048. வலி அறிதல் --- 06. நுனிக் கொம்பர்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 48 -- வலி அறிதல்

 

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறியவர்அதைக் கடந்து மேலும் சென்றால்அவருடைய உயிருக்கு அதுவே முடிவாகிவிடும்" என்கின்றார் நாயனார்.

 

     மக்கள் தமது ஊக்க மிகுதியால் தாம் செய்ய வேண்டிய காரியத்திற்கு வேண்டிய வலியை அறியாது செய்வாராயின்அது அவரது உயிர்க்கே இறுதியாய் முடியும் என்றார். எவ்வாறு என்றால்ஒருவன் ஒரு மரத்தின் கிளை நுனியில் ஏறி நின்ற பிறகும்பின்னும் ஏறிச் செல்வேன் என்று துணிவானாயின்அவ்விதம் முடியாமல்அவன் கீழே விழுந்து இறந்து போக நேருவது போல்இதுவும் ஆகும் என்று உவமை காட்டப்பட்டது.

 

திருக்குறளைக் காண்போம்...

 

நுனிக் கொம்பர் ஏறினார்அஃது இறந்து ஊக்கின்,

உயிர்க்கு இறுதி ஆகிவிடும்.               

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

         கொம்பர் நுனி ஏறினார் அஃது இறந்து ஊக்கின்--- ஒரு மரக் கோட்டினது நுனிக்கண்ணே ஏறி நின்றார்தம் ஊக்கத்தால் அவ்வளவினகை் கடந்து மேலும் ஏற ஊக்குவாராயின்

 

     உயிர்க்கு இறுதி ஆகிவிடும் --- அவ்வூக்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியும்.

 

         ('நுனிக் கொம்பர்என்பது கடைக்கண் என்பதுபோலப் பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. பன்மை அறிவின்மை பற்றி இழித்தற்கண் வந்தது. இறுதிக்கு ஏது ஆவதனை 'இறுதிஎன்றார். 'பகைமேற் செல்வான் தொடங்கித் தன்னால் செல்லலாமளவும் சென்று நின்றான்,பின் அவ்வளவின் நில்லாது மன எழுச்சியான் மேலும் செல்லுமாயின்அவ்வெழுச்சி வினை முடிவிற்கு ஏதுவாகாது அவனுயிர் முடிவிற்கு ஏதுவாம்என்னும் பொருள்தோன்ற நின்றமையின்,  இதுவும் மேலை அலங்காரம். 'அளவு அறிந்து நிற்றல் வேண்டும்என்றமையின் இதனான் வினைவலி அறியாவழிப் படும் இழுக்குக் கூறப்பட்டது.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய"முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

கண்ணுதல்பால் சென்றது காமனுக்கு வென்றியோ?

எண்ணம் இலான் போலும் எதிர்ந்தான்,--- நண்ணி

நுனிக் கொம்பர் ஏறினார்அஃது இறந்து ஊக்கின்,

உயிர்க்கு இறுதி ஆகிவிடும்.

 

         நுனிக்கொம்பு ஏறினார்அந்த அளவைக் கடந்தால்தனதுஉயிரை இழப்பர். சிவபெருமானின் தவத்தைத் தேவர்கள் விரும்பியபடி கலைக்கும் பொருட்டுஅவரது வல்லமையையும் அறியாதுதனது நிலையையும் அறியாதுமலர் அம்பு எய்த மன்மதன் எரிக்கப்பட்டான் என்பது வரலாறு.

                                                               

     பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

நெடுமரம் நீள்கோட்டு உயர்பாய்தல் இன்னா;

கடுஞ்சின வேழத்து எதிர்சேறல் இன்னா;

ஒடுங்கி அரவு உறையும் இல்இன்னா;இன்னா

கடும்புலி வாழும் அதர்.              --- இன்னா நாற்பது.

 

இதன் பொருள் ---

 

     நெடுமரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா --- நெடிய மரத்தினது நீண்ட கிளையின் உயரத்திலிருந்து கீழே குதித்தல் துன்பமாம்கடும் சினம் வேழத்து எதிர் சேறல் இன்னா --- மிக்க  கோபத்தினையுடைய யானையின் எதிரே செல்லுதல் துன்பமாம்அரவு ஒடுங்கி உறையும் இல் இன்னா --- பாம்பு மறைந்து வசிக்கின்ற வீடானது துன்பமாம்கடும் புலி வாழும் அதர்  இன்னா ---கொடிய புலிகள் வாழ்கின்ற வழியானது துன்பமாம். 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...