திரு அதிகை வீரட்டம் - 0750. விடமும் வேலன





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

விடமும் வேலன (திரு அதிகை வீரட்டம்)

முருகா!
தேவரீரது பன்னிரு திருத்தோள்களையும்
நாள்தோறும் இன்னிசையால் பாடி வழிபட அருள்வாய்.


தனன தானன தனதன தனதன
     தனன தானன தனதன தனதன
     தனன தானன தனதன தனதன ...... தனதான

 
விடமும் வேலன மலரன விழிகளு
     மிரத மேதரு மமுதெனு மொழிகளும்
     விரகி னாலெழு மிருதன வகைகளு ...... மிதமாடி

மிகவு மாண்மையு மெழினல முடையவர்
     வினையு மாவியு முடனிரு வலையிடை
     வெளியி லேபட விசிறிய விஷமிக ...... ளுடன்மேவா

இடரு றாதுனை நினைபவர் துணைகொள
     இனிமை போலெழு பிறவியெ னுவரியி
     னிடைகெ டாதினி யிருவினை யிழிவினி ....லிழியாதே

இசையி னாடொறு மிமையவர் முநிவர்கள்
     ககன பூபதி யிடர்கெட அருளிய
     இறைநி னாறிரு புயமென வுரைசெய ...... அருள்வாயே

படரு மார்பினி லிருபது புயமதொ
     டரிய மாமணி முடியொளி ரொருபது
     படியி லேவிழ வொருகணை தொடுபவ ...... ரிடமாராய்

பரவை யூடெரி பகழியை விடுபவர்
     பரவு வார்வினை கெடஅரு ளுதவியெ
     பரவு பால்கட லரவணை துயில்பவர் ...... மருகோனே

அடர வேவரு மசுரர்கள் குருதியை
     அரக ராவென அலகைகள் பலியுண
     அலையும் வேலையும் அலறிட எதிர்பொரு....மயில்வீரா

அமர ராதிய ரிடர்பட அடர்தரு
     கொடிய தானவர் திரிபுர மெரிசெய்த
     அதிகை மாநகர் மருவிய சசிமகள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


விடமும், வேல் அன, மலர் அன விழிகளும்,
     இரதமே தரும் அமுது எனும் மொழிகளும்,
     விரகினால் எழும் இருதன வகைகளும் ...... இதம்ஆடி

மிகவும் ஆண்மையும் எழில் நலம் உடையவர்
     வினையும் ஆவியும் உடன் இரு வலையிடை
     வெளியிலே பட விசிறிய விஷமிகள் ...... உடன்மேவா,

இடர் உறாது உனை நினைபவர் துணைகொள,
     இனிமை போல் எழு பிறவி என் உவரியின்
     இடை கெடாது, னி இருவினை இழிவினில் ....இழியாதே,

இசையின் நாள்தொறும் இமையவர் முநிவர்கள்
     ககன பூபதி அடர்கெட அருளிய
     இறை, நின் ஆறிஇரு புயம்என உரைசெய .....அருள்வாயே.

படரும் மார்பினில் இருபது புயம்அதொடு
     அரிய மாமணி முடி ஒளிர் இருபது
     படியிலே விழ, ஒருகணை தொடுபவர் .... இடம்ஆராய்

பரவை ஊடு எரி பகழியை விடுபவர்,
     பரவுவார் வினை கெட அருள் உதவியெ
     பரவு பால்கடல் அரவணை துயில்பவர்......மருகோனே!

அடரவே வரும் அசுரர்கள் குருதியை,
     அரகரா என அலகைகள் பலி உண,
     அலையும் வேலையும் அலறிட எதிர்பொரு....மயில்வீரா!

அமரர் ஆதியர் இடர்பட, அடர்தரு
     கொடிய தானவர் திரிபுரம் எரிசெய்த
     அதிகை மாநகர் மருவிய சசிமகள் ...... பெருமாளே.


பதவுரை

      படரும் மார்பினில் இருபது புயம் அதொடு --- படர்ந்து அகன்று உள்ள மார்பில் பொருந்தி உள்ள இருபது தோள்களோடு,

     அரிய மா மணிமுடி ஒளிர் ஒருபது --- அருமையான சிறந்த மணிகளால் ஆன, ஒளி விடுகின்ற மகுடங்கள் ஒரு பத்தும் அற்று,

     படியிலே விழ --- நிலத்திலே விழுமாறு,

     ஒரு கணை தொடுபவர் --- ஒப்பற்ற அம்பினைச் செலுத்தியவர்;

      இடம் ஆராய் --- இடத்தை ஆராய்ந்து,

     பரவை ஊடு எரி பகழியை விடுபவர் --- தக்க சமயம் பார்த்து கடலின் மீது நெருப்பைக் கக்குகின்ற அம்பினை விடுத்து அருளியவர்;

      பரவுவார் வினைகெட அருள் உதவியே --- தம்மை வழிபடும் அடியவர்களின் வினைத் தொகுதி கெடுமாறு அருள் புரிந்து,

     பரவு பால்கடல் அரவு அணை துயில்பவர் மருகோனே --- பரந்துள்ள திருப்பாற்கடலில் பாம்பு அணையில் அறிதுயில் கொள்ளுகின்ற திருமாலின் திருமருகரே!

      அடரவே வரும் அசுரர்கள் குருதியை அரகரா என அலகைகள் பலி உண்ண --- நெருங்கி வந்த அசுரர்களின் இரத்தப் பெருக்கை, "அரகரா" என்று கூவி பேய்கள் உணவாக உண்ணவும்,

     அலையும் வேலையும் அலறிட எதிர் பொரு மயில்வீரா --- அலைகள் வீசும் கடலும் அலறிடும்படியாக எதிருத்துப் பொரு புரிந்த மயில் வீர்ரே!

      அமரர் ஆதியர் இடர்பட --- தேவர்கள் முதலானோர் துன்புறும்படியாக

   அடர்தரு கொடிய தானவர் திரிபுரம் எரிசெய்த --- அடர்த்து வந்து போர் புரிந்த கொடுமை வாய்ந்த தானவர்களின் முப்புரங்களையும் திருக்கண் நோக்கால் எரித்துப் பொடியாக்கிய சிவபெருமான் திருக்கோயில் கொண்டுள்ள   

  அதிகை மாநகர் மருவிய ---- திரு அதிகை என்னும் பெருந் திருத்தலத்தை விரும்பியுள்ள,

     சசிமகள் பெருமாளே --- இந்திராணியாகிய சசியின் மகளான தேவயானை அம்மையின் தலைவரே!

     விடமும் --- விடத்தைப் போலக் கொல்லும் தன்மை உடையதும்,

   வேல் அன --- வேலைப் போன்று கூர்மை பொருந்தியதும்,

   மலர் அன விழிகளும் --- மலரைப் போன்று அழகும் ஒளியும் பொருந்தியதும் ஆகிய கண்களும்,

   இரதமே தரும் அமுது எனும் மொழிகளும் --- இனிமையைத் தரும் அமுதம் போன்ற இனிய பேச்சுக்களும்,  

     விரகினால் எழும் இருதன வகைகளும் --- பெருகி எடுப்பாக வளர்ந்துள்ள இரு மார்பகங்களும்,

    இதம் ஆடி --- இன்பத்தைத் தருவனவாகக் கொண்டு,

     மிகவும் ஆண்மையும் எழில்நலம் உடையவர் --- மிக்க ஆளுகைத் தன்மையும் எழில் நலமும் உடையவர்கள்,

    வினையும் ஆவியும் உடன் இருவலை இடை வெளியிலே பட விசிறிய விஷமிகளுடன் மேவா இடர் உறாது --- செயலும், உயிரும் ஒருங்கே சிக்கும்படியாக காம வலையினை வீசுகின்ற துர்க்குணம் படைத்தவர்களாகிய விலைமார்களிடம் பொருந்தி இடர்ப் படாமல்,

      உனை நினைபவர் துணை கொள்ள --- தேவரீரை நினைப்பவர்களின் துணையைக் கொள்ளவும்,

     இனிமை போல் எழுபிறவி எனும் உவரியின் இடை கெடாது --- இனிமை தருவது போல் தோன்றும் ஏழு பிறப்புக்கள் என்னும் கடலின் இடையில் விழுந்து அழியாமல்,

     இனி இருவினை இழிவினில் அழியாதே ---  இனியும் நல்வினை தீவினை என்னும் இருவினைகளின் வீழ்ச்சியில் பட்டு அழியாது,

      இமையவர் முநிவர்கள் ககன பூபதி இடர்கெட அருளிய இறை --- தேவர்கள், முனிவர்கள், வானுலக அரசனாகிய இந்திரன் ஆகியோரின் துன்பங்கள் கெடுமாறு அருள் புரிந்த இறைவரே!

      நின் ஆறிருபுயம் என நாள் தொறும் இசையில் உரை செய அருள்வாயே --- தேவரீரது பன்னிரு திருத்தோள்களை நாள்தோறும் போற்றிப் புகழ்ந்து, இசையோடு அருட்பாடல்களைப் பாடி வழிபட அருள் புரிவீராக.


பொழிப்புரை

     படர்ந்து அகன்று உள்ள மார்பில் பொருந்தி உள்ள இருபது தோள்களோடு, அருமையான சிறந்த மணிகளால் ஆன, ஒளி விடுகின்ற மகுடங்கள் ஒரு பத்தும் அற்று நிலத்திலே விழுமாறு, ஒப்பற்ற அம்பினைச் செலுத்தியவர்; இடத்தை ஆராய்ந்து, தக்க சமயம் பார்த்து கடலின் மீது நெருப்பைக் கக்குகின்ற அம்பினை விடுத்து அருளியவர்; தம்மை வழிபடும் அடியவர்களின் வினைத் தொகுதி கெடுமாறு அருள் புரிந்து, பரந்துள்ள திருப்பாற்கடலில் பாம்பு அணையில் அறிதுயில் கொள்ளுகின்ற திருமாலின் திருமருகரே!

     நெருங்கி வந்த அசுரர்களின் இரத்தப் பெருக்கை, "அரகரா" என்று கூவி பேய்கள் உணவாக உண்ணவும், அலைகள் வீசும் கடலும் அலறிடும்படியாக எதிருத்துப் பொரு புரிந்த மயில் வீர்ரே!

         தேவர்கள் முதலானோர் துன்புறும்படியாக அடர்த்து வந்து போர் புரிந்த கொடுமை வாய்ந்த தானவர்களின் முப்புரங்களையும் திருக்கண் நோக்கால் எரித்துப் பொடியாக்கிய சிவபெருமான் திருக்கோயில் கொண்டுள்ள திரு அதிகை என்னும் பெருந் திருத்தலத்தை விரும்பியுள்ள, இந்திராணியின் மகளான தேவயானை அம்மையின் தலைவரே!

         விடத்தைப் போலக் கொல்லும் தன்மை உடையதும், வேலைப் போன்று கூர்மை பொருந்தியதும், மலரைப் போன்று அழகும் ஒளியும் பொருந்தியதும் ஆகிய கண்களும்; இனிமையைத் தரும் அமுதம் போன்ற இனிய பேச்சுக்களும்;   பெருகி எடுப்பாக வளர்ந்துள்ள இரு மார்பகங்களும் இன்பத்தைத் தருவனவாகக் கொண்டு மிக்க ஆளுகைத் தன்மையும் எழில் நலமும் உடையவர்கள். செயலும், உயிரும் ஒருங்கே சிக்கும்படியாக காம வலையினை வீசுகின்ற துர்க்குணம் படைத்தவர்களாகிய விலைமார்களிடம் பொருந்தி இடர்ப் படாமல், தேவரீரை நினைப்பவர்களின் துணையைக் கொள்ளவும், இனிமை தருவது போல் தோன்றும் ஏழு பிறப்புக்கள் என்னும் கடலின் இடையில் விழுந்து அழியாமல், இனியும் நல்வினை தீவினை என்னும் இருவினைகளின் வீழ்ச்சியில் பட்டு அழியாமல், தேவர்கள், முனிவர்கள், வானுலக அரசனாகிய இந்திரன் ஆகியோரின் துன்பங்கள் கெடுமாறு அருள் புரிந்த இறைவரே! தேவரீரது பன்னிரு திருத்தோள்களை நாள்தோறும் போற்றிப் புகழ்ந்து, இசையோடு அருட்பாடல்களைப் பாடி வழிபட அருள் புரிவீராக.


விரிவுரை

விடமும், வேல் அன, மலர் அன விழிகளும் ---

அன்ன என்னும் சொல் இடைக் குறைந்து அன என்று இரு இடங்களிலும் வந்தது.

விடம் உண்டாரைக் கொல்லும் தன்மை உடையது.
பெண்களின் கண்கள் கண்டாரைக் கொல்லும் தன்மை உடையன.

"வெல்" என்னும் சொல் "வேல்" என நீண்டது.

வேல் கூர்மை பொருந்தியது. பகைவரை வெல்வது. செலுத்தக் கூடிய ஆயுதமாகிய அத்திரம்.

பெண்களின் கண்கள் கூர்மையான பார்வையை உடையவை.  இருந்த இடத்தில் இருந்தே ஆடவரின் இதயத்தை வெல்லுபவை.

மலரைப் போன்று அழகும் ஒளியும் படைத்தவை பெண்களின் கண்கள்.

"ஆலம் வைத்த விழி" என்றார் திருவானைக்காத் திருப்புகழில். "ஆலம் ஏற்ற விழியினர்" என்றார் பிறிதொரு திருப்புகழில்.

"தண்ணீர் பீளை தவிராது ஒழுகும் கண்ணைப் பார்த்துக் கழுநீர்" என்று திங்கள் சடையோன் திருவருள் இல்லார் கருதுவர் என்கின்றார் பட்டினத்து அடிகள்.

ஆனால், அருளாளர்களுக்கு, அந்தக் கண்கள் தெய்வத் தன்மையோடு தோன்றும். திருமயிலையில், திருஞானசம்பந்தப் பெருமான், இறையருளால் எலும்பைப் பெண்ணாக்கினார். அப்படி வருவாகி வந்த பூம்பாவையாரின் கண்கள் எப்படி விளங்கின? தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடுவதைப் பாருங்கள்...

மண்ணிய மணியின் செய்ய
         வளர் ஒளி மேனியாள் தன்
கண் இணை வனப்புக் காணில்,
         காமரு வதனத் திங்கள்
தண்ணளி விரிந்த சோதி
         வெள்ளத்தில், தகைவின் நீள
ஒள் நிறக் கரிய செய்ய
         கயல் இரண்டு ஒத்து உலாவ.

கடைந்தெடுத்த மாணிக்கத்தினை விடவும் செம்மையான ஒளிபொருந்திய மேனியைக் கொண்ட பூம்பாவையாரின் இரண்டு கண்களின் அழகானது, அழகு மிக்க முகமான சந்திரனின் குளிர்ந்த கதிர்கள் விரிந்த நிலவொளியான வெள்ளத்தில் தடுக்கப்படாத நீளமுடைய ஒள்ளிய நிறமும் கருமையும் செம்மையும் கலந்த இரண்டு கயல் மீன்களைப் போன்று உலாவின என்கின்றார்.

மணிவாசகப் பெருமான் தான் கண்ட சிவமாகிய தலைவியின் கண்களைக் குறித்துத் திருக்கோவையாரில் பாடி இருப்பதைக் காண்போம்..

ஈசற்கு யான் வைத்த அன்பின்
    அகன்று, அவன் வாங்கிய என்
பாசத்தில் கார் என்று, அவன் தில்லை-
    யின் ஒளி போன்று, அவன் தோள்
பூசு அத் திருநீறு என வெளுத்து,
    ஆங்கு அவன் பூங்கழல் யாம்
பேசு அத் திருவார்த்தையில் பெரு-
    நீளம் பெருங்கண்களே.

இதன் பொருள் --- தலைவியின் கண்களானவை, ஈசனிடத்தில் தான் வைத்த அன்பினைப் போல அகன்று இருந்தது. இறைவனால் என்னிடத்தில் இருந்து வாங்கப் பெற்ற ஆணவமலம் போல் கருமை நிறம் கொண்டு இருந்தது. அவனுடைய தில்லையைப் போல ஒளி பொருந்தி இருந்தது. அவனுடைய திருத்தோள்களில் பூசப்பெற்றுள்ள திருநீறு போல வெளுத்து இருந்தது. அவனுடைய திருவடித் தாமரைகளைப் பற்றி நான் பேசுகின்ற திருவார்த்தைகளைப் போல நீண்டு இருந்தது.

இது ஆன்மாவின் நோக்கு எல்லாம் சிவமயமாய் இருப்பதைக் காட்டி நிற்கின்றது.


இரதமே தரும் அமுது எனும் மொழிகளும் ---

"இரதமான தேன்ஊறல் அதரமான மாமாதர்" என்றார் சீகாழித் திருப்பகழில். "இரதமான வாய் ஊறல்" என்றார் பொதுத் திருப்புகழில்.

இரதம் இனிமையைத் தருவது. காமுகர்க்குப் பெண்களுடைய அதரபானம் தேன்போல் தித்திக்கும். அவர்களுடைய பணிவான இதமான மொழிகளும் தித்திக்கும்.

பாலொடு தேன்கலந்த அற்றே, பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர்.                       ---  திருக்குறள்.


மிகவும் ஆண்மையும் எழில் நலம் உடையவர் ---

பெண்கள் இயல்பாகவே உடலால் மென்மை ஆனவர்கள். இழகு மிக்கவர்கள். என்றாலும் உள்ளத்தால் வலிமை மிக்கவர்கள்.  தமது உடல் அழகால், இனிய பேச்சால், இதமான செயல்களால் யாருடைய உள்ளத்தையும் உடைக்கும் ஆற்றல் படைத்தவர்கள்.


வினையும் ஆவியும் உடன் இருவலை இடை வெளியிலே பட விசிறிய விஷமிகளுடன் மேவா இடர் உறாது ---

முற்றத் துறந்தவர்களின் உள்ளத்தையே வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் செயல் கொண்டவர்கள் விலைமாதர்கள். ஆடவர்களின் செயலும் உள்ளமும் செயலற்றுத் தாம் வீசிய காம வலையில் சிக்க வைப்பதில் தேர்ந்தவர்கள் விலைமாதர்கள்.

விஷம் என்பது உண்டவரை உடனே கொல்லும் தன்மை வாய்ந்தது. விலைமாதர் விஷம் போன்றவர்கள். தம்மைச் சார்ந்தாரைச் சிறிது சிறிதாகக் கொல்லுபவர்கள். அதனால் அவர்களை விஷமிகள் என்றார் அடிகளார்.

விலைமகளிர் தமது கடைக்கண்ணாகிய பெரிய வலையை வீசி இளைஞர்களுடைய மனமாகிய பறவைகளைப் பிடிப்பர்.

      திண்ணிய நெஞ்சப் பறவை சிக்கக் குழல் காட்டில்
   கண்ணி வைப்பார் மாயம் கடக்கும் நாள் எந்நாளோ”
                                                                                             --- தாயுமானார்.

"நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற அருள்வாயே" என்றார் திருப்பங்குன்றத் திருப்புகழில்.

விடத்தைப்போல் தம்மை அடைந்தாரைப் பொருள் பறித்துக் கொல்லும் விலைமகளிரது துன்பத்தினின்றும் நீங்கி இன்பமுற வேண்டும்.

இதனைச் சிதம்பர சுவாமிகள் திருவாக்காலுமுணர்க.

மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,
பீதிதரும் அல்குல் பெருநகரம், - ஓதில்அதில்
வீழ்ந்தோர்க்கும் ஏற விரகு இல்லை, போரூரைத்
தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.
  
அரிசன வாடைச் சேர்வை குளித்து,
     பலவித கோலச் சேலை உடுத்திட்டு,
     அலர்குழல் ஓதிக் கோதி முடித்து, ...... சுருளோடே
அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,
     திருநுதல் நீவி, பாளித பொட்டு இட்டு,
     அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு, ...... அலர்வேளின்

சுரத விநோதப் பார்வை மை இட்டு,
     தருண கலாரத் தோடை தரித்து,
     தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு, .....இளைஞோர்மார்,
துறவினர் சோரச் சோர நகைத்து,
     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்
     துயர் அறவே, பொன் பாதம் எனக்குத் ...... தருவாயே.
                                                                                                ---  பழநித் திருப்புகழ்.

கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்பு உடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே! துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்து, பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்து, தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே?    
                                                                                  ---  கந்தர் அலங்காரம்.

கேட்டையே தருகின்ற இந்த விலைமாதர் இன்பத்தில் வைத்த மனத்தை மாற்றி, இறைவன் திருவடியில் வைக்க வேண்டும். எவ்வளவு புகழ்ந்தாலும் பொருள் இல்லாவதரைப் பொருந்த மனம் இல்லாதவர்கள் விலைமாதர்கள். விலைமாதரைப் பொருந்த மனம் மட்டும் இருந்தால் போதாது. மிக்க பொருளும் வேண்டும். பொருளின் அளவுக்கு ஏற்ப இன்பத்தை வழங்குவார்கள். பொருள் இல்லை என்றால், வெகுநாள் பழகியவரையும் ஓடஓட விரட்டும் தந்திரத்தை உடையவர்கள். இவர்களோடு பழகினால் பாழான நரகமே வாய்க்கும்.


இமையவர் முநிவர்கள் ககன பூபதி இடர்கெட அருளிய இறை,  உனை நினைபவர் துணை கொள்ள ---

இறைவன் திருவடியில் மனமானது பொருந்தினால் மட்டும் போதும். பொருள் வேண்டுவதில்லை. மலர்களை இட்டுத்தான் வழிபட வேண்டும் என்பது இல்லை. நொச்சி ஆயினும், கரந்தை ஆயினும் பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர் கரு இடைப் புகாமல் காத்து அருள் புரியும் இடைமருதன் இறைவன்.

"பத்தியுடன் நின்று பத்தி செயும் அன்பர் பத்திரம் அணிந்த கழலோனே" என்கின்றார் அருணை அடிகள் பிறிதொரு திருப்புகழில்.

போதும் பெறாவிடில் பச்சிலை உண்டு, புனல் உண்டு, எங்கும்
ஏதும் பெறாவிடில் நெஞ்சு உண்டு அன்றே, இணையாகச் செப்பும்
சூதும் பெறாமுலை பங்கர்,தென் தோணி புரேசர்,வண்டின்
தாதும் பெறாத அடித் தாமரை சென்று சார்வதற்கே.  ---  பட்டினத்தார்.

யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை;
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய்உறை;
யாவர்க்கும் ஆம் உண்ணும் போதொரு கைப்பிடி;
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே.  --- திருமந்திரம்.

பத்தி அடியவர் பச்சிலை இடினும்
முத்தி கொடுத்து முன் நின்று அருளித்
திகழ்ந்து உளது ஒருபால் திருவடி....  ---  பதினோராம் திருமுறை.

பத்தியாகிப் பணைத்தமெய் அன்பொடு
நொச்சி ஆயினும் கரந்தை ஆயினும்
பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர் 
கரு இடைப் புகாமல் காத்து அருள் புரியும்
திருவிடை மருத, திரிபுராந்தக,..      ---  பதினோராம் திருமுறை.


கல்லால் எறிந்தும், கை வில்லால் அடித்தும், கனிமதுரச்
சொல்லால் துதித்தும், நல் பச்சிலை தூவியும், தொண்டர் இனம்
எல்லாம் பிழைத்தனர், அன்பு அற்ற நான் இனி ஏது செய்வேன்?
கொல்லா விரதியர் நேர் நின்ற முக்கண் குருமணியே.

எல்லாம் உதவும் உனை ஒன்றில் பாவனையேனும் செய்து,
புல் ஆயினும், ஒரு பச்சிலை ஆயினும் போட்டு இறைஞ்சி
நில்லேன், நல் யோக நெறியும் செயேன், அருள் நீதி ஒன்றும்
கல்லேன், எவ்வாறு, பரமே! பரகதி காண்பதுவே.             ---  தாயுமானார்.

"எவன் பத்தியோடு, பயனை எதிர்பார்க்காமல், எனக்கு இலை, மலர், பழம், நீர் முதலிவற்றை அர்ப்பணம் செய்கின்றானோ, அன்பு நிறைந்த அந்த அடியவன் அளித்த காணிக்கையான இலை, மலர் முதலியவற்றை நான் சகுண சொருபமாக வெளிப்பட்டு அன்புடன் அருந்துகின்றேன்" என்று பகவத் கீதை ஒன்பதாம் அத்தியாயத்தில் 26 - ஆவது சுலோகத்தில் கூறப்பட்டு இருப்பதும் எண்ணுதற்கு உரியது.

பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி,
மெச்சி, சிவபத வீடு அருள்பவனை,
முத்தி நாதனை, மூவா முதல்வனை,
அண்டர் அண்டமும் அனைத்து உள புவனமும்
கண்ட அண்ணலை, கச்சியில் கடவுளை,
ஏக நானை, இணை அடி இறைஞ்சுமின்,
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே...

என்கின்றார் பட்டினத்து அடிகள். ஆகவே, போகத்தைத் தருகின்ற மாதரைப் பொருந்த நாடும் மனத்தை, அழியாத வீட்டு இன்பத்தை அருளுகின்ற இறைவன் திருவடியில் நாட்ட வேண்டும்.

மாதர் மேல் வைத்த அன்பினை ஒரு இலட்சம் கூறு செய்து, அதில் ஒரு கூறு மட்டுமே கூட இறைவன் திருவடியில் வைத்தால் போதும். அவர்க்கு இகபர நலன்களை அருள வல்லவன் இறைனவன் என்கின்றார் திருமாளிகைத் தேவர்.

தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த
    தயாவை நூறு ஆயிரம் கூறு இட்டு,
அத்தில் அங்கு ஒரு கூறு உன்கண் வைத்தவருக்கு
    அமருலகு அளிக்கும் நின் பெருமை,
பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும்
    பிழைத்தவை பொறுத்து அருள் செய்யும்
கைத்தலம் அடியேன் சென்னிமேல் வைத்த கங்கை
    கொண்ட சோளேச்சரத்தானே.         --- திருவிசைப்பா.

தொழும்பினரை உடையவர்கள் ஆள்வது உறு
     கடன் என்னும் தொல்லை மாற்றம்,
செழும்பவள இதழ்மடவார் திறத்து அழுந்தும்
     எனது உளத்தைத் திருப்பி, தன் சீர்க்
கொழும்புகழின் இனிது அழுத்திப் புதுக்கி அருள்
     தணிகை வரைக் குமரன் பாதம்
தழும்பு படப் பலகாலும் சாற்றுவது அல்-
     லால் பிறர் சீர் சாற்றாது என் நா.  ---  தணிகைப் புராணம்.

நெறிதரு குழலை அறல் என்பர்கள்,
நிழல் எழு மதியம் நுதல் என்பர்கள்,
நிலவினும் வெளிது நகை என்பர்கள்,
நிறம்வரு கலசம் முலை என்பர்கள்,
அறிகுவது அரிது இவ் இடை என்பர்கள்,
அடிஇணை கமல மலர் என்பர்கள்,
அவயவம் இனைய மடமங்கையர்
அழகியர், அமையும், அவர் என் செய?

மறிமழு உடைய கரன் என்கிலர்,
மறலியை முனியும் அரன் என்கிலர்,
மதிபொதி சடில தரன் என்கிலர்,
மலைமகள் மருவு புயன் என்கிலர்,
செறிபொழில் நிலவு தி(ல்)லை என்கிலர்,
திருநடம் நவிலும் இறை என்கிலர்,
சிவகதி அருளும் அரசு என்கிலர்,
சிலர் நரகு உறுவர் அறிவு இன்றியே.        --- கோயில் நான்மணி மாலை.

சொல் பல பேசித் துதித்து, நீங்கள்
நச்சிச் செல்லும் நரக வாயில்
தோலும் இறைச்சியுந் துதைந்து சீப் பாயும்

காமப் பாழி, கருவிளை கழனி,
தூமைக் கடவழி, தொளைபெறு வாயில்
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி,
மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்,
நச்சிக் காமுகர நாய்தான் என்றும்

இச்சித்து இருக்கும் இடைகழி வாயில்;
திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி,
புண் இது என்று புடவையை மூடி
உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண்,

மால்கொண்ட அறியா மாந்தர் புகும் வழி,
நோய்கொண்டு ஒழியா நுண்ணியர் போம்வழி,
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி,
செருக்கிய காமுகர் சேரும் சிறுகுழி,
பெண்ணுமு ஆணும் பிறக்கும் பெருவழி,

மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம் சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்,
இத்தை நீங்கள் இனிது என வேண்டா,
பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி
மெச்சிச் சிவபத வீடு அருள்பவனை,

முத்தி நாதனை, மூவா முதல்வனை,
அண்டர் அண்டமும் அனைத்து உள புவனமும்
கண்ட அண்ணலை, கச்சியில் கடவுளை,
ஏக நாதனை, இணை அடி இறைஞ்சுமின்,
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே!     ---  பட்டினத்தார்.

இவ்வாறான அருட்பாடல்களின் கருத்தை உள்ளத்தில் பதித்து, உலக இன்பங்களைக் கருதாது, சிறு தெய்வங்களையும் கருதாது அழியாத பதத்தில் வைத்து அருள் புரியும் பரம்பொருளையே வணங்குதல் வேண்டும். புறத்தில் தொழுவதோடு நில்லாமல், உள்ளத்தில் இருத்தி, ஒருபோதும் மறவாமல் வணங்குதல் வேண்டும்.

அத்தகைய அடியார்கள் உள்ளத்தில் இறைவன் எழுந்தருளி இருப்பான். அந்த அடியார்களைத் துணையாகக் கொள்ளவேண்டும் என்கின்றார் அடிகளார்.

கொந்து வார் குரவு அடியினும், அடியவர்
     சிந்தை வாரிஜ நடுவினும், நெறிபல
     கொண்ட வேத நல் முடியினும் மருவிய ....குருநாதா!

என்றார் பிறிதொரு திருப்புகழில்.

வாரி என்பது தண்ணீர். ஜம் என்னும் சொல்லுக்குப் பிறப்பு என்று பொருள். தண்ணீரில் பிறப்பதனால் தாமரைக்கு "வாரிஜம்" என்று ஒரு பேர் உண்டு. இடையறாது நினைந்து நினைந்து உருகும் அடியவர் உள்ளக்கமல மிசை இறைனவன் எழுந்தருளியிருப்பன்.
அடியவர்கள் எப்போதும் இறைவன் திருவடியை மறவாதிருக்கும் பெற்றியுடையவர்கள். இந்த நிலையை அவர்கள் ஆண்டவனிடமும் வேண்டிப் பெறுவார்கள். “மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்” என்று வேண்டுகின்றார் காரைக்காலம்மையார். “புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவாதிருக்க வரந்தரல் வேண்டும்” என்கிறார் அப்பர்.

எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும்
     எய்துக, பிறப்பில் இனிநான்
எய்தாமை எய்துகினும் எய்திடுக, இருமையினும்
     இன்பம் எய்தினும் எய்துக,
வழுவகைத் துன்பமே வந்திடினும் வருக,
     மிகுவாழ்வு வந்திடினும் வருக,
வறுமை வருகினும் வருக, மதிவரினும் வருக, அவ
     மதிவரினும் வருக, உயர்வோடு
இழிவகைத்து உலகின் மற்று எதுவரினும் வருக, அலது
     எது போகினும் போக, நின்
இணைஅடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம்
     எனக்கு அடைதல் வேண்டும் அரசே,
கழிவகைப் பவரோகம் நீக்கும் நல்அருள் என்னும்
     கதிமருந்து உதவு நிதியே
கனகஅம் பலநாத கருணைஅம் கணபோத
     கமலகுஞ் சிதபாதனே.

பெருமானே! தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற இந்த ஏழுவகைப் பிறவிகளில் எந்தப் பிறவியிலேனும் அடியேன் பிறக்கத் தயார். அது பற்றிச் சிறியேனுக்குக் கவலையில்லை.

ஒருவேளை பிறவாமை வந்தாலும் வரட்டும். இம்மையிலும் மறுமையில் இன்பமே வருவதேனும் வரட்டும். அல்லது துன்பமே வருவதாயினும் சரி; அதுபற்றியும் அடியேனுக்குக் கவலையில்லை.

சிறந்த வாழ்வு வந்தாலும் வரட்டும்; பொல்லாத வறுமை வருவதாயினும் நன்றே;

எல்லோரும் என்னை நன்கு மதிப்பதாயினும் மதிக்கட்டும்; அல்லது சென்ற சென்ற இடமெல்லாம் கல்லை விட்டு எறிந்து கருப்புக்கொடி காட்டி `வராதே! திரும்பிப்போ’ என்று அவமதி புரிந்தாலும் புரியட்டும்.

உயர்வும் தாழ்வும் கலந்துள்ள இந்த உலகிலே மற்று எது வந்தாலும் வரட்டும்; எது போனாலும் போகட்டும்.

இறைவனே! எனக்கு இவைகளால் யாதும் கவலையில்லை.

ஒரே ஒரு வரம் உன் பால் யாசிக்கின்றேன்.

உனது இரண்டு சரணாரவிந்தங்களையும் சிறியேன் மறவாமல் இருக்கின்ற மனம் ஒன்றுமட்டும் வேண்டும். அந்த வரத்தை வழங்கியருளும்” என்று வடலூர் வள்ளல் வேண்டுகின்றார். என்ன அழகிய வரம்?

         நாரதர் ஒரு சமயம் முருகனை வேண்டித் தவம் புரிந்தனர். முருகவேள் தோன்றி, “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டருளினார். நாரதர், “ஐயனே! உன் திருவடியை மறவாத மனம் வேண்டும்” என்றார். முருகன் அந்த வரத்தை நல்கி விட்டு, “இன்னும் ஏதாவது வரம் கேள், தருகிறேன்” என்றார். நாரதர் “பெருமானே! இன்னொரு வரத்தைக் கேட்கின்ற கெட்ட புத்தி வராமல் இருக்க வேண்டும்” என்று கேட்டார்.

இமையவர் முடித்தொகையும் வனசரர் பொருப்பும்எனது
    இதயமும் மணக்கும்இரு பாதச்சரோருகனும்   --- வேடிச்சி காவலன் வகுப்பு

மருவும் அடியார்கள் மனதில் விளையாடு
    மரகத மயூரப்  பெருமான் காண்                       --- (திருமகளுலாவு) திருப்புகழ்.    
                               
துரியநிலையே கண்ட முத்தர் இதயா கமலம்
     அதனில் விளையா நின்ற புத்தமிர்த போதசுக
         சுயபடிக மாஇன்ப பத்மபதம்                      --- (சுருதிமுடி) திருப்புகழ்.         
                                 
மறவாத சிந்தை அடியார்கள் பங்கில்
     வரு தேவ சம்பு ...... தருபாலா!                     ---  (விதிபோலும்) திருப்புகழ்.

அடியார்களுக்கு நடமாடக் கோயில்' என்னும் பெயர் உள்ளது.
பின்வரும் திருமுறைப்  பாடல்களைக் கருத்தில் கொள்ளுதல் நலம் பயக்கும்.

காடு நீடு அது உறப் பலகத்தனே
         "காதலால் நினைவார் தம் அகத்தனே"
பாடு பேயொடு பூதம் மசிக்கவே
         பல்பிணத்தசை நாடி அசிக்கவே
நீடுமாநடம் ஆடவி ருப்பனே
         நின்னடித்தொழ நாளும் இருப்பனே
ஆடல்நீள்சடை மேவிய அப்பனே
          ஆலவாயினின் மேவிய அப்பனே.   --- திருஞானசம்பந்தர்.

பிறைபெற்ற சடைஅண்ணல் பெடைவண்டு ஆலும்
நறைபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த
கறைபெற்ற மிடற்று அண்ணல் கள்ளில்  மேயான்
"நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு உளானே".--- திருஞானசம்பந்தர்.
  
நாகம்வைத்த முடியான், "அடி கைதொழுது ஏத்தும் அடியார்கள்
ஆகம்வைத்த பெருமான்" பிரமன்னொடு மாலும்தொழுது ஏத்த
ஏகம்வைத்த எரியாய் மிகஓங்கிய எம்மான் இடம்போலும்
போகம்வைத்த பொழிலின் நிழலால் மதுஆரும் புகலூரே.  --- திருஞானசம்பந்தர்.

போகமும் இன்பமும் ஆகிப் "போற்றி என்பார் அவர் தங்கள்
ஆகம் உறைவிடம் ஆக அமர்ந்தவர்" கொன்றையி னோடும்
நாகமும் திங்களும் சூடி நல்நுதன் மங்கைதன் மேனிப்
பாகம் உகந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே.          ---  திருஞானசம்பந்தர்.

"காவிய நல்துவர் ஆடையினார் கடுநோன்பு மேல்கொள்ளும்
பாவிகள் சொல்லைப் பயின்றுஅறியாப் பழந்தொண்டர் உள்உருக
ஆவியுள் நின்றுஅருள் செய்யவல்ல அழகர்" இடம்போலும்
வாவியில் நீர்வயல் வாய்ப்புஉடைய வலம்புர நல்நகரே.   ---  திருஞானசம்பந்தர்.

"அகன்அமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்று
         ஐம்புலனும் அடக்கிஞானம்
புகல்உடையோர் தம்உள்ளப் புண்டரிகத்து
         உள்இருக்கும் புராணர்" கோயில்
தகவுஉடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
         கம் திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரிஅட்ட
         மணம்செய்யும் மிழலையாமே.       --- திருஞானசம்பந்தர்.

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
"நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்",
அனைத்து வேடம் ஆம் அம்பலக் கூத்தனை,
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ? ---  அப்பர்.


இனிமை போல் எழுபிறவி எனும் உவரியின் இடை கெடாது ---

முன் பிறவியில் இழைக்கப்பட்ட வினைகளால், இப் பிறவியும், இப் பிறவியில் இழைக்கப்போகும் வினைகளால், இனி வரும் பிறவியும், ஆக, தொன்று தொட்டு, காரண காரியத் தொடர்ச்சி உடையதாய், பிறவியானது முடிவில்லாமல் வருவதால், அது "பிறவிப் பெருங்கடல்" எனப்பட்டது.

இன்பத்தைத் தருவது போல் அமைந்து துன்பத்தையே தருவது எழுபிறவி என்னும் கடல் என்று அடிகளார் பொருந்தக் கூறும் பொருள் நிறைந்த அருள்வாக்கை எண்ணி ஈடேற முயலுதல் நலம்.

நிகழ்த்தும் ஏழ்பவ கடல் சூறை ஆகவெ,
     எடுத்த வேல் கொடு பொடித்தூள் அதா எறி,
     நினைத்த காரியம் அநுக்கூலமே புரி ...... பெருமாளே.

என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

நிருதரார்க்கு ஒரு காலா! ஜே ஜெய,
     சுரர்கள் ஏத்திடு வேலா! ஜே ஜெய,
     நிமலனார்க்கு ஒரு பாலா! ஜே ஜெய, ...... விறல்ஆன
நெடிய வேல்படையானே! ஜே ஜெய,
     என இராப்பகல் தானே, நான் மிக
     நினது தாள் தொழுமாறே தான்,இனி ...... உடனேதான்

தரையின் ஆழ்த் திரை ஏழே போல்,எழு
     பிறவி மாக்கடல் ஊடே நான்உறு
     சவலை தீர்த்து, ன தாளே சூடி,உன் ...... அடியார்வாழ்
சபையின் ஏற்றி, இன் ஞானா போதமும்
     அருளி, ஆட்கொளுமாறே தான், அது
     தமியனேற்கு முனே நீ மேவுவது ...... ஒருநாளே?

என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

பின்வரும் மேற்கோள் பாடல்களையும் எண்ணுக.

புற்றுஆடு அரவம் அரைஆர்த்து உகந்தாய்
         புனிதா பொருவெள்விடை ஊர்தியினாய்
எற்றேஒரு கண்இலன் நின்னை அல்லால்
         நெல்வாயில் அரத்துறை நின்மலனே
மற்றேல் ஒரு பற்றுஇலன் எம்பெருமான்
         வண்டார்குழலாள் மங்கை பங்கினனே
அற்றார் பிறவிக் கடல் நீந்தி ஏறி
         அடியேன் உய்யப்போவதோர் சூழல் சொல்லே.--- சுந்தரர்.

தனியேனன் பெரும் பிறவிப் பௌவத்து எவ்வத்
      தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
      கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு
இனி என்னே உய்யும் ஆறு என்று என்று எண்ணி
      அஞ்சுஎழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல்
     கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.         --- திருவாசகம்.

அருள்பழுத்து அளிந்த கருணை வான்கனி,
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க்கு அமிர்த வாரி, நெடுநிலை
மாடக் கோபுரத்து ஆடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாண,நின்

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி,
யான்ஒன்று உணர்த்துவன், எந்தை, மேனாள்
அகில லோகமும், அனந்த யோனியும்,
நிகிலமும் தோன்றநீ நினைந்த நாள் தொடங்கி,

எனைப்பல யோனியும், நினைப்பு அரும் பேதத்து
யாரும், யாவையும், எனக்குத் தனித்தனி
தாயர் ஆகியும், தந்தையர் ஆகியும்,
வந்து இலாதவர் இல்லை, யான், அவர்
தந்தையர் ஆகியும், தாயர் ஆகியும்,

வந்து இராததும் இல்லை, முந்து
பிறவா நிலனும் இல்லை, அவ்வயின்
இறவா நிலனும் இல்லை, பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை, யான் அவை
தம்மைத் தின்னாது ஒழிந்ததும் இல்லை, அனைத்தே

காலமும் சென்றது, யான் இதன் மேல்இனி
இளைக்குமாறு இலனே நாயேன்,
நந்தாச் சோதி, நின் அஞ்செழுத்து நவிலும்
தந்திரம் பயின்றதும் இலனே, தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே, ஆயினும்

இயன்றது ஓர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னது மந்திரமாக, என்னையும்
இடர்ப் பிறப்பு இறப்பு என்னும் இரண்டின்
கடல்படா வகை காத்தல் நின்கடனே.           ---  திருக்கழுமல மும்மணிக்கோவை.                        
 
அறிவுஇல் ஒழுக்கமும், பிறிதுபடு பொய்யும்
கடும்பிணித் தொகையும், இடும்பை ஈட்டமும்,
இனையன பலசரக்கு ஏற்றி, வினைஎனும்
தொல் மீகாமன் உய்ப்ப, அந் நிலைக்
கரு எனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்து
புலன் எனும் கோள்மீன் அலமந்து தொடர,
பிறப்புஎனும் பெருங்கடல் உறப் புகுந்து அலைக்கும்
துயர்த் திரை உவட்டின் பெயர்ப்பிடம் அயர்த்துக்
குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து,
நிறை எனும் கூம்பு முரிந்து, குறையா
உணர்வு எனும் நெடும்பாய் கீறிப் புணரும்
மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம், அலங்கல்
மதியுடன் அணிந்த பொதிஅவிழ் சடிலத்துப்
பையரவு அணிந்த தெய்வ நாயக.....

நின் அருள் எனும் நலத்தார் பூட்டித்
திருவடி நெடும்கரை சேர்த்துமா செய்யே.      --- கோயில் நான்மணி மாலை.
                                                                           
இப்பிறவி என்னும்ஓர் இருள்கடலில் மூழ்கி, நான்
                  என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு
         இருவினை எனும் திரையின் எற்றுஉண்டு, புற்புதம்
                  எனக் கொங்கை வரிசைகாட்டும்
துப்புஇதழ் மடந்தையர் மயல் சண்டமாருதச்
                  சுழல் வந்து வந்து அடிப்ப,
         சோராத ஆசையாம் கான்ஆறு வான்நதி
                  சுரந்தது என மேலும் ஆர்ப்ப,
கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமும்
                  கைவிட்டு மதிமயங்கி,
         கள்ள வங்கக் காலர் வருவர் என்று அஞ்சியே
                  கண்அருவி காட்டும் எளியேன்
செப்பரிய முத்தியாம் கரைசேரவும் கருணை
                  செய்வையோ, சத்து ஆகி என்
         சித்தமிசை குடிகொண்ட அறிவுஆன தெய்வமே
                  தோஜோமய ஆனந்தமே.        --- தாயுமானவர்.

இல்லை பிறவிக் கடல் ஏறல், இன் புறவில்  
முல்லை கமழும் முதுகுன்றில் ---  கொல்லை
விடையானை, வேதியனை, வெண்மதிசேர் செம்பொன்
சடையானைச் சாராதார் தாம்.  --- பதினொராம் திருமுறை.

துவக்கு அற அறிந்து பிறக்கும் ஆரூரும்,
         துயர்ந்திடாது அடைந்து காண் மன்றும்,
உவப்புடன் நிலைத்து மரிக்கும் ஓர் பதியும்
         ஒக்குமோ? நினைக்கும் நின் நகரை;
பவக்கடல் கடந்து முத்தி அம் கரையில்
         படர்பவர் திகைப்பு அற நோக்கித்
தவக்கலம் நடத்த உயர்ந்து எழும் சோண
         சைலனே கைலை நாயகனே.   --- சோணசைலமாலை.

தோற்றிடும் பிறவி  எனும் கடல் வீழ்ந்து
         துயர்ப்பிணி எனும் அலை அலைப்ப
கூற்று எனும் முதலை விழுங்குமுன் நினது
         குரைகழல் கரை புக விடுப்பாய்
ஏற்றிடும் விளக்கின் வேறுபட்டு அகத்தின்
         இருள் எலாம் தன்பெயர் ஒருகால்
சாற்றினும் ஒழிக்கும் விளக்கு எனும் சோண
         சைலனே கைலை நாயகனே.    --- சோணசைலமாலை.


மனம் போன போக்கில் சென்றான் ஒருவன்; கண்ணை இழந்தான். கடலில் விழுந்தான். கரை தெரியவில்லை. கலங்குகிறான். நீருள் போகிறான். மேலே வருகிறான். திக்கு முக்காடித் திணறுகிறான். அபாயச் சூழ்நிலை. உடல் துடிக்கிறது. உள்ளம் பதைக்கிறது. அலறுகிறான். அழுகிறான். எதிர்பாராத ஒரு பருத்த மரம், அலைமேல் மிதந்து, எதிரே வருகிறது. காண்கிறான். நம்பிக்கை உதிக்கிறது. ஒரே தாவாகத் தாவி, அதைத் தழுவிக் கொள்கிறான். விட்டால் விபரீதம். இனி யாதாயினும் ஆக என்று அதையே இறுகப் பற்றியிருக்கின்றான்.

எதிர்பாராது எழுந்தது புயல். அலைவு அதிகரிக்கும் அது கண்டு அஞ்சினான். பயங்கரமாக வீசிய புயல் காற்று, அவனை ஒரே அடியாகக் கரையில் போய் வீழச் செய்தது. அந்த அதிர்ச்சியில், தன்னை மறந்தான். சிறிது பொறுத்து விழித்தான். என்ன வியப்பு! தான் கரையில் இருப்பதை அறிந்தான். மகிழ்ந்தது மனம். கட்டையை வாழ்த்தினான்; கரையில் ஒதுக்கிய காற்றையும் வாழ்த்தினான். ஆன்மாவின் வரலாறும், ஏறக்குறைய இதைப் போலவே இருக்கிறது பாருங்கள்!

இருண்ட அறிவால், ஒளிமயமான உணர்வை இழந்தது.  அதன் பயனாக, ஆழம் காண முடியாத, முன்னும் பின்னும் தள்ளித் துன்புறுத்தும் வினை அலைகள் நிறைந்த, அநியாயப் பிறவிக்கடலில் வீழ்ந்தது ஆன்மா.

அகங்கார மமகாரங்கள், மாயை, காமக் குரோத லோப மோக மத மாற்சரியங்கள், பின்னி அறிவைப் பிணைத்தன. இவைகளால், கடுமையாக மோதியது கவலைப் புயல். வாழ்க்கையாம் வாழ்க்கை! கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தது தான் கண்ட பலன். அமைதியை விரும்பி, எப்புறம் நோக்கினாலும் இடர்ப்பாடு; கற்றவர் உறவில் காய்ச்சல்; மற்றவர் உறவில் மனவேதனை. இனிய அமைதிக்கு இவ்வுலகில் இடமே இல்லை. அவதி பல அடைந்து, பொறுக்க முடியாத வேதனையில், இறைவன் திருவடிகளைக் கருதுகிறது.

நினைக்க நினைக்க, நினைவில் நிஷ்காமியம் நிலைக்கிறது. அந்நிலையிலிருந்து,  இறைவனை வேண்டிப் பாடுகிறது. உணர்வு நெகிழ்ந்து உள்ளம் உருகிப் பாடும் பாக்களை, பாக்களில் உள்ள முறையீட்டை, கேட்டுக் கேட்டு இறைவன் திருவுளம் மகிழ்கிறது. அருளார்வ அறிகுறியாக அமலனாகிய இறைவனுடைய திருச்செவிகள் அசைகின்றன. அந்த அசைவிலிருந்து எழும் பெருங்காற்று, எங்கும் பரவி, பிறவிக்கடலில் தத்தளிக்கும் ஆன்மாவை, வாரிக் கரையில் சேர வீசி விடுகிறது. அந்நிலையில், முத்திக் கரை சேர்ந்தேன் என்று தன்னை மறந்து தனி இன்பம் காண்கிறது அந்த ஆன்மா.

இந்த வரலாற்றை,

மாற்றரிய தொல்பிறவி மறிகடலின் இடைப்பட்டுப்
போற்றுறுதன் குரைகழல்தாள் புணைபற்றிக் கிடந்தோரைச்
சாற்ற அரிய தனிமுத்தித் தடம் கரையின் மிசைஉய்ப்பக்
காற்றுஎறியும் தழைசெவிய கடாக்களிற்றை வணங்குவாம்'

என்று கனிவொடு பாடுகின்றது காசிகாண்டம்.

தனியேனன் பெரும் பிறவிப் பௌவத்து எவ்வத்
      தடம் திரையால் எற்றுண்டு, பற்று ஒன்று இன்றி,
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
      கலக்குண்டு, காம வான் சுறவின் வாய்ப்பட்டு,
இனி என்னே உய்யும் ஆறு என்று என்று எண்ணி
      அஞ்சுஎழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை,
முனைவனே! முதல் அந்தம் இல்லா மல்லல்
     கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.
                                                     
என்கிறது திருவாசகம்.

இறப்பு எனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும்
மறப்பு எனும் அதனின்மேல் கேடு மற்று உண்டோ,
துறப்பு எனும் தெப்பமே துணை செயாவிடின்
பிறப்பு எனும் பெருங்கடல் பிழைக்கல் ஆகுமோ.
                                                     
என்கிறது கம்பராமாயணம்.

நீச்சு அறியாது ஆங்கு ஓய் மலைப்பிறவி ஆர்கலிக்கு ஓர் வார்கலமாம் ஈங்கோய் மலைவாழ் இலஞ்சிமே
                                        
என்கிறது திருவருட்பா.

  வேதன், நெடுமால், ஆதி விண்நாடர்,
         மண்நாடர், விரத யோகர்,
மாதவர் யாவரும் காண மணிமுறுவல்
         சிறிது அரும்பி, மாடக் கூடல்
நாதன் இரு திருக்கரம் தொட்டு அம்மியின் மேல்
     வைத்த கயல் நாட்டச் செல்வி
பாதமலர், எழுபிறவிக் கடல் நீந்தும்
            புணை என்பர் பற்று இலாதோர்.    
                      
என்கிறது திருவிளையாடல் புராணம்.


இனி இருவினை இழிவினில் அழியாதே ---

இருவினைகளும் ஆன்மாவைப் பிறவி என்னும் இழிவினில் தள்ளும் என்பதை ஆழ்ந்து சிந்தித்து அறிவினைத் தெளிவாக்குதல் வேண்டும். இருவினை என்பது நல்வினை தீவினை ஆகிய இரண்டையும் குறிக்கும். நல்வினை என்னும் புண்ணியமும் பிறவிக்கு ஏதுவாதலால், இருள் சேர் இருவினை என்று திருவள்ளுவ நாயனார் அறிவித்தார் என்பதை அறிக.

உலகில் உள்ள உயிர்கட்கு எப்போதும் இன்ப துன்பங்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன. சிலர் வாழ்வதும், சிலர் தாழ்வதும், சிலர் சுவர்க்கம் புகுவதும், சிலர் நரகம் புகுவதும், சிலர் உயர்குடி பிறப்பதும், சிலர் இழிந்தகுடிப் பிறப்பதும் ஏன்? உயிர்கள் தன் விருப்பப்படி செய்யுமாயின் எல்லா உயிர்களும் தனவந்தர் வீட்டில்தானே பிறக்கும்?  உயர்குடியில் தானே பிறக்கும்?

இறைவன் ஆணையின் வழி இவை நிகழ்கின்றன.  அங்ஙனமாயின், இறைவன் பட்சபாதம் உள்ளவன் ஆகின்றான்.  இறைவனுடைய அருட்குணத்திற்கு முரணும். உயிர்களின் இருவினைக்கு ஏற்ப, இறைவன் இவ்வாறு ஐந்தொழில்களையும் புரிகின்றான். அதனால் இறைவனுக்குப் பட்சபாதம் இல்லை என அறிக.

நிமித்தகாரணன் ஆகிய இறைவனுக்கு, ஆணையே அன்றி வினையும் துணைக் காரணம் என்க.

வினையின் வண்ணமே எல்லாம் நடக்கும் என்றால், இறைவன் எதற்கு?  எனின், வினை சடப்பொருள் ஆதலின், தானே வந்து செய்தவனைப் பொருந்தாது.  ஆதலின், அந்தந்தக் காலத்தில், அவ்வவ் வினையை அறிந்து பொருத்துவதற்கு இறைவன் வேண்டும் என்று உணர்க.

இனி, உயிர்கள் சித்துப்பொருள் தானே? அவ் உயிர்களே அவ்வினைகளை எடுத்து நுகருமே? ஆதலின் வினைகளை ஊட்டுவதற்கு இறைவன் எதற்கு? எனின், உயிர்கள் தாமே அறியா.  அறிவித்தால் மட்டுமே அறியும். ஆதலின், அறிந்து ஊட்டுவதற்கு இறைவன் இன்றியமையாதவன் ஆகின்றான்.

அப்படி ஆயின், வினையின் வழியே உயிர்கட்கு, இறைவன் சுகதுக்கங்களைத் தருகின்றான் என்றால், இறைவனுடைய சுதந்திரத்துக்கு இழுக்கு எய்துமே எனின், எய்தாது என்க.  குடிகளுடைய குணம் குற்றங்கட்கு ஏற்ப அரசன் அருளும் தண்டமும் செய்வதனால், அரசனுடைய சுதந்திரத்திற்கு இழுக்கு இல்லை, அல்லவா

வினை ஆதியா அநாதியா என்று ஐயம் நிகழ்வது இயல்பு. ஆதி ஆயின், இல்லது தோன்றாது என்ற சற்காரிய வாதம் பிழைபடும்.  ஆகவே, வினை அநாதியே உண்டு என்க. அது எதுபோல் எனின், நெல்லிற்கு உமியும், செம்பிற்குக் களிம்பும்போல், உயிர்கட்கு வினை தொன்மை என அறிக.

நெல்லிற்கு உமியும், நிகழ்செம்பினில் களிம்பும்,
சொல்லில் புதிதுஅன்று, தொன்மையே, ---  வல்லி
மலகன்மம் அன்று உளவாம், வள்ளலால் பொன்வாள்
அலர்சோகம் செய்கமலத்து ஆம்.

இருவினையின் காரியமே இன்ப துன்பம் முதலாயின.  வினை, ஈட்டப்படுங்கால் மந்திர முதலிய அத்துவாக்களிடமாக, மனவாக்குக் காயங்கள் என்ற மூன்று காரணங்களால் ஈட்டப்பட்டுத் தூல கன்மமாய் ஆகாமியம் எனப் பெயர் பெறும்.

பின்னர், பக்குவம் ஆகும் வரை புத்தி தத்துவத்தினிடமாக மாயையில் கிடந்து, சாதி, ஆயு, போகம் என்னும் மூன்றற்கும் ஏதுவாகி, முறையே சனகம், தாரகம், போக்கியம் என்ற மூவகைத்தாய், அபூர்வம் சஞ்சிதம், புண்ணிய பாவம் என்னும் பரியாயப் பெயர் பெறும்.

கன்மநெறி திரிவிதம், நல் சாதிஆயுப் போகக்
         கடன் அது என வரும், மூன்றும் உயிர் ஒன்றில் கலத்தல்,
தொன்மையது ஊழ்அல்லது உணவுஆகா, தானும்
         தொடங்குஅடைவில் அடையாதே தோன்றும், மாறித்
தன்மைதரு தெய்விகம் முற்பௌதிகம் ஆன்மிகம் ஆம்,
         தகையில்உறும் அசேதன சேதனத்தாலும் சாரும்
நன்மையொடு தீமைதரு சேதனனுக்கு இவண் ஊண்
         நாடில்அதன் ஊழ்வினையாய் நணுகும் தானே.       --- சிவப்பிரகாசம்.
                                               
வினைக்கு ஈடாக, இனம், வாழ்நாள், துய்த்தல் ஆகிய மூன்றும் ஓர் உயிருக்குத் தொன்று தொட்டுப் பொருந்தி வரும். அவ்வினை பக்குவம் அடைந்த காலத்தே உயிர்களுக்குப் பயன் தரும். உயிர்களால் நுகரப்படும். அப்போது அது ஊழ் என்ற பெயரைப் பெறும். வினை ஈட்டப்பட்ட கால அடைவிலே உயிர், வினைப் பயன்களை நுகர்வதில்லை. வினையின் வன்மை மென்மைகளுக்கு ஈடாகவும், பக்குவப்பட்ட முறைமையிலும் உயிர்கள் அவற்றின் பயன்களை நுகருமாறு இறைவன் கூட்டுவான். வினைகள் உயிரை வந்து சாரும் போது மூன்று வழிகளிலே வந்தடையும். அவற்றை ஆதி தெய்விகம் ஆதி ஆன்மிகம் ஆதி பவுதிகம் என்று கூறுவர். அறிவற்ற பொருள்களாலும் அறிவுடைப் பொருள்களாலும் வினைப்பயன் வினைசெய்த உயிரைச் சாரும். ஓர் ஆன்மாவின் இப்பிறவியில் அவ்வுயிர் நல்லனவும் தீயனவும் நுகர்வதனை ஆய்ந்து பார்த்தால் அவை அவ்வுயிரின் முன்னை வினைப் பயனைப் பொறுத்தே அமைகின்றன என்பது புலனாகும்.

வினை பக்குவமாதல் என்பது அவ்வப் பயன்களைத் தோற்றுவித்தற்கு உரிய துணைக் கருவிகள் எல்லாவற்றோடும் கூடுதல் என அறிக.

அது, பின்னர்ப் பயன்படுங்கால், ஆதிதைவிகம், ஆதி ஆன்மிகம், ஆதிபௌதிகம் என்ற முத்திறத்தால் பலவகைப்பட்டு, பிராரத்தம் எனப் பெயர் பெறும்.

எனவே ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என வினை மூவுருவம் கொள்ளும்.

ஆகாமியம் - செய்யப்படுவது.
சஞ்சிதம் - பக்குவப் படாமல் இருப்பாக இருப்பது.
பிராரத்தம் - அநுபவிப்பது.

இனி, பிராரத்தம்  ஆதிதைவிகம், ஆதிஆன்மிகம், ஆதிபௌதிகம் என்ற மூன்று வழியாக வரும் என்றோமே, அதன் விவரம் வருமாறு....

(1)     ஆதி தைவிகம் --- தெய்வத்தால் வரும் இன்பதுன்பங்கள்.

அவை ---  கருவில் சேர்தல், பிறக்கும்போது எய்தும் இடர், நரை திரை மூப்பு முதலியன, நரகத்தில் ஆழ்தல், உலகை அரசு புரிதல் முதலிய இன்ப துன்பங்களாம்.

கருவினில்துயர், செனிக்கும் காலைத் துயர்,மெய்
திரைநரைமூப்பில் திளைத்து, செத்து --- நரகத்தில்
ஆழும்துயர், புவியைஆள் இன்பம் ஆதிஎல்லாம்
ஊழ்உதவு தைவிகம்என்று ஓர்.

(2)     ஆதி ஆன்மிகம் --- தன்னாலும், பிறராலும் வரும் இன்ப துன்பங்களாம்.

அவை --- மனத்துயர், பயம், சந்தேகம், கோபம்,  மனைவி மக்கள் கள்வர், பகைவர், நண்பர், விலங்கு, பேய், பாம்பு, தேள், எறும்பு, கரையான், அட்டை, நண்டு, முதலை, மீன் முதலியவைகளால் வரும் துன்ப இன்பங்களாம்.

தன்னால் பிறரால் தனக்குவரும் தீங்குநலம்
இன்னா விலங்குஅலகை தேள்எறும்பு செல்முதல்நீர்
அட்டை அலவன் முதலை மீன் அரவம் ஆதியின்ஆம்
கட்டமும் இங்கு ஆன்மிகமே காண்.

(3)     ஆதிபௌதிகம் ---  மண் முதலிய பூதங்களால் வரும் இன்ப துன்பங்கள்.

அவை ---  குளிர்ச்சி, மழை, வெயில், கடும்காற்று, இருள், மின்னல், இடி,  தென்றல் முதலியன.

பனியால் இடியால் படர்வாடை யினாலும்
துணிதென்றலினாம் சுகமும் --- தனைஅனைய
நீரினாம், இன்பு,இன்னலும் நெருப்பின் ஆம்துயர்இன்பு
ஓரில் பவுதிகம் ஆகும்.

இன்னும் உலகம், வைதிகம், அத்தியான்மிகம், அதிமார்க்கம், மாந்திரம் என வினை ஐவகைப்படும்.

1.             உலக வினை ---  கிணறு, குளம், தண்ணீர்ப்பந்தல் முதலியன செய்தலால் உண்டாவதாய், நிவிர்த்தி கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

2.             வைதிக வினை --- வேதத்துள் விதித்த அக்கினிட்டோமம் முதலிய வேள்வி முதலியன செய்வதால் உண்டாவதாய், பிரதிட்டா கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

3.       அத்தியான்மிக வினை ---  வேதநெறியால் செய்யும் பூசனை துறவு முதலியவற்றால் உம்டாவதாய், வித்தியாகலையில் அடங்கிய புவன போகங்களைத் தருவது.

4.       அதிமார்க்க வினை ---  இயமம் நியம் முதலிய யோகப் பயிற்சியால் உண்டாவதாய், சாந்திகலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

5.       மாந்திர வினை ---  சுத்த மந்திரங்களைக் கணித்தல் முதலிய ஞானப்பயிறிச் விசேடங்களால் உண்டாவதாய், சாந்தியாதீத கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

இதுகாறும் ஆராயந்தவற்றால் அறியப்படுவது, பிறவிக்கு வினை காரணம். அவ்வினை அற்றால் அன்றி பிறவி அறாது எனத் தெளிக.

இருவினை முமலமுற இறவியொடு பிறவிஅற
ஏகபோகமாய் நீயும் நானுமாய்
இறுகும்வகை பரமசுகம் அதனைஅருள் இடைமருதில்
ஏகநாயகா லோகநாயகா.        ---  (அறுகுநுனி) திருப்புகழ்.

அவையே தானே ஆய்இரு வினையில்
போக்குவரவு புரிய, ஆணையில்
நீக்கம்இன்றி நிற்கும்அன்றே.

என்ற சிவஞானபோத இரண்டாம் சூத்திரத்தினாலும், இதற்கு மாதவச் சிவஞான யோகிகள் எழுதிய பேருரையாலும், சித்தியார், சிவப்பிரகாசம் முதலிய வழிநூல் புடைநூல்களாலும் வினையின் விளக்கத்தை விரிவாகக் கண்டு தெளிக.

இவ்வினைகளே பிறப்பு இறப்புக்குக் காரணமாம். வினை ஒழிந்தால் இத் தேகம் தினைப் போது அளவும் இராது.

வினைப்போக மேஒரு தேகம் கண்டாய்,
         வினைதான் ஒழிந்தால்
தினைப்போது அளவுநில்லாது கண்டாய்,
         சிவன் பாதம் நினை,
நினைப்போரை மேவு, நினையாரை
         நீங்கி நெறியின் நின்றால்
உனைப்போல் ஒருவர்உண்டோ, மனமே!
         எனக்கு உற்றவரே.                  ---  பட்டினத்தார்.

", மனமே! இவ்வுடம்பானது இருவினையின் காரியத்தால் ஆகியது. அக் கன்மத்தை நுகர்ந்து முடிந்தால், இவ்வுடம்பு ஒரு கணமும் நில்லாது அழியும். ஆதலினால், சிவபெருமானை நினைப்பாயாக. சிவசிந்தை செய்யும் அடியாருடன் உறவு கொள்வாயாக. சிவசிந்தை இல்லாதவரை விட்டு விலகுதி.  இங்ஙனம் நீ நடப்பாயேல் எனக்கு உற்ற துணைவர் உன்னைப்போல் ஒருவர் உண்டோ?” என்று பட்டினத்தடிகள் கூறுமாறு காண்க.

உயிர்கட்கு முற்பிறப்பில் செய்யப்பட்டுக் கிடந்த இருவினைக்கு ஈடாக இப்பிறப்பின் கண் இன்ப துன்பங்கள் எய்தும். 

வினை சடமாகலின் அதனை இறைவன் உயிர்கட்கு உரிய காலத்தில் ஊட்டுவன். மருத்துவனும் மன்னனும் போல் என்று உணர்க.

இருவினை இன்பத் துன்பத்து இவ்வுயிர் பிறந்துஇறந்து
வருவது போவது ஆகும், மன்னிய வினைப் பலன்கள்
தரும் அரன் தரணியோடு தராபதி போலத் தாமே
மருவிடா வடிவும் கன்ம பலன்களும் மறுமைக் கண்ணே.     ---  சிவஞான சித்தியார்.


இமையவர் முநிவர்கள் ககன பூபதி இடர்கெட அருளிய இறை, நின் ஆறிருபுயம் என நாள் தொறும் இசையில் உரை செய அருள்வாயே  ---

தேவர்கள் முனிவர்கள் மற்றும் இந்திரனின் துயர் கெடுமாறு அருள் புரிந்தவர் முருகப் பெருமான். அவர்கள் பெருமானை வாழ்த்தியது தமது துயர் தீர்ந்து தாம் நல்வாழ்வு வாழவே. புண்ணியத்தின் பயனை நுகர்ந்து வருவதால் அவர்கட்கு அறிவு விளக்கம் பெறுமாறு இல்லை. ஈட்டிய புண்ணியத்தின் பயன் முடிந்த பிறகு, இம் மண்ணுலகில் மானுடராய்ப் பிறந்து, அருள் நீல்களை ஓதித் தெளிவாராயின், புண்ணியம் என்பதும் துன்பத்தைத் தருவதே, அது அழியாத இன்பத்தில் வைத்திருக்க உதவாது என்பதை அறிந்து, இறையருள் பெறவேண்டும் என்னும் திண்ணிய எண்ணத்தோடு வழிபாடு புரிவார்கள் என்பதை,

வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான், மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மைஎல்லாந் தொழவேண்டி,
சூழ்த்தும் மதுகரம் முரலும் தாரோயை, நாய் அடியேன்
பாழ்த்தபிறப்பு அறுத்திடுவான் யானும்உன்னைப் பரவுவனே.

யான்ஏதும் பிறப்பு அஞ்சேன், இறப்பதனுக்கு என்கடவேன்,
வானேயும் பெறில்வேண்டேன், மண்ணாள்வான் மதித்துமிரேன்,
தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே! எம்பெருமான்! எம்
மானே! உன் அருள்பெறும் நாள் என்று என்றே வருந்துவனே.

புவனியில் போய்ப் பிறவாமையின், நாள் நாம்
     போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி,
சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு என்று நோக்கி,    
      திருப்பெருந்துறை உறைவாய்! திருமால்ஆம்
அவன் விருப்பு எய்தவும், அலரவன் ஆசைப்
     படவும், நின் அலர்ந்த மெய்க்கருணையும், நீயும்,
அவனியில் புகுந்து, எமை ஆட்கொள்ள வல்லாய்!
     ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!

என்னும் திருவாசகப் பாடல்களால் தெளியலாம்.

எனவே, பிறவியால் வரும் துன்பங்களை அறுத்துக் கொள்ள இறைவனை வழிபடவேண்டியது அவசியமாகின்றது. முருகப் பெருமானுடைய திருத்தோகள்களைப் புகழ்ந்து இன்னிசைப் பாடல்களை பாடி வழிபட அருள் புரியுமாறு வேண்டுகின்றார்.  தோள்கள் என்று சொல்லவே, பெருமானின் மற்ற அவயவங்களையும் புகழ்ந்து பாடுதல் வேண்டும் என்பது குறிப்பால் பெறப்படும்.  இது,

பக்கரை, விசித்ர மணி, பொற்கலணை இட்டநடை,
     பட்சி-எனும்  உக்ரதுர ...... கமும், நீபப்
பக்குவ மலர்த்தொடையும், அக்குவடு பட்டு ஒழிய,
     பட்டு உருவ விட்டு அருள் கை ...... வடிவேலும்,

திக்கு அது மதிக்கவரு குக்குடமும், ரட்சைதரு
     சிற்றடியும், முற்றிய பன் ...... இருதோளும்,
செய்ப்பதியும் வைத்து, உயர் திருப்புகழ் விருப்பமொடு
     செப்பு என எனக்கு  அருள்கை ...... மறவேனே.

என்னும் திருப்புகழ்ப் பாடலாலும்,

எழுதரிய அறுமுகமும் அணிநுதலும் வயிரமிடை
    இட்டுச் சமைந்த செஞ்சுட்டிக் கலன்களும் துங்கநீள்பன்
இருகருணை விழிமலரும் இலகுபதின் இருகுழையும்
    ரத்னக் குதம்பையும் பத்மக் கரங்களும் செம்பொன்நூலும்
பொழிபுகழும் உடைமணியும் அரைவடமும் அடியிணையும்
    முத்தச் சதங்கையும் சித்ரச் சிகண்டியும் செங்கைவேலும்
முழுதும் அழகிய குமர        ---  (விழையுமனி) திருப்புகழ்

என்னும் திருப்புகழ்ப் பாடலாலும்,

செங்கேழ் அடுத்த சின வடிவேலும், திருமுகமும்,
பங்கே நிரைத்த நல் பன்னிரு தோளும், பதும மலர்க்
கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே!

என்னும் கந்தரலங்காரப் பாடலாலும் தெளிவரும்.


படரும் மார்பினில் இருபது புயம் அதொடு அரிய மா மணிமுடி ஒளிர் ஒருபது படியிலே விழ ஒரு கணை தொடுபவர் ---

இராவணனுடைய இருபது தோள்களும், பத்துத் தலைகளகளும் அற்று பூமியில் விழுமாறு ஒப்பற்ற அம்பினை விடுத்து அருளியவர் இராமபிரான் என்பதைத் திருவதிகைத் திருத்தலத்தில் அருளிய முந்தைய திருப்புகழ்ப் பாடலிலும் காட்டினார் நமது சுவாமிகள்.


இடம் ஆராய் பரவை ஊடு எரி பகழியை விடுபவர் ---

இராம்பிரான் கடலின் மீது அம்பினை எய்த வரலாற்றை, பின்வரும் திருப்புகழ்ப் பாடலால் காண்க.

சிறுத்த செலு அதனுள் இருந்து,
     பெருத்த திரை உததி கரந்து,
          செறித்த மறை கொணர நிவந்த ...... ஜெயமாலே,
செறித்த வளை கடலில் வரம்பு
     புதுக்கி, இளையவனோடு, அறிந்து
          செயிர்த்த அநுமனையும் உகந்து, ...... படை ஓடி,

மறப்புரிசை வளையும் இலங்கை
     அரக்கன் ஒரு பது முடி சிந்த,
          வளைத்த சிலை விஜய முகுந்தன் ......மருகோனே!

பின்வரும் கந்தரலங்காரப் பாடலையும் காண்க...

சாகைக்கும் மீண்டு பிறக்கைக்கும் அன்றி தளர்ந்தவர்க்கு ஒன்று
ஈகைக்கு எனை விதித்தாய் இலையே! 'இலங்காபுரிக்குப்
போகைக்கு நீ வழி காட்டு' என்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச்சிலை வளைத்தோன் மருகா மயில்வாகனனே.

இராமபிரான் திருப்புல்லணையில் சாய்ந்து ஏழு நாட்கள் வருணனை வழிபடவேண்டி மனம் ஒருமைப்பட்டுக் கிடந்தார். வருணன் வெளிப்படாமை கண்டு வெகுண்டு கடல் மீது அம்பினை விடுத்தார். கடல் வெந்தது. வருணன் அஞ்சி நடுங்கி ஓடி வந்து, இராமபிரானைத் தஞ்சம் புகுந்து, “பெருமானே! புறக் கடலில் இரு பெரிய திமிங்கலங்கள் புரிந்த போரை மாற்றிச் சமாதானம் செய்யும் கருமத்தில் ஈடுபட்டிருந்தேன், அதனால் நீங்கள் நினைத்ததை உணர்ந்தேனில்லை. மன்னித்தருள்க. கடலில் அணைகட்ட அடியேன் உதவுகின்றேன்” என்று கூறி வேண்டிக் கொண்டான்.


பரவுவார் வினைகெட அருள் உதவியே ---

தம்மை வழிபடும் அடியவர்களின் வினைத் தொகுதி கெடுமாறு அருள் புரிபவர் திருமால். அவரது எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால், வினைத் தொகுதி அழிந்து போகும். எல்லா  உலகியல் நலங்களையும் அருளியல் நலங்களையும் அருள வல்லவர் திருமால்.

குலம் தரும், செல்வம் தந்திடும், அடியார்
      படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும், நீள் விசும்பு அருளும்,
      அருளொடு பெரு நிலம் அளிக்கும்,
வலம் தரும், மற்றும் தந்திடும், பெற்ற
      தாயினும் ஆயின செய்யும்,
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
      நாராயணா என்னும் நாமம்.    ---  திருமங்கை ஆழ்வார்.

மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்
      மங்கையார் வாள் கலிகன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை
      இவை கொண்டு சிக்கென தொண்டீர்!
துஞ்சும்போது அழைமின், துயர்வரில் நினைமின்,
      துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்,
நஞ்சுதான் கண்டீர் நம்முடை வினைக்கு
      நாராயணா என்னும் நாமம்.    ---  திருமங்கை ஆழ்வார்.
    
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே,
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே,
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே,
இம்மையே இராம என்ற இரண்டு எழுத்தினால்.

ஓர் ஆயிரம் மகம் புரி பயனை உய்க்குமே,
நராதிபர் செல்வமும் புகழும் நல்குமே,
விராய் எணும் பவங்களை வேர் அறுக்குமே,
'இராம' என்று ஒரு மொழி இயம்பும் காலையே.

நாடிய பொருள் கைகூடும், ஞானமும் புகழும் உண்டாம்,
வீடுஇயல் வழி அது ஆக்கும், வேரிஅம் கமலை நோக்கும்,
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவார்க்கே.

மற்று ஒரு தவமும் வேண்டா,
   மணி மதில் இலங்கை மூதூர்
செற்றவன் விசயப் பாடல்
   தெளிந்து, அதில் ஒன்றுதன்னைக்
கற்றவர், கேட்போர், நெஞ்சில்
   கருதுவோர், இவர்கள் பார்மேல்
உற்று அரசு ஆள்வர்; பின்னும்
   உம்பராய் வீட்டில் சேர்வார்.

என வரும் கம்பராமாயணப் பாடல்களையும் எண்ணுக.

அமரர் ஆதியர் இடர்பட, அடர்தரு கொடிய தானவர் திரிபுரம் எரிசெய்த, அதிகை மாநகர் ---

திருவதிகை வீரட்டானம் என்னும் திருத்தலத்தை, சிவபெருமான் முப்புரங்களை எரித்து அழித்து, முப்புராதிகளைக் காத்து அருளியதன் அடையாளமாகக் கொண்டு வழிபடுவர்.  உண்மையில் முப்புர தகனம் நடந்தது இங்கு அல்ல. விண்ணுலகத்தில் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.

மேலும் முப்பர தகனம் என்பது உயிர்களின் மும்மலத்தை இறைவன் சிதைத்து அருள் புரிந்த அருள் விளையாலைக் குறிப்பதாகும் என்பதை,

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்,
முப்புரம் ஆவது மும்மல காரியம்,
அப்புரம் எய்தமை யார் அறிவாரே.

என்னும் திருமூலர் திருவாக்கால் அறியலாம்.

இதன் பொழிப்புரை ---

சிவபெருமான் திரிபுரம் எரித்த வரலாற்றைப் புராணங்கள் கூறக் கேட்கின்ற அறிவிலாதார் அவ் வரலாற்றை மட்டுமே கேட்டு, அவ்வளவில் சிவபெருமானைப் புகழ்வதோடு ஒழிகின்றனர். அவ்வரலாற்றால் அறியத் தக்க உண்மையை அறிகின்றவர் மிகச் சிலரே.  `இரும்பு, வெள்ளி, பொன்` என்பவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் முறையே `ஆணவம், மாயை, கன்மம்` என்னும் மும்மலக் கட்டினைக் குறிப்பன ஆகும். `சிவபெருமான் அக்கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கினான்` என்பது, `அந்த மும்மலங்களின் வலியை அழித்து, கட்டு அறுத்து அருள்னான்` என்னும் உண்மையை உணர்த்தி நிற்பது ஆகும்.

தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி என்னும் மூவர் அசுரர் சிவபத்தியில் சிறந்தவராய் மயன் வகுத்த `பொன், வெள்ளி, இரும்பு` இவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் நினைத்த இடத்தில் பறந்து சென்று இறங்கும் சித்தியை அடைந்து, அதனால் உலகிற்கு இடர் விளைத்தனர். அதனைத் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வணங்கி விண்ணப்பித்து, அவ்வசுரர்களை அழித்தருளுமாறு வேண்டினர். சிவபெருமான் `நம்பால் பத்தி பண்ணுவோரை அழித்தல் ஆகாது` என்று அருளிச் செய்யத் திருமால் புத்தனாக உருக்கொண்டு பிடக நூலைச் செய்து, நாரத முனிவரைத் துணைக்கொண்டு முப்புரத்தவர்பால் சென்று சிவநெறியை இகழ்ந்து, புத்த மதத்தையே சிறந்ததாகக் காட்டி மருட்டினார். அதனால் அம்மாயோன் மயக்கில் அகப்பட்ட முப்புரத்து அசுரர் சிவநெறியைக் கைவிட்டுச் சிவனை இகழ்ந்து புத்தராயினர். அதன்பின் திருமால் முதலியோர் சிவபிரானிடம் சென்று வணங்கி, முப்புரத்தவர் சிவநிந்தகர் ஆயினமையை விண்ணப்பித்து, அவர்களை அழித்தருள வேண்டினர். சிவபெருமான் அதற்கு இசைவு தரப் பூமியைத் தேர்த்தட்டாக அமைத்துத் தேவர் பலரும் தேரின் பல உறுப்புக்களாயினர். வேதங்கள் நான்கும் குதிரைகளாக, அவற்றை ஓதும் பிரமன் தேரை ஓட்டும் சாரதி ஆயினன். திருமால் அம்பாக, வாயுதேவன் அம்பின் சிறகுகளும், அக்கினி தேவன் அம்பின் அலகும் ஆயினர். சிவபெருமான் வாசுகியை நாணாகக் கொண்டு மகாமேரு மலையை வில்லாக வளைத்துத் திருமால் முதலியோரால் அமைந்த அம்பைப் பூட்டித் திரிபுரங்களை நோக்கிய பொழுது, அவரிடத்து உண்டாகிய கோபச் சிரிப்பால் முப்புரங்களும் வெந்து நீறாயின. இவ்வாறு திருவிற்கோலப் புராணம், காஞ்சிப் புராணங்களில் இவ் வரலாறு விரித்துக் கூறப்பட்டது.

உருவு கரியது ஒர் கணை கொடு, பணிபதி
     இரு குதையும் முடி தமனிய தநுவுடன்,
     உருளை இருசுடர், வலவனும் அயன்என, ....மறைபூணும்
உறுதிபடு சுர ரத மிசை அடியிட,
     நெறு நெறு என முறிதலும், நிலை பெறுதவம்
     உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற, ......ஒருகோடி

தெருவும், நகரியும், நிசிசரர் முடியொடு
     சட சட என வெடி படுவன, புகைவன,
     திகுதிகு என எரிவன, அனல் நகைகொடு ......முனிவார் தம்
சிறுவ! வனசரர் சிறுமியொடு உருகிய
     பெரும! அருணையில் எழுநிலை திகழ்வன
     சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய ...... பெருமாளே.
                                                               --- (அருவம்இடை) திருப்புகழ்.

மாநாக நாண் வலுப்புறத் துவக்கி ஒர்
     மாமேரு பூதரத் தனுப் பிடித்து, ரு
     மால் ஆய வாளியைத் தொடுத்து, ரக்கரில் .....ஒரு மூவர்
மாளாது, பாதகப் புர த்ரயத்தவர்
     தூளாகவே, முதல் சிரித்த வித்தகர் வாழ்வே!       --- (ஆனாதஞான) திருப்புகழ்.

முக் கோட்டைக்கு ஒருகிரி ......இருகாலும்
வில் போலக் கோட்டி, பிறகு ஒரு
     சற்றே பல் காட்டித் தழல் எழு-
     வித்தார் தத்வ அர்த்தக் குருபரன் ...... என ஓதும்
பொற்பா!...............       ..................                      --- (கற்பார்) திருப்புகழ்.

"கல்லால்நிழல் கீழாய்இடர் காவாய்என வானோர்
எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப
வல்லாய்எரி காற்றுஈர்க்குஅரி கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே”.  ---  திருஞானசம்பந்தர்.

வரிஅரவே நாண்ஆக மால்வரையே வில்லாக
எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்
பொரிசுடலை ஈமப் புறங்காட்டான் போர்த்ததுஓர்
கரிஉரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.    ---  திருஞானசம்பந்தர்.

குன்ற வார்சிலை நாண் அராஅரி
         வாளி கூர்எரி காற்றின் மும்மதில்
வென்றவாறு எங்ஙனே விடைஏறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை
         சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே.    ---  திருஞானசம்பந்தர்.

கையில்உண் உடுழல்வாரும் சாக்கியரும்
         கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்
பொய்இலா தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்
         பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்
         கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய
         திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.  ---  அப்பர்.

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்
வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே
கற்பாரும் கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்
கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே. ---  சுந்தரர்.

கருத்துரை

முருகா! தேவரீரது பன்னிரு திருத்தோள்களையும் நாள்தோறும் இன்னிசையால் பாடி வழிபட அருள்வாய்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...