திரு அதிகை வீரட்டம் - 0749. பரவுவரிக் கயல்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பரவுவரிக் கயல் (திரு அதிகை வீரட்டம்)

முருகா!
விலைமாதர் வசமாகிப் படுகின்ற மனக்கவலையை ஒழித்து அருள் புரிவாய்.


தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
     தனதனனத் தனதனனத் ...... தனதான


பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப்
     பவளநிறத் ததரம்விளைத் ...... தமுதூறல்

பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப்
     படைமதனக் கலையடவிப் ...... பொதுமாதர்

சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத்
     துகிலகலக் க்ருபைவிளைவித் ...... துருகாமுன்

சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற்
     சுழலுமனக் கவலையொழித் ...... தருள்வாயே

கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக்
     கணைதொடுமச் சுதன்மருகக் ...... குமரேசா

கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக்
     கவிநிறையப் பெறும்வரிசைப் ...... புலவோனே

திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்
     செறியும்வயற் கதிரலையத் ...... திரைமோதித்

திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித்
     திருவதிகைப் பதிமுருகப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பரவு வரிக் கயல் குவிய, குயில்கிளி ஒத்து உரைபதற,
     பவளநிறத்த அதரம் விளைத்து, ...... அமுது ஊறல்

பருகி, நிறத் தரளமணிக் களபமுலைக் குவடு அசைய,
     படை மதனக் கலை அடவிப் ...... பொதுமாதர்

சொருகுமலர்க் குழல்சரிய, தளர்வுறு சிற்றிடை துவள,
     துகில் அகலக் க்ருபை விளைவித்து ...... உருகா,முன்

சொரிமலர் மட்டு அலர் அணை புக்கு, தமதுரக் கலவிதனில்
     சுழலும் மனக் கவலை ஒழித்து ...... அருள்வாயே.

கருகுநிறத்து அசுரன் முடித் தலை ஒருபத்து அற முடுகிக்
     கணை தொடும் அச்சுதன் மருக! ...... குமரஈசா!

கயிலைமலைக் கிழவன் இடக் குமரி விருப்பொடு கருதக்
     கவி நிறையப் பெறும் வரிசைப் ...... புலவோனே!

திரள் கமுகில் தலை இடறிப் பல கதலிக் குலைசிதறிச்
     செறியும் வயல் கதிர் அலையத் ...... திரைமோதித்

திமிதிம் எனப் பறை அறையப் பெருகுபுனல் கெடிலநதித்
     திரு அதிகைப் பதி முருக! ...... பெருமாளே.


பதவுரை

      கருகு நிறத்து அசுரன் முடித்தலை ஒருபத்து அற --- கருநிற மேனியனும் அரக்கனும் ஆன இராவணனது மணிமுடி தரித்த பத்துத் தலைகளும் அற்று விழ,

     முடுகிக் கணை தொடும் அச்சுதன் மருக --- விரைந்து செல்லும் அம்பினைச் செலுத்திய இராமபிரானின் திருமருகரே!

     குமர ஈசா --- குமாரக் கடவுளே!

      கயிலைமலைக் கிழவன் இடக் குமரி --- திருக்கயிலாய மலைத் தலைவனாகிய சிவபெருமானின் திருமேனியின் இடப்பாகத்தில் பொஉந்தி உள்ள உமாதேவியார்,

     விருப்பொடு கருதக் கவி நிறையப் பெறும் வரிசைப் புலவோனே --- விருப்பத்துடன் கருதிய பாடல்களை நிறையப் பாடும் தகுதியினை உடைய அருட்புலவராகிய திருஞானசம்பந்தப் பெருமானே!

      திரள் கமுகின் தலை இடறி --- திரண்டு வளர்ந்துள்ள பாக்கு மரத்தின் உச்சியில் உள்ள குலைகள் இடறி விழுவதால்,

     பல கதலிக் குலை சிதறி --- பல வாழை மரங்களின் குலையானது சிதறி விழ,

     செறியும் வயல் கதிர் அலைய --- வயல்களில் செறிந்து வளர்ந்துள்ள நெல் கதிர்கள் அலைபாயும்படியாக,

      திரை மோதி திமிதிமி எனப் பறை அறைய --- அலைகள் மோதுவதால் திமிதிமி என்னும் ஓசையுடன் பறை அறைவது போல்,

     பெருகு புனல் கெடில நதித் திருவதிகைப்பதி முருகப் பெருமாளே --- பெருகி ஓடுகின்ற திருக்கெடில நதியின் கரையில் விளங்கும் திருவதிகை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

      பரவு வரிக் கயல் குவிய --- வரிகள் பரந்துள்ள மீனைப் போல் உள்ள கண்கள் குவிய,

     குயில் கிளி ஒத்து உரை பதற ---  பேசுகின்ற சொற்கள் குயிலைப் போலவும், கிளியைப் போலவும் பதற,

      பவள நிறத்து அதரம் விளைத்த அமுது ஊறல் பருகி --- பவளம் போன்ற இதழ்களைக் கொண்ட வாயில் ஊறுகின்ற எச்சிலை அமுதமாக எண்ணிப் பருகி,

     நிறத் தரளம் அணிக் களப முலைக் குவடு அசைய --- ஒளி வீசும் முத்து மாலை அணிந்து, சந்தனத்தின் கலவையும் பூசப்பட்டுள்ள மலை போன்ற முலைகள் அசைய,

      படை மதனக் கலை அடவிப் பொதுமாதர் --- (கரும்பு வில், மலர்க் கணைகள் ஆகிய) படையினை உடைய மன்மதனுடைய கலைகள் அனைத்தையும் உணர்ந்துள்ள விலைமாதர்களின்,

     சொருகு மலர்க்குழல் சரிய --- மலர்களைச் செருகி உள்ள கூந்தலானது சரிய,

     தளர்வுறு சிற்றிடை துவள --- தளர்வு உறுகின்ற சிறிய இடையானது துவள,

      துகில் அகல --- ஆடை விலக,

      க்ருபை விளைவித்து உருகா --- காம இச்சையை விளைவித்து, அதனால் எனது மனமானது உருக,

     முன் சொரி மலர் மட்டு அலர் அணை புக்கு --- முன்னரே சொரியப்பட்டுள்ள மணம் நிறைந்த மலர்ப் படுக்கையில் சேர்ந்து,

     இத மதுரக் கலவி தனில் சுழலும் --- இதத்தையும் இனிமையையும் தருகின்ற கலவியில் உழலுகின்றதால் விளைந்த   

     மனக் கவலை ஒழித்து அருள்வாயே --- எனது மனக்கவலையை ஒழித்து அருள் புரிவீராக.


பொழிப்புரை


     கருநிற மேனியனும் அரக்கனும் ஆன இராவணனது மணிமுடி தரித்த பத்துத் தலைகளும் அற்று விழ, விரைந்து செல்லும் அம்பினைச் செலுத்திய இராமபிரானின் திருமருகரே!

     குமாரக் கடவுளே!

      திருக்கயிலாய மலைத் தலைவனாகிய சிவபெருமானின் திருமேனியின் இடப்பாகத்தில் பொஉந்தி உள்ள உமாதேவியார், விருப்பத்துடன் கருதிய பாடல்களை நிறையப் பாடும் தகுதியினை உடைய அருட்புலவராகிய திருஞானசம்பந்தப் பெருமானே!

      திரண்டு வளர்ந்துள்ள பாக்கு மரத்தின் உச்சியில் ழுள்ள குலைகள் இடறி விழுவதால், பல வாழை மரங்களின் குலையானது சிதறி, வயல்களில் செறிந்து வளர்ந்துள்ள நெல் கதிர்கள் அலைபாயும்படியாக, அலைகள் மோதுவதால் திமிதிமி என்னும் ஓசையுடன் பறை அறைவது போல், பெருகி ஓடுகின்ற திருக்கெடில நதியின் கரையில் விளங்கும் திருவதிகை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

      வரிகள் பரந்துள்ள மீனைப் போல் உள்ள கண்கள் குவிய, பேசுகின்ற சொற்கள் குயிலைப் போலவும், கிளியைப் போலவும் பதற, பவளம் போன்ற இதழ்களைக் கொண்ட வாயில் ஊறுகின்ற எச்சிலை அமுதமாக எண்ணிப் பருகி, ஒளி வீசும் முத்து மாலை அணிந்து, சந்தனத்தின் கலவையும் பூசப்பட்டுள்ள மலை போன்ற முலைகள் அசைய, (கரும்பு வில், மலர்க் கணைகள் ஆகிய) படையினை உடைய மன்மதனுடைய கலைகள் அனைத்தையும் உணர்ந்துள்ள விலைமாதர்களின், மலர்களைச் செருகி உள்ள கூந்தலானது சரிய, தளர்வு உறுகின்ற சிறிய இடையானது துவள, ஆடை விலக, காம இச்சையை விளைவித்து, அதனால் எனது மனமானது உருக, முன்னரே சொரியப்பட்டுள்ள மணம் நிறைந்த மலர்ப் படுக்கையில் சேர்ந்து, இதத்தையும் இனிமையையும் தருகின்ற கலவியில் உழலுகின்றதால் விளைந்த எனது மனக்கவலையை ஒழித்து அருள் புரிவீராக.


விரிவுரை

இத் திருப்புகழின் முற்பகுதியில் அடிகளார் விலைமாதர்கள் விளைக்கும் காம லீலைகளைக் குறித்தும், அவர்களால் மயங்கிய ஆடவர் நிலை குறித்தும் விளக்கி, விலைமாதர் கூட்டுறவால் விளைந்த மனக்கவலையை ஒழித்து அருள் புரியுமாறு முருகப் பெருமானை வேண்டியுள்ளார்.

 
கருகு நிறத்து அசுரன் முடித்தலை ஒருபத்து அற முடுகிக் கணை தொடும் அச்சுதன் மருக ---

இராமபிரான் இராவணாதி அரக்கர்களோடு ஏழு நாட்கள் போர் புரிந்து வென்றமையை அடிகளார் திருப்புகழில் பல இடங்களில் காட்டி உள்ளார்.

வஞ்சம் கொண்டும் திட ராவண-
     னும் பந்துஎன் திண் பரி தேர்கரி
     மஞ்சின் பண்பும் சரி ஆமென ...... வெகுசேனை
வந்து அம்பும் பொங்கிய தாக
     எதிர்ந்தும், தன் சம்பிரதாயமும்
     வம்பும் தும்பும் பல பேசியும் ...... எதிரே கை

மிஞ்ச என்றும் சண்டை செய் போது
     குரங்கும் துஞ்சும் கனல் போலவெ
     குண்டும் குன்றும் கரடு ஆர் மரம் ...... அதும்வீசி
மிண்டும் துங்கங்களினாலெ
     தகர்ந்து அங்கம் கம் கர மார்பொடு
     மின் சந்தும் சிந்த, நிசாசரர் ...... வகைசேர-

வும், சண்டன் தென்திசை நாடி,
     விழுந்து, ங்கும் சென்றுஎம தூதர்கள்
     உந்து உந்து உந்து என்றிடவே, தசை ...... நிணமூளை
உண்டும் கண்டும் சில கூளிகள்
     டிண்டிண்டு என்றும் குதி போட,
     உயர்ந்த அம்பும் கொண்டுவெல் மாதவன் ......மருகோனே!
                                                           --- திருச்செந்தூர்த் திருப்புகழ்.

ஓதகட லோடுவிறல் ராவண குழாம்அமரில் பொடியாக
ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
     பாணிதிரு மார்பன்அரி கேசன்மரு காஎனவெ
     ஓதமறை ராமெசுர மேவுகும ராஅமரர் பெருமாளே
                                                                     --- (வாலவயதாகி) திருப்புகழ்.

ஆழி அடைத்துத் தம் கை இலங்கையை ...... எழுநாளே
ஆண்மை செலுத்திக் கொண்ட கரும்புயல் ...... மருகோனே!
                                                          --- (சூழும்வினை) திருப்புகழ்.

இரவி இந்த்ரன், வெற்றிக் குரங்கின்
     அரசர் என்றும், ஒப்பற்ற உந்தி
     இறைவன் எண்கு இனக்கர்த்தன் என்றும்,.....நெடுநீலன்

எரியது என்றும், ருத்ரன் சிறந்த
     அநுமன் என்றும், ஒப்பற்ற அண்டர்
     எவரும் இந்த வர்க்கத்தில் வந்து ...... புனம் மேவ,

அரிய தன் படைக்கர்த்தர் என்று,
     அசுரர் தம் கிளைக் கட்டை வென்ற,
     அரிமுகுந்தன் மெச்சு உற்ற பண்பின் ......மருகோனே!
                                                                                    --- கருவடைந்து) திருப்புகழ்.

கயிலைமலைக் கிழவன் இடக் குமரி விருப்பொடு கருதக் கவிநிறையப் பெறும் வரிசைப் புலவோனே ---

முருகப் பெருமான் ஞானாம்பிகையாரது திருமுலைப் பாலாகிய சிவஞானத் திருவமுதையுண்டு ஞானபண்டிதன் என்று நம்மனோர் அனைவருக்கும் ஞானத்தை அருளிச் செய்கின்றனர். அறுமுகப் பெருமான் அம்மை முலைப்பாலை விரும்பிச் செய்த திருச்செயலை அடியில் கண்ட அருட்பாடலில் கண்டு மகிழ்க.

எள் அத்தனை வருந்து உறுபசிக்கும்
                  இரங்கி, பரந்து சிறுபண்டி
         எக்கிக் குழைந்து, மணித் துவர்வாய்
                  இதழைக் குவித்து, விரித்து எழுந்து
துள்ளித் துடித்து, புடைபெயர்ந்து,
                  தொட்டில் உதைத்து, பெருவிரலைச்
         சுவைத்து, கடைவாய் நீர்ஒழுக,
                  தோளின் மகரக் குழை தவழ,
மெள்ளத் தவழ்ந்து, குறுமூரல்
                  விளைத்து, மடியின் மீது இருந்து,
         விம்மிப் பொருமி முகம் பார்த்து,
                  வேண்டும் உமையாள் களபமுலை
வள்ளத்து அமுதுஉண்டு அகமகிழ்ந்த
                  மழலைச் சிறுவா! வருகவே!
     வளருங் களபக் குரும்பைமுலை
                  வள்ளி கணவா! வருகவே!      ---திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்.

உமையம்மையின் திருமுலைப்பாலை உண்டவர்கள் இருவரே.  ஒருவர் இறைய பிள்ளையாராகிய திருமுருகன். ஞானாகரன், ஞானபண்டிதன் என்னும் திருப்பெயர் அமைந்தது. மற்றொருவர் ஆளுடைய பிள்ளையார் ஆகிய திருஞானசம்பந்தப் பெருமான். உமையம்மை அருளிய ஞானப் பாலை உண்டதனால், ஒப்பற்ற சிவஞானசம்பந்தர் ஆனார்.

எண்ணரிய சிவஞானத்து இன் அமுதம் குழைத்து அருளி
உண் அடிசில் என ஊட்ட, உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்து அருளிக் கையிற்பொற் கிண்ணம்அளித்து
அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள்புரிந்தார்.

யாவருக்கும் தந்தைதாய் எனும் இவர் இப்படி அளித்தார்,
ஆவதனால் ஆளுடைய பிள்ளையாராய், அகில
தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருளாகும்
தாவில்தனிச் சிவஞான சம்பந்தர் ஆயினார்.

சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்,
பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்,
உவமை இலாக் கலைஞானம், உணர்வு அரிய மெய்ஞ்ஞானம்,
தவ முதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார் அந்நிலையில்.     ---  பெரிய புராணம்.

பலவித நல் கற்பு அடர்ந்த சுந்தரி,
     பயில்தரு வெற்புத் தரும் செழுங்கொடி
     பணைமுலை மெத்தப் பொதிந்து பண்பு உறு ....கின்றபாலை,
பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்
     பகர் என இச்சித்து உகந்து கொண்டு அருள்
     பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்றருள் ...... தம்பிரானே.
                                                                           --- (கலவியில்) திருப்புகழ்.
  
நுகர் வித்தகம் ஆகும் என்று உமை
மொழியில் பொழி பாலை உண்டிடு
     நுவல்மெய்ப்பு உள பாலன் என்றிடும் ......இளையோனே!
                                                                           --- (பகர்தற்கு) திருப்புகழ்.

திரள் கமுகின் தலை இடறி, பல கதலிக் குலை சிதறி, செறியும் வயல் கதிர் அலைய, திரை மோதி திமிதிமி எனப் பறை அறைய, பெருகு புனல் கெடில நதித் திருவதிகைப் பதி முருகப் பெருமாளே ---

திருக்கெடில நதியைத் "தென்திசையில் கங்கை" என்கின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். அந்தப் புனித நதியின் பெருக்கால் வளம் மிகுந்து உள்ள காட்சியை நமக்குக் காட்டுகின்றார் அடிகளார். திருக்கெடில நதியின் வடபால் அமைந்துள்ள அற்புதத் திருத்தலம் திரு அதிகை ஆகும்.

கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து  இரண்டு கி. மீ. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய இடங்களிலிருந்து பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது. பண்ருட்டி இருப்புப் பாதை நிலையம்.

இறைவர், வீரட்டேசுவரர், வீரட்டநாதர், அதிகைநாதர். இறைவியார், திரிபுரசுந்தரி. தல மரம் சரக்கொன்றை. தீர்த்தம் தென்திசையில் கங்கை என்னும் திருக்கெடில நதி

அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்ததைதக் குறிக்கும் திருத்தலம்.

 திருஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம்.

அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம்.

திலகவதியார் தமது தம்பியாகிய (அப்பர்) மருள்நீக்கியாரை நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட, இறைவன் "சூலை தந்து ஆட்கொள்வோம்" என்று பதில் உரைத்த திருப்பதி.

சூலை நோயின் துன்பம் தாளப்பெறாத அப்பர் பெருமான், யாரும் அறியாமல் பாடலிபுத்திரத்தை (திருப்பாதிரிப்புலியூர்) விட்டு நீங்கி, இங்கு வந்து, தமக்கையாரைக் கண்டு, தொழுது,  அவர் தமது திருக்கையால் திருவாளன் திருநீறு தர, பெருவாழ்வு வந்ததென்று அதனைப் பணிந்து ஏற்று, உருவார அணிந்து, அவர் பின் சென்று, அதிகைப் பிரான் அடிமலர் வீழ்ந்து வணங்கி, "ஆற்றேன் அடியேன்" என்று "கூற்றாயினவாறு" திருப்பதிகம் பாடிச் சூலை நீங்கப்பெற்ற அற்புதத் திருத்தலம்.

திருநாவுக்கரசு பெருமான் திருப்பணி செய்த அருமைத் திருத்தலம்.

சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான 'உண்மை விளக்கம்' நூலை அருளியவரும், மெய்கண்டாரின் மாணவரும் ஆகிய மனவாசகங்கடந்தாரின்' அவதாரத் திருத்தலம்.

இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கியதும் - திருவடி தீட்சை பெற்றதும் இத் திருத்தலமே.

 மிகப்பெரிய கோயில், சுவாமி கர்ப்பக்கிருகம் தேர்போலப் பதுமைகளால் அலங்கரிக்கப்பட்டு, நிழல் பூமியில் சாயாதபடிக் கட்டப்பட்டுள்ளது.

 கோபுர வாயிலில் இருபுறங்களிலும் அளவற்ற சிற்பங்கள் உள்ளன; வலப்பக்கத்தில் சற்று உயரத்தில் திரிபுரமெரித்த கோலம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

வாயிலின் இருபுறங்களிலும் நடனக்கலைச் சிற்பங்கள் (பரத சாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள 108 கரணங்களை விளக்கும் சிற்பங்கள்) அளவிறந்துள்ளன.

கோயிலின் உட்புறத்திலுள்ள மற்றொரு பதினாறுகால் மண்டபத்தின் இரு தூண்களில் ஒன்றில் சுப்பிரமணியத் தம்பிரான் (அமர்ந்த நிலை) சிற்பமும், இதற்கு நேர் எதிர்த்தூணில் சிவஞானத் தம்பிரான் (நின்று கைகூப்பிய நிலை) சிற்பமும் உள்ளது. சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்தான் இக்கோயிலைத் திருத்திச் செப்பம் செய்தவர் என்றும்; இவர் சீடரான சிவஞானத் தம்பிரான்தான் முதன்முதலில் இத்திருக்கோயிலில் அப்பர் பெருமானுக்குப் பத்து நாள்கள் விழா எடுத்துச் சிறப்பித்தார் என்பர்.

இக்கோயிலில் திகவதியாருக்கு சந்நிதி உள்ளது. அப்பர் சந்நிதி - மூலமூர்த்தம் உள்ளது; அமர்ந்த திருக்கோலம் - சிரித்த முகம், தலை மாலை, கையில் உழவாரப்படை தாங்கிய பேரழகு.

பிரகாரத்தில் பஞ்சமுக சிவலிங்கமும் (பசுபதிநாதர்), வரிசையாகப் பல சிவலிங்கத் திருமேனிகளும் உள்ளன.

மூலவர் பெரிய சிவலிங்கத் திருமேனி - பெரிய ஆவுடையார்; சிவலிங்கத் திருமேனி பதினாறு பட்டைகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.

கருவறை சுதையாலான பணி; இதன் முன் பகுதி வளர்த்துக் கற்றளியாகக் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றிலும் குடவரைச்சிங்கள்.

இத்தலத்திலிருந்து 1 கி.மீ. தொலைவு சென்றால் சிதம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. அப்பர் பெருமான் திருத்தொண்டு புரிந்த பதியாதலால், திருவதிகையை மிதிக்க அஞ்சிய சுந்தரர் இரவு தங்கித் துயின்ற சித்தவட மடம் ஆகும். றிங்குதான் சுந்தரருக்குத் திருவடி தீட்சையை இறைவர் அருளினார். இப்பகுதி புதுப்பேட்டை என்று இப்போது வழங்குகிறது. (சித்வடமடத்தைப் பிற்காலத்தில் சித்தாண்டிமடம், சித்தாத்த மடம் என்றெல்லாம் வழங்கினர். இப்போது இப்பகுதி கோடாலம்பாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.)

கருத்துரை

முருகா! விலைமாதர் வசமாகிப் படுகின்ற மனக்கவலையை ஒழித்து அருள் புரிவாய்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...