பொது --- 1019. இமகிரி மத்தில்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

இமகிரி மத்தில் (பொது)

 

முருகா! 

திருவடிப் பேற்றினை அருள்வாய்.

 

 

தனதன தத்தத் தனந்த தந்தன

     தனதன தத்தத் தனந்த தந்தன

     தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான

 

 

இமகிரி மத்திற் புயங்க வெம்பணி

     கயிறது சுற்றித் தரங்க வொண்கடல்

     இமையவர் பற்றிக் கடைந்த அன்றெழு ......நஞ்சுபோலே

 

இருகுழை தத்திப் புரண்டு வந்தொரு

     குமிழையு மெற்றிக் கரும்பெ னுஞ்சிலை

     ரதிபதி வெற்றிச் சரங்க ளஞ்சையும் ...... விஞ்சிநீடு

 

சமரமி குத்துப் பரந்த செங்கயல்

     விழியினில் மெத்தத் ததும்பி விஞ்சிய

     தமனிய வெற்புக் கிசைந்த வம்பணி ......கொங்கைமீதே

 

தனிமனம் வைத்துத் தளர்ந்து வண்டமர்

     குழலியர் பொய்க்குட் கலங்க லின்றியெ

     சததளம் வைத்துச் சிவந்த நின்கழல் ...... தந்திடாயோ

 

அமரர்து திக்கப் புரந்த ரன்தொழ

     எழுபது வர்க்கக் குரங்கு கொண்டெறி

     யலையைய டைத்துக் கடந்து சென்றெதிர் ......முந்துபோரில்

 

அசுரர்மு தற்கொற் றவன்பெ ருந்திறல்

     இருபது கொற்றப் புயங்கள் சிந்திட

     அழகிய கொத்துச் சிரங்க ளொன்பது ......மொன்றுமாளக்

 

கமலம லர்க்கைச் சரந்து ரந்தவர்

     மருமக மட்டுக் கொன்றை யந்தொடை

    கறையற வொப்பற் றதும்பை யம்புலி ......கங்கைசூடுங்

 

கடவுளர் பக்கத் தணங்கு தந்தருள்

     குமரகு றத்தத் தைபின்தி ரிந்தவள்

     கடினத னத்திற் கலந்தி லங்கிய ...... தம்பிரானே.

 

 

பதம் பிரித்தல்

 

 

இமகிரி மத்தில்,புயங்க வெம்பணி

     கயிறு அது சுற்றி,தரங்க ஒண்கடல்

     இமையவர் பற்றிக் கடைந்த அன்று எழு ......நஞ்சுபோலே,

 

இருகுழை தத்திப் புரண்டு வந்து,ஒரு

     குமிழையும் எற்றிகரும்பு எனும் சிலை

     ரதிபதி வெற்றிச் சரங்கள் அஞ்சையும் ...... விஞ்சித,நீடு

 

சமரம் மிகுத்துப் பரந்த செங்கயல்

     விழியினில் மெத்தத் ததும்பி,விஞ்சிய

     தமனிய வெற்புக்கு இசைந்த வம்புஅணி ......கொங்கைமீதே,

 

தனிமனம் வைத்துத் தளர்ந்து,வண்டு அமர்

     குழலியர் பொய்க்குள் கலங்கல் இன்றியெ,

     சததளம் வைத்துச் சிவந்த நின்கழல் ...... தந்திடாயோ?

 

அமரர் துதிக்க,புரந்தரன் தொழ,

     எழுபது வர்க்கக் குரங்கு கொண்டுறி

     அலையை அடைத்துக் கடந்து சென்றுதிர் ...முந்துபோரில்

 

அசுரர் முதல் கொற்றவன் பெருந்திறல்

     இருபது கொற்றப் புயங்கள் சிந்திட,

     அழகிய கொத்துச் சிரங்கள் ஒன்பதும் ......ஒன்றும் மாள,

 

கமல மலர்க்கைச் சரம் துரந்தவர்

     மருமக! மட்டுக் கொன்றை அம் தொடை,

     கறை அற ஒப்பற்ற தும்பை,அம்புலி,......கங்கைசூடும்

 

கடவுளர் பக்கத்து அணங்கு தந்து அருள்

     குமர! குறத் தத்தை பின் திரிந்துவள்

     கடின தனத்தில் கலந்து இலங்கிய ...... தம்பிரானே.

 

 

பதவுரை

 

 

      அமரர் துதிக்க--- தேவர்கள் யாவரும் துதிக்க,

 

     புரந்தரன் தொழ --- இந்திரன் தொழுது வணங்க,

 

     எழுபது வர்க்கக் குரங்கு கொண்டு--- எழுபது வெள்ளம் குரங்குப் படையைக் கொண்டு

 

      எறி அலையை அடைத்துக் கடந்து சென்று--- அலை வீசுகின்ற கடலை அடைத்து, அதனைக் கடந்து சென்று,

 

     எதிர் முந்து போரில்--- எதிரில் முனைந்து வந்த போரில்

 

     அசுரர் முதல் கொற்றவன்--- அரக்கர்களின் கொற்றவன் ஆன இராவணனுடைய

 

     பெரும் திறல் இருபது கொற்றப் புயங்கள் சிந்திட--- பெரு வல்லமை கொண்டு இருபது தோள்களும் அற்று விழுமாறும்,

 

     அழகிய கொத்துச் சிரங்கள் ஒன்பதும் ஒன்றும் மாள--- அழகுடன் கொத்தாக இருந்த அவனது தலைகள் பத்தும் மாளும்படியாகவும்,

 

     கமல மலர்க்கைச் சரம் துரந்தவர் மருமக--- தமது தாமரை போன்ற கைகளால் அம்பை விடுத்த இராமபிரான் ஆகிய திருமாலின் திருமருகரே!  

 

     மட்டு உக்க கொன்றை அம் தொடை--- தேன் சொட்டும் அழகிய கொன்றை மாலை,

 

     கறை அற ஒப்பற்ற தும்பை--- மாசற்ற,ஒப்பில்லாத தும்பைமலர் மாலை,

 

     அம்புலி கங்கை சூடும்--- பிறைச்சந்திரன்,கங்கை ஆகியவற்றைத் திருமுடியில் சூடியுள்ள,

 

     கடவுளர் பக்கத்து அணங்கு தந்தருள் குமர--- கடவுளாகிய சிவபரம்பொருளின் இடப்பாகத்தில் உறையும் பார்வதிதேவி பெற்றெடுத்த குமாரக் கடவுளே!

 

      குறத் தத்தைப் பின் திரிந்து--- குறவர் குலமகளாகிய வள்ளிநாயகியின் பின்னே திரிந்து,

 

     அவள் கடின தனத்தில் கலந்து இலங்கிய தம்பிரானே--- அவ்வம்மையாரின் தளரா முலைகளை அணைந்து விளங்கிய தனிப்பெருந்தலைவரே!

 

     இமகிரி மத்தில்--- பொன்மலை என்று சொல்லப்படும் மந்தர மலையை மத்தாக நாட்டி,

 

     புயங்க வெம்பணி கயிறு அது சுற்றி--- வாசுகி என்னும் கொடிய பாம்பைக் கயிறாகச் சுற்றி

 

      தரங்க ஒள் கடல் இமையவர் பற்றிக் கடைந்த அன்று எழு நஞ்சு போலே --- அலை வீசும் ஒளி பொருந்திய கடலைத் தேவர்கள் பற்றிக் கடைந்த நாளில் எழுந்த ஆலகால விஷம் போல் உள்ளதும்,

 

      இரு குழை தத்திப் புரண்டு வந்து--- இரு காதுகளிலும் உள்ள குழைகளைப் பாய்ந்து புரள்வதும்,

 

     ஒரு குமிழையும் எற்றி--- குமிழம் பூவைப் போன்று உள்ள மூக்கைத் தாக்கியும், 

 

      கரும்பு எனும் சிலை ரதிபதி--- கரும்பு வில்லை ஏந்திய இரதிதேவியின் கணவனான மன்மதன் விடுக்கின்ற,

 

     வெற்றிச் சரங்கள் அஞ்சையும் விஞ்சி --- அம்புகள் ஐந்தின் வேகத்தையும் விஞ்சி நிற்பதாய்,

 

      நீடு சமரம் மிகுத்து --- நீண்ட போர் புரிவதாய், 

 

     பரந்த செம் கயல் விழியினில்--- அகன்றுள்ள செவ்விய கயல் மீன் போன்ற கண்களால் தடுமாற்றம் அடைந்து,

 

      மெத்தத் ததும்பி--- மிகவும் மேலெழுந்து,

 

     விஞ்சிய தமனிய வெற்புக்கு இசைந்த வம்பு அணி கொங்கை மீதே--- மேலான பொன்மலைக்கு ஒப்பா,கச்சணிந்து மார்பகங்களின் மேல்,

 

      தனி மனம் வைத்துத் தளர்ந்து--- மனத்தை வைத்துத் தளர்ச்சி அடைந்து,

 

     வண்டு அமர் குழலியர் பொய்க்குள் கலங்கல் இன்றியெ--- வண்டுகள் மொய்த்துள்ள கூந்தலை உடைய மாதர்கள் தரும் பொய்யான இன்பத்துக்குக் கலக்கம் அடைதலை ஒழித்து,

 

      சத தளம் வைத்துச் சிவந்த நின் கழல் தந்திடாயோ --- நூறு இதழ்த் தாமரை மலரைப் போன்று விளங்கும்தேவரீரது செய்ய திருவடிகளைத் தந்து அருளமாட்டீரா?

 

பொழிப்புரை

 

 

     தேவர்கள் யாவரும் துதிக்கஇந்திரன் தொழுது வணங்கஎழுபது வெள்ளம் குரங்குப் படையைக் கொண்டுஅலை வீசுகின்ற கடலை அடைத்து, அதனைக் கடந்து சென்று, எதிரில் முனைந்து வந்த போரில் அரக்கர்களின் கொற்றவன் ஆன இராவணனுடைய பெரு வல்லமை கொண்ட இருபது தோள்களும் அற்று விழுமாறும், அழகுடன் கொத்தாக இருந்த அவனது தலைகள் பத்தும் மாளும்படியாகவும்தமது மலர்க் கைகளால் அம்பை விடுத்த இராமபிரான் ஆகிய திருமாலின் திருமருகரே!  

 

       தேன் சொட்டும் அழகிய கொன்றை மாலை, மாசற்றஒப்பில்லாத தும்பைமலர் மாலை, பிறைச்சந்திரன்கங்கை ஆகியவற்றைத் திருமுடியில் சூடியுள்ளகடவுளாகிய சிவபரம்பொருளின் இடப்பாகத்தில் உறையும் பார்வதிதேவி பெற்றெடுத்த குமாரக் கடவுளே!

 

       குறவர் குலமகளாகிய வள்ளிநாயகியின் பின்னே திரிந்து, அவ்வம்மையாரின்  தளரா முலைகளை அணைந்து விளங்கிய தனிப்பெருந்தலைவரே!

 

     பொன்மலை என்று சொல்லப்படும் மந்தர மலையை மத்தாக நாட்டி ,வாசுகி என்னும் கொடிய பாம்பைக் கயிறாகச் சுற்றிஅலை வீசும் ஒளி பொருந்திய கடலைத் தேவர்கள் பற்றிக் கடைந்த நாளில் எழுந்த ஆலகால விஷம் போல் உள்ளதும், இரு காதுகளிலும் உள்ள குழைகளைப் பாய்ந்து புரள்வதும், குமிழம் பூவைப் போன்று உள்ள மூக்கைத் தாக்கியும்,  கரும்பு வில்லை ஏந்திய இரதிதேவியின் கணவனான மன்மதன் விடுக்கின்றஅம்புகள் ஐந்தின் வேகத்தையும் விஞ்சி நிற்பதாய், நீண்ட போர் புரிவதாய்,  அகன்றுள்ள செவ்விய கயல் மீன் போன்ற கண்களால் தடுமாற்றம் அடைந்துமிகவும் மேலெழுந்துமேலான பொன்மலைக்கு ஒப்பானவையும்கச்சு அணிந்தவையுமான மார்பகங்களின் மேல்மனத்தை வைத்துத் தளர்ச்சி அடைந்துவண்டுகள் மொய்த்துள்ள கூந்தலை உடைய மாதர்கள் தரும் பொய்யான இன்பத்துக்குக் கலக்கம் அடைதலை ஒழித்துநூறு இதழ்த் தாமரை மலரைப் போன்று விளங்கும்தேவரீரது செய்ய திருவடிகளைத் தந்து அருளமாட்டீரா?

 

விரிவுரை

 

இமகிரி மத்தில்--- 

 

இமம் --- பொன். பொனமலை என்று சொல்லப்படும் மேரு மலையைதிருப்பாற்கடலில் மத்தாக நாட்டினார்கள் தேவர்கள்.

 

புயங்க வெம்பணி கயிறு அது சுற்றி---

 

புயங்கம் --- பாம்பு.

 

வெம்பணி --- கொடிய பாம்பு. 

 

வாசுகி என்னும் பாம்பைக் கயிறாக வைத்தனர்.
 

தரங்க ஒள் கடல் இமையவர் பற்றிக் கடைந்த அன்று எழு நஞ்சு போலே --- 

 

தரங்கம் --- அலை. 

 

ஒள் கடல் --- ஒளி பொருந்திய பாற்கடல்.

 

திருப்பாற்கடலில் எழுந்த ஆலாகால விடம் மிகக் கொடியது. அது உண்டாரைக் கொல்லும் தன்மை உடையது.

 

பெண்களின் கண்கள் கண்டாரைக் கொல்லும் தன்மை உடையவை என்பதால்அவை ஆலாகால விடத்துக்கு ஒப்பாகச் சொல்லப்பட்டன.

 

இரு குழை தத்திப் புரண்டு வந்து--- 


இரு குழை --- இரண்டு காதுகளிலும் அணிந்துள்ள குழை. 

 

பெண்களின் கண்களை நீண்டு இருப்பதால்காதளவு ஓடிய கண்கள் என்பர். இங்கும் அங்குமாகப் புரள்வதால்காதுகளில் உள்ள குழைகளோடு மோதுவது போல உள்ளது.

 

ஒரு குமிழையும் எற்றி--- 

 

குமிழ் --- குமிழம் பூவைப் போன்று உள்ள மூக்கு. 

 

கரும்பு எனும் சிலை ரதிபதி--- 

 

ரதிபதி --- இரதி தேவியின் பதியாகிய மன்மதன். 

 

சிலை -- வில். மன்மதனுடைய வில் கரும்பு.

 

வெற்றிச் சரங்கள் அஞ்சையும் விஞ்சி --- 

 

சரங்கள் ---  அம்புகள்.

 

மன்மதனுடைய மலர்க்கணைகள். அவை பரிமள மிக்க மா,அசோகுதாமரைமுல்லைநீலோற்பலம்.

 

மன்மதனுடைய கணைகளைப் பற்றியும்அவனுக்குத் துணை செய்யும் பொருள்களைப் பற்றியும் வரும் பாடல்களைக் காண்க.

 

வனசம்செழுஞ்சூத முடன்அசோ கம்தளவம்,

     மலர்நீலம் இவைஐந் துமே

  மாரவேள் கணைகளாம்இவைசெயும் குணம்முளரி

     மனதில் ஆசையை எழுப்பும்;

 

வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;

     மிகஅசோ கம்து யர்செயும்;

  வீழ்த்திடும் குளிர் முல்லைநீலம்உயிர் போக்கிவிடும்;

     மேவும்இவை செயும்அ வத்தை;

 

நினைவில்அது வேநோக்கம்வேறொன்றில் ஆசையறல்,

     நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,

  நெஞ்சம் திடுக்கிடுதல்அனம் வெறுத்திடல்காய்ச்சல்

     நேர்தல்மௌனம் புரிகுதல்,

 

அனையவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

 

       தாமரைவளமிகுந்த மாஅசோகுமுல்லைமலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,

 

       இவை உயிர்களுக்கு ஊட்டும் பண்புகள் --- தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும். சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும். அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும். குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும்.  நீலமலர் உயிரை ஒழிக்கும்,

 

       இவை உண்டாக்கும் நிலைகளாவன: எண்ணத்தில் அதுவே கருதுதல்மற்றொன்றில் ஆசை நீங்கல்பெருமூச்சுடன் பிதற்றுதல்உள்ளம் திடுக்கிடல்உணவில் வெறுப்புஉடல் வெதும்புதல்மெலிதல்பேசாதிருத்தல்ஆசையுற்ற உயிர் உண்டோ இல்லையோ என்னும் நிலையடைதல் ஆகிய இவை பத்தும் ஆகும்.

 

மன்மதனுக்குத் துணை செய்யும் கருவிகள்......

 

வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;

     மேல்விடும் கணைகள் அலராம்;

  வீசிடும் தென்றல்தேர்பைங்கிள்ளை யேபரிகள்;

     வேழம்கெ டாதஇருள் ஆம்;

 

வஞ்சியர் பெருஞ்சேனைகைதைஉடை வாள்நெடிய

    வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;

  மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;

    மனதேபெ ரும்போர்க் களம்;

 

சஞ்சரிக இசைபாடல்குமுதநே யன்கவிகை;

    சார்இரதி யேம னைவிஆம்;

  தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்

    தவறாதி ருக்கும் இடம்ஆம்;

 

அஞ்சுகணை மாரவேட் கென்பர்எளியோர்க்கெலாம்

    அமுதமே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

    அறப்பளீ சுரதே வனே!

 

ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு......

 

---        கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும்.

---        அம்பு கரிய வண்டின் கூட்டம் ஆகும்.

---        உயிர்களின் மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும்.

---        தேர் உலவும் தென்றற் காற்று ஆகும்.

---        குதிரைகள் பச்சைக் கிளிகளே ஆகும்.

---        யானை அழியாத இருளாகும்.

---        மிகுபடை பெண்கள் ஆவர்.

---        உடைவாள் தாழை மடல் ஆகும்.

---        போர் முரசு நீண்ட கொடைத்தன்மை பொருந்திய கடலாகும்

---        கொடி மகர மீன் ஆகும்.

---        சின்னம் வேனிலில் வரும் குயிலோசைகும்.

---        பெரிய போர்க்களம் உயிர்களின் உள்ளமே ஆகும்.

---        பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும்.

---        குடை சந்திரன் ஆவான்.

---        காதலி அழகு பொருந்திய இரதியே ஆவாள்.

---        அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள் முடி ஆகும்.

---        எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் பெண்களின் அல்குல் ஆகும்.

 

மன்மதனுடைய கணைகளினால் அறிவாற்றல் அழியும். அவன் கணையினால் மாதவம் இழந்தோர் பலர்.

 

மன்மதனுடைய அம்புகளின் வேகத்தையும் விஞ்சிஇளைஞர் உள்ளத்தில் வந்து பாய்வன பெண்களின் கண்கள்.

 

தமனிய வெற்புக்கு இசைந்த வம்பு அணி கொங்கை மீதே தனி மனம் வைத்துத் தளர்ந்து--- 

 

தமனிய வெற்பு --- பொன்மலை. 

 

பொன் --- அழகு.

 

அழகு மிகுந்துகச்சு அணிந்து உள்ள கொங்கைகள் மீதிலேயே மனத்தை வைத்துகாமத் தீயால் தளர்ச்சி அடைவர் இளைஞர்கள்.

 

வண்டு அமர் குழலியர் பொய்க்குள் கலங்கல் இன்றியெ--- 

 

வண்டு அமர் குழல் --- மணம் மிகுந்த மலர்களைச் சூடியுள்ளதால்பெண்களின் கூந்தலை வண்டுகள் வந்து மொய்க்கின்றன.

 

வண்டுகள் போல இளைஞர் மனமானது அவர்களையே மொய்த்து இருக்கும்.

 

மாதர் தரும் இன்பமானது சிற்றின்பம். அது சிறிது நேரமே இன்பம் தருவது. காலப் போக்கில் துன்பம் தருவது.

 

சத தளம் வைத்துச் சிவந்த நின் கழல் தந்திடாயோ --- 

 

மாதர் மயக்கில் சிக்கிய சிந்தையை மாற்றிஇறைவன் திருவடித் தாமரையில் செலுத்துதல் வேண்டும்.

 

அமரர் துதிக்க புரந்தரன் தொழ எழுபது வர்க்கக் குரங்கு கொண்டுஎறி அலையை அடைத்துக் கடந்து சென்று--- 

 

இராமச்சந்திரமூர்த்தி நானாவிதமான எண்ணங்களாகிய அலைகளை ஒழியாது வீசுகின்ற சமுசாரமாகிய கடலைவைராக்கியமாகிய அணையைக் கட்டிகடந்து சென்றுகாமக்ரோதாதிகளாகிய அசுரர்களை அழித்தனர்.

 

ஆழியில் அணை கட்டிய வரலாறு

 

இராமச்சந்திரமூர்த்தி கடற்கரையில் தருப்பைகளைப் பரப்பிவருணனை நினைத்துகரத்தைத் தலையணையாக வைத்துகிழக்கு முகமாகப் படுத்தார். அயோத்தியில் நவரத்ன மயமான தங்கக் கட்டிலில் நறுமலர்ச் சயனத்திலிருந்த அவர் திருமேனி பூமியில் படுத்திருந்தது. மனோவாக்கு காயங்களால் நியமம் உள்ளவராய் மூன்று நாட்கள் தவமிருந்தார். மூடனான கடலரசன் இராமருக்கு முன்பு வரவில்லை. இராமருக்குப் பெருங்கோபம் மூண்டது. இலட்சுமணனை நோக்கி, “தம்பி! இன்று கடலை வற்றச் செய்கிறேன்மூடர்களிடத்தில் பொறுமை காட்டக்கூடாது. வில்லைக் கொண்டுவாதிவ்விய அம்புகளையும் எடுத்துவா. கடலை வற்றச்செய்து வானரர்கள் காலால் நடந்து போகச் செய்கிறேன்” என்று சொல்லி உலகங்கள் நடுங்ககோதண்டத்தை வளைத்து நாணேற்றிப் பிரளய காலாக்கினி போல் நின்றார். அப்போது கடல் கொந்தளித்தது. சூரியன் மறைந்தான்.  இருள் சூழ்ந்தது.  எரிகொள்ளிகள் தோன்றின. மலைகள் நடுங்கின. மேகங்களின்றியே இடியும் மின்னலும் உண்டாயின. இராமர் பிரம்மாத்திரத்தை எடுத்து வில்லில் சந்தித்தார். இலட்சுமணர் ஓடி வந்து “வேண்டாம் வேண்டாம்” என்று வில்லைப் பிடித்துக் கொண்டார். பிரளயகாலம் வந்துவிட்டதென்று தேவர்கள் மருண்டனர். உயிர்கள் “இனி உய்வு இல்லை” என்று அசைவற்றுக் கிடந்தன.

 

உடனே மேருமலையினின்றும் சூரியன் உதிப்பது போல்கற்பக மலர் மாலையுடனும் நவரத்ன மாலையுடனும் குழப்பமடைந்த மனத்துடன் வருணன் “ராம ராம” என்று துதித்துக் கொண்டு தோன்றிகால காலரைப் போல் கடுங் கோபத்துடன் நிற்கும் ரகுவீரரிடம் வந்து பணிந்து, “ராகவரே! மன்னிப்பீர்வானர சேனைகள் கடலைக் கடக்குமாறு அணை கட்டுகையில் அதனை அடித்துக்கொண்டு போகாமல் நிலம் போல் நிற்கச் செய்கிறேன்” என்றான். 

 

இராமர் “நதிகளின் நாயகனே! எனது வில்லில் தொடுத்த இந்த அம்பு வீண் போகாது.  இதை நான் எவ்விடத்தில் விடலாம் சொல்லுக” என்றார். “வடதிசையில் என்னைச் சேர்ந்த துரும குல்யம் என்ற ஒரு தலமுள்ளது. அங்கே அநேக கொடியவர்கள் அதர்மத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது இக்கணையை விட்டருள்வீர்” என்று சொல்லஇராமர்உடனே அக்கணையை விடுத்தார். அக்கணை சென்று அந்த இடத்தைப் பிளக்க ரஸாதலத்திலிருந்து தண்ணீர் பொங்கியது. அவ்விடம் விரண கூபம் என்று பெயர் பெற்றது. அந்தப் பிரதேசம் மருகாந்தாரம் என வழங்குகிறது. அவ்விடம் “எல்லா நன்மைகளுக்கும் உறைவிடமாயும் சகல வளங்களும் உடையதாயும் விளங்குக” என்று இரகுநாதர் வரங்கொடுத்தார்.

 

பிறகு வருணன் இராமரைப் பார்த்து “சாந்த மூர்த்தியே! இவன் நளன் என்ற வானரவீரன்.  விசுவகர்மாவினுடைய புதல்வன்தந்தைக்குச் சமானமானவன்தந்தையினிடம் வரம் பெற்றவன். இவ்வானரன் என்மேல் அணை கட்டட்டும். நான் தாங்குகிறேன்” என்று சொல்லி மறைந்தான். சிறந்த பலம் பொருந்திய நளன் எழுந்து இராமரை வணங்கி, “சக்கரவர்த்தித் திருக்குமாரரே! வருணன் கூறியது உண்மையே! விசாலமான இந்தக் கடலில் நான் எனது தந்தையின் வல்லமையைக் கைப்பற்றியவனாய் அணைகட்டுகிறேன். வீரனுக்குத் தண்டோபாயமே சிறந்ததுஅயோக்கியர்களிடம் சாமம் தானம் என்பவற்றை உபயோகித்தால் தீமையே. இக் கடலரசனும் தண்டோபாயத்தினாலேயே பயந்து அணை கட்ட இடங்கொடுத்தான். வானரவீரர்கள் அணைகட்டுவதற்கு வேண்டிய வற்றைக் கொணரட்டும்” என்றான்.

 

இராமர் அவ்வாறே கட்டளையிடவானர வீரர்கள் நாற்புறங்களிலும் பெருங் காட்டில் சென்று,  மரங்களை வேரோடு பிணுங்கி எடுத்து வந்தார்கள். மலைகளையும் கல்குன்றுகளையும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் கொணர்ந்தார்கள். சிலர் நூறுயோசனை தூரம் கயிறுகளைக் கட்டிப் பிடித்தார்கள். சிலர் அளவு கோலைத் தாங்கி நின்றார்கள். நளன் பெரிய அணையை வெகுவிரைவில் கட்டி முடித்தான். அவ்வற்புதத்தைப் பார்க்க விரும்பி ஆகாயத்தில் திரண்ட தேவர்களும் அதைக் கண்டு அதிசயித்தார்கள். மனத்தால் நினைக்க முடியாததும் மயிர்க்கூச்சல் உண்டாக்குவதுமாகிய அச் சேதுவைப் பார்த்து எல்லா உயிர்களும் இறும்பூதுற்றன.

 

எதிர் முந்து போரில் அசுரர் முதல் கொற்றவன் பெரும் திறல் இருபது கொற்றப் புயங்கள் சிந்திட அழகிய கொத்துச் சிரங்கள் ஒன்பதும் ஒன்றும் மாள கமல மலர்க்கைச் சரம் துரந்தவர்--- 

 

     அசுரர் முதல் கொற்றவன் --- அரக்கர்களுக்கு முதல்வனும்அரசனும் ஆன இராவணன்.

 

     இராவணன் கல்வி அறிவில் மிக்கவன். செல்வத்தில் மிக்கவன். சிவபத்தியிலும் சிறந்தவன். ஆனாலும்அவனது ஆட்சியில் எல்லோருக்கும் துன்பமே மிகுந்து இருந்தது.

 

     அறத்தின் பயனாக அவதரித்த இராமபிரான்தனது தம்பியாகிய இலக்குவனுடனும்,தேவி சீதையுடனும் தண்டகாரணியத்தில் தங்கி இருந்த காலத்தில்இராமன் மீது இச்சை வைத்து,இலக்குவனால் மூக்கினை இழந்த சூர்ப்பணகையால் சீதாதேவியின் பேரழகைக் கேட்டு அறிந்த இராவணன்தேவியை அடையக் காதல் கொண்டான். காமம் தலைக்கு ஏறியதால், "மற்றொருவர்க்காய் மனை வாழும் தாரம் கொண்டார் தம்மைத் தருமம்தான் ஈரும் கண்டாய்கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா" என்ற மாரீசனது சொல்லையும் அவன் உள்ளத்தில் கொள்ளவில்லை.

 

"பேதாய்பிழை செய்தனைபேருலகில்

மாதா ஆனையாளை மனக்கொடு நீ

யாதாக நினைத்தனை?எண்ணம் இலாய்,

ஆதாரம் நினக்கு இனி யார் உளரே"

 

என்று சொல்லிய சடாயுவையும் கொன்று தீர்த்தான். பதறிக் கதறிய சீதாதேவியைக் கவர்ந்து வந்து இலங்கையில் சிறை வைத்தான்.

 

     இடையிடையில் வந்து அச்சுற்றுத்திதனது வேட்கையைத் தணிக்குமாறு வற்புறுத்திய இராவணனை, "அடா! பேதையே! இராமலக்குவணர் இல்லாத சமயம் பார்த்து என்னைக் கவர்ந்தாய்".

 

"மேருவை உருவ வேண்டின்,

    விண் பிளந்து ஏகவேண்டின்

ஈர் எழு புவனம் யாவும்

    முற்றுவித்திடுதல் வேண்டின்,

ஆரியன் பகழி வல்லது;

    அறிந்திருந்து அறிவு இலாதாய்!

சீரிய அல்ல சொல்லித்

    தலை பத்தும் சிந்துவாயோ?"

 

என்று சீதாதேவி கூறிய அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாத அளவுக்கு அவனது காமம் மிகுந்து இருந்தது.

 

"ஆசு இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம்

மாசு இல் புகழ் காதல் உறுவேம்வளமை கூரப்

பேசுவது வீரம் இடை பேணுவது காமம்;

கூசுவது மானிடரைநன்று நம கொற்றம்".

 

என்று தைரியமாக அறத்தை எடுத்து உரைத்த கும்பகர்ணனையும் அவன் இகழ்ந்தான்.

 

"கோநகர் முழுவதும் நினது கொற்றமும்

சானகி எனும் பெயர் உலகின் தம்மனை

யானவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர்

வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ?"

 

"இசையும் செல்வமும் உயர் குலத்து

    இயற்கையும் எஞ்ச,

வசையும் கீழ்மையும் மீக்கொளக்

    கிளையொடும் மடியாது,

அசைவில் கற்பின் அவ் அணங்கை விட்டு

    அருளுதி,இதன்மேல்

விசையம் இல்"

 

என அறிஞரின் மிக்கவனும் தனது தம்பியும் ஆன விபீடணர் சொன்ன அறிவுரைகளையும் தனது சிந்தையில் கொள்ளவில்லை.

 

"தேவியை விடுக! அன்றேல்,

    செருக்களத்து எதிர்ந்து தன்கண்

ஆவியை விடுக! ‘‘ என்றான்,

    அருள் இனம் விடுகிலாதான்.

 

என்று இராமபிரானின் தூதுவனாகிய அங்கதன் இராமனின் மொழியாகச் சொன்னதையும் அவன் ஏற்றுக் கொள்ளவில்லை.

 

     தனது பாட்டன் ஆகிய மாலியவான்தனது தம்பியாகிய கும்பகர்ணன்விபீடணன் ஆகியோர் சொன்ன அறிவுரையும்ஆணவமும் காமமும் மிக்கு இருந்த இராவணன் காதுகளில் விழவில்லை.

 

     சானகி துன்பம்வானவர் துன்பம் அனைத்தும் ஒழியஇந்திரன் அனுப்பிய தேரின் மீது ஏறிய இராகவன் போருக்கு எழுந்தான். தருமமும் பாவமும் ஒன்றோடு ஒன்று மோதின. இறுதியில்இராமபிரான் விடுத்த ஒப்பற்ற கணை ஒன்றினால் மடிந்தான் இராவணன். பாவம் மடிந்துஅறம் வென்றது.

 

மட்டு உக்க கொன்றை அம் தொடை கறை அற ஒப்பற்ற தும்பைஅம்புலி கங்கை சூடும் கடவுளர் பக்கத்து அணங்கு தந்தருள் குமர--- 

 

மட்டு --- தேன்.

 

உகுதல் --- சிந்துதல்.

 

கொன்றைமாலைதும்பை மாலைபிறைச்சந்திரன்கங்கை ஆகியவற்றத் திருமுடியில் தரித்துள்ள கடவுளாகிய சிவபரம்பொருளின் இடப்பாகத்தில் உறைபவர் பார்வதி தேவி. 

 

குறத் தத்தைப் பின் திரிந்து அவள் கடின தனத்தில் கலந்து இலங்கிய தம்பிரானே--- 

 

கடின தனம் --- தளராத முலை.

 

தழைகளால் ஆன ஆடையை உடுத்திருந்து குறமகள் ஆகிய வள்ளிநாயகியின் பாதம் இரண்டையும் வருடியும்அவருடைய வட்டமான முகத்தில் திலகம் வைத்தும்வெற்றியுடன் தோன்றும் அவரது கொங்கையாகிய மலைகளின் மீது,அழகிய முத்துமாலையும் இரவிக்கையும் அணிந்தும்இரண்டு குழைகளைத் திருத்தியும்அன்பு செய்தவர் முருகப் பெருமான். 

 

தழை உடுத்த குறத்தி பதத் துணை

     வருடி,வட்ட முகத் திலதக் குறி

     தடவி,வெற்றி கதித்த முலைக்குவடு ...... அதன்மீதே

தரள பொன் பணி கச்சு விசித்துரு

     குழை திருத்தி,அருத்தி மிகுத்திடு

     தணிமலைச் சிகரத்திடை உற்றுஅருள் ...... பெருமாளே.  --- (பழமை) திருப்புகழ்.

 

கருத்துரை

 

முருகா! திருவடிப் பேற்றினை அருள்வாய்.

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...