048. வலி அறிதல் --- 08. ஆகாறு அளவிட்டிது

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 48 -- வலி அறிதல்

 

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறளில், "செல்வம் வரும் வழி அளவில் சிறியது என்றாலும்அச் செல்வம் செலவாகும் வழி விரியாத நிலையில் அழிவு என்பது இல்லை" என்கின்றார் நாயனார்.

 

     ஒரு பங்கு சேர்த்து வைத்தல் இல்லையாயினும்வருகின்ற வருவாய்க்குத் தக்க அளவாகச் செலவழித்தால் போதும் என்கிறது. சேமித்து வைப்பது இல்லையாயினும்கடன் வாங்கிச் செலவழியாது இருப்பது சிறப்பு உடையது. ஆதலால்கடன் வாங்காது வருவாயினைச் செலவழிக்கின்ற மக்களுக்கு எப்போதும் கேடு இல்லை என்பது அறியப்படும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

 

ஆகுஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை,

போகு ஆறு அகலாக் கடை.                    

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---    

 

     ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை--- அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்: 

 

     போகு ஆறு அகலாக் கடை --- போகின்ற நெறி அளவு அதனின் பெருகாதாயின்.

 

         ('இட்டிது'  எனவும் 'அகலாது'  எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள்'  என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவுஎன்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.)

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

ஆன முதலில் அதிகம் செலவானால்,

மானம் அழிந்து,மதிகெட்டுப் --- போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய்,ஏழ்பிறப்புத் தீயனாய்,

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.   --- நல்வழி.

 

இதன் பொருள் ---

 

     ஆன முதலில் செலவு அதிகம் ஆனால் --- தனக்குக் கிடைத்த முதற்பொருளுக்குச் (வருவாயில்) செலவு மிகுதி செய்யத் தொடங்கியவன்மானம் அழிந்து --- தனது பெருமை கெட்டுமதி கெட்டு --- தனது அறிவை இழந்துபோன திசை எல்லார்க்கும் கள்ளன் ஆய் --- தான் சென்ற திசையினும் எல்லார்க்கும் திருடனாகிஏழ் பிறப்பும் தீயன் ஆய் --- எழுவகைப் பிறப்புக்களினும் பாவம் உடையவன் ஆகிநல்லார்க்கும் பொல்லன் ஆம் --- (தன்னிடத்து அன்பு வைத்த) நன்மக்களுக்கும் பொல்லாதவனாவான்நாடு ---(இதனை) ஆராய்ந்து அறிவாயாக.

 

 

இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க் காற்றாது

முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்

நெட்டாற்றுச் சென்று நிரைமனையிற் கைந்நீட்டுங்

கெட்டாற்று வாழ்க்கையே நன்று.         ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     இட்டு ஆற்றுப் பட்டு ஒன்று இரந்தவர்க்கு ஆற்றாது முட்டு ஆற்றுப் பட்டு முயன்று உள்ளூர் வாழ்தலின் --- சிறுமையாகிய வறுமை வழியில் அகப்பட்டுத் தம்மிடம் ஒன்று இரந்தவர்கட்கு உதவமாட்டாமல் முட்டுப்பாடான முறைமையில் இருந்து கொண்டு முயற்சியோடு உள்ளூரில் உயிர் வாழ்தலை விடநெடு ஆற்றுச் சென்று நிரை மனையில்கை நீட்டும் கெடு ஆறு வாழ்க்கையே நன்று --- தொலைவழி நடந்துபோய் அங்கங்கும் வரிசையாக உள்ள வீடுகளில் கை நீட்டி இரந்து உண்ணும் கெடுவழி வாழ்க்கையே நன்றாகும்.

 

         பிறர்க்கொன்று உதவமாட்டாத வறுமை வாழ்வினும்,நாடு கடந்துபோய் இரந்துண்ணும் இழிவு வாழ்வே நன்று. பிறர்க்கு ஒன்று உதவுகின்ற நிலைவருவாய்க்கு அதிகமாகச் செலவு செய்பவனிடத்தில் இல்லை ஆகும்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...