திருப் பாதிரிப்புலியூர் - 0756. நிணமொடு குருதி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நிணமொடு குருதி (திருப்பாதிரிப்புலியூர்)

முருகா!
சிறியேனுக்குத் தகுதி இல்லையாயினும்,
குருமூர்த்தமாக நீரே வந்து
                          உபநிடதங்களின் உண்மைகளை உபதேசித்து உய்விப்பீராக.

தனதன தனன தனந்த தானன
     தனதன தனன தனந்த தானன
     தனதன தனன தனந்த தானன ...... தனதான

நிணமொடு குருதி நரம்பு மாறிய
     தசைகுடல் மிடையு மெலும்பு தோலிவை
     நிரைநிரை செறியு முடம்பு நோய்படு ...... முதுகாயம்

நிலைநிலை யுருவ மலங்க ளாவது
     நவதொளை யுடைய குரம்பை யாமிதில்
     நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவ ......முயவோரும்

உணர்விலி செபமுத லொன்று தானிலி
     நிறையிலி முறையிலி யன்பு தானிலி
     உயர்விலி யெனினுமெ னெஞ்சு தானினை....வழியாமுன்

ஒருதிரு மரகத துங்க மாமிசை
     யறுமுக மொளிவிட வந்து நான்மறை
     யுபநிட மதனை விளங்க நீயருள் ...... புரிவாயே

புணரியில் விரவி யெழுந்த ஞாயிறு
     விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி
     பொலமணி மகுட சிரங்கள் தாமொரு ...... பதுமாறிப்

புவியிடை யுருள முனிந்து கூர்கணை
     யுறுசிலை வளைய வலிந்து நாடிய
     புயலதி விறலரி விண்டு மால்திரு ...... மருகோனே

அணிதரு கயிலை நடுங்க வோரெழு
     குலகிரி யடைய இடிந்து தூளெழ
     அலையெறி யுததி குழம்ப வேல்விடு ...... முருகோனே

அமலைமு னரிய தவஞ்செய் பாடல
     வளநகர் மருவி யமர்ந்த தேசிக
     அறுமுக குறமக ளன்ப மாதவர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நிணமொடு, குருதி, நரம்பு, மாறிய
     தசை, குடல், மிடையும் எலும்பு, தோல் இவை
     நிரைநிரை செறியும் உடம்பு, நோய்படு ...... முதுகாயம்,

நிலைநிலை உருவ மலங்கள் ஆவது,
     நவதொளை உடைய குரம்பை ஆம் இதில்,
     நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவம் ......உய ஓரும்

உணர்வுஇலி, செபமுதல் ஒன்று தான்இலி,
     நிறைஇலி, முறைஇலி, அன்பு தான்இலி,
     உயர்வு இலி, எனினும், என்நெஞ்சு தான்நினைவு.....ழியாமுன்,
 
ஒருதிரு மரகத துங்க மாமிசை
     அறுமுகம் ஒளிவிட வந்து, நான்மறை
     உபநிடம் அதனை விளங்க, நீ அருள் ...... புரிவாயே.

புணரியில் விரவி எழுந்த ஞாயிறு
     விலகிய புரிசை இலங்கை வாழ்பதி
     பொலமணி மகுட சிரங்கள் தாம்ஒரு ...... பதும் மாறிப்

புவிஇடை உருள முனிந்து, கூர்கணை
     உறுசிலை வளைய வலிந்து நாடிய,
     புயல், தி விறல் அர், விண்டு, மால், திரு ......மருகோனே!

அணிதரு கயிலை நடுங்க, ர் எழு
     குலகிரி அடைய இடிந்து தூள் எழ,
     அலை எறி உததி குழம்ப வேல்விடு ...... முருகோனே!

அமலை முன் அரிய தவஞ்செய் பாடல
     வளநகர் மருவி அமர்ந்த தேசிக!
     அறுமுக! குறமகள் அன்ப! மாதவர் ...... பெருமாளே.


பதவுரை


         புணரியில் விரவி எழுந்த ஞாயிறு --- கடலில் கலந்து உதித்த சூரியன்

         விலகிய புரிசை இலங்கை வாழ்பதி --- நேராகச் செல்லாமல் விலகிச் செல்லுமாறு உயர்ந்த மதில்களை உடைய இலங்காபுரியில் வாழ்ந்த அரசனாகிய இராவணனுடைய

         பொலமணி மகுட சிரங்கள் தாம் ஒருபதும் மாறி --- ஒளிசெய்கின்ற இரத்தின மணிகள் பதித்த மகுடங்கள் தரித்த தலைகள் ஒரு பத்தும் அறுபட்டு

         புவியிடை உருள முனிந்து --- பூமி மீது உருளும்படி கோபித்து,

          கூர்கணை உறுசிலை வளைய வலிந்து நாடிய --- கூர்மையான அம்புகள் பொருந்திய வில்லை வளைத்து, முயன்று நாடிப் போர் புரிந்த

      புயல் அதிவிறல் அரி விண்டு மால் திருமருகோனே --- மேகவண்ணன், மிக்க வீரம் வாய்ந்த அரி, விஷ்ணு, திருமால் எனப் பெயர் கொண்டவனின் அழகிய திருமருமகனாரே!

         அணிதரு கயிலை நடுங்க ---  அழகுள்ள கயிலாயமலை நடுநடுங்க,

         ஓர் எழு குலகிரி அடைய இடிந்து தூள் எழ ---  ஒப்பற்ற ஏழு குல மலைகள் எல்லாமுமாய் இடிந்து தூள்பறக்கவும்,

         அலை எறி உததி குழம்ப வேல்விடு முருகோனே --- அலைவீசும் கடல் கொந்தளித்துக் குழம்பவும், வேலாயுதத்தை விடுத்தருளிய முருகக் கடவுளே!

         அமலை முன் அரிய தவம் செய் --- உமாதேவியார் முன்னாளிலே அரிய தவம் செய்த

         பாடல வளநகர் மருவி அமர்ந்த தேசிக --- திருப்பாதிரிப்புலியூர் என்னும் வளமை மிக்க திருத்தலத்திலே பொருந்தி எழுந்தருளி உள்ள குருநாதரே!

         அறுமுக –-- ஆறு திருமுகங்களை உடையவரே!

         குறமகள் அன்ப –-- வள்ளி பிராட்டியாருக்கு அன்பரே!

         மாதவர் பெருமாளே --- பெரிய தவசீலர்கள் போற்றும்  பெருமையின் மிக்கவரே!
                 
         நிணமொடு குருதி நரம்பு மாறிய தசை --- கொழுப்புடன் இரத்தம், நரம்பு மாறிய சதை,

         குடல் மிடையும் எலும்பு தோல் இவை --- குடல்,  நெருங்கியுள்ள எலும்பு, தோல் இவை யாவும்

         நிரைநிரை செறியும் உடம்பு --- வரிசை வரிசையாக நிறைந்துள்ள உடம்பு,

         நோய் படு முதுகாயம் --- நோய்களால் அழியத்தக்க பழமையான உடல்,

         நிலைநிலை உருவ மலங்கள் ஆவது --- வயதுக்குத் தக்கபடி கண், காது, வாய் முதலிய வெவ்வேறு நிலைகளில் வடிவமும், மாசுக்களும் உண்டாகக் கூடிய இந்த உடல்,

         நவதொளை உடைய குரம்பையாம் இதில் --- ஒன்பது தொளைகளை உடைய சிறு குடிலாகிய இந்த உடலில்

         நிகழ்தரு பொழுதில் --- உயிர் வாழும் பொழுதே

         முயன்று மாதவம் உய ஓரும் உணர்வு இலி --- வேண்டிய முயற்சிகளைச் செய்து சிறந்த தவங்களை உய்யும் பொருட்டு உணரக்கூடிய உணர்ச்சி இல்லாதவன் யான்.

         செபமுதல் ஒன்று தான் இலி --- செபம் முதலிய ஒரு நல்ல ஒழுக்கமும் இல்லாதவன் யான்.

         நிறையிலி முறையிலி அன்பு தான் இலி --- மாட்சிமை இல்லாதவன்,  முறைமை இல்லாதவன்,  அன்போ ஒரு சிறிதும் இல்லாதவன் யான்.

         உயர்வு இலி எனினும் என் நெஞ்சு தான் நினைவு அழியாமுன் --- மேன்மை அற்றவன் யான், என்றாலும் என் நெஞ்சு நினைவு என்பதை இழக்கும் முன்னரே,

         ஒரு திரு மரகத துங்க மாமிசை --- ஒப்பற்றதும் மேன்மையுடையதும் அழகிய பச்சை நிறமுள்ள பரிசுத்த மயில் என்னும் குதிரை மேல்

         அறுமுகம் ஒளிவிட வந்து --- உனது ஆறு திருமுகங்களும் ஞானவொளி வீச என் எதிரில் வந்து

         நான்மறை உபநிடம் அதனை விளங்க நீ அருள் புரிவாயே --- நான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களின் உண்மைகளை எனக்கு விளங்கும்படி உபதேசித்து தேவரீர் அருள்புரிய வேண்டும்.

பொழிப்புரை


         கடலில் கலந்து உதித்த  சூரியன் நேராகச் செல்லாமல் விலகிச் செல்லுமாறு உயர்ந்த மதில்களை உடைய இலங்காபுரியில் வாழ்ந்த அரசனாகிய இராவணனுடைய
ஒளிசெய்கின்ற இரத்தின மணிகள் பதித்த மகுடங்கள் தரித்த தலைகள் ஒரு பத்தும் அறுபட்டு, பூமி மீது உருளும்படி கோபித்து, கூர்மையான அம்புகள் பொருந்திய வில்லை வளைத்து, முயன்று நாடிப் போர் புரிந்த மேகவண்ணன், மிக்க வீரம் வாய்ந்த அரி, விஷ்ணு, திருமால் எனப் பெயர் கொண்டவனின் அழகிய மருமகனாரே!

         அழகுள்ள கயிலாயமலை நடுநடுங்க, ஒப்பற்ற ஏழு குலகிரிகள் எல்லாமுமாய் இடிந்து தூள்பறக்க, அலைவீசும் கடல் கொந்தளித்துக் குழம்ப, வேலாயுதத்தை விடுத்தருளிய முருகக் கடவுளே!

         உமாதேவியார் முன்னாளிலே அரிய தவம் செய்த திருப்பாதிரிப்புலியூர் என்னும் வளமை மிக்க திருத்தலத்திலே பொருந்தி எழுந்தருளி உள்ள குருநாதரே!

         ஆறு திருமுகங்களை உடையவரே!

         வள்ளி பிராட்டியாருக்கு அன்பரே!

         பெரிய தவசீலர்கள் போற்றும்  பெருமையின் மிக்கவரே!
                 
         கொழுப்புடன் இரத்தம், நரம்பு மாறிய சதை,  குடல்,  நெருங்கியுள்ள எலும்பு, தோல் இவை யாவும் வரிசை வரிசையாக நிறைந்துள்ள உடம்பு, நோய்களால் அழியத்தக்க பழமையான உடல், வயதுக்குத் தக்கபடிகண், காது, வாய் முதலிய வெவ்வேறு நிலைகளில் வடிவமும், மாசுக்களும் உண்டாகக் கூடிய இந்த உடல், ஒன்பது தொளைகளை உடைய சிறு குடிலாகிய இந்த உடலில் உயிர் வாழும் பொழுதே வேண்டிய முயற்சிகளைச் செய்து சிறந்த தவங்களை உய்யும் பொருட்டு உணரக்கூடிய உணர்ச்சி இல்லாதவன் யான். செபம் முதலிய ஒரு நல்ல ஒழுக்கமும் இல்லாதவன் யான். மாட்சிமை இல்லாதவன்,  முறைமை இல்லாதவன்,  அன்போ ஒரு சிறிதும் இல்லாதவன் யான். மேன்மையற்றவன் யான், என்றாலும் என் நெஞ்சு நினைவு என்பதை இழக்கும் முன்னரே, ஒப்பற்றதும் மேன்மையுடையதும் அழகிய பச்சை நிறமுள்ள பரிசுத்த மயில் என்னும் குதிரை மேல் உனது ஆறு திருமுகங்களும் ஞானவொளி வீச என் எதிரில் வந்து, நான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களின் உண்மைகளை எனக்கு விளங்கும்படி உபதேசித்து தேவரீர் அருள்புரிய வேண்டும்.

விரிவுரை

நிணமொடு …..........  முதுகாயம் ---

இவ்வுடம்பு கொழுப்பு, இரத்தம், நரம்பு, தசை, குடல், எலும்பு, தோல் முதலியவைகளால் ஆனது. பல நோய்களுக்கு இருப்பிடமானது. கல் சுண்ணாம்பு மரம் இரும்பு இவைகளால் ஆன வீடுகளே விரைவில் இடிந்து விழுவதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம்.  தசை தோல் உதிரத்தால் ஆகிய உடம்பு நிலைபேறு இல்லாதது.  நிலையில்லாத உடம்பை நிலையாக எண்ணி, உடம்பு வந்த வகை அறியாது உண்டு உடுத்து உழலும் மனிதர்களுக்கு அடிகள் இவ்வுடம்பின் தன்மையை நினைவு செய்கின்றனர்.

நிலை நிலை உருவ மலங்களாவது ---

பரிசுத்தமான வீடாக இருப்பின் அதில் வாழ்வதற்கு விரும்புவது இயல்பு. மலமும் சலமும் நிறைந்த இந்த அருவருப்புள்ள உடம்பினோடு கூடி இருப்பதற்கே விழைகின்றது மடமை.

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்..     ---  கந்தர் அநுபூதி.

நவ தொளை உடைய குரம்பை ---

ஒன்பது ஓட்டைகளுடன் கூடிய சிறு குடில் இவ்வுடம்பு. எந்த வழியாக எப்போது இவ்வுயிர் பிரியுமோ. இவ்வுடம்புடன் கூடியுள்ள பொழுதே பிறவா யாக்கை உடைய பெரியோனைப் பேணி மீண்டும் உடம்பு வரா வகையைத் தேடிக் கொள்ளுதல் வேண்டும்.

மலம்சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன்ஐந்து வஞ்சனையைச் செய்ய... --- திருவாசகம்.

வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன், எம் ஐயா, அரனே! ஓ என்றுஎன்று
போற்றிப் புகழ்ந்து இருந்து பொய்கெட்டு மெய்ஆனார்,
மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராமே
கள்ளப் புலக் குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே...
                                                                                          --- திருவாசகம். 
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியொடு இவைபல கசுமாலக் குடில்.....    ---  திருப்புகழ்.

இதில் நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவம் உய ஓரும் உணர்வு இலி ---

இவ்வுடம்புடன் கூடியுள்ள பொழுதில் ஒவ்வொரு கணமும் விலைமதிக்க ஒண்ணாத மாணிக்கமாகும். அதனை அவப் பொழுது ஆக்காமல், தவப் பொழுது ஆக்கி, உயிர் உறுதி பெறச் செய்வதுவே அறிவுடைமை. தவமே தெய்வத் தன்மையைத் தரவல்லது. தவம் செய்வோரே தமது கருமம் செய்தவர் ஆவார்.

"தவம் செய்வார் தம்கருமம் செய்வார், மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு"

என்றார் திருவள்ளுவ நாயனார்.

அவரவருக்கு உரிய, விதிக்கப்பட்ட கடமைகளைத் தவறாது செய்து வருவதே சிறந்த தவம் ஆகும். கடைகளை மறந்து, ஆசை வயப்பட்டுச் செய்யும் பிற செயல்கள் யாவும் அவமே.

தவத்தினால் எய்தாத பயன் யாதும் இல்லை. பறவைக்கு இரு சிறகு இருப்பதுபோல், ஒரு மனிதனுக்கு தானம் தவம் என்று இரு சிறகு இருக்க வேண்டும். தானம் தவம் என்ற இரு சிறகினால் பறந்து பரகதி அடைவான்.

தானமும் தவமும் தான் செய்வர் ஆயின்
வானவர் நாடு வழிதிறந்திடுமே...

என்பார் ஔவைப் பிராட்டியார்.

செபம் முதல் ஒன்று தான் இலி ---

இறைவனுக்கு அருள் உருவம் உண்டு.  அத் திருவுருவை உள்ளத்தில் நிறுத்தி, அகக் கண்ணால் நோக்கி, ஓர் ஆசனத்தில் அசைவு அற இருந்து (அசைவு அற என்பதால் உடல் அசைவு அற்று இருக்கவேண்டும் என்பது பொருள் அல்ல. மனமானது சலனம் அற்று இருக்கவேண்டும் என்பதே பொருள்), மந்திரத்தை உதடு அசையாமல் மனத்தினால் நினைப்பதற்கு செபம் என்று பேர். அது, செபமாலையைக் கொண்டு எண்ணிக்கை வைத்துச் செய்வது. மந்திரத்தை உதடு அசையச் செபிக்கில், மனம் வெளியே சென்று இடர்ப்படும். எப்போதும் ஒன்றைப் பற்றியே நிற்பது மனத்தின் தன்மை. அம் மனத்தினிடம் மந்திரத்தைத் தந்துவிட்டால், அதனைப் பற்றிக் கொண்டு அசையாமல் நிற்கும்.  அசைந்துகொண்டே இருக்கும் யானையின் தும்பிக்கையில் ஒரு குறுந்தடியைத் தந்தால், அது அதனைப் பற்றி அசையாமல் நிற்பதுபோல் என்று அறிக.

அவ்வண்ணம் செபம் செய்யும்போது செபமாலையின் நாயகமணியைத் தாண்டக் கூடாது. செபமாலை பிறர் கண்ணுக்குப் படாமல் பரிவட்டத்தால் மறைத்துக் கொண்டு செபம் பண்ணவேண்டும். பிறர் பார்வை படில் செபத்தின் பயன் சிறப்படையாது.

செபமாலையும் எண்ணிக்கையும் இனறி, ஒருமித்த மனத்துடன் ஒன்றி நின்று செய்வது தியானம். செபத்தின் முதிர்ச்சி தியானம்.  தியானத்தின் முதிர்ச்சி சமாதி. மந்திரமும் நீங்கி உள்ளத்தில் தேங்கிய உருவமும் நீங்கி அகண்டாகாரமாய் நிற்பதாகும்.

பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிகள்
     அணுக ஒணாவகை நீடும் இராசிய
     பவன பூரக வேகிகம் ஆகிய ...... விந்துநாதம்

பகர ஒணாதது, சேர ஒணாதது,
     நினைய ஒணாதது ஆன தயாபர
     பதி அது ஆன சமாதி மனோலயம் ...... வந்துதாராய்..
                                                                        --- (தறையின்) திருப்புகழ்.

நிறை இலி ---

நிறை - மாட்சிமை,  நீதி, திண்மை முதலிய பல பொருளைத் தரும். நியாய அநியாயங்களைச் சீர் தூக்கி நிறுப்பது நிறை.  மாண்பு உடைய உள்ளம் உடையார்க்கே அது இயலும்.

நிறையுடைமை நீங்காமை வேண்டில் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.                        --- திருக்குறள்.

முறை இலி ---

அறநூல் கூறிய வழி முறை எனப்படும். மனுமுறை என்னும் நூல் வழக்காலும் அறிக.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.                     ---  திருக்குறள்.

முறைசெய்து காப்பாற்று மன்னவன் மாந்தர்க்கு
இறையென்ற வைக்கப் படும்.                 ---  திருக்குறள்.

அன்பு தான் இலி ---

அன்பே சிவம். "அன்பு உருவாம் பர சிவமே" என்றார் வள்ளல்பெருமான். அன்பு வடிவாகிய சிவத்தை அன்பினாலேயே அடைதல் வேண்டும். என்பு வடிவம் உடைய நாம் அன்பு வடிவாக வேண்டும். அன்பு வடிவானால், இன்ப வடிவாகலாம்.  கண்ணப்பர் பொரு இல் அன்பு உருவமானார். அன்பு அருளைத் தரும். "அருள் என்னும் அன்பு ஈன் குழவி" என்பார் திருவள்ளுவ நாயனார். என்பு இல்லாத புழு வெய்யிலால் வேதனை உறுதல் போல, அன்பு இல்லாதவர் அறக் கடவுளால் துன்புறுவர்.  அன்புடையவரே உயிர் உடையவர் ஆவார். அது இல்லார் வெறும் எலும்பும் தோலும் கூடிய உடம்பினரே ஆவர்.

என்புஇல் அதனை வெயில்போலக் காயுமே
அன்புஇல் அதனை அறம்.                    ---  திருக்குறள்.

அன்பின் வழியது உயிர்நிலை, அஃதுஇல்லார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு.                 ---  திருக்குறள்.

ஆராலும் காணாத இறைவனை அன்பினால் அகம் குழாவார் எளிதில் காண்பர்.

நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நானழிய - வல்லதனால்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனும் காணா அரன்.             --- திருக்களிர்றுப்படியார்.

உயர்வு இலி எனினும் ---

உயர்ந்த குணங்கள் ஒன்றும் இல்லாத அசடனாயினும் அடியேனை ஆட்கொள்வது உனது கடன் என்று குறிப்பிடுகின்றனர்.

நெஞ்சு தான் நினைவு அழியாமுன் ---

உள்ளத்தில் நினைவு அழிவதற்குமுன் உமது தெரிசனையைத் தரவேணும்.


உபநிடம் அதனை விளங்க நீ அருள் புரிவாயே ---

வேதத்தின் முடிவாக விளங்குவது உபநிடதம்.  அது ஞானகாண்டம். அநேக தத்துவங்களை உணர்த்துவது. அதனை விளக்கி அருளுமாறு முருகவேளை அடிகள் வேண்டுகின்றனர்.

உபநிஷத் என்ற சொல்லுக்கு, மோட்சத்திற்குச் சமீபத்தில் வைப்பது என்று பொருள்.

புணரியில் விரவி எழுந்த ஞாயிறு விலகிய ---

சூரியன் இலங்கைக்கு நேராகச் செல்லாமல் விலகிப் போகுமாறு இராவணன் கட்டளை இட்டான். புணரி - கடல்.


அமலை முன் அரிய தவம்செய் பாடல வளநகர் ---

திருப்பாதிரிப்பூலியூரில் அம்மை தவம் புரிந்தது

திருக்கயிலையில் புனித மண்டபத்தில் சிவபெருமானும் தேவியும் எழுந்தருளி இருக்கும்போது, தேவ சிரேட்டர்கள் வழிபாடு செய்ய ஒதுங்கி நிற்கிறார்கள். அதுபோது, சிவபெருமான் உலக மக்களை உய்விக்க ஒரு திருவிளையாடல் செய்ய விடைபெற்றுச் செல்ல இருக்கும் திருமாலை கடைக்கண் நோக்கால் நிறுத்திக் கொண்டு, உமையைப் பார்த்து, தனக்கு சொக்கட்டான் ஆட விருப்பம் இருப்பதாகத் தெரிவித்தார். 

அவ்விதம் ஆடியதில், அம்பிகை பக்கம் வெற்றி ஆனது.  இறைவன் தனது பக்கம் வெற்றி பெறும் திறன் உடைத்தாய் இருந்தும், அவ்விதம் செய்யாமல் தனக்கே வெற்றி என்று தேவியை மருட்டினார். 

களிப்படைந்த தேவி கலக்கம் உற்று எழும் தருணத்தில், சிவபெருமான் பிணக்கை ஒழித்து மீண்டும் ஆட உமாதேவியா ஏவினார். அதற்கு உமை, நமக்குள் நடுநிலையாகத் திருமாலை வைத்து ஆடுவோம் என, இருவரும் சம்மதித்து அப்படியே ஆடினார்கள். அதிலும் அம்மையே வெற்றி பெற்றாள்.  சிவபெருமான் தாமே வெற்றி பெற்றதாகச் சொன்னார். 

உமாதேவி திருமாலிடம் கேட்க, அது சமயம் சிவபெருமானும் திருமாலை தனக்கு வெற்றி என்று கூறும்படி பார்த்தார்.  அதனால் உமாதேவி, "மாலவா, உண்மையை ஒளியாது சொல்லுக" என்றாள். திருமால், "சிவன் தலையில் உள்ள ஓர் அதிசயத்தைக் கவனித்து இருந்தேன். அதனால், ஆட்டத்தைக் கவனிக்கவில்லை" என்று சொல்ல, உமை, "நரர்கள் அன்றோ கௌரவத்தை விரும்பாது சமயத்திற்கு ஏற்றவாறு நடப்பார்கள்.  நீ சிறந்த தேவாம்சத்தைப் பெற்றும் இப்படிச் சொல்வது அழகா" என்று சிவபெருமான் "திரி நேத்திரங்கள் உண்மையை ஒளிக்காது ஆதலால், அவற்றை நான் கரத்தால் மறைப்பேன். நான் கூறுவது உண்மையாயின், ஒளி மழுங்கி இருள் மூடட்டும். இல்லாவிடில் ஒளி வீசட்டும்" என்று சொல்லி எழுந்து இறைவன் கண்களை மறைத்து நின்றாள். உடனே உலகெங்கும் இருள் நிறைந்தது. அதனால் கலக்கமுற்ற தேவர்களும், முனிவர்களும் வந்து முறையிட, அதனை நந்திதேவர் இறைவனுக்குத் தெரிவித்து, அவர் உத்தரவின்படி, எல்லோரும் வந்து இறைவனையும் இறைவியையும் தொழுதனர். உடனே அம்மை கரத்தை எடுக்க, இருள் நீங்கியது. இறைவன் அடுத்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு வந்த எல்லோரையும் நோக்கி, "ஒரு திருவிளையாடல் காரணமாக இது நிகழ்ந்தது. இனி இவ்விதம் நடைபெறாது. இதனால் உங்களுக்கு துன்பம் கிடையாது" என்று அருளி விடைகொடுத்து, முன் இருந்த மண்டபம் புகுந்தார். உமாதேவியும் உடன் பணிந்து, "என் பிழையைப் பொறுக்க" என்றாள்.

அச்சமயம் அந்தகன் அங்கு வந்து அரனை வணங்கினான். வந்த காரணம் வினவ, "இருள் சூழ்ந்ததற்குப் பரிகாரம் என்ன" என்றான்.  உலகம் துன்புற்றதை அறிந்த உமை, "அடியாள் செய்த பிழை இவ்விதம் சூழ்ந்தது. இப் பாபத்தைப் போக்கி அருள்" புரியும்படி சிவபெருமானைத் தொழுதாள். 

சிவபெருமான், "உமையே, நீ பாபத்தை எல்லாம் பதறி ஓட்டத்தக்க பாபநாசினி. ஆதலால், உன்னை பாபம் அணுகாது, அஞ்சேல்" என்ற சிவனை உமாதேவி மீண்டும் வணங்கி, "அடியாள் உய்ய அருள் செய்ய வேண்டும்" என, பரமன் தருமன் அறியும்படி பின்வருமாறு சொன்னார்...

"திருக்கயிலைக்குத் தெற்கில் உள்ள 1008 சிவத்தலங்கள் ஒவ்வொன்றிலும் வழிபாடு செய்து வந்தால் உன் பாபம் விலகும்.  அப்படி வழிபாடு செய்து வரும்போது எந்தத் தலத்தில் உனது இடது தோளும், இடது கண்ணும் துடிக்குமோ, அத் தலத்தில் வழிபாடு செய்து தவம் செய்வாயானால், உன் பாவம் அகன்று போம். நாம் அது போழ்து ஆங்கு எழுந்தருளி அத் தலத்து உறைவார் யாவரும் காண உன்னை ஆட்கொண்டு கலியாணம் செய்து கொள்வோம்" என்று அருளிச் செய்தார். இவற்றைக் கேட்ட அந்தகன் அரனடி பணிந்து அகன்றான்.

உமாதேவியும், இந்திராணி, கௌமாரி, வைஷ்ணவி, மகேஸ்வரி, பிராம்மி, வராகி, சாமுண்டு முதலிய சத்தமாதர்களுடன் பூலோகம் வந்தாள். பின் உமாதேவி, கங்கை முதலிய புனித தீர்த்தங்கள் பொருந்திய தலங்களைத் தரிசித்து, ஒவ்வொரு தலத்திலும் மூன்று நாட்கள் வீதம் தங்கி வழிபாடு செய்து வருவாராயினார். 

அப்படி வரும்போது உமாதேவி சிவபிரானையும் மறவாமல் இருந்தாள். ஒரு நாள் அம்பிகை "முன் பிருங்கிக்காக தனது உடலில் பாதியை சிவபிரான் தந்தார் அல்லவா. அவரைப் பற்றி தப்பு எண்ணம் கொண்டதற்காக நாம் இவ்விதம் அவதி உறுகின்றோம் என்று எண்ணி, இனி எதையும் யோசியாமல் நினைத்தலும் செய்தலும் கூடாது" என்று எண்ணித் திருவருளைச் சிந்தித்த வண்ணம் யாத்திரை செய்து வருவாளாயினாள். 

அப்படி வரும்போது, ஒரு வாசனை எழுந்தது. அதனால், அங்கு ஒரு விசேடம் இருத்தல் வேண்டும் என்று ஆராய்ந்தாள்.  அப்போது இடது தோமும் கண்ணும் துடித்தன. அதனால் மகிழ்ச்சி அடைந்து பார்க்க, அங்கே சிவலிங்கங்கள் இருந்தன.  உடன் அவ் வனத்தில் வடக்கே இருந்த கெடில நதியில் நீராடி, அதற்கு வடபால் உள்ள பெண்ணை நதியிலும் நீராடி, பாலோடையிலும் நீராடி, சிவபூசை செய்யுங்கால், பரமசிவன் உமாதேவி செவிக்கு எட்டுமாறு கூறுவாராயினர். "அம்பிகா, எவர்களாலும் செய்யப்பட்ட பிரம்மகத்தியும் பஞ்சமாபாதகங்களும் இத் தலத்தை மிதித்த மாத்திரத்தில் விலகிப் போம்" என்று சொல்லிச் சிவலிங்கத்தில் கலந்து அருளினார்.

உடனே உமாதேவியார் சத்தமாதர்களால் தரப்பட்ட பூசைப் பொருட்களைக் கொண்டு சிவபூசை செய்து வருவாளாயினாள்.  அதில் பலன் அடையாததால், வேனில் காலம் அக்கினி மத்தியிலும், கார்காலம் நீர்நிலையிலும் நின்று தவம் செய்தாள்.  பின் தலையைப் பூமியில் ஊன்றித் தவம் செய்தாள்.

இவ்வண்ணம் தவம் இயற்றும் உமாதேவிக்கு சிவபெருமான், விடையின் மேல் ஏறி, சிவகணங்கள் சூழ வந்து காட்சி தந்தருளினார். பின் "இத்தலத்தில் நீ ஒரு கலையோடு உறைந்து, உன்னை அண்டினார் பாவம் அகலுமாறு 'அருந்தவ நாயகி' என்ற காரணப் பெயருடன் இருந்து அருள் புரிவாயாக. மற்ற கலைகள் எல்லாம் பெரியநாயகி என்னும் பெயரோடு விளங்குவதாக.  ஆடிப் பூரத்தில் இங்கு உள்ள யாவரும் காண திருமணம் செய்வோம்" என்று கூறி தவநாயகி கரத்தைப் பிடித்தழைத்து பாடல மூலலிங்கத்தில் கலந்து அருளினார்.

சிவபெருமான் மூவுலகத்தார் புடைசூழ வந்து, தேவ தச்சனால் கட்டிய கலியாண மண்டபத்தில் எழுந்தருளினார்.  எம்பெருமானுக்கும் எம்பெருமாட்டிக்கும் மங்கள அபிடேகம் செய்வித்து, புத்தாடை உடுத்தி, ஆபரணங்களால் அலங்கரித்து, வாத்தியங்கள் முழங்க, திருமால் முதலியோர் பாடலநாதனுக்கும், பாடலநாயகிக்கும் பாணிக் கிரகணம் செய்தார்கள்.

திருப்பாதிரிப் புலியூரின் பிற பெயர்கள் ---

சிவபெருமான் சித்தரூபம் கொண்டு சிருட்டித்தலால் சித்தபுரி.  உமாதேவி கன்னியாய் இருந்து தவமிருந்ததால், கன்னிபுரம்.  வியாக்கிரபாத் பூசித்ததால் வியாக்ரபுரி அல்லது புலிசை.  அப்பர் கரை ஏறியதால் தயாபுரி அல்லது உத்தாரபுரம் என்பார்.

சுவாமி பெயர்கள் ---  பாடலீசுவரர், உத்தாரேசுவரர், சித்தேசுவரர், தோன்றாத்துணைவர்.

அம்பிகை பெயர்கள் ---  அருந்தவ நாயகி, பெரிய நாயகி, தோகையம்பிகை.

நடு நாட்டுத் திருத்தலம் ஆகிய திருப்பாதிரிபுலியூர் கடலூர் நகரின் ஒரு பகுதி. திருப்பாதிரிபுலியூர் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவிலும், கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மீ. தூரத்திலும் கோயில் உள்ளது. நகரப் பேருந்து வசதிகள் உண்டு.

திருஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் தந்து அருளிய திருப்பதி ஆகும்.

கருத்துரை

திருமால் மருகரே, முருகவேளே, திருப்பாதிரிப்பூலியூரில் எழுந்தருளிய ஆறுமுகக் கடவுளே, சிறியேனுக்குத் தகுதி இல்லையாயினும், குருமூர்த்தமாக நீரே வந்து உபநிடதங்களின் உண்மைகளை உபதேசித்து உய்விப்பீராக.





No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...