நரை விழாமல் இருப்பது எப்படி

 


தலைமுடி நரைக்காமல் இருக்க

----

 

     தற்போது இளம் வயதிலேயே தலையில் உள்ள முடியானது நரைக்கத் தொடங்கி விடுகிறது. இது தற்போதைய இளம் வயதினர் சந்திக்கும் பிரச்சனைகளில் முதன்மையானது. இளம் வயதில் நரைமுடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம்முடிக்கு கருநிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைந்து வருவதுதான். இந்த மெலனின் முதுமையில்தான் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கும். முதுமை நெருங்க நெருங்கமனக் கவலை மிகுவதால், நரை திரை உண்டாகும். மனக் கவலையை மாற்றுகின்றவன் தனக்கு உவமை இல்லாத இறைவன். அவனை அடைந்தால், கவலைகள் மிகுவதில்லை.

 

     இளம் வயதினர் தலைமுடியைக் கருநிறமாக்க முயலுவதில் இயப்பு ஏதும் இருப்பதற்கு இல்லை. ஆனால், இயல்பாகவே முதுமையில் தலைமயிரானது கொக்குக்கு ஒக்க நரைத்துப் போகும். முதுமை வந்துவிட்ட பின்னராவது, நல்வினைகளைச் செய்து, போகும் நெடுவழிக்குப் புண்ணியத்தைத் தேடிக் கொள்ள வேண்டும். சிலர் நரைத்து வெளுத்து முடியைக் கறுப்பாக்குவதில் சிந்தனையைச் செலுத்துவார்கள். நல்வினைகளைச் செய்யத் தலைப்பட மாட்டார்கள். அறிவு உடையவர்கள், எப்படியும் தமக்கு முதுமை வரும் என்றும், அதன் அறிகுறியாக முடி நரைத்துப் போகும் என்பதை உணர்ந்து, இளமைக் காலத்திலேயே நற்செயல்களைச் செய்து ஆக்கத்தைத் தேடிக் கொள்வார்கள்.

 

"நரைவரும் என்று எண்ணிநல்அறிவாளர்

குழவி இடத்தே துறந்தார்; --- புரைதீரா

மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி

இன்னாங்கு எழுந்திருப் பார்".             --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     பழுதற்ற அறிவினை உடையோர்தமக்கு மூப்பு வரும்அதற்கு அறிகுறியாக தலைமுடி நரைத்துப் போகும் என்பதை அறிந்துஇளமையிலேயே கேடு தரத்தக்க செயல்களில் பற்று வைப்பதை விட்டு ஒழித்தார். குற்றம் நீங்குதல் இல்லாததும்நிலையில்லாததும் ஆகிய இளமைக் காலத்தை அறவழியில் பயன்படுத்தாமல்இளமையானது என்றும் நிலைத்திருக்கும் என்று எண்ணி,உல்லாசமாக வாழ்ந்து களித்தவர்கள்,முதுமை வந்துதலைமுடியும் நரைத்த போது, (மூன்றாவது காலாக) கையில் கோல் ஒன்றினை ஊன்றித் துன்பத்தோடு எழுந்து தள்ளாடுவார்கள்.

 

            இளமைப் பருவத்தை அறவழியில் பயன் படுத்தாமல் நுகர்ந்து மயங்கியவர்கள்பின்பு மூப்பினால் வருந்துவார்கள் என்பது கருத்து.இளமையில் கருத்து இருந்த தலைமயிர்முதுமையில் பஞ்சுபோல் நரைத்து வெண்மை ஆகிவிடும். இந்த நரையை உடையவன் மனிதன். ஆதலால்அவன் "நரன்" என்ற பெயரை உடையவன் ஆயினான். 

 

     மனிதனைத் தவிர வேறு எந்த உயிர்களுக்கும் நரைப்பது இல்லை. காக்கைபன்றியானைகரடி முதலிய உயிர்கட்கு மயிர் எப்போதும் கருமையாக இருப்பதை உற்று நோக்கினால் தெரியும். காரணம், அவை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூவாசைகளில் முழுகி இருப்பது இல்லை. 

 

            எல்லாம் இருந்தாலும், இன்னமும் வேண்டும் என்று ஆசைக்கடலில் அகப்பட்டு அலைபவன் மனிதன் மட்டும்தான். ஆசைக்கடலில் அகப்பட்டுக் கொண்டதால், அருள் அற்ற அந்தகன் ஆகிய இயமனின் கையில் உள்ள கயிற்றினால் பிணிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் பிறந்த அல்லல் படுகின்றான். 

 

"ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்

பாசத்தில் அல்ல்ல்லபட இருந்தேனை, நின் பாதம் என்னும்

வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட

நேசத்தை என் சொல்லுகேன், ஈசர் பாகத்து நேரிழையே!".   ---அபிராமி அந்தாதி.

 

     முதுமை வந்துவிட்டது என்பதை உணர்ந்த பிறகாவது, ஆசைகளை விட்டு, அருள் வழியில் முயலுதல் வேண்டும்.

 

     திருக்காளத்தி மலையை இருப்பிடமாகக் கொண்டு, நாகன் என்னும் மலையரசன் வேடர்களுக்குத் தலைவனாய் ஆட்சிபுரிந்து வந்த காலத்தில், மூப்பு வந்து சேரவும், வேட்டைத் தொழிலில் முயற்சி குன்றியவன் ஆனான். அந்நிலையில்அங்குள்ள மலைகளின் பரந்த பக்கங்களிலும்பயிர் விளையும் காடுகளிலுமாக எங்கும் கொடிய பன்றிபுலிகரடி. காட்டுப்பசுகாட்டெருது,  கலைமான் ஆகிய இவைமுதலாக உள்ள விலங்குகள் மிகவும் நெருங்கிப் பெருமளவில் வந்து அழிவு செய்திடஅது கண்டுமுறையான வேட்டையின் தொழில் இம்முறை தாழ்ந்து போனதால் இந்த நிலை நேர்ந்த்து என்று அங்குள்ள வில்லேந்திய வேடர்கள் அனைவரும் திரண்டுதங்கள் குலத்தின் தலைவனாக உள்ள நல்ல நாகன்பால் சென்று, நேர்ந்த அழிவு பற்றிச் சொன்னார்கள்.

 

     வேடர்கள் சொன்னதைக் கேட்டதுமே, நாகன் என்பான், தன்னைப் பற்றி வரும் தனது மூப்பின் தொடர்ச்சியை நோக்கிதனது மக்களைப் பார்த்து, "என் மக்களே! மூப்பினால் நான் முன்பு போலச் செப்பமாக வேட்டையினில் முயற்சி கொள்ள இயலவில்லை. ஆதலின், என் மகன் திண்ணனை உங்களுக்குத் தலைவனாக ஆக்குகின்றேன். ஏற்றுக் கொள்ளுங்கள்"என்றான்.

 

     சிலர், முதுமை வந்தாலும், தனது நிலையை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதைக் காணலாம். முதுமை வந்த பிறகாவது, பொறுப்புக்களை இளையவர்களிடம் விட்டு, அவர்களை வழிநடத்தும் பொறுப்பை மேற்கொள்ளவேண்டும்.

 

     நரைக்கத் தொடங்கியதில் இருந்தாவது மனிதன் தன்னை மாற்றி அமைக்கவேண்டும். நரைத்த முடியை மாற்றுவதில் கருத்து வைத்தல் கூடாது. மனிதனுடைய வாழ்க்கை மாறுதல் அடைந்துசன்மார்க்க நெறியில் நிற்கவேண்டும். அல்லது இளமையில் இருந்தே சன்மார்க்க நெறியில் நிற்போர் நரைக்கத் தொடங்கிய பின் அதில் உறைத்து திட்பமாக நிற்க வேண்டும். "நரை வந்து விட்டதேஇனி விரைந்து முதுமையும் மரணமும் வருமேகூற்றுவன் பாசக் கயிறும் வருமேஇதுவரையிலும் எனது ஆவி ஈடேற்றத்திற்கு உரிய சிந்தனையை அறிவில்லாத நான் கொள்ளவில்லை. இனியாவது அதில் தலைப்படுவேன். என்னைத் திருவருளால் ஆண்டு அருள்வாய்" என்று துதிக்க வேண்டும்.

 

     வள்ளியம்மையார் வாழ்ந்திருந்த "குறவர் கூட்டதில் வந்து, கிழவனாய்ப் புக்கு நின்று, குருவி ஓட்டித் திரிந்த தவமானைக் குணமதாக்கி, சிறந்த வடிவு காட்டிப் புணர" விரும்பி, கிழவேடம் தாங்கி வந்த முருகப் பெருமானைப் பார்த்து, "நத்துப் புரை முடியீர்! நல்லுணர்வு சற்றும் இலீர்!" என்று சாடினார். (நத்துப் புரை முடி --- சங்குபோல் நரைத்த முடி) முடி நரைத்த பிறகாவது நல்லுணர்வு வரவேண்டும். 


     பிசிராந்தையார் என்னும் புலவர் பெருமான்
பாண்டிய நாட்டின் ஒரு மூலையில் இருந்தபிசிர் என்னும் சிற்றூரில்   வாழ்ந்து வரும் காலத்தில்சோழ நாட்டின் உறையூரில் இருந்து அரசு புரிந்த கோப்பெருஞ் சோழனுடைய குணநலங்களைக் கேள்வியுற்று அவனைக் காண வேட்கை கொண்டு இருந்தார். கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையார் நலங்களைக் கேள்வி உற்றுஅவரிடத்தே பெருநட்பினைத் தன் உள்ளத்தே வளர்க்கலானான். இருவருடைய நட்பு உணர்ச்சிகள் தாமே மிக்குஒருவரை ஒரருவர் தம் பெயரைக் கூறுமிடத்துதத்தம் நண்பர் பெயரை இணைத்துக் கூறிக்கொள்ளும் அளவில் சிறந்து நின்றனர். "நான் கோப்பெருஞ்சோழனின் நண்பன் ஆகிய பிசிராந்தையார்" என்பார் புலவர். "நான் பிசிராந்தையாரின் நண்பன் கோப்பெருஞ்சோழன்" என்பான் அரசன்.

 

     பிசிர் என்னும் ஊர் பாண்டிய நாட்டின் ஒரு மூலையில் உள்ளது. உறையூர் சோழ நாட்டில் உள்ளது. இடையிலே வெகு தொலைவு உள்ளது. ஒருவரை ஒருவர் காணாத நிலையிலும்,குண நலன்களைக் கேள்வி உற்ற நிலையிலேயே நட்பு உணர்வு பூண்டு இருந்தனர் இருவரும்.

 

"புணர்ச்சிபழகுதல் வேண்டாஉணர்ச்சி தான்

நட்பு ஆம் கிழமை தரும்"         --- திருக்குறள்.

 

     நட்புக் கொள்ளுவதற்கு ஒருவரை ஒருவர் புறத்திலே தொடர்பு பூண்டும்பலகாலம் பழகியும் இருக்க வேண்டும் என்பது இல்லை. ஒத்த உணர்வு உடையவராக இருந்தாலே நட்பு என்னும் உரிமை உண்டாகும்.

 

            கோப்பெருஞ்சோழன்தன்னோடு இருந்தவர்களின் மாறுபட்ட மனப் போக்கால்உள்ளம் வருந்தி,  வடக்கிருந்து உயிர் துறக்க எண்ணினான். (வடக்கு இருத்தல் - வடக்கு நோக்கிஊண் உறக்கம் தவிர்த்துதவத்தில் இருத்தல்) சான்றோர் பலர் அவனுடன் வடக்கிருந்தனர். அந்த நேரத்தில்அவன்தனது ஆருயிர் நண்பரான பிசிராந்தையாரைக் காண விழைந்தான். தனது நண்பர் பிசிராந்தையாரும் வடக்கிருக்க வருவார் என்று உணர்ந்துஅவருக்கும் ஓரிடம் ஒதுக்கி வைக்கச் செய்தான்.   

 

     ஒத்த உணர்ச்சியினர் ஆதலால்பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழன் வடக்கிருப்பதை அறியாமல்அனைக் காண வேண்டிப் பாண்டிய நாட்டை விட்டுப் புறப்பட்டு உறையூர் வந்தார். அவர் வந்து சேர்வதற்குள் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்விட்டான். அவனுக்கு நடுகல்லும் நாட்டப்பட்டுவிட்டது. பிசிராந்தையார் மனம் சோர்ந்து வருந்தினார். சிறிது தெளிந்ததும்அருகில் இருந்த சான்றோருடன் கோப்பெருஞ்சோழன் குணநலங்களைப் பேசி அளவளாவிக் கொண்டிருந்தார். அப்போது சிலர், “சான்றோரே! நாங்கள் உங்களை நெடுங்காலமாகக் கேள்விப் படுகின்றோம்.  உங்கள் வயதும் அதிகமாக உள்ளது. உங்கள் வயதைப் பார்க்க,உங்கள் தலைமுடி நரைத்து இருக்க வேண்டும். ஆனால்,நரை சிறிதும்  காணப்படவில்லையே! காரணம் என்னவோ?” என்று வினவினார்கள்.  

 

     "தலைமுடி நரைப்பதற்குக் காரணம் முதுமை அல்ல. மனக் கவலையே. எனக்கு மனக் கவலை கிடையாது. அதற்குக் காரணம் என்னுடைய குடியிலோ,  ஊரிலோ,  நாட்டிலோ கவலை உண்டாவதற்குரிய நிலைகள் இல்லை. எவ்வாறு என்றால்என் குடியில் என் மனைவி மக்கள் அறிவு நிரம்பியவர்கள். என் ஏவலர்களும் இளவல்களும் எனது குறிப்புப் பிழையாது ஒழுகுபவர்கள். எங்கள் ஊரில் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கையை உடைய சான்றோர் பலர் உள்ளனர். என் நாட்டு வேந்தனும் அன்பு உடையவன்அறம் அல்லாதவற்றைச் செய்ய மாட்டான். அதனாலேயே எனது அறிவும் சிறந்து விளங்குகின்றது" என்று பின் வரும் பாடலால் காட்டினார். புறநானூற்றில் வரும் பாடல் இது.

 

"யாண்டுபல ஆகநரை இல ஆகுதல்

யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்,

மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்,

யாண்கண்ட அனையர் என் இளையரும்வேந்தனும்

அல்லவை செய்யான்காக்கும்அதன தலை

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே". 

 

இதன் பதவுரை --- 

 

யாண்டு பல ஆக --- வாழ்ந்து பல ஆண்டுகள் ஆகி வயது முதிர்ந்த நிலையிலும்நரை இல ஆகுதல் யாங்கு ஆகியர் என --- உமக்குத் தலை நரை இல்லாமல் இருக்கின்றதேஇதற்குக் காரணம் என்ன என்று,வினவுதிர் ஆயின் --- கேட்பீர்கள் ஆனால்சொல்வேன்என் மாண்ட மனைவியொடு மக்களும் நிரம்பினர் --- என்னுடைய மனைவி மாட்சிமைப்பட்ட குணங்களை உடையவள்,  எனது புதல்வரும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள் யான் கண்டனையர் என் இளையரும் --- நான் நினைப்பது போலவே,என்னுடைய குறிப்பை அறிந்து வேலை செய்பவர்கள் எனது பணியாளர்களும்இளவல்களும்.வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் --- என் நாட்டு  அரசனும் முறை அல்லாதனவற்றைச் செய்யமாட்டான். குடிமக்களைக் காக்கும் தொழிலையே அன்போடு செய்வான்;  அதன் தலை --- அதற்கு மேலாக,யான் வாழும் ஊர் --- நான் வாழுகின்ற ஊரில்  ஆன்று அடங்கி அவிந்த கொள்கை --- நற்குணங்களால் அமைந்துபணிய வேண்டிய உயர்ந்தாரிடத்துப் பணிந்துமனம் மொழி மெய்களால் அடங்கிய கோட்பாட்டினை

உடையசான்றோர் பலர் --- சான்றோர் பலர் உள்ளனர்.

 

     இன்றைய விஞ்ஞானம் தலை நரைப்பதற்குக் காரணம் கவலைமன அழுத்தம் என்கின்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ்ப் புலவர்என் மனைவி நல்லவள். என் மக்கள் கற்றவர். பணியாளர்கள்இளவல்கள் என் கருத்தின் வழி நடப்பவர்கள். நாட்டினை ஆளுகின்ற அரசன் நல்லவன்அன்பு உடையவன். நான் வாழும் ஊரில் உள்ளவர்கள் சான்றோர்கள். எனவேஎனக்கு எந்தக் கவலையும் இல்லை. எனக்குத் தலைமுடி நரைக்கவும் இல்லை என்கின்றார். எவ்வளவு பெரிய உண்மை.

 

No comments:

Post a Comment

சும்மா இரு மனமே

  சும்மா இருப்பாய் மனமே -----   "வேதாகம சித்ர வேலாயுதன் ,  வெட்சி பூத்த தண்டைப் பாதார விந்தம் அரணாக ,    அல்லும் பகலும் இல்லாச்  சூதானத...