பெறுவது எல்லாம் கொடுப்பதற்கே - வைத்து இழப்பதற்கு அல்ல.

 


பெறுவது எல்லாம் கொடுப்பதற்கே.

வைத்து இழப்பதற்கு அல்ல.

-----

 

     முற்பிறப்பில் செய்தவினைகளை இப்பிறப்பிலே அனுபவிப்பதும்இப்பிறப்பில் செய்த வினைகளைபின்வரும் பிறப்புக்களிலே அனுபவிப்பதும் ஆகிஇப்படி மாறிமாறி வருகின்ற இயல்பை உடையது விதி ஆகும்.

 

     எந்த ஒரு உயிரும் தான் துன்புறுவதை விரும்புவதில்லை என்பதை அறிந்துஎவ்வுயிர்க்கும் இன்பத்தையே செய்து வந்தால்துன்பம் விளைய வழியே இல்லை. விருப்பு வெறுப்பு காரணமாகதான் எண்ணியதையே சொல்லியும் செய்தும் வந்தால் வினை விளைகின்றது. அதனால் இன்பதுன்பங்கள் உண்டாகின்றன.

 

     இப்படி வினைகள் பலித்து வருவது அறிந்து கொள்ளப் பிரமாணங்கள் உள்ளன. அவை பிரத்தியட்சம்அனுமானம்ஆகமம்உவமானம்அருத்தாபத்திஅபாவம் என்று கூறப்படும்.

 

            1. காண்டல் அளவைஎன்பது காட்சி என்றும்பிரத்தியட்சப் பிரமாணம் என்றும் வழங்கும். ஒரு பொருளைக் கண் முதலிய ஐம் பொறிகளாலும் நேர்முகமாக அறிதல்,காண்டல் அளவை ஆகும். தன்னை வைதாரை வைவதும்அடித்தாரை அடிப்பதும்,நல்லது செய்தார்க்கு நல்லது செய்தலும் ஆகிய இவைகள் எல்லாம் நமக்குக் கண்கூடாக விளங்குபவை.

 

            2. கருதல் அளவைஎன்பது அனுமானப் பிரமாணம்எனவும் கூறப்படும். ஒரு பொருளை நேர்முகமாகக் காண முடியாத போதும்அதனை ஒருபோதும் விட்டு நீங்காத தன்மை உடைய மற்றொரு பொருளைக் கண்டு முதலில் கூறப்பட்ட பொருள் உள்ளது என்று கருதி அறிதல் கருதல் அளவை ஆகும். எடுத்துக்காட்டாக தீயோடு விட்டு நீங்காத தன்மையை உடையது புகை. விட்டு நீங்காத் தன்மையை அவிநா பாவம் என்ற சொல்லால் குறிப்பர். தொலைவில் ஓரிடத்தில் புகை எழுவதைக் கண்டு நெருப்பு கண்ணுக்குப் புலனாகாத போதும் அங்கே நெருப்பு உள்ளது. என்று அறிந்து கொள்வது கருதல் அளவையின் பாற்படும்.

 

            3. உரை அளவை --- இதுஆகமப் பிரமாணம் என்றும்சத்தப் பிரமாணம் என்றும்ஆப்தவாக்கியம் என்றும் வழங்கப்படும். கண்டும் கருதியும் அறிய முடியாத பொருள்களைப் பற்றி நூல்களின் வாயிலாக அறிதல் உரை அளவை ஆகும். இங்கு நூல்கள் எனப்பட்டன. இறைவனால் அருளப்பட்டனவும்இறைவனின் மெய்யடியார்களால் அருளப்பட்டனவுமாகிய மெய்ந்நூல்களையே குறிக்கும்.

 

          4. உவமை அளவை--- செய்யுளில் ஒப்பு என்ற சொல்லால் குறிக்கப்படுவது உவமை அளவை என்றும் கூறப்படும். காட்டுப் பசுவை அறியாத ஒருவன் அது எவ்வாறு இருக்கும் என்று கேட்டால்வீட்டுப் பசுவை ஒத்து இருக்கும் என்று விளக்குவது இந்த அளவைக்கு எடுத்துக் காட்டு.

 

          5. "பொருள் அளவை" என்பது  வடமொழியில் அருத்தாபத்தி என்று வழங்கும். இங்ஙனம் அன்று எனில் இது கூடாது என்று உய்த்து அறிவது அளவையால் பெறப்படும். எடுத்துக் காட்டாக ஒருவர் உண்ணா நோன்பு இருப்பதாகச் சொல்லுகிறார் என்று வைத்துக் கொள்வோம். பகற்பொழுது முழுவதும் அவரைச் சுற்றி மக்கள் கூட்டம் மொய்க்கிறது. அவர்கள் முன்னிலையில் அவர் எதையுமே உண்ணவில்லை. பத்துப் பதினைந்து நாள் கழிந்த பிறகு அவர் மேனி வாடாமல் இருப்பாரானால்யாருமே அறியாமல் இரவில் அவர் உண்ணுகிறார் என்பதனை உய்த்து அறியலாம். இதனைப் பகல் உண்ணாதவன் பருத்திருப்பான் என்ற சொற்களால் கூறுவர். இதுவே அருத்தாபத்தி அளவையாகும்.

 

            4. "இன்மை அளவை" என்பதுஉண்டு என்னும் அறிவுக்கு எதிராக உணரப்படுவதாகும். இதனை அபாவம் என்றும் வழங்குவர். எடுத்துக் காட்டாக முயலுக்குக் கொம்பு இல்லை என்பது இன்மை அளவையால் அறியப்படுவதாகும்.

 

            சிறப்பித்துச் சொல்லப்படுகிற மேற்கூறிய ஆறு அளவைகளையும் தவிர மேலும் நான்கு அளவைகள் கொள்ளப்படும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இவற்றுள் முதலாவது ஒழிபு அளவை. இதற்கு பாரிசேட அளவைஎன்றும் பெயர் வழங்கும். இதற்கு எடுத்துக்காட்டாக மகாபாரதக் கதையிலிருந்து ஒரு நிகழ்ச்சியைக் கூறுவர். அக்காலத்தில் ஆயிரம் யானை வலிமை உடையோர்கள் நால்வர் இருந்தனர். அவர்கள் சல்லியன்சராசந்தன்கீசகன்பீமசேனன் என்பவர்கள். விராட நாட்டில் கீசகன் இனம் தெரியாத ஒருவனால் மற்போரில் கொல்லப்பட்டான். அந்நாட்டில் சல்லியனும்சராசந்தனும் இல்லை. எனவே கீசகனைக் கொன்றவன் அஞ்ஞாதவாசத்தில் இருந்தவனாகிய பீமனாகத்தான் இருத்தல் வேண்டும் என்று உய்ந்து அறியப்படும்.

 

     பழவினை என்பது ஒன்று உண்டுஅதை நமக்குக் கூட்டுவிப்பது தெய்வம் என்பதை அறியாத நாத்திகர்உலகாயதர் முதலானவர்கள்வைதாரை வைவது முதலான செயல்களில் ஈடுபட்டு வினைகளைப் பெருக்கி வருகின்றனர். விதி என்று ஒன்று இருக்கின்றது என்னும் எண்ணம் இன்றிஎல்லாவற்றையும் வேண்டும் என்று ஆசைப்பட்டுஆசைப்பட்டது கிடைக்காதபோதுதானும் அல்லல் உற்றுபிறரையும் அல்லல் உறச் செய்வது வாடிக்கை ஆகிவிட்டது. ஆசையே எல்லாவற்றுக்கும் காரணம் ஆகின்றது.

 

     எத்தனை இருந்தாலும் இன்னும் வேண்டும் வேண்டும் என்று அலைகிறோம். பணம் இல்லாதவன் பணத்திற்கு அலைகிறான். பணம் இருப்பவன் அன்புக்கு அலைகிறான். நிம்மதிக்கு அலைகிறான்.மனித மனமானது அடியற்ற பாத்திரம். எவ்வளவு இட்டாலும் நிறையாது. எப்போதும் குறையுடனேயே அலையும். பார்ப்பது எல்லாம் வேண்டும்என்று எண்ணும்.

 

     பெறுவதிலேயே கவனமாய் இருப்பது அல்லாமல்பெற்றதைக் கொடுப்பதை பற்றிச் சிந்திப்பது இல்லை. கொடுப்பதில் உள்ள சுகத்தை அறிந்தால்பெறுவதில் உள்ள சுகம் மறையும். "ஈத்து உவக்கும் இன்பம்" என்றார் திருவள்ளுவ நாயனார். இந்த இன்பம் அறியாதார், "தமது உடைமையை வைத்து இழக்கும் வண்கணவர்" என்கின்றார்.  "அறம் செய்ய விரும்பு" என்றார் ஔவைப் பிராட்டியார். நாம் ஒருவருக்கு உதவி செய்தோம் என்ற மன நிறைவும்இன்னும் கூட செய்யலாமே என்ற எண்ணமும் ஈத்து உவக்கும் இன்பத்தால் விளைவது. பிறருக்கு நன்மை செய்யும் இடத்தில் நம்மை வைத்த இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றும். அமைதியும்இன்பமும் பிறக்கும். 

 

     சொல்லித் தெரியாது காமம்சொன்னாலும் புரியாது தர்மம் என்பார்கள். எனவேதான்அறம் செய்வதை வலியுறுத்தி, "அறன் வலியுறுத்தல்" என்ற அகிதாரத்தை வைத்தார் திருவள்ளுவ நாயனார். "அறம் செய விரும்பு" என்று தொடக்கத்திலேயே சொன்னார் ஔவையார். "தர்மம் சர" என்று வேதமும் முதலில் அறத்தையே வலியுறுத்தியது.

 

     உடம்பை விட்டு உயிர் பிரியும் இறுதியில் உறுதி பயந்து துணையாக வருவதுஏழைகட்கு அளித்த தானமும் தருமமே ஆகும்.  இம்மையில் புகழும் மறுமையில் புண்ணியமும் அளிப்பது தருமமே ஆகும். புகழ் இல்லாதவன் தோன்றாமல் இருப்பது நல்லது என்பார் திருவள்ளுவர். அப் புகழ் "வறியார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும்" என்றும் திட்டமாகக் கூறினார்.

 

      நிரம்பத் தருவதற்கு ஆற்றல் இல்லாதவர்கள் ஏதாவது ஒரு சிறிது ஆயினும் வறியவர்க்கு வழங்கவேண்டும். "இலை ஆயினும்வெந்தது ஏதாயினும் பகிர்ந்து ஏற்றவர்க்கே அது தொலையா வழிக்குப் பொதி சோறும் உற்ற துணையுமாக வரும்" என்பார் அருணைகிரிநாதர்.

 

      குறைந்த ஆற்றல் உடையவர்கள், "வறிஞர்க்கு என்றும் நொய்யில் பிளவு அளவேனும் பகிர்மின்கள்" என்கின்றார்.  "குன்றிப் பிளவு அளவு பங்கிட்டு" என்கின்றார் திருச்செந்தூர்த் திருப்புகழில். "தவிடின் ஆற்பதம் எனினும் ஏற்பவர் தாழாது ஈயேன்" என்கின்றார் மற்றொரு திருப்புகழில். தவிடு அளவாவது தருகின்றேனில்லை என்று வருந்துகின்றனர். மேலும் தரவேண்டும் என்ற எண்ணம் ஒரு தினை அளவேனும் இருக்கவேண்டும் என்று இடித்துக் கூறுகின்றனர். "பகிர நினைவு ஒரு தினை அளவும் இலிஎன்கின்றார்.

 

     கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லை. தானம் செய்யும் அளவுக்கு என்னிடம் பொருள் இல்லை என்று எண்ணலாம்சொல்லவும் செய்யலாம். நம்மிடம் உள்ளதைக் கொடுக்கவேண்டும் என்று மனதார எண்ணுகின்ற பக்குவம் வந்துவிட்டாலே உள்ளதைப் பகிர்ந்து கொள்ளும் பாங்கு வந்துவிடும்.

 

     மனித குலம் உய்தவற்கு உரியதொரு அற்புதமான உபாயத்தைத் திருமூல நாயனார் கூறுமாறு காண்க.

 

"யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை,

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை,

யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி,

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே".

 

இதன் பொருள் ---

 

     இறைவனுக்குப் படையல் போட்டுத்தான் வணங்க வேண்டும் என்பதில்லைஎளிமையாகப் பச்சிலை இட்டு வணங்கினாலே போதும். கோ பூசை செய்ய வேண்டும் என்பதில்லைபசுவுக்கு ஒரு கைப்பிடி புல்லைக் கொடுத்தாலும் போதும். பசித்திருப்பவர்க்கு அறுசுவை உணவு கொடுக்க வேண்டும் என்பதில்லை. நாம் உண்கிற உணவில் ஒரு கைப்பிடி கொடுத்தாலும் போதும். பதாகைகள் வைத்து யாரையும் வாயாரப் புகழ்ந்துதான் பேசவேண்டும் என்பதில்லையாரிடத்திலும் இனிய சொல்லைச் சொன்னாலே போதும்.

 

     இன்றைய சூழலில்ஊர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு அன்று அலர்ந்த மலர்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு இது சாத்தியம் இல்லை. கடைகளில் விற்கும் மலர்களைக் கொண்டுதான் செய்யவேண்டி இருக்கும். இவைகள் அன்று அலர்ந்த மலர்கள் அல்ல. வாடியும் வதங்கியும் இருக்கும். வேறு வழியில்லாமல்ஒன்றுக்குப் பத்தாக காசு கொடுத்து வாங்கி வருவோம். 

 

     மலர் இல்லையானால்இறைவனுக்கு அபசாரம் செய்த்தாக ஆகிவிடுமோ என்ற பயம் எல்லோருக்கும் உண்டு. 

 

     என்ன செய்யலாம் என்னும் குழப்பமே வேண்டாம். சிரமம் ஏதும் இல்லாமல் இறைவனை வழிபட வழி உண்டு. எளிமையான வழியைத் திருமூலர் நமக்கு வகுத்துக் காட்டி உள்ளார். விதி என்று ஒன்று இருந்தால்விதிவிலக்கும் இருக்கும் அல்லவா?

 

     மலர்கள் இல்லை என்றால் கலவைப்பட வேண்டாம். ஒரு செடியில் சில மலர்கள் என்றால்பல இலைகள் இருக்கும். இலைகளும் இறையருளால் வந்தவையே. இலைகள் இல்லாமல் மலர்கள் இல்லை. இலைகளை இட்டே வழிபடலாம். பின்வரும் பிரமாணங்களைக் காண்போம்...

 

"பத்தியுடன் நின்று பத்தி செயும் அன்பர் 

பத்திரம் அணிந்த கழல் வீரா"

 

என்று முருகப் பெருமானைப் போற்றுகின்றார் அருணகிரிநாதர்.

 

     "பத்திரம்" என்றால் "இலை" என்றும் ஒரு பொருள் உண்டு.அன்பு நெறியில் உறுதியுடன் நிற்கின்ற அடியார்கள்.அன்புடன் இறைவன் திருவடியில் பச்சிலைகளை இட்டு அருச்சித்தால்அப் பச்சிலைக்கு மெச்சி அருள் புரியும் கருணைத் தெய்வம் முருகன் என்பது இதன் பொருள்.

 

"போதும் பெறாவிடில் பச்சிலை உண்டு

     புனல் உண்டுஎங்கும்

ஏதும் பெறாவிடில் நெஞ்சு உண்டு அன்றே

     இணையாகச் செப்பும்

சூதும் பெறாமுலை பங்கர்,தென் 

     தோணி புரேசர்வண்டின்

தாதும் பெறாத அடித் தாமரை 

     சென்று சார்வதற்கே".              

 

என்கின்றார் பட்டினத்தார்.

 

இதன் பொருள் ---

 

     கிண்ணத்தையும்சொக்கட்டான் காயையும் ஒப்பாக அமையப் பெறாத முலைகளை உடைய உமாதேவியாரைத் தனது திருமேனியில் ஒரு பாகத்தில் கொண்டவரும்சீகாழி என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளவரும் ஆகிய சிவபெருமானுடைய திருவடித் தாமரைகளைச் சென்று அடைவதற்குஇப்போதுநல்ல மலர்களைப் பெறாவிடில்பச்சிலை உண்டு. அந்தப் பச்சிலையும் இல்லையானால்எல்லா இடங்களிலும் நீர் உண்டு. இவை ஏதும் கிடைக்கப் பெறாத போதுமனம் உள்ளதே,அதைக் கொண்டு வழிபட்டால் போதும்.

 

"பத்தி அடியவர் பச்சிலை இடினும்

முத்தி கொடுத்து முன் நின்று அருளித்

திகழ்ந்து உளது ஒருபால் திருவடி"...         ---  பதினோராம் திருமுறை.

 

இதன் பொருள் --- 

 

     அன்பு உள்ள அடியவர்கள்,மலர் கிடைக்காதபோதுபச்சிலையை இட்டு வணங்கினாலும்அவர்களுக்குத் தரிசனம் தந்து, (இந்தப் பிறவியில் அவர்களுடைய இஷ்டகாமியங்களை அருளிச் செய்வதோடுமோட்சத்தை அருள் புரிகின்ற சிவபெருமானது திருவடி ஒருபுறம் திகழ்ந்து உள்ளது.

 

"பத்தியாகிப் பணைத்தமெய் அன்பொடு

நொச்சி ஆயினும் கரந்தை ஆயினும்

பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர் 

கரு இடைப் புகாமல் காத்து அருள் புரியும்

திருவிடை மருத,திரிபு ராந்தக",..                     ---  பதினோராம் திருமுறை.

 

இதன் பொருள் ---

 

     பத்தியால் கிளைத்த உண்மையான அன்போடுநொச்சி இலையையாவதுகரந்தை என்னும் திருநீற்றுப் பச்சை இலையையாவது கொண்டு பச்சிலையால் அருச்சனை புரிந்து வணங்குகின்ற தொண்டர்கள்கருவில் சேராதபடி (மறுபிறவி இல்லாதபடி) காத்து அருள் புரிகின்ற திருவிடைமருதூரில் எழுந்தருளிய இறைவாமுப்புரங்களை எரித்தவனே!.

 

"பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி,

மெச்சிசிவபத வீடு அருள்பவனை,

முத்தி நாதனைமூவா முதல்வனை,

அண்டர் அண்டமும் அனைத்து உள புவனமும்

கண்ட அண்ணலைகச்சியில் கடவுளை,

ஏக நாதனைஇணை அடி இறைஞ்சுமின்"     --- கச்சித் திருஅகவல்.

 

இதன் பொருள் ---

 

     பச்சிலையைக் கிள்ளி அருச்சித்தாலும்அடியார்கள் மீது இரக்கம் கொண்டுஅவர்களுடைய பத்திக்கு மெச்சிசிவபதம் ஆகிய மோட்சத்தை அனுக்கிரகிக்கின்றவனைமுத்திக்குத் தலைவனைநித்தியமாய் உள்ள முதற்பொருளைவானுலகும் மண்ணுலகும் எல்லாமும் படைத்த பெரியவனைதிருக்கச்சி என்னும் காஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருக்கின்ற ஏகாம்பரநாதனைதனிமுதலாக உள்ள இறைவனை வணங்கிப் பணியுங்கள்.

 

"கல்லால் எறிந்தும்,கை வில்லால் அடித்தும்,கனிமதுரச்

சொல்லால் துதித்தும்நல்பச்சிலை தூவியும்,

                                         தொண்டர் இனம்

எல்லாம் பிழைத்தனர்,அன்பு அற்ற நான்இனி ஏது செய்வேன்?

கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கண் குருமணியே".                                          --- தாயுமானார்.

 

இதன் பொருள் ---

 

     உயிர்களைக் கொல்லாமையை விரதமாகக் கொண்டுள்ள அடியவர்கள் காணுமாறு அருட்காட்சி கொடுத்து அருள் புரிகின்றமுக்கண்களை உடைய குருநாதனே! உன்னைக் கல்லால் எறிந்து வழிபட்டார் சாக்கிய நாயனார். கையில் இருந்த வில்லால் அடித்தான் அருச்சுனன். இனிமையான கனிரசம் துதும்பும் பாடல்களால் துதித்தார்கள் பலர். நல்ல பச்சிலைகளைத் தூவி வழிபட்டனர் சிலர். இவ்வாறு உனது தொண்டர்கள் எல்லாம் ஈடேறினார்கள். (அவர்களிடத்தே உண்மை அன்பு இருந்தது) உன்னிடத்தில் அன்பு இல்லாதவனாகிய நான் இனி என்ன செய்வேன்?

 

"எல்லாம் உதவும் உனை ஒன்றில் பாவனையேனும் செய்து,

புல் ஆயினும்ஒரு பச்சிலை ஆயினும் போட்டு இறைஞ்சி

நில்லேன்நல் யோக நெறியும் செயேன்அருள் நீதி ஒன்றும்

கல்லேன்எவ்வாறு,பரமே! பரகதி காண்பதுவே".                                                   --- தாயுமானார். 

 

இதன் பொருள் ---

 

     பரம்பொருளே! உயிர்களுக்கு எல்லாவற்றையும் உதவி அருள் புரிகின்ற உன்னைநான் ஒன்றிலாவது பாவனையாவது செய்துபுல்லையாவது,பச்சிலையையாவது உனது திருவடியில் போட்டுவணங்கி நிற்கவில்லை. யோகநெறியில் பயிலவில்லை. அருள் நூல்களையும்நீதி நூல்களையும் கற்கவும் இல்லை. நான் எப்படி பரகதியைக் காணமுடியம்?

 

     "எவன் பத்தியோடுபயனை எதிர்பார்க்காமல்,எனக்கு இலைமலர்பழம்நீர் முதலிவற்றை அர்ப்பணம் செய்கின்றானோஅன்பு நிறைந்த அந்த அடியவன் அளித்த காணிக்கையான இலைமலர் முதலியவற்றை நான் சகுண சொருபமாக வெளிப்பட்டு அன்புடன் அருந்துகின்றேன்" என்று பகவத் கீதை ஒன்பதாம் அத்தியாயத்தில் 26 - ஆவது பாடலில் கூறப்பட்டு இருப்பதும் எண்ணுதற்கு உரியது.

 

     ஏனவேஇறைவனுக்கு ஒரு பச்சிலை வணங்குவது எல்லாருக்கும் இயலும். பசுவுக்கு ஒரு வாய் நிறைய புல்லையாவது கொடுக்க எல்லாராலும் இயலும். உண்ணுகின்ற உணவில் ஒருபிடியை பசித்து வருவோர்க்கோதம்முடன் உள்ளவர்க்கோ கொடுத்து உதவுவதில் ஒன்றும் குறைந்துவிடப் போவது இல்லை. யாருக்கும் எதையும் கொடுத்து உதவமுடியாத நிலை உள்ளது. ஆனால் உதவவேண்டும் என்னும் எண்ணம் உள்ளது என்றால் அது போதும். யாரிடத்திலும் இனிய சொற்களைப் பேசலாம்.

 

     எனவேநம்மிடத்தில் உள்ள எதுவும் பிறருக்குக் கொடுத்துஇம்மையில் புகழையும்மறுமையில் புண்ணியத்தையும் பெறுவதற்கே என்பதை அறிதல் வேண்டும். உடம்பு உள்ளபோதேஉள்ள பொருள் எதுவும் இல்லாமல் போவதும் உண்டு. உடம்பு அழிந்தபின்உள்ள பொருள் எதுவும் பயன்படாமல் போவதும் உண்டு.

 

 

 

 

 

No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...