அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கலாமே

 

                                                அப்போதைக்கு இப்போதே

-----

 

            பிறவி எடுக்கின்ற நமக்கு சாதிஆயுள்போகம் என்பவை எல்லாம்அந்தப் பிறவியில் நாம் அனுபவிக்க வேண்டி இருக்கும் வினைகளுக்கு ஏற்ப அமைகிறது. போகத்திற்குரிய வினைகளுக்கு ஏற்ப முக்குணங்களும் அமைகின்றன. முற்பிறவிகளில் நாம் செய்த வினைகளின் பயனைத் தான் நாம் இப்பிறவியில் அனுபவிக்கின்றோம்.வினைகளின் பயனாக நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு நாமே தான் காரணம் என்பதை உணர்ந்து கொள்வது நம்மால் சாத்தியமாகக் கூடிய ஒன்றே. இறைவழிபாட்டில் நிற்பதோடுஅருள் நூல்களை ஓதி உணர்தல் வேண்டும். வினைகளை நமக்கு ஊட்டும் பரம்பொருளை எண்ணியிருந்தால் வினைகளின் தாக்கத்தை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.

 

"சும்மா தனு வருமோசும்மா பிணி வருமோ

சும்மா வருமோ சுகதுக்கம்--நம்மால்முன் 

செய்த வினைக்கு ஈடாகச் சிவனருள் செய்விப்பதென்றால் 

எய்தவனை நாடி இரு"

 

என்பது சிவபோகசாரம்.

 

     காரணம் இல்லாமல் காரியம் எதுவும் நிகழாது. காரணத்திற்கும் காரியத்திற்கும் கர்த்தா நாமே. பிறவியால் வருகின்ற இன்பதுன்பங்களுக்கும் காரணமை நாமேதான். எனவே, பிறரை நோதல் கூடாது. நம்மை நாமே நொந்துகொள்வதோடு, அவரவர் வினையை அறிந்து கூட்டுவிக்கின்ற இறைவன் திருவருளை எண்ணி இருக்கவேண்டும்.

 

'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 

கருமமே கட்டளைக் கல்

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

"யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றேவாழ்தல் 

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;

முனிவின்இன்னாது என்றலும் இலமே"

 

என்றார் புறநானூற்றுப் புலவரான கணியன் பூங்குன்றனார்.

 

       'அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு'  என்றும்,  'அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்புஎன்றும், 'என்பு இல் அதனை வெயில் போலக் காயுமே அன்பு இல் அதனை அறம்', என்றும் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்துள்ளார்.

 

       நித்தியப் பொருளானதும்உணர்வு உள்ளதுமான உயிர்அழியக் கூடியதும்உணர்வில்லாததுமான உடம்பில் வந்து பொருந்தியதன் நோக்கமேஅன்பைப் பெருக்கிக் கொள்ளத்தான். உள்ளீடாக இருக்க வேண்டிய அன்பு இல்லை என்றால்அவன் மனிதனாக இருந்தாலும்எலும்பின் மீது தோல் போர்த்தப்பட்ட ஒரு உருவமாகவே மதிக்கப்படுவான் எனப்பட்டது. எலும்பு இல்லாத உடல்வெறுப்பின்றி எங்கும் ஒரு தன்மைத்தாகக் காய்கின்ற வெயிலின்முன் கெடுவது போலஅன்பு இல்லாத உயிரானதுஅத்தன்மைத்தாகிய அறத்தின்முன் தன் இயல்பால் கெடும் என்றும் அருளிச் செய்யப்பட்டது.

 

       நாம் பயன்படுத்துகின்ற எந்தப் பொருளிலும் புறத்தோற்றத்தோடு, அதில் உள்ளீடாக இருக்கவேண்டியது இருக்கிறதா என்று பார்க்கத் தவறுவது இல்லை. ஏனெனில்உள்ளீடாக இருக்கவேண்டியது இல்லை என்றால் பயன் இல்லை. அப்படிப்பட்ட பொருள் எதையும் நாம் விலைகொடுத்து மட்டுமல்லசும்மா கிடைத்தாலும் விரும்புவதும் இல்லை. அதுபோலத்தான் நமக்கும். புறத்தோற்றத்தோடு அமைவது சிறப்பல்ல.அதனால் எதிர்பார்த்த பயன் இருக்காது. அது வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே பயன்படும். உள்ளீடாக இருக்கவேண்டியது இருந்தால்தான் சிறப்பு. நமக்கும் உள்ளீடாக இருக்கவேண்டிய அன்பு இல்லையென்றால்வெறும் மனித உருவமாகவேகாட்சிப் பொருளாகவே மதிக்கப்படுவோம்.

 

"கல்லா ஒருவர்க்குத் தம்வாயில் சொல்கூற்றம்

மெல்இலை வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம்

அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம்,கூற்றமே

இல்லத்துத் தீங்குஒழுகுவாள்."  

 

என்னும் நான்மணிக்கடிகைப் பாடலின்படிஅல்லவை செய்தார்க்கு அறமே கூற்றமாகும்.   

 

       இவற்றையெல்லாம் நன்குணராமல்வினைப்போகத்தின் வழி கிடைக்கும் இன்பத்தை நுகர்வதும்,  புலன் இன்பத்திற்கு ஆட்பட்டு வாழ்நாளை வறிதாக்கி,  உயிர்ப் பண்பாகிய அன்பைப் பெருக்கிக் கொள்ளாமல் வாழ்வதும் பயனற்றது.    

 

       எடுத்த உடம்பு எப்போது விழும் என்பது நமக்குத் தெரியாது. ஊன் உயிர் வேறு செய்யும் கூற்றுவன் எப்போது வருவான்....

 

இப்பவோ, பின்னையோ, மத்திய காலத்திலோ,

இரவிபடும் நேரம் அதிலோ,

இரவிலோ, பகலிலோ, உதய காலத்திலோ,

எந்தெந்த நேரம் அதிலோ,

அப்பிலோ, தீயிலோ, நாயிலோ, பேயிலோ,

அரவிலோ, இடி அதனிலோ,

ஆறாத புண்ணிலோ, அடர்நோவு தன்னிலோ,

ஆயுத வகைகள் எதிலோ,

செப்பரிய வீட்டிலோ, மேட்டிலோ, காட்டிலோ,

தெருவிலோ, திண்ணைதனிலோ,

செகந்தனில் எந்தெந்த இடமதனிலோ,

சீவன் விடுகின்ற நேரம்.

 

எப்போதாகிலும் வருவான் கூற்றுவன்,

அப்போது அந்தக் கூற்றுவன் தன்னைப்

போற்றினும் போகான், பொருளொடும் போகான்,

சாற்றவும் போகான், தமரொடும் போகான்,

நல்லார் என்னான்நல்குரவு என்னான்,

தீயார் என்னான்செல்வர் என்று எண்ணான்,

தரியான் ஒருகணம்தறுகணாளன்,

உயிர்கொடு போவான்உடல்கொடு போகான்

 

என்பது கபிலர் அகவல்.

 

மணிமேகலை ஆசிரியரும் இதையே நமக்கு பின்வருமாறு அறிவுறுத்தியுள்ளார்---

 

தவத்துறை மாக்கள்மிகப்பெரும் செல்வர்

ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்

முதியோர் என்னான்,  இளையோர் என்னான்,

கொடுந்தொழிலாளன்கொன்றனன் குவிப்பஇவ்

அழல்வாய் சுடலை தின்னக் கண்டும்

கழிபெரும் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து,

மிக்க நல்லறம் விரும்பாது வாழும்

மக்களில் சிறந்த மடவார் உண்டோ,

இளமையும் நில்லாயாக்கையும் நில்லா,

புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்,

மிக்க அறமே விழுத்துணை ஆவது.

 

     தவநெறியில் செல்லும் துறவியர். மிக்க பெருஞ் செல்வம் உடையோர், ஈன்று அணிமையை உடைய (குழந்தையைப் பெற்றெடுத்த) இளமகளிர், ஆற்றாத இளஞ்சிறார், ஆண்டில் முதிர்ந்தோர் என்னாமலும் இளையோர் என்னாமலும்,கொடுந் தொழிலை உடைய காலன் கொன்றுகுவிப்பஅழல் வாயினையுடைய சுடலை தின்னக்கண்டும்,மிக்க பெருஞ்செல்வமாகிய கள்ளையுண்டு விளையாடுதலைச்செய்துமேன்மை தரும் நல்லறங்களை விரும்பாமல் வாழ்கின்றமக்களிலும் சிறந்த அறிவிலிகள் உளரோஎன்கின்றார் மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்.

 

       சரிவாழ்நாளில் அறத்தை ஆற்றுவதற்கும்இறைபணியில் நிற்பதற்கும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட காலம் என்று உண்டா? என்றால்,  அப்படி ஏதும் இல்லை. வாழ்நாள் என்பது எப்போது முடியும் என்பது யாருக்கும் தெரியாது. யாராலும் அறிந்து கொள்ளவும் இயலாது.

 

     வாழ்நாள் நமக்கு எப்படிக் கழிகிறது என்பதைப் பதினோறாம் திருமுறையில் "பொன்வண்ணத்து அந்தாதி"யில் சேரமான்பெருமாள் நாயனார் பின்வருமாறு அறிவுறுத்துகிறார்.      

 

வேண்டின நாள்களில் பாதியும் கங்குல்,மிகஅவற்றுள்

ஈண்டிய வெந்நோய்முதலது பிள்ளைமைமேலது மூப்பு

ஆண்டினஅச்சம்வெகுளிஅவாஅழுக்காறு இங்ஙனே

மாண்டனசேர்தும் வளர்புன்சடை முக்கண் மாயனையே.

                                                                                    

       நம் வினையின் பயனுக்கு ஏற்ப நமது வாழ்நாள் இவ்வளவு ஆண்டுகள் என்று விதிக்கப்படுகிறது. அத்தனை ஆண்டுகளும் வாழும் நாளாக அமைவது இல்லை. ஒரு பாதி ஆண்டுகள் இரவுப் பொழுதில் கழிகின்றன. மற்றொரு பாதி ஆண்டுகளே பகல் பொழுதாய் மிஞ்சுகின்றன. அவற்றுள்முன்வினை காரணமாகவும்பிற காரணங்களாலும் நோய்கள் நம்மை நலிகின்றன. வாழ்நாளின் தொடக்கம் குழந்தைப் பருவத்திலும்இறுதிப் பகுதி வயோதிகத்திலும் கழிகின்றது. இடையில் உள்ள சில ஆண்டுகளிலும்இம்மை இன்பத்தை நாடிப் பொருள்தேடி உழலுவதில் அச்சம்வெகுளிஅவாஅழுக்காறு இவைகளால் இன்பம் போன்று துன்பத்தையே தேடிக் கொண்டோம். இறைவனை நாடித் தேடித் தொழுதோமா என்றால்அது அவ்வளவு செம்மையாகஉறுதியாக நடைபெற்றதாகத் தெரியவில்லை. சிறு குழந்தைகள் பசிக்கின்ற போதும்,  நோவு ஏற்பட்டபோதும் தாயை நாடுவது போல்,  நமக்குத் துன்பங்களால் நலிவு உண்டாகும்போதோ,அல்லது தோவைகள் ஏற்படும்போதோஇறைவனைச் சற்றே நினைப்பது மட்டும்தான் நமக்கு இயல்பு. இதில் உயிருக்கு உறுதி பயப்பது என்று எதையாவதுகொஞ்சமாவது தேடியது உண்டா. இளைய காலத்தில் பெருமானை வழிபடுவது என்று இருந்தால்அந்தப் பழக்கத்தின் காரணமாக சில நன்மைகளைத் தேடிக்கொள்ள முடியும். எனவேபெருமானுடைய திருவடியிலே நெஞ்சத்தைச் சேர்ப்போமாக.  

 

       "கோயில் நான்மணி மாலை"யில் பட்டினத்தடிகளும் 'கிழவருமாய்நோய் மூப்புக் கீழ்ப்பட்டுகாமத்து உழவரும் போய் ஓயுமா கண்டோம் --- மொழிதெரிய வாயினால் இப்போதேமன்றில் நடமாடும் நாயனார் என்று உரைப்போம் நாம் என்றார்.

 

       திருமூலதேவ நாயனாரும்'அடப்பண்ணி வைத்தார்அடிசிலை உண்டார்மடக்கொடியாரொடு மந்தணம் கொண்டார்இடப்பக்கமே இறை நொந்தது இங்குஎன்றார்கிடக்கப் படுத்தார்கிடந்து ஒழிந்தாரே'   என்று நிலையாமையை நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்.

 

       அதனால்காற்று உள்ளபோதே தூற்றிக் கொள் என்பது போலகாலம் உண்டாகவே இறைபணியில் நின்று உய்தி பெறவேண்டும்.  

 

       சாகின்ற நாளிலே பெருமானுடைய திருநாமத்தை உச்சரிக்க நமக்கு வாய்க்கவேண்டும்,  அப்போது வந்து பெருமான் நம்மைக் காத்தருள் புரியவேண்டும் என்பதாக அப்பர் பெருமானார் பின்வருமாறு பாடுகின்றார்.

                                                                                    

அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி ஆர்வத்தை உனக்கே தந்து

பங்கத்தைப் போக மாற்றிபாவித்தேன் பரமா நின்னை,

சங்குஒத்த மேனிச் செல்வா சாதல்நாள் நாயேன் உன்னை

எங்கு உற்றாய் என்ற போதாஇங்கு உற்றேன் என்கண்டாயே.  

 

தூமென் மலர்க்கணை கோத்துத் தீவேள்வித் தொழில்படுத்த

காமன் பொடிபடக் காய்ந்த கடல்நாகைக் காரோணநின்

நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும்

சாம்அன்று உரைக்கத் தருதி கண்டாய் எங்கள் சங்கரனே.      

 

 

       இதே செய்தியைத் தான் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பின்வருமாறு நமக்குத் தெரிவிக்கின்றார்--

 

வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும்

பாதியும் உறங்கிப் போகும்நின்றதில் பதினையாண்டு

பேதை பாலகனதாகும்பிணி பசி மூப்புத் துன்பம்,

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகர்உளானே.

 

       வேதநூல்களில் சொல்லியபடி,  நூறு ஆண்டுகள் வாழ்வு என விதித்து இருந்தாலும்,  பிறந்த அன்றே ஒருநாள் வீணாகிக் கழிந்தது.  அன்றிலிருந்தே உறக்கம். பாதி ஆண்டுகள் இரவுப் பொழுதாகிப் போய்விடுகின்றன. எஞ்சிய ஐம்பது ஆண்டுகளிலும், 15ஆண்டுகள் ஒன்றும் அறியாத இளம்பிள்ளைப் பருவமாகக் கழிகின்றது. இதற்குமேல் பல ஆண்டுகள் பொருள் தேடுவதிலும்உலக இன்பங்களை நாடுவதிலுமாகவே கழிகின்றது. பசிபிணித் துன்பங்கள் இருக்கவே இருக்கின்றன எல்லாப் பிறவிகளிலும்யாருக்கும்எப்போதும். இதில் உயிருக்கு வேண்டிய சேமத்தைத் தேடுவது எங்கே நிகழ்கிறது. எப்படிக் கணக்குப் போட்டாலும் தப்பாகப் போய்விடுகிறது. நாமாகப் போட்டால் அப்படித்தான் முடியும். சேமமே வேண்டித் தீவினை பெருக்கிதெரிவைமார் உருவமே மருவிஊமனார் கண்ட கனவினும் பழுதாய் ஒழிந்தன கழிந்த அந்நாள்கள். எல்லாவற்றிலும் இருந்து விடுபட்ட பின்னர்பொறுமையாகப் பெருமான் திருநாமத்தைச் சொல்ல வேண்டும் என்றால்முப்பு என்பதும் நம்மைக் கேட்காமலே வந்து தொலைத்து விடுகிறது. அப்போதும் சொல்லவே முடிவதில்லை. சுவாமீ!  இதுபோல எத்தனையோ பிறவிகளை அடியேன் நான் ஈட்டிய வினைகள் காரணாமாக எடுத்துத் தொத்து விட்டேன். அதனாலே சுவாமீ!  இளைய காலத்திலேயே உன் திருநாமத்தை நான் சொல்லத் தொடங்கி விட்டேன். அப்போது (முதுமைக் காலத்திலேசாகும்போது இறைவன் திருநாமத்தைச்) சொல்ல முடியாமைக்கு இதை வைத்துக்கொள். என்னை உன் திருவடியிலே சோர்த்துக் கொள்வாயாக. இனிமேலும் இது அது என்று தள்ளுபடிகளைச் செய்துஎஞ்சி நிற்பது ஏதும் இல்லாத இந்தப் பிறவி வேண்டாம் சுவாமீ. பிறவி வேண்டாம் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் கதறுவதைப் போல நாமும் கதறப் பழகுவோமே.

 

பின்வருமாறு பெரியாழ்வார் பாடியருளி உள்ளதையும் சிந்திப்போம்---

 

துப்புஉடையாரை அடைவது எல்லாம்

            சோர்விடத்துத் துணை ஆவர் என்றே,

ஒப்புஇலேன் ஆகிலும் நின்அடைந்தேன்

            ஆனைக்கு நீ அருள் செய்தமையால்,

எய்ப்பு என்னை வந்து நலியும் போது,அங்கு

            ஏதும்நான் உன்னை நினைக்க மாட்டேன்,

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்,

            அரங்கத்து அரவுஅணைப் பள்ளியானே.

 

எல்லைஇல் வாசல் குறுகச் சென்றால்

            எற்றி நமன்தமர் பற்றும்போது,

நில்லுமின் என்னும் உபாயம் இல்லை,

            நேமியும் சங்கமும் ஏந்தி னானே,

சொல்லல் ஆம்போதே உன்நாமம் எல்லாம்

            சொல்லினேன்என்னைக் குறிக்கொண்டுஎன்றும்

அல்லல் படாவண்ணம் காக்க வேண்டும்,

            அரங்கத்து அரவுஅணைப் பள்ளியானே.

 

தண்ணனவு இல்லைநமன் தமர்கள்

            சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்,

மண்ணொடு நீரும் எரியும் காலும்

            மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய்,

எண்ணலாம் போதே உன் நாமம் எல்லாம்

            எண்ணினேன்என்னைக் குறிக்கொண்டு என்றும்

அண்ணலேநீ என்னைக் காக்க வேண்டும்,

            அரங்கத்து அரவுஅணைப் பள்ளியானே.

 

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா

            கோநிரை மேய்த்தவனேஎம்மானே,

அன்று முதல் இன்று அறுதியா

            ஆதிஅம்சோதி மறந்து அறியேன்

நன்றும்கொடிய நமன்தமர்கள்

            நலிந்து வந்து என்னைப் பற்றும் போது

அன்று அங்கு நீ என்னைக் காக்க வேண்டும்

            அரங்கத்து அரவுஅணைப் பள்ளியானே.    ----  பெரியாழ்வார்.

 

 

                         படைத்தவனை வணங்கப் பரகதி - படைப்புகளை வணங்க நரகதி  

                        உடையவனை வேண்ட உயர்நிலை - உடைமைகளை வேண்டத் துயர்நிலை.

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...