசா

வேத்திர சாலம தேற்றிடு வேடுவர்
     மீக்கமு தாமயில் ...... மணவாளா

வேத்தம தாமறை யார்த்திடு சீர்திரு
     வேட்கள மேவிய ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


மாத்திரை ஆகிலும் நா தவறாள் உடன்
     வாழ்க்கையை நீடு என ...... மதியாமல்,

மாக்களை யாரையும் ஏற்றிடு சீலிகள்,
     மாப்பரிவே எய்தி, ...... அநுபோக

பாத்திரம் ஈது என மூட்டிடும் ஆசைகள்
     பால்படு ஆடகம் ...... அதுதேட,

பார்க்களம் மீதினில் மூர்க்கரையே கவி,
     பாற்கடலான் என ...... உழல்வேனோ?

சாத்திரம் ஆறையும் நீத்த, மனோலய
     சாத்தியர் மேவிய ...... பதவேளே!

தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
     தாள் பரனார் தரு...... குமரஈசா!

வேத்திர சாலம் அது ஏற்றிடு வேடுவர்
     மீக்கு அமுதாம் மயில் ...... மணவாளா!

வேத்தம் அதா மறை ஆர்த்திடு சீர்த்திரு
     வேட்களம் மேவிய ...... பெருமாளே.


பதவுரை
          
     சாத்திரம் ஆறையும் நீத்த மனோலய சாத்தியர் மேவிய --- ஆறு சாத்திரங்களையும் ஒருவி, மனத்தை ஒடுக்கவல்ல சாத்தியம் படைத்தவர்கள் போற்றுகின்ற,

      பத வேளே --- திருவடிகளை உடைய குமரவேளே!

      தாத்தரி தாகிட சேக்கு எனும் மாநட தாள் --- தாத்தரி தாகிட சேக்கு என்னும் தாள ஒத்துக்கு இசைய திருநடனம் புரியும் திருவடிகளை உடைய

      பரனார் தரு குமர ஈசா --- பரம்பொருள் அருளிய குமாரக் கடவுளே!

      வேத்திர சாலம் அது ஏற்றிடு வேடுவர் --- அம்புக் கூட்டங்களைச் சுமந்து திரியும் வேடர்கள் பெற்ற

      மீக்கு அமுதா மயில் மணவாளா --- மிக்க அமுதைப் போன்றவளும், மயிலை ஒத்தவளும் ஆகிய வள்ளிநாயகியின் மணவாளரே!

      வேத்தம் அது ஆ மறை ஆர்த்திடு சீர் --- அறியப்படுவதான வேதங்கள் முழங்குகின்ற சிறப்பினை உடைய

      திருவேட்கள மேவிய பெருமாளே --- திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      மாத்திரை ஆகிலும் நா தவறாளுடன் வாழ்க்கையை --- ஒரு சிறிதும் வாக்குத் தவறாத இல்லாளுடன் கூடி வாழும் இல்வாழ்க்கையை

     நீடு என மதியாமல் --- நிலைத்து இருப்பது என்று மதியாமல்,

      மாக்களை யாரையும் ஏற்றிடு சீலிகள் மாப்பரிவே எய்தி--- விலங்குத் தன்மை கொண்ட மனிதர்கள் முதல் யாரையும் (பொருளுக்காக) ஏற்றுக்கொள்ளும் தீயொழுக்கம் உடைய பொதுமாதர்கள் மீது மிக்க அன்பு உண்டாகி,

      அனுபோக பாத்திரம் ஈது என --- இன்பத்தை அனுபவிக்கத் தக்கவர்கள் இவர்களே என எண்ணி,

      மூட்டிடும் ஆசைகள் பால் ப(ட்)டு --- அதனால் உள்ளத்தில் மூண்டு எழுந்த ஆசை காரணமா,

     ஆடகம் அது தேட --- பொன்னைத் தேட

      பார்க்களம் மீதினில் மூர்க்கரையே கவி --- பூமியிலுள்ள மூடத்தனம் கொண்டவர்களை எல்லாம் எனது பாடல்களில் வைத்து,

      பாற்கடலான் என உழல்வேனோ --- திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலே இவன் என்று புகழ்ந்து திரிவேனோ?


பொழிப்புரை

     ஆறு சாத்திரங்களையும் ஒருவி, மனத்தை ஒடுக்கவல்ல சாத்தியம் படைத்தவர்கள் போற்றுகின்ற திருவடிகளை உடைய குமரவேளே!

         தாத்தரி தாகிட சேக்கு என்னும் தாள ஒத்துக்கு இசைய திருநடனம் புரியும் திருவடிகளை உடைய பரம்பொருள் அருளிய குமாரக் கடவுளே!

         அம்புக் கூட்டங்களைச் சுமந்து திரியும் வேடர்கள் பெற்ற மிக்க அமுதைப் போன்றவளும், மயிலை ஒத்தவளும் ஆகிய வள்ளிநாயகியின் மணவாளரே!

         அறியப்படுவதான வேதங்கள் முழங்குகின்ற சிறப்பினை உடைய திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

     ஒரு சிறிதும் வாக்குத் தவறாத இல்லாளுடன் கூடி வாழும் இல்வாழ்க்கையை நிலைத்து இருப்பது என்று மதியாமல் விலங்குத் தன்மை கொண்ட மனிதர்கள் முதல் யாரையும் (பொருளுக்காக) ஏற்றுக்கொள்ளும் தீயொழுக்கம் உடைய பொதுமாதர்கள் மீது மிக்க அன்பு உண்டாகி, இன்பத்தை அனுபவிக்கத் தக்கவர்கள் இவர்களே என எண்ணி, அதனால் உள்ளத்தில் மூண்டு எழுந்த ஆசை காரணமா, பொன்னைத் தேட
பூமியிலுள்ள மூடத்தனம் கொண்டவர்களை எல்லாம் எனது பாடல்களில் வைத்து, திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலே இவன் என்று புகழ்ந்து திரிவேனோ?


விரிவுரை

இத் திருப்புகழில் இல்லறமே நல்லறம் என்பதை வலியுறுத்தி உள்ளார் அருணைவள்ளல். திருவள்ளுவ நாயனாரும், அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை" என்றார். "இல்லறம் அல்லது நல்லறம் அன்று" என்றார் ஔவையார். இல்லாளுடன் கூடி வாழும் வாழ்க்கையே நிலைத்து இருப்பது, நிலைத்த இன்பமாகிய வீடுபேற்றுக்கு வழிவகுப்பது என்பதைத் தெளிவுபடுத்தி உள்ளார் அடிகளார். இல்வாழ்க்கையை வலியுறுத்திய திருவள்ளுவ நாயனார், அதற்குத் துணையாகப் பொருந்தக் கூடிய மனையாளை "வாழ்க்கைத் துணைநலம்" என்றும், "அன்பும் அறனும் உடைத்து ஆயின், இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது" என்றும் வைத்தார்.

பொதுமகளிர் கூட்டுறவு ஆகாது என்பதை வலியுறுத்த, பொருட்பாலில் தான் "வரைவில் மகளிர்" என்னும் அதிகாரத்தை வைத்து அருளினார். அறத்துப்பாலில் வரைவில் மகளிரைப் பற்றி திருவள்ளுவ நாயானர் பேசவில்லை. பொருள் தன்மையில் உழலுவார்க்கே வரைவில் மகளிர் கூட்டுறவு அமையும் என்பதால், பொருட்பாலில் வைத்தார் போலும்.

மாத்திரை ஆகிலும் நா தவறாளுடன் வாழ்க்கையை நீடு என மதியாமல் ---

மாத்திரை - கணப் பொழுது, கண் இமைத்தல் அல்லது கை நொடித்தல் அளவான காலம்.

நீடு - நிலைத்து இருப்பது. நீடித்து இருப்பது.

வாழ்க்கைத் துணை என்பவள் கற்புக்கு இருப்பிடமாக உள்ளவள். "கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை" என்கின்றது கொன்றைவேந்தன். நாக்குத் தவறாமை என்பது இதுவே.

கற்பு எனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை எனத் தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கிறது. பெண்கள் என்பவள் சிறந்த பண்புடன் விளங்க வேண்டும் என்பதை,

"கற்பும், காமமும், நற்பால் ஒழுக்கமும்,
மெல்இயல் பொறையும், நிறையும், வல்லிதின்
விருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும்,
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்"  

என்று தொல்காப்பியம் சொல்கிறது.

திருவள்ளுவ நாயனார் கற்பு என்பதற்குத் திண்மை என்று பொருள் பட

"பெண்ணில் பெருந்தக்க யாவுள? கற்பு என்னும்
திண்மை உண்டாகக் பெறின்"

என்கின்றார்.

"நிறையில் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா
பெண்டிர் தம்குடி"  

என்கின்றது மணிமேகலை.

கற்பு நெறியில் தன்னைக் காத்துக்கொண்டு, பிறர் தன்னைக் காணாமலும், பிறரைத் தான் காணாமலும் வாழும் பெண்கள்; கணவனைத் தவிர பிற தெய்வத்தை வணங்காத பெண்கள் பத்தினிப் பெண்டிராவர் என்கிறது மணிமேகலை.

இல்லாளுடன் கூடி வாழுகின்ற வாழ்க்கையை நிலைத்து இருப்பது, நீடித்த இன்பத்தைத் தருவது என்று எண்ணவேண்டும்.

மாக்களை, யாரையும் ஏற்றிடு சீலிகள் மாப் பரிவே எய்தி ---

மா - விலங்கு. கீழ்மக்கள்.

விலங்குத் தன்மை கொண்ட மனிதர்கள் முதல் யாரையும் (பொருளுக்காக) ஏற்றுக்கொள்ளும் தீயொழுக்கம் உடையவர்கள் பொதுமாதர்கள்.

பெண்களின் எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும்.

இந்த மயக்கத்தினால் வரும் துன்பமானது தீரவேண்டுமானால், அதற்கு ஒரே வழி, இறையருள் பெற்ற அடியார்களின் திருக்கூட்டத்தில் இருப்பது தான். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை.

"துறந்தோர் உளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே" என்று முருகப் பெருமானிடம் அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில் முறையிடுகின்றார்.

உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சார, பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும்.

துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறு, பொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர்.

கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்பு உடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே! துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்து, பதைக்கப் பதைக்க வதைக்கும்  கண்ணார்க்கு
இளைத்து, தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே?          
                                                                                           ---  கந்தர் அலங்காரம்.

அரிசன வாடைச் சேர்வை குளித்து,
     பலவித கோலச் சேலை உடுத்திட்டு,
     அலர்குழல் ஓதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே 
அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,
     திருநுதல் நீவி, பாளித பொட்டு இட்டு,
     அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு, ...... அலர்வேளின்

சுரத விநோதப் பார்வை மை இட்டு,
     தருண கலாரத் தோடை தரித்து,
     தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு,.....இளைஞோர்மார்
துறவினர் சோரச் சோர நகைத்து,
     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்
     துயர் அறவே, பொன் பாதம் எனக்குத் ...... தருவாயே.     --- திருப்புகழ்.

மாயா சொரூப முழுச் சமத்திகள்,
     ஓயா உபாய மனப் பசப்பிகள்,
      வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள், ......முநிவோரும்  
மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,
     ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,
     'வாரீர் இரீர்' என் முழுப் புரட்டிகள், ...... வெகுமோகம்

ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,
     ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,
     ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள், ...... பழிபாவம்
ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,
     கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,
     ஆசார ஈன விலைத் தனத்தியர், ...... உறவுஆமோ?            --- திருப்புகழ்.

பெண்ஆகி வந்து, ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை
கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்
புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,
எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!

சீறும் வினை அது பெண் உருவாகி, திரண்டு உருண்டு
கூறும் முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்,
பீறு மலமும், உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு
ஏறும் கரை கண்டிலேன், இறைவா! கச்சி ஏகம்பனே!         --- பட்டினத்தார்.

மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,
பீதிதரும் அல்குல் பெருநகரம், - ஓதில்அதில்
வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை, போரூரைத்
தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.                 --- திருப்போரூர்ச் சந்நிதி முறை.
 
விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார்.

காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். 

ஆனால் இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை. காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது.

திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான். அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,

ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க
ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்; ஒளிபெருக
நீடுவார் துகீல் அசைய நிற்பாரும் ஆயினார்.

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. உமக்கு இங்கு என்ன வேலை? போமின்என்று அருளிச் செய்தார்.

ஆதலால் சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள் என்பதை அறிக.


அனுபோக பாத்திரம் ஈது என, மூட்டிடும் ஆசைகள் பால் ப(ட்)டு, ஆடகம் அது தேட ---

இன்பத்தை அனுபவிப்பதற்குப் பாத்திரமானவர்கள் இவர்களே என்று கொண்டு, அதனால் உள்ளத்தில் மூண்டு எழும் ஆசை காரணமாக, விலைமாதர்க்கு வேண்டிய பொன்னையும் பொருளையும் தேடுவதற்கான முயற்சியில் ஈடுபடுவர்.

பார்க்களம் மீதினில் மூர்க்கரையே கவி பாற்கடலான் என உழல்வேனோ ---

மூர்க்கர் - மூடத் தன்மை நிறைந்தவர்.  கொண்டது விடாதவர்.

பாற்கடலான் - திருப்பாற்கடலில் துயில் கொள்ளும் திருமால்.

மிகவும் சிறந்த மொழி தமிழ். தெய்வீகமுடைய செம்மொழி.  அதனால்தான் "தண்தமிழ்", "செந்தமிழ்", "தீந்தமிழ்" என்றெல்லாம் பேசப்படுகின்றது. இத்தகைய தெய்வத் தமிழைப் பயின்று பாட்டு இசைக்கும் ஆற்றல் வாய்ந்து, எவன் பிறப்பு இறப்பை நீக்கி பேரானந்தத்தைத் தருவானோ - எவன் பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெருமானோ - எவன் மறையாகமங்களால் துதிக்கப் பெறும் மாதேவனோ, அந்த எம்பெருமானைப் பாடி உய்வு பெறாமல், கேவலம் உண்டு உடுத்து உழலும் சிறுதொழிலும், சிறுமையும் உடைய மனிதர்களைப் பாடுவது எத்துணை மதியீனம்? காமதேனுவின் பாலை கமரில் உகுப்பதை ஒக்கும்.  தமது அறிவையும் தமிழையும் அறிவுக்கு அறிவாகிய இறைவன் மாட்டுப் பயன்படுத்தாமல்,  கேவலம் பொருள் விருப்பால் மனிதர்மாட்டுப் பயன்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கது.

யாம்ஓதிய கல்வியும், எம்அறிவும்
தாமேபெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே.

என்ற கந்தரநுபூதித் திருவாக்கை உய்த்து உணர்மின்கள்.  அங்ஙனம் பாடப் பெறுகின்றவர் எத்தன்மையானவர் என்பதை சுவாமிகள் கூறுமாறு காண்க. 

அறிவுஇலாப் பித்தர், ன்தன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்
     அசடர், பேய்க் கத்தர், நன்றி ...... அறியாத
அவலர்மேற் சொற்கள் கொண்டு, கவிகள் ஆக்கிப் புகழ்ந்து,
     அவரை வாழ்த்தித் திரிந்து ...... பொருள்தேடி,

சிறிது கூட்டிக் கொணர்ந்து, தெருவு உலாத்தித் திரிந்து,
     தெரிவைமார்க்குச் சொரிந்து, ...... அவமே, யான் 
திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி, ரிந்து,
     தெளிய மோட்சத்தை என்று ...... அருள்வாயே.        --- கச்சித் திருப்புகழ்.

பயனில்லாத பதடிகள் இருக்கைதொறும் போய், தூயதா, அமுதம் போன்ற செந்தமிழை - இறைவனைப் பாடுதற்கு உரிய தீந்தமிழை - வறிதாக அப் பதர்களைப் புனைந்துரையும் பொய்யுரையுமாகப் புகழ்ந்து பாடி, அவர்கள் தரும் பொருளைப் பெற்று மகிழ்வர். சிறிது காலமே நின்று மின்னலைப்போல் விரைவில் அழியும் பொருளையே பெற்று வீணுற்றனர். என்றும் அழியாத திருவருட் செல்வத்தை வாரி வாரி வழங்கும் எம்பெருமானைப் பாடி உய்யும் திறன் அறியாது கெடுவர்.

குன்றும் வனமும் குறுகி வழிநடந்து
சென்று திரிவது என்றும் தீராதோ - என்றும்
கொடாதவரைச் சங்குஎன்றும், கோஎன்றும் சொன்னால்
இடாதோ அதுவே இது.                       --- இரட்டையர்.

வஞ்சக லோபமூடர் தம்பொருள் ஊர்கள்தேடி
மஞ்சரி கோவை தூது           பலபாவின்
வண்புகழ் பாரிகாரி என்றுஇசை வாதுகூறி
வந்தியர் போல வீணில்      அழியாதே.... --- திருப்புகழ்.

கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்,
     காடு எறியும் மறவனை நாடு ஆள்வாய் என்றேன்,
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்,
     போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்,
மல்ஆரும் புயம்என்றேன் சூம்பல் தோளை,
     வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்,
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்
     யானும்என்றன் குற்றத்தால் ஏகின் றேனே.
                                ---  இராமச்சந்திர கவிராயர்.

சாத்திரம் ஆறையும் நீத்த மனோலய சாத்தியர் மேவிய பத வேளே ---

சாத்திரம் என்னும் சொல்லுக்கு நூல் என்று பொருள்.

உபநிடதங்கள், தருக்கம், திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள் முதலான அறிவைத் தரும் நூல்கள் அனைத்தும் சாத்திரம் எனப்படும். அறிவு என்பது உயிர் அறிவைக் குறிக்கும். உலகியல் அறிவை அல்ல. உயிர் இயல்பாகவே ஆணவ மலத்தால் பிணிப்புண்டு இருப்பதால், அதன் அறிவானது விளக்கம் பெறாமல் உள்ளது. அறிவு விளக்கம் பெறவேண்டும். பெற்றால்தான் அறியவேண்டிய பொருளை அறிந்து ஈடேறும். இல்லை எனில், தான் அறிந்ததையே அறிவாக எண்ணி மயங்கி இடர்ப்படும்.

வேதம் என்பது எழுதாக் கிளவி என்பதால் அதனை நூலாகக் கொள்ளப்பட இடமில்லை. வேதத்திற்கு சுருதி என்றும் பொருள் உண்டு. சுருதி என்பது காதால் கேட்டு அறிவது. எனவே, சாத்திரம் என்பதை வேதங்களின் அங்கங்கள் ஆகிய ஆறினையுமே குறித்ததாகக் கொள்ளலாம்.

வேதங்களை ஓதி உணர்ந்து தெளிவு பெறத் துணையாக இருப்பவை ஆறு அங்கங்கள். சிட்சை, வியாகரணம், நிருத்தம், கற்பம், சந்தம், சோதிடம் என்பன அவை. இவை வேதத்திற்கு உறுப்புக்கள் போல்பவை ஆதலால் வேதாங்கம் எனப்படும். இதனை,

"கற்பம் கை, சந்தம் கால், எண் கண்,
தெற்றென் நிருத்தம் செவி, கை மூக்கு,
உற்ற வியாகரணம் முகம் பெற்றுச்
சார்பில் தோன்றா ஆரண வேதக்கு
ஆதி அந்தம் இல்லை, அது நெறி எனும்"

என மணிமேகலை கூறுவதாலும் அறிக.

இதன் பொருள் ----

கற்பம் கை சந்தம் கால் எண் கண் - கற்பம் என்னும் அங்கம் கையாகவும், சந்தம் என்பது காலாகவும், கணிதம் என்பது கண்ணாகவும், தெற்றென் நிருத்தம் செவி - தெற்றென விளக்கம் செய்யும் நிருத்தம் என்னும் அங்கம் காதாகவும், சிக்கை மூக்கு -சிஷை மூக்காகவும், உற்ற வியாகரணம் முகம் பெற்று - இவற்றோடு பொருந்தும் சொல் இலக்கணம் என்னும் அங்கம் முகமாகவும் கொண்டு, சார்பின் தோன்றா - யாதொன்றனையும் சார்ந்து தோன்றுதலில்லாது தான் தோன்றியாகிய, ஆரண வேதக்கு - ஆரணமாகிய வேதபுருடனுக்கு, ஆதி அந்தம் இல்லை - தோற்றமும் கேடும் இல்லை, அது நெறி - அவ்வேதம் கூறுவதே எங்கட்குச் சமய நெறியாம்.

பிறவியாகிய பெருங்கடலில் வாழ்ந்த உயிர்கள், ஆசாரியனாகிய மீகாமனோடு கூடிய சாத்திரமாகிய கப்பலில் ஏறவேண்டும் என்க.  ஏறினால் முத்தியாகிய கரை ஏறலாம்.

உலகிலே உள்ள நூல்கள் யாவும் நம்மை உய்விக்காது. கற்கத் தகுந்த நூல்களையே கற்கவேண்டும். அதனாலேயே, திருவள்ளுவர் "கற்க கசடற கற்பவை" என்றனர். அறிவு நூல்களாவன பன்னிரு திருமுறைகளும், பதினான்கு மெய்கண்ட நூல்களும், அதன் வழி நூல்களும் ஆகும். சிவஞானபோதம் முதலிய ஞான சாத்திரங்களே நமது ஐயம் திரிபு மயக்கங்களை அகற்றி சிவப் பேற்றை அளிக்கும்.

அநபாயன் என்ற சோழ மன்னன், சீவகசிந்தாமணி என்ற அவநூலைப் படித்தபோது, அமைச்சராகிய சேக்கிழார் அடிகள், "ஏ! மன்னர் பெருமானே! இது அவநூல். இதனை நீ பயில்வதனால் பயனில்லை. சிவநூலைப் படிக்கவேண்டும்.கரும்பு இருக்க இரும்பு கடித்தல் கூடாது" என்று தெருட்டினர்.

அட்டைப் பகட்டுடன் கூடி வெளிவந்து உலாவும் அறிவை மயக்கும் நூல்கள் பல. அறநெறியைத் தாங்கி நிற்கும் நூல்கள் சில. ஆதலின், அறநெறியைத் தாங்காத நூல்களை வாங்கிப் படிக்காமல், ஆன்றோர்கள் கூறிய அறிவு நூல்களைப் படித்து உய்தி பெறவேண்டும்.

"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்பது நன்னூல். இதனை நன்கு சிந்திக்கவும்.

திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்திக் கூறியது "கற்க கசடற கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக”. இதற்குப் பரிமேலழகர் பெருமான் கண்டுள்ள உரையையும் நன்கு சிந்திக்கவும்.  "கற்பவை என்பதனால், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் உணர்த்துவன அன்றி, பிற பொருள் உணர்த்துவன, சின்னாள், பல்பிணி, சிற்றறிவினர்க்கு ஆகாது”.  "கசடு அறக் கற்றலாவது, விபரீத ஐயங்களை நீக்கி, மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்”.

பிறவியை நீக்க வேண்டின் ஒருவன் செய்ய வேண்டியது என்ன என்பதனை அறநெறிச்சாரம் என்னும் நூல் உணர்த்துவது காண்க.

மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
பிறஉரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்.

பாவத்தினை வளர்க்கும் நூல்களும்,  ஆசையினை வளர்க்கும் நூல்களும், பிறவற்றினை வளர்க்கும் நூல்களும், கலந்து நிறைந்த உலகில், அறத்தினை வளர்க்கும் நூல்களைக் கேட்கின்ற நற்பேற்றினை உடையவர்களே பிறப்பினை நீக்குதற்கேற்ற, வீட்டுலகினையுடையவராவர்.

அறநூல்களைப் பயில வேண்டிய நெறி இதுவென்று அறநெறிச்சாரம் கூறுமாறு..

நிறுத்து அறுத்துச் சுட்டுஉரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால், --பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகும்,மற்று ஆகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு.

பொன் வாங்குவோன் அதனை நிறுத்தும் அறுத்தும் சுட்டும் உரைத்தும் பார்த்து வாங்குதல்போல, அறநூல்களையும் பலவற்றாலும் ஆராய்ந்து தேடினோமானால் பிறவியினை நீக்கும்படியான உண்மைநூலை அடையலாம். கண்சென்று பார்த்ததையே விரும்பி உண்மையெனக்கற்பின் உண்மை நூலை அடைய இயலாது.

பொய் நூல்களின் இயல்பு இன்னது என அறநெறிச்சாரம் கூறுமாறு...

தத்தமது இட்டம் திருட்டம் எனஇவற்றோடு
எத்திறத்தும் மாறாப் பொருள்உரைப்பர்--பித்தர்,அவர்
நூல்களும் பொய்யே,அந் நூல்விதியின் நோற்பவரும்
மால்கள் எனஉணரற் பாற்று.

தாம் கூறும் பொருள்களைத் தங்கள் தங்கள், விருப்பம், காட்சி, என்ற இவையோடு, ஒரு சிறிதும் பொருந்தாவாறு உரைப்பவர்களைப் பைத்தியக்காரர் எனவும், அவர் கூறும் நூல்களைப் பொய்ந் நூல்களே எனவும், அந்நூல்கள் கூறும் நெறியில் நின்று தவஞ்செய்வோரும் மயக்கமுடையார் எனவும் உணர்தல் வேண்டும்.

மக்களுக்கு அறிவு நூல் கல்வியின் இன்றியமையாமை குறித்து அறநெறிச்சாரம் கூறுமாறு....

எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிதுஇல்லை, --- அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்,

மக்கட் பிறப்பில், கற்றற்குரியவற்றைக் கற்றலும், கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத்தெளிதலும், கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும் கூடப் பெற்றால், வேறு எந்தப் பிறப்பானாலும், மக்கட் பிறப்பினைப் போல, ஒருவனுக்கு இன்பம் செய்வது வேறு ஒன்று இல்லை. 

இறைவன் அறிவே வடிவானவன். "அறிவு திருமேனி" என்றது திருப்புகழ். "ஞானந்தான் உருவாகிய நாயகன்" என்பது கந்தபுராணம். அறிவு மயமாகிய இறைவனை அறிவினால்தான் அறிதல் வேண்டும். அறிவு என்பது இப்போது உலகத்தை அறிகின்ற அறிவு அன்று. இது சுட்டி அறிகின்ற அறிவு. அறிவிக்க அறிகின்ற அறிவு தடைபடுகின்ற அறிவு. மற்றும் கல்வியறிவினாலும், இறையை அறிய ஒண்ணாது. இந்த அறிவு முற்றிலும் அற்ற பின் எய்தும் திருவருள் அறிவினால் மட்டுமே இறைவனை அறிதல் கூடும். இந்த அறிவினை உயிர் அறிவில் அறிவிக்க வல்லவை வேதங்களும் சாத்திரங்களும் ஆகும்.

"அறுசமய சாத்திரப் பொருளோனே" என்று பிறிதோர் திருப்புகழில் முருகப் பெருமானைப் போற்றினார் அடிகளார். சைவம், வைணவம், காணாபத்யம், கௌமாரம், சாத்தம், சௌரம் என்பன ஆறு சமயங்கள் ஆகும். இவைகள் ஒரே குறிக்கோளைக் கொண்டவைகளாகும். ஒரு கடவுளுக்கு ஆறு தன்மைகள். சிவம் - மங்கலம். விஷ்ணு - வியாபகம்.  காணாபத்யம் - இடரின்மை. கௌமாரம் - இளமை. சாத்தம் - வலிமை.  சௌரம் - ஒளி. கடவுளுக்கு இந்த ஆறு தன்மைகளும் உண்டு.  இவைகளைத் தனித்தனியே வைத்து ஒவ்வொரு சமயமும் பேசுகின்றது.  இவைகளின் நுட்பம் அறிந்தார் இணங்குவரே அன்றிப் பிணங்கார்.

சிவமூர்த்தியின் அருள் தன்மைகளே இந்த ஆறும் என்க.  அண்டகோடிகள் முற்றும் வியாபகமாக நிற்பவர் அவரே என்க.  அதனால் அவர் விஷ்ணு எனப்படுவர். சிவபெருமானுடைய நவவடிவங்களில் ஒன்று விஷ்ணு வடிவம். அந்த நவ வடிவங்களாவன் --- பிரமன், திருமால், உருத்திரன், மகேச்சுரன், சதாசிவம், விந்து, நாதம், சத்தி, சிவம். இவற்றுள் முன்னுள்ள நான்கும் உருவத் திருமேனிகள். பின்னுள்ள நான்கும் அருவத் திருமேனிகள். இடையில் உள்ளது அருவுருவத் திருமேனி.

சிவம் சத்தி நாதம் விந்து
         சதாசிவன் திகழும் ஈசன்
உவந்தருள் உருத்திரன்தான்
         மால்அயன் ஒன்றின் ஒன்றாய்ப்
பவந்தரும் அருவம் நாலு இங்கு
         உருவநால் உபயம் ஒன்று ஆய்
நவம் தரு பேதம் ஏக
         நாதனே நடிப்பன் என்பர்.             ---  சிவஞானசித்தியார்.

காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணு வேறு என அறிக.  அவர் திரிமூர்த்திகளில் ஒருவர். திரிமூர்த்திகளும் பசுக்களே ஆவர்.

எனவே, ஒரு தனிப் பொருளாம் பரம்பொருளைக் குறித்து ஆறு கோணங்களில் பார்ப்பவர்களே மேற்கூறிய ஆறு சமயிகளும்.  இவைகள் ஒன்று நன்று, ஒன்று தீது என்று கூறுதல் மடமையாகும். இந்த ஆறு சமயங்களும் ஒரே முடிவை உடையனவாகும்.

அறுசமயத் தலைவராய் நின்றவர்.....          --- சேக்கிழார்.

ஆறு குருடர்கள் ஒரு யானையை ஆறு பக்கம் நின்று தடவிப் பார்த்தார்கள். ஒருவன் யானையின் முதுகைத் தடவிப் பார்த்தான். ஒருவன் வாலைத் தடவிப் பார்த்தான்.  ஒருவன் கொம்பைத் தடவிப் பார்த்தான். ஒருவன் காதைத் தடவிப் பார்த்தான். ஒருவன் தும்பிக்கையைத் தடவிப் பார்த்தான். ஒருவன் காலைத் தடவிப் பார்த்தான். தடவிப் பார்த்தவர்கள் முறையே பானை என்றும், உலக்கை என்றும், கோல் என்றும், முறம் என்றும், தூண் என்றும், உரல் என்றும் கூறினார்கள்.  யானை என்றால் அவர்கள் உள்ளத்தில் தனித்தனியே அந்த ஆறு உறுப்புக்களே ஆகும் என்று கொண்டார்கள். ஆனால், இந்த ஆறும் யானையின் அங்கங்களே ஆகும். இந்த ஆறும் சேர்ந்தது யானையாகும். அதுபோலவே, மேற்கூறிய கடவுளின் தனித்தனி அங்கங்களைக் கொண்டு அமைதியுறுகின்றார்கள். அந்த ஆறு சமயங்கள் கூறும் அத்தனையும் ஒன்று கூடியது கடவுள் தன்மை என்று உணர்க. இந்த அழகிய கருத்தைத் திருமூலர் கூறுகின்றார்.

முதல் ஒன்றுஆனை முதுகுடன் வாலும்
திதமுறு கொம்பும் செவிதுதிக் கைகால்
மடியுடன் அந்தகர் வகைவகை பார்த்தே
அதுகூறல் ஒக்கும் ஆறு சமயமே.             ---  திருமந்திரம்.

ஒரு பெரிய ஊருக்கு ஆறு வழிகள் உண்டு. எவ்வழி ஏகினும் அவ் ஊரையே அடைவர். அதுபோலே, மேலே கூறிய ஆறு சமயங்களில் நின்றார் ஒரே முத்தியைப் பெறுவர். இதில் நன்று தீது கூறுதல் ஆகாது. அவ்வாறு கூறுவார்களானால், அது குன்று நோக்கி நாய் குரைத்தது போலாகும் என்பார் திருமூலர்..

ஒன்றதே பேரூர் வழிஆறு அதற்குஉள
என்றது போலும் இருமுச் சமயங்கள்
நன்றுஇது தீதுஇது என்றுஉரை மாந்தர்கள்
குன்று குரைத்துஎழு நாயை ஒத்தாரே.         --- திருமந்திரம்.

எய்வகைச்சார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்
         எடுத்துஉரைத்தே, எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று
கைவகையே கதறுகின்றீர், தெய்வம்ஒன்றுஎன்று அறியீர்,
     கரிபிடித்துக் கலகம்இட்ட பெரியரினும் பெரியீர்,
ஐவகைய பூதஉடம்பு அழிந்திடில்என் புரிவீர்,
     அழிஉடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்,
உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
     உற்றது,இவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.    ---  திருவருட்பா.

அறிவுஒன்று அறநின்று அறிவார் அறிவில்
பிறிவுஒன்று அறநின்ற பிரான் அலையோ...    ---  கந்தர் அநுபூதி.

தண்ணீர் விடாய் கொண்டோன். கடல் நீரை நேரே சென்று பருகினால் விடாய் தீருமா? மேலும் மிகுதி உறும். மேகம் சென்று, கடல் நீரைப்பருகி, அதனிடத்துள்ள உப்பை நீக்கி, நன்னீரைத் தர, அதன் வாயிலாக வந்த நீரைக் குடிப்பவனுக்கே விடாய் நீங்கும். அதுபோல் நல்லோரை அடுக்காது, தாமே சாத்திரங்களை ஓத முயல்பவன் மனம் தெளிவை அடையாது. மேலும் மேலும் ஐயம், விபரீதம், மயக்கம் முதலியவற்றை அடைந்து கெடுவான். குருவின் வாயிலாகவே கற்றல் வேண்டும். குருநாதனாகிய மேகம், வேதாகமாதி கடலில் சென்று, அதைப் பருகி, அதனிடத்துள்ள ஐய விபரீதங்களாகிய உவரை நீக்கி, நல்லுணர்வாகிய நன்னீரை அருளும்.

எனவே, ஞானாசிரியரின் துணை இல்லாமல் ஞான நூல்களைக் கற்கப் புகுவார் அந்நூற்களின் மெய்ப்பொருளை உணர இயலாது. அவ்வாறின்றி நல்ல ஞானாசிரியனை அடுத்து உபதேசம் பெறுவார் அவ்வுபதேசத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே நன்னலம் பெற நிறைந்த ஞானத்தைப் பெறுவார்கள். அலைகள் ஆரவாரிக்கின்ற பெருங்கடல் ஆயினும் அதில் உள்ள நீரைக் குடித்தவர்க்கு நீர்வேட்கை தணிந்திடாது.

இதனைப் பின்வரும் திருக்களிற்றுப்படியார் என்னும் சாத்திரத்தில் வரும் பாடலால் காணலாம்...

சாத்திரத்தை ஓதினார்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்க்கும் நலம் வந்துஉறுமே, -- ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ?
தெள்நீர்மையாய் இதனைச் செப்பு.                

ஆரணமும் அருள் நூல்களும் கடல் போல் விரிந்துள்ளன. தக்க ஆசிரியரின் துணையின்றி அந்நூல்களைக் கற்க முற்படுகிறவர்களுக்கு அவற்றின் தெளித்த பொருள் விளங்குவதில்லை. ஆனால் ஞானாசிரியர் ஒருவர் உணர்த்துகிற மொழியைக் கேட்ட அளவிலேயே பிறவி வெப்பத்தினால் தோன்றிய மயக்கங்கள் எல்லாம் அற்றுத் தெளிவு பிறக்கும்.

சாத்திரக் கடலுக்கு ஒப்பாக ஆர்க்கின்ற அலைகடல் உவமை கூறப்பட்டது. எல்லையற்ற பெருங்கடல் போன்றன எல்லையற்ற ஞான நூல்கள். கடல் நீரை அள்ளிப்பருகினால் அதன் உவர்ப்புத் தன்மையினால் நீர் வேட்கை தணியாது. ஆனால் அருகிலுள்ள சிறிய ஊற்றின் தண்ணீர் விடாய் தீர்ப்பது போன்று ஞான ஆசிரியரின் அருள் மொழி ஞான வேட்கையைத் தணிக்கும்.

"கடல் பெரிது, மண்ணீரும் ஆகாது, அதன் அருகே சிற்று ஊறல் உண்ணீரும் ஆகி விடும்" என்னும் ஔவையார் மூதுரை சிந்திக்கத்தக்கது.

"தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப நீர்வேட் டோரே,
ஆவும் மாவும் சென்றுஉணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்"

என்கின்றது புறநானூற்றுப் பாடல் ஒன்று.

இதன் பொருள் ---  தெளிந்து பரந்து இருக்கின்ற கடலில் உள்ள நீரை தாகம் உடையவர்கள் பருகமாட்டார்கள். ஆனால், ஆடும் மாடும் சென்று கலக்கிய சிறிய குட்டையில் உள்ள சேறு கலங்கிய நீரானாலும், அதைத் தேடிப் பலரும் செல்வர்.

சாத்தியர் என்பது தேவருள் ஒரு பகுதியினர் என்று சொல்லப்பட்டாலும், சாத்திரம் என்று குறிக்கப்பட்டதனால், சாத்திரங்களை ஓதி, சாதிக்கவேண்டியதைச் சாதித்தவர்கள் என்று பொருள் கொள்வதே இங்குப் பொருந்தும்.

சாத்திரம் ஆறையும் குருமுகமாக ஓதித் தெளிந்தவர்கள் மனம் ஒடுங்கப் பெறுவார்கள். மனம் ஒடுங்கப் பெற்றவர்கள் மேலும் ஓத வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வகுப்பிற்கு உரிய நூலைப் பயின்று, அறிவு பெற்றுத் தேர்ந்து, மேல் வகுப்பிற்குச் சென்றவனுக்கு, முன்னரே அவன் பயின்ற நூலானது அவசியம் இன்றிப் போகும். அந்த நூலை அவன் நீத்து விடுகின்றான்.  அதுபோலவே, சாத்திரங்களை ஓதித் தெளிந்து மனம் ஒடுங்கப் பெற்றவர்கள் சாத்திரங்களை நீத்தவர்கள் ஆகின்றார்கள்.
  
வேத்திர சாலம் அது ஏற்றிடு வேடுவர் ---

வேத்திரம் என்பது பிரம்பையும், அம்பையும் குறிக்கும்.

சாலம் என்பதன் பொருள் கூட்டம்.

அம்புகளைச் சுமந்து திரியும் வேடர்கள் எனப்பட்டது.

மீக்கு அமுதா மயில் மணவாளா ---

மீக்கு - மீக்கூறுதல் - மிகுதல், மேம்படுதல், மேலாக மதித்தல்.

மேம்பட்ட அமுதைப் போன்றவளும், மயிலை ஒத்தவளும் ஆகிய வள்ளிநாயகியின் மணவாளர் முருகப் பெருமான்.

வேத்தம் அது ஆ மறை ஆர்த்திடு சீர் ---

வேதம் என்னும் சொல், வித் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. வித், வித்தை என்றால் அறிவு. வேதம் என்னும் சொல்லுக்கு, ஆழம், மறை என்றும் பொருள்.  பொருள் மறைந்து அழ்ந்து உள்ளது வேதம். அதனைப் பலகாலும் ஓதினால் அன்றித் தெளிவு பிறக்காது.

வேதகம் - வேறுபடுத்துதல். நல் அறிவானது, உயிருக்கு இயல்பாக உள்ள அறியாமையை வேறுபடுத்தும்.

வேத்தன் என்னும் சொல்லுக்கு, அறியத் தக்கவன், அறிந்தவன் என்று பொருள்.

திருவேட்கள மேவிய பெருமாளே --- 

திருவேட்களம் என்னும் திருத்தலம், சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.

சிதம்பரத்தில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே புகுந்து பின்புறம் இசைக் கல்லூரியைக் கடந்து சென்று இத்திருத்தலத்தை அடையலாம்.

இறைவர் : பாசுபதேசுவரர், பாசுபதநாதர்.
இறைவியார் : சற்குணாம்பாள், நல்லநாயகி. 
தல மரம் : மூங்கில். 
தீர்த்தம்  : தீர்த்தக்குளம் - கோயிலின் எதிரில்.

அருச்சுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். பாரதப் போரில் வெற்றி பெறுவதற்காக அருச்சுனன் பாசுபதம் பெற விரும்பி சிவபெருமானை நோக்கி மூங்கில் காடாக இருந்த திருவேட்களத்தில் கடும் தவம் செய்கிறான். (கயிலைமலை சென்று தவம் முயன்றதாக, வில்லிபாரதம் கூறுகிறது என்பதை அறியவும்) அருச்சுனனின் தவத்தைக் கெடுக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். சிவபெருமான் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து தனது அம்பால் பன்றியைக் கொன்றார். அதே பன்றியின் மீது அருச்சுனனும் அம்பினை எய்தினான். அந்தப் பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும் அருச்சுனனுக்கும் சொற்போரும், விற்போரும் நடந்தது. விற்போரில் அருச்சுனின் வில் முறிந்தது. இதனால் கோபமடைந்த அவன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். இந்த அடி மூவுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. இதனால் அன்னை பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியை சமாதானப்படுத்தி தனது திருவடியால் அருச்சுனனை தூக்கி எறிந்தார். அவன் சிவனின் திருவடி தீட்சை பெற்று, அன்னையின் கருணையால் இத்தல தீர்த்தத்தில் விழுந்தான். சிவன், உமாதேவியுடன் காட்சி கொடுத்து, அருச்சுனனுக்கு பாசுபதம் கொடுத்து அருளினார். கிராதமூர்த்தியாக பார்வதிதேவியுடன் பாசுபதாஸ்திரம் கையில் ஏந்திய இறைவனின் உற்சவ விக்கிரகமும், அருச்சுனன் உற்சவ விக்கிரகமும் இவ்வாலயத்தில் உள்ளன. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அருச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த உற்சவம் நடைபெறுகிறது.

இத்தலத்தில் முருகப்பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருவாசியுடன் ஒரே கல்லில் அமைந்த திருவுருவம். வைகாசி விசாக விழா இத்தலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்தல தீர்த்தம் கிருபா தீர்த்தம் கோவிலின் எதிரில் உள்ளது. தலமரம் மூங்கில்.

திருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருப்பதற்கு மனமில்லாமல் திருவேட்களம் என்ற இத்தலத்தில் தங்கி இருந்து கொண்டு தான் சிதம்பரத்திற்கு எழுந்தருளி அம்பலவாணப் பெருமானை வழிபட்டு வந்தார்.

திருஞானசம்பந்தரும், அப்பர் பெருமானும் வழிபட்டு, திருப்பதிகங்கள் அருளப் பெற்ற திருத்தலம்.

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மாயம் மிகும் வாள் களம் உற்றாங்கு விழி மாதர் மயல் அற்றவர் சூழ் வேட்களம் உற்று ஓங்கும் விழுப்பொருளே" என்று போற்றி உள்ளார்.

கருத்துரை

முருகா! விலைமாதர் இன்பத்தைக் கருதிப் பொருள் தேட முயன்று வீணர்களைப் புகழ்ந்து அழியாமல், இல்லாளுடன் பொருந்தி இருந்து இன்புற அருள்வாய்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...