நன்றி அறிதல் - நன்றி கொல்லுதல்


நன்றி அறிதல் - நன்றி கொல்லுதல்
                                -----

மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குப் பெற்றிருக்க வேண்டிய பண்புகள் பல ஆகும். அப் பண்புகள் அனைத்திலும் தலையாயது, "செய்ந்நன்றி அறிதல்" என்னும் பண்பு ஆகும்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம், உய்வுஇல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு."

என்று அறவுறுத்தினார் திருவள்ளுவ நாயனார்.

கொள்வதும் கொடுப்பதும் ஆக அமைவதே வாழ்க்கை ஆகும். முட்டுப்படாமல் யாரும் வாழ்ந்துவிட முடியாது. சமுதாயம் என்பது மனிதர்களின் கூட்டு வாழ்வாக விளங்குகின்றது. ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வதில் சமுதாயமானது உயிர்த் துடிப்புடன் இயங்குகின்றது. 

ஒருவர் ஒரு காலத்தில் தமக்குச் செய்த நன்மையை மறவாமல் போற்றுவது மனிதப் பண்பின் சிகரமாக உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.

திருக்குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர், "தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை" செய்ந்நன்றி அறிதல் என்பார். மணக்குடவர் மேலும் ஒரு படி கடந்து, "பிறர் செய்த தீமையையும் மறந்து, நன்மையை மறவாமை" என்றார்.

"நன்றி எனப்படுவது இதயத்தின் நிறைவு" (Gratitude is the memory of the heart) என்று மேசியூ என்னும் மேல்நாட்டு அறிஞர் குறிப்பிடுவார். சர் ராபர்ட் வால்போல் என்னும் அறிஞர், "எதிர்கால நன்மைக்கு நிகழ் காலத்தில் நன்றி என்னும் உணர்வு நின்று நிலைத்து இருக்கவேண்டும்" 
(Gratitude is a lively sense of future favours) என்பார்.

நமது தமிழ் நாட்டு நீதிநூல் ஆகிய "வாக்குண்டாம்" என்பது ஔவையார் இயற்றியது. நன்றியுடைமையின் இன்றியமையாமையை நாள்தோறும் தாம் காணும் காட்சியினை வைத்தே அது அறிவுறுத்துகின்றது.

தென்னங்கன்றுக்கு மனிதன் அதன் வேரில் நீரை ஊற்றுகின்றான். தென்னங்கன்று வளர்கின்றது. எருவை இடுகின்றான். மேலும் நன்றாக வளர்கின்றது. நீண்ட மரமாக உயர்ந்து குலை தள்ளியது. மனிதன் தென்னையின் இளங்காயைப் பறித்து, அதன் உள்ளிருக்கும் நீரைப் பருகுகின்றான். அது இனிக்கின்றது. இவன் ஊற்றிய தண்ணீர் போல், அவன் குடித்த இளநீர் இல்லை.

"நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால், அந்நன்றி
என்று தரும்கொல் என வேண்டா --- நின்று
தளரா வளர் தெங்கு, தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்."

என்று காட்டினார் ஔவைப் பிராட்டியார்.

அறத்தை நாளும் செய்யவேண்டும் என்பது வாழ்வியல் நெறி ஆகும். அறங்களைச் சிதைத்தல் மறம் (பாவம்) ஆகும். அது மன்னிக்க முடியாத பெரும் குற்றமும் ஆகும். ஒருவன் பெரிய அறங்களைச் சிதைத்தால் கூட, பாவம் என்னும் பாழ் நரகில் இருந்து மீண்டு விடலாம். ஆனால், ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்தவனுக்கு, எப்படிப் பார்த்தாலும் பாவத்தில் இருந்து விடுதலை இல்லை.

பின்வரும் புறநானூற்றுப் பாடலைக் காணலாம்....

"ஆன்முலை அறுத்த அறன் இலோர்க்கும்,
மாண்இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,
குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்,
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என,
நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன் 
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடிற்றே, ஆயிழை கணவ!"

இதன் பொருள் ----  
அழகிய அணிகலன்களை அணிந்துள்ள மங்கையின் மணவாளனே! பசுவின் மடியை அறுத்த பெரும்பாவத்தைப் புரிந்தோர்க்கும், பெண்ணின் தாய்மைப் பேற்றை அழித்த கொடுமையைப் புரிந்தோர்க்கும், இருமுது குரவர்களாகிய தாய், தந்தை, குரு முதலானோரைப் பழித்த கொடுமையாளர்க்கும், அவர்கள் செய்த தீமைகளுக்குப் பரிகாரம் உண்டு. ஆனால், இந்த மண்ணுலகமே கீழ்மேலாகப் புரளும் ஊழிக் காலம் வந்தாலும், செய்த நன்றியைக் கொன்றவர்களுக்கு அந்தப் பாவத்தில் இருந்து விடுபட வழியே இல்லை என்று அறநூல்கள் கூறுகின்றன.

துன்பப்பட்ட காலத்தில் உதவிய ஒருவனுக்கு, அவன் துன்பப்படும் காலத்தில் உதவவில்லை என்றால், அது அவன் பரம்பரைக்கும் ஆகாது என்கின்றது "கலித்தொகை" என்னும் சங்கநூல்.

"ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான், மற்று அவன்
எச்சத்துள் ஆயினும் தெறியாது விடாதே காண்"..


"இசையா ஒருபொருள் இல்என்றால் யார்க்கும்
வசைஅன்று, வையத்து இயற்கை –--  நசைஅழுங்க
நின்றுஓடிப் பொய்த்தல் நிரைதொடீஇ செய்ந்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து".

என்கிறது நாலடியார்.

தம்மிடம் கொடுக்க இயலாத ஒரு பொருளை வந்து கேட்பவரிடம் இல்லை என்பது ஒன்றும் குற்றம் இல்லை. இது உலக இயல்புதான். ஆனால், ஒன்றைத் தருவதாக வாக்களித்து விட்டு, பின் அந்த நம்பிக்கை கெட, இல்லை என்று பொய் கூறுவது, செய்த நன்றியை மறப்பதற்கு ஒப்பான குற்றம் ஆகும்.

மழைக் காலம் முடிந்த பின் சீதையைத் தேடித் தருவதாக இராமனிடம்  வாக்களித்து விட்டு சென்றான்  சுக்கிரீவன்.  மழைக் காலம் முடிந்தும் வரவில்லை. கோபம் கொண்டு இலக்குவன் போகிறான். அப்போது அங்கு வந்த அனுமனிடம் இலக்குவன் கேட்கிறான். "நீயுமா  செய் நன்றி  மறந்தாய்" என்று. அப்போது அனுமன் கூறுவான் "பெற்றோரை, ஆசிரியரை, தெய்வம் போல் போற்றத்தக்க அந்தணர்களை, பசுவை, குழந்தைகளை, பெண்களை கொன்றவர்களுக்குக் கூட உய்வு உண்டு. ஆனால், செய்நன்றி மறந்தவர்களுக்கு ஒரு உய்வும் இல்லை" என்பதை நான் அறிவேன். எனவே, நான் செய் நன்றி மறக்கமாட்டேன் என்று உணர்த்துகிறான்.

"சிதைவு அகல் காதல் தாயை, 
தந்தையை, குருவை, தெய்வப்
பதவி அந்தணரை, ஆவை, 
பாலரை, பாவைமாரை
வதை புரிகுநர்க்கும் உண்டாம்
மாற்றலாம் ஆற்றல், மாயா
உதவி கொன்றார்க்கு என்றேனும்
ஒழிக்கலாம் உபயம் உண்டோ?"
                          --- கம்பராமாயணம்.

தாய், தந்தை, குரு, அந்தணர், பசு, குழந்தை, பெண் ஆகியவர்களைக் கொல்லுதல் கொடும் பாதகச் செயலாகும். இருப்பினும் அப்பாவங்களைப் போக்குவதற்கு உரிய கழுவாய் உண்டு. ஆனால், செய்ந்நன்றி மறத்தலுக்கோ எத்தகைய கழுவாயும் இல்லை.

தனது அண்ணனான இராமனுக்கு அணுவளவேனும் துரோகம் எண்ணியிருந்தால், இன்னின்ன பாவங்களைப் புரிந்த பாவிகள் அடையும் கொடிய நரகத்தை நான் உறுவேனாக என்று பரதன் கூறுகின்றான். இதில் தலைமையாக அவன் சொல்லி இருப்பது சிந்தனைக்கு உரியது. ’கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோன்’  என்கின்றான். இது எவ்வளவு கொடிய பாவம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
 
"கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோன்,
மன்றிடைப் பிறப் பொருள் மறைத்து வவ்வினோன்,
நன்றியை மறந்திடும் நயம் இல் நாவினோன்,
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே".
--- கம்பராமாயணம்.

இதன் பொருள் ---

தனக்கும், தனது கன்றுக்கும் பயன்படும்படி பசுவினிடத்தில் நிறையப் பாலை இறைவன் அளித்திருக்கின்றான். கன்றுக்குச் சிறிதும் பால் விடாமல், தானே கறந்து அநுபவித்தல் பாதகம் ஆகும். பலர் கூடியுள்ள இடத்தில் பிறர் பொருளை மறைத்து, அதைக் கைப்பற்றல் அறம் அல்லாத செயல் ஆகும். தனக்கு நன்மை செய்தவர்களைத் தூற்றுகின்றவன் நாகரிகம் அற்ற நாவினை உடையவன். இவர்கள் அடைவது நரகமே ஆகும்.

தாய்ப்பாலை இழந்து இறந்து போன கன்றின் தோலை உரித்து அதனுள் வைக்கோலைப் பொதிந்து உயிருள்ள கன்று போல் காட்டிப் பகக்களிடம் வஞ்சமாய்க் கறக்கும் பாவச் செயல்கள் மலிந்து உள்ளன. இது பெரும்பாவம் என்கின்றது கம்பராமாயணமும், பின்வரும் சிறுபஞ்சமூலம் பாடலும்..

"தோற்கன்று காட்டிக் கறவார், கறந்தபால்
பாற்பட்டார் உண்ணார், பழிபாவம் - பாற்பட்டார்
ஏற்றவா தின்புற்று வாழ்வன ஈடழியக்
கூற்றுஉவப்பச் செய்யார் கொணர்ந்து".
--- சிறுபஞ்சமூலம்.

"சுக்கிரீவன் பெறுதற்கு அரிய அரசை நம்மால் பெற்றான். அவனுக்கு நாம் செய்த உதவியை அவன் எண்ணிப் பார்க்கவில்லை. தனக்கு உதவியவர்க்குத் திரும்ப உதவி செய்யவேண்டும் என்னும் அறத்தை அவன் மறந்தான். நம்மால் பெற்ற அரசியல் வாழ்வில் இப்போது அவன் மயங்கிக் கிடக்கின்றான். செய்த நன்றிக்குத் திரும்ப உதவி செய்யாது, நன்றியைக் கொன்றுவிட்டான். அருமையான நட்பு என்னும் கயிற்றையும் அறுத்து விட்டான். இத்தகையவனைக் கொன்று அழித்தல் குற்றம் ஆகாது. நீ சென்று அவன் எண்ணம் என்ன என்று அறிந்து வருவாய்" என்று இராமபிரான் இலக்குவனுக்குக் கூறுகின்றார்.

"நன்றி கொன்று, அரு நட்பினை நார் அறுத்து,
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து, உரை பொய்த்துளார்க்
கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ?
சென்று, மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய்".
--- கம்பராமாயணம்.

இதன் பொருள் ---

இப்படி ஒருவன் தனக்குச் செய்த நன்றியைச் சிதைத்து, பெறுவதற்கு அருமையான நட்பாகிய
அன்புக் கயிறு அற அழித்து, எல்லோர்க்கும் ஏற்றதாகப் பொருந்தி நிற்கும் வாய்மையைக் குலைத்துவிட்டு, வாக்குத் தவறியவனைக் கொன்று ஒழிப்பது, பழிபாவங்களிலிருந்து
நீங்கிய செயலே ஆகும். ஆகவே, நீ அங்கே சென்று அச்சுக்கிரீவனது மன நிலையை ஆராய்ந்து  அறிந்து வருவாயாக .                

"நன்றி, செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வு இல என்னும்
குன்றா வாய்மை நின்று நிலை காட்டித்
தங்குவன கண்டும் வலிமனங் கூடி
ஏகவும் துணிந்தனம் எம்பெரும் படிறு
சிறிதுநின்று இயம்ப உழையினம் கேண்மின்ம்..."

என்று கல்லாடம் அறிவுறுத்தும்.

நன்றி அறிதல் --- புண்ணியம். நல்வினை.

நன்றி கொல்லுதல் --- பாவம். தீவினை.

பிற பாவங்களுக்குக் கழுவாய் உண்டு. நன்றி கொன்ற பாவத்திற்கு மட்டும் கழுவாய் என்பதே இல்லை.

No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...