திருவாமூர் - சீத மதியம்




 அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சீத மதியம் (திருவாமூர்)

தான தனன தனத்தந் ...... தனதான

சீத மதிய மெறிக்குந் ...... தழலாலே

சீறி மதனன் வளைக்குஞ் ...... சிலையாலே

ஓத மருவி யலைக்குங் ...... கடலாலே

ஊழி யிரவு தொலைக்கும் ...... படியோதான்

மாது புகழை வளர்க்குந் ...... திருவாமூர்

வாழு மயிலி லிருக்குங் ...... குமரேசா

காத லடியர் கருத்தின் ...... பெருவாழ்வே

காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சீத மதியம் எறிக்கும் ...... தழலாலே,

சீறி மதனன் வளைக்கும் ...... சிலையாலே,

ஓதம் மருவி அலைக்கும் ...... கடலாலே,

ஊழி இரவு தொலைக்கும் ...... படியோ தான்?

மாது புகழை வளர்க்கும் ...... திருவாமூர்

வாழும், யிலில் இருக்கும் ...... குமரஈசா!

காதல் அடியர் கருத்தின் ...... பெருவாழ்வே!

காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.


பதவுரை

           மாது புகழை வளர்க்கும் திருவாமூர் வாழும் --- மாதருள் சிறந்தவரான திலகவதியாரின் புகழை விளங்கச் செய்யும் திருத்தலமான திருவாமூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள,

           மயிலில் இருக்கும் குமரேசா ---  மயில் மீது வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!

காதல் அடியர் கருத்தின் பெருவாழ்வே --- அன்போடு வழிபடும் அடியார்களின் கருத்தில் விளங்கும் பெருஞ் செல்வமே!

காலன் முதுகை விரிக்கும் பெருமாளே --- முதுகு பிளவுபடும்படியாக இயமனை வதைக்கும் பெருமையில் மிக்கவரே!

சீத மதியம் எறிக்கும் தழலாலே --- குளிர்ந்த நிலவு எறிகின்ற நெருப்பினாலும்,

          சீறி மதனன் வளைக்கும் சிலையாலே --- கோபத்துடன் மன்மதன் வளைக்கின்ற வில்லினாலும்,

          ஓதம் மருவி அலைக்கும் கடலாலே --- அலைகளை வீசி அலைக்கின்ற கடலினாலும்,

         ஊழி இரவு தொலைக்கும் படியோதான் --- ஊழிக்காலம் போல நீடிக்கின்ற இரவுப் பொழுது தொலைக்கக் கூடியதாகவா உள்ளது?


பொழிப்புரை


         மாதருள் சிறந்தவரான திலகவதியாரின் புகழை விளங்கச் செய்யும் திருத்தலமான திருவாமூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள மயில் மீது வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!

அன்போடு வழிபடும் அடியார்களின் கருத்தில் விளங்கும் பெருஞ் செல்வமே!

முதுகு பிளவுபடும்படியாக இயமனை வதைக்கும் பெருமையில் மிக்கவரே!

குளிர்ந்த நிலவு எறிகின்ற நெருப்பினாலும், கோபத்துடன் மன்மதன் வளைக்கின்ற வில்லினாலும், அலைகளை வீசி அலைக்கின்ற கடலினாலும், ஊழிக்காலம் போல நீடிக்கின்ற இரவுப் பொழுது தொலைக்கக் கூடியதாகவா உள்ளது?

விரிவுரை

இத் திருப்புகழ்ப் பாடல் அகத்துறையில் அமைந்தது. தலைவனை நினைந்து வருந்துகின்ற தலைவிக்கு மாலைப் பொழுது தொடங்கி விரகதாபம் மிகுந்திருக்கும். அதற்குத் துணை புரிவது மன்மதனின் கணைகள். குளிர்ந்த நிலவொளி மனதிற்கு மகிழ்வைத் தரும். கடலில் எழும் அலைகளின் ஓசையானது உடம்பிற்குக் குளிர்ச்சியையும், உள்ளத்திற்கு மகிழ்வையும் தரும். ஆனால், இவை யாவும் தலைவனை நினைந்து வருந்தும் தலைவிக்கு வேதனையைத் தருவதாக அமைந்துள்ளது. அதனால், இரவுப் பொழுது என்பது விடியாமல், ஒரு ஊழிக் காலம் போல் நீண்டு துன்ப மிகுதிக்குத் துணை புரிகின்றது.

உயிர் உணர்வில் கலகத்தைப் புரிந்து, தனது தொழிலில் வெற்றி கொள்ளுகின்றவன் மன்மதன். அவன் யாரிலும் வலியவன். இறைவனுக்கு மட்டும் அவன் அடியவன்.

மன்மதனுடைய கணைகளினால் அறிவாற்றல் அழியும். அவன் கணையினால் மாதவம் இழந்தோர் பலர்.

யயாதி, நகுஷன், புரூரவன், சர்யாதி, முதலிய ராஜரிஷிகளையும்,
காசிபர், சியவனர், கௌதமர், பராசரர், விசுவாமித்திரர் முதலிய பிரம்ம ரிஷிகளையும், இந்திரன், அக்கினி, பிரமன், திருமால் முதலிய இமையவர்களையும் னது மலர்க்கணைகளால் மயக்கி வாகை சூடியோன்.

மன்மதனுக்கு மலர்களே கணைகளாக உள்ளன.

மன்மதன் கணைகள் ஐந்து. அவையாவன --- தாமரை, மா, அசோகு, முல்லை, நீலம் என்பன.

இவற்றின் பெயர் முறையே --- உன்மத்தம் (பித்துக் கொள்ளுதல்) மதனம் (புணர்ச்சி விருப்பம்), சம்யோகம் (உள்ளக் கவர்ச்சி), சந்தாபம் (மனத் துன்பம்), வசீகரணம் (வசியப்படுத்துதல்) என்பனவாம்.

இவை செய்யும் அவத்தை --- சுப்ரயோகம், விப்ரயோகம், சோகம், மோகம், மரணம்.

சுப்ரயோகம் --- காதலரைப் குறித்தே சொல்லும் நினைவும் ஆக இருத்தல்.

விப்ரயோகம் --- காதலன் பிரிவினால் வெய்து உயிர்த்து இரங்கல்;

சோகம் --- வெதுப்பும், உணவு தெவிட்டலும்.

மோகம் --- அழுங்கலும், மொழி பல பிதற்றலும்.

மரணம் --- அயற்பும், மயக்கமும்.

மன்மதனுடைய கணைகளைப் பற்றியும், அவனுக்குத் துணை செய்யும் பொருள்களைப் பற்றியும் வரும் பாடல்களைக் காண்க.

வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,
     மலர்நீலம் இவைஐந் துமே
  மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி
     மனதில் ஆசையை எழுப்பும்;

வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;
     மிகஅசோ கம்து யர்செயும்;
  வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;
     மேவும்இவை செயும்அ வத்தை;

நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,
     நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,
  நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்
     நேர்தல், மௌனம் புரிகுதல்,

அனையவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

         தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,

         இவை உயிர்களுக்கு ஊட்டும் பண்புகள் --- தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும். சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும். அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும். குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும். நீலமலர் உயிரை ஒழிக்கும்,

         இவை உண்டாக்கும் நிலைகளாவன: எண்ணத்தில் அதுவே கருதுதல், மற்றொன்றில் ஆசை நீங்கல், பெருமூச்சுடன் பிதற்றுதல், உள்ளம் திடுக்கிடல், உணவில் வெறுப்பு, உடல் வெதும்புதல், மெலிதல், பேசாதிருத்தல், ஆசையுற்ற உயிர் உண்டோ இல்லையோ என்னும் நிலையடைதல் ஆகிய இவை பத்தும் ஆகும்.

மன்மதனுக்குத் துணை செய்யும் கருவிகள்......

வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;
     மேல்விடும் கணைகள் அலராம்;
  வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;
     வேழம்கெ டாதஇருள் ஆம்;

வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய
    வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;
  மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;
    மனதேபெ ரும்போர்க் களம்;

சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;
    சார்இரதி யேம னைவிஆம்;
  தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்
    தவறாதி ருக்கும் இடம்ஆம்;

அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்
    அமுதமே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
    அறப்பளீ சுரதே வனே!

ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு......

---     கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும்.
---     அம்பு கரிய வண்டின் கூட்டம் ஆகும்.
---     உயிர்களின் மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும்.
---     தேர் உலவும் தென்றற் காற்று ஆகும்.
---     குதிரைகள் பச்சைக் கிளிகளே ஆகும்.
---     யானை அழியாத இருளாகும்.
---     மிகுபடை பெண்கள் ஆவர்.
---     உடைவாள் தாழை மடல் ஆகும்.
---     போர் முரசு நீண்ட கொடைத்தன்மை பொருந்திய கடலாகும்
---     கொடி மகர மீன் ஆகும்.
---     சின்னம் வேனிலில் வரும் குயிலோசைகும்.
---     பெரிய போர்க்களம் உயிர்களின் உள்ளமே ஆகும்.
---     பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும்.
---     குடை சந்திரன் ஆவான்.
---     காதலி அழகு பொருந்திய இரதியே ஆவாள்.
---     அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள்  முடி ஆகும்.
---     எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் பெண்களின் அல்குல் ஆகும்.

தலைவன் மீது காதல் கொண்ட தலைவிக்கும் குளிர்ந்த சந்திரனது குளிர்ந்த ஒளியானது வெப்பத்தைச் செய்கின்றது. தென்றல் காற்று அனல் போல் வெம்மையையும் செய்கின்றது.

சீவான்மாவை நாயகியாகவும், பரமான்மாவை நாயகனாகவும் வைத்து, பரமான்மா ஆகிய நாயகன் மீது காதல் கொண்ட நாயகியான சீவான்மா மிகுந்த தாபத்தை அடைந்து வருந்துகின்றது. இங்ஙனம் நாயகி நாயக பாவத்தில் எழுந்த பாடல்கள் பல.

துள்ளுமத வேள் கைக்  கணையாலே
  தொல்லை நெடுநீலக்     கடலாலே
மொள்ளவரு சோலைக்     குயிலாலே
  மெய்யுருகு மானைத்    தழுவாயே     --- திருப்புகழ். 

நச்சு அரவம் மென்று நச்சு அரவம் என்று
     நச்சு உமிழ் களங்க ...... மதியாலும்,
நத்தொடு முழங்கு கனத்தொடு முழங்கு
     நத்திரை வழங்கு ...... கடலாலும்,

இச்சை உணர்வு இன்று இச்சை என வந்த
     இச்சிறுமி நொந்து ...... மெலியாதே,
எத்தனையி நெஞ்சில் எத்தனம் முயங்கி
     இத்தனையில் அஞ்சல் ...... எனவேணும்.

பச்சைமயில் கொண்டு பச்சை மற மங்கை
     பச்சை மலை எங்கும் ...... உறைவோனே! --- திருப்புகழ்.

தென்றலையம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த்
தென்றலையம்புய மின்கோ மருக செழுமறைதேர்
தென்றலையம்பு சகபூ தரவெரி சிந்திமன்றல்
தென்றலையம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே.     --- கந்தரந்தாதி.


இந்தக் கந்தர் அந்தாதிப் பாடலின் பதவுரை -----

தென் - வண்டுகள் இசை பாடுகின்ற, தலை - தலையிலே, அம்பு - கங்கையை, புனைவார் - அணியும் பரமசிவனது, குமார - மைந்தனே, திமிர - இருள் நிறமுடைய, முந்நீர் - கடல் சூழ்ந்த, தென் - அழகிய, தலை - பூதேவிக்கும், அம்புயம் - செந்தாமரைப் பூவில் வாசம் செய்கின்ற, மின் - சீதேவிக்கும், கோ - நாயகனாகிய திருமாலினது, மருக - மருகோனே, செழு - செழுமை தங்கிய, மறை தேர் - நான்கு வேதங்களும் துதிக்கின்ற, தென்றலை - தெற்கு திசையில் உள்ளதாகிய, அம் - அழகிய, புசக - பாம்பு போன்ற, பூதர - திருச்செங்கோட்டு மலை அதிபனே, எரி - நெருப்பை, சிந்தி - கொட்டிக் கொண்டு, மன்றல் - வாசனை தோய்ந்த, தென்றல் - தென்றல் காற்றானது, ஐ அம்பு - (என் தேகத்தில் மன்மதனது) ஐந்து அம்புகளும், படு - தைத்த, நெறி - புண் வழியே, போய் - நுழைந்து, உயிர் - என் உயிரை, தீர்க்கின்றது - (வருத்தி) நீக்குகின்றது.

இதன் பொழிப்புரை ---

வண்டுகள் இசை பாடுகின்ற, சென்னியின் கண் கங்கை நீரைத் தரித்திருக்கும் பரமசிவனின் மைந்தனே, இருளின் நிறம் கொண்ட, கடலால் சூழப்பட்ட, அழகிய பூதேவிக்கும், தாமரையில் வசிக்கும் சீதேவிக்கும், தலைவனாகிய திருமாலின், மருகரே,!வளமையான வேதங்கள் எல்லாம், பூசிக்கும், தெற்குத் திசைக் கண் இருக்கும், சிறந்த, சர்ப்பம் போல் காட்சி அளிக்கும் செங்கோட்டு அதிபரே! அக்கினியைக் கொட்டிக் கொண்டு, மணம் நிரம்பிய, தென்றல் காற்று, காமனின் ஐந்து பாணங்களும், என் உடலில் தைத்த புண்வழியே போய், என் உயிரை வருத்திப் போக்குகிறது.

முழுநிலவின் குளிர்ந்த ஒளியானது காதல் வயப்பட்டோர்க்கு நெருப்புப் போலத் தகிக்கும்.

பரவையார் மீது கால் கொண்ட நம்பியாரூரர் நிலையைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுமாறு காண்க.

ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல்கதிர்
தூர்ப்பதே! எனைத் தொண்டு கொண்டு ஆண்டவர்
நீர்த் தரங்க நெடுங் கங்கை நீள் முடிச்
சாத்தும் வெண்மதி போன்று இலை தண்மதி! 

ஏ! குளிர்ந்த இயல்பினையுடைய சந்திரனே! எனது துன்பத்தைக் கண்ட பின்னும் மேலும் மேலும், எப்போதும் போல் உனது போக்கின்படியே போகாமல் நின்று, உனது இயல்பான குளிர்ந்த கிரணம் அல்லாது இயல்புக்கு மாறான வெப்பக் கதிர்களைத் தூவுவதா!? எனைத் தடுத்து ஆளாகக் கொண்ட இறைவன் தனது நீர்மை பொருந்திய அலைகளையுடைய நெடிய கங்கை சூடிய நீண்ட முடியிலே அருளினால் எடுத்து அணிந்து கொண்ட வெள்ளிய சந்திரனைப்போல் நீ அமைந்தாய் இல்லையே.

நம்பியாரூரரை நினைந்து வருந்தும் பரவையாரின் நிலையைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் விளக்குமாறு காண்க.

"ஆரநறும் சேறு ஆட்டி, அரும் பனிநீர்
     நறும் திவலை அருகு வீசி,
ஈர இளந் தளிர்க்குளிரி படுத்து, மடவார்
     செய்த இவையும் எல்லாம்
பேரழலின் நெய் சொரிந்தால் ஒத்தன; மற்று
     அதன்மீது சமிதை என்ன
மாரனும் தன் பெருஞ்சிலையின் வலிகாட்டி
     மலர்வாளி சொரிந்தான் வந்து".

மணமுடைய கலவைச் சந்தனச் சேற்றைப் பூசியும், அரிய மணமுடைய பனிநீரை மழைபோலச் சிறு துளிகளாகப் பக்கங்களில் எல்லாம் வீசித் தெளித்தும், குளிரியினது ஈரமுள்ள இளந்தளிர்களை இட்டும், இவ்வாறாகத் தோழிப் பெண்கள் செய்த இவைகளும் இவை போன்றன பிறவும் ஆகிய எல்லா உபசாரங்களும் முன்னரே பெருநெருப்பாய் மூண்ட அதன்மேல் அதனை வளர்க்குமாறு நெய்யையும் சொரிந்தது போல் ஆயின. அதன்மேலும்,  அந்த அழலைப் பின்னும் வளர்க்க உணவு தருவது போல, மன்மதனும் வந்து தனது ஒப்பற்ற வில்லின் வலிமையைக் காட்டிப் பூவாகிய அம்புகளை மேன்மேலும் எய்தான்.

"மலர் அமளித் துயில் ஆற்றாள்; வரும் தென்றல்
     மருங்கு ஆற்றாள்: மங்குல் வானில்
நிலவு உமிழும் தழல் ஆற்றாள், நிறை ஆற்றும்
     பொறை ஆற்றாள்; நீர்மையோடும்
கலவமயில் என எழுந்து கருங்குழலின்
     பரம் ஆற்றாக் கையள் ஆகி,
இலவ இதழ்ச் செந்துவர்வாய் நெகிழ்ந்து, ஆற்றா
     மையின் வறிதே இன்ன சொன்னாள்".

பூம்படுக்கையிலே வீழ்ந்த பரவையார் அந்த மலர் அமளியிலே படுத்துத் துயிலைச் செய்யாதவராய், நிலாமுற்றத்திலே துயிலை விளைக்கக் கூடியதாய்த் தமது பக்கத்திலே வந்து மெல்லென வீசும் தென்றல் காற்றுத் தமது மேலே பட, அதனையும் பொறாதவர் ஆயினர். மேகங்கள் தவழும் வானில் இருந்து ஒளி வீசும் நிலாவினுடைய கதிர்கள் நெருப்பை உமிழ்தலால் அவ் வெப்பத்தையும் பொறுக்க முடியாதவர் ஆயினர். தமக்கு உரிய தன்மையோடு காக்கின்ற பெண்மைக் குணமாகிய நிறையைக் கொண்டு செலுத்த வல்ல பொறை எனும் சத்தியைத் தாங்க இயலாதவர் ஆயினர். மலரணையில் வீழ்ந்து கிடந்தவர் இக்குணத்துடன் சிறிய தோகைமயிலைப் போல எழுந்து தமது கரிய கூந்தலின் பாரத்தையும் தாங்கமுடியாத நிலை உடையவராய், இலவம் பூப்போன்று இயல்பிலேயே சிவந்த வாய் நெகிழ்ந்து தரிக்கலாகாத வருத்தத்தாலே தமக்குத் தாமே
பின்வருமாறு சொல்வார் ஆயினார்.

கந்தம் கமழ்மென் குழலீர்! இது என்?
     கலைவாள் மதியம் கனல்வான் எனை இச்
சந்தின் தழலைப் பனிநீர் அளவித்
     தடவும் கொடியீர்! தவிரீர்! தவிரீர்!
வந்து இங்கு உலவும் நிலவும் விரையார்
     மலய அனிலமும் எரியாய் வருமால்;
அந்தண் புனலும் மரவும் விரவும்
     சடையான் அருள் பெற்று உடையார் அருளார்.      

வாசனை வீசும் மெல்லிய கூந்தலையுடைய சேடியர்களே! இது என்ன ஆச்சரியம்! அமிர்த கலைகளுடைய ஒளிவீசும் சந்திரனோ என்னைச் சுடுவாயின் ஆயினான். இந்தச் சந்தனக் குழம்பைப் பனிநீருடன் கலந்து என்மேல் பூசுகின்ற கொடியீர்களே!
நீவிரோ இச்செயலைத் தவரீர்! தவிரீர். இங்கு வந்து உலாவி நிற்கும் தென்றலோ தீ உருவமாய் வருகின்றது. அழகிய குளிர்ந்த கங்கைப் புனலையும் பாம்பையும் ஒருங்கே தம்மிடத்து வைத்த சடையவராம் சிவபெருமானது அருள்பெற்று என்னை உடையாராகிய நம்பிகளோ என்பால் அருள் செய்கின்றாரில்லை.


மாது புகழை வளர்க்கும் திருவாமூர் ---

திருவாமூரில் வேளாளர் குலத்தில், குறுக்கையர் குடித் தலைவராக விளங்கியவர் புகழனார். எல்லாத் திசைகளிலும், நிலைபெற்று விளங்கும் பெருமை பொருந்திய புகழனார் மேன்மை மிக்க இல்லறத்தை நடத்தி, விருந்து அளிக்கும் மேன்மை உடையவர். சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகும் பெருஞ்சிறப்பில் உள்ளவர். ஆதலால் அவரே இல்லறநெறிக் கண் கூறப்பெறும் அறங்கள் பலவும் உள்ளவர் ஆக விளங்கினார்.

அக்குடியின் மேல்தோன்றல்
         ஆயபெரும் தன்மையினார்,
மிக்கமனை அறம்புரிந்து
         விருந்துஅளிக்கும் மேன்மையினார்,
ஒக்கல்வளர் பெருஞ்சிறப்பின்
         உளர்ஆனார், உளர்ஆனார்,
திக்குநில வும்பெருமை
         திகழவரும் புகழனார்.               --- பெரியபுராணம்.

புகழனாருக்கு உரிமையான ஒப்பில்லாத குலமும் குடியும் கூடிய மரபில், மகிழ்ச்சி விளைதற்கு ஏதுவாய திருமணம் புரிந்து கொண்டவர் `மாதினியார்` என்னும் அம்மையார். அந்த அம்மையாரின் அழகிய வயிற்றில், செந்தாமரையின் நிரல்பட அமைந்த இதழ்களினிடையே உள்ள பொகுட்டில் விளங்க வரும் திருமகளைப் போன்று, `திலகவதியார்` என்பவர் பிறந்தருளினார் என்று திலகவதியாரின் பெருமையைச் சிறப்பித்துப் பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடிக் காட்டினார்.

புகழனார் தமக்கு உரிமைப்
         பொருஇல்குலக் குடியின்கண்
மகிழவரு மணம்புணர்ந்த
         மாதினியார் மணிவயிற்றில்
நிகழுமலர்ச் செங்கமல
         நிரையிதழின் அகவயினில்
திகழவரும் திருவனைய
         திலகவதி யார்பிறந்தார்.             ---  பெரியபுராணம்.

திலகவதியார் புரிந்த பெரும் தவத்தின் வலிமையால், அவர் பின் பிறந்து, சமண சமயத்தைத் தழுவிய திருநாவுக்கரசு சுவாமிகள், திரும்பவும் சைவம் சார்ந்து, சைவத்தை விளக்கம் கண்டார்.

இத்தகு பெருமை வாய்ந்த திருவாமூர் என்னும் திருத்தலம், கடலூர் மாவட்டம் - பண்ருட்டியிலிருந்து மேல் திசையில் 8 கி. மீ. தொலைவில், தென்திசையில் கங்கை என்னும் திருக் கெடில நதியில் வடகரையில் உள்ளது.

    இறைவர் திருப்பெயர்: பசுபதீசுவரர்.
    இறைவியார் திருப்பெயர்:   திரிபுரசுந்தரி.
    தல மரம்:     கொன்றை.
    தீர்த்தம் :     கெடில நதி.
   
இத்திருத்தலம் அப்பர் பெருமான் பாடியுள்ள தேவாரத்தில் இடம் பெற்றுள்ள வைப்புத் தலங்களில் ஒன்று. சுவாமி சந்நிதிக்கு எதிர்புறத்தில் திருநாவுக்கரசு பெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். இத்தலத்திற்கு தனித் தேவாரத் திருப்பதிகம் இல்லையாயினும், அப்பர் சுவாமிகள் பாடியருளிய "பசுபதி திருவிருத்தம்" இத்தல இறைவனைக் குறித்தே அருளிச் செய்யப்பெற்றது என சைவ அன்பர்கள் கருதுகின்றனர். திருநாவுக்கரசு சுவாமிகள் திருவவதாரம் செய்தருளிய இடம் இக்கோயிலின் தென்மேற்கே உள்ளது. அவர் அவதரித்த இல்லம் தற்போது திருக்கோயிலாகத் திகழ்கிறது.

"மாது புகழை வளர்க்கும் திருவாயா" என்றும் ஒரு பாடம் உள்ளது.  ஆயின், இது திருஞானசம்பந்தப் பெருமான், "மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை" எனத் தொடங்கும் திருப்பதிகத்தின் மூலம் மங்கையர்க்கரியாரின் புகழை விளங்கச் செய்ததைக் குறித்ததாகக் கொள்ளலாம்.

"மாதர் தபுகழை வளர்க்கும் திருவாரூர்" என்றும் ஒரு பாடம் உள்ளது.

இந்த இரண்டு பாடபேதங்களைக் கருத்தில் கொண்டால், இந்தத் திருப்புகழ்ப் பாடல் திருவாமூர் என்னும் திருத்தலத்திற்கு அமைந்ததாகக் கொள்ள இடமில்லாது போகும்.

        
காதல் அடியர் கருத்தின் பெருவாழ்வே ---

"அடியார் பெருவாழ்வே" என்று நாகப்பட்டினம் திருப்புகழில் அடிகளார் அருளி உள்ளது காண்க.
  
வாழ்வில் ஆம்சிறு களிப்பினால் உன்தனை
        மறந்து இறுமாக்கின்றேன்,
தாழ்விலே சிறிது எண்ணி நொந்து அயர்வன்என்
        தன்மை நன்று அருளாளா!
கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுறக்
        கிடைத்து அருள் பெருவாழ்வே!
வேழ்வி ஓங்கிய தணிகைமா மலைதனில்
        விளங்கி வீற்றிருப்போனே.

என்னும் பாடலில், வள்ளல்பெருமான் திருத்தணிகை ஆண்டவரை, "அடியவர் மகிழ்வுறக் கிடைத்த பெருவாழ்வு" என்று போற்றி உள்ளமை காண்க.

"மிகு தகைசால் அன்பு ஆர் அடியார் மகிழ் பெருவாழ்வே" எனத் திருவாலங்காட்டுத் திருப்புகழில் அடிகளார் போற்றி உள்ளமை காண்க.

"தினமும் உனது துதி பரவிய அடியவர் மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ! திமிர மலம் ஒழிய தினகரன் என வரும் பெருவாழ்வே" எனத் திருவேங்கடத் திருப்புகழிலும் அடிகளார் போற்றியுள்ளது காண்க.

காலன் முதுகை விரிக்கும் பெருமாளே ---

முதுகு பிளவுபடும்படியாக இயமனை வதைத்தல் என்று பொருள்படும்.

"பட்டிக் கடாவில் வரும் அந்தகா! உனைப் பார் அறிய
வெட்டிப் புறம்கண்டு அலாது விடேன், வெய்ய சூரனைப்போய்
முட்டிப் பொருத செவ்வேள் பெருமாள் திருமுன்பு நின்றேன்,
கட்டிப் புறப்படு, அடா! சத்திவாள் என்தன் கையதுவே"

என்னும் கந்தர் அலங்காரப் பாடல் கருத்தின்படிக்கு இயமனை வதைக்க முருகப் பெருமான் அடியார்களால் முடியும், முருகப் பெருமானாலும் முடியும் என்க.

இனி, "காமன் அழகில் மிகுக்கும் பெருமாளே" என்று ஒரு பாடம் இருப்பதைக் கொண்டால், காமனை விடவும் அழகில் மிகுந்து இருக்கும் முருகப் பெருமான் என்று பொருள்படும்.



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...