நன்றி தரும் பிள்ளை ஒன்று பெற்றாலும் போதும்

                                                     நல்ல பிள்ளை ஒன்று இருந்தாலும் போதும்

----

 

"மங்கலம் என்ப மனைமாட்சிமற்று அதன்

நன்கலம் நன்மக்கள் பேறு"

 

என்பது திருக்குறள்.

 

     மனைவியின் சிறப்பானது மங்காத நலம் விளங்குவது. அந்த மாறாத சிறப்புக்குப் பெருமை சேர்க்கும் நல்ல அணிகலமானதுநன்மக்கள் பேறு ஆகும். நன்மக்கள் இருந்தால்அவர் பிறந்த வீடு மட்டுமல்லாதுநாடும் நலம் பெறும். எனவே,

 

"எழுபிறப்பும் தீயவை தீண்டாபழி பிறங்காப்

பண்பு உடை மக்கள் பெறின்"

 

என்றார் திருவள்ளுவ நாயனார். குற்றம் இல்லாத நற்பண்புகளை உடைய மக்களைப் பெற்றால்எழுகின்ற பிறவிகள் தோறும்தீயவை வந்து தாக்க மாட்டா.

 

     நன்மக்கள் இல்லாத குடியானதுசந்ததி இல்லாமல் அழிவதே மேல் என்று கூறுகின்றதுவெற்றிவேற்கை (எ) நறுந்தொகை என்னும் நூல். 

 

அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்

கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி

எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று.

 

இதன் பொருள் ---

 

     (பழிப்புக்கு உரிய பாவச் செயல்களைச் செய்தல் காடது என்னும்) அச்சத்தை மனத்தில் வைத்துக் கொண்டு செயல்படுகின்றஅறிவு இல்லாதஇழிந்த குணம் உடையஒன்றுக்கும் உதவாத பிள்ளைகளைப் பெறுவதைக் காட்டிலும்அக் குடியில் உள்ளோர் சந்ததி இல்லாமல் இன்பத்துடன் வாழ்தல் நல்லது.

 

     அச்சம் என்பது குறித்து, "அறம் பாவம் என்ற இரண்டு அச்சம்" என்றார் மணிவாசகப் பெருமான். அறச் செயல்களைப் புரியாமையால் உண்டாகும் அச்சம்.பாவச் செயல்களைப் பயின்று வருவதால் உண்டாகும் அச்சம் என்றுஅச்சம் இருவகைப்படும். இந்த இருவகை அச்சமும் மனத்தில் எப்போதும் இருந்துகொண்டு இருந்தால்தான்பாவச் செயல்களைச் செய்வதில் இருந்து விடுபடவேண்டும் என்றும்அறச்செயல்களைப் புரிந்து நற்கதி அடையவேண்டும் என்றும் தோன்றும்.

 

     அறிவு எனப்படுவதுதீயதன் தீமையும்நல்லதன் நன்மையும் உள்ளவாறு அறிந்து தெளிந்து ஒழுகுதல் ஆகும். இதுவே உண்மையான அறிவு. மற்ற அறிவு எல்லாம் உலகியல் அறிவு. வயிறு வளர்ப்பதற்கும்உடலைப் பாதுகாத்தற்கும் பெறுகின்ற அறிவு உலகியல் அறிவு. அது உயிருக்கு ஆக்கமாக அமையாது.

 

     கொச்சை --- இழிவு. எச்சம் --- பிள்ளைகள்வாரிசுகள். ஏமாந்து இருத்தல் --- இன்பத்துடன் இருத்தல். (ஏமாப்பு --- இன்பம்)

 

     நல்ல பிள்ளைகளைப் பெறுவதேமக்கள் பெறவேண்டிய பேறுகளில் (பாக்கியங்களில்) சிறந்ததுஎனவேநன்மக்கள் பேறு எனப்பட்டது.ஒருவன் சிறந்து குடியில் பிறந்தவன் என்பதை அவனது உள்ளத்தில் உள்ள அன்பினால் அறியலாம் என்கின்றது "முதுமொழிக் காஞ்சி".

                     

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

மக்கட் பேற்றில் பெரும்பேறு இல்லை.           

 

     கடல் சூழ்ந்த உலகத்தில்மனிதர் எல்லாருக்கும்புத்திரரைப் பெறுவதைக் காட்டிலும் பெறத்தக்க பெரும் பாக்கியம் வேறில்லை.

 

"ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப".

 

     கடல் சூழ்ந்த உலகத்து மக்கள் எல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடிப் பிறந்தமையை அவனுக்கு உயிர்களிடத்தில் உள்ள அன்பினால் அறியலாம். (பேர் இல் --- பெருங்குடி)

 

     அறிய வேண்டுவனவற்றை அறியாத பிள்ளகளைப் பெறுவது துன்பத்தைத் தரும் என்கின்றது "இன்னா நாற்பது" என்னும் நூல்....

 

"அறிவறியா மக்கள் பெறல் இன்னா"

 

     "மகாலட்சுமியே! செல்வம்உணவுப் பொருட்கள்மிருகங்கள்நல்ல பிள்ளைப் பாக்கியம்நூறாண்டுகள் ஆயுள் எல்லாம் எனக்குக் கிடைக்கட்டும். கடன்நோய்வறுமைபசிஅகால மரணம்,பயம்கவலைமனத்தின் துன்பங்கள் எல்லாம் ஒழியட்டும்" என்றுதான் ஸ்ரீசூக்தம் கூறுகின்றது.

 

     பிள்ளை என்னும் சொல் சிறப்பாகப் பயன்படுத்துப்படுவது ஒன்று. விநாயாகப் பெருமானை, "மூத்த பிள்ளையார்" என்றும்முருகப் பெருமானை, "இளைய பிள்ளையார்" என்றும் வழங்கப்படுவது சைவ மரபு. திருஞானசம்பந்தரை, "ஆளுடைய பிள்ளையார்" என்று சைவர் வழங்குவர். வள்ளல்பெருமானும் தம்மை "ஞானசபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே" என்று காட்டிக் கொண்டார்.

 

     இறைவனை அடையக் காட்டி உள்ள நால்வகை மார்க்கங்கள்நெறிகள்அல்லது வழிகளில், "சற்புத்திர மார்க்கம்", "மகன்மை நெறி" என்பதும் ஒன்று. கடவுளர் மீது பாடப்பட்ட பிரபந்தங்களில் "பிள்ளைத் தமிழ்" ஒன்று. வைணவர்களிலும் "பிள்ளை" என்னும் திருநாமத்தோடு வழங்கும் பெயர்கள் உண்டு.

 

     குழந்தைப் பேறு இல்லாதவர்கள், "சற்புத்திரன்" வேண்டியே இறைவனை நோக்கி வரம் கிடந்த வரலாறுகளும் நிறைய உண்டு. "நல்ல பிள்ளை" வேண்டும் என்றுதான் வேண்டினார்கள். "பிள்ளை" என்றும், "மக்கள்" என்றும் பொதுவாகத்தான் சொல்லப்பட்டது. "ஆண்பிள்ளை" என்றோ, "ஆண்மக்கள்" என்றோ எங்கும் பிரித்துச் சொல்லப்படவில்லை.

 

     அறிவுபொதுவாக நன்மைக்கும் தீமைக்கும் வழியைக் காட்டும். எனவேசான்றோர்கள் "நல்லறிவு" என்று ஒரு சொல்லைப் பாடல்களில் தந்தார்கள். அறிவு என்றால்பொதுவாகநல்லறிவைத் தான் குறிக்கும்.

 

     இற்றைக் காலத்தில் குழந்தைகள் எல்லோரும் அறிவில் சிறந்தவர்களாக விளங்குவதைக் காணலாம். அதனால் அவர்கள் உலகியலில் சிறந்து விளங்குகின்றார்கள். ஆனாலும்நல்லறிவு இல்லாததால்நற்பண்புகள் விளங்குவதில்லை. இதன் காரணமாக, "முதியோர் இல்லங்கள்" பல்கிப் பெருகி வருகின்றன. அவர்களது அறிவுஅவர்களை ஈன்றவர்க்கே நலம் புரிவதில்லை.

 

     எனவேநல்லறிவில்லாததுட்டத்தனம் வாய்ந்த பிள்ளைகள் நூறு பேர் இருந்தாலும்வீட்டுக்கு மட்டுமல்லாது நாட்டுக்கும் நலம் இல்லை.

 

     பன்றியானது பல குட்டிகளைப் போடும். அவற்றால் பயனில்லை. ஆனால்யானையானது ஒரு குட்டியைத் தான் ஈனும். அதனால் பெருமையும் பயனும் உண்டு.

 

     இக் கருத்தை விளக்கும் பாடல்களைக் காண்போம்...

 

"பொற்பு அறிவு இல்லாத பல புத்திரரைப் பெறலின்,ஓர்

நற்புதல்வனைப் பெறுதல் நன்றாமே,--- பொற்கோடியே!

பன்றிபல குட்டி பயந்ததனால் ஏது பயன்?

ஒன்று அமையாதோ கரிக்கன்றுது"

 

"நீதிவெண்பா"என்னும் நூலில் வரும் இப் பாடலின் பொருள் வருமாறு....

 

     பொன்னால் ஆன கொடியைப் போன்றவளே! பன்றி பல குட்டிகளைப் போட்டதனால் என்ன பயன்ஒன்றும் இல்லை. யானை ஒரே குட்டியைப் போட்டாலும் அது போதாதோநீ சொல்லுவாயாக. எனவேநல்லறிவு இல்லாத பல பிள்ளைகளைப் பெறுதலைக் காட்டிலும்நல்ல அறிவு உள்ள புதல்வன் ஒருவனைப் பெறுதல் (பெற்றோருக்கும்பிறந்த அவனுக்கும்மற்றோருக்கும்) நன்மையைத் தரும்.

 

     "தண்டலையார் சதகம்"என்னும் நூலில் இதே கருத்து அமைந்த பாடல் ஒன்று....

 

"நன்றிதரும் பிள்ளைஒன்று பெற்றாலும்

     குலமுழுதும் நன்மை உண்டாம்;

அன்றிஅறிவில்லாத பிள்ளை ஒரு

     நூறுபெற்றும் ஆவது உண்டோ?

மன்றில்நடம் புரிவாரே! தண்டலையா

     ரே! சொன்னேன்! வருடந் தோறும்

பன்றிபல ஈன்றும் என்னகுஞ்சரம் ஒன்று

     ஈன்றதனால் பயன் உண்டாமே."

 

இதன் பொருள் ---

 

     மன்றில் நடம் புரிவாரே --- திருச்சிற்றம்பலத்தில் திருக்கூத்து இயற்றுகின்ற பெருமானே!தண்டலையாரே --- திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியவரே! பன்றி வருடந்தோறும் பல ஈன்றும் என்ன --- பன்றி ஆண்டுதோறும் பலகுட்டிகளை ஈன்றாலும் பயன் என்ன?, குஞ்சரம் ஒன்று ஈன்றதனால் பயன்உண்டாம் --- யானை ஒரு கன்றை ஈன்றாலும் மிக்க பயன் உண்டாகும். (அதுபோல),  நன்றி தரும் பிள்ளை ஒன்று பெற்றாலும் குலம் முழுதும் நன்மைஉண்டாம் --- நலம் தரும் ஒரு பிள்ளையைப் பெற்றாலும் அவன் பிறந்த குலம் முழுமைக்கும் நன்மை உண்டாகும். அன்றி --- அல்லாமல்அறிவு இல்லாத பிள்ளை ஒரு நூறு பெற்றும் ஆவது உண்டோ --- நல்லறிவு இல்லாத நூறு பிள்ளைகளைப் பெற்றாலும் ஏதாவது நன்மை உண்டோ? (இல்லை).

 

     திருதராஷ்டிரனுக்கு நூறு பிள்ளைகள் தான் இருந்தார்கள். அவர்களில் விகர்ணன் தவிரமற்றவர் யாருக்கும் நல்லறிவு இல்லை. நல்லறிவு உள்ளவரோடும் அவர்கள் பழகவில்லை. நல்லறிவு சொன்னவர்களையும் அவர்கள் பழிக்கத்தான் செய்தார்கள். முடிவில்அந்தக் குலமே அழிந்து போனது.

 

     இரணியனுக்கு ஒரு நல்ல பிள்ளை வாய்த்தது. இராக்கதர் குலத்தில் பிறந்தவராக இருந்தாலும்பிரகலாதரை, "பிரகலாத ஆழ்வார்" என்று வழங்குவது காண்கின்றோம். பிரகலாத ஆழ்வாரால்அரக்கனான இரணியனும் நற்கதியைப் பெற்றான். இன்னும் சொல்லப் போனால்திருமால் எடுத்த அவதாரங்களிலேயேநரசிம்ம அவதாரம்தான் ஒரு சில நாழிகைகளிலேயே முடிவு பெற்றது. நல்லபிள்ளைக்கு நரசிம்மம் துணை நின்றது.

 

     மிருகண்டு முனிவர் பிள்ளைப் பேறு வேண்டிசிவபெருமானை நோக்கித் தவம் இருந்தார். பெருமான் அவரது தவத்திற்கு இரங்கிஅவர் முன் தோன்றிபின்வருமாறு கேட்கின்றார்...

 

1. தீய குணங்களே நிறைந்துகொஞ்சமும் மெய்யறிவு இல்லாமல்ஊமையும்செவிடும்முடமும்,குருடும் ஆகிய தன்மைகளோடுநோயில் உழல்பவனாக,நூறு ஆண்டுகள் வாழுகின்ற பிள்ள வேண்டுமா?

 

"தீங்கு உறு குணமே மிக்கு,

     சிறிது மெய் உணர்வுஇலாமல்,

மூங்கையும் வெதிரும் ஆகி,

     முடமும் ஆய்,விழியும்இன்றி,

ஓங்கிய ஆண்டு நூறும் 

     உறுபிணி உழப்போன் ஆகி,

ஈங்கு ஒரு புதல்வன் தன்னை 

     ஈதுமோ மாதவத்தோய்"---  கந்தபுராணம்.

 

(மூங்கை --- ஊமை. வெதிர் --- செவிடு)

 

2. அழகான உடம்போடுசிறிதும் உறுப்புக் குறைவு இல்லாமல்நோய் நொடிகளில் வாடாமல்எனக்கும் பத்தி உடையவன் ஆகி,சாத்திரங்கள் பலவற்றையும் பயின்றுபதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழக் கூடிய பிள்ளை வேண்டுமா

 

"கோலமெய் வனப்பு மிக்கு,

     குறைவு இலா வடிவம் எய்தி,

ஏல் உறு பிணிகள் இன்றி,

     எமக்கும் அன்பு உடையோன்ஆகி,

காலம் எண் இரண்டே பெற்று,

     கலைபல பயின்றுவல்ல

பாலனைத் தருதுமோ?நின் 

     எண்ணம் என் பகர்தி"என்றான். --- கந்தபுராணம்.

 

     சிவபெருமான் இவ்வாறு இரண்டு OPTION-களை மிருகண்டு முனிவர் முன் வைத்தார். மிருகண்டு முனிவர்இறைவர் கூறியதை ஆராய்ந்துபார்த்தார். தீய குணங்களோடுஊமையும்செவிடும்முடமுமாகஅறிவில்லாமல்நூறு ஆண்டுகள் வாழுகின்ற பிள்ளையைப் பெறுவதால் பலனில்லை என்பதை உணர்ந்து"ஆயுள் குறைந்து இருந்தாலும்அறிவு உடையவன் ஆகவும்உடம்பில் ஒரு குறைவும் இல்லாதவனாகவும்பெருமானே! உன்னிடத்தில் அன்பு பூண்ட புதல்வனை எனக்கு அருள் புரியவும்" என்று OPTION-2-ஐயே வேண்டினார்.

 

மாண்தகு தவத்தின் மேலாம் 

     மறை முனி அவற்றை ஓரா,

"ஆண்டு அவை குறுகினாலும் 

     அறிவுளன் ஆகியாக்கைக்கு

ஈண்டு ஒரு தவறும் இன்றி,

     எம்பிரான் நின்பால் அன்பு

பூண்டது ஓர் புதல்வன் தானே 

     வேண்டினன்,புரிக"என்றான். --- கந்த புராணம்.

 

     அவ்வரத்தின் படி அவதரித்தவர்தான் மார்க்கண்டேயர். சற்புத்திரனாக விளங்கினபடியால்சிவன் அருளால், "என்றும் பதினாறு" என்று சிரஞ்சீவியாக விளங்கினார்.

 

     எனவேவாழ்வில் ஒருவருக்கு அவசியமான பேறுகளில் (பாக்கியங்களில்) ஒன்று, "சற்புத்திர பாக்கியம்" எனப்படும் "நன்மக்கள் பேறு" ஆகும். அறிவார்ந்தநற்குணமுள்ள மக்கள் பேற்றினை ஒருவன் பெற்றிருந்தால்அவனுக்கு இனிவரும் பிறவிகளில் எல்லாம் தீயவை வந்து சேரமாட்டா என்று திருவள்ளுவ நாயனார் அருளியதைக் கருத்தில் கொள்க. "ஆஸ்திக்குப் பிள்ளை" என்ற எண்ணம் வேண்டாம்.

 

     மக்கள்பேறு என்றாலேஆண்மக்கள் பேறு என்று எண்ணுதல் கூடாது. "மக்கள்" என்னும் சொல்ஆண் பெண் இருபாலரையும் குறித்து நின்றது. ஆண் வாரிசு இல்லையானால்நற்கதி இல்லை என்பது சரியான கருத்து அல்ல.

 

     இறைவன் திருவடியை அடைந்த பெரியோர்களை எண்ணினால் இந்த உண்மை விளங்கும். "பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை" என்று இன்றளவும் உலகம் ஆண்டாள் நாச்சியாரை வணங்குகின்றது. அளவற்ற செல்வம் இருந்தும்பிள்ளைப் பேறு இல்லாமல் வருந்திய சிவநேசர் என்னும் அடியாருக்கு இறையருளால்பூம்பாவை என்னும் பெண்கொடி அவதரித்தாள். மானக்கஞ்சாற நாயனாருக்குஒரு பெண்கொடி பிறந்தது.  பெண்மக்களைப் பெற்றால்பிறவியற்ற நிலை வாய்க்கும் என்பதைத் தெய்வச் சேக்கிழார் பெருமான்,

 

"குழைக்கு அலையும் வடிகாதில்

    கூத்தனார் அருளாலே,

மழைக்கு உதவும் பெருங்கற்பின்

    மனைக்கிழத்தி யார்தம்பால்,

இழைக்கும்வினைப் பயன்சூழ்ந்த

    இப்பிறவிக் கொடுஞ்சூழல்

பிழைக்கும் நெறி தமக்கு உதவப்

   பெண்கொடியைப் பெற்றெடுத்தார்."

 

பெரியபுராணத்தில் கூறுகின்றார்.

 

     இதன் பொருள் --- குழையை ஏற்று அசைகின்ற அழகிய காதுகளையுடைய கூத்தப் பெருமானின் திருவருளால்மழை வேண்டும் பொழுதுஅதனை உடன் உதவுதற்குரிய பெருங் கற்பினை உடைய தம் மனைவியார் திருவயிற்றில்ஒழிவின்றிப் பெருகிவரும் வினைப் பயன்களால் வரும் பிறவி என்னும் கொடிய சுழற்சியினின்றும் தப்பிப் பிழைக்கின்ற நல்ல நெறியினைத் தமக்கு உதவ வல்லதொரு பூங்கொடி போலும் சாயலுடைய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

 

     "பெய் எனப் பெய்யும் மழை" என்று திருவள்ளுவ நாயனார் அருளினார். இங்கே "மழைக்கு உதவும் பெருங்கற்பின் மனைக் கிழத்தியார்" என்றார் சேக்கிழார் பெருமான்.

 

     "எழுபிறப்பும் தீயவை தீண்டா" என்றார் திருவள்ளுவ நாயனார். "இழைக்கும் வினைப் பயன் சூழ்ந்த இப் பிறவிக் கொடும் சூழல் பிழைக்கும் நெறி" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

 

     எனவே, "மக்கள்" என்னும் சொல்,பெண் ஒழித்து நின்றது என்று கூறுவதும் அறியாமை. பெண் குழந்தை வேண்டாம்ஆண் குழந்தைதான் வேண்டும் என்று எண்ணுவதும்வேண்டுவதும் அறியாமையே.

 

     

                                         

     

     

 

No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...