பொது --- 1018. உரைதரு பரசமயங்கள்
அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

உரைதரு பரசமய (பொது)

 

முருகா! 

அடியேன் மாதர் மயக்கம் அற்று, 

சிவாநுபவச் செல்வத்தில் திளைத்து இருக்க அருள்புரிவீர்.

 

 

தனதன தனதன தந்த தானன

     தனதன தனதன தந்த தானன

          தனதன தனதன தந்த தானன ...... தந்ததான

 

 

உரைதரு பரசம யங்க ளோதுவ

     துருவென அருவென வொன்றி லாததொ

          ரொளியென வெளியென வும்ப ராமென ......இம்பராநின்

 

றுலகுகள் நிலைபெறு தம்ப மாமென

     வுரைசெய அதுபொருள் கண்டு மோனமொ

          டுணர்வுற வுணர்வொடி ருந்த நாளும ...... ழிந்திடாதே

 

பரகதி பெறுவதொ ழிந்தி டார்வன

     பரிசன தெரிசன கந்த வோசைகள்

          பலநல விதமுள துன்ப மாகிம ...... யங்கிடாதே

 

பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள்

     பலபல விதமுள துன்ப சாகர

          படுகுழி யிடைவிழு பஞ்ச பாதக ...... னென்றுதீர்வேன்

 

அரகர சிவசுத கந்த னேநின

     தபயம பயமென நின்று வானவர்

          அலறிட வொழிகினி யஞ்சி டாதென ...... அஞ்சல்கூறி

 

அடல்தரு நிருதர நந்த வாகினி

     யமபுர மடையஅ டர்ந்து போர்புரி

          அசுரன தகலமி டந்து போகவ ...... கிர்ந்தவேகம்

 

விரிகடல் துகளெழ வென்ற வேலவ

     மரகத கலபசி கண்டி வாகன

          விரகுள சரவண முந்தை நான்மறை ...... யந்தமோதும்

 

விரைதரு மலரிலி ருந்த வேதனும்

     விடவர வமளிது யின்ற மாயனும்

          விமலைகொள் சடையர னும்ப ராவிய ......தம்பிரானே.

 

 

பதம் பிரித்தல்

 

 

உரை தரு பர சமயங்கள் ஓதுவது,

     உரு என,அரு என,ஒன்று இலாததொர்

          ஒளி என,வெளி என,உம்பர் ஆம்என,......இம்பரா நின்று

 

உலகுகள் நிலைபெறு தம்பம் ஆம் என,

     உரைசெய,அதுபொருள் கண்டு,மோனமொடு,

          உணர்வுஉற உணர்வொடு இருந்த நாளும் ......அழிந்திடாதே,

 

பரகதி பெறுவது ஒழிந்திடர்வன

     பரிசன தெரிசன கந்த ஓசைகள்

          பலநல விதம் உள துன்பம் ஆகி ......மயங்கிடாதே,

 

பரிபுர பதம் உள வஞ்ச மாதர்கள்

     பலபல விதம் உள துன்ப சாகர

          படுகுழி இடைவிழு,பஞ்ச பாதகன் .....என்றுதீர்வேன்?

 

அரகர சிவசுத! கந்தனே! நினது

     அபயம் அபயம் என நின்று,வானவர்

          அலறிட,ஒழிக இனி அஞ்சிடாது என ...... அஞ்சல்கூறி

 

அடல்தரு நிருதர் அநந்த வாகினி

     யமபுரம் அடைய அடர்ந்து போர்புரி,

          அசுரனது அகலம் இடந்து போக ......வகிர்ந்தவேகம்

 

விரிகடல் துகள் எழ வென்ற வேலவ!

     மரகத கலப சிகண்டி வாகன!

          விரகுள சரவண! முந்தை நான்மறை .....அந்தம் ஓதும்

 

விரைதரு மலரில் இருந்த வேதனும்,

     விடஅரவு அமளி துயின்ற மாயனும்,

          விமலை கொள் சடை அரனும் பராவிய ......தம்பிரானே.

 

பதவுரை

 

      அரகர சிவசுத--- பாவங்களைப் போக்கவல்ல சிவபெருமானுடைய திருக்குமாரரே!

 

     கந்தனே--- கந்தபிரானே!

 

     நினது அபயம் அபயம் என நின்று வானவர் அலறிட---  தேவரீரிடம் அடைக்கலம்அடைக்கலம் என்று ஓலமிடவும்

 

      இனி அஞ்சிடாது ஒழிக என அஞ்சல் கூறி--- இனி நீங்கள் அஞ்சுவதை விடுங்கள் என்று அருள்செய்து

 

      அடல் தரு நிருதர் அநந்த வாகினி யமபுரம் அடைய--- வலிமை மிக்க அசுரர்களுடையஅளவற்ற சேனைகள் யாவும் மாண்டு எமபுரம் போகுமாறு

 

     அடர்ந்து போர் புரி அசுரன் அகலம் இடந்து போக--- நெருங்கி வந்து போர் செய்யும் சூரபன்மனுடைய மார்பினை இரண்டாகப் பிளவுபடும்படி,

 

      வகிர்ந்த வேகம் விரி கடல் துகள் எழ வென்ற வேலவ ---பிளந்து எறிந்த வேகத்தில்,விரிந்த கடல் வற்றித் தூளெழும்படி வெற்றி கொண்ட வேலாயுதத்தை உடையவரே!

 

      மரகத கலப சிகண்டி வாகன--- பச்சை நிறத் தோகையைக் கொண்ட மயிலை வாகனமாகக் கொண்டவரே!

 

      விரகு உள சரவண--- சாமர்த்தியம் உள்ள சரவணபவரே!

 

       முந்தை நான்மறை அந்தம் ஓதும் விரைதரு மலரில் இருந்த வேதனும்--- பழைமையான நான்கு வேதங்களின் முடிவை ஓதுபவரும்நறுமணம் கமழ்கின்ற தாமரை மலரில் வீற்றிருந்தவரும் ஆன பிரமதேவனும்

 

      விட அரவு அமளி துயின்ற மாயனும்--- விடத்தை உடைய ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொள்ளும் திருமாலும்

 

     விமலைகொள் சடையரனும் பராவிய தம்பிரானே--- உமாதேவியாரை உடையவரும், சடைமுடியைக் கொண்டவரும் ஆகிய சிவபெருமானும் போற்றும் தனிப்பெரும் தலைவரே!

 

      உரை தரு பர சமயங்கள் ஓதுவது உரு என அரு என--- நன்கு சொல்லப்படுகின்ற வேற்றுச் சமயங்களால் கூறப்படுவதுபரம்பொருள் உருவம் உள்ளது என்றும்உருவமில்லாதது என்றும், 

 

     ஒன்று இலாதது ஒர் ஒளி என--- ஒன்றும் இல்லாதது ஆகிய ஒப்பற்ற பேரொளி மயமானது என்றும்,

 

     வெளி என--- வெட்ட வெளியாக இருப்பது என்றும்,

 

     உம்பராம் என--- அப்பாலைக்கு அப்பாலாய் உள்ளது என்றும்,

 

     இம்பரா நின்று---  இங்கே உள்ளது என்றும் நிற்பதாய்,

 

     உலகுகள் நிலைபெறு தம்பமாம் என உரை செய---  உலகங்கள் நிலை பெற்று நிற்க உதவும் பற்றுக் கோடு என்றும் பலப்பலவாறாக சொல்லும்படியாய் உள்ள 

 

     அது பொருள் கண்டு--- அந்தப் பரம் பொருளை நுணுக்கமாக உணர்ந்து

 

     மோனம் ஒடு உணர்வு உற--- மெளன நிலையுடன், ஞான உணர்வு பொருந்தும்படி

 

     உணர்வொடு இருந்த நாளும் அழிந்திடாதே --- அந்த ஞானானுபவ உணர்ச்சியோடு இருந்த நாட்கள் அழிந்து வீண் போகாமல்,

 

      பரகதி பெறுவது ஒழிந்திட--- மேலான நற்கதியை பெறும்படியான பாக்கியம் ஒழிந்து போகும்படி

 

     ஆர்வன பரிசன தெரிசன கந்த ஓசைகள்--- மிகுந்திருப்பதான, தொடுவது, காண்பது, நறுமணம் முகர்வது, கேட்கக்கூடிய இனிய பாடல்கள், ஆகிய ஊறு, ஒளி, நாற்றம், ஒசை முதலான புலன்களால் அநுபவிக்கப்படுவதாகிய

 

      பல நல விதம் உள--- அநேக விதமான சிற்றின்பங்கள் உள்ளன. 

 

     துன்பம் ஆகி மயங்கிடாதே --- அவைகளால் அடியேன் துன்பம் உற்று மயங்காமல்,

 

      பரிபுர பதம் உள வஞ்ச மாதர்கள் பலபல விதம் உள--- சிலம்பு அணிந்த பாதங்களை உடைய வஞ்சகம் கொண்ட விலைமாதர்களது பலபல வகையாக உள்ள 

 

      துன்ப சாகர படுகுழி இடைவிழு பஞ்ச பாதகன் என்று தீர்வேன்--- துன்பக் கடலாகிய பெரும்பள்ளத்தில் விழுகின்ற பஞ்சமகா பாதங்களைச் செய்யும் அடியேன் என்றைக்கு கரை ஏறுவேன்

 

பொழிப்புரை

 

            பாவங்களைப் போக்கவல்ல சிவபெருமானுடைய திருக்குமாரரே!கந்தபிரானே! தேவரீரிடம் அடைக்கலம்அடைக்கலம் என்று ஓலமிடவும்இனி நீங்கள் அஞ்சுவதை விடுங்கள் என்று அருள்செய்துவலிமை மிக்க அசுரர்களுடையஅளவற்ற சேனைகள் யாவும் மாண்டு எமபுரம் போகுமாறு நெருங்கிச் போர் செய்யும் சூரபன்மனுடைய மார்பினை இரண்டாகப் பிளந்துபிளந்து எறிந்த வேகத்தில்,விரிந்த கடல் வற்றித் தூளெழும்படி வெற்றி கொண்ட வேலாயுதத்தை உடையவரே!

 

            பச்சை நிறத் தோகையைக் கொண்ட மயிலை வாகனமாகக் கொண்டவரே!

 

            சாமர்த்தியம் உள்ள சரவணபவரே!

 

            பழைமையான நான்கு வேதங்களின் முடிவை ஓதுபவரும்நறுமணம் கமழ்கின்ற தாமரை மலரில் வீற்றிருந்தவரும் ஆன பிரமதேவனும்விடத்தை உடைய ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொள்ளும் திருமாலும்,உமாதேவியாரை உடையவரும், சடைமுடியைக் கொண்டவரும் ஆகிய சிவபெருமானும் போற்றும் தனிப்பெரும் தலைவரே!

 

            நன்கு சொல்லப்படுகின்ற வேற்றுச் சமயங்களால் கூறப்படுவதுபரம்பொருள் உருவம் உள்ளது என்றும்உருவமில்லாதது என்றும், ஒன்றும் இல்லாதது ஆகிய ஒப்பற்ற பேரொளி மயமானது என்றும்வெட்ட வெளியாக இருப்பது என்றும், அப்பாலைக்கு அப்பாலாக இருப்பது என்றும்,  இங்கே உள்ளது என்றும் நிற்பதாய்,உலகங்கள் நிலை பெற்று நிற்க உதவும் பற்றுக்கோடு என்றும் பலப்பலவாறாக சொல்லும்படியாய் உள்ள அந்தப் பரம்பொருளை நுணுக்கமாக உணர்ந்துமெளன நிலையுடன், ஞான உணர்வு பொருந்தும்படி

அந்த ஞானானுபவ உணர்ச்சியோடு இருந்த நாட்கள் அழிந்து வீண் போகாமல்,மேலான நற்கதியை பெறும்படியான பாக்கியம் ஒழிந்து போகும்படி மிகுந்திருப்பதான, தொடுவது, காண்பது, நறுமணம் முகர்வது, கேட்கக்கூடிய இனிய பாடல்கள், ஆகிய ஊறு, ஒளி, நாற்றம், ஒசை முதலான புலன்களால் அநுபவிக்கப்படுவதாகிய, அநேக விதமான சிற்றின்பங்கள் உள்ளன. அவைகளால் அடியேன் துன்பம் உற்று மயங்காமல், சிலம்பு அணிந்த பாதங்களை உடைய வஞ்சகம் கொண்ட விலைமாதர்களது பலபல வகையாக உள்ள துன்பக் கடலாகிய பெரும்பள்ளத்தில் விழுகின்ற பஞ்சமகா பாதங்களைச் செய்யும் அடியேன் என்றைக்கு கரை ஏறுவேன்?

 

விரிவுரை

 

உரைதரு பரசமயங்கள் ஓதுவது ....... உரைசெய ---

 

சமயங்கள் தத்தம் கொள்கைகளே உண்மை என்று உரைக்கின்றன. ஆதலின் "உரைதரு" என்றார். 'ன"மயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்பார் மணிவாசகப் பெருமான். "எங்கள் பதம் எங்கள் பதம் என்று சமயத் தேவர் இசை வழக்கு இடு நல்பதம்" என்பார் வள்ளல் பெருமான்.

 

சமயங்கள் ஒன்றோடு ஒன்று பிணங்குவன ஆகும். சமய நெறிகளும் பல ஆகும். ஒன்று பரம்பொருள் உருவம் என்று உரைக்கின்றது. மற்றொரு சமயம் கடவுள் அருவம் என்று உரைக்கின்றது. ஒன்று உண்டு என்றும், ஒன்று இல்லை என்றும், ஒன்று ஒளிமயம் என்றும், ஒன்று வெளிமயம் என்றும், ஒன்று அங்கு என்றும், ஒன்று இங்கு என்றும், பலப்பலவாறு சமயங்கள் சாற்றுகின்றன.

 

இவைகள் அத்தனையும் ஒருங்கே காணுகின்ற சமயம் சித்தாந்த சைவம் ஆகும். சைவம் ஒன்று தான்,கடவுளுக்கு உருவம், அருவம், உருஅருவம், ஒன்று, பல, ஒளி, வெளி, என்று பிற யாவும் ஒருங்கே உள்ளதாக உரைக்கின்றது. அன்றியும் சைவம் ஒன்றுதான் இயல்பாக அமைந்தது. ஏனைய சமயங்களை எல்லாம் தனக்கு அங்கமாகக் கொண்டு, அவைகளின் நெறிகளை எல்லாம் படி நிலைகளாகக் கொண்டு, வேதாகமங்களின் பயனாகி, இராஜாங்கத்தில் அமர்ந்து கொலுவீற்றிருப்பது. இந்த இனிய கருத்தை, முறையே கல்வி அறிவும், அநுபவ அறிவும் நிரம்பிய அநுபூதிச் செல்வராகிய தாயுமானப் பெருந்தகையார் கூறி அருளும் பாடல்களால் தெளிக.

 

ஒன்றாகிப் பலவாகிப் பலவாக் கண்ட

    ஒளியாகி, வெளியாகி, உருவும் ஆகி,

நன்றாகித் தீதாகி, மற்றும் ஆகி,

     நாசமுடன் உற்பத்தி நண்ணாது ஆகி,

இன்றாகி நாளையுமாய், மேலும் ஆன

     எந்தையே! எம்மானே! என்றென்று ஏங்கிக்

கன்றாகிக் கதறினர்க்குச் சேதா ஆகிக்

     கடிதினில்வந் தருள்கூருங் கருணை விண்ணே.

 

அருள்பழுத்த பழச்சுவையே! கரும்பே! தேனே!

     ஆரமிர்தே! என்கண்ணே! அரிய வான

பொருளனைத்தும் தரும்பொருளே! கருணை நீங்காப்

     பூரணமாய் நின்றவொன்றே! புனித வாழ்வே!

கருதரிய கருத்ததனுள் கருத்தாய் மேவிக்

     காலமும் தேசமும் வகுத்து, அக்கருவி ஆதி

இருவினையுங் கூட்டி, உயிர்த் திரளை ஆட்டும்

     விழுப்பொருளே! யான்சொலும் விண்ணப்பம் கேளே.

 

செப்பரிய சமயநெறி எல்லாந் தம்தம்

     தெய்வமே தெய்வம் எனும் செயற்கை யான

அப்பரிசா ளரும் அஃதே பிடித்து ஆலிப்பால்

     அடுத்த தம் நூல்களும்விரித்தே அனுமான ஆதி

ஒப்பவிரித்து உரைப்பர் இங்ஙன் பொய்மெய் என்ன

     ஒன்றிலை ஒன்று எனப்பார்ப்பது ஒவ்வாதுஆர்க்கும்

இப்பரிசாம் சமயமுமாய் அல்ல வாகி

        யாதுசம யமும்வணங்கும் இயல்ப தாகி.           

 

இயல்பு என்றும் திரியாமல் இயம மாதி

     எண்குணமுங் காட்டிஅன்பால் இன்ப மாகிப்

பயன்அருளப் பொருள்கள் பரிவாரம் ஆகிப்,

     பண்பு உறவும் சௌபான பட்சங் காட்டி,

மயலறுமந் திரஞ்சிட்சை சோதி டாதி

     மற்று அங்க நூல்வணங்கமௌன மோலி

அயர்வு அறச் சென்னியில் வைத்து ராசாங்கத்தில்

        அமர்ந்தது வைதிகசைவம் அழகிது அந்தோ.   

 

அந்தோஈது அதிசயம் இச்சமயம் போல்இன்று

     அறிஞர் எல்லாம் நடுஅறிய அணிமா ஆதி

வந்து ஆடித் திரிபவர்க்கும்பேசா மோனம்

     வைத்திருந்த மாதவர்க்கும்மற்றும் மற்றும்

இந்த்ராதி போகநலம் பெற்ற பேர்க்கும்,

     இதுவன்றித் தாயகம்வே றில்லை இல்லை,

சந்தான கற்பகம்போல் அருளைக் காட்டத்

        தக்கநெறி இந்நெறியே தான்சன் மார்க்கம்.

 

சமயநெறிகளின் உட்பொருளை உன்னி, அவைகளின் சாரத்தை உற்று உணர்ந்து, தெளிந்து, அமைந்து, பேசா அநுபூதியுடன் நிற்றல் வேண்டும். அத்தருணத்தில் உண்டாகும் அகக் காட்சியில் இறைவனைக் காணலாம்.

 

உருஎனவும் அருஎனவும் உளதுஎனவும் இலதுஎனவும்

    உழலுவன பரசமய  ...... கலைஆர வாரம்அற  

உரைஅவிழ உணர்வுஅவிழ உளம்அவிழ உயிர்அவிழ

    உளபடியை உணரும்அவர்  ...... அநுபூதி ஆனதுவும்......    --- சீர்பாத வகுப்பு.

 

கடவுள் தன்மையை நன்கு உணர்தல் வேண்டும். அவரே தன்னை உணர்ந்தவர் ஆவார். இறைவனின் தன்மையை, தாயுமானார் கூறுவதை அறிக.

 

ஒன்றாகிப் பலவாகிப் பலவாக் கண்ட

    ஒளியாகி வெளியாகி உருவு மாகி

நன்றாகித் தீதாகி மற்று மாகி

     நாசமுட னுற்பத்தி நண்ணா தாகி

இன்றாகி நாளையுமாய் மேலு மான

     எந்தையே எம்மானே என்றென் றேங்கிக்

கன்றாகிக் கதறினர்க்குச் சேதா வாகிக்

     கடிதினில்வந் தருள்கூருங் கருணை விண்ணே.

 

இறைவனை நினைப்பற நினைந்து மெய்யுணர்வு பெற்று, அநுபவ அநுபூதி நிலையில் விளங்கியபின், அதனை விட்டு விலகாமல், அந்நிலையிலேயே நிலைபெற்று நிற்றல் வேண்டும். இந்தகு கருத்தை வலியுறுத்துவது, "உணர்வொடு இருந்த நாளும் அழிந்திடாதே" என்பது என்று உணர்க.

 

"அது பொருள் கண்டு" என்ற திருவாக்கினால், சமயங்கள் கூறும் கூற்றுக்களின் திட்ப நுட்பங்களை நுனித்து உணர்தல் வேண்டும் என்பது தெளிவாகும்.

 

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்அப்பொருள்

மெய்ப் பொருள் காண்பது அறிவு.           --- திருக்குறள்.      

 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.                 --- திருக்குறள்.

 

 

பரகதி பெறுவது ஒழிந்திட ---

 

மாதர் மயல் கொண்டோர்க்கு முத்தி நலம் கைகூடாது.

 

பரிசன தரிசன ---

 

மாதர்களைக் காண்பதினாலும், தீண்டுவதாலும் மனம் மயக்கமுற்று மதியை இழப்பர். முத்தி நலம் வேண்டுவோர் மாதர் மயக்கு அறுதல் வேண்டும்.

 

பெண்மை வியவார்,பெயரும் எடுத்து ஓதார்,

கண்ணோடு நெஞ்சுஉறைப்ப நோக்குறார்,- பண்ணோடு

பாடல் செவிமடார், பண்புஅல்ல பாராட்டார்,

வீடில் புலப்பகையி னார்.               --- நீதிநெறிவிளக்கம்.

 

தன்னிடமுள்ள ஐந்து புலன்களுக்கும் தானே பகையாளியாக ஒருவர் விளங்குவாரானால், அவர்

 

பெண்மை என்னும் தன்மையைப் புகழ்ந்து கூறார்

பெண்ணென்னும் பெயரையும் எடுத்து உரையார். 

நெஞ்சில் அவர்கள் உருவம் பதியுமாறு கண்களால் பெண்களைப் பார்க்கமாட்டார்கள்

தம்மை வயப்படுத்தும் பொருட்டு அவர்கள் இசையோடு பாடும்   பாடல்களுக்கும் செவி கொடார்:  

குணமற்றனவான பிறசெயல்களையும் பாராட்டமாட்டார்கள்.

 

படுகுழி இடைவிழு பஞ்ச பாதகன் என்று தீர்வேன் ---

 

மாதர் மயக்கத்தில் வரும் துன்பம் ஒரு பெரிய கடலுக்கு நிகர் ஆகும்.  அதில் விழுந்து அழுந்தியோர் உய்வு பெறார்.

 

மாதர் யமன்ஆம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநரகம் --- ஓதஅதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரக் இல்லை, போரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.       ---  சிதம்பர சுவாமிகள்.

 

பாவங்கள் பல. அவற்றுள் ஐந்து பெரும் பாவங்களாகும். அவற்றை மகாபாதகங்கள் என்பர்.

 

கள்காமம்கொலைகளவுசூது என்பன. இவற்றைப் புரிவோர் பற்பல நரகங்கள் சென்று துன்புறுவர்.

 

அரகர சிவசுத---

 

அரன் --- பாவத்தைப் போக்குபவன். சிவன் --- நன்மையைச் செய்பவன். அரன் நாமம் எங்கும் முழங்க வேண்டும். அவ்வாறு சூழ்ந்தால் வையகம் துயர் தீரும். "எல்லாம் அரன் நாமமே சூழ்க, வையகமும் துயர் தீர்கவே" என்றார் திருஞானசம்பந்தர்.

 

அரகர என்ன அறியதுஒன்று இல்லை

அரகர என்ன அறிகிலர் மாந்தர்

அரகர என்ன அமரரும் ஆவர்

அரகர என்ன அறும்பிறப்பு அன்றே          --- திருமந்திரம்.

 

அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று

     அறுசமய நீதி யொன்று ...... மறியாமல்

அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று

     அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ..    --- (கருவின்) திருப்புகழ்.

                                     

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்

சிவசிவ வாயுவும் தேர்ந்து உள் அடங்கச்

சிவசிவ ஆய தெளிவின் உள்ளார்கள்

சிவசிவ ஆகும் திருஅருள் ஆமே.           --- திருமந்திரம்.

 

செவ்வேள் பரமன் சிவகுமாரன் என்பது விளக்கினின்றும் ஒளி தோன்றுவது போல். "மணியிடைக் கதிர் வரு திறம்போல்" என்பது கந்தபுராணம். பாவங்களை நீக்குபவரான சிவபெருமானுடைய திருக்குமாரர் முருகவேள் என்பதனால், முருகவேளை வழிபடுவோர் பாவங்களினின்றும் விடுபடுவர். நன்மை அடைவர். இந்திராதி இமையவர்களும் இளம்பூரணனாகிய முருகவேளிடம் முறையிடலும், அறுமுகச் சிவனார் அஞ்சேல் என்று அருள் உரை அருளி, சூராதி அவுணரை வென்று அமரர்க்கு அமராவதியை அருள் புரிந்தனர்.

 

அசுரனது அகலம் இடந்து ---

 

சூரபன்மன் --- ஆணவமலம். சிங்கமுகன் --- கன்மமலம். தாரகன் --- மாயாமலம். கிரவுஞ்ச மலை --- வினைத்தொகுதி. கடல் --- ஆசை. அசுரர்கள் --- காமாதி தீக்குணங்கள். வேல் --- ஞானம். ஞானத்தினால் மும்மலங்களும் வலியடங்கும். சூரபன்மன் கடலில் ஒளிந்தான் என்பதன் கருத்து, ஆணவமலம் ஆசையாகிய கடலில் அழுந்தி இருக்கின்றது என்பது.

 

வேதனும்....மாயனும்.... அரனும் பரவிய ---

 

முருகப் பெருமான் முத்தொழில்களுக்கும் முதல்வர். அயனுக்கு ஆக்கலையும், அரிக்கு அளித்தலையும், அரனுக்கு அழித்தலையும் தொழிலாக நல்கி, அவர்கட்கு அவ்வப்போது நேரும் அச்சத்தையும் அகற்றி அருளுவர்.

 

படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்

     புரக்கக் கஞ்சைமன் ...... பணியாகப்

பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்

     பரத்தைக் கொண்டிடுந் ...... தனிவேலா......   --- (தடக்கை) திருப்புகழ்.

                                   

இங்கே அரன் என்றது மூவரில் ஒருவராகிய உருத்திரர் என்கறு அறிக. அவர் குணருத்திரர் எனப்படுவர். மூவரும் அறியா முழுமுதலாகிய சிவபரம்பொருளையும், உருத்திரனையும் ஒன்று எனக்கருதி சிலர் இடர்ப்படுவர்.

 

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை

அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை

புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்

தவனச் சடைமுடித் தாமரை யானே.             --- திருமந்திரம்.

 

கருத்துரை

 

முருகா! அடியேன் மாதர் மயக்கம் அற்று, சிவாநுபவச் செல்வத்தில் திளைத்து இருக்க அருள்புரிவீர்.

 

 

No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...