திருத் துறையூர் - 0753. ஆரத்தன பாரத்துகில்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஆரத்தன பாரத்துகில் (திருத்துறையூர்)

முருகா!
நன்மையைத் தராத விலைமாதர் உறவை விட்டு,
தேவரீரது திருவருள் பெற அருள்.


தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
     தானத்தன தானத்தன ...... தனதான

 
ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில்
     யாழ்வைத்திசை கூரக்குழ ...... லுடைசோர

ஆகப்பனி நீரப்புழு கோடக்குழை யாடப்பிரை
     யாசப்படு வார்பொட்டணி ...... சசிநேர்வாள்

கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரை
     கோவைக்கனி வாய்பற்கதி ...... ரொளிசேருங்

கோலக்குயி லார்பட்டுடை நூலொத்திடை யார்சித்திர
     கோபச்செய லார்பித்தர்க ...... ளுறவாமோ

பூரித்தன பாரச்சடை வேதக்குழ லாள்பத்தர்கள்
     பூசைக்கியல் வாள்பத்தினி ...... சிவகாமி

பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர்
     போகர்க்குப தேசித்தருள் ...... குருநாதா

சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட
     சோர்விற்கதிர் வேல்விட்டருள் ...... விறல்வீரா

தோகைச்செய லாள்பொற்பிர காசக்குற மான்முத்தொடு
     சோதித்துறை யூர்நத்திய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


ஆரத் தனபாரத் துகில் மூடி, பலர் காணக் கையில்
     யாழ் வைத்து, இசை கூர, குழல் ...... உடைசோர,

ஆகப் பனி நீர், புழுகு ஓட, குழை ஆட, பிரை-
     யாசப் படுவார், பொட்டு அணி ...... சசிநேர், வாள்

கூரக் கணை வேல் கண், கயல் போலச்சுழல்வார், சர்க்கரை
     கோவைக் கனி வாய், பல் கதிர் ...... ஒளிசேரும்

கோலக் குயிலார், பட்டு உடை நூலோத்த இடையார், சித்திர
     கோபச் செயலார், பித்தர்கள் ...... உறவுஆமோ?

பூரித் தனபார, சடை வேதக் குழலாள், பத்தர்கள்
     பூசைக்கு இயல்வாள், பத்தினி, ...... சிவகாமி,

பூமிக் கடல், மூவர்க்கும் முனாள், பத்திரகாளி, புணர்
     போகர்க்கு உபதேசித்து அருள் ...... குருநாதா!

சூரக் குவடு ஆழித் தவிடாய், முட்டு அசுரார் உக்கிட,
     சோர்வு இல் கதிர் வேல் விட்டு அருள் ...... விறல்வீரா!

தோகைச் செயலாள், பொன் பிரகாசக் குறமான் முத்தொடு
     சோதித் துறையூர் நத்திய ...... பெருமாளே.


பதவுரை

     பூரித் தன பார --- பருத்துள்ள தனபாரங்களையும்,

     சடை --- சடையையும்,

     வேதக் குழலாள் --- வேத சொருபமாக விளங்கும் கூந்தலையும் உடையவரும்,

     பத்தர்கள் பூசைக்கு இயல்வாள் --- அடியார்களின் வழிபாட்டை ஏற்றுக் கொள்கின்றவரும்,

     பத்தினி சிவகாமி --- சிவபெருமானுடைய பத்தினியும் ஆகிய சிவகாமி

       பூமிக் கடல் மூவர்க்கும் முனாள் --- இந்த நிலவுலகம், அதைச் சூழ்ந்துள்ள கடல்கள், மும்மூர்த்திகளுக்கும் முன்னானவள்,

     பத்திர காளி --- பத்திர காளியாகிய பார்வதிதேவியுடன்

     புணர் போகர்க்கு உபதேசித்து அருள் குருநாதா --- போகத்தை நுகர்கின்ற சிவபெருமானுக்கு உபதேசம் புரிந்து அருளிய குருநாதரே!

      சூரக் குவடு ஆழித் தவிடாய் --- சூரபதுமனும், கிரெளஞ்ச மலையும், கடலும் தவிடு பொடியாகுமாறும்,

     முட்டு அசுரார் உக்கிட --- போருக்கு வந்த அசுரர்கள் அழியவும்,

     சோர்வு இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா --- சோர்வு படாஒளி வீசும் வேலாயுதத்தை விடுத்து அருளிய பெருமையில் மிக்க வீரரே!

      தோகைச் செயலாள் --- மயில் போலும் ஒயிலான நடையை உடைவளும்,

     பொன் பிரகாசக் குறமான் முத்தொடு --- அழகும் ஒளியும் மிகுந்த முத்துப் போன்றவளாகிய, குறமகளாகிய வள்ளிநாயகியோடு,

     சோதித் துறையூர் நத்திய பெருமாளே --- அழகிய திருத்துறையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பித் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

       ஆர் அத் தன பாரத் துகில் மூடி --- முத்து மாலை அணிந்துள்ள மார்பில் உள்ள பருத்த முலைகளைப் புடைவையால் மூடி,

     பலர் காணக் கையில் யாழ் வைத்து இசை கூர --- பலரும் காணுமாறு கையிலே யாழை வைத்து இசை கூட்டிப் பாடி,

      குழல் உடை சோர -- கூந்தலும் உடையும் சரிய,

     ஆகம் பனி நீர் அப் புழுகு ஓட --- உடம்பில் பன்னீருடன் புனுகு கலந்து பூசி,

     குழை ஆடப் பிரையாசைப் படுவார் --- காதில் அணிந்துள்ள குழைகள் ஆட, முயற்சி செய்பவர்கள்.

      பொட்டு அணி சசி --- பொட்டு அணிந்துள்ள திங்களை ஒத்த முகத்தில்,

     நேர் வாள் --- வாள் போன்றதும்,

     கூரக் கணை வேல் கண் --- வேலைப் போன்று கூர்மையானதும் ஆன கண்களை,

     கயல் போலச் சுழல்வார் --- கயல்மீனைப் போல இங்கும் அங்குமாகச் சுழற்றுபவர்கள்.

      சர்க்கரை கோவைக் கனி வாய் --- சருக்கரையைப் போல இனிமையாகப் பேசும், கோவைக்கனி போன்ற சிவந்த வாயில்,

     பல் கதிர் ஒளி சேரும் --- ஒளி மிக்க பற்கள் தோன்,

     கோலக் குயிலார் --- அழகிய குயில் போலப் பேசுபவர்கள்.

      பட்டு உடை நூல் ஒத்த இடையார் --- நூல் போல் நுண்ணிய இடையில் பட்டாடையை அணிந்தவர்கள்.

     சித்திர கோபச் செயலார் --- பொய்க்கோபம் கொண்ட தந்திரப் பேச்சுக்களை உடையவர்கள்.

     பித்தர்கள் உறவு ஆமோ --- பித்தர்களாகிய விலைமாதரின் மகளிர்களின் உறவு ஆகுமா? ஆகாது.


பொழிப்புரை

     பருத்த தனபாரங்களையும், சடையையும், வேத சொருபமாக விளங்கும் கூந்தலையும் உடையவரும், அடியார்களின் வழிபாட்டை ஏற்றுக் கொள்கின்றவரும், சிவபெருமானுடைய பத்தினியும் ஆகிய சிவகாமி. இந்த நிலவுலகம், அதைச் சூழ்ந்துள்ள கடல்கள், மும்மூர்த்திகளுக்கும் முன்னானவள். பத்திர காளியாகிய பார்வதிதேவியுடன் போகத்தை நுகர்கின்ற சிவபெருமானுக்கு உபதேசம் புரிந்து அருளிய குருநாதரே!

         சூரபதுமனும், கிரெளஞ்ச மலையும், கடலும் தவிடு பொடியாகுமாறும், போருக்கு வந்த அசுரர்கள் அழியவும், சோர்வு படாஒளி வீசும் வேலாயுதத்தை விடுத்து அருளிய பெருமையில் மிக்க வீரரே!

         மயில் போலும் ஒயிலான நடையை உடைவளும், அழகும் ஒளியும் மிகுந்த முத்துப் போன்றவளும், குறமகளும் ஆகிய வள்ளிநாயகியோடு, அழகிய திருத்துறையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பித் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

         முத்து மாலை அணிந்துள்ள மார்பில் உள்ள பருத்த முலைகளைப் புடைவையால் மூடி, பலரும் காணுமாறு கையிலே யாழை வைத்து இசை கூட்டிப் பாடி, கூந்தலும் உடையும் சரிய, உடம்பில் பன்னீருடன் புனுகு கலந்து பூசி, காதில் அணிந்துள்ள குழைகள் ஆட, முயற்சி செய்பவர்கள். பொட்டு அணிந்துள்ள திங்களை ஒத்த முகத்தில், வாள் போன்றதும், வேலைப் போன்று கூர்மையானதும் ஆன கண்களை, கயல்மீனைப் போல இங்கும் அங்குமாகச் சுழற்றுபவர்கள். சருக்கரையைப் போல இனிமையாகப் பேசும், கோவைக்கனி போன்ற சிவந்த வாயில்,ஒளி மிக்க பற்கள் தோன்,
அழகிய குயில் போலப் பேசுபவர்கள். நூல் போல் நுண்ணிய இடையில் பட்டாடையை அணிந்தவர்கள். பொய்க்கோபம் கொண்ட தந்திரப் பேச்சுக்களை உடையவர்கள். பித்தர்களாகிய விலைமாதரின் மகளிர்களின் உறவு ஆகுமா? ஆகாது.

விரிவுரை

இத் திருப்புகழின் புதற் பகுதியில் விலைமாதர்களின் அழகையும், அவர்கள் புரியும் சாகசச் செயல்களையும் எடுத்துக் கூறி, பொருள் ஒன்றின் மீதே பித்துக் கொண்டவர்களாகிய அவர்களின் உறவு நன்மை தராதாகையால், அது ஆகாது என்று இயம்புகின்றார். ஆகாது எனவே, விலைமாதர் மேல் வைத்த சிந்தையை மாற்றி, உயிருக்கு நன்மை தருவதாகிய பரம்பொருளின் மீது பற்று வைத்து, வழிபாடு இயற்ற வேண்டும் என்பது கூறப்பட்டது.

அடிகளார் இதனை வலியுறுத்திப் பாடிய திருப்புகழ்ப் பாடல்கள் பல...

முடித்த குழலினர், வடித்த மொழியினர்,
     முகத்தில் இலகிய ...... விழியாலும்,
முலைக் கிரிகள் மிசை அசைத்த துகிலினும்,
     இளைத்த இடையினும் ...... மயல்ஆகி,

படுத்த அணை தனில் அணைத்த அவரொடு,
     படிக்குள் அநுதினம் ...... உழலாதே,
பருத்த மயில் மிசை நினைத்த பொழுது,
     பதத்து மலர்இணை ...... அருள்வாயே.

என்று திருத்தணிகைத் திருப்புகழிலும்,

மகுடக்கொப்பு ஆடக் காதினில்,
     நுதலில் பொட்டு ஊர, கோதிய
     மயிரில் சுற்று ஓலைப் பூவொடு ...... வண்டுபாட
வகைமுத்துச் சோரச் சேர்நகை
     இதழில் சொல் சாதிப் பார், இயல்
     மதனச் சொல் பாடு, கோகில ...... ரம்பைமாதர்

பகடிச் சொல் கூறிப் போர் மயல்
     முக இச்சைப் பேசி, சீர் இடை
      பவளப் பட்டு ஆடைத் தோள், இரு ...... கொங்கைமேலாப்
பணம் மெத்தப் பேசித் தூது இடும்
     இதயச் சுத்த ஈனச் சோலிகள்,
     பலர் எச்சிற்கு ஆசைக் காரிகள் ...... சந்தம் ஆமோ?

என்று கச்சித் திருப்புகழிலும்,

கன ஆலம் கூர் விழி மாதர்கள்,
     மன சாலம் சால் பழிகாரிகள்,
     கனபோக அம்போருகம் ஆம்இணை ......  முலைமீதே
கசிவு ஆருங் கீறு கிளால் உறு
     வசைகாணும் காளிம வீணிகள்,
     களிகூரும் பேய்அமுது ஊண்இடு ......     கசுமாலர்,

மன ஏல் அம் கீல கலாவிகள்,
     மயமாயம் கீத விநோதிகள்,
     மருள்ஆரும் காதலர் மேல்விழு ...... மகளீர்,வில்
மதிமாடம் வான் நிகழ் வார்மிசை
     மகிழ்கூரும் பாழ் மனம், ஆம் உன
     மலர்பேணும் தாள் உனவே அருள் ...... அருளாயோ?

என்று திருவாலங்காட்டுத் திருப்புகழிலும் அடிகள் படியுள்ளது அறிக.

தாயுமான அடிகளும் இத்தகைய வேண்டுகோளை மலைவளர் காதலியாகிய அம்பிகையிடம் வேண்டுகின்றார்.

   தெட்டிலே வலிய மடமாதர் வாய் வெட்டிலே,
        சிற்றிடையிலே, நடையிலே,
      சேல்ஒத்த விழியிலே, பால்ஒத்த மொழியிலே,
        சிறுபிறை நுதல் கீற்றிலே,
  பொட்டிலே, அவர்கட்டு பட்டிலே, புனை கந்த
        பொடியிலே, அடியிலே, மேல்
      பூரித்த முலையிலே, நிற்கின்ற நிலையிலே,
        புந்திதனை நுழைய விட்டு,
 நெட்டிலே அலையாமல், அறிவிலே, பொறையிலே,
        நின் அடியர் கூட்டத்திலே,
      நிலைபெற்ற அன்பிலே, மலைவற்ற மெய்ஞ்ஞான
        ஞேயத்திலே, உன் இருதாள்
 மட்டிலே, மனதுசெல, நினது அருளும் அருள்வையோ?
        வளமருவு தேவை அரசே!
      வரை ராசனுக்கு இருகண் மணியாய் உதித்த மலை
        வளர்காத லிப்பெண்உமையே.         --- தாயுமானார்.

விலைமாதர் இன்பம் முதலான உலக இன்பங்களை அனைத்தும் சிறிது நேரம் நீடித்திருக்கக் கூடியவை. பின்பு அவை தெவிட்டும். ஏனவே, உலக இன்பங்கள் சிற்றின்பம் எனப்பட்டது. அது பூவில் சிறிதளவு உள்ள தேனைப் போன்றது. ஆயின், இறையின்பமானது எப்போதும் வற்றாத தேனாறு போல்வது. அந்த்த் தேனை நினைத்தாலும், இன்பம் மிகுக்கும். அதைப் பற்றிப் பேசினாலும் இன்பம் மிகுக்கும். கண்டாலும் இன்பம் மிகுக்கும். சுவைத்தாலும் இன்பம் மிகுக்கும்.

தினைத்தனை உள்ளது ஓர்! பூவினில்தேன் உண்ணாதே,
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்து எலும்பு உள்நெக, ஆனந்தத் தேன்சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ!

என்னும் திருவாசகம் இந்தத் தெளிவைத் தருகின்றது.

கோத்தும்பி என்பது அரசவண்டு ஆகிய ஆன்மைவைப் குறித்தது.

"ஓர்" என்பதை 'ஒரு பூ' எனக் கொள்ளாமல், "ஓர்" என்பதை 'ஆராய்ந்து அறிவாயாக' என்னும் விளியாகக் கொண்டு, இப் பாடலை நோக்கினால் அருமை விளங்கும்.

பூரித் தன பார ---

பருத்துள்ள இரு தனபாரங்களும் உயிர்களுக்கு இகபர நலன்களை எப்போதும் வாரி வழங்குபவை. வாழ்வியல் நலங்களையும், அருளியல் நலங்களையும் வாரி வழங்குபவை அம்மையின் இரு தனங்கள் ஆகும். தனம் என்னும் சொல்லுக்கு செல்வம் என்று பொருள் உண்டு. அருட்செல்வத்தை வார் வழங்குவதால் "தனம்" என்று மார்பகத்துக்குச் சொல் வந்தது.

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய, பின்வரும் தேவாரப் பாடல் இதனைத் தெளிவாக்கும்....

போகம்ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்அகலம்
பாகம்ஆர்த்த பைங்கண்வெள் ஏற்று அண்ணல், பரமேட்டி,
ஆகம்ஆர்த்த தோல்உடையன், கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

இப் பாடலின் பொழிப்புரை :

இன்பத்துக்கு நிலைக்களனாய் உள்ளனவும் அணிகலன்கள் பொருந்தியனவுமான தனங்களை உடைய உமையம்மையைத் தன்னோடு அழகிய திருமேனியின் இடப்பாகமாக ஒன்றாக இருக்கச் செய்தவனும், பசிய கண்களையும் வெண்மையான நிறத்தையும் உடைய ஆனேற்றைத் தனது ஊர்தியாகக் கொண்ட தலைவனும், மேலானவனும், திருமேனியின் மேல் போர்த்த தோலாடையுடையவனும், இடையிற் கட்டிய கோவண ஆடையின் மேல் நாகத்தைக் கச்சாக அணிந்தவனுமான நம் பெருமான் எழுந்தருளி இருக்கும் தலம் திருநள்ளாறு.

இப் பாடலின் குறிப்புரை :

ஆர்த்த - நிறைந்த. திருநள்ளாற்றில் எழுந்தருளி உள்ள அம்மையின் திருநாமம் "போகம் ஆர்த்த பூண்முலையாள்" என்பது. "தன்னோடும்" என்றது அம்மையைத் தன்னின் வேறாக இடப்பாகத்துக்கு எழுந்தருளச் செய்த நிலையைக் குறித்தது.

அனல் வாதத்தின்போது திருஞானசம்பந்தர் தாம் அருளிய பாடல் தொகுப்பில் கயிறு சார்த்திப் பார்த்தபோது, இப் "போகமார்த்த பூண்முலையாள்" என்னும் திருப்பதிகம் கிடைத்தது. திருமுறையில் கயிறு சார்த்திப் பார்க்கும் மரபைத் திருஞானசம்பந்தரே தொடங்கி வைத்துள்ளதை இதனால் அறியலாம்.

"போகமார்த்த பூண்முலையாள்" என்னும் இத்தொடரால் இன்பதுன்ப அநுபவங்களாகிய போகத்தைத் தன் மார்பகத்தே தேக்கி வைத்து உயிர்களாகிய தம் பிள்ளைகட்குப் பாலாக ஊட்டுகிறாள் அம்மை என்ற குறிப்பும் கிடைக்கிறது. உலகில் தாய்மார்கள் தங்கள் மார்பகத்தே திருவருளால் சுரக்கின்ற தாய்ப்பாலைத் தங்கள் குழந்தைகட்குக் கரவாது கொடுத்து வரவேண்டும் என்பதையும் இது உணர்த்துகிறது. தாய்ப்பாலே குழந்தைகட்குச் சிறந்த உணவு. நோய்த்தடுப்பு மருந்து. தாய்க்கும் சேய்க்கும் நலம் பயப்பது என்பது உணர்க.

சடை ---

சடை என்பது ஞானத்தைக் குறிக்கும்.

நூலும் சிகையும் நுவலில் பிரமமோ?
நூல் அது கார்ப்பாசம், நுண்சிகை கேசம் ஆம்,
நூல் அது வேதாந்தம், நுண்சிகை ஞானம் ஆம்,
நூல் உடை அந்தணர் காணும் நுவலிலே. ---   திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ----

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும். சிறப்பாகிய பெயரை உயிர் பெறுவது தூய அகம்புற ஒழுக்கத்தினால் ஆகும். புறத்திலு காணப்படும் அடையாளங்கள் அக ஒழுக்கத்தைக் காட்டும் அறிகுறியே ஆகும். அகவொழுக்கம் இல்லாமல் புறவொழுக்கமாகிய அடையாளம் மட்டும் கொள்வது தன்னையும் பிறரையும் வஞ்சிக்கும் பாவச் செயலே ஆகும். அம்முறையில் பேர்கொண்ட பார்ப்பார் பூணூலும் உச்சிக் குடுமியும் விடாது பற்றிக் கொண்டு தம்மைப் பார்ப்பார் என்பர். இவை பிரமத் தன்மைய உணர்த்தும் உண்மை ஆகா. புறத்தில் காணப்படும் நூலும், சிகையுமே பிரமம் ஆகாது என்பதை உணர்த்த குறிப்பே நுவலிற் பிரமமோ எனப்பட்டது. நூல் என்பது கயிறு. சிகை என்பது மயிர்முடி. இவற்றின் அக அடையாளமாக நீங்காத உயிர் ஒழுக்கமாக உள்ளன முறையே மறைமுடிவு எனுப்படும் வேதாந்தமும், அம் முடிபால் பெறப்படும் முப்பொருள் உண்மையாகிய திருவடி உணர்வுமே ஆம்.

வேதக் குழலாள் ---

வேத முடிவில் உயிர்க்கு விளங்குகின்ற ஞானத்தைக் குறிப்பது கூந்தல் என்பதால் "வேதக் குழலாள்" என்றார்.

 
பத்தர்கள் பூசைக்கு இயல்வாள் ---

இயலுதல் என்னும் சொல்லுக்கு, கூடியது ஆதல், நேர்தல், பொருந்துதல், தங்குதல், செய்யப்படுதல், உலவுதல், உடன்படுதல், அணுகுதல், ஒத்தல் என்றெல்லாம் பொருள் உண்டு.

அடியார்கள் அன்போடு புரியும் வழிபாட்டை ஏற்று, அவருள்ளத்தில் பொருந்தி இருப்பவள் அம்மை.
  
பூமிக் கடல் மூவர்க்கும் முனாள் ---

இந்த உலகத்திற்கும், கடல்களுக்கும், முறையே அழித்தல், காத்தல், படைத்தல் என்னும் முத்தொழில்களையும் உடையவர்கள் உருத்திரன், திருமால், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் முன் ஆனவள் உம்மை என்கின்றார் அடிகளார்.

பத்திர காளி ---

பத்திரம் - காவல் புரிதல். காவல் படுத்துதல். காவல் தெய்வமாக உள்ளவள் பத்திர காளி. கொற்றவை எனப்படுபவள்.

பத்திர காளியாகிய பார்வதிதேவியுடன்

புணர் போகர்க்கு உபதேசித்து அருள் குருநாதா ---

உமாதேவியோடு போகத்தை நுகர்வதன் மூலம் உயிர்களுக்குப் போகத்தை அருள்பவர் சிவபெருமான்.
  
தென்பால் உகந்து ஆடும் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காண் ஏடீ!
பெண்பால் உகந்திலனேல், பேதாய்! இருநிலத்தோர்
விண்பால் யோகு எய்தி வீடுவர்காண் சாழலோ.

என்பது திருவாசகம்.

இயல்பாக ஆணவ மலத்தையுடைய உயிர்கள் முதற்கண் உலக இன்பத்தைத் துய்த்து,  மலம் பரிபாகம் உற்ற பின்பே வீட்டின்பத்தை அடைதற்கு உரியன. ஆதலின், உலக இன்பத்தைத் துய்க்கும் நிலையில் உள்ளவர்கட்கு அவ்வின்பம் அமைதல் பொருட்டே போக வடிவத்தையும் இறைவன் கொண்டு நிற்கின்றான். அங்ஙனம் கொள்ளவில்லை என்றால், யோக நிலைக்கு உரியர் அல்லாதவரும் யோக நிலையை மேற்கொண்டு பயன்பெற மாட்டாது அழிவர்.

"இணர் எரித் தேவும் தானே,
     எரிவளர்ப் பவனும் தானே
உணவுகொள் பவனும் தானே
     ஆகிய ஒருவன், வையம்
புணர்வுறு போகம் மூழ்கப்
     புருடனும் பெண்ணும் ஆகி
மணவினை முடித்தான் அன்னான்
     புணர்ப்பை யார் மதிக்க வல்லார்"

என்பது திருவிளையாடல் புராணம்.  

பின்வரும் சிவஞானசித்தியார் பாடல்கள் காண்க.

போகியாய் இருந்து உயிர்க்குப்
         போகத்தைப் புரிதல் ஓரார்;
யோகியாய் யோக முத்தி
         உதவுதல் அதுவும் ஓரார்;
வேகி ஆனாற் போல் செய்த
         வினையினை வீட்டல் ஓரார்;
ஊகியா முடர் எல்லாம் 
         உம்பரின் ஒருவன் என்பர்.

சிவபெருமான் திருமேனி கொள்ளும் போது போக வடிவம் மேற்கொண்டு உயிர்களுக்கு இன்ப வாழ்க்கையை அருளுவான் என்பதையும் உணரமாட்டார். சில நேரங்களில் அவன் யோகத் திருமேனி மேற்கொண்டு உயிர்களுக்கு வீடு பேறு அருளுவதையும் மாட்டார்கள். மற்றும் சில நேரங்களில் சிவபெருமான் கொண்டவனைப் போல் திருமேனி தாங்கி உயிர்களின் வினைகள் கெடுப்பான் என்பதையும் இவர்கள் உணரமாட்டார்கள். இவ்வாறு இறைவன் திருமேனி கொள்ளும் முறைமையினை ஆராய்ந்து வலிமை இல்லாதார் சிவபெருமானைத் தேவர்களில் ஒருவனாகக் கொள்ளுவார்.


ஒன்றோடு ஒன்று ஒவ்வா வேடம்
         ஒருவனே தரித்துக் கொண்டு 
நின்றலால் உலகம் நீங்கி
         நின்றனன் என்றும் ஓரார்;
அன்றி அவ்வேடம் எல்லாம்
         அருள்புரி தொழில் என்று ஓரார்
கொன்றது வினையைக் கொன்று
         நின்ற அக்குணம் என்று ஓரார்.

ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட போக வடிவம், யோக வடிவம், வடிவம் ஆகியவற்றை சிவபிரான் தானே தரித்துக் கொண்டு நிற்கிறார் அவன் உலகத்தினைக் கடந்தவன் என்பதனையும்  இல்லையோர் உணரமாட்டார்கள். அதுவும் அல்லாமல் வேகவடிவம் இறைவன்  சிலரை ஒறுத்தனன் என்பதற்குப் பொருள் அவர்களுடைய தீவினையை நீக்கி அவர்களுக்கு அருள்  பாலித்தான் என்பதுவே என இவர்கள் அறியார்.


நாயகன் கண் நயப்பால்
         நாயகி புதைப்ப, எங்கும்
பாய் இருள் ஆகிமூட,
         பரிந்து உலகினுக்கு நெற்றித்
தூய நேத்திரத்தினாலே
         சுடர் ஒளி கொடுத்த பண்பின்,
தேயம் ஆர் ஒளிகள் எல்லாம்
         சிவன் உருத் தேசது என்னார்.  

ஒரு சமயம் இறைவி தன் திருவுள்ள மகிழ்ச்சியினால் இறைவனது இரு கண்களையும் தனது இரு கரங்களால் மூடித் திருவிளையாட்டு அயர்ந்தாள். அப்போது உலகு எங்கும் இருள் பரந்து மூடியது. உலகத்தில் உள்ளார்களிடத்தில் கொண்ட பரிவினால் இறைவன் தனது தூய்மையான நெற்றிக் கண்ணைத் திறந்தனன். அப்பொழுதே உலகம் முழுவதும் ஒளி படர்ந்தது. இவ்வாறு அருளிய சிவபிரானுடைய திருமேனியே பேரொளிப் பிழம்பு என்று இவர்கள் அறிந்திலர்.


கண்ணுதல் யோகு இருப்ப,
         காமன் நின்றிட வேட்கைக்கு
விண்உறு தேவர் ஆதி
         மெலிந்தமை ஓரார்; மால்தான்
எண்ணிவேள் மதனை ஏவ,
         எரிவிழித்து, இமவான் பெற்ற
பெண்ணினைப் புணர்ந்து உயிர்க்குப்
         பேரின்பம் அளித்தது ஓரார்.

ஒரு சமயம் நெற்றிக்கண்ணினை உடைய சிவபெருமான் யோகத்தில் இருந்தருளினன். அப்பொழுது இன்பச் சுவைக்கு அதிதெய்வமாகிய மன்மதன் இருந்த போதும், உலகில் இன்ப வேட்கை இல்லாது நலியலாயிற்று. இதைக் கண்ணுற்ற திருமால் மன்மதனை ஏவிச் சிவபெருமான் மீது மலர்க்கணை தொடுக்குமாறு தூண்டினான். சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை நோக்க, அவன் எரிந்து சாம்பலானான். அதன் பின்னர் சிவபெருமான் மலை அரையன் பெற்ற உமையம்மையைக் கூடி உலகத்து உயிர்களுக்கு இன்பச் சுவையை அளித்தருளினான். இந்த நிகழ்ச்சியினையும் இவர்கள் உணரார்.

படைப்பு ஆதித் தொழிலும், பத்தர்க்கு
         அருளும் பாவனையும், நூலும்,
இடப்பாகம் மாதராளோடு
         இயைந்து உயிர்க்கு இன்பம் என்றும்
அடைப்பானாம், அதுவும் முத்தி
         அளித்திடும் யோகும், பாசம்
துடைப்பானாம் தொழிலும் மேனி
         தொடக்கானேல் சொல் ஓணாதே,

படைப்பு முதலிய ஐந்தொழில்கள் இயற்றுவதற்கும், மெய்யடியார்க்கு அருளுதல் பொருட்டு இறைவன் செய்யும் பாவனையாகிய ஊன நடனம் இயற்றுவதற்கும் ஆரணம் ஆகமங்களாகிய நூற்களை இயற்றுவதற்கும் உயிர்களுக்கு இன்பம் தருவதற்காக உமையம்மையோடு இயைந்திருக்க வேண்டுதற்கும், உயிர்களுக்கு வீடுபேறு அளிக்க யோகத்தில் இருந்து காட்ட வேண்டுதற்கும், உயிர்களின் பாசத்தைத் துடைப்பதாகிய தொழிலுக்கும் இறைவனுக்கு உருவத் திருமேனி இன்றியமையாததாயிற்று.

அத்தகைய சிவபெருமானுக்கு மெய்ப்பொருள் உண்மையை உபதேசம் புரிந்தவர் முருகப் பெருமான்.

கயிலைமலையின் கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த காலத்தில், சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் குகக் கடவுளை வணங்கிச் சென்றனர். தன்னை வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த பிரமதேவனை, அறுமுகனார் சிறைப்படுத்தி முத்தொழிலும் புரிந்து தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கென வெளிப்படுத்தினர்.

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக்கடவுள் தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார் மேனிப் புரிசடை அண்ணல் புதல்வ! இங்கு வருகஎன்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து குமரா! நின் பெருமையை உலகமெவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்கவொண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டும் என்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபக எறிந்த வள்ளலை நோக்கி,

அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையான் ஆதல், உரிமைக் குறித்துஆதல், நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவில் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வைரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்என்று எம்பிரானார் இனிது கூறினர்.

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு தந்தையே! ஓம் என்னும் எழுத்தின் உட்பொருளை உணராத பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

சிவபெருமான் மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழற வல்லேம் என்றனர்.

அரனார் கேட்டு செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமரும் தணிகை வெற்பை அடைகின்றோம்என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறு ஊர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர்.

குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப்பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகம் கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்தி தரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் உஞற்றியதால் அத்தணிகைமலை, "கணிகவெற்பு" எனப் பெயர் பெற்றதென்பர்.

கண்ணுதல் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர்வேல் அண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட அண்ணல் எழுந்து, குமரனை வணங்கி வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று, வந்தனை வழிபாடு செய்து பிரணவோபதேசம் பெற்றனர்.

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு
அதிர்கழல் வந்தனை அதனொடும், தாழ்வயிற்
சதுர்பட வைகுபு, தா அரும் பிரணவ
முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.     
                                                                                  --- தணிகைப் புராணம்.

நாத போற்றி என முது தாதை கேட்க, அநுபவ
 ஞான வார்த்தை அருளிய பெருமாளே               --- (ஆலமேற்ற) திருப்புகழ்.


நாதா குமரா நம என்று அரனர்
 ஓதாய் என, ஓதியது எப் பொருள்தான்   --- கந்தர்அநுபூதி

தமிழ்விரக, உயர் பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே  --- (கொடியனைய) திருப்புகழ்.

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது; ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின்முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகோடு தெளிதர, ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமாளே.
                                              --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர் செய் குருநாதா....     ---- திருப்புகழ்.

அவ்வாறு கூறிய அமுதமொழி இரண்டு செவிகளிலும் நிரம்பியது என்பது பொருள்.

தேவதேவன் ஆகிய சிவபெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத் தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.

உண்மையிலேயே சிவபெருமான் உணர, முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

தனக்குத் தானே மகன் ஆகிய தத்துவன்,
தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.     ---  தணிகைப் புராணம்.

மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,
     வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,
     எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
     தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!
     பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

அறிவு நோக்கத்தால் காரியப்படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

திருக்கோவையாரிலும்,

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.           --- திருமந்திரம்.

கனகம் ஆர் கவின்செய் மன்றில்
அனக நாடகற்கு எம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்....           --- குமரகுருபரர்.

பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே --- அபிராமி அந்தாதி.

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.  
                                                                              --- அபிராமி அந்தாதி.

சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,
உவந்து இருவரும் புணர்ந்து, ங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.                                                                                                        --- சிவஞான சித்தியார்.


சூரக் குவடு ஆழித் தவிடாய், முட்டு அசுரார் உக்கிட, சோர்வு இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா ---

முருகப் பெருமானுடைய விசுவ ரூபத்தைக் கண்டு வெருண்ட சூரபதுமன், "முருகப் பெருமானை வெல்லுவதும் கொல்லுவதும் பின்னர் ஆகட்டும். இக் குமரனைக் கொணர்ந்து என்னுடன் போர் புரிய விடுத்த தேவர் யாவரையும் முன்னே கொல்லுவன்" என்று சீறினான். கதிரவனும் அஞ்ச, உலக முழுதும் ஓரே இருள் வடிவாக நின்று ஆர்த்தனன். ஆலாலவிடம் போல் தோன்றிய அவ் இருளைக் கண்டு அமரர் அஞ்சினர். அவ் இருளில் சூரபன்மன் மலை போன்ற பேருருவம் கொண்டு வானவரை விழுங்குமாறு வானிடை எழுந்தான். அதனைக் குறிப்பினால் அறிந்த வானோரும் ஏனோரும் திசைதொறும் ஓடி திக்கு வேறு இன்றி திகைத்துக் கூற்றை எதிர்ந்த உயிர்களைப் போல் பதறிக் கதறித் துதிக்கலுற்றார்கள்.

நண்ணினர்க்கு இனியாய் ஓலம், ஞான நாயகனே ஓலம்,
பண்ணவர்க்கு இறையே ஓலம், பரஞ்சுடர் முதலே ஓலம்,
எண்ணுதற்கு அரியாய் ஓலம், யாவையும் படைத்தாய் ஓலம்,
கண்ணுதல் பெருமான் நல்கும் கடவுளே ஓலம் ஓலம்.

தேவர்கள் தேவே ஓலம், சிறந்த சிற்பரனே ஓலம்,
மேவலர்க்கு இடியே ஓலம், வேற்படை விமலா ஓலம்,
பாவலர்க்கு எளியாய் ஓலம், பன்னிரு புயத்தாய் ஓலம்,
மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம், ஓலம்.

"எம்பெருமானே! அடியேங்களைக் காத்து அருளும்" என்று வேண்டினார்கள். முருகவேள் தமது திருக்கரத்தில் உள்ள வேற்படையை நோக்கி, "இங்கிவன் உடலைப் பிளந்து எய்துதி இமைப்பில்" என்று பணித்து அருளினர். முருகப் பெருமான் விடுத்த வேலாயுதம் ஆயிரகோடி சூரிய ஒளியை உடையதாய், நெருப்பைச் சிந்திக்கொண்டு சென்றது. அதனால் சூரபன்மன் கொண்ட இருளுருவம் அழிந்தது.

ஏயென முருகன் தொட்ட
         இருதலை படைத்த ஞாங்கர்
ஆயிர கோடி என்னும்
         அருக்கரில் திகழ்ந்து தோன்றித்
தீஅழல் சிகழி கான்று
         சென்றிட அவுணன் கொண்ட
மாஇருள் உருவம் முற்றும்
         வல்விரைந்து அகன்றது அன்றே.

அதுகண்ட சூரபன்மன், வேலாயுதத்தினது வெம்மையை ஆற்றாது கடலுக்கு நடுவண் ஒளித்தனன். வேல் கடலின் அருகில் சென்றவுடன் கடல் வற்றி வறண்டு விட்டது.

திரைக்கடலை உடைத்துநிறை புனல்கடிது குடித்துஉடையும்
உடைப்புஅடைய அடைத்துஉதிரம் நிறைத்துவிளை யாடும்....
                                                                                 ---  வேல் வகுப்பு.

சூரபன்மன் அண்ட முகடு முட்ட, நூறாயிர யோசனை அளவுடைய பெரு மரமாகி நின்று, மண்ணும் விண்ணும் விழல் பரப்பி, கிளைகளை அசைத்து, உலகங்களுக்கு எல்லாம் பேரிடர் விளைத்தான்.  அப்போது உடுக்கள் உதிர்ந்தன. சூரியசந்திரர் கதி மாறினர். மண்ணுலகம் இடிந்தது. குலமலைகள் பொடிபட்டன. திக்கயங்கள் மடிவுற்றன. அது கண்ட வேலாயுதம் வெகுண்டு ஆயிரகோடி அக்கினி அண்டங்களின் தீப்பிழம்பு முழுவதும் ஒன்றுபட்டது போலாகி, மடம் பிடித்திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்தது. வேலாயுதத்தால் மாமரம் பிளக்கப்பட்டதும், மாளா வரம் பெற்ற சூரன் மடிந்திலன் ஆகி, பழைய அசுர வடிவம் கொண்டு, வாள் கொண்டு எதிர்த்துச் சீறினான். ஒப்பற்ற வேற்படை அவனுடைய உடம்பை இருகூறாகப் பிளந்து கடலிடை அவன் அடலை மாய்த்து, வேதங்கள் ஆர்ப்ப, தேவர்கள் துதித்துச் சிந்தும் பூமழைக்கு இடையே சென்று, அங்கியின் வடிவம் நீங்கி, அருள் வடிவைத் தாங்கி, வான கங்கையில் முழுகி கந்தக் கடவுளது கரமலரில் வந்து அமர்ந்தது.

புங்கவர் வழுத்திச் சிந்தும்
         பூமழை இடையின் ஏகி
அங்கியின் வடிவம் நீங்கி,
         அருள்உருக் கொண்டு, வான்தோய்
கங்கையில் படிந்து மீண்டு,
         கடவுளர் இடுக்கண் தீர்த்த
எங்கள்தம் பெருமான் செங்கை
         எய்திவீற்று இருந்ததுஅன்றே.

சிவபெருமான் தந்த வர பலத்தால், சூரபன்மன் அழிவில்லாதவன் ஆகி, மீட்டும் எழுந்து ஒரு கூறு சேவலும், மற்றொரு கூறு மயிலுமாகி, மிக்க சினத்துடன் சிறகுகளை வீசி, அதனால் உலகங்களைத் துன்புறுத்தி, முருகவேள் திருமுன் வந்தான்.

தாவடி நெடுவேல் மீளத்
         தற்பரன் வரத்தால் வீடா
மேவலன் எழுந்து மீட்டு
         மெய்பகிர் இரண்டு கூறும்
சேவலும் மயிலும் ஆகி
         சினங்கொடு தேவர் சேனை
காவலன் தன்னை நாடி
         அமர்த்தொழில் கருதி வந்தான்.

அவ்வாறு மீட்டும் அமர் புரிய வந்த ஆற்றலின் மிக்க அந்த இரு பறவைகளையும் எம்பெருமான் கருணை நாட்டத்துடன் நோக்கி அருளினார். உடனே சேவலும் மயிலும் போர் புரியும் எண்ணமும் சீற்றமும் செற்றமும் நீங்கி, தெளிந்த உள்ளமும், சிவஞானமும், அன்புருவமும் பெற்றன. செவ்வேள் பரமன் சேவலைக் கொடியாகவும், மாமயிலை வாகனமாகவும் கொண்டருளினார். ஆயிரத்தெட்டு அண்டங்களும் வணங்க வாழ்ந்த சூரபன்மன் சேவலும் மயிலும் ஆகி அகிலாண்ட கோடி எல்லாம் வணங்கி வாழ்த்தும் வரம்பிலாப் பேறு பெற்றான்.  அவனது தவத்தின் பெருமை அளப்பரியது! முருகப் பெருமானது அருட் பார்வையின் பெருமையும் அளப்பரியது. ஞானிகளது பார்வையால் இரும்பு பொன்னாவது போல், கந்தவேள் கருணை நோக்கால், சூரன் மறவடிவு நீங்கி, அறவடிவு பெற்றான்.

மருள்கெழு புள்ளே போல
         வந்திடு சூரன், எந்தை
அருள்கெழு நாட்டம் சேர்ந்த
         ஆங்குஅவன் இகலை நீங்கித்
தெருள்கெழு மனத்தன் ஆகி
         நின்றனன், சிறந்தார் நோக்கால்
இருள்கெழு கரும்பொன் செம்பொன்
         ஆகிய இயற்கை யேபோல்.

தீயவை புரிந்தா ரேனும்
         முருகவேள் திருமுன் உற்றால்
தூயவர் ஆகி மேலைத்
         தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ,
         அடுசமர் அந்நாள் செய்த
மாயையின் மகனும் அன்றோ
         வரம்புஇலா அருள்பெற்று உய்ந்தான். ---  கந்தபுராணம்.

.....           .....           .....  சகம்உடுத்த
வாரிதனில், புதிய மாவாய்க் கிடந்த, நெடும்
சூர்உடலம் கீண்ட சுடர்வேலோய்! - போர்அவுணன்

அங்கம் இருகூறுஆய், அடல் மயிலும், சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்து, எழுந்து தோன்றுதலும், - அங்குஅவற்றுள்

சீறும் அரவைப் பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே! -  மாறிவரு

சேவல் பகையைத் திறல்சேர் பதாகை என
மேவத் தனித்து உயர்த்த மேலோனே!    --- கந்தர் கலிவெண்பா.

தழைந்து எழும் தொத்துத் தடங்கை கொண்டு அப்பி,
     சலம் பிளந்து எற்றிப் ...... பொருசூர், அத்
தடம் பெரும் கொக்கைத் தொடர்ந்து, இடம் புக்குத்
     தடிந்திடும் சொக்கப் ...... பெருமாளே.   --- பொதுத் திருப்புகழ்.

கடல் சலம் தனிலே ஒளி சூரனை
     உடல் பகுந்து, இரு கூறு எனவே, அது
     கதித்து எழுந்து, ஒரு சேவலும் மாமயில் ...... விடும்வேலா!
                                                           --- அவிநாசித் திருப்புகழ்.

கொடியநெடும் கொக்குக் குறுகு அவுணன் பட்டுக்
     குரைகடல் செம்ப, சக்- ...... கரவாளச்
சிலை பக, எண் திக்குத் திகிரிகளும் பத்துத்
     திசைகளினும் தத்த, ...... செகம் ஏழும்
திருகு சிகண்டிப் பொன் குதிரை விடும் செட்டி!
     திறல! கொடும்பைக்கு உள் ...... பெருமாளே.   --- கொடும்பாளூர்த் திருப்புகழ்.

கொலைகாட்டு அவுணர் கெட, மாச் சலதி
     குளமாய்ச் சுவற, ...... முதுசூதம்
குறிபோய்ப் பிளவு பட,மேல் கதுவு
     கொதிவேல் படையை ...... விடுவோனே!  --- திருச்செந்தூர்த் திருப்புகழ்.

  
தோகைச் செயலாள், பொன் பிரகாசக் குறமான் முத்தொடு சோதித் துறையூர் நத்திய பெருமாளே ---

தோகை என்பது தோகையை உடைய மயிலைக் குறித்து நின்றது. மயில் போலும் சாயலை உடையவள் வள்ளிபிராட்டியார். பொன்மேனி உடையவர். குறவர் குலத்தில் வளர்ந்தவள்.

நத்து - விருப்பம்.

திருத்துறையூர் என்னும் திருத்தலத்தை விரும்பி, அங்கே திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பவர் முருகப் பெருமான்.

திருத்துறையூர் நடு நாட்டுத் திருத்தலம். ஆகும். மக்கள் வழக்கில் "திருத்தளூர்" என்று வழங்குகிறது. பண்ருட்டியில் இருந்து, பண்ணுருட்டி - புதுப்பேட்டை வழியாக அரசூர் செல்லும் சாலையில், 10 கிமீ. சென்று, மீண்டும் கரும்பூர் சாலையில் திரும்பி 5 கிமீ சென்று இத் திருத்தலத்தை அடையலாம்.  இறைவர் திருப்பெயர், குருநாதேசுவரர், பசுபதீசுவரர். இறைவியார் திருப்பெயர், சிவலோகநாயகி, பூங்கோதைநாயகி. தல மரம் கொன்றை. சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிபட்டு, இறைவரால் தவநெறியைப் பெற்று, திருப்பதிகம் அருளிய திருத்தலம்.

சுந்தரர் காலத்தில் ஊரில் தென்பால் ஓடிய பெண்ணையாறு; இன்று வடபால் ஓடுகிறது. (பழைய பெண்ணையாறு, மலட்டாறு என்னும் பெயரில் தென்பால் உள்ளது.) இத்தலத்திற்கு வந்த சுந்தரரை, இறைவன் கிழவடிவில் தோன்றி ஆட்கொண்ட இடம் துறையூருக்கு அண்மையில் உள்ள 'கிழப்பாக்கம்' என்பதாகும். அவ்விடத்தில் சிவலிங்கமும் கோயிலும் உள்ளன. இவ்வாறு ஆட்கொண்ட திருமேனியே பசுபதீஸ்வரர் - பூங்கோதை நாயகி எனப்படுகிறது. இறைவன் முதியவராக சுந்தரரை ஆட்கொண்ட இடத்திலிருந்து சுந்தரர் கோயிலைப் பார்த்துத் தரிசிக்க, அப்போது இறைவன் கோயில் விமானத்திலிருந்து ரிஷபாரூடராய்க் காட்சி தந்ததாகவும் சொல்லப்படுகிறது. (இதற்கேற்ப இருந்த கோயில் அமைப்பு பிற்காலத்தில் திருப்பணி செய்தோரால் மாற்றப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. 'சிவஞானசித்தியார் ' என்னும் சாத்திர நூலைப் பாடிய அருணந்தி சிவாசாரியார் (சகலாகம பண்டிதர்) அவதரித்து வாழ்ந்த தலம். (இவரது சமாதிக் கோயில் உள்ளது.) பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ளது; மேற்கு நோக்கிய சந்நிதி. வண்ணச் சரபம் தண்டபாணிசுவாமிகள் பாடல்களும் இத்தலத்திற்கு உள்ளது. இங்கு சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் வடக்கு நோக்கியும் இருப்பது நினைந்து தொழத்தக்கது. ரிஷபாரூடர் தவநெறி தந்த காட்சியும், சுந்தரர் கைகூப்பி வணங்கும் நிலையும் காணலாம். நால்வர் மண்டபத்தின் தூண் ஒன்றில் - இத்தலத்திற்கு சுந்தரர் பெண்ணையாற்றை ஓடத்தில் கடந்து வந்ததாகச் சொல்லப்படும் ஐதீகம் சிற்பமாக உள்ளது.


கருத்துரை

முருகா! நன்மையைத் தராத விலைமாதர் உறவை விட்டு, தேவரீரது திருவருள் பெற அருள்.





No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...