அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அரியயன்
அறியாதவர் (வடுகூர்)
சிவகுமாரரே!
எனது பாதக மலங்கள் அகல,
அடியேன் தேவரீரது திருப்பாத
கமலங்களைத்
தொழுது உய்யத் திருவருள் புரிவீர்.
தனதன
தனனா தனதன தனனா
தனதன தனனா ...... தனதான
அரியய
னறியா தவரெரி புரமூ
ணதுபுக நகையே ...... வியநாதர்
அவிர்சடை
மிசையோர் வனிதையர் பதிசீ
றழலையு மழுநேர் ...... பிடிநாதர்
வரைமக ளொருகூ றுடையவர் மதனா
கமும்விழ விழியே ...... வியநாதர்
மனமகிழ்
குமரா எனவுன திருதாள்
மலரடி தொழுமா ...... றருள்வாயே
அருவரை
யிருகூ றிடவொரு மயில்மேல்
அவனியை வலமாய் ...... வருவோனே
அமரர்க
ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்
அயில்தனை விசையாய் ...... விடுவோனே
வரிசையொ டொருமா தினைதரு வனமே
மருவியொர் குறமா ...... தணைவேடா
மலைகளில்
மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
வருதவ முனிவோர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அரி
அயன் அறியாதவர், எரி புரமூணு
அது புக நகை ...... ஏவிய நாதர்,
அவிர்சடை
மிசைஓர் வனிதையர், பதிசீறு
அழலையும் மழுநேர் ...... பிடிநாதர்,
வரைமகள்
ஒரு கூறு உடையவர், மதன-
ஆகமும் விழ விழி ...... ஏவிய நாதர்,
மனமகிழ்
குமரா என, உனது இருதாள்
மலர் அடி தொழுமாறு ......அருள்வாயே.
அருவரை
இரு கூறு இட, ஒரு மயில்மேல்
அவனியை வலமாய் ...... வருவோனே!
அமரர்கள்
இகல் நீடு அசுரர்கள் சிரமேல்
அயில்தனை விசையாய் ...... விடுவோனே!
வரிசையொடு
ஒரு மாதினை தரு வனமே
மருவி, ஒர் குறமாது ...... அணை வேடா!
மலைகளில்
மகிழ்வாய் மருவி, நல் வடுகூர்
வருதவ முனிவோர் ...... பெருமாளே.
பதவுரை
ஒரு மயில் மேல்
அவனியை வலமாய் வருவோனே --- ஒப்பற்ற மயில் மீது ஏறி உலகை வலமாக
வந்தவரே!
அமரர்கள் இகல் நீடு
அசுரர்கள் சிரமேல் --- தேவர்களின் பகைவர்களாகிய பெரும் அசுரர்களின் தலைகள் மீது
அயில்தனை விசையாய்
விடுவோனே ---
வேலை வேகமாய் விடுத்து அருளியவரே!
வரிசையொடு ஒரு மா
தினை தரு வனமே மருவி --- வரிசையாக வளர்ந்திருந்த சிறந்த தினைப் பயிர்கள் உள்ள
காட்டிற்கு விரும்பிச் சென்று,
ஒர் குறமாது அணை வேடா
---
ஓப்பற்ற குறமகளாகிய வள்ளியநாயகியை அணைந்த வேடரே!
மலைகளில் மகிழ்வாய் --- மலை இடங்களில் மகிழ்வோடு
எழுந்தருளி இருப்பவரே!
நல் வடுகூர் மருவி வரு
தவமுனிவோர் பெருமாளே --- விரும்பித்
தவம் புரிகின்ற முனிவர்கள் வாழுகின்ற நல்ல வடுகூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி
உள்ள பெருமையில் மிக்கவரே!
அரி அயன் அறியாதவர் --- திருமாலும்
பிரமனும் அடிமுடி காணமுடியாதவர்.
புரம் மூணு அது எரி புக
நகை ஏவிய நாதர் --- முப்புரங்களும் வெந்து அழியும்படியாக புன்முறுவல் புரிந்த
தலைவர்.
அவிர்சடை மிசை ஓர்
வனிதையர் பதி
--- விளங்கும் திருச்சடையில் மீது ஒப்பற்ற கங்கை நங்கையை வைத்துள்ள தலைவர்.
சீறு அழலையும் --- சீறி எறிகின்ற
நெருப்பையும்,
மழு நேர் பிடி நாதர் --- மழு
ஆயுதத்தையும் நேராகத் திருக்கையில் ஏந்திய தலைவர்.
வரைமகள் ஒரு கூறு உடையவர் --- மலைமகளாகிய
பார்வதி தேவியை தனது திருமேனியின் ஒரு பாகத்தில் உடையவர்.
மதன் ஆகமும் விழ விழி
ஏவிய நாதர்
--- மன்மதனின் உடல் சாம்பலாக விழ நெற்றிக் கண்னை ஏவிய தலைவர்.
மன மகிழ் குமரா என --- (அத்தகைய சிவபரம்பொருள்)
மனமகிழும் குமாரக் கடவுளே என்று கூறி,
உனது இருதாள் மலரடி தொழுமாறு அருள்வாயே
--- தேவரீரது மலர்ப் பாதங்களை அடியேன் தொழுமாறு அருள் புரியவேண்டும்.
பொழிப்புரை
அரிய கிரவுஞ்சமலை இரு பிளவாகும்படிச்
செய்தவரே!
ஒப்பற்ற மயில் மீது ஏறி உலகை வலமாக வந்தவரே!
தேவர்களின் பகைவர்களாகிய பெரும்
அசுரர்களின் தலைகள் மீது வேலை வேகமாய் விடுத்து அருளியவரே!
வரிசையாக வளர்ந்திருந்த சிறந்த தினைப்
பயிர்கள் உள்ள காட்டிற்கு விரும்பிச் சென்று, ஓப்பற்ற குறமகளாகிய வள்ளியநாயகியை
அணைந்த வேடரே!
மலை இடங்களில் மகிழ்வோடு எழுந்தருளி
இருப்பவரே!
விரும்பித் தவம் புரிகின்ற முனிவர்கள்
வாழுகின்ற நல்ல வடுகூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில்
மிக்கவரே!
திருமாலும் பிரமனும் அடிமுடி
காணமுடியாதவர்.
முப்புரங்களும்
வெந்து அழியும்படியாக புன்முறுவல் புரிந்த தலைவர்.விளங்கும் திருச்சடையில் மீது பொருந்தி
உள்ள ஒப்பற்ற கங்கை நங்கையின் தலைவர். சீறி எறிகின்ற
நெருப்பையும், மழு ஆயுதத்தையும் நேராகத் திருக்கையில் ஏந்திய தலைவர்.மலைமகளாகிய
பார்வதி தேவியை தனது திருமேனியின் ஒரு பாகத்தில் உடையவர். மன்மதனின் உடல்
சாம்பலாக விழ நெற்றிக் கண்னை ஏவிய தலைவர். அத்தகைய
சிவபரம்பொருள் மனமகிழும் குமாரக் கடவுளே என்று கூறி தேவரீரது மலர்ப் பாதங்களை
அடியேன் தொழுமாறு அருள் புரியவேண்டும்.
விரிவுரை
அரி
அயன் அறியாதவர் ---
திருமாலும்
பிரமனும் அடிமுடி தேடிய வரலாற்றை இது குறிக்கின்றது. பின்வரும் திருமந்திரப்
பாடல்களைச் சிந்திக்கவும்.
பிரமனும்
மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால்
தங்கள்தம் பேதைமை யாலே
பரமன்
அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி
தேடி அரற்றி நின்றாரே.
இதன் பொழிப்புரை : பிரமனும், திருமாலும் `நானே கடவுள், நானே கடவுள்` என்று சொல்லிப் போர் புரிய, அவர்களது பேதைமையை நீக்குதற் பொருட்டுச்
சிவபெருமான் அனல் பிழம்பாய் ஒளி வீசி நிற்க, அவ்விருவரும் அவனது திருவடியைத் தேடிக்
காணாமல் புலம்பினர்.
சிவபெருமான்
பேதைமையாளர்க்கு அறிய ஒண்ணாதவன் என்பது கூறப்பட்டது.
தானக்
கமலத்து இருந்த சதுர்முகன்
மானக்
கருங்கடல் வாழித் தலைவனும்
ஊனத்தின்
உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப்
பெரும்பொருள் அண்மையது ஆமே.
இதன் பொழிப்புரை --- தாமரை
மலரை இடமாகக் கொண்டு இருக்கின்ற பிரமனும், பெரிய கடலில் நீங்காது, கிடக்கின்ற திருமாலும் எஞ்ஞான்றும்
தங்கள் உடம்பினுள்ளே உள்ள உயிர் போலக் கருதி தியானிக்கத்தக்க பெரும்பொருளாகிய
சிவபெருமான், அவர் தம்
புறக்கண்ணிற்கு அகப்படுவானோ!
இந்த
வரலாற்றின் உட்பொருள் வருமாறு ....
(1) கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது
இராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக்
காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே
ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.
(2) அடி - தாமரை. முடி - சடைக்காடு.
தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி
பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும்
அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு
மாறாக முயன்றதால், அடிமுடி
காணப்படவில்லை. இறைவன் இயற்கை வடிவினன்.
இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.
(3) திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு
நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர். இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது.
பத்தி ஒன்றாலேயே காணலாம்.
(4) "நான்" என்னும்
ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும், "எனது"
என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே
இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.
(5) "நான் காண்பேன்" என்ற முனைப்புடன்
ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது. தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும்.
ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது
திருவாசகத்தில் "செத்திலாப்பத்து".
(6) புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக்
காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி, அன்பு என்னும் வலை வீசி, அகக் கண்ணால்
பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே
ஆனந்தம்" என்றார் திருமூலர்.
(7) பிரமன் - வாக்கு. திருமால் - மனம். வாக்கு மனம் என்ற
இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்"
அவன் என்கின்றது மணிவாசகம்.
(8) பிரமன்
- நினைப்பு. திருமால் - மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல்
இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற நினைவு
அருள்வாயே" என்று திருப்புகழிலும், இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை
எளிதல்லவே" என்று கந்தர் அலங்காரத்திலும் அடிகளார் அருள் உள்ளது அறிக. மேலும், "இராப்பகல் அற்ற இடத்தே
இருந்து,
பராக்குஅற
ஆனந்தத் தேறல் பருகி, இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து இராப்பகல் மாயை இரண்டு இடத் தேனே"
எனத் திருமூலர் அருளியதையும் சிந்திக்கவும்.
புரம்
மூணு அது எரி புக நகை ஏவிய நாதர் ---
மூன்று என்னும் சொல் மூணு என வந்தது.
தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி என்னும் மூவர் அசுரர் சிவபத்தியில் சிறந்தவராய்
மயன் வகுத்த `பொன், வெள்ளி, இரும்பு` இவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் நினைத்த
இடத்தில் பறந்து சென்று இறங்கும் சித்தியை அடைந்து, அதனால் உலகிற்கு இடர் விளைத்தனர். அதனைத்
தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வணங்கி விண்ணப்பித்து, அவ்வசுரர்களை அழித்தருளுமாறு வேண்டினர்.
சிவபெருமான் `நம்பால் பத்தி பண்ணுவோரை
அழித்தல் ஆகாது` என்று அருளிச் செய்யத்
திருமால் புத்தனாக உருக்கொண்டு பிடக நூலைச் செய்து, நாரத முனிவரைத் துணைக்கொண்டு முப்புரத்தவர்பால்
சென்று சிவநெறியை இகழ்ந்து, புத்த மதத்தையே சிறந்ததாகக்
காட்டி மருட்டினார். அதனால் அம்மாயோன் மயக்கில் அகப்பட்ட முப்புரத்து அசுரர் சிவநெறியைக்
கைவிட்டுச் சிவனை இகழ்ந்து புத்தராயினர். அதன்பின் திருமால் முதலியோர் சிவபிரானிடம்
சென்று வணங்கி, முப்புரத்தவர் சிவநிந்தகர்
ஆயினமையை விண்ணப்பித்து, அவர்களை அழித்தருள வேண்டினர்.
சிவபெருமான் அதற்கு இசைவு தரப் பூமியைத் தேர்த்தட்டாக அமைத்துத் தேவர் பலரும் தேரின்
பல உறுப்புக்களாயினர். வேதங்கள் நான்கும் குதிரைகளாக, அவற்றை ஓதும் பிரமன் தேரை ஓட்டும் சாரதி
ஆயினன். திருமால் அம்பாக, வாயுதேவன் அம்பின் சிறகுகளும், அக்கினி தேவன் அம்பின் அலகும் ஆயினர். சிவபெருமான்
வாசுகியை நாணாகக் கொண்டு மகாமேரு மலையை வில்லாக வளைத்துத் திருமால் முதலியோரால் அமைந்த
அம்பைப் பூட்டித் திரிபுரங்களை நோக்கிய பொழுது, அவரிடத்து உண்டாகிய கோபச் சிரிப்பால் முப்புரங்களும்
வெந்து நீறாயின. இவ்வாறு திருவிற்கோலப் புராணம், காஞ்சிப் புராணங்களில் இவ் வரலாறு விரித்துக்
கூறப்பட்டது.
உருவு
கரியது ஒர் கணை கொடு, பணிபதி
இரு குதையும் முடி தமனிய தநுவுடன்,
உருளை இருசுடர், வலவனும் அயன்என, ....மறைபூணும்
உறுதிபடு
சுர ரத மிசை அடியிட,
நெறு நெறு என முறிதலும், நிலை பெறுதவம்
உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற, ......ஒருகோடி
தெருவும், நகரியும், நிசிசரர் முடியொடு
சட சட என வெடி படுவன, புகைவன,
திகுதிகு என எரிவன, அனல் நகைகொடு ......முனிவார் தம்
சிறுவ!
வனசரர் சிறுமியொடு உருகிய
பெரும! அருணையில் எழுநிலை திகழ்வன
சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய ......
பெருமாளே.
--- (அருவம்இடை)
திருப்புகழ்.
மாநாக
நாண் வலுப்புறத் துவக்கி ஒர்
மாமேரு பூதரத் தனுப் பிடித்து, ஒரு
மால் ஆய வாளியைத் தொடுத்து, அரக்கரில் .....ஒரு மூவர்
மாளாது, பாதகப் புர த்ரயத்தவர்
தூளாகவே, முதல் சிரித்த வித்தகர் வாழ்வே! --- (ஆனாதஞான)
திருப்புகழ்.
முக்கோட்டைக்கு
ஒருகிரி ......இருகாலும்
வில் போலக் கோட்டி, பிறகு ஒரு
சற்றே பல் காட்டித் தழல் எழு-
வித்தார் தத்வ அர்த்தக் குருபரன் ...... என
ஓதும்
பொற்பா!............... .................. --- (கற்பார்) திருப்புகழ்.
"கல்லால்நிழல்
கீழாய்இடர் காவாய்என வானோர்
எல்லாம்ஒரு
தேராய்அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப
வல்லாய்எரி
காற்றுஈர்க்குஅரி கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில்
எய்தான்இடம் வீழிம்மிழ லையே”. --- திருஞானசம்பந்தர்.
வரிஅரவே
நாண்ஆக மால்வரையே வில்லாக
எரிகணையால்
முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்
பொரிசுடலை
ஈமப் புறங்காட்டான் போர்த்ததுஓர்
கரிஉரியான்
மேவியுறை கோயில் கைச்சினமே. --- திருஞானசம்பந்தர்.
குன்ற
வார்சிலை, நாண் அரா,அரி
வாளி கூர்எரி காற்றின் மும்மதில்
வென்றவாறு
எங்ஙனே விடைஏறும் வேதியனே
தென்ற
லார்மணி மாட மாளிகை
சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில்
வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே. --- திருஞானசம்பந்தர்.
கையில்உண்
உண்டு உழல்வாரும் சாக்கியரும்
கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்
பொய்இலா
தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்
பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார்
அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய்
வீழ்த்த
செய்யின்ஆர்
தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. ---
அப்பர்.
நிற்பானும்
கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்து
அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்
வெற்புஆர்வில்
அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும்
எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,
சொற்பால
பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும்
பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே
கற்பாரும்
கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்
கலைபயில்அந்
தணர்வாழும் கலயநல்லூர் காணே. ---
சுந்தரர்.
முப்புர
தகனம் உணர்த்துவது குறித்து, திருமூல நாயனார்
கூறுமாறு காண்க.
அப்பணி
செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம்
செற்றனன் என்பர்கள் மூடர்கள்,
முப்புரம்
ஆவது மும்மல காரியம்,
அப்புரம்
எய்தமை யார் அறிவாரே.
இதன்
பொழிப்புரை ---
சிவபெருமான்
திரிபுரம் எரித்த வரலாற்றைப் புராணங்கள் கூறக் கேட்கின்ற அறிவிலாதார் அவ் வரலாற்றை
மட்டுமே கேட்டு, அவ்வளவில் சிவபெருமானைப்
புகழ்வதோடு ஒழிகின்றனர். அவ்வரலாற்றால்
அறியத் தக்க உண்மையை அறிகின்றவர் மிகச் சிலரே. `இரும்பு, வெள்ளி, பொன்` என்பவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் முறையே
`ஆணவம், மாயை, கன்மம்` என்னும் மும்மலக் கட்டினைக் குறிப்பன
ஆகும். `சிவபெருமான் அக்கோட்டைகளை
எரித்துச் சாம்பலாக்கினான்` என்பது, `அந்த மும்மலங்களின் வலியை அழித்து, கட்டு
அறுத்து அருளினான்` என்னும் உண்மையை
உணர்த்தி நிற்பது ஆகும்.
அவிர்சடை
மிசை ஓர் வனிதையர் பதி ---
முன்னொரு
காலத்தில் உமாதேவியார், திருக்கயிலாய
மலையிலுள்ள சோலையிலே ஒரு விளையாட்டாக ஒன்றும் பேசாதவராய்ச் சிவபெருமானுக்குப் பின்புறத்தில்
வந்து அவருடைய இரு கண்களையும் தமது
திருக்கரங்களால் பொத்தினார். அதனால் எல்லா உயிர்களும் வருத்தம் அடையும்படி
புவனங்கள் எங்கும் இருள் பரந்தது. சிவபெருமானுடைய திருக்கண்களினாலேயே எல்லாச்
சோதியும் தழைத்த தன்மையினால், சூரியன் சந்திரன்
அக்கினி ஆகிய இவர்களின் சுடர்களும் மற்றைத் தேவர்களின் ஒளிகளும் அழிந்து எல்லாம்
இருள் மயமாயின. அம்மையார் அரனாரது திருக்கண்களைப் பொத்திய அக் கணம் ஒன்றில்
உயிர்கட்கு எல்லாம் எல்லை இல்லாத ஊழிக்காலங்கள் ஆயின. அதனை நீலகண்டப்பெருமான்
நோக்கி, ஆன்மாக்களுக்குத்
திருவருள் செய்யத் திருவுளங்கொண்டு,
தம்முடைய
நெற்றியிலே ஒரு திருக்கண்ணை உண்டாக்கி, அதனால்
அருளொடு நோக்கி, எங்கும் வியாபித்த
பேரிருளை மாற்றி, சூரியன்
முதலாயினோர்க்கும் சிறந்த பேரொளியை ஈந்தார். புவனங்களிலுள்ள பேரிருள் முழுதும்
நீங்கினமையால் ஆன்மகோடிகள் உவகை மேற்கொண்டு சிறப்புற்றன. சிவபெருமானுடைய செய்கையை
உமாதேவியார் நோக்கி அச்சம் எய்தி அவருடைய திருக்கண்மலர்களை மூடிய இருகர
மலர்களையும் துண்ணென்று எடுத்தார்.
எடுக்கும்
பொழுது தமது பத்துத் திருவிரல்களிலும் அச்சத்தினாலே வியர்வைத் தோன்ற, அதனை உமாதேவியார் நோக்கி திருக்கரங்களை உதறினார்.
அவ்வியர்வைப் பத்துக் கங்கைகளாய் ஆயிர நூறுகோடி முகங்களைப் பொருந்திச்
சமுத்திரங்கள்போல் எங்கும் பரந்தன. அவற்றை அரி அர பிரமாதி தேவர்களும் பிறரும்
கண்டு திருக்கயிலையில் எழுந்தருளிய தேவதேவன்பால் சென்று, வணங்கித் துதித்து, “எம்பொருமானே! இந்த நீர்ப்பெருக்கு
எங்கும் கல்லென்று ஒலித்து யாவரும் அழியும்படி அண்டங்கள் முழுவதையும் கவர்ந்தது. முன்னாளில் விடத்தை உண்டு அடியேங்களைக்
காத்தருளியதுபோல் இதனையும் தாங்கி எங்களைக் காத்தருளுவீர்” என்று வேண்டினார்கள்.
மறைகளும் காணாக் கறைமிடற்றண்ணல் அந்நதியின் வரலாற்றை அவர்களுக்குச் சொல்லி, அதனை அங்கே அழைத்து, தமது திருச் சடையிலுள்ள ஓர் உரோமத்தின்
மீது விடுத்தார்.
அதனைக்
கண்டு மகிழ்ந்து நான்முகனும் நாராயணனும் இந்திரனும் “எம்மை ஆட்கொண்ட எந்தையே!
இவ்வண்டங்களை எல்லாம் விழுங்கிய கங்கை உமது அருட்சத்தியாகிய அம்பிகையாரது
திருக்கரத்தில் தோன்றினமையாலும்,
உமது
திருச்சடையில் சேர்ந்தமையாலும் நிருமலம் உடையதாகும். அதில் எமது நகரந்தோறும்
இருக்கும்படி சிறிது தந்தருளல் வேண்டும்” என்று வேண்டினார்கள். சிவபெருமான்
திருச்சடையில் புகுந்திருந்த கங்கையில் சிறிதை அள்ளி அம்மூவர்களுடைய கைகளிலும்
கொடுத்தார். அவர்கள் வாங்கி மெய்யன்போடு வணங்கி, விடைபெற்றுக் கொண்டு தத்தம் நகர்களை அடைந்து
அங்கே அவற்றை விடுத்தார்கள். அந்த மூன்று நதிகளுள் பிரமலோகத்தை அடைந்த கங்கை பகீரத
மன்னனுடைய தவத்தினால் பூமியில் மீண்டும் வர, சிவபெருமான் பின்னும் அதனைத்
திருமுடிமேல் தாங்கி, பின் இந்த நிலவுலகில்
செல்லும்படி விடுத்தார். அந்நதி சகரர்கள் அனைவரும் மேற்கதி பெற்று உய்யும்படி
அவர்கள் எலும்பில் பாய்ந்து சமுத்திரத்தில் பெருகியது. இதனை ஒழிந்த மற்றை இரு
நதிகளும் தாம் புகுந்த இடங்களில் இருந்தன. தமது அருட் சத்தியாகிய உமையம்மையாருடைய
திருக்கரத்தில் தோன்றிய கங்கா நதி உலகங்களை அழிக்காவண்ணம் திருவருள் மேலீட்டால்
சிவபெருமான் அதனைத் திருமுடியில் தரித்த வரலாறு இதுவே.
மலைமகளை
ஒருபாகம் வைத்தலுமே, மற்றுஒருத்தி
சலமுகத்தால்
அவன்சடையில் பாயும்அது என்னேடீ,
சலமுகத்தால்
அவன்சடையில் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே
புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ. --- திருவாசகம்.
வரைமகள்
ஒரு கூறு உடையவர் ---
திருக்கயிலாய மலையிலே, பரம கருணாநிதியாகிய சிவபெருமான் மாணிக்க மணிமண்டபத்தில் உமாதேவி சமேதராக
வீற்றிருந்தருளினார். திருமால் அயன் முதலிய வானவரும், திசை பாலகரும், சித்தர்களும், முத்தர்களும், வசுக்களும், இருடியரும்
ஒருசமயம் திருக்கயிலையை அடைந்து, திருநந்தி தேவர்பால் விடைபெற்று, உள்ளே சென்று அம்மையாரையும் பெருமானையும் கண்குளிரக் கண்டு, வாயார வாழ்த்தி, தலையாரக் கும்பிட்டு திருவருள் பெற்றுத் திரும்பினார்கள். முனிவரராகிய
பிருங்கி முனிவர் மட்டும் அம்மையைப் பணியாது சிவபெருமானை மட்டும் பணிந்து பரவி
வழிபட்டனர். உமையம்மையார் அதுகண்டு, "எம்பெருமானே! என்னைச் சிறிதும் மதியாத இம் முனிவன் யாவன்?” என்று வினவினார்.
சிவபெருமான் திருவிளையாடல் காரணமாக, "தேவீ! எல்லாம் சிவமயமே என்று தீவிரமாக நினைக்கின்ற தீரன் இவன். பிருங்கி முனிவன் இவன் பேர்" என்று
அருளிச் செய்தனர்.
இமயகுமாரியார், இருடியின்
செருக்கை அகற்றுவான் வேண்டி, அவரது உடம்பில் சத்தியின் கூறாகவுள்ள, உதிரம் தசை முதலியவை சிறிதும் இன்றிக் கவர்ந்தனர். பிருங்கி முனிவர்
சிவத்தின் கூறாகிய எலும்பும் நரம்பும் உடையவராய் நிற்க இயலாது தள்ளாடித்
தவித்தனர். கருணைக் கடலாகிய கண்ணுதற்பெருமான், எக்காலையும் தன்னை வணங்கும் அவருக்கு ஒரு காலை உதவினார். பிருங்கி முனிவர்
களிப்புற்று, மூன்று
காலுடன் சிவத்தை வணங்கித் துதித்துச் சென்றனர்.
உமையம்மையார் சிவத்துடன் பிரிவு அறக் கலந்து நிற்கும் பெற்றியைப்
பெறும்பொருட்டு, தவம்
புரிவதற்கு இறைவர்பால் அனுமதியைப் பெற்று, ஆனைமுகக் கடவுளும், ஆறுமுகக் கடவுளும், சத்தமாதர்களும் புடை சூழ, மேருகிரியின் சாரலை அடைந்து நெடுங்காலம் தவம் புரிந்தனர். அம்மையின்
தவத்திற்கு இரங்கிய அந்திவண்ணர், நந்திமேல் தோன்றி, காட்சி அளித்தனர். பார்வதியம்மை பரமனது பாதமலர் மீது வீழ்ந்து பலகாலும்
பணிந்து, கண்ணீர்
சொரிந்து, மிகவும்
பரிந்து துதி செய்து நின்றனர்.
இறைவர், "தவக்கொழுந்தே!
உனக்கு யாது வரம் வேண்டும், கேள்" என்று அருளினர். உமையம்மையார், "அருட்கடலே! தேவரீரது திருமேனியில் பிரிவு அற ஒன்றுபட்டுக் கலந்து இருக்கும்
வண்ணம் இடப்பாகம் தந்தருளல் வேண்டும்" என்று வேண்டினர். அவ்வண்ணமே அரனார் அம்மைக்கு இடப்பாகத்தைத்
தந்து, மாதொரு
கூறனாக நின்று, காட்சி
அளித்தனர்.
மதன்
ஆகமும் விழ விழி ஏவிய நாதர் ---
சிவபெருமான்
மன்மதனின் உடல் சாம்பலாகுமாறு, நெற்றிக் கண்ணை விழித்த
வரலாறு வருமாறு....
இந்திரன்
முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத
கமலங்களை வணங்கி நின்றார். திருமால், நான்முகனிடம், "உனது படைப்புத்
தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார்.
"எந்தாய்!
அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள்.
அவர்களை யான் நோக்கி, மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே
இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டு, நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு
நாங்கள் படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து
இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறி, பெருந்தவத்தைச்
செய்தனர். அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல்
தோன்றி,
'உங்கள்
விருப்பம் என்ன' என்று கேட்க, வேத உண்மையை
விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.
சிவபெருமான்
திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும்
நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை
அடையாமையால்,
மீண்டும்
அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு
உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின்
உட்கருத்துக்கள் ஆகிய சரியை, கிரியை, யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, ஞானபாதத்தை
விளக்க சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி, தானும் மோன நிலையில்
இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான்
ஒரு கணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள்
ஆயின. உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால்
அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது. இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல
வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும்
துன்பத்தை விளைவித்தனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும்
சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபன்மன் தேவர்களை ஏவல் கொண்டு ஒப்பாரும்
மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம்
அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில்
அமர்ந்துள்ளார். இனிச் செய்ய வேண்டியதொரு
உபாயத்தை எமக்கு நீர் தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.
இதைக்
கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய், அருவமும், உருவமும், உருவருவமும்
ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன்
ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றார், உலகில் எவர்தான்
இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"
ஆவிகள்
அனைத்தும் ஆகி,
அருவமாய்
உருவமாகி
மூவகை
இயற்கைத்து ஆன மூலகாரணம் ஆது ஆகும்
தேவர்கள்
தேவன் யோகின் செயல்முறை காட்டும் என்னில்,
ஏவர்கள்
காமம் கன்றித் தொன்மை போல் இருக்கும்நீரார்.
"சிவமூர்த்தியின்
பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன், ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி
மறந்து,
சிவமூர்த்தியை
நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம்
சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க
எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபன்மனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள்
அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு
இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், சிவபெருமானுடைய பேரருள்
பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவருக்கு உணர்வு காட்டும்
மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில்
இனிது நடைபெறும். உமாமகேசுவரன் பால் ஓரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள்
அழிந்து இன்பம் உண்டாக்கும். உலகம் எல்லாம் தொன்மை போல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம்
நிகழ வேண்டும் என்றால், உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு
மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன் மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக
நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க
ஒரு புத்திரனைத் தந்து அருள்வார். இதுவே
செய்யத்தக்கது" என்றார்.
அது
கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய
கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார்.
திருமால், "பிரமதேவரே! நீர்
உடனே மன்மதனை அழைத்து, சிவபெருமானிடம் அனுப்பு" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி
நகரை அடைந்து,
மன்மதனை
வருமாறு நினைந்தார். மாயவானகிய
திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை
நினைத்த காரணம் என்ன. அருள் புரிவீர்" என்று வேண்டி நின்றான்.
"மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை
உணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக்
காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.
கங்கையை
மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்
மங்கையை
மேவ,
நின்
வாளிகள் தூவி,
அங்கு
உறை மோனம் அகற்றினை, இன்னே
எங்கள்
பொருட்டினால் ஏகுதி என்றான்.
பிரமதேவர்
கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச்
சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருனாது யோக நிலையை அகற்றவேண்டும்
என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், பெருமான் அவனுடைய உடம்பை
எரிப்பது ஓர் அற்புதமா?
மன்மதன்
தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி, திருவைந்தெழுத்தை
மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.
"அண்ணலே!
தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால், பெரியோர்கள் உய்யும்
வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம்
எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு
அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில்
ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய
மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே
மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப்
புணருமாறும்,
திலோத்தமையைக்
கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை
நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும்
செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச்செய்து, இந்திரனுடைய உடல்
முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய
அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப்
புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப்
புணர்ந்து,
புதன்
என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய
தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக்
குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுது உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த
காசிபர்,
வசிட்டர், மரீசி முதலிய
முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத்
தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு
செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் யாரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை
வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும்
என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி.
சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம்
நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப்
போல அவரையும் எண்ணுவது கூடாது".
"சண்ட
மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில், வெண்ணீறு அணிந்த
விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர்
யாரும் இல்லை".
"திரிபுர
சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான்
தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?"
"தன்னையே
துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது
இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?"
"முன்
ஒரு நாள்,
தாங்களும், நாராயணமூர்த்தியும்
'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட
போது,
அங்கு
வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில்
ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா?"
"சலந்தரன்
ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"
"உமது
மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய
வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா?"
"திருப்பாற்கடலில்
தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் காத்து அருளியதும் மறந்து போயிற்றா?"
"உலகத்தை
எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது
சிவபெருமான் தானே!"
"தாருகா
வனத்தில்,
இருடிகள்
அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யனை, புலி, மான்,முயலகன், பாம்பு
முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள் உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும்
அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா?"
"சர்வ
சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால்
உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ?
இத்தகைய
பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு
வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."
இவ்வாறு
மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம்
ஆராய்ந்து,
பெரு
மூச்சு விட்டு,
மன்மதனைப்
பார்த்து,
"மன்மதனே!
ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடைய விண்ணவரிடம்
விளம்புவதைப் போல் என்னிடம் விளம்பினை. நீ உரைத்தது எல்லாம் உண்மையே. தனக்கு உவமை
இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை
அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவு
பெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய
செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே
ஆகும். ஆதலால்,
நீ
கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது
உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு யாராவது ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய
துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது
என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமமோ? ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத்
தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம் தானே வலிய வந்து துன்பத்தை
நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள
மறுத்து,
பின்னர்
நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை
விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும்
வந்து சேரும்.
ஏவர்
எனினும் இடர் உற்றனர் ஆகில்,
ஓவில்
குறை ஒன்று அளரேல், அது முடித்தற்கு
ஆவி
விடினும் அறனே,
மறுத்து
உளரேல்
பாவம்
அலது பழியும் ஒழியாதே.
பிறர்க்கு
உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி
முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது
முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ? பாற்கடலில்
எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால் நம்மைக்
காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது
நின்று,
தமது
வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ? பிறர்
பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று
வாழ்வார்கள். நாம் சூரபன்மனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி
கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்ச
பாணங்களுடன் செல்ல வேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று
பலவாக பிரமதேவர் கூறினார்.
அது
கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு
எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப்
பொழுதில் செய்வேன்" என்றான்.
பிரமதேவர்
அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய்.
நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன்.
இரண்டில் எது உனக்கு உடன்பாடு. ஆராய்ந்து
சொல்" என்றார்.
மன்மதனை
அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு
தெளிந்து,
பிரமதேவரைப்
பார்த்து,
"நாமகள்
நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின்
நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உமது சாபத்தால்
எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள
வேண்டாம்" என்றான்.
பிரமதேவர்
மனம் மகிழ்ந்து,
"நல்லது.
நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம். யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று
அறுப்பினார்.
மன்மதன், பிரமதேவரிடம்
விடைபெற்றுச் சென்று, நிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள்
போகவேண்டாம் என்று தடுக்க, மன்மதன் அவளைத் தேற்றி, மலர்க்கணைகள் நிறைந்த
அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த
மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய்
முழங்க,
மீனக்
கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும், சந்திரனைக் குடையாக
உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதி தேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான்
எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது, தேரை விட்டு
இறங்கி,
தன்னுடன்
வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும்
அம்பும் கொண்டு,
பெரும்
புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல்
ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும், விலங்குகள்
மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த
நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை
என்று தெளிந்து,
'உம்' என்று
நீங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள்
மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்தி தேவர்
முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட
நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு
விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, யார் வந்தாலும்
உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர
சத்தியால் பசுவைத் தடிந்து, வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை
எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை
எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே!
சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என்
உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை
நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு
திருநந்தி தேவர் விடை கொடுத்தார்.
மன்மதன்
திருநந்தி தேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல்
வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி
போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன்
மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன
காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர்
புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது
என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப்
போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன்.
விதியை யாரால் கடக்க முடியும். இதுவும் பெருமான் பெருங்கருணை போலும். இறைவன்
திருவருள் வழியே ஆகட்டும். இனி நான் வந்த
காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண்
ஏற்றி,
அரும்புக்
கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.
இது
நிற்க,
மனோவதி
நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி,
"மன்மதனுடைய
போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான். எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை
மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான் மேல்
படுதலும்,
பெருமான்
தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில்
இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை
திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது.
அருவரை
இருகூறு இட
---
கிரவுஞ்சம்
என்பது ஒரு பறவை. தாரகனுக்கு நண்பனாகிய ஒரு அரக்கன் மாயையில் வல்லவன். அவன்
கிரவுஞ்சறப் பறவை போன்று ஒரு மலை வடிவத்தை எடுத்து, தேவர்களையும் முனிவர்களையும்
தன்னிடத்தில் வழி உள்ளது போல் காட்டி, அவ்வழியாகச் செல்லுபவர்களின் அறிவை மயக்கி
அழிப்பான். அகத்திய முனிவரை ஒரு சமயம் அவ்வாறு அழிக்க முயன்றான். அவர் சினந்து,
அவன் எப்போதும் மலை வடிவாகவே இருக்குமாறும், முருகவேளின் வேலால் அழியுமாறும் சாபம்
கொடுத்துச் சென்றார். அதனால் அவன் மலை
உருவாகவை இருந்து முனிவர்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்தான். முருகப் பெருமானின் துணைவர்களாகிய இலட்சத்து
வன்பது வீரர்களையும் தன்னிடத்தில் வழி உள்ளது போலக் காட்டி, அவர்கள் உள்ளே
நுழைந்தவுடன், இடி மழை காற்று இருள் ஆகியவற்றை உண்டாக்கி அவர்களை மயக்கித்
துன்புறுத்தினான். அதனை உணர்ந்த ஆறுமுகப் பரம்பொருள், தமது திருக்கரத்தில் உள்ள
நூறுகோடி சூரிய ஒளி பொருந்திய வேலாயுதத்தை விடுத்து கிரவுஞ்ச மலையைத் தூளாக்கி
அழித்து, அதில் மயங்கி இருந்த தனது துணைவர்களை விடுவித்து அருளினார்.
மேலும்,
நக்கீர தேவரையும், தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது மனிதர்களையும் கற்கிமுகி
என்ற பூதம் மலைக்குள் சிறைப்படுத்தித் துன்புறுத்தியது. நக்கீரதேவர்
திருமுருகாற்றுப்படை என்னும் அற்புதப் பாடலைப் பாடியதும், முருகப் பெருமான் தனது வேற்படையை
விடுத்து, கற்கிமுகியையும், மலையையும் பிளந்து, அனைவரையும் விடுவித்து அருளினார்.
இதனால்,
முருகப் பெருமானுக்கு "வரை பக எறிந்த வள்ளல்" என்னும் திருநாமம்
வழங்குவதாயிற்று.
கிரவுஞ்சம்
என்பது உயிர்கள் பிறவிகள் தோறும் புரிந்து வரும் ஆகாமியம், பிராரத்தம், சஞ்சிதம்
என்னும் மூவினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானின் திருக்கரத்தில்
பொருந்தி உள்ள ஞானசத்தி ஆகிய வேற்படை, கிரவுஞ்ச மலையாகிய வினைத் தொகுதியை
அழித்தது. "வினை ஓட விடும் கதிர்வேல்" என்று கந்தர் அனுபூதியிலும்,
"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எல்லாம் மடிய நீடு தனிவேல் விடும் மடங்கல்
வேலா" என்று பழநித் திருப்புகழிலும், "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை
விட்டு, அன்று அசுரர் தண்டத்தைச் செற்று" என்று கச்சித் திருப்புகழிலும்,
சுரர்க்கு
வஞ்சம். செய் சூரன்
இள க்ரவுஞ்சம் தனோடு
துளக்க எழுந்து, அண்ட கோளம் ......
அளவாகத்
துரத்தி,
அன்று இந்த்ர லோகம்
அழித்தவன் பொன்றுமாறு,
சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!
என்று
திருப்பரங்குன்றத் திருப்புகழிலும், அடிகளார் அருளி உள்ளது காண்க.
இன்னம்
ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில்
வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங்
குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி
வேலை வாங்கத் தகும்.
என்னும்
திருமுருகாற்றுப்படை வெண்பாவும் சிந்தனைக்கு உரியது.
ஒரு
மயில் மேல் அவனியை வலமாய் வருவோனே ---
முருகப்
பெருமான் கனி காரணமாக உலகை வலம் வந்த அருட்செயலைப் பின்வரும் பாடல்களால்
அருணகிரிநாதப் பெருமான் அருளிக் காட்டினார்.
எதிர்
உற்ற அசுரர்கள் படைகொடு சண்டைக்கு
இடம் வைத்திட, அவர் குல முழுதும் பட்-
டிட, உக்கிரமொடு வெகுளிகள் பொங்க, ......கிரியாவும்
பொடிபட்டு
உதிரவும், விரிவு உறும் அண்டச்
சுவர் விட்டு அதிரவும், முகடு கிழிந்து,அப்
புறம் அப் பரவெளி கிடுகிடு எனும் சத்
......தமும்ஆகப்
பொருது, கையில் உள அயில்நிணம் உண்க,
குருதிப் புனல் எழு கடலினும் மிஞ்ச,
புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக்
...... குமரேசா! --- (புடவிக்கு) திருப்புகழ்.
“செகமுழுது
முன்பு தும்பி முகவனொடு தந்தைமுன்பு
திகிரிவலம் வந்த செம்பொன் மயில்வீரா. --- (அனைவரு) திருப்புகழ்
“இலகுகனி கடலைபய
றொடியல்பொரி யமுதுசெயும்
இலகுவெகு கடவிகட தடபாரமேருவுடன்
இகலிமுது
திகிரிகிரி நெரியவளை கடல்கதற
எழுபுவியை யொருநொடியில் வலமாக வோடுவதும்” --- சீர்பாத வகுப்பு.
“ஆர மதுரித்த கனி காரண
முதல் தமைய
னாருடன் உணக்கைபுரி தீமைக்காரனும்
ஆகமம்
விளைத்து அகில லோகமு நொடிப்புஅளவில்
ஆசையொடு சுற்றும்அதி வேகக்கரனும்” --- திருவேளைக்காரன் வகுப்பு.
“வாரணமுகன் தனது
தாதையை வலஞ்சுழல,
வாகைமயில் கொண்டுஉலகு சூழ்நொடி வரும் குமரன்” --- பூதவேதாள வகுப்பு.
சூரசம்மாரம்
முடிந்த பிறகு முருகப் பெருமான் மயில் மீது ஆரோகணித்து உலகை வலம் வந்த்தைப்
பின்வரும் பாடல்களில் அடிகளார் காட்டுவது அறிக.
திடுக்கிடக்
கடல், அசுரர்கள் முறிபட,
கொளுத்து இசைக் கிரி பொடிபட, சுடர் அயில்
திருத்தி விட்டு, ஒரு நொடியினில் வலம்வரும் ..மயில்வீரா!
---
திருத்தணிகைத் திருப்புகழ்.
..... ..... ..... விளங்கிய ...... மயில்ஏறி
அடையலர்கள்
மாள, ஒரு நிமிடந்தனில்
உலகை வலமாக நொடியினில் வந்து, உயர்
அழகிய சுவாமி மலையில் அமர்ந்துஅருள் ......
பெருமாளே.
--- சுவாமிமலைத்
திருப்புகழ்.
வரிசையொடு
ஒரு மா தினை தரு வனமே மருவி, ஒர் குறமாது அணை வேடா ---
வள்ளி
நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை
மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத்
தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப்
பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின்
திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை
மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார்.
வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும்
அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள்
புரிந்தார்.
வள்ளிநாயகிக்குத்
திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில்
வீரக்கழலும்,
கையில்
வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை
மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த
நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.
முருகப்பெருமான்
வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள
மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது
தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து
விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப்
போகும் வழி எது?
என்று
வினவினார்.
நாந்தகம்
அனைய உண்கண் நங்கை கேள், ஞாலம் தன்னில்
ஏந்திழையார்கட்கு
எல்லாம் இறைவியாய் இருக்கும்நின்னைப்
பூந்தினை
காக்க வைத்துப் போயினார், புளினர் ஆனோர்க்கு
ஆய்ந்திடும்
உணர்ச்சி ஒன்றும் அயன் படைத்திலன் கொல்
என்றான்.
வார்
இரும் கூந்தல் நல்லாய், மதி தளர்வேனுக்கு
உன்தன்
பேரினை
உரைத்தி, மற்று உன் பேரினை உரையாய்
என்னின்,
ஊரினை
உரைத்தி, ஊரும் உரைத்திட முடியாது
என்னில்
சீரிய
நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.
மொழிஒன்று
புகலாய் ஆயின், முறுவலும் புரியாய் ஆயின்,
விழிஒன்று
நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்
வழி
ஒன்று காட்டாய் ஆயின், மனமும் சற்று உருகாய்
ஆயின்
பழி
ஒன்று நின்பால் சூழும், பராமுகம் தவிர்தி என்றான்.
உலைப்படு
மெழுகது என்ன உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான்
போல வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு
மதியப் புத்தேள் கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு
தன்மைத்து அன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம்.
இவ்வாறு
எந்தை கந்தவேள், உலகநாயகியிடம்
உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள்
சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை
மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம்
நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது
வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.
நம்பி
சென்றதும்,
முருகப்
பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே
புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை
மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத்
தருகின்றேன். தாமதிக்காமல் வா"
என்றார். என்
அம்மை வள்ளிநாயகி நாணத்துடன்
நின்று,
"ஐயா, நீங்கு உலகம்
புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள்
என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக்
கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி
நடுங்கி,
"ஐயா!
எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி
உய்யும்" என்றார். உடனே, முருகப்
பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.
"நெருங்கு
மால் கொண்டு, அடவியில் வடிவு கரந்து போய், ஒரு குறமகள் பிறகு திரிந்த காமுக"
என்றும் "புனத்தில் புகுந்து, நர வடிவு உற்றுத் திரிந்து, மற மயிலைச் சுற்றி வந்த
பெருமாளே" என்றும் திருவண்ணாமலைத் திருப்புகழ்ப் பாடல்களில் அடிகளார்
அருளியது காண்க.
மலைகளில்
மகிழ்வாய்
---
உலகத்தைக்
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று ஐந்து வகைகளாகத் தமிழர்கள்
பிரித்தார்கள். மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் என்று பெயர் பெறும்.
ஒன்றும் வளராமல் இருக்கிற இடம் பாலை நிலம். ஒரே காடாக இருக்கிற பகுதி முல்லை நிலம்.
வேளாண்மை செய்யும் வயல்களை உடைய இடம் மருத நிலம். கடலைச் சார்ந்த இடம் நெய்தல் நிலம்.
ஒர் ஆறு மலையிலே உற்பத்தியாகி, ஒன்றும் விளையாத பாலைவனத்தின்
வழியே போய், காட்டுக்குள் நுழைந்து, மக்கள் வசிக்கின்ற ஊருக்குள் புகுந்து, கடைசியில் கடலோடு கலக்கிறது என்பதை நினைவுபடுத்திக்
கொண்டால் இந்த ஐந்து திணைகளையும் முறையாகத் தெரிந்து கொள்ளலாம்.
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய இந்த ஐந்து நிலங்களுக்கும்
உரியவர்களாக ஐந்து தெய்வங்களைத் தமிழர்கள் அமைத்து வழிபட்டார்கள். மலையும் மலையைச்
சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்துக்குத் தெய்வம் முருகன். புல் பூண்டு ஒன்றும் வளராமல்
இருக்கிற பாலை நிலத்துக்குத் தெய்வம் காளி. ஒரே காடாக இருக்கிற முல்லை நிலத்துக்குத்
தெய்வம் திருமால். மக்கள் வேளாண்மை செய்து வாழும் நிலமாகிய மருத நிலத்துக்குத் தெய்வம்
இந்திரன். கடலும் கடலைச் சார்ந்த இடமும் ஆகிய நெய்தல் நிலத்துக்குத் தெய்வம் வருணன்.
இந்த
ஐந்து நிலங்களிலேயும் முதல் நிலம் என்று சொல்வது குறிஞ்சி. முதல் என்பது வரிசையினால்
அல்ல; காலத்தினால் முதன்மையானது
மட்டுமல்ல பழமையானதும் ஆகும். உலகம்
தோன்றுவதற்கு முன்னால் எங்கே பார்த்தாலும் தண்ணீர் நிரம்பியிருந்தது. உலகம் தோன்றியபோது
முதலில் மலைதான் தன் தலையை நீட்டியது.
"கல்தோன்றி
மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி" என்றபடி, கல் தோன்றிய பிறகே மண், ஆறு, ஊர், கடற்கரை யாவும் தோன்றின. முதலில் தோன்றிய
மலைக்குத் தெய்வம் முருகன் என்று தமிழர் வைத்தனர். அதனால் முருகப் பெருமானை முதல்வனாகவும்,
மிகப் பழைய தெய்வமாகவும் அவர்கள் கொண்டிருந்தார்கள் என்று தெரியவரும். முருக வழிபாடு
பழங்காலந்தொட்டே தமிழ் நாட்டில் இருந்து வருகின்றது. "சேயோன் மேய மைவரை உலகமும்"
என்று தொல்காப்பியம் சொல்கிறது. சேயோன் என்பதற்குச் சிவந்த நிறம் உடையவன் என்று பொருள்.
சிவந்த நிறம் உடைய முருகன் மலையையும் மலையைச் சார்ந்த இடத்தையும் விரும்பி, அங்கே தங்கி இருக்கிறான்.
எனவே,
அடிகளார், "மலைகளில் மகிழ்வாய்" என்று முருகப் பெருமானை விளித்தனர்.
நல்
வடுகூர் மருவி வரு தவமுனிவோர் பெருமாளே ---
விரும்பித்
தவம் புரிகின்ற முனிவர்கள் வாழுகின்ற நல்ல வடுகூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி
உள்ளவர் முருகப் பெருமான்.
திரு
வடுகூர் என்னும் திருத்தலம், ஆண்டார்கோயில் என்றும் திருவாண்டார் கோயில் என்றும்
இக்காலத்தில் வழங்கப்படுகின்றது. இத்
திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள இறைவர்ள்ள, வடுகீசுவரர், வடுகநாதர், வடுகூர்நாதர். இறைவியார் திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கண்ணி. தல மரம் வன்னி.
தீர்த்தம் வாமதேவ தீர்த்தம்.
விழுப்புரம்
- பாண்டிச்சேரி இரயில் பாதையில் உள்ள சின்னபாபு சமுத்திரம் இரயில் நிலையத்தில்
இருந்து 4 கி.மீ. தொலைவில்
வடுகூர் உள்ளது. அருகில் உள்ள நகரங்கள் விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி.
விழுப்புரத்திலிருந்து கோலியனூர்,
கண்டமங்கலம்
வழியாக பாண்டிச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (NH45A) புதுவை மாநில எல்லைக்குள் நுழைந்து, திருபுவனை என்ற ஊரைக் கடந்து சிறிது
தூரம் சென்றால் சாலையோரத்தில் சற்று உட்புறமாக உள்ள திருவாண்டார் கோயிலை அடையலாம்.
காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தப்
பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளிய பெருமைக்கு உரியது.
இந்திய
தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இவ்வாலயத்திற்கு
இராஜகோபுரம் இல்லை. அழகிய சுற்றுமதில்களுடன் கிழக்கு நோக்கிய ஒரு நுழைவாயில்
மட்டுமே உள்ளது. நுழைவாயிலுக்கு வெளியே நந்தி ஒன்று காணப்படுகிறது. முகப்பு
வாயிலைக் கடந்ததும் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி மற்றும் 18 கால் மண்டபம் உள்ளது. இங்கு தெற்கு
நோக்கியவாறு இறைவி வடுவகிர்க்கன்னி அம்மை சந்நிதி உள்ளது. அம்பாள் நான்கு
கரங்களுடன் எழிலாகக் காட்சி தருகிறாள். இந்த மண்டபத்தைக் கடந்தவுடன் அர்த்த
மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்து மூலவர் கருவறை இருக்கிறது. மூலவர் ஒரு
சுயம்பு லிங்கம். வெளிப் பிரகாரத்தில் தென் திசையில் தனி விமானத்துடன் உள்ள
நால்வர் சந்நிதி, கன்னி மூலையில்
விநாயகர் சந்நிதி, நிருதி மூலையில்
வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகன் சந்நிதி ஆகியவை இருக்கின்றன.
இத்தலத்து
முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும் பன்னிரு திருக்கரங்களுடனும் மயில் மீது
அமர்ந்த கோலத்தில் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.
அர்த்த
மண்டபத்தையும், கருவறையையும்
உள்ளடக்கிய சுவர்களின் வெளிப்பிரகாரத்தில் கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன.
மேலும் தெற்கு நோக்கிய பிச்சாடனர்,
தட்சிணாமூர்த்தி, மேற்கு நோக்கிய இலிங்கோத்பவர், வடக்கு நோக்கிய துர்க்கை, அர்த்தநாரீசுவரர் ஆகியோரின் உருவங்கள்
உள்ளன. இக்கோவிலின் கருவறை விமானம் தஞ்சை பெரிய கோவில் பாணியில் அமைந்துள்ளது.
முண்டாசுரன்
என்பவன் சிவனை நோக்கி கடுந்தவம் செய்து அவரிடமிருந்து தேவாசுரர்களாலும், பிறரால் சாகாமலும் இருக்க வரங்கள்
பெற்றான். வரங்கள் பெற்ற முண்டாசுரன் தேவர்கள், பிரம்மா ஆகியோருடன் போர் புரிந்து
வெற்றி பெற்றான். பிரம்மா முதலியோர் சிவனிடம் சரணடைந்தனர். சிவனின் ஆணைப்படி
வடுகபைரவர் தோன்றி முண்டாசுரனை வதம் செய்கிறார். ஆகையால் இத்தலத்தில் சிவபெருமான்
வடுகநாதர் என்றும், வடுகபைரவர் அசுரனைக்
கொன்ற கொலைப்பழி தீர தவம் செய்து பேறு பெற்றதால் இத்தலம் வடுகூர் என்றும் பெயர்
பெற்றது. ஆண்டார் கோயில் என்பது கோயிலுக்குப் பெயர். கோயிலின் பெயரே பிற்காலத்தில்
ஊருக்குப் பெயராயிற்று. ஆண்டார் கோயில் என்பது இன்று வழக்கில் திருவாண்டார் கோயில்
என்றாயிற்று.
கார்த்திகை
அஷ்டமியில் பைரவருக்கு இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஞாயிறு தோறும்
பைரவருக்கு அபிடேகம் நடைபெறுகிறது.
கருத்துரை
சிவகுமாரரே!
எனது பாதக மலங்கள் அகல, அடியேன் தேவரீரது திருப்பாத கமலங்களைத் தொழுது
உய்ய அருள் புரிவீர்.
No comments:
Post a Comment