அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பலபல தத்துவம்
(திருவெண்ணெய்நல்லூர்)
முருகா!
யோக நிலையில் பொருந்தி
இருந்து,
சிவஞானத்தைப் பெற்று,
சிவமயமாகி, ஒளி உடம்பு பெற்று,
சிவானந்தக் கடலில் திளைத்து
இருக்க அருள்வாய்.
தனதன
தத்தன தனதன தத்தன
தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன தனதன தத்தன ...... தனதான
பலபல
தத்துவ மதனையெ ரித்திருள்
பரையர ணப்படர் வடவன லுக்கிரை
படநட நச்சுடர் பெருவெளி யிற்கொள ......
விடமேவிப்
பவனமொ
ழித்திரு வழியைய டைத்தொரு
பருதிவ ழிப்பட விடல்கக னத்தொடு
பவுரிகொ ளச்சிவ மயமென முற்றிய ......
பரமூடே
கலகலெ
னக்கழல் பரிபுர பொற்பத
வொலிமலி யத்திரு நடனமி யற்றிய
கனகச பைக்குளி லுருகிநி றைக்கட ......
லதில்மூழ்கிக்
கவுரிமி
னற்சடை யரனொடு நித்தமொ
டனகச கத்துவம் வருதலு மிப்படி
கழியந லக்கினி நிறமென விற்றுட ......
லருள்வாயே
புலையர்பொ
டித்தளும் அமணரு டற்களை
நிரையில்க ழுக்களி லுறவிடு சித்திர
புலவனெ னச்சில விருதுப டைத்திடு .....மிளையோனே
புனமலை
யிற்குற மகளய லுற்றொரு
கிழவனெ னச்சுனை தனிலவ ளைப்புய
புளகித முற்றிபம் வரவணை யப்புணர் ......
மணிமார்பா
மலைசிலை
பற்றிய கடவுளி டத்துறை
கிழவிய றச்சுக குமரித கப்பனை
மழுகொடு வெட்டிய நிமலிகை பெற்றருள் .....முருகோனே
மகிழ்பெணை
யிற்கரை பொழில்முகில் சுற்றிய
திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத
மயிலின்மி சைக்கொடு திருநட மிட்டுறை ......பெருமாளே.
பதம் பிரித்தல்
பலபல
தத்துவம் அதனை எரித்து, இருள்
பரை அரணப் படர் வடஅனலுக்கு இரை
பட,நடனச் சுடர் பெருவெளியில்கொள ....இடம் மேவிப்
பவனம்
ஒழித்து, இரு வழியை அடைத்து, ஒரு
பருதி வழிப்பட விடல் ககனத்தொடு
பவுரி கொளச் சிவ மயம் என முற்றிய ......
பரம்ஊடே
கலகல
எனக் கழல் பரிபுர பொன்பத
ஒலி மலியத் திரு நடனம் இயற்றிய
கனக சபைக்குளில் உருகி நிறைக்கடல் ......அதில்மூழ்கிக்
கவுரி
மினன் சடை அரனொடு நித்தமொடு
அனக சகத்துவம் வருதலும் இப்படி
கழிய நலக்கு இனி நிறம் என் நவிற்று உடல்.....அருள்வாயே.
புலையர் பொடித் தளும் அமணர் உடற்களை
நிரையில் கழுக்களில் உறவிடு சித்திர
புலவன் எனச்சில விருது படைத்திடும் ....இளையோனே!
புனமலையில்
குறமகள் அயல் உற்று ஒரு
கிழவன் எனச் சுனை தனில் அவளைப் புய
புளகிதம் உற்று, இபம் வர அணையப் புணர் .....மணிமார்பா!
மலைசிலை
பற்றிய கடவுள் இடத்து உறை
கிழவி, அறச் சுக குமரி தகப்பனை
மழுகொடு வெட்டிய நிமலி, கை பெற்றருள் .....முருகோனே!
மகிழ்பெணையில்
கரை பொழில்முகில் சுற்றிய
திருவெணெய் நற்பதி புகழ்பெற, அற்புத
மயிலின் மிசைக்கொடு திருநடம் இட்டு உறை...பெருமாளே.
பதவுரை
புலையர் --- இழிந்த குணம்
உடையவர்களும்,
பொடித் தளும் அமணர் உடல்களை ---
திருநீற்றை விலக்கித் தள்ளுபவர்களும் ஆகிய சமணர்களின் உடல்களை,
நிரையில் கழுக்களில் உற விடு ---
வரிசையாக அமைந்த கழுமுனையில் பொருந்துமாறு விடுத்த,
சித்திர புலவன் எனச் சில விருது
படைத்திடும் இளையோனே --- சித்திரக் கவியில் வல்ல புலவர் என விளங்கி, வெற்றிச் சின்னங்களைக் கொண்டவராகிய
திருஞானசம்பந்தர் என்னும் இளையவரே!
புனமலையில் குறமகள்
அயல் உற்று
--- தினைப்புனம் உள்ள வள்ளிமலையில் இருந்த வள்ளிநாயகியின் அருகில் சென்று,
ஒரு கிழவன் என --- ஒப்பற்ற
கிழவடிவத்தை எடுத்து,
சுனைதனில் அவள் ஐப்புய(ம்) புளகிதம் உற்று
--- சுனையில் அவள் அருத்திய குளிர்ந்த நீரைப் பருகியதோடு, அவளது அழகிய தோள்களையும் தழுவி இன்பம் உற
விரும்பி,
இபம் வர அணையப் புணர் மணிமார்பா --- விநாயகப்
பெருமான் யானை வடிவத்தோடு வந்து எதிர்ப்பட, யானையைக் கண்டு அஞ்சி வந்து அணைந்த
வள்ளிநாயகியைத் தழுவிய அழகிய திருமார்பை உடையவரே!
மலை சிலை பற்றிய கடவுள் --- மலையை வில்லாகப்
பற்றிய பரம்பொருளாகிய சிவபெருமானின் திருமேனியில்,
இடத்து உறை கிழவி --- இடப்பாகத்தில்
உறைகின்ற தலைவியும்,
அறச் சுக குமரி --- அறத்தை வளர்த்து
உயிர்களுக்குச் சுகத்தைப் புரிபவளாகிய குமரியும்,
தகப்பனை மழு கொடு வெட்டிய --- தந்தையாகிய தக்கனை மழுவாயுதத்தால் வெட்டியவரும்,
நிமலிகை பெற்று அருள் முருகோனே ---
மலமற்றவளும் ஆகிய உமாதேவியார் பெற்று அருளிய முருகப் பெருமானே!
மகிழ் பெணையில் கரை --- மகிழ்வைத் தரும்
பெண்ணையாற்றின் கரையில்,
பொழில் முகில் சுற்றிய ---
மேகங்களைத் தழுவுகின்ற சோலைகளால் சூழப்பட்டுள்ள,
திருவெணெய் நல்பதி புகழ்பெற ---
திருவெண்ணெய்நல்லூர் என்னும் திருத்தலம் புகழோடு விளங்க,
அற்புத மயிலின் மிசைக் கொடு திருநடம்
இட்டு உறை பெருமாளே --- அற்புதமான மயிலின் மீது இருந்து திருநடனம் புரிகின்ற
பெருமையில் மிக்கவரே!
பலபல தத்துவம் அதனை
எரித்து ---
பலப்பலவாகச் சொல்லப்படுகின்ற தத்துவங்களின் சேட்டைகளையும், அஞ்ஞான இருளையும் அழியும்படியாகச்
செய்து,
பரை அரணப் படர் வடஅனலுக்கு இருள் இரை பட
--- உயிர்கள்
அனுபவிக்கும் துன்பங்களை உயிர்களுக்குக் காவலாக விளங்கும் சிவசக்தி என்னும் வடவைத்
தீயினுக்கு இரையாகும்படி செய்து,
நடனச் சுடர்
பெருவெளியில் இடம் கொள மேவி --- ஆனந்தத் திருநடனத்தைப் புரியும்
பரம்பொருள் பொருந்தி உள்ள ஞானப் பெருவெளியில் இடம் கொள்ளுமாறு பொருந்தி இருந்து,
பவனம் ஒழித்து --- வாயுவை அடக்கி,
இருவழியை அடைத்து --- இடைகலை பிங்கலை என்னும் இருவழிகளையும் அடைத்து,
ஒரு பருதி வழிப்
படவிடல் ககனத்தொடு --- ஒப்பற்ற சிவாதித்தனின் சிதாகாயப் பெருவெளியில்
ஒருமைப்பட்டு,
சிவமயம் என முற்றிய பரம் ஊடே பவுரி கொள ---
சிவமயமாகிய பரவெளியில் பவுரிக்
கூத்தினை இயற்றுகின்ற
கலகல எனக் கழல் பரிபுர பொன்பத ஒலி மலிய --- திருவடியில் அணிந்துள்ள சிலம்பானது கலகல என்று ஒலிக்கின்ற
உருகி நிறைக்கடல் அதில் மூழ்கி --- பொன்னம்பலத்தினைக்
கண்டு உருகி, நிறைந்த ஆனந்த
வாரிதியில் முழுகி,
கவுரி மின்னல் சடை
அரனொடு
--- பொன்போல மிளிர்கின்ற திருச்சடையை உடைய சிவபரம்பொருளோடு,
நித்தமொடு --- நித்தத்துவத்தை
அடைந்து,
அனக சகத்துவம் வருதலும் --- தூய ஒளி
உடம்பு வருதலும்,
இப்படி கழிய நலக்கு இனி நிறம் என் நவிற்று
உடல் அருள்வாயே --- இப்படியே ஆனந்த அனுபவத்தில் கழியும்படியான நன்மை வந்து நேர, அழகிய ஒளி
உடம்போடு பொருந்தி இருக்க அடியேனுக்கு அருள் புரிவாயாக.
பொழிப்புரை
இழிந்த குணம் உடையவர்களும், திருநீற்றை விலக்கித் தள்ளுபவர்களும்
ஆகிய சமணர்களின் உடல்களை, வரிசையாக அமைந்த
கழுமுனையில் பொருந்துமாறு விடுத்த, சித்திரக் கவியில் வல்ல புலவர் என
விளங்கி, வெற்றிச் சின்னங்களைக்
கொண்டவராகிய திருஞானசம்பந்தர் என்னும் இளையவரே!
தினைப்புனம் உள்ள வள்ளிமலையில் இருந்த
வள்ளிநாயகியின் அருகில் சென்று,
ஒப்பற்ற
கிழவடிவத்தை எடுத்து, சுனையில் அவள்
அருத்திய குளிர்ந்த நீரைப் பருகியதோடு, அவளது
அழகிய தோள்களையும் தழுவி இன்பம் உற விரும்பி, விநாயகப் பெருமான் யானை வடிவத்தோடு
வந்து எதிர்ப்பட, யானையைக் கண்டு
அஞ்சி வந்து அணைந்த வள்ளிநாயகியைத் தழுவிய அழகிய திருமார்பை உடையவரே!
மலையை வில்லாகப் பற்றிய பரம்பொருளாகிய
சிவபெருமானின் திருமேனியில், இடப்பாகத்தில்
உறைகின்ற தலைவியும், அறத்தை வளர்த்து
உயிர்களுக்குச் சுகத்தைப் புரிபவளாகிய குமரியும், தந்தையாகிய தக்கனை மழுவாயுதத்தால்
வெட்டியவரும், மலமற்றவளும் ஆகிய
உமாதேவியார் பெற்று அருளிய முருகப் பெருமானே!
மகிழ்வைத் தரும் பெண்ணையாற்றின்
தென்கரையில், மேகங்களைத்
தழுவுகின்ற சோலைகளால் சூழப்பட்டுள்ள, திருவெண்ணெய்நல்லூர்
என்னும் திருத்தலம் புகழோடு விளங்க, அற்புதமான
மயிலின் மீது இருந்து திருநடனம் புரிகின்ற பெருமையில் மிக்கவரே!
பலப்பலவாகச் சொல்லப்படுகின்ற தத்துவங்களின்
சேட்டைகளையும், அஞ்ஞான இருளையும்
அழியும்படியாகச் செய்து, உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்களை உயிர்களுக்குக்
காவலாக விளங்கும் சிவசக்தி
என்னும் வடவைத் தீயினுக்கு இரையாகும்படி செய்து, ஆனந்தத்
திருநடனத்தைப் புரியும் பரம்பொருள் பொருந்தி உள்ள ஞானப் பெருவெளியில் இடம்
கொள்ளுமாறு பொருந்தி இருந்து, வாயுவை அடக்கி, இடைகலை பிங்கலை என்னும் இருவழிகளையும்
அடைத்து, ஒப்பற்ற சிவாதித்தனின்
சிதாகாயப் பெருவெளியில் ஒருமைப்பட்டு, சிவமயமாகிய
பரவெளியில் பவுரிக் கூத்தினை
இயற்றுகின்ற திருவடியில்
அணிந்துள்ள சிலம்பானது கலகல என்று ஒலிக்கின்ற பொன்னம்பலத்தினைக் கண்டு உருகி, நிறைந்த ஆனந்த வாரிதியில் முழுகி, பொன்போல மிளிர்கின்ற திருச்சடையை உடைய
சிவபரம்பொருளோடு, நித்தத்துவத்தை
அடைந்து, தூய ஒளி உடம்பு
வருதலும் இந்த நிலையிலேயே
ஆனந்த அனுபவத்தில் கழியும்படியான நன்மை வந்து நேர, அழகிய ஒளி
உடம்போடு பொருந்தி இருக்க அடியேனுக்கு அருள் புரிவாயாக.
விரிவுரை
மிக அற்புதமான திருப்புகழ்ப்
பாடல் இது. பொருள் உணர்ந்து ஓதித் தெளியவேண்டுவது.
புலையர் ---
புலை
--- இழிவு, அழுக்கு, தீட்டு, தீயநெறி, பொய், ஊன், கீழ்மகன், தீ நாற்றம்.
புலையர்
--- கீழ்மக்கள். இழிந்த குணம் உடையவர்கள்.
பொடித்
தளும் அமணர் உடல்களை நிரையில் கழுக்களில் உற விடு சித்திர புலவன் என ---
"தள்ளும்" என்னும் சொல் "தளும்" என இடைக் குறைந்து நின்றது.
இறைவனுக்கு
எம்மதமும் சம்மதமே ஆகும். "விரிவிலா அறிவினோர்கள் வேறு ஒரு சமயம் செய்து
எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும்" என்பார் அப்பர் பெருமான்.
நதிகள் வளைந்து வளைந்து சென்று முடிவில் கடலைச் சேர்வன போல், சமயங்கள் தொடக்கத்தில் ஒன்றோடு ஒன்று
பிணங்கி, முடிவில் ஒரே
இறைவனைப் போய் அடைகின்றன. ஒரு ஊருக்குச் சென்று சேர, பல வழிகள் உள்ளது
போல சமயநெறிகள் பலவாக அவரவர் பக்குவத்திற்கு ஏற்ப அமைந்தன. ஒரு பாடசாலையில் பல
வகுப்புக்கள் இருப்பன போல், பல சமயங்கள், அவ்வவ் ஆன்மாக்களின் பக்குவங்கட்கேற்ப
வகுக்கப்பட்டன. ஒன்றை ஒன்று அழிக்கவோ நிந்திக்கவோ கூடாது.
சைவசமயமும்
அவ்வாறே ஆகும். சைவத்தின் மேல் சமயம் வேறு இல்லை என்றும், பிற சமயக் கருத்துகள் அனைத்திற்கும் இடம் தந்து நிற்பது
சைவ சமயமே ஆகும் என்பதும் ஆன்றோர் கருத்து. சைவர்களுக்கு உரிய
சாதனங்கள், திருவைந்தெழுத்து, திருநீறு, கண்டிகை. திருவைந்தெழுத்தை
ஒரு அடியவர் உச்சரிக்கின்ற போதுதான் அறிந்து கொள்ள முடியும். மானசீகமாக உண்ணரித்தால்
அறிந்து கொள்ள முடியாது. கண்டிகை பூண்டு இருப்பது கண்ணுக்குப் புலப்படாதும் இருக்கலாம்.
ஆனால்,
திருநீறு
பூசி இருப்பது தெளிவாக விளங்கும். சைவர்களுக்கு மிகவும் இன்றியமையாத சாதனம்
திருநீறு ஆகும். எனவேதான், "நீற்றுநெறி" என்று சைவத்திற்குப்
பெயர் வழங்குவதாயிற்று. "எல்லை இல்லா நீற்று நெறி" என்பார் தெய்வச்
சேக்கிழார் பெருமான். எல்லை இல்லாதது என்றால், எப்போது யாரால்
தோற்றுவிக்கப்பட்டது என்று அறிய முடியாதது. "வென்றிகொள் திருநீற்று ஒளி"
என்றும் தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளி உள்ளார். "பரவு திருநீற்று அன்பு பாலிக்கும்
தன்மையராய்" திருஞானசம்பந்தரின் திருத்தந்தையார் வாழ்ந்தார் என்பதைப் பெரியபுராணம்
காட்டும்.
அரசியல்
ஆயத்தார்க்கும், அழிவுறும் காதலார்க்கும்
விரவிய
செய்கை தன்னை விளம்புவார், "விதியினாலே
பரவிய
திருநீற்று அன்பு பாதுகாத்து உய்ப்பீர்" என்று
புரவலர்
மன்றுள் ஆடும் பூங்கழல் சிந்தை
செய்தார். --- பெரியபுராணம்.
மலைநாட்டரசராய்
மணிமுடி சூடிய சேரமான் பெருமாள் நாயனார். திருவஞ்சைக்களத் திருக்கோயிலை வலம் வந்து
வணங்கிப் பட்டத்துயானை மீது அமர்ந்து வெற்றிக் குடையும் வெண்சாமைரையும் பரிசனங்கள்
தாங்கி வர, நகரில் திருவுலா
வந்தனர். அப்பொழுது உவர்மண் பொதியைத் தோளிலே சுமந்து வரும் வண்ணான் ஒருவன்
எதிர்ப்பட்டான். மழையில் நனைந்து வந்த அவனது சரீரம் உவர் மண் உடல் முழுவதும்
படிந்து வெளுத்திருந்தமையால், உடல் முழுவதும்
திருநீறு பூசிய சிவனடியார் திருவேடம் எனக் கொண்ட சேரமான் பெருமாள் விரைந்து
யானையினின்றும் இறங்கிச் சென்று அந்த வண்ணானை வணங்கினார். அரசர் பெருமான் தன்னை
வணங்கக் கண்டு சிந்தை கலங்கி அச்சமுற்ற அவன், அரசரைப் பணிந்து ‘அடியேன் தங்கள்
அடிமைத் தொழில் புரியும் வண்ணான்’ என்றான். அதுகேட்ட சேரர்பிரான் ‘அடியேன்
அடிச்சேரன். காதலால் பணிந்து போற்றுதற்குரிய சிவனடியார் திருவேடத்தை அடியேன்
நினைக்கும்படி செய்தீர். இது பற்றி மனம் வருந்தாது செல்வீராக’ என அவனுக்குத் தேறுதல்
கூறி அனுப்புவாராயினர்.
திருநீற்றின்
பெருமையை மேலும் விளக்கிக் கொண்டே செல்லலாம். சிவஞான மயமானது திருநீறு.
"சத்திதான் யாதோ என்னில் தடையிலா ஞானமாகும்" என்ற சித்தியாரது
திருவாக்கின்படி, ஞானமே சத்தியாகும்.
ஆதலின், திருவருள் சத்தி
சொரூபமானது. "பராவணம் ஆவது நீறு" என்றார் திருஞானசம்பந்தமூர்த்தி
நாயனார். திருநீற்றினை அணிந்து கொள்வார்க்கு நோயும் பேயும் விலகும். எல்லா
நலன்களும் உண்டாகும். சர்வ மங்கலங்களும் பெருகும். தீவினை கருகும்.
எல்லாவற்றையும்
தூய்மை செய்வது பசுவின் சாணமே ஆகும்.
அதனால் ஆகிய திருநீறு, உள்ளத்தையும்
உடம்பையும் தூய்மை செய்ய வல்லது. நிறைந்த தவம் புரிந்தோர்க்கே திருநீற்றில்
மிகுந்த அன்பு உண்டாகும். தவம் செய்யாத பாவிகட்குத் திருநீற்றில் அன்பு உண்டாகாது.
எத்தகைய
பாவங்களைப் புரிந்தவராயினும், பெரியோர்கள்
இகழ்கின்ற ஐம்பெரும் பாவங்களைச் செய்தவராயினும், விபூதியை அன்புடன் தரித்து
நல்வழிப்படுவாராயின், முன் செய்த
பாவங்களினின்றும் விடுபட்டு, செல்வம் பெற்று, உலகமெல்லாம் போற்றும் பெருமை
அடைவார்கள்.
யாது
பாதகம் புரிந்தவர் ஆயினும், இகழும்
பாதகங்களில்
பஞ்சமா பாதகர் எனினும்,
பூதி
போற்றிடில், செல்வராய் உலகெலாம்
போற்றத்
தீது
தீர்ந்தனர், பவுத்திரர் ஆகியே
திகழ்வார். --- உபதேச காண்டம்.
சிவதீட்சை
பெற்று ஒவ்வொருவரும் முறைப்படி திருநீறு பூசி, இறைவன் திருவருளைப் பெறவேண்டும். திரிபுண்டரமாகத் திருநீறு பூசும்போது, இடையில் துண்டுபடுதல், ஒன்றுடன் ஒன்று சேர்தல், அதிகமாக விலகுதல், வளைதல், முதலிய குற்றங்கள் இன்றி அணிதல்
வேண்டும். நெற்றி, மார்பு, தோள் ஆகிய மூன்று இடங்களில் ஆறு அங்குல
நீளமும், ஏனைய அங்கங்களில்
ஓவ்வோரங்குல நீளமுமாகத் தரித்தல் வேண்டும்.
மூன்று கீற்றாக அழகாக அணிதல் சிறப்பு.
மூன்று
வேளையும் இவ்வாறு திருநீறு திரிபுண்டரமாகப் புனைதல் வேண்டும். முடியாது
ஒருவேளையேனும் முறைப்படி திருநீற்றினைத் திரிபுண்டரமாகத் தரித்தவர் உருத்திர
மூர்த்தியே ஆவார். இவ்வண்ணம் உயர்ந்த திரிபுண்டரமாகத் திருநீற்றினை அணிந்து, பதி தருமம் புரிவோர் நிகரில்லாத
மும்மூர்த்தி மயமாவார் என்று வேதங்கள் கூறுகின்றன.
திருநீறு
வாங்குதல், அணிதல் முறையை, "குமரேச சதகம்"
என்னும் நூலில் விளக்கியிருப்பது காண்க.
திருநீறு வாங்கும்
முறை
பரிதனில்
இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர்
பலகையில் இருந்தும்மிகவே
பாங்கான
அம்பலந் தனிலே இருந்தும்
பருத்ததிண் ணையிலிருந்தும்
தெரிவொடு
கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேல்நின்று
திருநீறு வாங்கியிடினும்
செங்கையொன்றாலும்விரல்
மூன்றாலும் வாங்கினும்
திகழ்தம் பலத்தினோடும்
அரியதொரு
பாதையில் நடக்கின்ற போதினும்
அசுத்தநில மான அதினும்
அங்கே
தரிக்கினும் தந்திடின் தள்ளினும்
அவர்க்குநர கென்பர்கண்டாய்
வரிவிழி
மடந்தைகுற வள்ளிநா யகிதனை
மணந்துமகிழ் சகநாதனே
மயிலேறி
விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
திருநீறு அணியும்
முறை
பத்தியொடு
சிவசிவா என்றுதிரு நீற்றைப்
பரிந்துகை யாலெடுத்தும்
பாரினில்
விழாதபடி அண்ணாந்து செவியொடு
பருத்தபுய மீதுஒழுக
நித்தம்மூ
விரல்களால் நெற்றியில் அழுந்தலுற
நினைவாய்த் தரிப்பவர்க்கு
நீடுவினை
அணுகாது தேகபரி சுத்தமாம்
நீங்காமல் நிமலன் அங்கே
சத்தியொடு
நித்தம்விளை யாடுவன் முகத்திலே
தாண்டவம் செய்யுந்திரு
சஞ்சலம்
வராதுபர கதியுதவும் இவரையே
சத்தியும் சிவனுமென்னலாம்
மத்தினிய
மேருஎன வைத்தமு தினைக்கடையும்
மால்மருகன் ஆனமுருகா
மயிலேறி
விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
ஏழாம்
நூற்றாண்டில் இருந்த சமணர்கள், நன்மையின்றி
வன்மையுடன் சைவசமயத்தை எதிர்த்தனர்.
திருநீறும் கண்டிகையும் புனைந்த அடியவரைக் கண்டவுடன்
"கண்டுமுட்டு" என்று நீராடுவர். "கண்டேன்" என்று ஒருவன் கூறக்
கேட்டவுடன் "கேட்டுமுட்டு" என்று மற்றொருவன் நீராடுவான். எத்துணை கொடுமை?. தங்கள்
குழந்தைகளையும் "பூச்சாண்டி" (விபூதி பூசும் ஆண்டி) வருகின்றான், "பூச்சுக்காரன்"
வருகின்றான் என்று அச்சுறுத்துவர். இப்படி பலப்பல அநீதிகளைச் செய்து வந்தனர். அவைகட்கெல்லாம் சிகரமாக திருஞானசம்பந்தருடன்
வந்த பதினாறாயிரம் அடியார்கள் கண்துயிலும் திருமடத்தில் நள்ளிரவில் கொள்ளி வைத்தனர்.
இவ்வாறு
அறத்தினை விடுத்து, மறத்தினை அடுத்த
சமணர்கள், அனல்வாது, புனல்வாது புரிந்து, தோல்வி பெற்று, அரச நீதிப்படி வழுவேறிய அவர்கள் கழுவேறி
மாய்ந்தொழிந்தனர்.
அபரசுப்ரமண்யம்
திருஞானசம்பந்தராக வந்து, திருநீற்றால் அமராடி, பரசமய நச்சு வேரை அகழ்ந்து, அருள் நெறியை நிலைநிறுத்தியது.
சில
விருது படைத்திடும் இளையோனே ---
திருஞான
சம்பந்தருக்குச் சிவபெருமான் விருதுகள் அருளியது
பாலறாவாயராகிய
நம் திருஞானசம்பந்த நாயனார் திருப்பெண்ணாகடத்துத் திருத்தூங்கானை மாடம் என்னும்
திருத்தலத்தைத் தொழுது, திருவரத்துறை என்னும்
அரும்பதியை வணங்க விரும்பிச் செல்லும்போது, இதற்கு முன்பு எல்லாம் தமது
திருத்தாதையரது தோளின் மேல் அமர்ந்தருளும் நியமம் ஒழிந்து, தமது பாதபங்கயம் சிவந்து வருந்த, மெல்ல மெல்ல நடந்து சென்று மாறன்பாடி
என்னுந் திருத்தலத்தை அடையும்போது அப்பரம குருமூர்த்தியின் திருவடித் தளர்வினைக்
கண்டு வருந்தினான் போல் சூரியன் மேற்கடலில் வீழ்ந்தனன்.
வெம்பந்தம்
நீக்கும் நம் சம்பந்தப் பிள்ளையார் அன்றிரவு அப்பதியில் திருவஞ்செழுத்தை ஓதித்
தங்கினார். திருவரத்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், திருஞானசம்பந்தப்
பெருமானுடைய திருவடியின் வருத்தத்தைப் பொறாதவராய், ஏறுதற்கு முத்துச் சிவிகையும், மணிக்குடையும், கூறி ஊதக் குலவு பொற்சின்னங்களும்
அமைத்துக் கொடுக்கத் திருவுளம் கொண்டு,
அவ்வூர் வாழும் மேலோர் கனவில் தோன்றி, “ஞானசம்பந்தன்
நம்பால் வருகின்றான்; அவனுக்குத் தருமாறு
முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் முத்துச் சின்னங்களும் நம் திருக்கோயிலில்
வைத்திருக்கின்றோம். நீங்கள் அவைகளை அவன்பால் கொண்டு கொடுங்கள்” என்று
பணித்தருளினார்.
ஞான
சம்பந்தன் நம்பால் அணைகின்றான்,
மான
முத்தின் சிவிகை மணிக்குடை
ஆள
சின்னம் நம்பால் கொண்டு, அருங்கலைக்
கோன், அவன்பால் அணைந்து
கொடும் என. --- பெரியபுராணம்.
அவர்கள்
ஆலமுண்ட அண்ணலின் திருவருளையும் திருஞானசம்பந்தருடைய பெருமையையும் உன்னி
உள்ளத்தில் உவகையும் வியப்பும் எய்தி, நீராடி
விடியற்காலை திருக்கோயிலின் திருக்கதவம் திறந்து பார்க்க, அவைகள் அவ்வாறிருக்கக்
கண்டு மிகவும் விம்மிதமுற்று, அவைகளை எடுத்துக்
கொண்டு, திருஞானசம்பந்தப்
பெருமானை எதிர்கொண்டு சென்றனர்.
சிவபெருமான்
திருஞானசம்பந்தர் கனவிலும் சென்று,
“குழந்தாய்!
முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் முத்துச் சின்னங்களும் உனக்குத் தந்தனம்.
அவைகளைக் கொண்டு நம் பதிகள் தோறும் வருக” என்று கட்டளை இட்டருளினார். திருஞானசம்பந்த
அடிகள் கண் துயிலுணர்ந்து, எந்தையாரது எளிவந்த வான் கருணையை உன்னி, உள்ளம் உவந்து, நீராடி திருவரத்துறைக்கு வருவாராயினார்.
அவ்வூர்
வாசிகள் எதிர்கொண்டு திருவடியில் வீழ்ந்து பணிந்து பாம்பணிந்த பரமனது கட்டளையை
விண்ணப்பித்தனர். திருஞானசம்பந்த மூர்த்தி அவைகள் இறைவன் திருவருள் மயமாதலால் சோதி
முத்தின் சிவிகையை வலம் வந்து நிலமுறப் பணிந்து, அச் சிவிகையின் ஒளி வெண்ணீறு
போன்று விளங்கலால் அதனையும் துதித்து, அச்
சிவிகை திருவருள் வடிவாதலின் திருவஞ்செழுத்தை ஓதி எல்லா உலகமும் ஈடேற அதன் மீது
எழுந்தருளினார். முத்துச் சின்னங்கள் முழங்கின. அடியவர் அரகர முழக்கஞ் செய்தனர்.
முத்துக் குடைகள் நிழற்றின. வேதங்கள் முழங்கின. புங்கவர் பூமழை பொழிந்தனர்.
பல்குவெண்
கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப்
புல்கு
நீற்றுஒளி யுடன்பொலி புகலி காவலனார்
அல்கு
வெள்வளை அலைத்து எழு மணிநிரைத் தரங்கம்
மல்கு
பாற்கடல் வளர்மதி உதித்தென வந்தார். --- பெரியபுராணம்.
........ ........ கொச்சையில், ...... சதுர்வேதச்
சிறுவ!
நிற்கு அருள் கவிகை, நித்திலச்
சிவிகையைக் கொடுத்து ......அருள் ஈசன்
செக
தலத்தினில் புகழ் படைத்த மெய்த்
திரு அரத்துறைப் ...... பெருமாளே. ---
திருப்புகழ்.
புனமலையில்
குறமகள் அயல் உற்று, ஒரு கிழவன் என, சுனைதனில் அவள்
ஐப்புய(ம்) புளகிதம் உற்று,
இபம்
வர அணையப் புணர் மணிமார்பா ---
முருகப் பெருமான்
வள்ளி நாயகியைத் திருமணம் புரிந்த வரலாறு
"தீய
என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ்" தொண்டை நன்னாட்டில், திருவல்லம் என்னும் திருத்தலத்திற்கு
வடபுறத்தே,
மேல்பாடி
என்னும் ஊரின் அருகில், காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே
கவரும் அழகு உடைய வள்ளிமலை உள்ளது. அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர்
இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும், பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி
என்னும் ஒருவன் தனக்கு ஆண்மக்கள் இருந்தும் பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக
வருந்தி,
அடியவர்
வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுக வள்ளலை வழிபட்டு, குறி கேட்டும், வெறி ஆட்டு
அயர்ந்தும்,
பெண்
மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.
கண்ணுவ
முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும், திருமகள் மானாகவும், உபேந்திரன்
நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர், சிவபெருமானிடம்
சித்தத்தைப் பதிய வைத்து, அம்மலையிடம் மாதவம் புரிந்து கொண்டு இருந்தார்.
பொன் நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான், சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால்
முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்று, தெய்வப்
புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்று, உறுதியான தவத்தில்
நிலைபெற்று நின்றார்.
ஆங்கு
ஒரு சார், கந்தக்
கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு
இருந்த சுந்தரவல்லி, முன்னர் தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறு, அந்த மானின்
வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்து, இங்கும் அங்கும் உலாவி, உடல் நொந்து, புன்செய்
நிலத்தில் புகுந்து, வேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த
குழியில் பல்கோடி சந்திரப் பிரகாசமும், மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக்
குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது, குழந்தை தன் இனமாக
இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது. குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது.
அதே
சமயத்தில்,
ஆறுமுகப்
பெருமானுடைய திருவருள் தூண்டுதலால், வேட்டுவ மன்னனாகிய நம்பி, தன் மனைவியோடு
பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்று, அக் குழந்தையின் இனிய
அழுகை ஒலியைக் கேட்டு, உள்ளமும் ஊனும் உருகி, ஓசை வந்த வழியே போய், திருப்பாற்கடலில்
பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது
என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான். குழந்தையை எடுத்து, தன் மனைவியாகிய
கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்து, குழந்தையை மார்போடு
அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும்
சிற்றூருக்குப் போய், சிறு குடிலில் புகுந்து, குழந்தையைத் தொட்டிலில்
இட்டு,
முருகப்
பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர். மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடி, வள்ளிக் கிழங்கை
அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால், குழந்தைக்கு வள்ளி என்று பேரிட்டனர். உலக
மாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள்.
வேடுவர்கள்
முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி, வேட்டுவர்
குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில்
உலாவியும், சிற்றில்
இழைத்தும்,
சிறு
சோறு அட்டும்,
வண்டல்
ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது
வளர்ந்து, கன்னிப்
பருவத்தை அடைந்தார்.
தாயும்
தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய
ஆசாரப்படி,
அவரைத்
தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும்
காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள்
தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில்
இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.
வள்ளி
நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை
மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத்
தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப்
பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின்
திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை
மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார்.
வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும்
அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள்
புரிந்தார்.
வள்ளிநாயகிக்குத்
திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில்
வீரக்கழலும்,
கையில்
வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை
மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த
நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.
முருகப்பெருமான்
வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள
மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது
தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து
விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும்
வழி எது?
என்று
வினவினார்.
நாந்தகம்
அனைய உண்கண் நங்கை கேள், ஞாலம் தன்னில்
ஏந்திழையார்கட்கு
எல்லாம் இறைவியாய் இருக்கும்நின்னைப்
பூந்தினை
காக்க வைத்துப் போயினார், புளினர் ஆனோர்க்கு
ஆய்ந்திடும்
உணர்ச்சி ஒன்றும் அயன் படைத்திலன் கொல்
என்றான்.
வார்
இரும் கூந்தல் நல்லாய், மதி தளர்வேனுக்கு
உன்தன்
பேரினை
உரைத்தி, மற்று உன் பேரினை உரையாய்
என்னின்,
ஊரினை
உரைத்தி, ஊரும் உரைத்திட முடியாது
என்னில்
சீரிய
நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.
மொழிஒன்று
புகலாய் ஆயின், முறுவலும் புரியாய் ஆயின்,
விழிஒன்று
நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்
வழி
ஒன்று காட்டாய் ஆயின், மனமும் சற்று உருகாய்
ஆயின்
பழி
ஒன்று நின்பால் சூழும், பராமுகம் தவிர்தி என்றான்.
உலைப்படு
மெழுகது என்ன உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான்
போல வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு
மதியப் புத்தேள் கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு
தன்மைத்து அன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம்.
இவ்வாறு
எந்தை கந்தவேள், உலகநாயகியிடம்
உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள்
சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை
மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம்
நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது
வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.
நம்பி
சென்றதும்,
முருகப்
பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே
புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை
மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன்.
தாமதிக்காமல் வா" என்றார். என் அம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயா, நீங்கு உலகம்
புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள்
என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக்
கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி
நடுங்கி,
"ஐயா!
எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி
உய்யும்" என்றார். உடனே, முருகப்
பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.
நம்பி, அக் கிழவரைக்
கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி
உண்டாகுக.
உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப்
பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவர் திருவடியில்
விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு
வேண்டியது யாது?" என்று
கேட்டான்.
பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது
கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள
குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள்
கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது
குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும்
துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக்
கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச்
சேர்ந்தான்.
பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும்
பசி" என்றார். நாயகியார் தேனையும்
தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார்.
"சுவாமீ!
ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில்
சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி
காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார்
பெருமான்.
(இதன்
தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் -
ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம்
பெற,
பக்குவப்படாத
ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத்
தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம்
என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி
தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப்
பிராட்டியார்,
பக்குவப்
படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா
என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார் என்று கொள்வதும் பொருந்தும்.)
வள்ளிநாயகியைப்
பார்த்து,
"பெண்ணே!
எனது பசியும் தாகமும் நீங்கியது. ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச்
செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமா? புனம் காக்கும்
என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோ? எமது குலத்தார் இதனை
அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும், நல்லுணர்வு
சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து
விட்டீர்" என்று கூறி, தினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.
தனக்கு
உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான், தந்திமுகத் தொந்தியப்பரை
நினைந்து,
"முன்னே
வருவாய், முதல்வா!"
என்றார்.
அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர்.
அம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழமுனிவரைத்
தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய
அவரும் நீங்கினார்.
முருகப்
பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகி, அது கண்டு
ஆனந்தமுற்று,
ஆராத
காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத்
திருவுருவைத் தாங்கள் காட்டாமையால், அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து
அருளவேண்டும்" என்று அடி பணிந்தார். பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள்
மழை பொழிந்து, "பெண்ணே! நீ
முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க
வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்து, பிரணவ உபதேசம் புரிந்து, "நீ தினைப்புனம்
செல். நாளை வருவோம்" என்று மறைந்து
அருளினார்.
அம்மையார்
மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள
புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து, "அம்மா!
தினைப்புனத்தை
பறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார், நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச்
சென்றேன்" என்றார்.
"அம்மா!
கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது.
முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை
இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளது? சொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.
மை
விழி சிவப்பவும், வாய் வெளுப்பவும்,
மெய்
வியர்வு அடையவும், நகிலம் விம்மவும்,
கை
வளை நெகிழவும் காட்டும் தண் சுனை
எவ்விடை
இருந்து உளது? இயம்புவாய் என்றாள்.
இவ்வாறு
பாங்கி கேட்க, அம்மையார், "நீ என் மீது
குறை கூறுதல் தக்கதோ?" என்றார்.
வள்ளியம்மையாரும்
பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில், ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கி, வேட்டை ஆடுவார்
போல வந்து,
"பெண்மணிகளே!
இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோ? என்று வினவி
அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது
முறையல்ல" என்று கூறி, வந்தவர் கண்களும், இருந்தவள் கண்களும்
உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று
எண்ணி,
புனம்
சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன்
தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை
வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்"
என்றாள்.
தோட்டின்
மீது செல் விழியினாய் தோகையோடு என்னைக்
கூட்டிடாய்
எனில், கிழிதனில் ஆங்கு அவள்
கோலம்
தீட்டி, மா மடல் ஏறி, நும் ஊர்த் தெரு அதனில்
ஓட்டுவேன், இது நாளை யான் செய்வது"
என்று உரைத்தான்.
பாங்கி
அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல்
ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத்
தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன், மாதவிப் பொதும்பரில்
மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கி, அவருடைய காதலை
உரைத்து,
உடன்பாடு
செய்து,
அம்மாதவிப்
பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு
மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி
நீங்கவும், பரமன்
வெளிப்பட்டு,
பாவையர்க்கு
அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன், உனது இருக்கைக்குச்
செல்" என்று கூறி நீங்கினார்.
இவ்வாறு
பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி
மகிழ்ந்து,
வள்ளியம்மையை
நோக்கி,
"அம்மா!
மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.
வள்ளிநாயகி
அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி
தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு
குடிலுக்குச் சென்றார்.
வள்ளிநாயகியார்
வடிவேல் பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர்.
பாவையர்கள் ஓடி வந்து, எடுத்து அணைத்து, மேனி மெலிந்தும், வளை கழன்றும் உள்ள
தன்மைகளை நோக்கி, தெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர்
உள்ளம் வருந்தி,
முருகனை
வழிபட்டு,
வெறியாட்டு
அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி, "நாம்
இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால், நம் அருளால் இது நீங்கும்" என்று
குறிப்பில் கூறி அருளினார். அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.
முருகவேள்
தினைப்புனம் சென்று, திருவிளையாடல்
செய்வார் போல்,
வள்ளியம்மையைத்
தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த
பாங்கி,
வெளி
வந்து,
பெருமானைப்
பணிந்து,
"ஐயா!
நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள்.
இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம்
ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி வள்ளிப்பிராட்டியாரைக்
கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.
தாய்துயில்
அறிந்து,
தங்கள்
தமர்துயில் அறிந்து, துஞ்சா
நாய்துயில்
அறிந்து,
மற்றுஅந்
நகர்துயில் அறிந்து, வெய்ய
பேய்துயில்
கொள்ளும் யாமப் பெரும்பொழுது அதனில், பாங்கி
வாய்தலில்
கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்.
(இதன்
தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய தமரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில்
திருவருளாகிய பாங்கி, பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப்
பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. "தாய் துயில் அறிதல்" என்னும்
தலைப்பில் மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)
வள்ளி
நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, அடியேன்
பொருட்டு இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில்
எழுந்தருளினீரே" என்று தொழுது நின்றார்.
பாங்கி
பரமனை நோக்கி,
"ஐயா!
இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும்.
இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, நும் பதி போய், இவளைக் காத்து
அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத்
தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன்
சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி
விடுத்து,
குகைக்குள்
சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில்
தங்கினார்.
விடியல்
காலம்,
நம்பியின்
மனைவி எழுந்து,
தனது
மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான்
அறியேன்" என்றாள். நிகழ்ந்த்தைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம்
கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி, எம்பெருமானே! பல
ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது. எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.
முருகவேள், "பெண்ணரசே!
வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள்
போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி
வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து
அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி
வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக்
கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை
விட்டு நீங்க,
அம்மையாரும்
ஐயனைத் தொடர்ந்து சென்றார்.
இடையில்
நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக்
கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும்
சுற்றத்தாரையும் வதைத்து, எம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு
வருத்தம் தருமே" என்றார். முருகப் பெருமான் பணிக்க, வள்ளிநாயகியார்
"அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன்
எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு
திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின்
அடிமலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே
இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள்
என்ன செய்வோம்? தாயே தனது
குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா? எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக
எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப்
பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.
கந்தக்
கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்ய, வள்ளிநாயகியார்
தமது மானுட வடிவம் நீங்கி, பழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்ட, நம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய
வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து, நாங்கள் செய்த தவப்பேறு" என்று
மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து, திருத்தணிகையில்
வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.
மலை
சிலை பற்றிய கடவுள் இடத்து உறை கிழவி ---
சிலை
- வில். கிழவி - தலைவி.
முப்புர
தகனத்தின் போது மேரு மலையை வில்லாகப் பிடித்தவர் சிவபெருமான். அப் பெருமான்
திருமேனியில் இடப்பாகத்தில் உறைபவள் உமாதேவியார்.
அறச்
சுக குமரி
---
உமாதேவியார்
காஞ்சி மாநகரில் நாழி என்ற அளவையைக் கையில் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும்
செய்து அருளினார். செய்தும் வருகின்றார்.
இச்சைப்படி
தன் பேரறம் எண்நான்கும் வளர்க்கும்
பச்சைக்கொடி
விடையான்ஒரு பாகம் திறைகொண்டாள்
செச்சைத்தொடை
இளையான்நுகர் தீம்பால் மணநாறும்
கச்சைப்பொரு
முலையாள்உறை கச்சிப்பதி கண்டான். --- வில்லிபாரதம்.
எண்அரும்
பெரு வரங்கள்முன் பெற்றுஅங்கு
எம்பி ராட்டிதம் பிரான் மகிழ்ந்து அருள
மண்ணின்
மேல்வழி பாடுசெய்து அருளி
மனைஅறம் பெருக்கும் கருணையினால்
நண்ணும்
மன்னுயிர் யாவையும் பல்க
நாடு காதலில் நீடிய வாழ்க்கைப்
புண்ணி
யத்திருக் காமக்கோட் டத்துப்
பொலிய முப்பதோடு இரண்டுஅறம் புரக்கும். --- பெரியபுராணம்.
ஐயன்
அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டம்மெல்லாம்
உய்ய
அறம் செயும் உன்னையும்போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய
பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று
பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ, உன் தன் மெய்யருளே?
--- அபிராமி அந்தாதி.
அனனியம்
பெற்று, அற்று அற்று ஒரு பற்றும்,
தெளிதரும் சித்தர்க்குத் தெளிசிற் கொந்து
அமலை, தென் கச்சிப் பிச்சி மலர்க் கொந் .....தள
பாரை,
அறவி, நுண் பச்சைப் பொற்கொடி, கற்கண்டு
அமுதினும் தித்திக்கப்படு சொல்கொம்பு,
அகிலஅண்டத்து உற்பத்தி செய் முத்தின்
.....பொலம் மேரு,
தனிவடம் பொற்புப் பெற்ற முலைக் குன்று
இணை சுமந்து எய்க்கப் பட்ட நுசுப்பின்
தருணி, சங்கு உற்றுத் தத்து திரைக் கம்
.....பையின் ஊடே
தவ
முயன்று, அப் பொற்ற படி
கைக்கொண்டு,
அறம் இரண்டு எட்டு எட்டு எட்டும் வளர்க்கும்
தலைவி, பங்கர்க்குச் சத்யம் உரைக்கும்
......பெருமாளே. ---
(கனிதரும்) திருப்புகழ்.
பச்சை
ஒண்கிரி போல் இரு மாதனம்,
உற்று இதம்பொறி சேர்குழல், வாள்அயில்
பற்று புண்டரிகாம் என ஏய் கயல் ...... விழி, ஞான
பத்தி
வெண் தரளாம் எனும் வாள் நகை,
வித்ருமம் சிலை போல் நுதலார், இதழ்
பத்ம செண்பகம் ஆம் அநுபூதியின் ...... அழகாள்
என்று
இச்சை
அந்தரி, பார்வதி, மோகினி,
தத்தை, பொன்கவின் ஆலிலை போல் வயிறி,
இல் பசுங்கிளி ஆன மின் நூல் இடை ...... அபிராமி,
எக்
குலம் குடிலோடு உலகு யாவையும்,
இல் பதிந்து, இரு நாழி நெலால் அறம்
எப்பொதும் பகிர்வாள் குமரா என ...... உருகேனோ --- திருப்புகழ்.
தகப்பனை
மழு கொடு வெட்டிய நிமலிகை பெற்று அருள் முருகோனே ---
தக்கனைத்
தலை அறுத்த வரலாற்றை இது குறிக்கின்றது. சிவம் வேறு, சத்தி வேறு அல்ல. எனவே, தக்கனைத் தலை அறுத்தவர் அம்பிகை
என்றார். அவர் இயற்கையில் மலம் அற்றவர்
என்பதால் நிமலி என்றார்.
சிவபெருமானைப்
புறக்கணித்துத் தக்கன் ஒரு வேள்வி தொடங்கினான். அதற்கு எல்லாத் தேவர்களும்
வந்திருந்தார்கள். சிவபெருமான் சினம் கொண்டார். அவர் நெற்றிக் கண்ணிலிருந்து
வீரபத்திரக் கடவுள் தோன்றி, தக்கன் வேள்விக்குச்
சென்றார். அங்கிருந்த திருமாலை மார்பில் அடித்தார். அவர் கீழே விழுந்தார். மற்றத் தேவர்கள்
எல்லாம் ஓடினார்கள். சந்திரனைக் காலால் தேய்த்தார். சூரியன் பற்களைத் தகர்த்தார்.
பகன் என்னும் ஆதித்தன் கண்ணைப் பறித்தார். அக்கினியின் கையை வெட்டினார்; நாமகளின் மூக்கை அரிந்தார். பிரமன் விழுந்தான். தக்கன், எச்சன், முதலியவர்கள் தலையை வெட்டினார்; இந்திரன் குயில் உருவம் கொண்டு ஓடினான்.
மற்றத் தேவரெல்லாம் பலவாறு புண்பட்டு ஓடினர். பின்னர், தக்கன் இழந்த தலைக்காக ஆட்டுத் தலையை
வைத்து அவனை உயிர்ப்பித்து அருளினார்.
சந்திரனைத்
தேய்த்து அருளித் தக்கன்தன் வேள்வியினில்
இந்திரனைத்
தோள்நெரித்திட்டு, எச்சன் தலை அரிந்து,
அந்தரமே
செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்து,
சிந்தித்
திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த,
செந்தார்ப்
பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார
மாலையே பாடுதுங்காண் அம்மானாய்.
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற.
உருத்திர நாதனுக்கு உந்தீபற.
வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தான் என்று உந்தீபற
கலங்கிற்று வேள்வி என்று உந்தீபற.
பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பது என்னே, ஏடி உந்தீபற
பணைமுலை பாகனுக்கு உந்தீபற.
புரந்தரனார் ஒரு பூங்குயில் ஆகி
மரந்தனில் ஏறினார் உந்தீபற
வானவர் கோன்என்றே உந்தீபற.
வெஞ்சின வேள்வி வியாத்திரனார் தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்புஅற உந்தீபற.
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்க நின்று உந்தீபற. ---- திருவாசகம்.
மகிழ்
பெணையில் கரை பொழில் முகில் சுற்றிய திருவெணெய் நல்பதி புகழ்பெற, அற்புத மயிலின்
மிசைக் கொடு திருநடம் இட்டு உறை பெருமாளே ---
மகிழ்வைத்
தரும் பெண்ணையாற்றின் தென்கரையில்,
மேகங்களைத்
தழுவுகின்ற சோலைகளால் சூழப்பட்டுள்ள, திருவெண்ணெய்நல்லூர்
என்னும் திருத்தலம் புகழோடு விளங்க, அற்புதமான
மயிலின் மீது இருந்து திருநடனம் புரிகின்ற பெருமையில் மிக்கவர் முருகப் பெருமான்.
திருவெண்ணெய்நல்லூர், நடு நாட்டுத் திருத்தலம். திருக்கோவலூரில் இருந்து தென்கிழக்கே
சுமார் 20 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் பெண்ணையாற்றின்
தென்கரையில் திருவெண்ணெய்நல்லூர் திருத்தலம் அமைந்துள்ளது. திருக்கோவலூரில்
இருந்து அரசூர் செல்லும் சாலையில் சென்று இத்திருத்தலத்தை அடையலாம். விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும்
திருக்கோவிலூரில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன.
இறைவர்
: கிருபாபுரீசுவரர், அருட்டுறை நாதர், தடுத்தாட்கொண்டநாதர்
இறைவியார்
: மங்களாம்பிகை, வேற்கண்ணிநாயகி
தீர்த்தம் : பெண்ணையாறு
இவ்வாலயம்
ஒரு இராஜகோபுரத்துடனும் இரண்டு பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. கோபுரம் கடந்து
உள்ளே நுழைந்தால் சுந்தரர் வழக்கு நடந்த "வழக்கு தீர்த்த மண்டபம்"
உள்ளது. அடுத்து செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமர விநாயகர், பலிபீடம் ஆகியவை உள்ளன. நேரே உயரத்தில், மேலே, சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக்
காட்சி தந்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே சுந்தரர் சந்நிதி
உள்ளதையும் காணலாம். இவ்வுருவத்தில் சுந்தரர் கையில் ஓலையுடன் காட்சியளிக்கிறார்.
இத்தல மூலவர் சுயம்பு லிங்கமாக கிருபாபுரீசுவரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி
காட்சி தருகிறார். அம்மன் மங்களாம்பிகை சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளது.
கோவிலின் தென்புறம் தண்டதீர்த்தம் உள்ளது. உட்பிராபாரத்தில் பொள்ளாப் பிள்ளையார், முருகன், சுந்தரர் சந்நிதிகள் உள்ளன.
இறைவன்
நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு
வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம்
செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றதெனக் கூறப்படுகிறது.
சிவபெருமான்
சுந்தரரை தடுத்தாட்கொண்ட சிறப்புடையது இத்திருத்தலம். இறைவன் முதிய வேதியராய்
வந்து வழக்கு உரைத்து சுந்தரர் தனக்கு அடிமை என்று நிரூபித்து தன்னுடன் அழைத்துச்
சென்று அவரை ஆட்கொண்டார். இறைவன் அடியெடுத்துத் தர சுந்தரர் "பித்தா
பிறைசூடி" என்ற திருப்பதிகத்தை அருளிய திருத்தலம். தலத்தின் பெயர் "திருவெண்ணெய்நல்லூர்"
என்றும் கோயிலின் பெயர் "அருள்துறை" என்றும் திருப்பதிகத்தில்
குறிப்பிடப் பெறுகிறது.
சைவசமய
சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் திருக்கோயில் தனியாக வடக்கு தெருவின் கோடியில்
உள்ளது.
சடையப்ப
வள்ளல் வாழ்ந்த இல்லம் வடக்கு தெருவில் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.
வள்ளல்
பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "இடையாது சொல் ஊரன் தன்னைத் தொழும்பு கொளும் சீல்
வெண்ணெய்நல்லூர் அருள்துறையின் நல் பயனே" என்று போற்றி உள்ளார்.
பலபல
தத்துவம் அதனை எரித்து ---
பலப்பலவாகச்
சொல்லப்படுகின்ற தத்துவங்கள் தொண்ணூற்றாறு ஆகும். அவைகள் ஆன்மாவானது மெய்யறிவு
பெறுவதற்குத் துணை புரியவே இறைவனால் அருளப் பெற்றன. ஆணவச் செறிவு உள்ளதால், ஆறிவு மறைக்கப்பட்டுள்ள நிலையில், மாயையும் மயக்க, ஆன்மா
தத்துவங்களையே பொருள் எனக் கருதி அவற்றின் வழி உழன்று, கன்மத்தைப் புரிந்து பிறவியில்
உழன்று கொண்டு இருக்கும். தத்துவங்கள் புரிகின்ற சேட்டைகளில் இருந்தும், அஞ்ஞான இருளில்
இருந்தும் தப்பி, ஆன்மா உய்தி பெறவேண்டுமானால், இறையருளை நாடி
இருக்கவேண்டும். திருவருள் வன்றின் துணைக்கொண்டே இது சாத்தியம் ஆகும். ஞானத்தின்
முன் அஞ்ஞான காரரியங்கள் அழிந்து போகும். பொழுது விடிந்ததும் இருள் அகல்வது போல
எனக் கொள்க.
"ஐந்துவகை
ஆகின்ற பூதமுதல் நாதமும்
அடங்க, வெளியாக வெளி செய்து,
அறியாமை அறிவுஆதி பிரிவாக, அறிவார்கள்
அறிவாக நின்ற நிலையில்
சிந்தை
அற நில் என்று சும்மா இருத்தி, மேல்
சின்மயானந்த வெள்ளம்
தேக்கித் திளைத்து, நான் அதுவாய் இருக்க, நீ
செய்சித்ரம் மிகநன்றுகாண்"
என்பார்
தாயுமான அடிகள்.
ஐந்து
வகையாகிய பூதங்கள் முதலாக, முதல் ஒலி எனப்படும்
நாதம் ஈறாக உள்ள முப்பத்தாறு மெய்கள் எனப்படும் தத்துவங்களும் இத்தன்மைத்து என
வெளிப்படையாக உண்மை விளங்குமாறு விளக்கி,
கேவல
நிலை என்னும் புலம்பு நிலையில் ஆணவ மறைப்பால் ஏற்பட்ட அறியாமையும், போக நிலை என்னும் புணர்வு நிலையில்
கருவி கரணங்களால் ஏற்படும் சுட்டறிவும் திருவருளால் தமக்கு வேறு எனக் கண்டறிய வல்லவர், அறிவு உருவாக நின்ற நிலையில் புறப்பொருளில்
பற்று ஒழிந்து, பற்றற்றான் பற்றைப் பற்றி
மனம் அடங்கி நிற்பாயாக என்று, சும்மா இருக்கும்படி
செய்ய, அதன் மேலும் மூதறிவு
வடிவாகிய பேரின்பப் பெருவெள்ளத்தில்
திளைத்து, ஆன்மாவானது
சிவமயமாய் இருக்கும் ஒண்ணம் செய்த அற்புதச் செயலை விதந்து கூறுகின்றார் தாயுமான
அடிகள்.
மெய்
என்று சொல்லப்படும் தத்துவங்கள் முப்பத்தாறு.
பூதம் - நிலம், நீர், நெருப்பு, உயிர் (காற்று), விசும்பு - 5
தன்மாத்திரை - நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஓசை 5
அறிதற்பொறி - மூக்கு, வாய், கண், மெய், செவி - 5
செய்தற்பொறி - கருவாய், எருவாய், கை, கால், வாய் - 5
அகக்கருவி - மனம், ஆங்காரம், புத்தி, குணம் - 4
என்று
சொல்லப்படும் இவ்விருபத்துநான்கும் உடல்மெய் எனப்படும். உடல்மெய் என்றாலும் ஆன்மதத்துவம் என்றாலும்
ஒன்றே. இவை உணரப்படும் துணை எனப்படும்.
காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்று சொல்லப்படும் ஊழி, ஊழ், உழைப்பு, உணர்வு, உவப்பு, ஆள், மருள் ஆகிய இவ்வேழும் வித்தியா
தத்துதவங்கள். இவை ஆன்மா உணர்தற்கு உறும் துணையாக அமைந்த மெய்கள் அல்லது
தத்துவங்கள் ஆகும். இவை உணர்வுத்துணை என்பர்.
உணர்த்து
மெய்கள் அல்லது உணர்த்துகின்ற தத்துவங்கள் ஐந்து உள்ளன. அவை அத்தன், அன்னை, அருளோன், ஆண்டான், ஆசான் என்றும் முறையே சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை சொல்லப்படுவன.. இவ்வைந்தும்
சிவதத்துவம் எனப்படும். இவ்வுண்மை வருமாறுணர்க :
ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர்,
ஆகின்ற ஆறாறு அரும் சைவர் தத்துவம்,
ஆகின்ற நால்ஏழ் வேதாந்தி வயிணவர்க்க்
ஆகின்ற நாலாறு ஐயைந்து மாயா வாதிக்கே.
--- திருமந்திரம்.
தத்துவம்
அனைத்தும் தனித்தனி கடந்தேம்,
தத்துவ
அதீத மேல் நிலையில்
சித்து
இயல் முழுதும் தெரிந்தனம், அவைமேல்
சிவநிலை
தெரிந்திடச் சென்றேம்,
ஒத்த
அந்நிலைக்கண் யாமும் எம் உணர்வும்
ஒருங்கு
உறக் கரைந்து போயினம் என்று
அத்தகை
உணர்ந்தோர் ஒழுத்த நின்று ஓங்கும்
அருட்பெருஞ்சோதி
என் அரசே!. --- வள்ளலார்.
தத்துவா
தீதத் தனிப்பொருள் வெளியெனும்
அத்திரு
அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி;
தத்துவச்
சேட்டையும் தத்துவத் துரிசும்
அத்தகை
அடக்கும் அருட்பெருஞ்ஜோதி; --- வள்ளலார்.
காட்டைஎலாம்
கடந்துவிட்டேன், நாட்டை அடைந்து, உனது
கடிநகர்ப்பொன்
மதில்காட்சி கண்குளிரக் கண்டேன்,
கோட்டை
எலாம் கொடிநாட்டிக் கோலம் இடப் பார்த்தேன்,
கோயிலின்
மேல் வாயிலிலே குறைகள்எலாம் தவிர்ந்தேன்,
சேட்டை
அற்றுக் கருவி எலாம் என்வசம் நின்றிடவே
சித்திஎலாம்
பெற்றேன் நான், திருச்சிற்றம்பரலம்
மேல்
பாட்னை
எலாம் பாடுகின்றேன், இது தருணம் பதியே!
பலந்தரும்
என் உளந்தனிலே கலந்து நிறைந்து அருளே. --- வள்ளலார்.
பரை
அரண, படர் வடஅனலுக்கு இருள் இரை பட ---
தத்துவங்களின்
சேட்டையில் அகப்பட்டு, உலக இன்பத்தில்
உழன்று,
உயிர்கள்
படும் துன்பத்தில் இருந்து அவைகளைக் காக்க, திருவருட் சத்தியானது
துணைபுரியும். திருவருள் விளக்கம் பெறுகின்ற போது உயிர்கள் படும் துன்பமெல்லாம்
வடவைத் தீயில் பட்டவை எல்லாம் பொடியாவது போல் அழிந்து ஒழியும்.
உயிர்களுக்கு
ஆணவ மலச்சார்பு பற்றி, தன்முனைப்பு உள்ள காலத்தில், இறைவன் மறைப்பு ஆற்றல்
என்னும் திரோதான சத்தியைக் கொண்டு, உலகியல் நுகர்வுளைப் பெரிதாகக் காட்டி, தன்னைக்
காட்டாது மறைத்து அருள்வான். சிறிது சிறிது ஆகத் தன்முனைப்பு ஒடுங்கச் செய்து, திருவருள்
நாட்டத்தை மிகுவித்து, திருவருள் சத்தி என்னும் ஆற்றலால், தன்னை உணர்வித்துத் தனு
திருவடியில் கூட்டி அருள்வான். பச்சை விறகில் உள்ளிருக்கும் தீயானது அவ்விறகு
காயும் வரை தான் மறைந்து இருந்து, காய்ந்ததும் வெளிப்படு மிளிர்வது போல என்க.
நடனச்
சுடர் பெருவெளியில் இடம் கொள மேவி பவனம் ஒழித்து, இருவழியை அடைத்து ---
வாயுவை
அடக்கி, இடைகலை பிங்கலை
என்னும் இருவழிகளையும் அடைத்து யோக நிலையில் பொருந்தி இருந்து, சிவஞானத்தைப் பெற்று, ஆனந்தத்
திருநடனத்தைப் புரியும் பரம்பொருள் பொருந்தி உள்ள ஞானப் பெருவெளியில் இடம்
கொள்ளுமாறு பொருந்தி இருந்து மகிழும் ஆன்மா.
நாள்
ஒன்றுக்கு இருபத்தோராயிரம் சுவாசங்கள் செல்லுகின்றன. அவற்றுள் வெளியே செல்லுவது
பன்னிரண்டு அங்குலங்கள். உள்ளே புகுவது எட்டு அங்குலங்கள். நான்கு அங்குலங்கள்
வீணாகின்றன. அவற்றை வீணாக்காத வண்ணம் கட்ட வல்லாரே காலனைக் கட்டவல்லார் ஆவர்.
இருபத்தோ
ராயிரத்து அறுநூறாய்
மருவி
நாள்தோறும் வளர் சுவாசத்தை
சங்ஙென
வாங்கி,
சமன்
உறக் கும்பித்து
அங்ஙென்று
எழும்பும் அசபையும் அருளி...
பன்னிரண்டு
அங்குலம் பரிந்திடும் பிராணன்
பின்அதில்
நான்கு பிரிந்து போம், அதனால்
ஆயுளும்
குறைந்திட்டு,
ஆக்கையும்
தளர்ந்து,
சாயும்
என்று உரைத்து,
சாகாது
இருக்க
நாடிஓர்
பத்தும் நாடி நாடிகள் புக்கு
ஓடிய
வாயு ஒருபதும் தேர்ந்து.... --- சிற்றம்பல நாடிகள்.
இனி, தணிந்து
இருக்கின்ற மூலாதாரத்து உள்ள மூலாக்கினியை பிராண வாயுவினால் எழுப்பி, அதனை மேலை வெளி
வரை மூட்டினால்,
அங்கு
மதிமண்டலம் வெதும்பி, அமிர்தம் பொழியும்.
மூலாதாரத்தின்
மூண்டு எழு கனலைக்
காலால்
எழுப்பும் கருத்து அறிவித்து.... ---
ஔவையார்.
நாளும்அதி
வேக கால்கொண்டு தீமண்ட
வாசிஅனல் ஊடு போய்ஒன்றி வானின்கணு
நாமமதி மீதில் ஊறும் கலாஇன்ப ...... அமுதுஊறல்
நாடி,அதன் மீது போய்நின்ற
ஆநந்த
மேலைவெளி ஏறி, நீஇன்றி நான்இன்றி
நாடிஇனும் வேறு தான்இன்றி வாழ்கின்றது
...... ஒருநாளே.
--- (மூளும்வினை)
திருப்புகழ்.
உணர்வு
கீழ் அரணியாகவும், பிரணவம் மேல் அரணியாகவும் பிடித்துக் கடைய, ஞானாக்கினி
பிறக்கும். அவு அக்கினியால் பாசம் எரியும்.
மன்னு
கீழ்அரணி வருத்தம்இல் உணர்வாய்,
பன்னு
மேல்ரணி பிரணவம் ஆக,
கடையவே
சானக் கனல் எழும் அன்றே,
தடைபடாப்
பாச தகனம் செய்தான்,
அருள்
எனும் தலத்தில் அறிந்துகால் மடக்கி
இருள்அற
இருக்கும் இயற்கையை விண்டனன். --- சிற்றம்பல நாடிகள்.
கூடம்
எடுத்து குடிபுக்க மங்கையர்,
ஓடுவர்
மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர்
எண்விரல், கண்டிப்பர்
நால்விரல்,
கூடிக்
கொளில் கோல அஞ்செழுத்து ஆமே. --- திருமந்திரம்.
மூலாதாரத்தில்
குண்டலி சத்தி பாம்பு கோல் மண்டலமிட்டு இருக்கும். அதன் வாயில் இருந்து எழுகின்ற
காற்றே பிராணன் ஆகும். இட நாசியிலும் வலநாசியிலும் மாறிவரும். அதனை மறித்து
முதுகெலும்பின் நடுவில் உள்ள சுழுமுனை வழியே செலுத்தி, ஆறு ஆதாரம் கடந்த
அப்பாலைக்குச் சென்று அமைதல் வேண்டும்.
சொன்ன
நாடிகளில் சுழுமுனை நடுவாம்
இன்னதின்
பக்கத்து இடை பிங்கலையாம்
அக்கினி
திங்கள் ஆதவன் கலைகள்
புக்க
சக்கரமும் போய் மீண்டு இயங்கும்
மூலக்
குண்டலியாம் உரகமூச்சு எறிந்து
வாலது
கீழ்மேல் மண்டலம் இட்டு,
படம்தனைச்
சுருக்கிப் படுத்து உறங்குவது
நடந்து
மேல் நோக்கி ஞானவீடு அளிக்கும்
மண்டல
மூன்று மருவுதூண் புகஅக்
குண்டலி
எழுப்பும் கொள்கை ஈதுஎன்றான். --- சிற்றம்பல நாடிகள்.
அங்ஙனம்
பன்னிரு அங்குல அளவில் ஓடும் பிராணனை அடக்கும் சிவயோக சாதனையை, குருமுகமாக
அறிந்து,
முறையே
பயின்று சாதித்தவர்க்கு உலகமெல்லாம் தலை வணங்கும். அழிவற்ற தன்மையும் உண்டாகும்.
இனி, ரேசகம் என்பது
பிராண வாயுவை வெளியே விடுதல். பூரகம் என்பது பிராண வாயுவை உள்ளை இழுத்தல். கும்பகம்
என்பது பிராண வாயுவை விடாமல் நிறுத்துதல். இதில், தொடக்கத்தில் பூரகம் 16
மாத்திரையும்,
கும்பகம்
64 மாத்திரையும், ரேசகம் 32 மாத்திரையுமாகச் சாதனை செய்து படிப்படியாக
உயர்த்துதல் வேண்டும்.
ஏறுதல்
பூரகம் ஈர்எட்டு வாமத்தால்
ஆறுதல்
கும்பகம் அறுபத்து நால்அதில்
ஊறுதல்
முப்பத்திரண்டுஅதி ரேசகம்
மாறுதல்
ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே. ---
திருமந்திரம்.
முன்னது
இரேசகம் முப்பத்திரண்டு
பின்னது
பூரகம் பேசும் ஈர்எட்டு
கும்பகம்
நாலோடு அறுபதாக் கூறும்
தம்ப
மாத்திரையின் தன்மையும் உணர்த்தி,
மூலமே
முதலா முதல்நடு உச்சி
பால்உளவின்
நீள் படுதுணை நோக்கி
மூலா
தாரத்தின் முச்சுழிச் சுடரை
மேல்ஆதா
ரத்தின் மெல்எனத் தூண்டி
இருவழிக்
காலும் ஒருவழி நடத்தி
கருவழி
அடைத்து.... --- சிற்றம்பல நாடிகள்.
அங்ஙனம்
சாதகம் செய்யும்போது நாட்டத்தை மூக்கில் வைக்க வேண்டும்.
நாட்டம்
இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும்
இல்லை,
மனைக்கும்
அழிவில்லை,
ஓட்டமும்
இல்லை,
உணர்வில்லை, தான்இல்லை,
தேட்டமும்
இல்லை, சிவன் அவன் ஆமே. --- திருமந்திரம்.
அவ்வாறு
எழுகின்ற பிராணவாயுவை ஆறாதாரத்தின் வழியே மேலைப் பெருவெளிக்குச் செலுத்துதல்
வேண்டும். அவை, மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை
என்பனவாம். அவைகள் முறையே நாபிக்குக் கீழே இரண்டும், நாபிழும், இருதயமும், கண்டமும், புருவநடுவும்
ஆம். அதில்,
அகாராதி
க்ஷகாந்தரம் ஈறாக 51 அக்ஷரங்கள் உள்ளன.
மேலும், மூலாதாரத்தில் உள்ளது ஓ
சுவாதிட்டானத்தில் உள்ளது ந
மணிபூரகத்தில் உள்ளது ம
அநாகதத்தில் உள்ளது சி
விசுத்தியில் உள்ளது வ
ஆக்ஞையில் உள்ளது ய
மூலாதாரத்தில் விநாயகர்.
சுவாதிட்டானத்தில் பிரமன்
மணிபூரகத்தில் திருமால்
அநாகதத்தில் உருத்திரன்
விசுத்தியில் மகேச்சுரன்
ஆக்ஞையில் சதாசிவம்.
ஆறாதாரமும்
பிரமரந்திரமும் கடந்த இடத்தில் மேலைப் பெருவெளி தோன்றும். ஆயிரத்தெட்டு இதழ்க்
கமலத்துடன் அது விளங்கும். அந்த சகஸ்ரார வெளியில், ஒப்பு உவமை இல்லாத
அருட்பெருஞ்சோதி ஒளி செய்துகொண்டு இருக்கும்.
அவ்வாறு
பிராணவாயுவை எழுப்பும்போது, ஓம் என்ற பிரணவ ஒலியில், அசபா நலம் சித்திக்கச்
செய்யவேண்டும்.
ஓளியை
ஓளிசெய்து ஓம்என்று எழுப்பி
வளியை
வளிசெய்து வாய்த்திட வாங்கி,
வெளியை
வெளி செய்து மேல்எழவைத்து
தெளியத்
தெளியும் சிவபதம் தானே. --- திருமந்திரம்.
மேற்
கூறியவாறு சிவயோக சாதனையை முறையே தொடங்கி புரிந்து வரில், அங்கு விந்து சுழித்து
ஓர் இனிய நாதம் எழும். அது பத்து வகையான
கருவிகளை நிகர்த்து பேரானந்தத்தை விளைவிக்கும். அந்த இன்னிசையைக் கேட்ட செவி வேறு
எந்த இசைகளையும் கேட்காது.
மணிக்கடல்
யானை வளர்குழல் மேகம்
அணிவண்டு
தும்பி வளை பேரிகை யாழ்
தணிந்து
எழு நாதங்கள் தாம் இவை பத்தும்,
பணிந்தவர்க்கு
அல்லது பார்க்க ஒண்ணாதே.
கடலொடு
வேகக் களிறொடும் ஓசை
அடவொடும்
அவ்வினை ஆண்டாண் டத்து
சுடர்
மன்னும் வேணு சுரிசங்கின் ஓசை
திடம்
அறி யோகிக்கு அல்லால் தெரியாதே. ---
திருமந்திரம்.
ஒரு
பருதி வழிப் படவிடல் ககனத்தொடு, உருகி
நிறைக் கடல் அதில் மூழ்கி,
---
கடல்
என்பது இங்கு சுகஞானக் கடல் என்னும் ஆனந்த வாரிதியைக் குறித்து நின்றது.
பருதி
என்பது சூரியன் அல்லது ஆதித்தனைக் குறிக்கும். அவன் விளங்குவது ஆகாயத்தில்.
ககனம்
- வானம். பெருவெளி.
ஒப்பற்ற
சிவ ஆதித்தன் விளங்குவது சிதாகாயப் பெருவெளியில். அங்கே ஆன்மா ஒருமைப்பட்டு ஆன்மா நிற்கும்.
ஆதித்தன்
என்பது சிவபரம்பொருளயே குறிக்கும். சிவபரம்பொருள் விளங்குகின்ற மூர்த்தங்கள்
எட்டு. அவற்றை அட்டமூர்த்தம் என்பர். அவையாவன, வான், காற்று, நெருப்பு, நீர், மண், சூரியன், சந்திரன், ஆன்மா. இந்த
எட்டுப் பொருள்களில் ஆன்மா ஒன்றுதான் அறிவுப் பொருள் என்னும் சித்துப் பொருள்.
மற்ற ஏழும் அறிவில்லாத பொருள்கள் என்றும், சடம் என்றும்
சொல்லப்படுவதாகிய அசித்துப் பொருள்கள். சித்துப் பொருளாகிய ஆன்மா அறிவு விளக்கம்
பெற்று,
மெய்யறிவினைத்
தலைப்பட,
அசித்துப்
பொருள்களாகிய ஏழினையும் தனக்கு இடமாகக் கொண்டு, அவற்றைத் தொழில்
படுத்துகின்றது சிவபரம்பொருள். அது வானில் கலப்பு என்னும் ஆற்றலை வைத்தது.
காற்றில் ஊறு அல்லது ஊக்கம் என்னும் ஆற்றலை வைத்தது. தீயில் வெம்மை ஆற்றலை
வைத்தது. நீரில் குளிர்ச்சியை வைத்தது. மண்ணில் திண்மையை வைத்தது. சூரியனில் வெம்மை ஒளியை வைத்தது. சந்திரனில் குளிர் ஒளியை வைத்தது. இதனைப் பின்வரும் பிரமாணங்களால் அறியலாம்.
நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள்விசும்பு, நிலா, பகலோன்,
புலன்ஆய
மைந்தனோடு எண் வகையாய்ப் புணர்ந்துநின்றான்,
உலகு
ஏழ் என, திசை பத்து என, தான் ஒருவனுமே
பல
ஆகி நின்றவா தோள்நோக்கம் ஆடாமோ. --- திருவாசகம்.
இருநிலனாய், தீ ஆகி, நீரும் ஆகி,
இயமானன் ஆய், எறியும் காற்றும் ஆகி,
அருநிலைய
திங்களாய், ஞாயிறு ஆகி,
ஆகாசம் ஆய், அட்ட மூர்த்தி ஆகி,
பெருநலமும்
குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறர்உருவும் தம்உருவும் தாமே யாகி,
நெருநலையாய், இன்றுஆகி, நாளை ஆகி,
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே. --- அப்பர்.
பூநிலாய
ஐந்துமாய், புனல்கண்நின்ற நான்குமாய்,
தீநிலாய
மூன்றுமாய், சிறந்தகால் இரண்டுமாய்,
மீநிலாயது
ஒன்றுமாகி, வேறுவேறு தன்மையாய்,
நீநிலாய
வண்ணம் நின்னை யார் நினைக்கவல்லரே! ---
திருமழிசை ஆழ்வார்.
அறுவகைச்
சமயத்து அறுவகை யோர்க்கும்
வீடுபேறு
ஆய், நின்ற விண்ணோர் பகுதி
கீடம்
புரையும் கிழவோன், நாள்தொறும்
அருக்கனில்
சோதி அமைத்தோன், திருத்தகு
மதியில்
தண்மை வைத்தோன், திண்திறல்
தீயின்
வெம்மை செய்தோன், பொய்தீர்
வானில்
கலப்பு வைத்தோன், மேதகு
காலின்
ஊக்கம் கண்டோன், நிழல்திகழ்
நீரில்
இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட
மண்ணில்
திண்மை வைத்தோன், என்றென்று
எனைப்பல
கோடி எனைப்பல பிறவும்
அனைத்து
அனைத்து அவ்வயின் அடைத்தோன்...
என்று
மணிவாசகப் பெருமான் விளக்கி உள்ளமை காண்க.
"தொண்டுபடும் ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப, ஐந்தொழிலும் ஏவித் தனி நடத்தும் எம் கோவே! மேவ வரும் அட்ட மூர்த்தமாம் வாழ்வே!"
என்று குமரகுருபர அடிகள் அருளி இருக்குமாறும் காண்க.
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களும்
சூரியன்,
சந்திரன், உயிர், என்பனவுமாகிய எட்டுப்பொருள்களும்
இறைவனுக்கு உருவங்களாகும், இவ்வெட்டையும் அட்டமூர்த்தம் என்பர், அட்டமூர்த்தங்கள், இறைவனின் உடல்போல்வன.
அவற்றுள் மூர்த்திமானாக விளங்குபவர் இறைவன். இதனைச் சரியாகப் புரிந்து கொள்ளாமலே எரிஓம்புகின்றனர்
சிலர் என்கின்றார் அப்பரு பெருமான். பெரும்பயனாகிய
இறைநெறி உணர்ந்து இன்புறாது, அக்கினியைப் பார்க்கிறார்களே தவிர அதனுள் இருக்கும்
பரம்பொருளை,
எரிபெருக்கும்
மாந்தர்கள் உணருவதில்லை என்று இரங்குகிறார்.
எரி
பெருக்குவர்,
அவ்எரி
ஈசனது
உரு
வருக்கம் அது ஆவது உணர்கிலார்,
அரி
அயற்கு அரியானை அயர்த்துப் போய்
நரி
விருத்தம் அது ஆகுவர் நாடரே.
இதைப்
போன்றே சூரியனை வணங்குவோரும், சூரியனும் இறைவனது எட்டு உருவங்களுள் ஒன்று என்று
உணர்ந்திலர். மேலும் சூரியன் உள்ளே உள்ள பேரொளிப் பொருளாகிய பெருமானை உணர்ந்திலர், மேம்போக்காக சூரியன்
உருவத்தையே வணங்கி உட்பொருளை உணராமல் வீணாகின்றனர். அவர்கள் ஓதும் இருக்கு முதலிய வேதங்கள்
எல்லாம் ஈசனையே தொழுகின்றன. இக்கருத்தை நினைந்து உய்திபெறாதவர் கல்மனவர் என்கிறார்
அப்பர் பெருமான்.
அருக்கன்
பாதம் வணங்குவர், அந்தியில்
அருக்கன்
ஆவான் அரன் உருஅல்லனோ?
இருக்கு
நான்மறை ஈசனையே தொழும்
கருத்தினை
நினையார் கல் மனவரே.
சிவனைச்
சூரியனிடமாகவும் வைத்து வழிபடுதல் சிவநெறி. ஆதலால், அச் சூரியனது சிறப்பினை 'ஆதித்த நிலை' என்று எடுத்துக் கொண்டு, சிவ ஆதித்தன் என்னும் பரம்பொருளே, அண்ட ஆதித்தன், பிண்ட ஆதித்தன், மன ஆதித்தன், மன ஆதித்தன், ஞான ஆதித்தன் என்னும்
நிலைகளில் விளங்கி அருள் புரிவதைத் திருமந்திரத்தில் நாயனார் அருளி உள்ளமையும்
உணர்ந்து தெளிக.
சிவமயம்
என முற்றிய பரம் ஊடே பவுரி கொள, கலகல
எனக் கழல் பரிபுர பொன்பத ஒலி மலிய ---
சிவமயமாகத்
திகழ்கின்ற பரவெளியில் இறைவன் ஆனந்த்த் திருநடனம் புரிகின்றான். அது பவுரிக்
கூத்து எனப்படும். பவுரி என்பது ஒருவகைக் கூத்து. இறைவன் புரிகின்ற பவுரிக்
கூத்தின்போது அவனது பொன்னார் திருவடியில் உள்ள சிலம்பு கலகல என ஒலிக்கும். அந்த
நாத இன்பத்திலை உயிரானது திளைத்து இருக்கும்.
புருவ
நடுவே நாட்டத்தை வைத்து, மனதைத் தடுத்து, இருந்தபடி இருந்து
நோக்கில்,
அங்கு
சிவ ஒளி தோன்றி,
அதன்
நடுவே ஒரு வீதி தோன்றும். அந்த வீதி வழியே சென்றால் அங்கே ஒரு பொற்பிரகாசமான
மண்டபம் தோன்றும்.
சோதிமலை
ஒன்று தோன்றிற்று அதில் ஒரு
வீதி
உண்டாச்சுதடி,
அம்மா
வீதி
உண்டாச்சுதடி. ---
திருவருட்பா.
இறைவன்
தனக்குப் புரிந்த மெய்யருளை வியந்து வள்ளல்பெருமான் பாடிப் பாடி உருகுவதைப் பின்வரும்
பாடல்களால் அறிக.
இங்கோர்
மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுகவே
ஏறிப்
போகப் போக நூலின் இழைபோல் நுணுகவே
அங்கே
திகைத்து நடுங்கும் போதென் நடுக்கம் நீக்கியே அதன்மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை
ஆக்கியே
மேலைப்பால்
சிவ கங்கை என்னும் ஓர் தீர்த்தம் தன்னையே
மேவி, படியில் தவறி நீரில் விழுந்த என்னையே
ஏலத்
துகிலும் உடம்பும் நனையாது எடுத்ததே ஒன்றோ
எடுத்து, என் கரத்தில் பொற்பூண் அணிந்த இறைவன் நீ
அன்றோ.
உன்பேர்
அருளை நினைக்குந்தோறும் உடம்பு பொடிக்குதே
உண்டு
பசி தீர்ந்தால் போல் காதல் மிகவும் தடிக்குதே
அன்பே
அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற்றே
அன்பு
ஓர் அணுவும் இல்லா எனக்கு இங்கு அருளல் ஆயிற்றே.
நினைக்க
நினைக்க தித்திப்பு எனது நினைவில் கொடுக்குதே
நின்பால்
அன்றிப் பிறர்பால் செல்ல நெஞ்சம் நடுக்குதே
எனைத்
துன்புஒழித்து ஆட்கொண்ட நின்னை அன்னை என்பனோ
எந்தாய்
அன்பு இலேன் நின் அடிக்கு, முன்னை அன்பனோ.
தாயே
எனக்குத் தயவு புரிந்த தருணத் தந்தையே
தனியே
நின்னை நினைக்கக் கிளர்வது எனது சிந்தையே
நாயேன்
எண்ணம் அனைத்தும் முடித்துக் கொடுத்த பண்பனே
நான்செய்
தவத்தால் எனக்குக் கிடைத்த நல்ல நண்பனே.
சோதி
மலையில் கண்டேன் நின்னைக் கண் களிக்கவே
துய்த்தேன்
அமுதம் அகத்தும் புறத்தும் பரிமளிக்கவே
ஓதி
உணர்தற்கு அரிய பெரிய உணர்வை நண்ணியே
ஓதாது
அனைத்தும் உணர்கின்றேன் நின் அருளை எண்ணியே.
சுகஞானக்
கடலில் இறையருள் திளைக்கச் செய்த நிலையை வியந்து தாயுமான அடிகளார் பாடுவதையும் அறிக.
மண்ஆதி
ஐந்தொடு, புறத்தில்உள
கருவியும்,
வாக்குஆதி, சுரோத்ர ஆதியும்,
வளர்கின்ற
சப்த ஆதி, மனம் ஆதி, கலை ஆதி,
மன்னுசுத்து ஆதி உடனே,
தொண்ணூற்றொடு
ஆறும் அற்று உள்ளனவும் மௌனியாய்ச்
சொன்ன ஒரு சொல்கொண்டதே
தூவெளி
அது ஆய் அகண்ட ஆனந்த சுகவாரி
தோற்றும் அதை என்சொல்லுவேன்?
பண்ணாரும்
இசையினொடு பாடிப் படித்து, அருட்
பான்மைநெறி நின்று தவறாப்
பக்குவ
விசேடராய் நெக்கு நெக்கு உருகிப்
பணிந்து, எழுந்த், இருகைகூப்பிக்
கண்ஆறு
கரைபுரள நின்ற அன்பரை எலாம்
கைவிடாக் காட்சி உறவே
கருத
அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தம் இடு
கருணா கரக்கடவுளே.
கவுரி
மின்னல் சடை அரனொடு நித்தமொடு அனக சகத்துவம் வருதலும் ---
கவுரி
- பொன்.
கவுரி
மின்னல் சடை - பொன்போல ஒளிருகின்ற திருச்சடை.
அனகம்
- பாவம் இன்மை. குற்றம் இன்மை.
சகம்
- உடல். இங்கு ஒளி உடலைக் குறித்து நின்றது.
பொன்போல
மிளிர்கின்ற திருச்சடையை உடைய சிவபரம்பொருளோடு நித்தத்துவத்தை அடைந்து, தூய ஒளி உடம்பு வருதலும்,
இப்படி
கழிய நலக்கு இனி நிறம் என் நவிற்று உடல் அருள்வாயே ---
நலக்கு
- நலம்.
நிறம்
- ஒளி.
இப்படியே
ஆனந்த அனுபவத்தில் கழியும்படியான நன்மை வந்து நேர, அழகிய ஒளி
உடம்போடு பொருந்தி இருக்க அடியேனுக்கு அருள் புரிவாயாக.
கருத்துரை
முருகா!
யோக நிலையில் பொருந்தி இருந்து,
சிவஞானத்தைப்
பெற்று,
சிவமயமாகி, ஒளி உடம்பு பெற்று, சிவானந்தக் கடலில்
திளைத்து இருக்க அருள்வாய்.
No comments:
Post a Comment