வழிபாட்டின் குறிக்கோளும் பயனும்

 


வழிபாட்டின் குறிக்கோளும்பயனும்.

-----

 

     "உடம்பு எடுத்து வந்த உயிரானதுஅதற்கு வகுக்கப்பட்ட வாழ்நாள் வரை இந்த உலகத்தில் வாழ்ந்துவிதிக்கு ஏற்ப இன்பதுன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கும். வாழ்நாள் முடிவில் இந்த உடம்பை விட்டுப் பிரியும். தானாகப் பிரியாதுபிரிப்பதற்கு இயமதூதுவர்கள் வருவார்கள். வாழ்வாங்கு வாழ்ந்துபக்குவப்பட்டு இருந்துஇருவினைகளும் அற்று இருந்தால்இறைவனுடைய தூதுவர்கள் வந்துஉடம்பில் இருந்து உயிரைப் பிரித்துக் கொண்டு சென்றுஇறைவன் திருவடியில் சேர்ப்பார்கள். 

 

    இயம தூதுவர் வந்தாரா அல்லது இறைவன் தூதுவர்கள் வந்தாரா என்பது உடம்போடு வாழுகின்ற நம்மால் அறிந்து கொள்ள முடியாது. ஆனால்ஏதோ ஒன்று நிச்சயம் நடக்கும். 

 

    "இயம தூதர் வருமுன் அடியேனை ஆட்கொண்டுதமிழால் உம்மைப் பாட அருளிஉயிர்த்துணையாக என்னுள் கலந்து இருந்து அருள் புரிவீர்" என்று அருணகிரிநாதப் பெருமான் வேண்டுகின்ற திருப்புகழ்ப் பாடல் நம்மில் எல்லோருக்கும் பொருத்தம் உடையது. இந்த வேணடுதல் எல்லோருக்கும் பொருந்தும். அருணகிரிநாதப் பெருமான்  அருளிய அருமையான திருப்புகழ்ப் பாடலைஎளிதாகப் புரிந்துகொள்ளபதம் பிரித்துத் தந்துள்ளேன்.

 

மனத்து இரைந்து எழும் ஈளையும் மேலிட,

     கறுத்த குஞ்சியுமே நரை ஆயிட,

     மலர்க்கண் அண்டு இருள் ஆகியுமே,நடை ...... தடுமாறி,

 

வருத்தமும் தரதாய் மனையாள்மகவு

     வெறுத்திட,அம்கிளையோருடன் யாவரும்

     வசைக்கு உறும் சொலினால் மிகவே தினம் ...... நகையாட,

 

எனைக் கடந்திடு பாசமுமே கொடு,

     சினத்து வந்துஎதிர் சூலமுமே கையில்

     எடுத்துஎறிந்துஅழல் வாய்விடவேபயம் ...... உறவேதான்,

 

இழுக்க வந்திடு தூதர்கள் ஆனவர்

     பிடிக்கு முன்பு,உன தாள்மலர் ஆகிய

     இணைப் பதம் தரவேமயில் மீதினில் ...... வரவேணும்.

 

கனத்த செந்தமிழால் நினையே தினம்

     நினைக்கவும் தருவாய்உனது ஆர்அருள்

     கருத்து இருந்து உறைவாய்எனது ஆர்உயிர்...... துணையாக,

 

கடல் சலம் தனிலே ஒளி சூரனை

     உடல் பகுந்துஇரு கூறு எனவேஅது

     கதித்து எழுந்துஒரு சேவலும் மாமயில் ...... விடும்வேலா!

 

அனத்தனும் கமல ஆலயம் மீதுஉறை

     திருக்கலந்திடு மால் அடி நேடிய

     அரற்குஅரும்பொருள் தான் உரை கூறிய ...... குமரேசா!

 

அறத்தையும் தருவோர் கன பூசுரர்

     நினைத்தினம் தொழுவார் அமர்ஆய் புரி

     அருள் செறிந்துஅவிநாசியுள் மேவிய ...... பெருமாளே!

 

இதன்பொழிப்புரை ---

 

            கடல் நீரிலே பெருமரமாக ஒளிந்து கொண்ட சூரபதுமனது உடல் இரு கூறாகும்படிப் பிளந்துஅப் பிளவுகள் வேகமாக மேலெழுந்துஒப்பற்ற சேவலும்பெருமை தங்கிய மயிலும் ஆக வரும்படியாக வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

 

            அன்னத்தை வாகனமாக உடைய பிரமதேவனும்,தாமரை மலராகிய கோயிலில் வாழும் இலக்குமிதேவி மருவுகின்ற திருமாலும்முடியையும் திருவடியையும் தேடிய சிவபெருமானுக்கு "ஓம்" என்னும் தனிமொழியின் மெய்ப்பொருளை உபதேசித்து அருளிய குமாரக் கடவுளாகிய தலைவரே!

 

            அருளைத் தருவதோடு அற நெறியையும் தருகின்றவர்களாகிய தருமசீலர்களும்பெருமை தங்கிய அந்தணாளர்களும்தேவரீரை நாள் தோறும் தொழுபவர்களாகிய அடியார்களும்,விரும்பி வாழும்படியாகதாய் செய்கின்ற அருளினும் மிகுந்த அருளுடன் அவிநாசி என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள பெருமையின் மிக்கவரே!

 

            நெஞ்சிலே இரைச்சலுடன் எழுகின்ற கோழையானது மிகுதி ஆகவும்,கருமை நிறம் பொருந்திய தலைமயிரும் வெளுத்துப் போகவும்தாமரை போன்ற கண்கள் நெருங்கிய இருளை அடைந்து பார்வை ஒழிந்தும்அதனால் நடை தடுமாற்றத்தை அடைந்துதுன்பத்தைத் தரவும்தாயார்மனைவிமக்கள் ஆகியோர்வெறுப்புக் கொள்ளும் நல்ல சுற்றத்தார் அவருடன் மற்றெல்லாரும் வசைக்கு உரிய ஏளனமான சொற்களினால் பரிகசித்துநாள்தோறும் மிகவும் சிரிக்கவும்என்னை அழிக்கின்றதாகிய பாசத்தையும் ஏந்திக் கொண்டுகோபத்துடன் வந்து எதிர்த்துதிரிசூலத்தைக் கையில் எடுத்து அதை என் மேல் வீசிநெருப்பை வாயில் கக்கிக் கொண்டுஅடியேன் மிகவும் பயம் கொள்ளும்படி உயிரைப் பற்றி இழுக்க வருகின்ற இயம தூதுவர்கள் என்னைப் பிடித்துக் கொண்டு போகும் முன்பாகதேவரீருடைய திருவடித் தாமரையாகிய இரு சரணங்களையும் அடியேனுக்குத் தந்து காப்பாற்றும் பொருட்டு மயில் வாகனத்தின் மீது வந்தருள வேண்டும். அங்ஙனம் வந்து, சிறந்த செந்தமிழ் மொழியால் தேவரீரையே தினந்தோறும் பாடுவதோடு, நினைக்குமாறும் அருள் புரிவீர். என்னுடைய அருமையான உயிருக்கு உறுதுணையாக என் கருத்திலேயே பொருந்தி வீற்றிருந்து அருள் தருவீராக.

 

     திருப்புகழ் ஓதுவோர்விநாயகர் திருப்புகழ் பாடிய பின்இத் திருப்புகழை ஓதுவது ஆன்றோர் வழக்காக இருந்துள்ளது. காரணம், "கனத்த செந்தமிழால் நினையே தினம் நினைக்கவும் தருவாய்" என்று அடிகளார் விண்ணப்பம் புரிவதே. இந்தப் பாடலில் இன்னும் பலப்பல அரிய கருத்துக்கள் அடங்கிக் கிடக்கின்றன. இறைவனை வரவேணும் என்று அழைக்கின்றார். ஆதலினால்முறையே திருப்புகழைப் பாராயணம் செய்வோர், "கைத்தல நிறைகனி" என்ற விநாயகர் திருப்புகழை ஓதிய பின், "மனத்திரைந்தெழு" என்ற இத் திருப்புகழை ஓதுவது சிறப்பு.

 

மனத்திரைந்தெழும் ஈளையும் மேலிட---

 

முதுமைப் பருவத்திலே நெஞ்சில் கோழை அதிகமாகி பெரும் சத்தத்துடன், ஈளை என்ற நோய் உண்டாகும்.

 

பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்

பீளை சாறிட ஈளை மேலிட...

 

என்பார் திருவிடைமருதூர் திருப்புகழில்.

 

ஐயினால் மிடறு அடைப்புண்டுஆக்கை விட்டு,

     ஆவியார் போவதுமேஅகத்தார் கூடி,

மையினால் கண் எழுதிமாலை சூட்டிமயானத்தில்

      இடுவதன் முன்மதியம் சூடும்

ஐயனார்க்கு ஆள் ஆகிஅன்பு மிக்குஅகம்

      குழைந்துமெய் அரும்பிஅடிகள் பாதம்

கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே

      கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.  --- அப்பர்.

 

மைஅரி மதர்த்த ஒண்கண் மாதரார் வலையில் பட்டு,

கைஎரி சூலம் ஏந்தும் கடவுளை நினைய மாட்டேன்,

ஐ நெரிந்து அகம் மிடற்றே அடைக்கும்போது ஆவியார்தாம்

செய்வதுஒன்று அறிய மாட்டேன் திருப்புகலூரனீரே.  --- அப்பர்.

 

ஐயும் தொடர்ந்து,விழியும் செருகி,அறிவு அழிந்து,

மெய்யும் பொய்யாகி விழுகின்ற போது,ஒன்று வேண்டுவல் யான்,

செய்யும் திருவொற்றியூர் உடையீர்திருநீறும் இட்டு,

கையும் தொழப்பண்ணிஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே.        ---பட்டினத்தார்.

 

கறுத்த குஞ்சியுமே நரை ஆயிட ---

 

     இளமையில் கருத்து இருந்த தலைமயிர் முதுமையில் பஞ்சுபோல் நரைத்து வெண்மை ஆகிவிடும். "தலைமயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். இந்த நரையை உடையவன் மனிதன். ஆதலால்அவனுக்கு "நரன்" என்று பேர் வழங்குவதாயிற்று. மனிதனைத் தவிர வேறு எந்த உயிர்களுக்கும் நரைப்பது இல்லை. காக்கைபன்றியானைகரடி முதலிய உயிர்கட்கு மயிர் எப்போதும் கருமையாக இருப்பதை உற்று நோக்குதல் வேண்டும்.

 

     சிலர் நரைக்கத் தொடங்கியவுடன் வருத்தப்படுகின்றனர். சிலர் வெட்கப்படுகின்றனர். "வயது என்ன எனக்கு முப்பது தானே ஆகின்றது?  இதற்குள் நரைத்து விட்டதேதேன் பட்டுவிட்டது போலும்" "பித்த நரை" என்பார். எல்லாம் இறைவனுடைய திருவருள் ஆணையால் நிகழ்கின்றன என்பதை இவர் அறியார்.  

 

     "அவனன்றி ஓர் அணுவும் அசையாது", "அரிது அரிது மானுடராய்ப் பிறத்தல் அரிது",  "எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான் யாதினும் அரிது அரிது" என்ற ஆன்றோர்களது திருவாக்குகளின்படிஉயர்ந்த பிறவியாகிய இம் மனிதப் பிறவிக்கு நரையை ஏன் ஆண்டவன் தந்தான்?  மற்ற உயிர்களுக்கு உள்ளதுபோல் மனிதனுக்கும் மரண பரியந்தம் மயிர் கருமையாக இருக்கும்படி ஏன் அமைக்கக் கூடாதுஅதனால் ஆண்டவனுக்கு அருமையும் நட்டமும் இல்லையோ?  என்றெல்லாம் சிந்தித்தால் உண்மை விளங்கும். சிலர் வெளுத்த மயிரைக் கருக்க வைக்கப் பெரிதும் முயல்கின்றனர். அதற்காகவும் தமது அரிய நேரத்தைச் செலவழிக்கின்றனர். 

 

     மனிதனைத் தவிர ஏனைய பிறப்புக்கள் எல்லாம் பகுத்தறிவு இன்றி உண்டு உறங்கி வினைகளைத் துய்த்துக் கழிப்பதற்கு மட்டும் உரியனவாம். மனிதப் பிறவி அதுபோன்றது அன்று. எத்தனையோ காலம் அரிதின் முயன்று ஈட்டிய பெரும் புண்ணியத்தால் இப் பிறவி கிடைத்தது.

 

பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும்

பெறுதற்கரிய பிரான்அடி பேணார்

 

என்பார் திருமூலர்.

 

     இத்தகைய அருமையினும் அருமையாகிய பிறவியைப் பெற்றுபிறவியின் பயனாகிய பிறவாமையைப் பெறுதற்குரிய சாதனங்களை மறந்துசிவநெறி என்னும் அன்புநெறியை விடுத்துஅவநெறியில் புகுந்துஅலைந்து உழலுதல் கூடாது.  இவ் உடம்பு எப்போதும் ஒரு படித்தாக இராது என்றும்முதுமையும் மரணமும் விரைந்து நெருங்கி வந்துகொண்டு இருக்கின்றன என்றும் நினைவு கூரும் பொருட்டு இறைவன் நமக்கு நரையைத் தந்து இருக்கின்றான். நரை ஒரு பெரிய பரோபகாரமான சின்னமாகும். நரைக்கத் தொடங்கியதில் இருந்தாவது மனிதன் தன்னை மாற்றி அமைக்கவேண்டும். மனிதனுடைய வாழ்க்கை மாறுதல் அடைந்துசன்மார்க்க நெறியில் நிற்கவேண்டும். அல்லது இளமையில் இருந்தே சன்மார்க்க நெறியில் நிற்போர் நரைக்கத் தொடங்கிய பின் அதில் உறைத்து திட்பமாக நிற்க வேண்டும். "ஐயனே நரை வந்து விட்டதேஇனி விரைந்து முதுமையும் மரணமும் வருமேகூற்றுவன் பாசக் கயிறும் வருமேஇதுகாறும் என் ஆவி ஈடேற்றத்திற்குரிய சிந்தனையை ஏழையேன் செய்தேனில்லையே. இதுகாறும் உன்னை அடையும் நெறியை அறிந்தேனில்லையே. இனியாவது அதில் தலைப்படுவேன். என்னைத் திருவருளால் ஆண்டு அருள்வாய்" என்று துதிக்க வேண்டும்.

 

     நரை வந்தும் நல்லுணர்வு இல்லாமல் அலையும் மனிதர்கள் மிகவும் கீழ்மக்கள் ஆவர். இதுபற்றிசங்க காலத்துப் புலவராகிய நரிவெரூஉத்தலையார் கூறுகின்றார்.

 

பல்சான் றீரே! பல்சான் றீரே!

கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்

பயனில் மூப்பில் பல்சான் றீரே!

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ?

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,

அல்லது செய்தல் ஓம்புமின்,அதுதான்

எல்லாரும் உவப்பதுன்றியும்

நல்லாற்றுப் படூஉ நெறியும் ஆர்அதுவே. ---  புறநானூறு.

 

இதன் கருத்து

 

    மீனின் முள்ளைப் போல நரைத்து,திரைத்த தாடையுடன் கூடி ஒரு பயனும் இல்லாமல் மூத்துக் கிடக்கும் பலராகிய மூத்தோர்களே!. மழுவைத் தாங்கிய கூற்றுவன் இனி விரைவில் வருவான். அப்போது நீங்கள் வருந்துவீர்கள். நல்லது செய்தல் என்பது,இனி உங்கள் தளர்ந்த வயதில் முடியாமல் இருக்கலாம். ஆயினும் நல்லது அல்லாதவற்றையாவது செய்யாமல் இருக்க முயலுங்கள். அதுதான் இனி எல்லோரும் மகிழக் கூடியது. அந்தப் பழக்கம் ஒருகால் உங்களை நல்லது செய்யும் நன்னெறியில் விட்டாலும் விடும்.

 

    கருமை நிறம் தாமதகுணம். வெண்மை நிறம் சத்துவ குணம். வயது ஏற ஏற சத்துவகுணம் வந்து பொருந்த வேண்டும் என்ற குறிப்பை உணர்த்தவும் இறைவன் நமக்கு நரையைத் தந்து அருளினன். நன்கு சிந்தித்தால் இது விளங்கும். ஒரே நாளில் திடீர் என்று எல்லா மயிர்களும் ஒன்றாக நரைத்து விடுவது இல்லை. ஒவ்வொன்றாக நரைக்கின்றது. அவ்வாறு நரைக்கும் தோறும் நல்லுணர்வு பெறவேண்டும். ஒவ்வொரு மயிர் நரைக்கும்தோறும் நம்மிடம் உள்ள ஒவ்வொரு தீக்குணத்தையும் விடவேண்டும்.

 

"நத்துப் புரை முடியீர் நல்லுணர்வு சற்றுமிலீர்" 

எத்துக்கு மூத்தீர்? இழி குலத்தேன் தன்னை வெஃகிப்

பித்துக் கொண்டார் போல் பிதற்றுவீர், இவ் வேடர்

கொத்துக் கொல் ஆம் ஓர் கொடும் பழியைச் செய்தீரே.     

 

என்று கிழவடிவில் வந்து தன்னை விரும்பிய முருகவேளைக் குறித்துவள்ளியம்மையார் கூறினார்.

 

நடை தடுமாறி வருத்தமும் தர---

 

    நன்றாக இளமையில் வீதிகளில் அழகிய நடை நடந்தது போய்தடி ஊன்றி,முதுகு வளைந்து,பார்வை குன்றி,தடுமாறி நடக்கும் நிலை முதுமையில் வரும்.

 

    நடை --- ஒழுக்கம். ஆசாரமாக இருந்த பழக்க வழக்கங்களும் நீங்கிவிடும். அதனால் வருத்தம் ஏற்படும். 

 

தாய் மனையாள் மகவு.............. நகையாட ---

 

    இளமையில் விரும்பி அன்பு செய்த தாயும்தந்தையும்,மனைவியும்மக்களும்சுற்றமும்பிறரும் பலவகையான வசைச் சொற்களைக் கூறி எள்ளி நகையாடுவார்கள்.  "மாதர் சீ எனா வாலர் சீ எனா" என்பார் திருவிடைமருதூர்த் திருப்பகழில்.

 

    பட்டினத்தடிகள் தம் உடம்பை நோக்கி மிகமிக அழகாகக் கூறுகின்றனர்.

 

"தாயாரும் சுற்றமும் பெண்டீரும் கைவிட்டுத் தாழ்ந்திடுநாள்

"நீயாரு?நான்ஆர்?"எனப் பகர்வார்அந்த நேரத்திலே

நோயாரும் வந்து குடிகொள்வரேகொண்ட நோயும்,ஒரு

பாயாரும்,நீயும் அல்லால் பின்னை ஏது நட்பாம் உடலே"

 

இதன் பொருள் ---

 

    எனது உடலே! உன்னை ஈன்றெடுத்த தாயும்சுற்றத்தார்களும்மனைவியும்இனி ஏதும் செய்ய முடியாது என்று கைவிட்டு விடுகின்ற நாள் உனக்கு வரும்போதுநீ யார்நான் யார்?. என்று கூசாமல் கூறுவார்கள். அந்த சமயத்தில்நோயும் வந்து நிலைபெறும். நோய் கிடைத்த பிறகுபாய் வந்து உனக்கு உறவாகும். அந்திமக் காலத்தில் வேறு உறவு உனக்கு யாரும் இல்லை (இறைவன் ஒருவனே துணை) என்று அறிவாயாக

 

"நட்புநார் அற்றனநல்லாரும் அஃகினார்,

அற்புத் தளையும் அவிழ்ந்தன, --- உட்காணாய்

வாழ்தலின் ஊதியம் என்உண்டாம்வந்ததே

ஆழ்கலத்து அன்ன கலுழ்".                      ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

    நட்பு என்னும் அன்புச் சங்கிலி அறுந்துவிடும். நல்லவர்களின் நெருக்கம் குறைந்து விடும். அன்புப் பிணைப்பு இல்லாது போய்விடும். மனிதனே! இதை உணராமல் நீ உயிர் வாழ்வதில் என்ன பயன் இருக்கின்றதுநடுக்கடலில் சிக்குண்ட கப்பலைப் போலஉனது வாழ்வு மரணம் என்னும் கடலில் மூழ்கி அழியும். நீ துன்பப்பட நேரும் என்பதை உணர்ந்துநில்லாத இளமையை நிலை என்று எண்ணாமல்வாழுகின்றபோதே நிலையான நல்லறத்தைச் செய்வாயாக.

 

    உடம்பு விடும் நேரத்தில்யாரும் வந்து உதவமாட்டார்கள். உயிரானது தான் படும் துன்பத்தை வெளியில் சொல்லவும் முடியாது. சொன்னாலும் யாரும் கேட்கவும் மாட்டார்கள். உயிர்விடும் நேரத்தில் அது வெம்பிக் கொண்டு இருக்கும். இறைவன் ஒருவன்தான் எப்போதும் துணையாக இருப்பவன் என்பதை அப்போதுதான் நினைக்கும்.

 

"வெம்பும் உயிருக்கு ஓர் உறவாய்

     வேளை நமனும் வருவானேல்,

தம்பி தமையன் துணையாமோ?

     தனையர் மனைவி வருவாரோ?

உம்பர் பரவும் திருத்தணிகை

     உயர் மாமலைமேல் இருப்பவர்க்குத்

தும்பைக் குடலை எடுக்காமல்

     துக்க உடலை எடுத்தேனே".       --- திருவருட்பா.

 

எனைக் கடந்திடு பாசம்... சினத்து வந்து... தூதர்கள் பிடிக்கு முன்பு................ மயில்மீதினில் வரவேணும்--- 

 

    இயமன் உயிர்களைக் கட்டிக்கொண்டு போகதனது கையில் பாசக் கயிற்றைத் தாங்கி வருவான். அப் பாசத்தால் பிராணவாயுவைக் கட்டி இழுப்பான். உயிர்களுக்கு அப் பாசத்தால் வரும் நாசம். மரணப் படுக்கையில் உயிர் துடித்துக் கொண்டு இருப்போருக்குக் காசம் ஒருபுறம். மனைவி மக்கள் மீது நேசம் ஒருபுறம். வேலாயுதப் பெருமான் மீது நேசம் வைப்போருக்குப் பாசம் இல்லை.

 

    நல்ல காரியங்கள் ஒன்றும் செய்யாமையால் இயம தூதுவர்கள் மிகுந்த கோபத்துடன் வந்து துன்புறுத்திப் பற்றுவர்.

 

வருபவர்கள் ஓலை கொண்டு நமனுடைய தூதர் என்று

     மடிபிடி அதாக நின்று ...... தொடர்போது

மயலது பொ(ல்)லாத வம்பன் விரகுடையன் ஆகும் என்று

     வசைகளுடனே தொடர்ந்து ...... அடைவார்கள்...

 

    செய்ய வேண்டிய கருமங்களைச் செவ்வையாகச் செய்யாத ஒருவனைத் தலைவனுடைய ஆட்கள் தண்டிப்பது உலக இயற்கை. "முருகப் பெருமானே!  அடியேன் நல்லவை புரியாது அல்லவை புரிந்து, சிவநெறி விட்டு,அவநெறிப் பட்டு உழன்றேன். ஆதலினால்கூற்றுவனுடைய தூதுவர்கள் மிகுந்த சினத்துடன் பற்ற வருவர்.  அங்ஙனம் வரு முன்தேவரீர்உமது திருவடித் தாமரைகளைத் தந்து ஆட்கொள்ளும் பொருட்டு மயில் மீது வருவீராக" என்று சுவாமிகள் வேண்டுகின்றனர். 

 

கனத்த செந்தமிழால் நினையே தினம் நினைக்கவும் தருவாய்---

 

கனம் --- பெருமை. நினையே --- உன்னைத் தவிர வேறு யாரையும் நினைக்காமல்.

 

    மொழிகளுக்கு எல்லாம் முதன்மை பெற்றுஇனிமையும் இயற்கையும் உடையதாய்அநேக செம்பொருள்களைத் தன்னகத்தே கொண்டதாய்செம்மைப் பண்பு நிறைந்து விளங்குவதாய் உள்ளதால், "கனத்த செந்தமிழ்" என்றார் அடிகளார். தமிழின் பெருமை குறித்துதிருவிளையாடல்புராணம் கூறுவதைக் காணலாம்.

 

"கண்ணுதல் பெரும் கடவுளும் கழகமோடு அமர்ந்து

பண்உறத் தெரிந்து ஆய்ந்தஇப் பசுந்தமிழ்,ஏனை

மண்ணிடைப் பிற இலக்கண வரம்பிலா மொழிபோல்

எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் இயம்பீர்".

 

இதன் பொருள் ---

 

    நெற்றியிற்கண்ணை உடைய முதற்கடவுள் ஆகிய சிவபெருமானும்மற்ற புலவர்களோடு இருந்துமதுரைத் தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் புலவராக வீற்றிருந்துசெப்பமுறஆராய்ந்து தெரிந்தஇப் பசுந்தமிழ் மொழியானதுற்றை நிலங்களிலுள்ளஇலக்கண வரையறை இல்லாதசில மொழிகளைப் போல,  அமையக் கிடந்ததாகநினைக்கவும் கூடுமோ?கூடாது என்றபடி.

 

"தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும்,முதலை

உண்ட பாலனை அழைத்ததும்,எலும்புபெண் உருவாக்

கண்டதும்மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்

தண்தமிழ்ச் சொ(ல்)லோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்".

 

இதன் பொருள் ---

 

    அடியார்க்குத் தலைவனாகிய சிவபெருமானைசுந்தரமூர்த்தி நாயனாரோடுபரவை நாச்சியார் கொண்ட ஊடலை மாற்றுவதற்குத் தூதாகச் செல்ல விடுத்ததும்முதலையால் உண்ணப் பெற்ற சிறுவனை வரவழைத்ததும்எலும்பைப் பெண்வடிவாக உயிர்ப்பித்ததும்வேதங்களால் அடைக்கப்பட்ட கதவைத் திறந்ததும்அழியாத தண்ணிய தமிழ் மொழியாஅல்லது,ஏனைய நிலங்களில் வழங்கும் மொழிகளாபுலவர்களே! சொல்லுங்கள்.

 

    அருணகிரிநாதப் பெருமான் அருமையாகத் தெரிவிக்கின்ற செய்தி ஒன்று உண்டு. முருகப் பெருமான் தன்னை யாரும் தமிழ் மொழியால் திட்டினாலும், அவர்களை வாழவைப்பவன். திட்டினாலே வாழ வைக்கின்ற பெருமான், தன்னை வாழ்த்தி வந்திப்பவர்களை நிச்சயம் பேரானந்தப் பெருவாழ்வில் வைப்பான் என்று அறிதல் வேண்டும்.

 

மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்

வைதாரையும் அங்கு வாழ வைப்போன், வெய்ய வாரணம்போல்

கைதான் இருபது உடையான் தலைப்பத்தும் கத்தரிக்க

எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே.   --- கந்தர் அலங்காரம்.

 

    "தமிழில் பாடல் கேட்டு அருள் பெருமாளே" என்று அருணகிரிநாதர் பிறிதொரு திருப்புகழில் போற்றி உள்ளார்."அம்புவி தனக்குள் வளர்  செந்தமிழ் வழுத்தி,உன்னைஅன்பொடு துதிக்க மனம் அருள்வாயே" என்றும் வேண்டி உள்ளார்.     

                      

    "எம்பெருமானேஅடியேன் நாள்தோறும் பொன்னையே நினைந்தேன். பொருளையே நினைந்தேன்.மனைவி மக்களையே நினைந்தேன்.  நிலம் வீடு மாடு முதலிய பிறவற்றையே நினைந்தேன. உன்னை மட்டும் நினைந்தேனில்லை. அதனால் பிறப்பு இறப்பு என்னும் பெருங்கடலுள் அழுந்தினேன். ஏனைய நினைவுகளை நீக்கி உன்னை நினைப்பற நினைக்க அருள் புரிவாய். நினைப்பித்தால் ஒழிய அடியேன் நினைக்க இயலாது அன்றோ சுதந்தரம் இல்லாத நாயினேன் நின்னை நினைக்க நீ என்னை நினைவாய்”. "நினைக்கவும் தருவாய்" என்ற எச்ச உம்மையால்தமிழால் பாடவும் தருவாய் என்று குறிப்பிடுகின்றனர். இங்ஙனமே பல இடங்களில் வேண்டுகின்றனர்..

 

    இறைவனை உயிர்க்கு உறுதுணையாக இருந்து தனது உள்ளத்தில் உறையுமாறு வேண்டுகின்றார். இறைவன் எல்லா உயிர்களிலும் உயிர்க்கு உயிராய் பாலில் நெய்போல இருக்கின்றான். எனினும் சுட்டி அறிகின்ற அறிவு நீங்கி,எல்லாம் பரமாகப் பார்க்கின்ற பதிஞானம் கைவரப் பெற்றவர் அறிவில் பிறிவற நின்று பேரருள் புரிவன்.

 

அறிவு ஒன்று அறநின்று அறிவார் அறிவில்

பிறிவுஒன்று அறநின்ற பிரான் அலையோ...  --- கந்தர் அநுபூதி.

 

நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்..     --- அப்பரடிகள்.

 

    இறைவனை நாள்தோறும் மனதார நினைந்து வழிபட முடியாதபடி இடர்ப்பாடுகள் வந்துகொண்டு தான் இருக்கும். அப்படி வரும் துன்பங்களை நீக்கி அருள் புரியவேண்டும் என்று திருஞானசம்பந்தப் பெருமான் விண்ணப்பம் புரிந்துள்ளார். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திருநெடுங்களம் என்னும் திருத்தலத்திற்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தர் "அடியார்களின் இடரைக் களைவாயாக" என்ற விண்ணப்பத்துடன், "மறையுடையாய்" எனத் தொடங்கும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார். இத் திருப்பதிகத்தின் குறிப்பு பற்றி,சேக்கிழார் பெருமான்,பெரியபுராணத்தில் கூறுமாறு காண்க.

 

"நெடுங்களத்து ஆதியை "அன்பால் நின்பால்

            நெஞ்சம் செலாவகை நேர்விலக்கும்

இடும்பைகள் தீர்த்துஅருள் செய்வாய்" என்னும்

            இன்இசை மாலைகொண்டு ஏத்தி ஏகி,

அடும்புஅணிச் செஞ்சடை யார்பதிகள்

            அணைந்துபணிந்துநியமம்போற்றி,

கடுங்கை வரைஉரித் தார்மகிழ்ந்த

            காட்டுப்பள் ளிப்பதி கைதொழுவார்.--- பெரியபுராணம்.

 

இதன் பொருள் ---

 

     திருநெடுங்களத்தில் வீற்றிருக்கின்ற மூலமூர்த்தியான இறைவரை, "அன்பால் உம்மிடம் மனம் செல்லாதவாறு தடுக்கின்ற இடும்பைகளை எல்லாம் தீர்த்து அருள் செய்வாய்" என வேண்டிக் கொள்ளும் குறிப்பைக் கொண்ட இன்னிசைத் திருப்பதிகமான மாலையினால் இறைவரைப் போற்றித் துதித்துகொல்லும் இயல்புடைய பாம்பைச் சூடிய சிவந்த சடையினை உடைய சிவபெருமானாருடைய பிற திருப்பதிகளை வணங்கி,  `திருக்காட்டுப்பள்ளிஎன்னும் திருப்பதியைக் கைதொழுதார்.

 

     திருநெடுங்களத்து இறைவர் மீது அருளப்பட்ட திருப்பதிகப் பாடல்தொறும்"இடர் களையாய்"  என வருவது பற்றிநம்மவர்கள் அவ்வப்பொழுதும்அடுக்கடுக்காக வரும் உலகியல் துன்பங்களை எல்லாம் நீக்கவேண்டும் என்னும் குறிப்பினை உடையதாகக் கருதிஇப்பதிகத்தைப் பலமுறையும் ஓதி வருகின்றனர். இதுவும் பொருத்தம் உடையதே. என்றாலும்சேக்கிழார் தரும் விளக்கம் வேறாக உள்ளது அறியத் தக்கது. இறைவனிடத்தில்  கொள்ள வேண்டிய அன்பு உள்ளத்திற்கும்,நாள்தோறும் செய்து வழிபாட்டிற்கும் இடையூறாக வரும் இடர்ப்பாடுகளை நீக்க வேண்டும் என்னும் குறிப்பில் அருளப்பட்டதாகவே குறிக்கின்றார் சேக்கிழார். இத் திருப்பதிகத்தில் வரும் பாடல்களை கருத்து ஊன்றிப் படித்தால்,இந்த உண்மை புலனாகும்.

 

     அருணகிரிநாதப் பெருமான், "கனத்த செந்தமிழால் நினையே தினம் நினைக்கவும் தருவாய்" என்று வேண்டிக் கொண்டுள்ளதும் இந்தக் கருத்தில்தான் என்பதை அறிந்துஓதி வழிபட்டு வருதல் வேண்டும்.

 


 

 

 

 

No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...